வெறுப்போட நியூஸ் பேப்பர எடுத்துப படிச்சா ஒரு சேதிய படிச்சிட்டு திகைச்சுப் போயிட்டேன். மத்தவா பேப்பரா இருந்தா தேமேன்னு போயிருப்பேன், நம்ப தினமணியிலேயே போட்டிருக்கா, ”திருப்பதியில கத்தியால மொட்டை அடிச்சா எய்ட்ஸ் வந்துருமோன்னு பிளேடு வாங்க உலக சுகாதார நிறுவனத்திடம் தேவஸ்தானம் உதவி கேட்கிறது”ன்னு.
என்ன கிரகச்சாரமோ கலி முத்திடுத்து. காமாசோமான்னு இத டீல் பண்ணாம, தெய்வீக காணிக்கை விஷயத்தை இப்படி பப்ளிக்கா போட்டா மத்தவா என்ன நெனைப்பாள்.
அதுவும் இந்த கம்யூனிஸ்டு படவாள், கம்யூனிஸ்டுன்னா இந்த சி.பி.எம். நம்பூதிரிபாடு வகையறா இல்லே, அவா நம்ப தேவஸ்தான அம்பிகள வச்சே தொழிற்சங்கம் கட்ற அளவுக்கு ஒத்து வந்துட்டாள்.
புதுசா சில கம்யூனிஸ்டு படவாள்லாம் சேர்ந்துண்டு ”நாட்டையே மொட்டை அடிக்கிறவங்கிட்ட போயி நம்பள மொட்டை அடிக்கிறதுக்கும் பிளேடு கேக்குற அளவுக்கு நாடு போகுது எல்லாம் வெங்கடாஜலபதிக்கே வெளிச்சம்னு” கேலி பேசறாள். அப்படியே அறஞ்சுடலாம்னு ஆத்திரம் வர்றது.
ஏற்கனவே சொவரெல்லாம் ”எய்ட்ஸ் தடுக்க ஆணுறையை பயன்படுத்துங்’கோன்னு எழுதித் தள்ளிருக்காள். திருப்பதி பூரா ”எய்ட்ஸைத் தடுக்க பிளேடைப் பயன்படுத்துங்கள்”னு எழுதத் தொடங்கிட்டா என்ன பண்றது.? யாருக்கு அவமானம்? எல்லாரும் பகவான நம்பி வர்ற எடத்துல பிளேட நம்பச் சொன்னா பரிகசிக்கமாட்டாளா? இந்த விஷயத்துலயும் பெரியவா தலையிட்டே ஆகணும். எவ்வளவோ சிரத்தை எடுத்துண்டு தூர்தர்ஷன் வரைக்கும் போய் காரியம் பண்ணி எழுமலையான் மகிமையைப் பத்தி ‘பாலாஜின்னு’ சீரியல் காட்டிண்டு இருக்கறச்சே, ஜனமான ஜனம் ஏழுமலையான வேண்டிண்டு இருக்கரச்சே, ஏழுமலையான் தேவஸ்தானம், கேவலம் பிளேடுக்கு பாவாடைப் பாதிரிமார் நாட்டுண்ட்ட போயி கையேந்தறது கெடுதலா படறது.
மேலும் பாரம்பரியமா யூஸ் பண்ண கத்திய விட்டுட்டு பிளேடு யூஸ் பண்ண ஆகம விதியில எடமிருக்கான்னு குழப்பமும் மிஞ்சறது, இதுவும் பெரியவா தெளிவுபடுத்தணும்.
அப்படி பிளேடுதான் தோதுன்னா, நம்ப மீயூசிக் அகடாமி டி.டி. வாசுகிட்ட சொன்னா நிரோத் உறை புராடக்ட் பண்றத விட பிளேடையும் பண்ணுடான்னு பெரியவா சொன்னா கேப்பன்.
எதுக்கும் பொள்ளாச்சி மகாலிங்கத்துகிட்ட கூட இது சம்பந்தமா பேசினா இந்து மதத்த விட்டுக் கொடுக்காம தலையாட்டுவாம், பெரியவாளுக்கு தெரியாதது இல்ல, இருந்தாலும் நேக்கு ஆதங்கம் தாங்கல.
எதுவும் தோதுபடலேன்னா, நம்ம சுதேசிமஞ்ச், ஆர்.எஸ்.எஸ். போல தேசபக்தி அமைப்புல உள்ள சூத்ராள வச்சி திருப்பதியில ஷிப்ட்டு போட்டு மொட்டை அடிக்கலாம்.
பெரியவா சொன்னா கேக்க சூத்ராள்ள ஆளா இல்ல, எதுக்கு பொறத்தியார்கிட்ட கையேந்தி அவமானப்படணும்?
வருஷத்துக்கு 70 லட்சம் மொட்டை போடறாள்; புதுசா கட்டடம் கட்ட 20 கோடி ரூபா ஒதுக்கறாள். ஏழுமலையான் பூஜை, புனஸ்காரத்த இண்டர் நெட்ல வேற காட்டறாள், மொட்டை அடிக்க பிளேடு வாங்க மட்டும் காசில்லையான்னு காதுபடவே பேசிக்கறது சகிக்கல்ல.
எதுக்கும் மேலிடத்துல சொல்லி வைங்கோ இண்டர்நெட்ல இங்கிலீஷ்ல போட்டா பரவால்ல, வேதத்த சூத்திர பாஷைல சொல்லி நீசத்தனம் பண்ணிடப்போறா.
கடைசியா ஒரு விஷயம் பெரியவா கவனமா இருங்கோ; வழக்கம் போல பெரியவாளுக்கு நம்பளவா சகலச் சேவையும் பண்ணாலும், பெரியவாள்க்கு மொட்டை அடிக்கற பரியாரி மேலே ஒரு கண்ணா இருங்கோ, கண்ட கத்தியும் போட்டு ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா அப்புறம் ‘சங்கராச்சாரிக்கு எய்ட்ஸ்னு’ இந்த சண்டாளப் பசங்க மானத்த வாங்கிடுவான், பெரியவாளுக்குத் தெரியாதது இல்ல, இருந்தாலும் மனசு கெடந்து பதர்றது. எதுக்கும் பிளேடு பாக்கெட்ட மொத்தமா வாங்கி வச்சுண்டா நல்லது.
இதிலெல்லாம் பெரியவாதான் நேரா தலையிடணம்னு இல்ல, நம்ப இராமகோபலானை உசிப்பி விட்டாலே உசிதம்னு தோண்றது. சகல க்ஷேமத்துக்கும் பெரியவா பொற்பாதம் பணியும்,
சுப்புணி அய்யர்,
மயிலாப்பூர், மெட்ராஸ் – 4
சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கம்: போராட்டமே மண வாழ்க்கை!
முன்னுரை:
1996-97ஆம் ஆண்டுகளில் தென்மாவட்டங்களில் நடந்த கொடியங்குளம் ‘கலவரத்தை’ உங்களில் சிலர் அறிந்திருக்கலாம். உண்மையில் இந்தக் ‘கலவரத்தில்தான்’ தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரின் சமூக வன்முறைக்கு எதிராக தலைவணங்காத உறுதியினைக் காண்பித்தார்கள். இக்காலத்தில் எமது அமைப்புகள் தமிழகமெங்கும் குறிப்பாக கிராமப்புறங்களில் சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை நடத்தியது. பல்வேறு அளவுகளில், களங்களில் நடந்த இந்த இயக்கத்தின் போது நடந்த மணவிழாவின் பதிவுதான் இந்தக் கட்டுரை. சாதி மறுப்பு மணங்களின் சிக்கலையும், நம்பிக்கையையும் ஒருங்கே புரிந்து கொள்ள இந்த கட்டுரை உதவும். படித்துப் பாருங்கள்!
- வினவு
தமிழகமெங்கும் ம.க.இ.க, பு.மா.இ.மு, வி.வி.மு. சார்பாக சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கம் கருத்திலும், களத்திலும் நடைபெற்றது குறித்து வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும். தமிழ்ச் சமூக வாழ்க்கையில் குறுக்கும்- நெடுக்குமாக ஊடுருவிய இவ்வியக்கத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று விழுப்புரத்தில் 1997-ஆம்ஆண்டு நவ. 22-இல் நடைபெற்ற சாதி மறுப்பு மணவிழா.
சாதி சடங்கு பொருத்தங்களுடன் சமூகத்தில் நடக்கும் திருமணம், ஒரு மகிழ்ச்சியான நினைவு. ஆனால் சாதி மறுப்பு மணவிழா ஒரு மலரும் நினைவல்ல.
வெட்டரிவாள் மூலம் ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயலும் ‘மேல்’ சாதிக் கொடூரத்தைக் கூட நேருக்கு நேர் சந்திக்க முடியும். ஆனால் கண்ணீரும், ஒதுக்கும் போக்கும், வெட்டவெளி வசவுகளும், திண்ணைப் பேச்சு அவதூறுகள் முதல் பொதுக் குழாய் குடிநீர் பிடிப்பது வரையிலும் ஒவ்வொன்றையும் எதிர்த்து சாதி மறுப்பு மணமக்கள் ஒவ்வொரு நொடியிலும் போராட வேண்டும்.
இன்று தீண்டாமை, நகரங்கள்- அதன் சுற்றுப்புறங்களில் பெருமளவு ஒழிந்திருந்தாலும், தீண்டாமை மறுப்பு மணம் என்பது இந்தியாவெங்கும் கிராமப்புறங்களில் நடக்க முடியாத ஒன்று. சாதி ஆதிக்கத்தின் உயிர் போகும் ‘மானப் பிரச்சனை’ இதில்தான் அடங்கியுள்ளது. எந்தச் சாதியில் பிறந்த பெண்ணும் தீண்டாமை மறுப்பு மணத்தை ஏற்கும் போது ‘மேல்’ சாதியினர் தமது ஆத்மா குத்திக் கிழிக்கப்பட்டதாக அலறுகிறார்கள்.
இதனால் தான் இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆண்- பெண் இயல்பினால் காதலித்து கல்லறைக்கு போன மணமக்கள் எத்தனை பேர் என்பதற்கு வரலாறு ஏதுமில்லை.
பறையரான காத்தவராயன் பார்ப்பன ஆரியமாலாவை காதலித்து ஊரைவிட்டு ஓடுகிறார். இவ்வழக்கு அரசனுக்கு வருகிறது. முதலில் விடுதலை செய்தவன் பார்ப்பனர்களின் போராட்டத்தினால் முடிவை மாற்றுகிறான். மணமக்கள் உயிரோடு கொளுத்தப்படுகிறார்கள். நாட்டுப்புற பாடல் ஒன்றின் கதை இதுவென்றால் தற்றோதைய நாட்டு நடப்பும் மாறவில்லை. தேர் இழுப்பதற்கு மட்டும் ஊர் கூடுவதில்லை, கலப்பு மணம் கண்ட மணமக்களை ஒற்றைப் பனையில் கட்டிவைத்து எரிப்பதற்கும் கூடுகிறது.
சாதி – மறுப்பு மணவிழா வெறும் பெருமையடையக் கூடிய ஒன்றல்ல. மாறாக இதில் சந்திக்கின்ற பிரச்சனைகளை வென்று கடப்பதுதான் முக்கியம்.
70 ஆண்டுகளுக்கு முன்பே ‘சுயமரியாதைத் திருமணம்’ என்ற பெயரில் தந்தை பெரியாரின் இயக்கம் இதை ஆரம்பித்து வைத்தது. 1968-ல் இத்திருமணங்களை அங்கீகரிக்கின்ற சட்டப் பிரிவும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இயற்றப்பட்டது. எழுபது ஆண்டுகளாய் சமூகத்தில் பரவ வேண்டிய சாதி மறுப்பு மணம் வளராமல் போனது ஏன்?
இன்றைக்கு சுயமரியாதை மணம் என்பது புரோகிதர் இல்லாத மணம் என்பதாகச் சுருங்கி விட்டது. தாலி, சாதி, ஆடம்பர விருந்துகள், அலங்காரங்கள் இவையெல்லாம் இருந்துவிட்டு ஐயர் இல்லை என்பதால் மட்டும் இவை பார்ப்பனிய எதிர்ப்பாகாது. மாறாக பார்ப்பனியமயமாக்கப்பட்ட தமிழ்த் திருமணங்கள் என்று தான் அழைக்க முடியும்.
ஆனால் எழுபது ஆண்டுகளில் உள்ளுர் அளவிலான சாதி தனது வலைப் பின்னலை இந்திய அளவில் நிறுவியிருக்கிறது. நகரமயமாக்கம், செய்தி ஊடகத்தின் வளர்ச்சி காரணமாக, ஃபேக்ஸ், கணிப்பொறி, இணைய வசதிகளுடன் சென்னையில் தலைமையகத்தை வைத்துக் கொண்டு சாதிச் சங்கங்கள் செல்வாக்குடன் செயல்படுகின்றன. பத்திரிகைகளில் வரும் மணமக்கள் விளம்பரங்கள் வயது. உயரம், நிறம், சம்பளம், போன்ற எண் கணக்குகளோடு உட்சாதிப் பிரிவையும் அழுத்தமாகக் குறிப்பிடுகின்றன.
காலனீய ஆட்சியிலிருந்தே ‘வடமாள், பாரத்வாஜம், அனுஷம்’ என்று தனது குல- கோத்திர- ஜாதக விவரங்களை வெளியிட்டு மண விளம்பரம் செய்யும் பார்ப்பன சாதியினரே இதற்கு முன்னோடிகளாவர். தெரு- ஊருக்குள்ளே சம்பந்தம் முடிக்கும் சாதியினரெல்லாம் இன்று அவாள் பழக்கப்படி தேச அளவில் தேடுகிறார்கள். முன்பை விட உட்சாதி அக மணமுறை மேலும் இறுகியிருக்கிறது. மேலும் நிச்சயதார்த்தம் முதல் சாந்தி முகூர்த்தம் வரை விரிவான சடங்குகள், மாப்பிள்ளை அழைப்பு, கார்- குதிரை ஊர்வலம், ஆடம்பர மண்டபம்- விருந்து- வீடியோ என்ற பார்ப்பனியத்துடன் நுகர்வுப் பண்பாடும் சேர்ந்துவிட்ட திருமணங்கள் தான் இன்று அனைத்துச் சாதிகளும் ஏற்றுக் கொண்ட முறையாகிவிட்டது.
இப்படி சுயமரியாதைத் திருமணங்களையே வீழ்த்திவிட்ட பார்ப்பனியமயமாக்கம் மட்டும்தான் கடந்த தலைமுறையின் வரலாறா? இல்லை. நகரமயமாக்கம், திரைப்படம், தொலைக்காட்சி, தொழில் வளர்ச்சி, கல்விப் பரவல் காரணமாக காதல்- கலப்புத் திருமணங்களும் தற்போது அதிகரித்து வருகின்றன. அப்படியானால் இயல்பாகவே சமூகத்தில தோன்றி வளருகின்ற காதல் திருமணங்களுக்கும், நமது மணவிழாவிற்கும் என்ன வேறுபாடு?
சமூக அக்கறை இன்றியும், வாழ்க்கை- பண்பாடு குறித்து சுயநல கண்ணோட்டமும் கொண்ட காதல் திருமணங்களின் புரட்சியும்- போராட்டமும் மணமேடையிலே தாலி கட்டியவுடன் முடிவுக்கு வருகிறது. ஆணாதிக்கமும், பார்ப்பனிய- சாதியப் பண்பாட்டை ஏற்றுக் கொண்டும், ஆண் அல்லது பெண்ணின் சாதிக்குள் சங்கமமாகிவிடும் இந்தக் காதல் மணங்கள் சாதி ஒழிப்பு என்ற சமூகப் போராட்டத்திற்கு எவ்வகையிலும் உதவவில்லை.
விழுப்புரம் மணவிழாவில் தோழர். மருதையன் குறிப்பிட்டதைப் போல எமது திருமணங்கள்- குடும்பங்கள், மூலமாக சாதி வெறியை எதிர்த்து மட்டுமல்ல, நான்கு சுவற்றுக்கு நடுவில் தாமும்- தன் வாரிசுகளுமே வாழ்க்கையின் இலட்சியம் என்று வாழும் குடும்பத்தின் கடைந்தெடுத்த சுயநலத்தையும் எதிர்த்தும் தான் போராடுகின்றனர். புரட்சிக்காக தன்னையும், குடும்பத்தினரையும் மாற்றிக் கொண்டு போராடுவதற்கு அமைப்பு வாழ்க்கை உதவி செய்கிறது. ஊருக்குள்ளே தீண்டாமை மறுப்பு மணமக்கள் போராடி வாழ்வதற்கும் இதுவே காரணம்.
மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய மதுரை பாளையம் வட்டார வி.வி.மு. செயலர் தோழர். மோகன் பேசும் போது, ”தென் மாவட்ட ஆதிக்க சாதியினர் கலவரங்கள் நடத்தும் காலகட்டத்தில் தங்களது திருமணத்தின் மூலம் சாதி ஒழிப்புப் போராட்டத்தினைத் தொடுத்திருக்கும் மணமக்கள் இந்தப் பெருமையை தங்கள் வாரிசுகளுக்கும் வழங்க வேண்டும்” என்று வாழ்த்தினர். தீண்டாமை மறுப்பு மணம் செய்திருக்கும் தோழர். மோகனது வாழ்க்கையும் அந்தப் போராட்டப் பெருமையைக் கொண்டதுதான்.
‘அமைப்பிற்கு வருவதற்கு முன்பே என் திருமணம் முடிந்துவிட்டபடியால் குழந்தையில்லாதவன் தொட்டிலை முகர்வது போல தீண்டாமை மறுப்பு மணம் புரியும் இந்த மணமக்களை வாழ்த்தி நிறைவடைகிறேன்’ என்று பேசிய ஆண்டிப்பட்டி வி.வி.மு. செயலர் செல்வராசின் வாழ்க்கையும் போராட்டங்களைக் கொண்டதுதான். அருகாமை தாழ்த்தப்பட்டவர் வீட்டில் வடை சாப்பிட்டதற்காகச் சிறுவயதில் அவரைக் குளிப்பட்டி வீட்டில் அனுமதித்தவர் அவரது தாய். இன்று சேரியோடு உறவாடும் தோழரை தாயால் சகிக்க முடியவில்லை. தாயும், தனயனும் தத்தமது போராட்டங்களைக் கைவிடவும் தயாரில்லை. விளைவு? இருவரும் 13 வருடங்களாகப் பேசுவதில்லை. அவரவர் வீடுகளுக்குப் படியேறுவதில்லை.
கலப்பு மணம் கண்ட தம்பதியினர் சேரியில் குடியிருப்பது எளிது. ஊருக்குச் சென்றால்? தருமபுரி அருகே ‘மேல்’ சாதித் தெருவில் குடியிருக்கும் தோழர் ஒருவரது மனைவி தாழ்த்தப்பட்டவர். பொதுக் குழாயில் குடிநீர் பிடிக்கும் போது மேல் சாதி கௌரவத்தை நெஞ்சிலே கொண்டிருக்கும் பெண்கள் சண்டை போடுகிறார்கள். முன்பு போல ஊரைவிட்டு ஒதுக்கவோ, பனைமரத்தில் கட்டி வைத்து அடிக்கவோ முடியவில்லை. தமது சாதிக் கௌரவத்தை குத்திக் கிளறும் வி.வி.மு. என்ற ‘அரக்கனை’ பகைத்துக் கொள்ள அவர்கள் தயாரில்லை. போராட்டத்தை தொடருகிறார்கள் எமது தோழர்கள்.
பார்ப்பனச் சாதியில் பிறந்த அந்த பெண்ணும் ம.க.இ.க. தோழர் ஒருவரும் விரும்புகிறார்கள். பெண்ணின் உறவினர்களது தடைகளைத் தாண்டி அமைப்பின் உதவியுடன் காதல் வெற்றி பெருகிறது. புதிய ஊரில் நிலையில்லாத வேலை- பொருளாதார நெருக்கடிகளுடன் குடும்ப வாழ்க்கை தொடங்குகிறது. தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு ‘வெண்மணி’ என்று பெயரிட்டு மகிழுகின்றனர். விழுப்புரம் மணவிழாவில் ‘மாட்டுக்கறி விருந்துண்ணும்’ அளவிற்கு தன்னை மாற்றிக்கொண்டுவிட்ட அந்தப் பெண் தோழரை அவரது உறவினர்கள் இன்றுவரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
சாதி- தீண்டாமை மறுப்புத் திருமணங்களைத் திட்டமிட்டு எமது அமைப்பே ஏற்பாடு செய்கிறது. அப்படி ஒரு விதியில்லை என்றாலும் உறுப்பினர்கள் அனைவரையும் அவ்வாறே மணம் செய்யுமாறு போராடுகிறோம். சமூகத்தில் நடைபெறும் காதல் மணங்கள் வெற்றியடைய கவர்ச்சி- வர்க்க அந்தஸ்த்தை உள்ளடக்கிய காதல் உணர்வு ஊக்குவிக்கிறது. தீண்டாமை மறுப்பு மணம் வெற்றியடைவதற்கு எம் தோழர்களின் சமூக உணர்வே காரணமாகிறதன்றி வெறும் காதல் உணர்வல்ல.
சென்ற ஆண்டு சாதி மறுப்புத் திருமணங்களை பல தோழர்கள் அவரவர் ஊர்களில் நடத்திவிட்டார்கள். விழுப்புரம் மணவிழாவிற்காக அமைப்பை பற்றித் தெரிந்த ஆதரவாளர்கள், நண்பர்கள், மற்றும் பொதுவானவர்கள் வீட்டிற்குச் சென்று மணவிழா குறித்து பேசி விளக்கிய போது மக்களுக்கு பல சந்தேகங்கள், கேள்விகள், ‘தாலியில்லாமல் கல்யாணம் செஞ்சா கூட்டிக் கொடுக்கிற மாதிரியில்லை’ என்றனர். திருச்சி அருகே துறையூரைச் சேர்ந்த சி.பி.எம். கட்சிக்காரர் ‘இந்தத் திருமணங்களுக்கு அத்தாட்சியில்லை’ என்று பெண் கொடுக்க வந்த ஒரு வீட்டினரைத் தடுத்து விட்டனர்.
‘உங்க சைடுல நீங்க எப்படி வேணா கல்யாணம் செஞ்சாலும் எங்களுக்கு ஒரு மாதா கோவில்ல மோதிரம் மாத்தினாத்தான் நிம்மதி’ என்றனர் ஒரு குடும்பத்தினர். அழைப்பிதழில் ‘மாட்டுக்கறி விருந்து’ என்று போட்டிருப்பதால் ‘எங்க உறவுக்காரங்களுக்கு எப்படி பத்திரிக்கை வைக்க முடியும்’ என்றார் ஒரு தந்தை.
இப்படி பல சுற்றுப் போராட்டங்களைத் தாண்டி ஆறு தம்பதியினர் தயாராயினர் என்றாலும் சரி பாதி மணமக்களின் பெற்றோர்கள் நிகழ்ச்சிக்கு வரவில்லை. மேலும் மணப்பெண்கள் இருவருக்கு இது மறுமணமும் கூட. மணமகன்களில் ஒருவரான விழுப்புரம் பகுதி தோழர். நடராசன் விழா நடந்த அன்று காலை வரை தனது பெற்றோர்களைத் திருமணத்திற்கு வருமாறு மன்றாடுகிறார். ‘ஊர் முன்னாடி அசிங்கப்படுத்தி அவமானமாக்கிட்ட’ என்ற பெற்றோர்கள் திருமணத்தன்று வெளியூருக்குச் சென்றுவிட்டனர்.
வேறு ஒரு தோழர் தனது தந்தையை திருமணத்திற்கு அழைத்த போது, ”நம்ம உறவுக்காரங்க இருக்குற கிராமத்தில உள்ள ‘இந்த’ பெண்ணை என்னை இழிவுபடுத்துறதுக்குன்னே கல்யாணம் செய்யப் போறே’ என்று வர மறுத்து விட்டார்.
வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் ஊரைச் சேர்ந்த தோழர் ராஜா விழுப்புரம் நிகழ்ச்சியில்தான் தனது சாதி மறுப்பு மணம் நடக்க வேண்டும் என்று உறுதியாக முடிவு செய்கிறார். சாதி ஆதிக்கத்திற்குப் பேர் போன அவரது ஊரைக் கண்டஞ்சி பல பெண் வீட்டினர் தயங்குகின்றனர்.
இதே வட்டாரத்தில் இரு மாதங்களுக்கு முன்னர்தான் அமைப்பில் சேர்ந்த தோழர் ஒருவரது தங்கையை மணப்பதற்க்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் ராஜாவின் உறவினர், பெற்றோர் யாரும் விழுப்புரம் வரவில்லை. பின்னர் தம்பதியினராய் ஊருக்குத் திரும்பும் தோழர்கள் இருவரையும் சாணிக் கரைசல் ஆரத்தி வரவேற்கிறது. குடியிருக்க வீடு கூட கிடையாது என முடிவு செய்த ஊரார். அதனாலென்ன? அதே ஊரில் மணமக்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியை பொதுக்கூட்டமாக நடத்தினார்கள் தோழர்கள்.
இப்படிப் பல தடங்கல்கள் இருந்தாலும் விழுப்புரம் மணவிழா தோழமையின் குதுகலத்தோடு நடந்தேறியது. தமிழகம் முழுவதிலிருந்தும் பல தோழர்கள், நண்பர்கள் குடும்பத்தோடு விழாவில் கலந்து கொண்டனர். தந்தை பெரியார் சிலைக்கு மாலையணிவித்து, மணமக்களின் பின்னே சாதிய ஒழிப்பு முழக்கங்களோடு அனைவரும் அணிவகுத்து வர- இந்த புதிய திருமண ஊர்வலத்தை விழுப்புரம் மக்கள் மகிழ்ச்சி கலந்த வியப்புடன் பார்த்தனர்.
தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓட்டுநரான அவர் தேநீருக்காக விழா மண்டபம் அருகே லாரியை நிறுத்தியவர், திருமண நிகழ்ச்சியைக் கேட்டறிந்து மணமார வாழ்த்தி நன்கொடையும் அளிக்கிறார். மண்டபத்தின் கடைசியிலே அமர்ந்து நிகழ்ச்சிகளை முழுவதுமாய் கவனித்துக் கொண்டிருந்த கருப்புச் சட்டையணிந்த இரண்டு முதிய திராவிட இயக்கத் தோழர்களின் கண்களில் ஆனந்தம் ததும்புகிறது.
விழுப்புரம் அருகே ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் அந்த நண்பர் விழாவினைப் பாராட்டி தனது முகவரியைக் கொடுத்து அமைப்பில் சேரவேண்டும் என்கிறார். விழாவிற்கு வந்த அனைவரும் மணமக்களுக்கு பல்வேறு நூல்களை பரிசாக அளிக்கின்றனர். விருத்தாசலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாதி ஒழிப்பு வெளியீட்டைப் (சிறு நூல்) பாராட்டி ரூ.500 நன்கொடை அளிக்கின்றனர்.
குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டு மாட்டுக்கறி பிரியாணி சமைக்கின்றனர் அந்த முஸ்லீம் இளைஞரின் தலைமையிலான குழுவினர். இளைய தலைமுறையினர் விருந்தைச் சுவைத்த போது, சில முதியவர்கள் மட்டும் விருந்துண்ணவில்லை. ஒரே நாளில் அவர்கள் மாறிவிடுவார்கள் என எதிர்பார்க்க முடியாதுதான். அதே சமயம் பல நண்பர்கள் முதல் முறையாக மாட்டுக்கறியைச் சுவைக்கிறார்கள். இந்த விழா அவர்களது புதிய சிந்தனைக்கு ஒரு துவக்கம்.
புதிய ஜனநாயகப் புரட்சிக்காக தமது குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாக மணமக்கள் உறுதி மொழியேற்று மாலை மாற்றுகின்றனர். சாதி- தீண்டாமை மறுப்பு மணமக்கள் வாழ்க வாழ்கவே என்ற முழக்கம் மண்டபத்தை நிறைவிக்கிறது. இதுவரையிலும் இனிமேலும் வாழ்க்கையை போராட்டப் பாதையில் அமைத்துக் கொள்வதற்கான நம்பிக்கையையும், துணிவையும், பொறுப்புணர்வையும் அக்கணத்தில் பெறுகிறார்கள் மணமக்கள்.
விவசாயப் புரட்சி என்ற வர்க்கப் போராட்டத்தினூடாகத்தான் சாதி ஒழிப்பிற்கான அடித்தளத்தை நிறுவமுடியும் என்ற போதிலும், சாதிகளற்ற எதிர்கால சமூகத்தை இன்றே வாழ்ந்து காட்டுவதன் மூலம், சாதிகளிலான இன்றைய சமூகத்திற்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள். அதுதான் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் செயலூக்கமுள்ள நம்பிக்கை.
மணவிழா நடந்த மண்டபத்தில் வேலை செய்யும் ஒரு பெண்மணி, முறையான திருமணங்களைக் கண்டிருந்த அவர் இவ்விழாவை ஆரம்பத்தில் சட்டை செய்யவில்ல. நேரம் செல்லச்செல்ல மண்டபத்தில் நிறைந்திருந்த மக்களை வியப்புடன் பார்க்கிறார். நிகழ்ச்சிகளையும் சற்று கவனிக்கிறார். ஒதுங்கியிருந்தவர் முழு மனதுடன் உரைகளைக் கேட்கிறார். விழா முடிந்து நள்ளிரவு அமைதியில் தோழர்களை அணுகிக் கேட்கிறார், ”எங்க வீட்லயும் ஒரு பொண்ணு இருக்கு. உங்க தோழர்கள்ள ஒருத்தருக்கு கட்டிக் கொடுக்கலாம்னு நினைக்கிறேன்.”
_________________________________________
- புதிய கலாச்சாரம், மார்ச் 1998