12062022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

கிளிநொச்சி விவசாயிகளின் 3000 ஏக்கர் நெற்பயிர்களை அழித்த இராணுவம்

அண்ணளவாக கிளிநொச்சி இரணைமடுக் குளம் சார்ந்த நெற்பயிர்ச்செய்கையில் மூன்றில் ஒன்று நீர் இன்றி அழிந்திருக்கின்றது. மிகுதி முழுமையான பலனின்றி அரையும்குறையுமாக சுடுகாடாகி இருக்கின்றது. யுத்தம் அனைத்தையும் அழிக்க, மீண்டும் இராணுவம் விவசாயிகளை சூறையாடியிருக்கின்றது.

இதன் பின்னால் வரட்சியையும், பயிரிட அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் விதைத்ததுமே காரணம் என்று அரசும் அரசு ஊதுகுழல்களும் ஊளையிடுகின்றது. இதன் மூலம் இவைகளே தான் இதற்கு காரணம் என்று தங்கள் குற்றத்தை மூடிமறைக்க அதிகார வர்க்கம் முதல் இராணுவம் வரை முனைகின்றனர். கிளிநொச்சி விவசாயிகளுக்கு பிரதான நீர் விநியோகக் குளமான இரணைமடுக் குளமும், குளத்தைச் சுற்றியும் நடக்கும் பாரிய இராணுவ விஸ்தரிப்புத் தான், 3000 ஏக்கர் நெற்பயிரை கருக்கி இருக்கின்றது.

இரணைமடுக் குளம் 34 கன அடி நீர்தேக்க அளவு கொண்டது. இந்த நீர் அளவு மட்டத்தை 28 கன அடி நீர்மட்டமாக குறைத்ததன் நோக்கம் என்ன? இதை பிரதி பலிக்கும் "கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன பிரதி பணிப்பாளர் பொறியியலாளர் நவரட்ணம் சுதாகரன், இரணைமடு குளத்தில் 29 கன அடி நீர் இருந்தபோது அதற்கேற்ற வகையில் 8000 ஏக்கர் பரப்பளவில் சிறுபோகம் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது என தெரிவிக்கின்றார்." ஆக 5 கன அடி நீர் ஏன் தேக்கப்படாமல், அவை ஏன் வெளியேற்றப்பட்டது?

இப்படி வெளியேற்றப்பட்ட அந்த நீரின் அளவு அண்ணளவாக 35000 ஏக்கர் அடியாகும். இது மொத்த குளத்தின் நீர்தேக்கத்தில் மூன்றில் ஒன்றாகும். இந்த நீரை இராணுவ விஸ்தரிப்பை அடிப்படையாக கொண்டு தான், 29 கன அடியாக குறைக்கப்பட்டது. உண்மையில் 1951 ஆண்டு இரணைமடுக்குள நீர்மட்ட அளவு குறைக்கப்பட்டதன் பின் புலத்தில் தான், 3000 ஏக்கர் நெற்செய்கை கருகியது. ஏற்பட்ட வரட்சியையும், மேலதிக விதைப்பையும் இதனால் ஈடுகொடுக்க முடியாமற் போனது.

29 கன அடி நீர் மட்டத்தை அல்லது அதற்கு குறைவான 28 கன அடி நீர் மட்டத்துக்கு இராணுவம் குறைத்தது, கிளிநொச்சி மக்கள் மேல் மீண்டும் ஒரு இனவாத யுத்தத்தை நடத்தி இருக்கின்றது. 1951இல் இரணைமடுக்குளம் இரண்டாவது தடவையாக அணை கட்டப்பட்டு 28 அடியாக உயர்த்தப்பட்ட போது நீர்க்கொள்ளளவு 71,000 ஏக்கரடியாக இருந்தது. 1954இல் மூன்றாவது தடவையாக இரணைமடுக்குள அணை கட்டப்பட்டு 30 அடியாக உயர்த்தப்பட்ட போது அதன் நீர்க்கொள்ளளவு 82,000 ஏக்கரடியானது. 1977ஆம் ஆண்டு மீண்டும் நான்காவது தடவையாக இரணைமடுக் குளத்தின் அணைக்கட்டு 34 அடியாக உயர்த்தப்பட்டு நீர்க்கொள்ளளவு 106,500 ஏக்கர் அடியாக உயர்த்தப்பட்டது. இப்படி இருக்க இன்று அதை 28 கன அடியாக குறைத்திருக்கிறது இராணுவம்.

இரணைமடு குளத்தின் தரவுகளின் படி, பூரண நீர் விநியோக மட்டம் - 30.3 மீற்றர் (கடல் மட்டத்திலிருந்து 101 அடி), அதியுயர் வெள்ள நீர்மட்டம் - 32.57 மீற்றர் (108.5 அடி), பூரண நீர்விநியோக மட்டத்தின் பரப்பளவு - 27,680 ஹெக்ரேயாகும். இங்கு வருடந்தோறும் பெரும்போகத்தில் மாத்திரம் 30,480 மீற்றர் நீளமுடைய பிரதான கால்வாய்கள், 13,860 மீற்றர் நீளமுடைய கிளை வாய்க்கால்கள், 156,540 மீற்றர் நீளமுடைய வயல் வாய்க்கால்கள் என்பவற்றின் மூலம் 8,352 ஹெக்ரேயர் (அண்ணளவாக 20000 ஏக்கர்) பரப்பிற்கு பாசனம் செய்யப்படுகின்றது.

இறுதியாக புனரமைக்கப்பட்ட ஆண்டு – 1977 விவசாயப் பரப்பளவு (பிரத்தியேகம்) - 8352.8 ஹெக்ரேயர். விவசாயப் பரப்பளவு (மதிப்பீடு) - 9,400 ஹெக்ரேயாகும்.

இப்படி பூரணமான நீர் வளமிருந்தும், இரணைமடுக் குளத்தைச் சுற்றி பாரியளவில் நடைபெறும் இராணுவ விஸ்தரிப்பு மற்றும் 2000 குடியிருப்புகள் கொண்ட பாரிய இனவழிப்பு பின்புலத்தில் தான், இரணைமடுக் குளம் சார்ந்த கிளிநொச்சி விவசாயத்தில் மூன்றில் ஒன்று முற்றாக கருகி இருக்கின்றது. இனவழிப்பின் மற்றொரு பரிணாமம் தான் இது.

பி.இரயாகரன்

06.08.2012


பி.இரயாகரன் - சமர்