இது சீனப் புரட்சியின் அறுபத்தி மூன்றாம் ஆண்டு. புரட்சிக்குப் பின்னால் மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் என்ற அரசமைப்பின் கீழ் நடைபெற்ற  தேர்தலை விளக்குகிறது இந்தக் கதை. ”கம்யூனிஸ்டு நாடு என்றால் தேர்தலே கிடையாது, கட்சியின் சர்வாதிகாரம்தான்” என்றும், நமது நாடுதான் ஜனநாயக நாடென்றும் முதலாளித்துவப் பத்திரிகைகள் தொடர்ந்து பொய்ப்பிரச்சாரம் செய்கின்றன.

இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதையை நாம் புதிதாக அம்பலப்படுத்தத் தேவையில்லை. கேடிகள், கிரிமினல்கள், திருடர்களைத் தவிர வேறு யாரும் வேட்பாளராக நிற்க முடியாது என்பதை மக்களே அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள். சீனத்திலோ, மக்களுக்குத் தொண்டாற்றி, மக்களின் மதிப்பையும் அங்கீகாரத்தையும் பெறாத யாரும் வேட்பாளராகக் கூடப் போட்டியிட முடியாது என்பதையும், வேட்பாளரின் குறைநிறைகள் மக்கள் மத்தியில் அலசி ஆராயப்படும் என்பதையும் இச்சிறுகதை தெளிவுபடுத்துகிறது.

அனைத்துக்கும் மேலாக, பெண் விடுதலை, பெண்களின் குடும்ப, சமூக, அரசியல் அடிமைத்தனங்களை எதிர்த்த போராட்டம் உழைக்கும் மக்கள் மத்தியில் எப்படி நடத்தப்பட்டிருக்கிறது என்பதை அலங்காரங்கள் இன்றி மிகச் சாதாரணமாக விவரிக்கிறது இக்கதை.

இந்தியாவைப் போலவே மிகவும் பின்தங்கியிருந்த சீனத்தில் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் தேர்தலின் நின்ற ஒரு பெண் வேட்பாளரின் அனுபவம் இது. இங்கே பெண்களுக்கான ஒதுக்கீடு மூலம் பஞ்சாயத்துத் தலைவியான பெண்கள் ‘அவர்’ மூலம்தான் ஆட்சி நடத்தமுடிகிறது- என்ற வெட்கக்கேடும் இந்தக் கதையைப் படிக்கும் போது நினைவுக்கு வரத்தான் செய்கிறது.

***

இதுவே சீனத்தின் முதல் தேர்தல், நாடு முழுக்க தேர்தல். யாரைத் தேர்ந்தெடுப்பது? – அதற்காகத்தான் இன்றைய கிராமக் கூட்டம். ஒவ்வொரு பிராந்தியத்திலும் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதிகள் எவ்வளவு என்று தீர்மானித்திருந்தார்கள். அவர்களைப் பிராந்தியத்திலிருந்து தேர்ந்தெடுத்து மக்கள் பேராயத்துக்கு (மக்கள் காங்கிரஸ்) அனுப்ப வேண்டும்.

சியாங் பிராந்தியத்திலிருந்து மூன்று பேர். ஏற்கனவே மூன்று வேட்பாளர்கள் நிற்கவைக்க முடிவு செய்யப்பட்டுவிட்டது. முதல் நபர், குவின் ஷீ ஜூ- இவர் கிராமத்தின் கம்யூனிஸ்டு கட்சிச் செயலாளராக கடந்த ஆறு வருசமாக இருந்து வருகிறார்; இரண்டாமவர், வாங் ஷூன்டே – பழைய பாரம்பரிய மருத்துவர், வட்டாரத்திலேயே மாதிரி மருத்துவ ஊழியர் என்று பெயரடுத்தவர்; மூன்றாமவர், குவின் ஜியா குய் – இளைஞர். இருபதே வயது. பரஸ்பர உதவிக்குழுவின் தலைவர். ஆனால் பெண்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு வேட்பாளரை நிற்க வைக்க முடிவு செய்திருக்கிறார்கள் – வேறு யாருமல்ல; குவின் ஜியா குய்யின் மனைவி, ஜாங்குயா ஃபெங்.

யின் சியாங் ஜென் எழுந்து நின்று பேசினாள். எல்லோரையும் வசீகரிக்கும் இனிய, தெளிவான குரல். ”எதற்காக நான்காவது வேட்பாளர்? பரஸ்பர உதவிக் குழுவின் தலைவரான குவின் ஜியாகுய் அவரது மனைவியின் உதவி இல்லாமல் இவ்வளவு சாதனைகளைச் செய்திருக்க முடியுமா? இரண்டு வருடத்துக்கு முன்னால் முதன் முதலில் அதனை அமைத்தபோது எங்களுக்கு விவசாய வேலை ரொம்பவும் புதிது. ஒவ்வொரு வீடாகச் சென்று இப்படிப்பட்ட குழு கிராமத்துக்கே அவசியம் என்று எங்கள் பெற்றோரிடமும், மாமி – மாமனிடமும் எடுத்துச் சொல்லி விளங்க வைத்தது யார்?”

”எல்லா கஷ்டமான வேலைகளையும் முதலில் எடுத்துச் செய்து முன்மாதிரியாக நின்று எங்கள் முதுகு வலியைக் கூட மறக்கச் செய்தது யார்? எவ்வளவு வேலை செய்தோம், அதற்கு எவ்வளவு கூலி என்று அளக்க முனைந்தபோது, சம உழைப்புக்குச் சம கூலி என்று வாதாடியது யார்? அது ஆணா, பெண்ணா என்று பிரித்துப் பார்க்கக் கூடாது என்று உறுப்பினர் கூட்டத்திலேயே பிரச்சனையை வைத்தது யார்? நண்பர்களே, அவள் செய்கிற வேலைகளிலேயே மூழ்கி விடுகிறாள்; யாரிடமும் பீற்றிக் கொள்வதில்லை. ஆனால் அவள் ஓர் ஊழியர் என்பது மட்டுமே கிராமத்தாருக்குத் தெரியும். அவள் என்ன வேலைகளைச் செய்தாள் என்று யாருக்குமே முழுமையாகத் தெரியாது.”

லி குய்ஹூவா என்ற இளம்பெண் அடுத்ததாகப் பேசுவதற்கு அனுமதி கேட்டாள். ”ஒரு மாதத்துக்கு முன்னால் வட்டார மாதிரி தொழிலாளர் மாநாட்டுக்குப் பார்வையாளராகச் சென்றேன். அங்கே குவின் ஜியா குய்யின் அறிக்கையைக் கேட்டேன். அவர் பேசும்போது ”கள வேலைகளுக்குச் செல்வதற்காகப் பெண்களை அழைத்து ஏற்க வைத்தேன்,” என்றார். குழுவின் எல்லாச் சாதனைக்கும் தானே பொறுப்பு என்று பேசினார். சியாங்கில் ஒருமுறை மாநாட்டில் ஒருமுறை, ஆக இரண்டு முறையும்அவர் பேசியபேச்சு பச்சையான சுயதம்பட்டம். இங்கு திரும்பிவந்த பிறகு பெண்கள் கழகத் தலைவரோடு இது பற்றிப் பேசினேன். அவர் மூலம் கிராமத் தலைவர்கள் குவின் ஜியா குய்யிடம் இதுபற்றி விமரிசித்ததாகக் கேள்விப்பட்டடேன்.”

லி தொடரந்தாள்: ”அப்போது, தான் தவறு செய்துவிட்டதாக ஒப்புக் கொண்டார். ஆனால் வட்டாரக் கூட்டத்தில் மறுபடி தன்னைப் பற்றி மட்டுமே விளம்பரம் செய்து கொண்டார். இன்றைக்கு இதுபற்றி இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும். குயாஃபெங் என்ன உதவிகள் செய்தாள், அவள் பங்கு என்ன என்பது பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.”

ஜியா குய்யை ஒருமுறை பார்த்துவிட்டு பின்னலைப் பின்புறம் ஒதுக்கிக் கொண்டே அமர்ந்தாள் லி. சட்டென கூட்டம் அமைதியானது. எல்லோருடைய கண்களும் ஜியா குய்யை மொய்த்தன.

அவன் இதோ இப்போதுகூட எழுந்திருந்து தன் மனைவிக்கும் பங்குண்டு என்று சொல்லிவிட்டுத் தன் குறையாடுகளை ஒப்புக் கொண்டால் கூடப்போதும் என்பது போல அவர்கள் பார்த்தனர். அப்படியிருந்தால் வெற்றி அவன் பக்கம்தான். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை.

பதவிகளை அனுபவித்து அனுபவித்துப் பழகிவிட்டான் ஜியா. கிராமத்தார் தன்னை ஆதரிப்பார்கள்; கை தட்டி ஆதரித்துத் தேர்ந்தெடுத்துவிடுவார்கள் என்று அவன் எண்ணியிருந்தான். தேர்தலுக்காகவே புதிதாக நீலமேல் கோட்டு கூட அணிந்து வந்திருந்தான்.

இப்போது அவனுக்கு உடம்பெல்லாம் கசகசத்தது; ஓரக்கண்ணால் மனைவியைப் பார்த்தான் – தனக்கு ஆதரவாக ஏதாவது சொல்ல மாட்டாளா? ”சகோதர சகோதர்களே! ஜியா குய்யை காரணமில்லாமல் பழி சொல்லாதீர்கள்….. நான் முன்னேறியிருக்கிறேன் என்றால் அதற்கு அவரது உதவியே முழுக்க முழுக்கக் காரணம்,” – இப்படி ஏதாவது பேசமாட்டாளா?

ஆனால் அவளோ வாயே திறக்கவில்லை; தலையைத் தொங்கப் போட்டிருந்தாள்; தலைமுடி அவள் கண்களைத் திரையிட்டிருந்தது. இதுபோல ஒரு கூட்டத்தில் அவள் எப்போதும் எழுந்து நின்று பேசியது கூட இல்லை.

”சகோதர சகோதரிகளே!” குயின் ஜியா குய் வெறுமனே முனகினான். வாய் உலர்ந்தது. குரல் தழுதழுத்தது. ”லி குய் ஹூவா இப்போது சொன்னது உண்மையல்ல….”

லி உடனே எழுந்து அதை மறுத்தாள். ”நீங்கள் ஒரு நல்ல பரஸ்பர உதவிக்குழு தலைவர் என்பதை முழுக்க ஒப்புக் கொள்கிறேன்; நமது கிராமத்தில் உற்பத்தியை முன்னே தள்ளியதில் உங்களுக்குப் பங்கு உண்டு, நான் மறுக்கவில்லை. உங்களை ஒரு வேட்பாளராகக் கூட அங்கீகரிக்கிறேன். ஆனால் இன்றைய கூட்டம் மிக முக்கியமானது. குயாவ் ஃபெங்கின் நல்ல அம்சங்களை நான் சொல்லியே தீரவேண்டும். அப்படி என்றால் உங்களது குறைகளைச் சொல்லாமல் இருக்க முடியாது. நான் உண்மையைத்தான் சொல்கிறேன்.”

அமைதி சூழ்ந்திருந்தது. பின் வரிசையில் அமர்ந்திருந்த ஒருசில முதியவர்கள் மட்டும் ரகசியக் குரலில் பேசிக் கொண்டனர். ”இதப்போய் இந்தப் பொட்டச்சிங்க பெரிசாக்கறாங்களே. ஜியா குய்யுக்கு இதனால எவ்வளவு பெரிய அவமானம்? எத வேணுமானாலும் இவளுக சொல்லட்டும். அவங்க ரெண்டுபேரும் புருசன் – பெண்சாதி தானே? யாரைத் தேர்ந்தெடுத்தாலும் ரெண்டும் ஒன்னுதானே?”

அன்றைய தேர்தலுக்கான கூட்டத் தலைவர் குயாவ் ஃபெங்கின், வேட்பு முன் மொழிதலை ஓட்டுக்கு விட்டார். எல்லோரும் அந்த வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டதற்காகக் கை உயர்த்தி ஆமோதித்தனர்.

தன் மனைவி பற்றி கிராமத்தார் இவ்வளவு ஒசத்தியாகப்  பேசிக்கொள்கிறார்களே என்று குயின் ஜியா குய் யோசித்தான். அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது; பிறகு கோபமும் கசப்புமாக மாறியது. அவனது குழுவிலிருந்த பெண்கள் மீது வெறுப்பு வந்தது. ”நீங்கள் சற்று முன்னேறியது உண்மையே. ஆனால் நீங்கள் முன்னேறுவதற்கே என் தலைமையல்லவா காரணம்? என் மீதே விமர்சனம் வைக்கிறீர்கள்? உங்களுக்கு நாகரீகம் தெரியவில்லையே.” –அவன் மனத்தில் இப்படி எண்ணங்கள் ஓடின. உடனே அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறி விட நினைத்தான்.

கட்சிச் செயலர் பேசுவதைக் கேட்க்க கூட குவினுக்கு மனமில்லை. வாங் ஹூன்டேவைப் பேசச் சொல்லி கிராமத்தார் சிலர் கோரினார்கள். தலைவர் குவினைக் கூப்பிட்டார். எதுவும் அவன் காதுகளில் விழவில்லை. இரண்டாம் முறை அவர் அழைத்த போதுதான் கிறக்கத்திலிருந்து வெளியே வந்தான் குவின்.

மேடைநோக்கி நடந்தான். இப்போதுகூட ஒன்றும் கெட்டுவிடவில்லை. எனது மனைவி குய்யா ஃபெங்கைத் தேர்ந்தெடுங்கள் என்று ஒருசொல் கேட்டால்போதும், அவனைப் பற்றி எல்லோருமே ஒரு உயர்வான கருத்துக்கு வந்து விடுவார்கள். எப்படியாவது தன் கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே அவன் நினைத்தான் – முஸ்தீபுடன் அவன் பேச்சு ஆரம்பித்தது.

”சகோதர, சகோதரிகளே, என்னுடைய பரஸ்பர உதவிக்குழுதான் இந்தக் கிராமத்திலேயே முதலில் துவக்கப்பட்டதாகும்….” மறுபடி பழைய கதை. இரண்டு வருஷம் முன்னால், போன வருஷம், இப்போதைய நிலை என்று அவன் வரிசையாக நீட்டி வளைத்துப் பேசினான்.

”அடேய், எதுக்குடா பழைய கதை” என்று கிராமத்தார் பொறுமை இழந்தார்கள்.

”உன்னோட வேலைகள் பற்றி உன் போதனையை அவிழ்க்காதே, எங்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்டது” என்றார் மற்றொருவர்.

ஒரு வழியாக குவின் முடித்துக் கொண்டான். கைதட்டல் பலமாக மழைபோல் கொட்டியது. அது அவனுக்காக அல்ல. அடுத்து பேச அழைக்கப்பட்ட குய்யா ஃபெங்குக்காக.

குவின், மனைவியைப் பார்த்தான். அவள் தலை சட்டென்று நிமிர்ந்தது; அவளது தோள்கள் உயர்ந்தன; அவளது கன்னங்கள் ஒளி சிந்தின; பெரிய கறுப்புக் கண்கள் சுடர்விட்டன; எல்லோரையும் விட சற்று உயரமாகக் கூட தெரிந்தாள். அவன் சற்றும் எதிர்பாராத விதமாக அவள் தெளிவாக நிதானமாகப் பேசினாள்.

”சகோதர, சகோதரிகளே! நாம் செய்துள்ள வேலைகளைத் திரும்பிப் பார்க்கும் போது எனக்கே கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. முதலாவதாக, இந்த வருச அறுவடையின் போது குழு உறுப்பினர்களை ஒன்று திரட்டி சிறுவர் பள்ளி ஒன்றைத் துவங்கிவிட வேண்டும் என்று நான் எண்ணியிருந்தேன்; அப்படித் துவங்கியிருந்தால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அங்கே விட்டுவிட்டு கள வேலைகளுக்குப் போக வசதியாக இருந்திருக்கும். அது திட்டம். ஆனால் அந்த நேரம் எனக்கு உடம்பு சுகமில்லை. நான் அந்த வேலையை முடிக்கவில்லை. பிரச்சினைகள் வரும்போது அவற்றை எதிர்த்துப் போராடி காரியத்தை சாதிக்கும் மன உறுதி என்னிடம் போதிய அளவு இல்லை. இது என்னுடைய தவறு. அடுத்ததாக, பரஸ்பர உதவிக் குழுவை நிறுவி மூன்றாண்டுகள் ஆகியும் இன்னமும் இது ஓர் கூட்டுறவுச் சங்கமாக வளரவில்லை. அதற்குத் தகுந்த முயற்சியை நான் மேற்கொள்ளவில்லை… நான் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இல்லையென்றாலும் இந்த இருவி ஷயங்களுக்காக நான் உழைக்கப் போகிறேன்.”

கூட்டம் அவளது நேர்மையைப் பாராட்டியது; கைதட்டி அங்கீகரித்து ஆரவாரம் செய்தது.

லி குய் ஹுவா ஓடிப்போய் அவளை அணைத்துக் கொண்டாள். ”நடந்ததை எண்ணிப் புலம்பாமல் வரப்போகிற காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று குய்யா ஃபெங் பார்க்கிறாள். இப்படித்தானே வேட்பாளர் இருக்க வேண்டும்?” அவள் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னாள்.

திடீரென குய்யாவின் மாமியார் எழுந்து நின்றாள். ”இதென்னய்யா கொடுமை! நம்மூருக்கு மூணு பிரதிநிதிகள்தான் அனுப்ப முடியும். நீங்க நாலு பேரை வேட்பாளரா நிப்பாட்றீங்க. கட்சி செயலாளருக்கு எல்லாரும் ஓட்டு போட்டுப்புடுவாங்க; டாக்டரய்யாவுக்கு யாராவது ஓட்டுப் போடாம இருப்பாங்களா, அவருக்கும் போட்டுப்புடுவாங்க. கடைசில எம்மவனுக்கும் மருமவளுக்கும்தான் போட்டியா?” என்று வெளிப்படையாக அரற்றத் தொடங்கினாள்.

மாமியார்க்காரியின் பிரச்சினை என்ன என்று எல்லோருக்குமே தெளிவாகத் தெரிந்தது. மருமகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மகன் நிலைகுலைந்து போவான். ஏற்கெனவே கூட்டத் தலைவர் கூட்டம் முடிந்ததை அறிவித்துவிட்டார். மாலையில் தேர்தல் நடக்கும். மாமியாரின் பிரச்சினையைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

இது தேர்தல். பாரபட்சம் காட்ட முடியாது. யார் நல்லவர் என்றாலும் அவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் ஆண் என்ன, பெண் என்ன? மகனா, மருமகளா என்பதற்கெல்லாம் வேலை?

****

குவின் ஜியா குய் நேரே வீடு சென்றான். ஒரு வார்த்தையும் சொல்லாமல் படுக்கையில் பொத்தென்று விழுந்தான்.

அவனது தாய்க்குச் சமையலில் உதவி செய்தவாறு குய்யா ஃபெங் கலகலவென்று பேசிக் கொண்டிருந்தாள். குவினுக்கு அது பொறுக்கவில்லை.

“ஏ இங்கே வா” அவன் கத்தினான்.

அவள் உள்ளே வந்தாள். அவள் கைகளில் மாவு, முகத்தில் சிரிப்பு.

”கூட்டத்தில் என்னவெல்லாம் பேசினே? பெரிய இவன்னு நெனப்போ?”

”ஏன், அப்படி என்ன தப்பாப் பேசினேன்?” குய்யா அதிர்ச்சி அடைந்தாள்.

”எதற்காக அப்படிப் பேசினாய்? நம் குழு மூன்று வருசத்தில் கூட்டுறவுச்

சங்கமா வளரல்லேன்னு பேசினியே. எதற்காக அப்படிச் சொன்னே?”

”சே, நீ எப்படிப்பட்ட ஆளுன்னு தெரிஞ்சி போச்சு” குய்யா பொங்கிவிட்டான். அவள் நேர்மையானவள், சூதுவாது தெரியாதவள். குவின் அப்படிக் கேட்டது அவளுடைய ஆத்திரத்தைத் தூண்டிவிட்டது.

அப்படியே தொடுத்துத் தொடுத்து சண்டை வளர்ந்தது. இரண்டு பேரும் சாப்பிடவில்லை.

மாமியார்க்காரியும் திணறினாள். மருமகள் மீது தப்புச் சொல்ல முடியாது; மகனைத் திட்டவும் முடியாது. கையைப் பிசைந்தாள்; பெருமூச்சு விட்டாள்; முனகினாள். கொதிக்கும் மனதை யாரிடமாவது கொட்டி ஆற்ற வேண்டும் போல அவளுக்குத் தோன்றியது. அதன் விளைவு என்ன ஆகும் என்று அவள் யோசிக்கவில்லை.

வெளியே சென்றாள். பெண்கள் கழகத் தலைவர் முதலில் அகப்பட்டார். ”தலைவரே, முதல்லேயே தலைப்பாடா அடிச்சுகிட்டேன். ரெண்டு பேரையும் நிக்க வெக்காதீங்கன்னு, கல்யாணம் கட்டினதுலேருந்து இப்படி அவுங்க அடிச்சுகிட்டு நின்னதில்லே. அவங்க ரெண்டு பேரும் சாப்பிடக்கூட இல்லே….”

அடுத்து லி குய் ஹீவா, அதற்கடுத்து மருமகளை வேட்பாளராக முன்மொழிந்த ‘யின்’ என்ற பெண்…. எல்லோரிடமும் வீட்டில் நடந்த சண்டையை வரிவிடாமல் கொட்டித்தீர்த்தாள்.

‘யின்’ பக்கத்து வீடுதான். சண்டையின் உச்சத்தில் அவன் கத்தியதெல்லாம் அவளுக்கும் காதில் விழுந்தது. கேட்டு உள்ளுக்குள்ளே கொதித்துக் கொண்டிருந்தாள்.

செய்தி கேள்விப்பட்டு அநேகமாக கிராமத்தில் பெண்களும் ஆண்களுமாய்ப் பலர் கூடிவிட்டனர். ”இவ்வளவு மோசமானவனா குவின்?” எல்லோர் மனதிலும் அந்தக் கேள்வி எழுந்தது.

*****

மாலை நேரம் வந்தது, தேர்தல் நடந்தது. முடிவு எல்லோருக்குமே அதிர்ச்சி தந்தது. குவினுக்கு மூன்றே ஓட்டுக்கள. மற்ற எல்லோரும் குய்யா ஃபெங்குக்கு ஓட்டுப் போட்டிருந்தார்கள்.

குவினால் தாங்க முடியவில்லை. கூட்டம் முடிவதற்கு முன்னே அவன் கிளம்பிவிட்டான். அவன் தாய் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினாள் – அழுது புலம்பிக் கொண்டே.

பெண்கள் கழகத் தலைவரும், அடுத்த வீட்டுக்காரியும் வந்து பார்த்தபோது அவன் படுக்கையில் படுத்துத் தலையணையால் முகத்தை மூடியிருந்தான்.

அவர்கள் சமாதானமாய்ப் பேசிப் பார்த்தார்கள். அவன் பதில் பேசவில்லை, கிராமத்திலிருந்தே தன்னைத் தள்ளிவைத்து விட்டதைப் போல அவன் நினைத்துக் கொண்டான். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் ஏதும் கேட்காததால் அவன் அம்மாவும் படுத்துவிட்டாள். நீண்ட நேரம் அவளது முணுமுணுப்பு மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது.

குய்யா ஃபெங் எல்லோரையும் திருப்பியனுப்பினாள்; தானே பேசுவதென்று முடிவு செய்தாள். குவினின் முகத்தை மூடியிருந்த தலையணையை அகற்றினாள். அவன் கண்களில் நீர் திரண்டு வழிந்தது. அவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். ”ச்சீ… உன் மேல எனக்கொண்ணும் கோபம் இல்ல. ஆனா நீ கொஞ்சம் யோசிச்சுப் பாக்கணும்” நெஞ்சை நீவிவிடுவது போல இதமாகச் சொன்னாள்.

”ம்… யோசிச்சுப் பாக்கறேன்” சொல்லும்போதே அவன் குரல் அடைத்தது; கண்களில் நீர் திரண்டது.

****

மூலம்: சீனச் சிறுகதைத் தொகுப்பு ”ஐம்பதாம் ஆண்டுகளின் சீனக் கதைகள்” (1984)

________________________________________

புதிய கலாச்சாரம், அக்டோபர் 1999.