Language Selection

நூல்கள் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மாநாட்டில் லெனினின் வழியை ஏற்ற பெரும்பான்மையினர் போல்ஷ்விக்குகள் என்று பிரிந்தது அப்போதுதான். அன்று மட்டுமல்ல, இன்றும் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகளும், அறிவாளி வர்க்கமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கிறது, இனியும் அப்படித்தான். ஏன்? அறிவாளிகளின் சமூக, உளவியல் பின்னணியை ‘காவுட்ஸ்கி’யின் கட்டுரையின் மூலம் விளக்கி பதில் தருகிறார் லெனின்.

அறிவாளிகளின் பண்புகள் ‘மண்ணுக்கேற்றபடியெல்லாம் மாறுவதில்லை’, உலகெங்கிலும் ஒரே மாதிரிதான். தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு சமூக நடவடிக்கையில் இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஏராளம் இருக்கிறார்கள். புரட்சிகரக் கம்யூனிஸ்டுக் கட்சிகளை எதிர்ப்பதில் மட்டும் இவர்கள் ஒன்றுபடவில்லை. தமது கத்துக்குட்டி அறிவின் மூலம் சமூகத்தை ஏளனமாகப் பார்க்கும் இவர்களது சிந்தனைமுறை, வாழ்க்கை பற்றிய பாதுகாப்பு உணர்வு, தன்னகங்கார தனித்துவம் இன்னும் ஏராளமானவற்றில் ஒன்றுபடுகிறார்கள்.

பெரும்பான்மை மக்களோ, கட்சியோ, சமூகமோ இவற்றுடன் முரண்பட்டு தன்னை உயர்வாய் நினைத்துக் கொள்ளும் அறிவாளிகளின் பாத்திரத்தை ‘அதே அறிவைக்’ கொண்டு ஆய்கிறார் லெனின். இனி அவரது வார்த்தையிலேயே பார்ப்போம்.

***

இந்தச் சந்தர்ப்பத்தில், இங்குமில்லாமல் அங்குமில்லாமல் ஊசலாடும் அறிவாளியின் பண்பு பற்றி கார்ல் காவுட்ஸ்கிஅண்மையில் கூறிய சிறப்புமிக்க சமூக, உளவியல் வரையறையை நினைவுக்குக் கொண்டுவராமல் இருக்க முடியாது. பல்வேறு நாடுகளின் சமூக ஜனநாயகக் கட்சிகள் அண்மைக் காலங்களில் இப்படிப்பட்ட குறைபாடுகளுக்கு அடிக்கடி ஆளாகின்றன.

எனவே இத்தகைய நோயின் குணம் பற்றியும் அதிக அனுபவமிக்க தோழர்கள் வாயிலாகக் கற்றுக் கொள்வது நமக்கு மிக மிகப் பயனுள்ளதாக இருக்கும். எனவே குறிப்பிட்ட சில அறிவாளிகள் குறித்த காவுட்ஸ்கியின் வரையறை நாம் எடுத்துக் கொண்ட பொருளிலிருந்து விலகிச் செல்வது போன்று மேற்பார்வைக்குத் தோன்றலாம்.

”இன்றைக்கு நமது கவனத்தை மிகுந்த அளவு ஈர்க்கிற பிரச்சனை அறிவாளிகளுக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையே உள்ள பகை முரண்பாடாகும். (ஜெர்மன் சொற்களான லிட்டராட் மற்றும் லிட்டராடென்டம் ஆகிய சொற்களை மொழி பெயர்த்து அறிவாளி, அறிவுத்துறையினர் என்று நான் பயன்படுத்துகிறேன்). நான் இந்த முரண்பாட்டை ஏற்றுக் கொள்வதால் எனது நண்பர்கள் அநேகமாக என்மீது கோபமாக இருப்பார்கள். (காவுட்ஸ்கியே ஓர் அறிவாளி, ஓர் எழுத்தாளர், ஓர் பத்திரிகையாசிரியர்- லெனின்) ஆனால் உண்மையிலேயே அந்தப் பகை முரண்பாடு இருக்கிறது.

ஏனைய விஷயங்களைப் போலவே, இதனை மறுப்பதன்மூலம் வெல்ல நினைப்பது பேதமையான தந்திரமாகும். இம்முரண்பாடு சமூகப் பண்பாகும்; அது வர்க்கங்கள் சம்பந்தப்பட்டது; தனி நபர் சம்பந்தப்பட்டதல்ல. ஒரு தனிப்பட்ட அறிவாளி, ஒரு தனித்த முதலாளியைப் போல, பாட்டாளி வர்க்கப் போராட்டத்தில் பாட்டாளிகளோடு தன்னை இணைத்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்யும் போது, அவர் தனது குணாம்சத்தையும் மாற்றிக் கொள்கிறார். கீழே பிரதானமாக நான் பேசப்போவது இப்படிப்பட்ட வகை மாதிரியான அறிவாளிகளைப் பற்றி அல்ல. காரணம், அவர்கள் ஒரு சில விதி விலக்கானவர்கள்.

முதலாளித்துவச் சமுதாயத்தின் நிலைப்பாடுகளையே தனது நிலைப்பாடுகளாக ஏற்றுக் கொண்ட பரவலாகக் காண கிடைக்கிற அறிவாளிகளைக் குறிப்பிடவே நான் அறிவாளி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். அறிவுத்துறையினர் என்ற வகையில் ஒரு தனி வர்க்கத்தின் குணாம்சத்தை அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். இந்த வர்க்கம் பாட்டாளி வர்க்கத்திற்கு ஒருவகையில் பகை முரண்பாடு கொண்டதாக இருக்கிறது.

”எனினும், இந்த முரண்பாடு முதலுக்கும் உழைப்புக்குமான முரண்பாட்டிலிருந்து வேறுபடுகிறது. அறிவாளி ஒரு முதலாளி அல்ல. அவரது வாழ்க்கைத்தரம் முதலாளித்துவத்தன்மை உடையது என்பது உண்மையே; தான் ஒரு ஓட்டாண்டியாகாமல் தடுக்க அத்தகைய வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது; ஆனால் அதே நேரத்தில் தன் உழைப்பின் விளைபொருளை அவர் விற்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார். பெரும்பாலும் உழைப்புச் சக்தியை விற்கும்படி ஆகிறது. அடிக்கடி அவர் முதலாளியால் சுரண்டப்படுகிறார்; அவமதிப்புக்குள்ளாகிறார்.

எனவே, அறிவாளிக்குப் பாட்டாளி வர்க்கத்தோடு பொருளாதாரப் பகை முரண் ஏதுமில்லை. ஆனால் அவரது வாழ்க்கை நிலையும், உழைப்புச் சூழலும் பாட்டாளி வர்க்க ரீதியாக இல்லை. இதுவே உணர்வுகளிலும் கருத்துக்களிலும் பகை முரண்பாட்டைத் தோற்றுவிக்கிறது.

”தனிப்படுத்தப்பட்ட ஒரு தனிநபராக இருக்கும் பாட்டாளி ஒரு பொருட்டேயல்ல. அவரது சக்தி அனைத்தும், அவரது முன்னேற்றம் முழுவதும், அவரது நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் எல்லாமும்அமைப்பிலிருந்தும் அவர் தமது தோழர்களோடு சேர்ந்து எடுக்கும் திட்டமிட்ட நடவடிக்கையிலிருந்தும் பெறப்பட்டவை. பெரியதும் வலிமை மிக்கதுமான அமைப்பின் ஓர் அங்கமாக அவர் விளங்கும்போது அவர் பெரியவராக வலிமை மிக்கவராக விளங்குகிறார். இந்த அமைப்புதான் அவருக்குப் பிரதானமானது; இதனோடு ஒப்பிடும்போது தனிநபர் பொருட்டாக மாட்டார். முகம் தெரியாத மிகப் பெரும் மக்கள் திரளின் பகுதியாகப் பாட்டாளி மிகப் பெரும் ஆர்வத்தோடு போராடுகிறார். இதில் சுயநலனுக்கோ, தனிப்பட்டவர் புகழுக்கோ இடமில்லை. தாம் நியமிக்கப்படும் எந்த ஒரு நிலையிலும் சுயகட்டுப்பாட்டோடு அவர் கடமையாற்றுகிறார்; அது அவரது உணர்வுகள் எண்ணங்கள் முழுமையையும் தழுவிக் கொண்டுவிடுகிறது.

”அறிவாளிகளின் விஷயமோ முற்றிலும் வேறானது. தனது சக்தியை வைத்துப் போரிடாமல் வாதங்களை வைத்துப் போரிடுகிறார். அவரது ஆயுதங்களோ அவரது சொந்த அறிவு, சொந்ததிறமை, சொந்த நம்பிக்கைகள் மட்டுமே; எந்த ஒரு பதவியையும் கூட அவர் தனது சொந்தப் பண்புகளால் மட்டுமே அடையமுடியும். எந்த ஒரு வெற்றிகரமான நடவடிக்கைக்கும் தனது தனித்துவத்தைக் கட்டவிழ்த்து விடுவதே அவருக்கு முக்கிய நிபந்தனையாகப்படுகிறது. முழுமைக்குத் தம்மைக் கீழ்ப்படுத்தி ஒரு பகுதியாக விளங்குவதற்கு அவர் மிகுந்த சிரமத்தின் பேரில்தான் ஒப்புக் கொள்கிறார். அதுவும் கூட அவசியத்தினால் ஏற்றுக் கொள்கிறாரே தவிர, ஆர்வத்தினால் அல்ல. ஒழுங்கு கட்டுப்பாடு மக்கள் திரளுக்கு மட்டுமே அவசியம் என்று அவர் அங்கீகரிக்கிறார்; ஆனால் தேர்ந்த உள்ளங்களுக்கல்ல. தம்மை பின்னதாகச் சொல்லப்பட்டவர்களோடு சேர்த்துக் கொள்கிறார்.

”நீட்சேயின் தத்துவமே அறிவாளியின் உண்மைத் தத்துவமாகும். அதி மனிதன் கோட்பாட்டையும் சேர்த்து அத்தத்துவத்தில் தனிமனித ஆளுமையை நிறைவு செய்வதே எல்லாம்; இப்படிப்பட்ட தனித்துவத்தை பெரியதொரு சமூக நோக்கத்திற்குக் கீழ்ப்படுத்துவது இழிவானது, கேவலமானது. இத்தத்துவமே அறிவாளியை பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டத்தில் பங்கேற்க முடியாதபடி ஆக்கி விடுகிறது.

”நீட்சேவுக்கு அடுத்து, அறிவுத் துறையினரின் உணர்வுகளுக்கு விடையளிக்கத்தக்க ஓர் தத்துவத்தை எடுத்து விளக்கியவர் அநேகமாக இப்சனாகத்தான் இருக்க வேண்டும். அவரது ‘மக்களின் எதிரி’ என்ற நாடகத்தில் வரும் டாக்டர் ஸ்டாக்மான், பலர் சொல்வது போல, சோசலிஸ்டு அல்ல; பாட்டாளி வர்க்கத்தோடு நிச்சயம் மோதலுக்கு வரப்போகும் அறிவாளி வகையைச் சேர்ந்தவரே. பாட்டாளி வர்க்க இயக்கத்தோடு மட்டுமல்ல, பொதுவில் வேறு எந்த வகையான மக்கள் இயக்கமாக இருந்தாலும் அதற்குள் அவர் வேலை செய்ய ஆரம்பித்ததுமே அதற்கெதிராக மோதத் தொடங்கி விடுவார்.

பாட்டாளி வர்க்க இயக்கம், ஏன் ஒவ்வொரு ஜனநாயக இயக்கத்தின் அடித்தளமாக விளங்குவது, ஒருவர் தனது சக தோழர்களின் பெரும்பான்மைக்கு மதிப்புக் கொடுப்பதாகும். ஆனால் ஸ்டாக்மன் வகையைச் சேர்ந்த அறிவாளியோ ‘திட்டவட்டமான பெரும்பான்மை’யை தூக்கி எறியப்பட வேண்டிய ஓர் அரக்கனாகவே கருதுகிறார்….

”பாட்டாளி வர்க்க உணர்வுகளோடு ஊறிப்போன ஓர் அறிவாளிக்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஜெர்மானிய லீப்னெக்ட் ஆவார். இவர் சிறந்த எழுத்தாளராக இருந்தும் அறிவாளியின் குறிப்பான தனிப்பட்ட குணாம்சத்தை இழந்துவிட்டார்; அவர் பாட்டாளிகளின் படை அணிகளோடு மகிழ்ச்சியோடு நடை போட்டவர்; தான் நியமிக்கப்பட்ட எந்த ஒரு பதவியிலும் அவர் பணிபுரிந்தார். நமது மாபெரும் லட்சியத்திற்கு முழுமனத்தோடு தன்னைக் கீழ்ப்படுத்தினார். இப்சனிலும் நீட்சேவிலும் பயிற்சி பெற்ற அறிவாளிகள் தமது தனித்தன்மை ஒடுக்கப்படுகிறது என்று தீனமான குரல் ஊளையிட்டதை அவர் வெறுத்து ஒதுக்கினார்.

சிறுபான்மையில் தங்களைக் காண நேர்ந்த அறிவாளிகள் இப்படிப்பட்ட பண்புகளை வெளியிடக்கூடும். லீப்னெக்ட், சோசலிச இயக்கத்திற்குத் தேவையான அறிவாளி வகையின் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். காரல் மார்க்சையும் கூட இங்கே நான் குறிப்பிடலாம். அவர் தன்னை முன்னுக்குத் தள்ளிக் கொண்டதேயில்லை; சர்வதேச அகிலத்தில் பலமுறை சிறுபான்மையாக இருந்த போதும் அவர் கட்சிக் கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டது மிக மிக அசாதாரணமானது.

(மூலம்: ஆங்கிலம். ஓரடி முன்னே ஈரடி பின்னே – லெனின்: தொகுப்பு நூல்கள்  தொகுதி 7, பக்கம் 322 – 4)

__________________________________________

- புதிய கலாச்சாரம், ஜூலை 1998.