அதிகார சூழலுக்கு ஏற்ப தன்னைத் "தகவமைப்பதே" மனிதன் என்று கூறும், ஒரு அற்ப மனிதனின் அற்பத்தனமான கதைகள். இப்படி "தகவமைத்து" வாழ்தல் மனித "இயல்பே" ஒழிய அது "பிழையல்ல" என்று கூறி, அதுவே தன் கதைகள் என்கின்றார். இந்த வகையில் தன்னை அதன் ஒரு பிரதியாகவும் முன்னிறுத்துகின்றார். இன்று தன்னையும் ஒரு பிரமுகராக தகவமைத்துக் கொள்ள எழுதுகின்றார். "அதிகாரத்துக்கு தகவமைத்து" வாழ்தல் தான், மனித இயல்பும் இருப்பும் என்று கூறக் கூடிய ஒருவரின், அந்த இருப்பு சார்ந்து எழும் கதைகள். மனித இனத்தை இழிவுபடுத்துகின்ற, அடிமைப்படுத்துகின்ற கூட்டத்துடன் தன்னை தகவமைத்துக் கொண்ட வக்கிரமான குரலாக இவை வெளிவருகின்றது. மனிதனுக்கு மனிதன் அடங்கிப் போகும் வண்ணம் "தகவமைப்பை" விளக்குகின்ற, கோருகின்ற அடித்தளத்தை, மனித "இயல்பு" என்கின்றார். இது "பிழையல்ல" என்று, தங்கள் சந்தர்ப்பவாத பிழைப்பை நியாயப்பபடுத்துகின்றார். மனிதனை மனிதன் அடக்குவதும், ஒடுக்குவதும் ஏன்? மனிதன் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் தன்னை தகவமைக்க மறுப்பதால் தான், அடக்குவதும், ஒடுக்குவதும் எங்கும் எதிலும் காணப்படுகின்றது. இப்படி எதார்த்தம் இருக்க, அடங்கி ஒடுங்கி தகவமைத்துக் கொண்டு அதையே பிறமனிதன் மீது செய்யும் தங்களை ஒத்த அற்பர்களை நியாயப்படுத்தி முன்னிறுத்தும் கதை. இதுதான் அவர்கள் அளவில் காணும் எதார்த்தம்.

சயந்தன் முள்ளிவாய்க்காலுக்குப் பின் "பிச்சை வேண்டாம் நாயைப்பிடியுங்கள்!" என்று கூறி, புதிய சூழலுக்குள் புதிய "தகவமைப்புடன்" தன்னை தலைகீழாக மாற்றி எழுதத் தொடங்கிய காலத்தில் இவரை நாங்கள் இனம் காண்டோம். அப்போது, அதை நாம் மறுபிரசுரம் செய்த போது, ஒரு பின்னூட்டத்தை இட்டோம். "உங்கள் உணர்வுகள் அனுபவம் சார்ந்தது. ஆனால் அடுத்த எதிர்நிலைக்கு பாய்ந்து செல்வதும் தவறானது. மக்கள் நலனை கருணாவோ, இந்த அரசோ ஒருகாலும் பூhத்திசெய்ய முடியாது. மக்களுக்காக மக்களுடன் நில்லுங்கள். அதற்காக இயன்றதை செய்ய முனையுங்கள். விரக்தி மற்றொரு தவறாக ஒருக்காலும் இருக்கக் கூடாது."( "பிச்சை வேண்டாம் நாயைப்பிடியுங்கள்!" ) என்று நாம் எழுதினோம். நாம் அன்று சொன்னது உண்மை என்பதையே, இந்த நாவலின் உள்ளடக்கமும், இன்று அதன் பயன்பாடும் இதை மேலும் இன்று தெளிவாக்குகின்றது. அன்று மறுபிரசுரம் செய்த சிறு துண்டுகள் இந்த நாவலில் உள்ளடங்கி உள்ளது.

அதிகாரங்களுக்கு தகவமைக்கும் அற்ப மனிதர்களின் சொந்த அற்பத்தனங்களை நியாயப்படுத்துகின்ற அற்பமனிதர்களில், சயந்தனும் ஒருவர். உண்மையில் புலிகளுடன் தகவமைத்து வாழ்ந்த சந்தர்ப்பவாதிகளின் புதிய தகவமைப்பு எதுவோ, அதற்கு அமைவாக கதைகள் கருத்துகள் படைக்கப்படும் காலம். புலி சந்தர்ப்பவாதிகளின் கருத்து எதுவோ, அதை "ஆறா வடு"விலும் மீண்டும் காணமுடியும். இது விமர்சனமல்ல, சுயவிமர்சனமல்ல. புலிக்கு பின் புதிய இடம் தேடுகின்றார். இந்த வகையில் பிரமுகர்களுடன் சேர்ந்து பிரமுகராக முனையும் ஒரு சந்தர்ப்பவாதி, எப்படி புலியை கூற முடியுமோ அதைத்தான் இவர் மீண்டும் செய்கின்றார். இதற்கு பல்லவி பாடும் பிரமுகர் http://sayanthan.com/ பட்டியல் வலது இடதற்ற வகையில் நீண்டது. கருணாகரன், மீரா, அ.ரவி, சோபாசக்தி, யமுனா ராஜேந்திரன் .. என்று தொடருகின்றது.

புலியை பற்றிக் கூறினால் முற்போக்கு என்று கருதும் புலியெதிர்ப்பு அரசியல் அடித்தளத்;தில், இதன் பின்னான அரசியலைக் கூட ஊடறுத்துப் பார்க்க முடியாத பொதுத்தளத்தில் சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகள் பிரமுகராக பவனி வருகின்றனர்.

விமர்சனம், சுயவிமர்சனம் அரசியல் ரீதியானதே ஒழிய, புலியை பற்றிக் கூறுவதல்ல. அரசு தான் புலியைப் பற்றிக் கூறுகின்றது. அரசுக்கு வெளியில் நின்று கூறினால், அது சரியா? அரசு கூறும் அதே அரசியலில் நின்று அரசுக்கு வெளியில் நின்று கூறினால் போதும் என்று கருதுகின்ற அரசியல் அறிவும் அளவுகோலும் இன்று எங்கும் கோலோச்சுகின்றது.

புலிக்குப் பின் புலியை மறுத்தல் எந்த நோக்கில் எந்த அடிப்படையில் என்பதில் இருந்து தான், அணுகப்படவேண்டும். புலிகள் இருந்த வரை புலியை மறுப்பது, அரசின் புலியெதிர்ப்புக்கு அப்பால் இருந்த பொதுப்பார்வை என்பது புலிக்கு பின் இன்று பொருந்தாது. புலிக்கு பின் புலிக்குள் பிழைத்த சந்தர்ப்பவாதிகள் அனைவரும், புலியை மறுத்தபடி புதிய பிழைப்பை தொடங்குகின்றனர்.

இதில் உண்மையான நேர்மையான விமர்சனம் என்பது, புலி அரசியலை விமர்சிப்பதன் ஊடாக சம்பவங்;களை இனம் காட்டுவது. புலியின் நடத்தைகள் அனைத்தும் புலியின் அரசியலாலானது. புலி அரசியலை விமர்சிக்காத, புலி நடத்தை மீதான விமர்சனம் புலி அரசியலை அடிப்படையாகக் கொண்ட அதிருப்திகள். இது புலி தவறு பற்றி பேசுகின்ற போது, புலியின் அரசியலை இவர்கள் தவறாகக் கூறுவது கிடையாது.

இந்த நிலையில் தங்கள் அரசியல் அடித்தளத்தைப் பாதுகாக்க நடக்காததையா நாங்கள் சொல்கின்றோம் என்கின்றனர். இதையே யோ.கர்ணன் கூற முற்படுகின்றார். ஏன் நாங்கள் அதை சொல்ல முடியாதா? இப்படி தர்க்கம் செய்கின்ற, தங்கள் படைப்புச் சுதந்திரத்தின் மேலான மேதாவித்தனமான இவர்களின் சொந்த வாதங்கள், உண்மையில் இவர்கள் புலியை நியாயப்படுத்தி பிழைத்த காலம் வரை முன்வைத்த அதே தாக்கம் தான். விசித்திரமான உண்மை இது.

நீங்கள் கண்டதை கண்டபடி கதை சொல்ல முடியும். அது நீங்கள் நீங்களாக இருக்கும் வரை தான். இதைக் கடந்து யாருடன் சேர்ந்து, எந்தத் தளத்தில், எந்த நோக்கில்… நின்று எனும் போது, இன்று கதை சொல்வது சார்பு பெற்று விடுகின்றது.

இங்கு நீங்கள் கண்ட எதார்த்தம் கூட இரண்டு வகைப்பட்டது.

1.ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பானது.

2.ஒடுக்கும் பிரிவு சார்ந்தது.

இதற்குள் கூட பிரிவுகள் உண்டு.

இப்படி இருக்க மக்களை ஒடுக்கும் பிரிவு சார்ந்து நின்று, அதன் அரசியல் அடித்தளத்தின் அதிருப்திகள், மக்கள் அரசியல் சார்ந்த எதார்த்தத்தில் இருந்து வேறுபட்டது. உண்மையான எதார்த்தம் மக்களைச் சார்ந்து நிற்கின்ற அரசியல் மூலம்தான் மக்களின் எதார்த்தத்தைக் காண முடியும். இல்லாத வரை தனிப்பட்ட அதிருப்திகள் உண்மையான சமூக எதார்த்தமல்ல.

இந்தவகையில் இயக்கம் சார்ந்த நிகழ்வுகளைச் சுற்றி அதை கதைக்குரிய பொருளாக்கியவர், இயக்கத்துக்கு எதிரான மக்களின் அரசியல் அடித்தளத்தில் நின்ற இதை பார்க்க முற்படவில்லை. புலிக்கும் மக்களுக்குமான உறவு, நட்பு முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. அது பகை முரண்பாடு தான். புலி பற்றிய அச்சம் தான், புலிக்கும் மக்களுக்கமான உறவு. இந்த உறவை கொண்ட புலி அரசியலை பாதுகாத்தபடி, தனிப்பட்ட அந்த வர்க்கத்துக்கே உரிய அதிருப்திகளைக் கதையாக்குகின்றனர்.

இப்படி முள்ளிவாய்க்காலுக்குப் பின் புலி பற்றிய அதிருப்தியுடன் எழுதத் தொடங்கியவர், அதுவரை புலிக்குப் பின்னால் நின்று செயல்பட்டவர். புலிக்கு பின் "பிச்சை வேண்டாம் நாயைப்பிடியுங்கள்!" என்ற எழுதத் தொடங்கிய போது 12 கட்டுரைகளை மறுபிரசுரம் செய்தோம். அதைத் தொடர்ந்து அன்று அவர் எம்மை வெளியிட வேண்டாம் என்று கேட்ட நிலையில், அதை நிறுத்தினோம். அன்று அதை அவர் நிறுத்தக் கோரியது, தனது வலதுசாரிய வர்க்க அரசியல் அடித்தளத்தை கொண்ட தன் இருப்பையும், பிரமுகராக முனையும் அடித்தளத்தையும் தக்கவைக்கத்தான்.

நாங்கள் அன்று அரசியல்ரீதியாக வென்றெடுக்கும் அணுகுமுறையுடன் அவரை அணுகிய போது, அவர் அதற்கு எதிர்த்திசையில் பயணித்தார். இன்று "பிச்சை வேண்டாம் நாயைப்பிடியுங்கள்!" என்று யாரை குறித்த அதிருப்தியுடன் குலைத்தாரோ, அதையும் தாண்டி இலக்கியப் பிரமுகராக தன்னை முன்னிறுத்தும் தகவமைப்புக்குள் இறங்கி இருக்கின்றார். இங்கு இவர்களின் தகவமைப்பு என்பது பிழைப்புத்தனமே அடிப்படையாக இருப்பதும், புகழ் என்று தனிமனித அற்ப உணர்வைத் தாண்டி எந்த சமூக நோக்கமும் இங்கு கிடையாது. சில மனிதர்களின் இந்த அற்பத்தனத்துக்கு, கடந்தகால சம்பவங்கள், அவலங்கள் இவர்களுக்கு அவலாகின்றது.

 

பி.இரயாகரன்

23.07.2012