தனது மகன் நிமலரூபனின் பிரேதத்தை பெறும் வரைக்கும் அறுபத்து மூன்று வயதான இராஜேஸ்வரி ஒரு நாளும் மனம் தளர்ந்ததில்லை.  நம்பிக்கைதான் அவளுக்கு வாழ்க்கை.

யுத்த கோரங்களினால் 1990 களில் காரைநகரில் இருந்து இடம் பெயர்ந்து பல்வேறு இடர்களுக்கு மத்தியிலே வவுனியாவுக்கு வந்து சேர்ந்தனர் இராஜேஸ்வரி குடும்பத்தினர். நெளுக்குளம் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. தன்னுடைய ஒரே ஒரு மகனான நிமலரூபனை எப்படியெண்டாலும் வளர்த்து ஆளாக்கிவிட வேண்டும் என்பதே இராஜேஸ்வரியின் கனவாகும்.

5.10.2009 நெளுக்குளத்திலிருந்து வவுனியாவுக்கு வரும் போது வேப்பம் குளம் இராணுவமுகாம் சோதனைச் சாவடியில் வைத்து நிமலரூபன் இராணுவ புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டான். நிமலரூபன் கைது செய்யப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் நிமலரூபனின் நண்பர்கள் மூவர் இராணுவதினரால் கைது செய்யப்பட்டு நெளுக்குளத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர். அன்றிலிருந்து நிமலரூபனும் இராணுவத்தினரால் குறிவைத்து தேடப்படும் ஒரு நபராகவே இருந்து வந்தார். பல தடவைகள் வீட்டுக்கு இராணுவத்தினர் தேடி வந்த போதெல்லாம் மறைந்து வாழ்ந்த நிமலரூபன் கடைசியில் வேப்பங்குளத்தில் வைத்து கைது செய்யப்பட்டான்.

வேப்பங்குள முகாமில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிமலரூபன் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். பயங்கரவாத தடுப்பு பிரிவின் மோசமான சித்திரவதைகளுக்கு நிமலரூபன் உள்ளாக்கப்பட்டார். புலிகளின் மறைவுக்குப் பின் வவுனியாவில் புலிகளின் நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு தாக்கப்பட்டார். அவனிடமிருந்து பொய்யான குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பெற்றிருந்தனர்.

பயங்கரவாத தடுப்பு பிரிவிலிருந்து கொழும்பு தடுப்புக்காவலுக்கு மாற்றப்பட்ட (CRP) நிமலரூபன், ஒரிரு மாதத்தில் வவுனியா சிறைக்கு மாற்றப்பட்டான். உயர் நீதிமன்றத்தில் எந்தவித வழக்கும் தாக்கல் செய்யப்படாத நிலையில் பதினைந்து நாட்களுக்கொருதடவை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டான். ஒரு தடவை நெஞ்சுக்குள் நோவதாக சொல்லி மருந்தும் எடுத்திருக்கிறான். தினமும் சாப்பாடு கொண்டுவரும் தாயிடம், சித்திரவதைகளினால் தனக்கு நோய் தொட்டுவிட்டது என்று சொல்லி அழுவான். தாயின் ஆறுதல் வார்தையிலும் தைரியத்திலுமே அவனின் காலங்கள் ஓடிக்கொண்டிருந்தது.

சிறையிலிருந்து வெளியே வருவான் என்ற நம்பிக்கை மட்டும் இராஜேஸ்வரி மனதில் உறுதியாக இருந்தது. வவுனியா சிறையிலிருக்கும் மகனை தினமும் பொட்டல சோற்றுடன்  நெளுக்குளத்திலிருந்து பார்க்கச் செல்வாள். மகனுக்கு மட்டுமல்லாது தன்னால் இயன்றளவு மற்ற பிள்ளைகளுக்கும் சேர்த்து சமைத்துக் கொண்டு போவாள்.  சிறையிலிருந்தாலும் தன் மகன் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்று நினைப்பவள். அவளுக்கென்று இருக்கிற சொந்தமென்றால் வயதான கணவன் கணேசனும் மகன் நிமலரூபனும்தான்.

சிறைச் செலவுகளுக்காக காரைநகரிலிருந்த தனது காணியை அடகு வைத்தே செலவுசெய்து வந்திருந்தாள்.  பலசரக்கு கடையிலும் அறுபதினாயிரத்துக்கும் மேல் கடன்.  மற்றத் தாய்மாரைப் போல் தானும் ஒரு நாள் தன்பிள்ளையுடன் சந்தோசமாக வாழுவன் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.

வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்காக ஒரு மாடிக்கட்டிடம் மாத்திரமே உள்ளது. கீழ் பகுதியில் உள்ள செல்லில் 27 அரசியற் கைதிகளும் மேற்பகுதியிலுள்ள திறந்த மண்டபத்தில் சிவில் கைதிகள் 180 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். குறைந்த வசதிகளைக்கொண்டு கைதிகளால் நிரம்பிய சிறைச்சாலையாகவே வவுனியா சிறைச்சாலை இருந்து வந்தது. கைதிகள் ஆவணக்காப்பகத்தை (Record Room) தவிர,  வவுனியா சிறைச்சாலை அநுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகரின் கீழ் இயங்குமமொரு கிழையாகவே இருந்துவந்தது.

சிறைச் செல்லில் உள்ளவர்கள் தங்களுடைய பொதுவான பிரச்சினைகளை சிறைச்சாலை நிருவாகத்துடன் கதைப்பதற்கு தங்களுக்குள் ஒருவரை தெரிவு செய்து வைத்திருப்பார்கள். அப்படி தெரிவு செய்யப்பட்டு, காம்பரா பாட்டியாக இருந்தவர்தான் நிமலரூபனும். சிறையின் செல்களிலுள்ள எல்லோருடனும் கதைப்பதைவிட எல்லோர் சார்பாகவும் ஒருவருடன் கதைப்பதற்கு சிறைச்சாலை நிருவாகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு ஒழுங்கு முறையாகும் இது. சிக்கலான பிரச்சினைகள் வரும் போது, சிறைச்சாலை நிருவாகத்துடன் காம்பிரா பாட்டி ஒத்துப் போகக் கூடியவராக இருந்தால் அவரை தங்கள் பக்கம் வைத்துகொண்டு பிரச்சினைகளை தணிக்க நிர்வாகம் முயற்சிக்கும். ஆனால் நிமலரூபன் வளைந்து கொடுக்காதது சிறைச்சாலை நிருவாகத்துக்கு நிமல்ரூபன் மேல் கடுப்பாக இருந்தது.

பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வழக்கு தங்களுக்கு சாதகமற்ற நிலையில் இருந்தால், "பயங்கரவாதத் தடை சட்டத்தின் திருத்தியமைக்கப்பட்ட 10 ஆம் இலக்க 1982 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 15 ஆம் அ(1) ஆம் பிரிவின் கீழ், அரச பாதுகாப்பிற்கும் பொது அமைதிக்கும் பங்கம் விளையுமென பாதுகாப்புச் செயலாளர் கருதும் இடத்து சுதந்திரமான நியாயமான விளக்கம் நடைபெறுவதை உறுதிப்படுத்த, வழக்கின் எதிரியை விளக்க மறியலிலிருந்து மீண்டும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைத்தல்", என்ற சட்டத்தைப் பயன்படுத்தி வழக்காளியை மேலதிக விசாரணை என்று விசாரணப் பிரிவுக்கு மாற்றம் செய்வர். வழக்காளியின் வழக்கை இழுத்தடிப்பதற்கு அரச பயங்கரவாதம் கையாளும் ஒரு உத்தியாக இது இருக்கின்றது.

இதனடிப்படையில் நிமலரூபனுடன் வவுனியா சிறையிலிருந்த கணேஸ்வரன், சிந்து என்ற இருவரையும் பூஸா தடுப்பு முகாமுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் உள்ளெடுத்திருந்தனர். கணேஸ்வரன் புனர்வாழ்வு பெறுவதற்காக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த நிலையிலேயே வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்படமலே பூஸா தடுப்பு முகாமுக்கு எடுத்து செல்லப்பட்டனர். அவர்களுடைய உடுப்புக்களைக் கூட சிறைச்சாலைக்குச் சென்று எடுத்துவர பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அனுமதிக்கவில்லை.

நிமலரூபனுடனிருந்த மற்றுமொரு கைதியான நாகராசா சரவணபவான்  அனுராதபுரம் நொச்சியாகம நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக சென்றவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் உள்ளீர்க்கப்பிட்டிருந்தார். அன்றிரவு சரவணபவான் அனுரதபுர சிறையிலே தங்கவைக்கப்பட்டிருந்தார். அனுரதபுரத்தில் 60-70 அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள்.  இவர்களுக்கென்று பிரத்தியேகமான maximum செல் இருக்கிறது. சரவணபவான் அந்த செல்லில் அடைக்கப்படாமல் p1 என்ற சிங்களக்கைதிகளின் செல்லில் போடப்பட்டிருந்தார்.

ஏற்கனவே சரவணனுக்கும், p1 செல்லில் இருந்த சிங்களக்கைதி ஒருவருக்குமிருந்த முரண்பாட்டின் வெளிப்பாடு சரவணனை தாக்கி மலங்களை ஊற்றி கொடுமைப்படுத்தியுள்ளனர். இவைகள் சிறைச் சாலை நிருவாகத்துக்கு தெரிந்திருந்தும் கண்டும் காணாததுபோல் நடந்து கொண்டனர். ஏற்கனவே உணவு தவிர்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டிருந்த இவர்களை பழிவாங்கும் செயலாகவும் சிறைச்சாலை நிருவாகம் இதனை கையாண்டுகொண்டது.

சிறைச்சாலைகள் நீதிமன்ற நிருவாகத்தின் கீழே இயங்குகிறது. ஆனால் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை நீதிமன்றத்தாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை, தங்களுடைய கோரிக்கைகளை சிறைச்சாலை நிருவாகமும் செவிமடுக்கவில்லை என்ற வெப்புசாரத்தில் வவுனியா சிறையில் இருந்த கைதிகளுக்கு சரவணனுக்கு நடந்தவைகள் மேலும் ஆத்திரத்தை ஊட்டியது. கணக்கெடுப்பு செய்ய வந்த மூன்று சிறைச்சாலை அதிகாரிகளை கைதிகள் தங்களுடன் பிடித்து வைத்துவிட்டு கதவை பூட்டிவிட்டனர்.

கைதிகளின் கோரிக்கைகள், பிரச்சினைகள் மறைக்கப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகளை கைதிகள் பிடித்து வைத்தது மட்டுமே மேற்கிளம்பியது. நீதிபதி அலக்ஸ்ராசா, சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ஆகியோர் கைதிகளிடம் கதைத்து சிறைச்சாலை அதிகாரிகளை விடுவதற்கான உடன்பாட்டுக்கு வந்துருந்தனர். ஆனால் பாதுகாப்பு செயலாளரின் உத்தரவின் பெயரில் விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலை கட்டிடத்துக்குள் கண்ணீர்புகை அடித்து கைதிகளை அரை மயக்க நிலையில் வைத்து, விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலையை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தனர்.

கைதிகளை விசேட அதிரடிப்படடையினர் தாறுமாறாக தாக்கியபோது எதிர்ப்பக்க கட்டிடத்தில் நீதிபதியும், விசேட அதிரடிப்படியின் பொறுப்பதிகாரியும் பார்த்துக்கொண்டிருந்தனர். 'கைதிகளை தாக்க வேண்டாம் என்று அதிரடிப்படைப் பொறுப்பதிகாரி' கூறியும் அதனை அவர்கள் செவிமடுக்கவில்லை. சப்பாத்துக் கால்களைத் தூக்கி கைதிகளின் நெஞ்சில் உதைந்தனர். பட்டன் பொல்லால் ஓங்கும் விசைக்கு தலையில் அடித்தனர். அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. சட்டம் கைகட்டி, வாய்பொத்தி பார்த்துக் கொண்டிருந்தது.

அன்றைய தினம்  மதியமளவில் வவுனியா சிறைச்சாலையிலிருந்து அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கைதிகள் கொண்டு செல்லப்பட்டனர். கைதிகள் வாசலில் வைத்து தரம் பிரிக்கப்படனர். சிவில் கைதிகள் வேறாகவும் பயங்கரவாத சந்தேக கைதிகள் வேறாகவும் பிரிக்கப்பட்டனர்.

பிரித்தெடுத்த கைதிகள் அனைவரையும் அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகரின் முன்பாக முழங்காலில் நிக்குமாறு பணித்தனர். அத்தியட்சகரே தனது பட்டன் பொல்லால் தாக்குதலை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அனைவரும் வந்த வீச்சுக்கு தாக்கினர். ஒரு கட்டத்தில் களைப்படைந்த நிலையில் தண்டனை கைதிகளாக இருந்த நான்கு சிங்கள கைதிகளை கூட்டி வந்து விட்டார் சிறைச்சாலை அத்தியட்சகர். அவர்களும் அரசியற் கைதிகளை அடித்தார்கள். சிறைச்சாலை அத்தியட்சகரின் சப்பாத்தை நக்கச் சொல்லி கைதிகளை பலவந்தப்படுத்தினர்.

நிமலரூபன், ஜெபநேசன், வேலாயுதம், டில்ருக்ஸன், சசி ஆகியோரைத் தனிமைப்படுத்தித் தாக்கினர். நிமலரூபனின் நெஞ்சில் காயம் ஏற்பட்டு இரத்தக்கசிவு ஏற்பட்டது. கைப்பகுதியில் நரம்பு வெடித்து தோலின் உட்பகுதியினூடாக இரத்தம் கசிந்தது. நிமலரூபனை காலில் பிடித்து இழுத்து சென்று செல் கம்பிக்குள் இரண்டு காலையும் விட்டு திருகிமுறித்தார்ககள்.

டில்ருக்ஸனின் தலையில் புத்தகதை வைத்து பொல்லால் ஓங்கி அடித்தார்கள். அந்த சிறையில் மரண ஓலத்தை தவிர எந்த சத்ததையும் கேட்கமுடியவில்லை. அநுராதபுர சிறைச்சாலையின் பல நூறு காதுகள் அந்தக் கைதிகளின் மரண ஓலத்தை கேட்டு சிரித்துக் கொண்டிருந்தன.

அன்று நள்ளிரவே 27 அரசியற் கைதிகளையும் அநுராதபுரத்திலிருந்து மகர சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர் சிறைச்சாலை மிருகங்கள். நடக்க முடியாதபோதும் இழுத்து ஏற்றிக்கொண்டு சென்றார்கள். மகர சிறையின் செல்லில் மரணவலியில் எல்லோரும் துடித்துக் கொண்டிருந்தனர். ஓரளவுக்கு முடிந்தவர்கள் நிமலரூபனுக்கும் மற்றவர்களுக்கும் உதவிகள் செய்தனர். வைத்திய வசதிகளுக்காக கைதிகள் மன்றாடியும் அதிகாரிகளால் நிராகரிக்கப்படது. ஒவ்வொருவருடைய காயங்களிலிருந்தும் ஊனம் வடிந்து கொண்டிருந்தது. மகர சிறைச்சாலை அதிகாரிகளும் கைதிகளின் மரண வேதனையினை இரசித்தனர்.

நிமலரூபன் வலியாலும், இரத்தப் போக்காலும் துடித்துக் கொண்டிருந்தான். அதற்குமேலும் சித்திரவதைகளைத் தாங்கமுடியாமல் அவனது உடலை விட்டு உயிர் பிரிந்து அடங்கியது.

ஒரு அத்தியாயம் முடிந்தது. எல்லோரது கண்களிலும் மரண பயத்தைத்தன் காணமுடிந்தது. இதைத்தான் இந்த அரச பயங்கரவாதம் எதிர்பார்த்தது.

கதைத்துக் கொண்டிருக்கும் போது மயக்கமுற்று விழும் ஜெபநேசனும், வேலாயுதமும் கோமாவோடு போரடும் டில்ருக்ஷ்னும், ஒரு காலில் ஐந்து இடத்தில் முறிவு, கையில் முறிவு என அல்லலுறும் சசியினதும் என சிறைக் கைதிகளின் அவலம் தொடருகிறது.

அரச பயங்கரவாதம் தனது கோரமுகத்தை இன்னுமொருமுறை வெளிப்படுத்தி பலரைத் தீர்த்துக்கட்டியுள்ளது. விசாரணைகளைப் பற்றி அக்கறை கொள்ளப்படாத நிலையிலே இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெளிவாகிறது.  இப் படுகொலை அரசியற் போராட்டத்துக்கு விழுந்திருக்கும் பலத்த அடி.

தன்னுடைய ஒரே ஒரு மகனான நிமலரூபனை எப்படியெண்டாலும் வளர்த்து ஆளாக்கி விட வேண்டும் என்று கனவுடன் வாழ்ந்த இராஜேஸ்வரி இப்போது தன்மகனின் இறந்த உடலை சட்டத்தினூடாக பெறுவதற்கு போரடுகிறாள். இவளுக்கு உதவி செய்பவர்களுக்கு அரச இயந்திரம் மறைமுக மிரட்டல்களை கொடுக்கிறது.

தாயின் தளராத நம்பிக்கையும் போராட்டமும் தொடர்கிறது.