மிகக்குறுகிய நிலப்பரப்பு,ஆறுகள் இல்லை,பெரியு குளங்கள் இல்லை. தொண்டைமான் ஆறு என்ற உப்புக்கடல் வாய்க்காலும்,வழுக்கியாறு என்கிற மழைக்கால வெள்ளவாய்க்காலும் மட்டுமே ஆறுகள் என்ற பெயரோடு இருப்பவை. உச்சிமரத்திற்கு ஏறி கள்ளும்,தெங்காயும் இறக்க பயப்படாதவன் கடன்காரனிற்கு பயந்து ஒழிக்க வேண்டிய வாழ்நிலை. துணி வெளுப்பவரும்,முடி திருத்துபவரும்,தச்சரும்,கொல்லரும்,குயவரும் சின்னஞ்சிறு ஊர்களின் குறுகிய பொருளாதார வளையங்களிற்குள் காவல் கிடந்து வேலை பெற வேண்டிய நிலை; உரத்து அடிக்கும் வாடைகாற்றிலும் உறுதியோடு வள்ளத்தில் கால் பதித்து நிற்கும் கடல்தொழிலாளர்கள் ஊரிலே பசியோடு காத்திருக்கும் மனைவி,பிள்ளைகளை நினைத்தால் ஊசலாடுவார்கள்.
இந்த கன்னங்கரிய இருள் சூழ்ந்த வாழ்விலே வராது வந்த மாமணியாய் கல்வி எனும் ஒளிக்கீற்று வந்தது. தமிழ்,சிங்கள மக்களை பிரித்தாளுவதற்காகவும்,கிறிஸ்தவமத போதனைகளை பரப்புவதற்காகவும் தமிழ்பகுதிகளில் பிரித்தானியர்கள் அதிகளவில் பாடசாலைகளைத் திறந்தார்கள். அதன் எதிர்வினையாக யாழ்ப்பாண சைவத்தமிழ்வர்க்கத்தினர் இந்துக்கல்லூரிகளைத் தொடங்கினார்கள். முதலில் உயர்சாதி,பணக்கார தமிழர்களிற்கு பாய்ந்த கல்விவெள்ளம் பின்பு மெல்ல,மெல்ல மற்றத்தமிழர்களிற்கும் பொசிந்தது. இலவசக்கல்வித்திட்டம் வந்து வறுமையில் வாடிக்கிடந்தவர்களிற்கு படிக்க வழி செய்து கொடுத்தது. யாழ்ப்பாண மாவட்டம்,கல்வியில் இலங்கையிலே முன்னிலை வகித்தது.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இருந்து ஆயிரக்கணக்கான ஏழைமாணவர்கள் பல்கலைக்கழகங்களிற்கு சென்றார்கள். இன்றைக்கு ஏழைமாணவர்கள் இந்துகல்லூரிக்கு செல்ல முடியாது ஆயிரக்கணக்கில்,லட்சக்கணக்கில் டொனேசன் கொடுக்க வசதியுள்ளவர்கள் தான் செல்ல முடியும். போர்க்காலங்களில் அரசினது பணம் போதியளவு கிடைக்கவில்லை,ஆசிரியர்களிற்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என்று தொடங்கிய இந்த டொனேசன் கலாச்சாரம் இன்று போர் முடிந்த பின்னும் நிற்கவில்லை. கல்லூரிநேரம் முடிந்த பின்பும் கூட வீட்டுநினைப்பு இன்றி விசேடவகுப்புகளை எடுத்த ஆசிரியர்கள் இருந்த பாடசாலையில் இன்று பணமின்றேல் இடமில்லை. ஒரு வருடபாடத்திட்டத்தை ஆறுமாதங்களில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் முடித்து விடுவார்கள் என்று கந்தவரோதயா கல்லூரியின் முன்னாள் அதிபரும்,யாழ்ப்பாண வாலிபர் சங்க உறுப்பினருமான ஒறெற்றர் சுப்பிரமணியம் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். அந்தளவிற்கு அர்ப்பணிப்புடனும்,அக்கறையுடனும் படிப்பித்த அதிபர்களையும்,ஆசிரியர்களையும் கொண்ட கல்லூரியில் தான் இன்றைக்கு இந்த நிலை.
மேல் நாடுகளிலே உள்ள பழையமாணவர் சங்கங்கள் பல ஆயிரம் பணம் செலவளித்து ஒன்றுகூடல்களை நடாத்துகிறார்கள். கேளிக்கைகள்,களியாட்டங்களிற்கு பெரும்செலவு செய்து விட்டு சிறிதளவு பணத்தையே கல்லூரிகளிற்கு அனுப்புகிறார்கள். இந்த வருட இந்துக்கல்லூரி ஒன்றுகூடலிற்கு பிரித்தானிய பழைய மாணவர் சங்கம்,சாலமன் பாப்பையாயாவின் பட்டிமன்றம்,ஜேசுதாசின் மகன் விஜய் ஜேசுதாசின் பாட்டு என்று பணத்தை செலவு செய்தது. இவ்வளவு பணத்தை வீண்விரயம் செய்து விட்டு வெறும் ஜந்தாயிரம் பவுண்ஸ்களை கல்லூரிக்கு அனுப்பவிருக்கிறார்களாம். ஆகா என்ன ஒரு அரும்பெரும்செயல்,வளரட்டும் இவர் தம் செயற்கரிய சேவை.
Jaffna Premier League என்ற பெயரில் நடந்த கிரிக்கட்போட்டி பேரினவாத அரசின் நிகழ்ச்சிநிரலிற்கேற்பவே யாழ் இந்து மைதானத்தில் நடாத்தப்பட்டது. தமிழ்மக்களின் விடுதலைக்கு வித்தாக விழுந்த சிவகுமாரனின் கால்கள் பதிந்த மைதானத்தில் ராணுவத்தினர்,அர்ச்சுனா ரணதுங்கா போன்ற இனவெறி அரசியல்வாதிகள் கலந்து கொள்ள சிறுபான்மை இனமக்களை காலில் போட்டு மிதிக்கும் சிங்கக்கொடி ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான போராளிகள் ஓடி விளையாடிய மைதானத்தில் ஏழைப்பெண்களிற்கு குட்டைப்பாவாடை அணிய வைத்து ஆடவிட்டார்கள். Cheers Girls என்னும் சீரழிந்த அமெரிக்கபண்பாட்டை, IPL என்னும் இந்தியச்சூதாடிகள் பின்பற்ற,அதை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள் இந்துக்கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர்கள் சிலர். வெளிநாட்டுப்பணத்தினாலே தமிழ்ச்சமுதாயத்திலே பெரும்பணவீக்கத்தையும்,பொருளாதார ஏற்றத்தாழ்வையும் உண்டாக்கினார்கள். வெளிநாட்டு சீரழிவுபண்பாட்டை புகுத்துவதற்காக போரினாலும்,பொருளாதாரத்தாலும் பாதிக்கப்பட்ட பெண்களின் வறுமையை பயன்படுத்தி போகப்பொருளாக ஆக்குகிறார்கள்.
வருவதற்கு வாகனம் இல்லாவிட்டால் வாழைக்குலை வண்டியில் கூட ஏறி வருவார் எங்கள் அதிபர் பி.எஸ் குமாரசுவாமி அவர்கள். அத்தகைய எளிமையான மனிதர்கள் இருந்த இடத்திலே இன்று பதவிக்காகவும்,பணத்திற்காகவும் எதையும் செய்பவர்கள் இருந்து கொண்டு கல்வியையும்,பண்பாட்டையும்,சமுதாயத்தையும் சீரளிக்கிறார்கள்.