Language Selection

புதிய கலாச்சாரம் 2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


கார்ல் மார்க்ஸ், செப்,4,1857.

 

தென்னிந்தியாவில் தொடங்கிய விடுதலைப் போராட்டத்தின் துயரம் தோய்ந்த முடிவுரையாக, எண்ணெய் தீர்ந்த விளக்கின் சுடராக, எரிந்து அடங்கியது 1806 வேலூர் சிப்பாய்ப் புரட்சி. திப்பு என்ற கவிதை கரைந்த பிறகு, தீபகற்பக் கூட்டிணைவு மறைந்த பிறகு, காலனியாதிக்கத்துக்கு எதிரான சக்திகளை ஒன்றாய்க் கட்டும் தலைமை ஏதும் இல்லாததால் அடுத்த 50 ஆண்டுகளில் அநேகமாக இந்தியா முழுமையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது கும்பினியாட்சி.

 

 

மராத்தியர்களின் பதவிச் சண்டைகளும், இரண்டு போர்களும் மராத்தா அரசை வீழ்த்தின. பிறகு ராஜபுதனம் வீழ்ந்தது. இந்து முசுலிம் சீக்கியப் படைகளின் வீரமிக்க போருக்குப் பின் லாகூர் உடன்படிக்கை யின் வளையத்தில் பஞ்சாப் வீழ்ந்தது. எஞ்சியிருந்தவை ஏற்கெனவே கும்பினியின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டிருந்த டெல்லி, அவத் (இன்றைய உ.பி, பீகாரின் பெரும்பகுதி) சமஸ்தானங்கள் மட்டுமே.

 

நவாப் வாஜித் அலி ஷாவின் நிர்வாகம் சரியில்லை என்று சொல்லி, ஒரே ஒரு பேனாக்கோடு கிழித்து 1856 இல் அவத் அரசை கும்பினியாட்சியின் கீழ்க் கொண்டு வந்தான் டல்ஹவுஸி. அவத் மன்னன் கல்கத்தாவில் சிறை வைக்கப்பட்டான். ""பகதூர் ஷாவின் மறைவுக்குப் பின் அவரது வாரிசுகள் தங்களை மன்னர்கள் என்று அழைத்துக் கொள்ளக் கூடாது; செங்கோட்டையைக் காலி செய்து விட்டு டெல்லிக்கு வெளியேதான் தங்கவேண்டும்'' என்று ஆணையிட்டான். ஜான்சி ராணி லட்சுமி பாயின் தத்துப் பிள்ளைக்கு அரசுரிமை மறுக்கப்பட்டது.

 

எல்லா எழுத்துபூர்வமான ஒப்பந்தங்களையும் மிக அலட்சியமாக மீறியது கும்பினியாட்சி. தாழ்ந்து தாழ்ந்து நாயினும் தாழ்ந்து, இனிமேலும் தாழ்வதற்கோ வாழ்வதற்கோ வழியற்ற கையாலாகாத நிலையில் கொதித்துக் கொண்டிருந்தது பிரபுக்குலம். எனினும் காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்திற்கு அறைகூவல் விட்டுத் தலைமையேற்று நடத்தும் அருகதை அவர்கள் யாருக்கும் இல்லை. எனவே, மக்களின் கோபம் வெடித்தெழும் தருணத்திற்காக நாடு காத்திருந்தது.

···

காலனியாதிக்கத்தால் ஆகக் கொடூரமாகச் சுரண்டப்பட்டவர்கள் விவசாயிகள். கும்பினியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட பகுதிகளில் வரிவிதிப்பு விளைச்சலில் 55% என்ற எல்லை வரை சென்றது. வெள்ளம் வறட்சி எதற்காகவும் வரித்தள்ளுபடி கிடையாது. வரி கட்டாத விவசாயிகளுக்குக் கசையடியும், சிறையும், சித்திரவதையுமே நீதிமன்றத் தீர்ப்புகளாக இருந்தன. ""சித்திரவதை ஆங்கில அரசின் நிதிக்கொள்கையாக இருந்தது'' என்று இதை அம்பலப்படுத்தினார் மார்க்ஸ்.

 

ஜமீன்தாரி முறை அமலாக்கப்பட்ட பகுதிகளில் முந்தைய ஆட்சியின் நிலப்பிரபுக்களான தாலுக்தார்கள் நீக்கப்பட்டனர். ஜமீன்தார் பதவிகள் ஏலம் விடப்பட்டன. பம்பாய், கல்கத்தா போன்ற நகரங்களைச் சேர்ந்த கந்து வட்டிக்காரர்கள் ஜமீன்தாரி உரிமையை அதிக விலைக்கு ஏலம் எடுத்தார்கள். முந்தைய தாலுக்தார்களிடம் கசிந்த இரக்க உணர்ச்சி கூட இல்லாமல் விவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சினார்கள். வட்டி விகிதம் குறித்த பாரம்பரியக் கட்டுப்பாடுகளும், கந்து வட்டிக்காரர்கள் மீது கிராம சமுதாயம் முன்பு கொண்டிருந்த அதிகாரமும் நீக்கப்பட்டு விட்டதால், நகர்ப்புறங்களிலிருந்து வந்திறங்கிய கந்துவட்டிக் கும்பல் விருப்பம் போல விவசாயிகளை ஏமாற்றியது. இது வரை விவசாயிகள் அறிந்திராத நீதிமன்றங்களுக்கு அவர்களை இழுத்தது.

 

வட்டியும் வரியும் கட்ட முடியாத விவசாயிகளின் நிலம் ஏலம் விடப்பட்டது. தனது உடலின் நீட்சியென இதுகாறும் விவசாயி கருதிவந்த நிலத்தை வேறொருவன் பறிக்கவும் முடியும் என்ற அதிர்ச்சியைப் பல இடங்களில் விவசாய வர்க்கம் முதன் முறையாக எதிர்கொண்டது. நிலமற்ற விவசாயிகளின் எண்ணிக்கை பன் மடங்கு அதிகரித்தது.

 

""நம்முடைய நிர்வாகம் ஒரு கடற்பஞ்சைப் போலச் செயல்படுகிறது. கங்கைக் கரையிலுள்ள அனைத்து வளங்களையும் உறிஞ்சி அவற்றை தேம்ஸ் நதிக்கரையில் பிழிந்து விடுகிறது'' என்று மெச்சிக்கொண்டான் வருவாய் ஆணையத்தின் தலைவர் ஜான் சலிவன். ""மெட்ராஸ் மாகாணம் முதல் வங்காளம் வரை நடந்த பச்சையான வெட்கங்கெட்ட கொள்ளை'' என்று இதனைச் சாடினர் மார்க்ஸும் எங்கெல்சும்.

 

தொழிற்புரட்சி தோற்றுவித்த நவீன எந்திரங்களால் உற்பத்தி செய்யப்பட்ட துணிகளைக் காட்டிலும் இந்தியக் கைத்தறி தரமானதாகவும் மலிவானதாகவும் இருக்கவே, இந்தியாவின் துணி ஏற்றுமதியை 1820இல் முற்றிலுமாகத் தடை செய்தது கும்பினியாட்சி. பிரிட்டனின் துணிகள் இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்கத் தொடங்கின. உலகப் புகழ் பெற்ற இந்தியாவின் கைவினைஞர்களும் நெசவாளர்களும் பிழைக்க வழியற்று விவசாயத்தை நோக்கித் தள்ளப்பட்டனர்.

 

இதன் விளைவாக 1770 முதல் 1857 வரை தோன்றிய 12 பெரும் பஞ்சங்கள் லட்சக்கணக்கான மக்களைக் காவு கொண்டன. ""ஒரு வேளைச் சோற்றை வயிறார உண்பது என்றால் என்ன வென்றே 50% விவசாயிகளுக்குத் தெரியாது என்று அன்றைய நிலைமையை வருணித்தான் ஒரு ஆங்கில அதிகாரி. அபினியும் அவுரியும் பயிரிடச் சொல்லி விவசாயிகளையும் பழங்குடி மக்களையும் கட்டாயப்படுத்தியதன் மூலம் உணவு உற்பத்தியை மேலும் அழித்தது ஆங்கில ஆட்சி.

 

ஜமீன்தார்களுக்கும், கந்துவட்டிக்காரர்களுக்கும், அவர்களை ஏவிவிட்ட கும்பினியாட்சிக்கும் எதிராக எண்ணிறந்த விவசாயிகளின் கலகங்கள் வெடித்தெழுந்தன. அவையனைத்தும் கொடூரமாக நசுக்கப்பட்டன. வரவிருக்கும் எழுச்சிக்குக் கட்டியம் கூறுவது போல 1855இல் எழுந்தது சந்தால் பழங்குடி மக்களின் ஆயுதப்போராட்டம். வங்காளத்திலும் பீகாரிலும் பல பகுதிகளை ஆங்கிலேயரின் நிர்வாகத்திலிருந்தே இரண்டு ஆண்டுகள் விடுவிக்குமளவு போர்க்குணத்துடன் நடைபெற்ற அந்தப் போராட்டம் ஒரு ஆயுதமேந்திய மக்கள் எழுச்சியின் வலிமையை நிரூபித்துக் காட்டியது. எனினும் சமூகமனைத்தையும் தட்டியெழுப்பும் வல்லமை அந்த எழுச்சிக்கு இல்லை. எனவே அத்தகையதொரு கிளர்ச்சிக் காக நாடு காத்திருந்தது.

 

 

"பிரிட்டிஷ் சார்ஜெண்டுகளால் பயிற்றுவிக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட இந்தியச் சிப்பாய்களைக் கொண்ட ஒரு இராணுவம், இந்தியா தன் விடுதலையைத் தேடிக்கொள்வதற்கு ஒரு முன்நிபந்தனையாக இருக்கிறது'' என்று ""இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்'' என்ற தன் கட்டுரையில் 1853இல் குறிப்பிட்டார் கார்ல் மார்க்ஸ். ஆங்கிலேய அதிகாரிகளால் பயிற்றுவிக்கப்பட்டு இந்துஸ்தானின் சமஸ்தானங்களை வென்றடக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட அந்த இந்தியச் சிப்பாய்களும் குமுறிக் கொண்டிருந்தார்கள்.

 

இந்தச் சிப்பாய்கள் என்பவர்கள் யார்? விவசாயத்திலிருந்து துரத்தப்பட்ட விவசாயிகள், வாழும் வழி இழந்த கைவினைஞர்கள், நிலப்பிரபுத்துவச் சமூகத்தின் இடைநிலை, கீழ்நிலை வர்க்கங்களிலிருந்து பிய்த்தெறியப்பட்டு சோற்றுக்கு வேறு தொழில் இல்லாமல் பட்டாளத்தில் சேர்ந்த பரிதாபத்துக்குரிய மக்கள்.

 

என்னதான் பாசறைகளில் அடைக்கப்பட்டிருந்தாலும், சோறும் துணியும் சம்பளமும் வழங்கப்பட்டாலும் சமூகத்தின் மற்றெல்லாப் பிரிவினரிடமும் வெளிப்பட்டுக் கொண்டிருந்த ஆங்கிலேய எதிர்ப்புக் கோபம் சிப்பாய்களுக்குள்ளும் கனன்று கொண்டிருந்தது. சீருடை அணிந்த விவசாயிகள் என்று அழைக்கப்படும் சிப்பாய்கள் விவசாயிகளின் உணர்வைப் பகிர்ந்து கொண்டார்கள்.

 

அவத் சமஸ்தானத்திலிருந்து வந்த 75,000 சிப்பாய்களால், தங்கள் நாடு பறிக்கப்பட்டு மன்னன் சிறை வைக்கப்பட்ட அவமானத்தைச் சகிக்க இயலவில்லை. ஆங்கிலேய ஆட்சி வந்தவுடனே விவசாயிகள் மீது அதிகரிக்கப்பட்ட வரிவிதிப்பு அவர்களுடைய குடும்பங்களை நேரடியாகத் தாக்கியது. ஆப்கான் போன்ற தொலைதூரப் பகுதிகளுக்குப் போரிடச் சென்றால் கொடுக்கப்பட்டு வந்த படித்தொகையை திடீரென்று நிறுத்தியது அவர்களுடைய ஆத்திரத்தை மேலும் கிளறிவிட்டது.

 

பிரபுக்குலத்தையே இழிவாக நடத்திய ஆங்கிலேய ஆட்சி, சிப்பாய்களை அற்பப் புழுக்களைப் போல நடத்தியது. ""நீக்ரோ என்றும் பன்றி என்றும்தான் சிப்பாய்களை அழைக்கிறார்கள் அதிகாரிகள். ஹைதரைப் போன்ற இராணுவ மேதையாக இருந்தாலும் அவன் எந்தக் காலத்திலும் ஒரு கீழ்நிலை ஆங்கிலேயச் சிப்பாயின் ஊதியத்தை எட்டவே முடியாது. 30 ஆண்டுகள் விசுவாசமாகச் சேவை புரிந்திருந்தாலும் நேற்று வந்திறங்கிய ஒரு ஆங்கிலேய விடலைப் பையனின் கிறுக்குத்தனமான உத்தரவுகளிலிருந்து அவன் தப்ப முடியாது'' என்று சிப்பாய்களின் அன்றைய நிலைமையைப் பதிவு செய்திருக்கிறார்கள் ஆங்கில வரலாற்றாசியர்கள்.

 

1824இல் பரக்பூரின் இந்துச் சிப்பாய்கள் கடல் மார்க்கமாக பர்மா செல்ல மறுத்தபோது அந்தப் படைப்பிரிவே கலைக்கப்பட்டு அனைவரும் பீரங்கி வாயில் வைத்துப் பிளந்தெறியப்பட்டார்கள். ஆப்கன் போரின் போது தாங்கள் கேவலமாக நடத்தப்பட்டதை எதிர்த்த ஒரு இந்துச் சிப்பாயும் முசுலிம் சிப்பாயும் ஒன்றாக நிற்கவைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பாரக்பூரின் இளம் சிப்பாய் மங்கள் பாண்டே மேலதிகாரியைத் தாக்கிய குற்றத்துக்காக மார்ச் 1857இல் தூக்கிலிடப்பட்டான்.

 

ஒரு பெரும் கிளர்ச்சி வெடிப்பதற்குத் தயாராக இருந்தது. துப்பாக்கியின் குதிரையை அழுத்தியவுடனே சீறிப்பாய்வதற்குத் தோதான கொழுப்பு தடவிய தோட்டாவை வழங்கியதன் மூலம் கலகத் துப்பாக்கியின் குதிரையைத் தானே தட்டிவிட்டது பிரிட்டிஷ் அரசு. ஆம், அது கலகத்தின் தோற்றுவாய் அல்ல, ஒரு தூண்டுதல்.

 

உடைமை இழந்து, பாரம்பரியத் தொழிலை இழந்து, அடிமைப்படுத்தப்பட்டு, எதிர்க்க முடியாமல் அடங்கிக் கிடந்த ஒரு சமூகம், தனது சுயகவுரவத்தின் மீது திட்டமிட்டே நடத்தப்பட்ட சகிக்கவொண்ணாத தாக்குதலாக இதனைக் கருதியிருக்கிறது. இந்து, முசுலிம் மத நம்பக்கைகளுக்கு எதிராக அரசாங்கத்தின் துணையுடன் ஐரோப்பியப் பாதிரிகள் நடத்தி வந்த பகிரங்கமான பிரச்சாரமும், இராணுவத்திலேயே மேற்கொள்ளப்பட்ட மதமாற்ற நடவடிக்கைகளும் நியாயமானதொரு அச்சத்தை அவர்களிடம் தோற்றுவித்திருக்கிறது. சாதிகளாகவும், மதங்களாகவும், பாளையங்களாகவும் பிரிந்து நின்று கொண்டு, ஒரு கூலிப்படையின் உணர்ச்சியோடு, கும்பினியாட்சியின் வெற்றிக்கு நேரடி யாகவும் மறைமுகமாகவும் உதவிக் கொண்டிருந்த சிப்பாய்களை ஒன்றிணைக்கும் ஒரே உணர்வாக அன்று மத உணர்வு செயல்பட்டதில் வியப்பேதும் இல்லை. எவ்வாறாயினும் தோட்டாவின் உறையில் தடவப்பட்ட அந்தக் கொழுப்பு, காலனியாதிக்கக் கொழுப்பின் ஒரு உருவகமேயன்றி வேறல்ல.

 

மாட்டுக் கொழுப்பும் பன்றிக் கொழுப்பும் தடவப்பட்ட தோட்டா உறைகளைப் பயன்படுத்த மறுத்தனர் மீரட்டின் சிப்பாய்கள். 85 பேர் உடனே வேலைநீக்கம் செய்யப்பட்டனர். 10 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு, மே9ம் தேதியன்று கைகால்களில் விலங்கு பிணைக்கப்பட்டு அவர்கள் சிறைக்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.

 

··

 

வெடித்தது கலகம். மே 10ஆம் தேதியன்றே சிறையை உடைத்து தம் தோழர்களை விடுவித்த சிப்பாய்கள் ஆங்கிலேய அதிகாரிகளைச் சரமாரியாக வெட்டினார்கள், சுட்டார்கள். கலகக் கொடி உயர்ந்தது. மீரட் வீழ்ந்தது. மொத்த "இந்துஸ்தானத்'தின் தலைமைப் பீடமாக இருந்த முகலாயப் பேரரசின் தலைநகரான டெல்லியை நோக்கி, மீரட்டின் படை இரவோடிரவாக விரைந்தது.

 

டெல்லியில் வந்திறங்கிய மீரட் படையைக் கண்டவுடனே, டில்லியில் இருந்த பிரிட்டிஷ் இராணுவத்தின் சிப்பாய்கள் தங்களது வெள்ளை அதிகாரிகளைக் கொன்று வீசிவிட்டு நகரத்தைக் கைப்பற்றினார்கள். முதுமையில் தளர்ந்து, அதிகாரமின்றித் துவண்டு கிடந்த பகதூர் ஷாவை "இந்தியாவின் சக்ரவர்த்தி' என்று பிரகடனம் செய்தார்கள். படைவீரர்களின் கலகமாகத் தொடங்கிய போராட்டம், இந்தப் பிரகடனத்தின் மூலம் அந்தக் கணமே ஒரு காலனியாதிக்க எதிர்ப்புப் புரட்சிப் போராக மாறிவிட்டது.

 

டெல்லி போர்க்கோலம் பூண்டது. பார்த்த இடத்திலெல்லாம் மக்கள் ஆங்கிலேயரை வெட்டிச் சாய்த்தனர். டெல்லி ஆயுதச்சாலை கைப்பற்றப் பட்டது. ""எல்லா தேசங்களும் மாகாணங்களும் இணைந்த ஒரு கூட்டமைப்பை உருவாக்குவோம், பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கி எறிவோம்!'' என்று அறிவித்தார் பகதூர் ஷா.

 

மொத்த வங்காளப் படையும் ஒரே சிப்பாய் போல எழுச்சியில் இணைந்தது. அவத், ரோஹில்கண்டு, தோப், புந்தேல் கண்டு, மத்திய இந்தியா, பீகாரின் பெரும்பகுதி, கிழக்குப் பஞ்சாப் என கிளர்ச்சித் தீ பற்றிப் பரவியது. ராஜஸ்தான், மராட்டியம், ஐதராபாத், வங்காளம் என்று ஆங்காங்கே குறுநில மன்னர்களும் முன்னாள் நிலப்பிரபுக்களும் விவசாயிகளும் கைவினைஞர்களும், சிறு வணிகர்களும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

 

வேல், ஈட்டி, வில் அம்புகள், அரிவாள் எனக் கையில் கிடைத்த ஆயுதங்கள் எல்லாம் வெள்ளையருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன. சிப்பாய்களே இல்லாத இடங்களிலும் கலகம் பரவியிருந்தது. பீகார், உத்திரப் பிரதேச விவசாயிகளின் பீறிட்டெழுந்த கோபம் கந்துவட்டிக்காரர்கள் மீது பாய்ந்தது. அவர்களுடைய கணக்குப் புத்தகங்கள் தீக்கிரையாகின. காவல் நிலையங்கள், வருவாய்த்துறை அலுவலகங்கள், கோர்ட்டுகள் அழிக்கப்பட்டன.

 

பிரிட்டிஷ் ஆட்சி தூக்கியெறியப் பட்டு விடுமோ என்ற பீதி பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்திடம் பரவத் தொடங்கி விட்டது. பிரிட்டனிலிருந்தும், இலங் கையிலிருந்தும், நேபாளத்திலிருந்தும், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் துருப்புகள் தருவிக்கப்பட்டனர். ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியச் சிப்பாய்கள் இழைத்த "கொடிய சித்திரவதைகள்' பற்றிய கதைகள் இலண்டன் நாளேடுகளில் நிரம்பி வழிந்தன.

 

இதுவரை காணாத மூர்க்கத்துடன் தாக்கிய இந்த எழுச்சியில் வெளிப்பட்ட வன்முறையைக் காட்டிலும், இதில் வெளிப்பட்ட இந்துமுசுலிம் ஒற்றுமை தான் ஆங்கிலேயரைப் பெரிதும் கலக்கத்துக்குள்ளாக்கியது. முகலாயப் பேரரசை "இந்துஸ்தானத்'தின் அரசாக இந்துக்கள் அங்கீகரித்தார்கள் என்றால், கிளர்ச்சி வெற்றி பெற்ற இடங்களிலெல்லாம் நல்லெண்ண நடவடிக்கையாகப் பசுவதைத் தடையை முசுலிம்கள் அறிவித்தார்கள். சிப்பாய்களிடமிருந்தும் விவசாயிகளிடமிருந்தும் தோன்றிய இந்தக் கிளர்ச்சித் தீ, மேல்நோக்கிப் பரவி முன்னாள் ஜமீன்தார்களையும் பின்னர் குறுநில மன்னர்களையும் தழுவிக் கொண்டது. அவர்களில் பலரை மக்கள் நாயகர்களாக மாற்றியது.

 

கான்பூரில் நானாசாகேப் தலைமை தாங்கினார். பிரிட்டிஷாரை விரட்டி விட்டுத் தன்னை அரசனென்றும் பகதூர் ஷாவைப் பேரரசன் என்றும் பிரகடனம் செய்தார். கொரில்லாப் போரில் சிறந்த தாந்தியா தோப், அரசியல் பிரச்சாரத்தில் சிறந்த அசிமுல்லா ஆகியோர் இந்தக் கிளர்ச்சியில் அவரது தளபதிகள்.

 

லக்னோவின் புரட்சி அரசாங்கத்தை 10 மாதங்கள் நடத்திக் காட்டினார் பேகம் ஹஸ்ரத் மகல். ஹஸ்ரத் மகல் செய்த எல்லாப் பிழைகளையும் பொறுத்து மன்னிப்பு அளிப்பதாகவும், பென்சன் வழங்குவதாகவும் பிரகடனம் வெளியிட்டார் விக்டோரியா மகாராணி. ஹஸ்ரத் அதை வீசி எறிந்தார். ""சில கோழைகள் பரப்பி விட்ட அந்த முட்டாள்தனமான பிரகடனத்தின் பின்னால் உள்ள அவர்களின் நோக்கம் என்ன என்று பாருங்கள், அதை அம்பலப்படுத்துங்கள். எச்சரிக்கையாக இருங்கள்!'' என்று தன் மக்களுக்கும் சிப்பாய்களுக்கும் அறிவித்தார் ஹஸ்ரத். போராடித் தோற்ற பிறகும் எதிரியின் கரங்களில் சிக்கிவிடக் கூடாதென்று இமயத்தின் அடிவாரக் காடுகளில் தன் மகனோடு அலைந்து திரிந்து, 15 ஆண்டுகள் எளிய வாழ்க்கை வாழ்ந்து இறந்தார்.

 

சென்னை மாகாணத்திலிருந்து பைசாபாத் சென்று மக்கள் மத்தியில் ஆயுதப்புரட்சியைப் பிரச்சாரம் செய்து அணிதிரட்டி, 1857இலேயே பிரிட்டிஷ் இராணுவத்தை எதிர்கொண்டு தோற்கடித்தவர் மவுல்வி அகமதுல்லா. சிப்பாய்ப் புரட்சி அவரை மாபெரும் தலைவராக்கியது.

 

பிரிட்டிஷ் ஆட்சியால் சொத்து பறிக்கப்பட்ட ஜமீன்தாரான குன்வர்சிங்கின் வயது 80. எழுச்சிக்குத் தலைமை வகித்து களத்திலேயே வீர மரணமடைந்த அவரைப் பற்றிப் பல தாலாட்டுகள், கதைப்பாடல்கள். குன்வர் சிங் இன்னமும் மக்களின் நாவில் பாட்டாய் நடக்கிறான்.

 

இளம் அரசியான ஜான்சி ராணி லட்சுமி பாய், ஒரு ஆண் பிள்ளையைத் தத்து எடுத்து தன் வாரிசாக நியமிக்க விரும்பியதைத் தடுத்து, ஜான்சியைக் கவர்ந்து கொண்டது பிரிட்டிஷ் அரசு. சிப்பாய்கள் மத்தியில் கலகத்தைத் தூண்டுவதாகவும் லட்சுமி பாய் மீது குற்றமும் சாட்டியது. போரில் இணைந்து கொள்ள முதலில் சற்றுத் தயக்கம் காட்டிய லட்சுமிபாய், களத்தில் இறங்கியபின் இறுதிவரை படையை வழிநடத்தினார். ""நம் கைகளால் நம் சுயராச்சியத்தை என்றும் புதைக்க மாட்டோம்'' என்று அவருடைய தலைமையில் உறுதிமொழி எடுத்தனர் சிப்பாய்கள்.

 

 

அவரது படையில் பெண்கள் பீரங்கிகளை இயக்கினார்கள், குண்டுகளையும் போர்க்கலன்களையும் சுமந்து சென்று வீரர்களுக்கு விநியோகித்தார்கள். தாந்தியா தோப்பின் உதவியுடன் குவாலியரைக் கைப்பற்றினார் லட்சுமிபாய். மன்னன் சிந்தியாவின் 20,000 வீரர்கள் லட்சுமிபாயுடன் சேர்ந்து கொள்ளவே, ஆக்ராவிற்குத் தப்பியோடி வெள்ளையரிடம் தஞ்சம் புகுந்தான் சிந்தியா. சிப்பாயின் உடையணிந்து குதிரை மீது அமர்ந்தபடி ஜூன் 1858இல் போர்க்களத்தில் உயிர் நீத்தார் ஜான்சி ராணி. அவருடைய உயிர்த்தோழியான முசுலிம் பெண்ணும் அவருடன் போர்க்களத்திலேயே மடிந்தார். சிப்பாய்களுக்குச் சிறந்த உணவையும், தனக்கு எளிய உணவையும் கொடுக்க கட்டளையிட்டார் ஜான்சி ராணி. களத்தில் உயிர்நீத்த சமயத்தில், தன் செல்வங்களை எல்லாம் தன் வீரர்களிடம் கொடுத்துவிடச் சொன்னார். எங்கள் கண் இமைகளில் உன்னைக் காப்பாற்றுவோம் ஜான்சி ராணி என்று தொடங்கும் நாட்டுப்புறப் பாடல் இன்னமும் உயிர் வாழ்கிறது.

 

1857 சிப்பாய்ப் புரட்சி தோற்றுவித்த வீரப்புதல்வர்கள் ஏராளம். தனித்தனிப் போர்க்களங்களில் அவர்கள் காட்டிய வீரமும், போர்த்திறனும் வியக்கத்தக்கவையாக இருந்தன. டெல்லியில் வீட்டுக்கு வீடு போர் நடந்தது. ""ஆயிரம் அடி தொலைவில் இருந்த டெல்லி கோட்டையைப் பிடிக்க, பிரிட்டிஷாரின் பீரங்கிப் படைக்கு 10 நாட்கள் பிடித்தது என்றால் அது இராணுவ அதிசயம்.. கோட்டையின் மதிள் மேலிருந்து சிப்பாய்கள் முறையான பீரங்கித் தாக்குதல் நடத்தியிருந்தால் ஆங்கிலேயர்கள் தலையால் தண்ணீர் குடித்திருப்பர்'' என்று டெல்லிப் போரை வருணித்தார் எங்கெல்ஸ்.

 

எனினும் செப்டம்பர் 1857இல் டெல்லியைக் கைப்பற்றியது பிரிட்டிஷ் படை. பகதூர் ஷாவின் இரண்டு மகன்களை ஹோட்ஸன் என்ற இராணுவ அதிகாரி நேருக்கு நேர் சுட்டுக் கொன்றான். பகதூர் ஷா பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். குன்வர்சிங், அகமதுல்லா போன்ற பல தலைவர்கள் 1859இல் கொல்லப்பட்டனர். சரணடைய மறுத்த நானா சாகிப் நேபாளத்துக்குத் தப்பிச் சென்றார். இறுதிவரை கொரில்லாப் போர் தொடுத்த தாந்தியா தோப், தூங்கும்போது துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

 

தலைமையை இழந்த பின்னரும் 1859 வரை போர் தொடர்ந்தது. அவத் சமஸ்தானத்தில் கொல்லப்பட்ட 1.5 லட்சம் பேரில், 50,000 பேர் மட்டுமே சிப்பாய்கள், ஏனையோர் மக்கள் என்ற விவரம் இந்த எழுச்சியின் மக்கள் திரள் தன்மைக்குச் சான்று கூறுகிறது.

 

எரிமலையாய் வெடித்து எரிந்த புரட்சி, மெல்ல அவிந்து அடங்கியது. கோடிக்கணக்கான மக்களைத் தன் பக்கம் ஈர்த்தபோதிலும் இது நாடு தழுவிய எழுச்சியாக விரியவில்லை. பெரும்பாலான மன்னர்கள் இதனை ஆதரிக்கவில்லை என்பதுடன், படை அனுப்பி எழுச்சியை ஒடுக்க பிரிட்டிஷாருக்கு உதவினார்கள். குவாலியரின் சிந்தியா, இந்தூரின் ஹோல்கர், ஐதராபாத் நிஜாம், சீக்கிய, ராஜபுதன மன்னர்கள், ஜோத்பூர், பாட்டியாலா, காஷ்மீர் மற்றும் நேபாள மன்னர்கள் .. என்று துரோகிகளின் பட்டியல் மிகவும் பெரிது. ""மன்னர்கள் மட்டும் தடுப்பரண்களாகச் செயல்பட்டிருக்கவில்லை என்றால், இந்தச் சூறாவளியின் பேரலை நம்மைத் தூக்கி வீசியிருக்கும்'' என்றான் கவர்னர் ஜெனரல் கானிங்.


கந்து வட்டிக்காரர்களும், புதிய ஜமீன்தார்களும், சென்னை, பம்பாய், கல்கத்தாவைச் சேர்ந்த பெருவணிகர்களும் புரட்சியை எதிர்ப்பதில் பிரிட்டிஷ் ஆட்சிக்குத் துணை நின்றார்கள். உலகெங்கும் காலனிகளைக் கொள்ளையடித்த செல்வமும், முதலாளித்துவப் பொருளாதாரம் வழங்கிய வலிமையும், தொழில்முறையில் பயிற்றுவிக்கப்பட்ட இராணுவமும் பிரிட்டனின் வெற்றியை எளிதாக்கின. இருப்பினும், இன்னொரு எழுச்சி தோன்றிவிடக் கூடாது என்ற கவலையின் காரணமாகக் கும்பினி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து இந்தியாவின் நிர்வாகத்தை நேரடியாகத் தன் கையில் எடுத்துக்கொண்டது பிரிட்டிஷ் அரசு.

 

1857இன் சிப்பாய்களிடம் வீரம் இருந்தது, தியாக உணர்ச்சி இருந்தது. ஆனால் நவீன ஆயுதங்களோ, ஒருங்கிணைந்த இராணுவத் திட்டமோ இல்லை. கிளர்ச்சி செய்த விவசாயிகள் புதிய ஜமீன்தார்களை விரட்டினார்கள், கந்து வட்டிக் கணக்குகளைக் கொளுத்தினார்கள், ஆனால் அதன்பின் செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள். ஆம். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் முழு வலிமை பற்றிய புரிதல் அவர்களுக்கு இல்லை. அதனை அகற்றியபின் நிறுவப்போகும் அரசமைப்பு குறித்த தெளிவும் இல்லை. எனவே காலனியாதிக்க எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கூறுகளைக் கொண்டிருந்த போதிலும் அந்த எழுச்சி தேங்கி நின்றது.

 

ஆயினும், மன்னர்களும் பிரபுக்குலமும் தமது போராட்டத்திற்குத் தலைமை தாங்கி வழிநடத்தும் தகுதியிழந்து விட்டார்கள் என்பதை சிப்பாய்களும் மக்களும் தமது அனுபவத்தில் புரிந்து கொண்டார்கள். புதியதொரு அதிகார அமைப்பை உருவாக்கத் தொடங்கினார்கள். 6 சிப்பாய்களும் 4 சிவிலியன்களும் இணைந்த ஒரு நிர்வாகக் கமிட்டியொன்று டெல்லியில் உருவாக்கப் பட்டது. நிர்வாகம் மற்றும் இராணுவம் தொடர்பான எல்லா முடிவுகளையும் ஓட்டெடுப்பு நடத்தி அது முடிவு செய்தது.

 

""கலகத்தை உடனே அடக்கவில்லை என்றால், நாம் புதிய பாத்திரங்களை மேடையில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்'' என்று பிரிட்டிஷ் அரசை எச்சரித்தான் டிஸ்ரேலி. அத்தகைய புதிய பாத்திரங்கள் உடனே தோன்றி விடவில்லை. டிஸ்ரேலியின் அச்சம் மெய்ப்பிக்கப்படுவதற்கு இந்தியா மேலும் சில காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.

 

விடுதலைப் போராட்ட மரபின் வீரியமனைத்தையும் உட்செரித்துக் கொண்ட வீரனுக்காக, "காலனியாதிக்கத்தை அதன் உயிர் நிலையில் தாக்க வல்லது கம்யூனிசமே' என்று முழங்கத் தெரிந்த மாவீரன் பகத்சிங்கிற்காக, இந்தியா மேலும் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

 

· குப்பண்ணன்