துடிப்பும் மிடுக்குமாய்
புழுதிபறக்க
சிறுமியாய் ஓடிவிளையாடித்திரிந்தவள்
அண்ணாவெனத்தோளில்
தாவியேறி கூடவந்தவள்
திரண்டெளும் அலைகளிலும்
கையைப்பிடித்தவாறு எதிர்த்து நின்றவள்

 

கரையில் பொறுக்கிய
சிப்பி சோதிகளை
மடித்துக்கட்டிய என் சாறத்துள் சேர்ப்பாள்
தண்ணீர் அள்ளிவர
சிறுகுடத்தொடு நடப்பாள்
கிணற்றடியில்
தாகத்தொடு நிற்கும்
பசுக்களிற்கே முதல் இறைப்பாள்
மனிதஈரம் ஊறிய பிஞ்சுநெஞ்சம்
போரின் ரணத்தால்
விறைத்துக்கிடக்கிறாள்
சடுதியாக வலிவந்து
வீழ்ந்து துடிப்பதாய் சொல்கிறார்கள்

இரண்டு தசாப்தங்கள்
விசுவமடுக்
காட்டைப் பெயர்த்து
பசுந்தரையாய் நிமிர்த்திய தந்தை
கூனல் விழுந்தும்
கொப்பறாத்தேங்காய் பிளக்கிறார்
காலையிளந்து
தாய் கைத்தடியொடு இருக்கிறார்

கலையரசி
இன்னமும் சிறுமியாய் அருகில் வருகிறாள்
கையைப்பிடித்து
தலையைத்தடவி அண்ணா என்கிறாள்
கண்முன்னே பறிக்கப்பட்ட
கணவனைப் பற்றியதோ
பச்சிழம் குழந்தையை இழந்த தவிப்பையோ
எதுவும் சொல்லவுமில்லை
கண்ணீர் விடவுமில்லை
யுத்தத்தைப்பற்றிப் பேசவுமில்லை

அவளது மௌனம்
யுத்தத்தை வெற்றிகொண்டதாய்
மார்தட்டுபவர்களை
சுக்குநூறாய் உடைத்துப்போடுகிறது
கலையரசிகள்
வலியோடு வாழும் வாழ்வு
ஓர் இனத்தின் அடையாளமாய்
சாட்சியாய்
ஏழைக்குடும்பங்களை வீசி எறிந்திருக்கிறது

போர்நினைவாய்
எழுப்பப்படுகின்ற இராணுவச்சின்னங்களும்
புலிகள் வாழ்ந்த பதுங்கு நிலவறைகளும்
காட்சிப்பொருட்களாய்
சுற்றுலாவிற்கு விடப்படுகிறது
யுத்தவலியோடு போரிடும்
கலையரசிகள் வாழ்வு
சிங்களமக்களிடம் திட்டமிட்டே மறைக்கப்படுகிறது

-30/07/2012