கிட்டத்தட்ட இருபது வருடங்களாக, தமிழரங்கம் சார்ந்த நாங்கள், அச்சு ஊடாகவும் இணயத்தளங்கள் மூலமும் எமது இடைவிடாத அரசியல் விமர்சனங்களை முன்வைத்த வண்ணமுள்ளோம்.

எமது விமர்சனம் சம்பந்தமாக பலவகையான விமர்சனங்களையும், திட்டுக்ளையும், ஏளனங்களையும், அவதூறுகளையும் பலவருடங்களாகச் சந்தித்தபடி உள்ளோம். இந்த விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு அரசியலில் தீண்டத் தகாதவர்களாக எங்களை ஒதுக்க முயன்றவர்களையும், பிரச்சாரம் செய்தவர்களையும் சந்தித்திருக்கின்றோம். இன்றும் சந்திக்கின்றோம். இவை மட்டுமல்லாமல் புலிகளிடமும், இலங்கை - இந்திய அரச பாசிசத்திடமும், உயிர்ப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காட்டிக் கொடுக்கப்பட்டதையும், இன்றும் காட்டிக் கொடுக்கப்படுவதையும், அதனால் ஏற்பட்ட - ஏற்படுகின்ற பாதிப்புகளையும் நாம் அனுபவித்த வண்ணமுள்ளோம்.

எமது நட்புச் சக்திகள் கூட வெளியில் இருந்துவரும் அரசியல் அமுக்கத்துக்கும், தமது தனிமனித உறவுகளுக்கும் அஞ்சி, தம்மை பாதுகாத்துக் கொள்ள எம்மை மறுதலிக்கும் சூழல் பலவருடமாக இருந்தது. அதை நாங்கள் அவர்களுடனான நேரடித் தொடர்பாடலூடாக களைந்து வந்தோம். இன்று இவ்வாறான சூழ்நிலையில் நாங்கள் அமைப்புருவாக்கம் பெற்றபின் அப்படியான மறுதலிப்புகள் குறைவாக இருந்தாலும், தற்போது எம்மால் வைக்கப்படும் விமர்சனங்கள் சார்ந்து, மறுபடியும் அந்நிலை தலைதூக்கியுள்ளது. இதன் அடிப்படையில் எமது நட்புச் சக்திகளுக்கு தன்னிலை விளக்கம் கொடுக்கும் முகமாக இந்தச் சிறுகுறிப்பு சில உதாரணங்களையும் உள்ளடக்கி எழுதப்படுகிறது.

இச் சிறுகுறிப்பில் கையாளப்படும் எமது விமர்சனங்களின் உபதலைப்புக்களாக:

1. உள்ளடக்கம்

2. தத்துவ - அரசியல் அடிப்படை

3. விமர்சனமுறை

4. விமர்சிக்கப்படும் அரசியல்

5. நிறைவுக் குறிப்பு

1.எமது விமர்சனங்களின் உள்ளடக்கம்

ஒரு மனிதத்தின் இருப்பை, நான்கு பகுதிகளாக பிரிக்கலாம். உடலியல் மனிதம், உளவியல் மனிதம், சமூக மனிதம், கலாச்சார மனிதம் என்பதாகும். இதில் எமது விமர்சனம் சமூக மற்றும் கலாச்சாரம் சார் மனிதத்தை, அதன் இருப்பை அடிப்படையாக கொண்டே முன்வைக்கப்படுகின்றது. இந்த இரு மனித இருப்பின் கூறுகளும் அரசியலின் மிக முக்கிய அடிப்படைகளாகும். ஆகவே தேசியம், சர்வதேசியம், இலக்கியம், விஞ்ஞானம், பொருளாதாரம், மனித உரிமை, பெண்ணுரிமை, சிறார் நலம் இயற்கை பேணல், சமூகமாற்றம், தொழில் நுட்பம் போன்ற பலநூறு விடயங்கள் சார்ந்த அரசியலை, தனிமனிதம், பிரதேசம், சாதி, இனம், தேசம், நாடு என்ற சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் விமர்சனத்துக்கு உட்படுத்துகிறோம். இதன் அடிப்படையில் சமூக மாற்றத்தை வேண்டி நிற்கும் நாம், இன்றுள்ள உலக அரசியல் நிலையையும், அதைக் கட்டியாளும் தத்துவம், சிந்தனை, நடைமுறை, சமூகக் கட்டமைப்பு, சமூக விழுமியங்கள், தர்மங்கள் எவற்றையும் முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்பவர்கள் அல்ல என்பது இயல்பானதொரு விடயம்.

இந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் நாம் மாற்றம் வேண்டி அரசியல் வேலைகளை முன்னெடுக்கும் போது, எதை மாற்ற நாம் முயல்கிறோமோ அதைக் கட்டியாளும் வர்க்கத்தையும், அவர்களின் ஆதரவாளர்களையும், நலன் விரும்பிகளையும், பாதுகாவலர்களையும் எதிர்த்து, அரசியற் செயற்பாட்டை, மூலோபாய, தந்துரோபாய அடிப்படையில் முன்னெடுப்பதும் இயல்பானதே. இதன் வழியே எதிரிகளை அடையாளப்படுத்தியும், பாதிவழி நண்பர்களை தெளிவுபடுத்தியும், நண்பர்கள், தோழர்களின் விமர்சன, சுயவிமர்சனங்களுக்கு பதில் கூறியும், எமது தவறுகளைத் திருத்தி, சுயவிமர்சனமேற்கும் அடிப்படையிலுமே எமது விமர்சன உள்ளடக்கம் அமைகின்றது.

உதாரணாமாக: இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் அனைத்து தேசிய இனங்களும் இன்று இலங்கை சிங்கள மேலாதிக்க பாசிச அரசால் வரலாறு காணாத ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் இலங்கையில் அரசியல், சமூகதளத்தில் முக்கிய முரண்பாடாக இருப்பது இனவெடுக்குமுறையே. இந்த ஒடுக்குமுறையை ஒழிப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்பது எமது அரசியல் நிலைப்பாடும், இன்று நாம் செய்யும் அரசியல் வேலையின் அடித் தளமுமாகும். இதன்பாற்பட்டு நாம் தமிழ் மக்களிடையே உள்ள வர்க்க, சமூக முரண்பாடுகளை தீர்ப்பதற்கு முன்பாக, தேசிய முரண்பாட்டை கையாளவேண்டிய நிலையிலுள்ளோம். இந் நிலையில், தமிழ்ச் சமூகத்தை மேலும் மேலும் பிளவுபடுத்தி, அது தன் இன அடிமைத்தனத்தில் நின்று மீளாத வண்ணம் பார்த்துக்கொள்ள பல அரசியற் சக்திகள் தேசத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் இயங்குகின்றன. இவர்களில் பலர் இலங்கை அரசுடன் ஒப்பந்த அடிப்படையில் தமது தனிப்பட்ட மற்றும் அரசியல், வர்க்க தேவையை முன்னிறுத்தி வெளிப்படையாக இயங்குகின்றனர். சிலர் தமது தனிப்பட்ட, குறுகிய நலன்களை முன்னிறுத்தி அரசுடன் எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல், தமிழினத்தை பிளவுபடுதுத்கிறோமே என்ற எந்தவித பிரக்ஞையும் இல்லாமல், சுயமாக இயங்குகின்றனர். இந்த சக்திகளை அம்பலப்படுத்தியும், அவர்கள் எவ்வாறு இலங்கை மேலாதிக்க பாசிசத்துக்கு துணை போகின்றார்கள் என சுட்டிக் காட்டியும், எமது தற்போதய விமர்சன உள்ளடக்கம் உள்ளது.

2. எமது விமர்சனங்களின் தத்துவ - அரசியல் அடிப்படை

நாம் மார்க்ஸ்சிச - லெனினிய - மாவோசேதுங் சிந்தனையை எமது அரசியல் மற்றும் நடைமுறை வழிகாட்டியாக வரிந்து கொண்டவர்கள். மார்க்ஸ்சிச - லெனினிய - மாவோசேதுங் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட அரசியல், நடைமுறை வேலைத் திட்டத்தையும், இவற்றின் மூலம் எமது இறுதி வெற்றியை அடைவதற்கான மூலோபாயத்தையும், தந்திரோபாயங்களையும் எமது அரசியல் நடைமுறை இயக்கத்தின் வளிகாட்டியாக உருவாக்கியுள்ளோம். அதேவேளை எமது அரசியல், நடைமுறைத் திட்டமும், இவை சார்ந்த மூலோபாயத்தையும், தந்திரோபாயங்களையும் நடைமுறை அனுபவங்கள், விவாதங்கள், சுயவிமர்சனங்கள், விமர்சனங்கள் மூலம் ஏற்படும் தத்துவத் தெளிவின் அடிப்படையில் தொடர்ச்சியாக மேம்படுத்திய வண்ணமுள்ளோம்.

இந்த வகையில், எமது அரசியல், நடைமுறை வேலைத் திட்டத்தையும், மூலோபாயத்தையும், தந்திரோபாயங்களையும் முன்னிறுத்தியே எமது அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அதேபோன்று, எமது அரசியல் வேலைகளிலும், விமர்சனங்களிலும் தவறுகள் ஏற்படும்போதும் நாம் எமது அரசியல், நடைமுறை வேலைத் திட்டத்தையும், எமது மூலோபாயத்தையும், தந்திரோபாயங்களையும் முன்னிறுத்தியே எம்மைத் திருத்திக்கொள்கிறோம்.

எமது அரசியல் கொள்கைக்கும், அது சார்ந்த நடைமுறைக்கும், மக்கள் நலனுக்கும் வெளியில் நாம் எந்த தனிநபரையும், எமது அமைப்புக்கு உள்ளேயும், வெளியேயும் எந்தக் காரணத்துக்காகவும் பாதுகாக்கப் போவதில்லை. அதுபோலவே வேற்று அமைப்புகளையும் கையாள்கின்றோம். ஆகவே எமது விமர்சனங்களானது எந்த வகையிலும் தனிமனிதர்களின் விருப்பு வெறுப்பை வெளிப்படுத்தவோ, அல்லது தனிமனிதர்கள் மற்றும் அமைப்புகளை பழிவாங்கும் எண்ணத்திலோ முன்வைக்கப்படுவதில்லை.

இதைப் பின்வரும் உதாரணம் விபரிக்கிறது.

புலிகளில் அழிவின் பின்வந்த மாதங்களில், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொலை வெறித்  தாக்குதலுக்கு ஆளானார்கள். அப்போது எமது நட்புச் சக்தியான மகஇகவின் வெளியீடுகள், மற்றும் அவர்கள் சார்பான இணையம் போன்றனவும், அக் கொலைகளைக் கண்டித்தன. அதற்கெதிராக போராட்டம் நடத்தினர். ஆனால் இலங்கையின் பொருளாதார கடற் பிரதேசத்தில் இந்திய அத்துமீறல் மீன்பிடியால் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் இலங்கை மீனவர்களின் வாழ்நிலை பற்றியோ, இலங்கைக் கரையோரங்களின் இந்திய மூலதனத்தின் நாசகார மீன்பிடியால் ஏற்பட்ட இயற்கை அழிவைப் பற்றியோ அவர்கள் தமது அரசியற் தந்துரோபாய அடிப்படையில் விவாதிப்பதையும், கருத்துச் சொல்வதையும் தவிர்த்தார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் "சிங்களவன் அப்பிரதேசத்தில் மீன்பிடிக்கலாம், ஏன் இந்தியர்கள் மீன்பிடிக்கக் கூடாதென” வாதிட்டார்கள். அந்நிலையில் புலம்பெயர் தேசங்களில் இடதுசாரிகள் எனத் தம்மை அழைப்பவர்களோ, ”தேசியம்” கதைத்த புலிகளோ எவரும் இந்தியக் கடற்கொள்ளையை கண்டிக்கவோ, விமர்சிக்கவோ முன்வரவில்லை. இவர்கள் இந்தியக் கடற்கொள்ளையை கண்டிப்பதையும், இலங்கை மீனவர்களின் வாழ்வாதார அழிவை எதிர்த்துக் குரல் கொடுப்பதையும், இலங்கை அரசுக்கு சார்பான செயலாகவும், இந்தியாவில் தமிழ்த் தேசியம் கதைக்கும் சக்திகளை எதிர்ப்பதாக அமையும் என பயந்தார்கள்.

ஆனால் நாம் எமது அரசியல் சார்ந்து, எமது மக்கள் நலம் சார்ந்து, அதேவேளை இந்திய உழைக்கும் வர்க்க மீனவர்களின் நலன்களை கருத்திற்கொண்டு, எமது அரசியல் விமர்சனங்களையும், போராடத்தையும் முன்னெடுத்தோம். எமது நட்புச் சக்தியான மகஇகவிற்கும் எமக்கும் தத்துவ அடிபடையிலான உடன்பாடு இருந்தபோதும், அவர்களின் அரசியற் களநிலை சார்ந்த தந்துரோபாயத்துக்கும், எமது நிலைப்பாட்டிற்கும் இடையில் வேறுபாடுகளும், முரணான கருத்துகளும் ஏற்பட்டது. ஆனால், நாம் சந்தர்பவாதிகளாக மாறி எவருக்கும் கரசேவகம் செய்யவில்லை. எமது அரசியல், நடைமுறை வேலைத் திட்டத்தையும், மூலோபாயத்தையும், தந்திரோபாயங்களையும் முன்னிறுத்தியே விமர்சனங்களையும், போராட்டத்தையும் முன்னெடுத்தோம்.

2. எமது விமர்சனங்களின் விமர்சனமுறை

ஆரம்பத்திலிருந்து இன்றுவரை எமது விமர்சனங்களின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பொதுவாக அவை எழுதப்படும் விதம், பாவிக்கப்படும் சொற்கள், அவற்றின் வடிவம் சார்ந்தே அமைத்துள்ளன. தமிழரங்கத்தை சேர்ந்த எவரும் எழுத்து ரீதியாக, தமிழ்மொழி ரீதியாக பாண்டித்தியம் பெற்றவர்கள் அல்ல. எம்மிற் பலர் புலம்பெயர்ந்த பின்புதான் எழுதத் தொடங்கினோம். அதுவும் எங்களுடன் இணைந்திருந்த எழுத்து வன்மையும் மொழித் திறனும் கொண்ட தோழர்கள், அரசியல் அடிப்படையில் கருத்து வேறுபாட்டால் விலகிய போதுதான், எமது அரசியல் வேலைகளை  முன்னெடுக்கும் நோக்கில் எழுதத் தொடங்கினோம். அக்காலத்தில் எமக்குப் பரிட்சயமான உழைக்கும் வர்க்க சமூதாய மொழிவளக்கைப் பிரயோகித்து எழுதினோம். பின்பு எமது வாசிப்பின் பயனாக கற்றுக்கொண்ட அரசியல் விமர்சன மொழியை உபயோகித்தோம். அவ் அரசியல் விமர்சன முறையை, தமிழ்நாட்டு இடதுசாரி தோழர்களின் வெளியீடுகள் மூலம் கற்று கொண்டோம்.

இன்று விமர்சன - சுயவிமர்சன - அனுபவ அடிபடையில், எமது ஆரம்பகால தவறான மொழிப் பிரயோகங்களை நிவர்த்தி செய்துள்ளோம். ஆனாலும், இப்போதுகூட நாம் மொழியியல் ரீதியாக வளர்ந்துவிட்டோம் என்று கூறமுடியாது. இப்போதும் எமது அரசியல் அடிப்படையில் நின்று எதைச் சொல்ல வருகிறோமோ, அதைச் சொல்வதையே முக்கியமானதாகக் கருதி, எமது எழுத்துகளை - விமர்சனங்களை முன்வைக்கின்றோம். இவ்வாறு உள்ளடக்கத்தை கவனத்திற் கொண்டு எழுதுவது எமது அரசியல் அடிப்படையை விரும்புபவர்களையும், ஆதரவாளர்களையும் மட்டுமே எமது எழுத்துகளை வாசிக்க வைக்கின்றது என்பது, பல சந்தர்பங்களில் உண்மையான விடயம்.

அதேவேளை, நாம் வைக்கும் சரியான அரசியலை - அது சார்ந்த விமர்சனங்களை - மொழியியல் காரணங்களை முன்வைத்து, மறுப்பதென்பது எந்த வகையிலும்; - எவ்வகைத் தத்துவ அடிபடையிலும் நியாயமான விடயமல்ல. மொழியியல் அடிப்படையைக் காரணம் காட்டி, எமது விமர்சனத்தைத் தட்டிக் கழிப்பவர்கள்,;; தமது அரசியல் தவறுகளை மலிவான முறையில் நியாயப்படுத்துபவர்களாகவே உள்ளனர். இதை மேலும் விளங்கிக் கொள்ள பின்வரும் உதாரணத்தை வாசிப்பது உதவியாயிருக்கும்.

தேசத்தில் இடதுசாரி அரசியலை தெரிவுசெய்த பலர், இடதுசாரி இயங்கங்கள் என நம்பிய அமைப்புகள் மக்கள் விரோத அரசியலை முன்வைத்த போதும், உட்படுகொலைகளாலும், புலிகளின் பாசிசக் கொலைக் கரங்களுக்குத் தப்பியும் புலம் பெயர்ந்தனர்.

புலம் பெயர்ந்த பிற்பாடு, இவர்களில் வெகுசிலர் தமது அரசியற் தோல்விகளைப் புரிந்து கொள்வதற்காகவும், புதிய அரசியற் பாதையை  வகுப்பதற்காகவும், தத்துவ - அரசியற் காரணங்களைத் தேடினர். பெரும்பான்மையானவர்கள் தமது அரசியல் இருப்பிற்கான சமூக அடையாளங்களை - பதவிகளை - சமூக அந்தஸ்தை - சமூகப் பாத்திரங்களைத் தேடினர். இதன் வெளிப்பாடாக பல சஞ்சிகைகளையும், பத்திரிகைகளையும் வெளியிட்டனர். இலக்கியச் சந்திப்பு, பெண்கள் சந்திப்பு மற்றும் சில அரசியல் சந்திப்புகளை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக பலர் கவிஞர்கள் - கவிஞைகள் எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டனர். சிலர் கதாசிரியர்கள், எழுத்தாளர்கள் ஆனார்கள். இவர்கள் எல்லோரும் தம்மை புத்திஜீவி என நிறுவ முயன்றார்கள்.

அந்நிலையில், நிறப்பிரிகைப் பத்திரிகை மூலமும், தனது பிரயாணங்கள் மூலமும், இந்தியர் அந்தோணிசாமி மார்க்ஸ் புலம்பெயர் இடதுசாரிகளின் மத்தியில் மிக பிரபலமானார். நிறப்பிரிகை பத்திரிகை மூலமும், இந்தியர் அந்தோணிசாமி மார்க்ஸ் மூலமும் மேற்படி கவிஞர்கள், கவிஞைகள், கதாசிரியர்கள், எழுத்தாளர்கள் அவர்களுக்கு தெரிந்த மார்க்சிசதுக்கு மாற்றாக புதிய புதிய « இசங்களை » பெயரளவில் தெரிந்து கொண்டார்கள்.

இந்தியாவில் உள்ள அந்தோணிசாமி மார்க்ஸ் போன்றவர்கள் தமிழில் « எழுதிய » ”அது என்றாலென்ன” - "இது என்றாலென்ன”(அதாவது ஆங்கிலத்தில் வெளிவந்த "What is Exsistensialism"  What is X, Y, Z " புத்தகங்களின் மொழிபெயர்ப்புகள் )  புத்தகங்களை வாசித்து, தங்களை இருப்பியல்வாதிகளென்றும், பின்நவீனத்துவவாதிகளென்றும் அடையாளப்படுத்திக் கொண்டார்கள். இதே நபர்களில் பலர் தலித்தியவாதிகளாகவும் அவதாரம் எடுத்தார்கள். இடதுசாரி என்ற போர்வையில் மார்க்சிஸ அரசியலை இலங்கைத் தமிழ் அரசியற் பரப்பில் இருந்து வெளியேற்ற முயன்றார்கள். தமது தனிமனித தவறுகளையும், சக மனிதர்கள் மீதான ஒடுக்கு முறையையும், வன்முறைகளையும், சமூகம் - இஸ்தாபனங்கள் மீதன சுரண்டலையும், இருப்பியல் - பின்நவீனத்துவ வாதிகளென்ற தமது "அடையாளங்களை" முன்னிறுத்தி நியாயம் கற்பித்தார்கள். இன்றும் இதுதான் நடக்கின்றது.

மிக அண்மையில் கூட இன்றைய இலங்கை அரசியலில் தம்மை மாவோயிஸ்ட்டுகளென தம்மை அடையாளப்படுத்த முற்பட்ட « முற்போக்கு » தேசியத் தோழர்கள் சிலர், தமக்கு அதற்கான அங்கீகாரமும் - முகவுரையும் தேடி அலைந்ததுடன், இந்தியாவில் உள்ள அந்தோணிசாமி மார்க்ஸ் போன்றவர்களிடம் ஓடினர்.

இந் நிலையில் தமிழரங்கமும், அது சார்ந்த அரசியல் சக்திகளும் மட்டுமே மேற்படி "அரசியல் அவதாரங்களுக்கு" எதிராகவும், அவர்களின் மார்க்சிச அரசியல் காழ்ப்புணர்சிக்கு எதிராகவும் விமர்சனங்களை முன்வைத்தோம். அப்போது மேற்படி கவிஞர்கள் - கவிஞைகள் - கதாசிரியர்கள் - எழுத்தாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் தமிழரங்கத்தின் விமர்சனங்களை மொழியியல் சார்ந்து கொச்சைப்படுத்தினார்கள். தாம் தான் இலங்கையில் ஒடுக்கப்பட்டவர்களின் விடிவெள்ளிகள், வசந்தங்கள் என அறிக்கையிட்டார்கள். எமது நட்பு சக்திகள் கூட அவர்களுக்காக வாதிட்டார்கள்.

ஆனால் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்திலிருந்து, புலிளின் அழிவின் ஈறாக இன்று வரையும், பின்நவீனதுவம் கதைத்த தலித்தியவாதிகள் எவ்வாறு இலங்கை அரசின் அரசியலுக்கு சேவகம் செய்கிறார்கள் என்பது இப்போது பகிரங்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய அபிலாசைகள் நொறுக்கப்பட்டு, தமிழ் மக்கள் நடுத் தெருவில் நிற்கும் இந்நிலையில், அவர்களை மென்மேலும் பிளக்கும் திட்டத்துடன், பின்நவீனத்துவம் கதைத்த தலித்தியவாதிகள் இன்று, இலங்கை அரசுடன் செயற்படும் - முன்னாள் புலிகளுடன் இணைந்து செயற்படுகிறார்கள்.

ஆனாலும், அன்று இவர்களைப் பற்றி நாம் வைத்த விமர்சனம் உண்மையாகி விட்டதென்பது ரசிக்கத்தக்க விடயமல்ல. காரணம்; இந்த உண்மைகள், இவர்கள் இலங்கை அரசுடனும், மேலாதிக்க சக்திகளுடனும் இணைந்து மக்களுக்கு செய்த கொடுமையால் உருவானது.

4. எமது விமர்சனங்களில் விமர்சிக்கப்படும் அரசியல்

தனிமனிதமா அல்லது சமூகமா, அரசியற் குறிக்கோளின் அடிப்படை என்ற ~அளவுகோலை| பயன்படுத்தியே சமூகவியல் மற்றும் அரசியல் விஞ்ஞானத்தில் அரசியல் தன்மைகளை வித்தியாசப்படுத்துவார்கள்.

சமுக நலத்தை - பொது நலத்தை முன்னிறுத்தி, தனி மனிதத்தை சமூகத்தில் ஒரு உறுப்பாகக் கருதி அரசியற் குறிக்கோளை வரையறுப்பவர்களை, இடதுசாரிகளென்றும், தனிமனித நலத்தையும் - சுய நலத்தையும் அதன் தனிமனித தேவையையும் முன்னிறுத்தி, சமூகத்தின் இருப்பை மறுத்து, அரசியல் செய்பவர்களை வலதுசாரிகளென்று வரையறுப்பர்.

இன்று மார்க்சிச லெனினிய மாவோசேதுங் சிந்தனை சார்ந்த அரசியல், இடது சாரியத்தை பிரதிபலிகின்றது. அதேபோல சமூகத்தை இன்று கட்டியாளும் நவதாராள முதலாளித்துவ சிந்தனை, வலதுசாரிய அரசியலை பிரதிபலிக்கின்றது. இந்த இரண்டு அரசியல் துருவங்களுக்கும் இடையில் தான் அனைத்து அரசியல் நடைமுறைகளும், குறிக்கோள்களும் இயற்றப்படுகிறது. ஆரம்பத்தில் கூறியபடி நாம் மார்க்சிச லெனினிய மாவோசேதுங் சிந்தனையை அரசியற் கொள்கையாக வரையறுத்தவர்கள்.

சமூகத்தின் ஒட்டுமொத்த விடுதலையை, தனிமனிதத்தின் விடுதலையாக கணிப்பவர்கள். அதற்காக போராடுபவர்கள். ஆகவே, எமது அரசியல் நடவடிக்கைகளின் போது, எமது அரசியலுக்கு வலதுபுறம் இயங்கும் அரசியல் அனைத்தும், நாம் இறுதி வெற்றி பெறும்வரை, எமது நடைமுறை வேலைத் திட்டத்திற்கேற்பவும், அரசியற் தந்துரோபாய அடிப்படையிலும் எம்மால் முறியடிக்கப்பட வேண்டியவை அல்லது வென்றெடுக்கப்ட வேண்டியவை. (மறுபுறமாக வலது சாரிகளின், அதாவது எமது அரசியலுக்கு வலதாக உள்ள அனைத்தும், அரசியற் செயற்பாடுகளும் எமது அரசியலை முறியடிப்பதாக அமையும்)

உதாரணமாக: இலங்கை தமிழ் அரசியற் தளத்தில் ஒருவர் ஒரு கவிதை எழுதிவிட்டால் அவர் ஒரு புத்திசீவியாகவும், எல்லாம் தெரிந்த நபராகவும் தன்னை காட்டிக்கொள்வதுடன், தன்னை அங்கீகரிக்கும் தன்னைப் போன்றவர்களையும் அங்கீகரித்து ~அரசியல்| செய்வது வழமையானதொரு விடயம். இதே நபர்கள் இடதுசாரிகளாக தம்மை காட்டிக்கொள்வதும் வழமையான விடயம். இதற்கு இன்றும் இடதுசாரியாக இருப்பவரையே புத்திசீவியாகவும், சமூக நலம் சார்ந்து இயங்கும் நபராகவும் அங்கீகரிக்கும் தன்மை எமது சமூகத்தில் இருப்பது ஒரு காரணம். ஆனால் இவர்கள் இடதுசாரிய அரசியல் சார்ந்து போராட முன்வருவதில்லை.

இந்த வகையில், எமது அரசியல் நடவடிக்கைகளின் தந்துரோபாய அடிப்படையில் முதலில் அம்பலப்படுத்தப்பட வேண்டியவர்கள் அல்லது வென்றெடுக்கப்பட வேண்டியவர்கள் மேற்கூறிய ~மார்க்சிசவாதி|களாகவும், ~இடதுசாரி|களாகவும் தம்மை சமூகத்தில் கட்டமைத்தபடி, நடைமுறையில் வலதுசாரிய அரசியலை முன்னெடுப்பவர்களாகவே இருக்கின்றனர்.

இதன் அடிப்படையிலேயே நாம் வலதுசாரிய பாசிசப் புலிகள், பாசிச இனவாத அரசுக்கு எதிராக போராடும் அதேவேளை, புலம்பெயர் தேசங்களில் இலக்கியம், தலித்தியம் கதைக்கும், அரசு சார்ந்த மக்கள் விரோதிகளையும், மார்க்சிசவாதிகளாகவும், இடது சாரிகளாகவும் தம்மை சமூகத்தில் பாவ்லா காட்டுபவர்களையும் விமர்சனங்கள் மூலம் வென்றெடுக்க முயல்வதுடன், முடியாதபோது அம்பலப்படுத்துகின்றோம்.

5. நிறைவுக் குறிப்பு

நடைமுறை அரசியலில் மக்கள் நலம் சார்ந்த இடதுசாரியம் சொகுசான சீவியத்தையும், இலகுவாக சமூக அந்தஸ்த்தையும், அங்கீகாரத்தையும் எந்தவொரு தனி நபருக்கும் பெற்றுக் கொடுப்பதில்லை. மக்கள் நலம் சார்ந்த இடதுசாரிய அரசியல்வேலை, தனிமனித இழப்புகளையும் - தியாகங்களையும் - ஒறுத்தல்களையும் அடிப்படையாகக் கொண்டது. தன்னையும் தன் சீவியத்தையும் சமூக நலனுக்காக அற்பணிக்க திடசங்கற்பம் பூணாதவர்களால் நின்றுபிடிக்க முடியாதது. இடதுசாரி அரசியல் வாழ்வில் சந்தோசங்களும் - மகிழ்வும் குடும்பம், ஊர், தேசம், என்ற வரிசையில் தன்னலம் கருதாத சகமனிதனின் நல்வாழ்வையும், விடுதலையையும் முன்னிறுத்தி ஏற்படுவது. துன்பமும், இழப்பும் அதே போன்றதே.

தோழர்களே !

எமது அரசியல் விமர்சனங்களும், எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்காத அரசியல் வேலைகளும் மக்கள் நலம் சார்ந்து - சமுக நலனை முன்னிறுத்தியே எம்மால் முன்னெடுக்கப்படுகின்றது. சமுக மாற்றத்தை இலக்காகக் கொண்ட எமது அரசியற் போரில், இறுதி வெற்றியை குறியாய்க் கொண்ட எமது அரசியல் வேலைகளில், அர்ப்பணிப்புடன் இணையுமாறு வேண்டுகின்றோம்.

மா.நீனா - சீலன்