வாடிய பயிரை கண்ட போது மனம் வாடினேன்- வள்ளலார் ராமலிங்கனார்.வடிவான பிகரை கண்டபோதெல்லாம் வழிஞ்சு போய் நின்றேன்- ஆசாமி நித்தியானந்தா
கெளதமகுல சித்தார்த்தனின் கண் முன்னே அவனது குலக்குழு சமுதாயவாழ்க்கை முறை அழிந்து கொண்டிருந்தது. கங்கைச்சமவெளி எங்கும் பெருமன்னர்களின் சர்வாதிகார ஆட்சிமுறை பரவிக்கொண்டிருந்தது. குலங்களிற்கு தலைவர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் சர்வ அதிகாரமும் கொண்ட மன்னர்கள் அல்ல. தங்கள் குலத்தவர்களிற்கு மறுமொழி சொல்ல வேண்டிய நிலையில் தான் அவர்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். தமிழ்நிலத்தில் பறம்புமலை பாரி அப்படியான குலமொன்றின் தலைவன்.
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் உடையோம் எம்குன்றும் பிறர்கொளார். இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் வென்றெறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே.
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் என்று வரும் பாடல் அந்தச்சமுதாயத்தை முடிமன்னர்கள் அழித்ததை கூறும். (நாடோடி படத்தில் அன்றொருநாள் இதே நிலவில் என்று கண்ணதாசன்,கபிலரின் சங்கபாடலை தழுவி ஒரு பாட்டு விஸ்வநாதனின் மனதை மயக்கும் இசையில் எழுதியிருப்பார்; நறுமுகையே,நறுமுகையே என்ற இருவர் படப்பாடலில் வைரமுத்துவும் இப்பாடல் வரிகளை கோர்த்து இருப்பார். }. தன்னிடம் கடன் வாங்கி கள்ளுக்குடித்த தன் குலத்தலைவனிடம் கடன் காசை கேட்ட பெண்ணிற்கு ஆநிரை கவர்ந்து வந்து கடன் காசை தருவேன் என ஒரு தலைவன் சங்கப்பாடல் ஒன்றில் சொல்கிறான். சின்ன வயதில் நாங்கள் ஊரிலே கள்ளக்கோழி பிடிப்பது போல கள்ளமாடு பிடிப்பது தான் ஆநிரை கவர்தல், வரி என்றும்,கோயிலிற்கு என்றும்,போரிற்கு என்றும் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை திருப்பித்தா என்று மன்னர்களிடம் கேட்க முடியுமா? மன்னர்களிடம் என்ன,மக்களின் நிலத்தை திருப்பிக்கொடு என்று மகிந்துவிடம் கூட கேட் க முடியுமா? சாமியார்களின் கதையை தொடங்கினாலே களவும்,கள்ளும் தன்ரைபாட்டிலே வந்து விடுகிறது. சமுதாயத்திலே அழிந்ததை தான் உருவாக்கிய சங்கத்திலே காண விரும்பினான் கெளதமன். காவியுடையும்.கஞசிச்சட்டியும் தான் துறவிகளின் சொத்து. சமத்துவம் மடத்தின் அடிப்படையாக இருந்தது.
இன்றைக்கு கொலைகாரர்கள்,ஊரையே அடிச்சு உலையிலே போட்டவர்கள், முருங்கை மரத்திற்கு சீலை கட்டி விட்டாலும் முறைத்து பார்ப்பவர்கள் எல்லாம் துறவி என்கிறார்கள்,மடத்தலைவன் என்கிறான்கள்,சின்ன வீடு மாதிரி சின்ன வாரிசு என்கிறான்கள். சிவனை முழுமுதல் கடவுளாக கொண்ட பிராமணர்களின் மடங்களிற்கு அய்யரும்,வைஸ்ணவ மடங்களிற்கு ஜீயர்கள் எனப்படும் அய்யங்கார்களும், சைவ வேளாள மடங்களிற்கு தேசிகர்கள் எனப்பட்டம் சூடிக்கொள்ளும் வேளாளர்களும் மடத்தலைவர்களாக இருப்பார்கள். வேறு எந்தச்சாதியினரும் பக்கத்திலே கூடப்போக முடியாது. மதுரை ஆதீனம்,ஆசாமி நித்தியை சின்னமடம் ஆக்கிய பின்பு நடந்தவைகள் ஒரு மசாலா தமிழ்படத்தை மிஞ்சி விட்டன. You have been framed என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்து சிரித்ததை விட நித்தி கட்டிலில் தாவியதை பார்த்து சிரித்தவர்கள் பல மடங்கு. ஆனால் எதுவுமே நடக்காதது போல மதுரை ஆதீனம் நித்தியை தன் வாரிசு என்று கொஞ்ச,நித்தியும் எந்தவித வெட்கமோ கூச்சமோ இன்றி நானும் ரெளடி தான் என்கிறது.
நித்தியை சின்னமடம் ஆக்கியதை எதிர்க்கும் ஒரு கோஸ்டியின் உலகமகா பிரச்சனை என்னவென்றால் நித்தி மண்டையிலே மயிரை வழிக்கவில்லையாம். இது மடத்தினதும்,இந்துமதத்தினதும் மகிமையையும் மரபினையும் குழிதோண்டி புதைக்கும் செயல் என்று அந்தக் கோஸ்டி கூப்பாடு போடுகிறது. அப்ப இந்துமதத்தின் மகிமை நித்தியின் மயிரிலா இருக்கிறது. இந்துமத மரபுப்படி எங்கே மயிரை வழிக்க வேண்டும், எங்கே வளர்க்க வேண்டும் என்று இந்த மரபுவாதிகள் விளக்கமாக சொன்னால் வருங்காலத்தில் இப்படியான குழப்பங்கள் வராமல் தடுக்கலாம்.
நெல்லை கண்ணன் என்ற காங்கிரசுகாரர்,நித்தியை மதுரை ஆதீனவாரிசு ஆக்கியதினால் சைவசமயத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டு விட்டது. இதை எதிர்த்து தமிழிற்காகவும், சைவத்திற்காகவும் உயிரை விட வேண்டி வந்தாலும் விடுவேன் என்று வீரசபதம் எடுத்திருக்கிறார். காங்கிரசுப்பன்னாடைகள் மகிந்துவுடன் சேர்ந்து எத்தனையோ ஆயிரம் சைவத்தமிழர்களை கொன்ற போது இவர் கோமாவிலே இருந்தாரா?. இவர் போன்றவர்கள் வீரசபதம் எடுத்ததிற்கு காரணம் சைவமும் இல்லை,தமிழும் இல்லை. சாதிவெறி தான் காரணம். இவர் திருநெல்வேலி சைவவேளாளர். இவர்களின் சாதிக்குத்தான் மடங்களின் முழு குத்தகையும், நித்தி ஆற்காட்டு முதலியார். சாதிப்படி நிலையில் இவர்களை விட குறைந்த சாதி. அது தான் இவர்களிற்கு பொறுக்க முடியவில்லை. நித்தி சைவவேளாளனாக இருந்திருந்தால் இவர்கள் எந்தவிதமான பிரச்சனையுமின்றி ஏற்றுக்கொண்டிருப்பார்கள். ரஞ்சிதாவின் இரவுகள்,படத்தில் நடித்தது எல்லாம் மறந்து போயிருக்கும்.
ஜெயந்திரன்,கொலைகாரனாக இருந்தும் காஞ்சி காமகேடி மடத்தின் தலைவனாக இருக்கிறானே அதற்கு காரணம் அவன் பிராமணன் என்பதுதான். அவன்,பெரிய சங்கராச்சாரி இருந்த காலத்திலே ஒரு பொம்பிளையோடு ஓடிப்போய் விட்டான். அவன் ஓடிப்போனதை விட தண்டத்தை மடத்திலே விட்டு விட்டு ஓடிப்போய் விட்டான் என்பது தான் பார்ப்பனர்களிற்கெல்லாம் பெரிய பிரச்சனையாக இருந்தது. ஆனால் அவன் செய்ததிலும் ஒரு நியாயம் இருக்கிறது. பொம்பிளையோடு ஓடிப்போகும் போது எதுக்கு அனாவசியமாக ரண்டு தண்டம் என்று தான் ஒன்றை விட்டு விட்டு ஓடியிருக்கிறான்.
நாடியிலே தாடி,மண்டையிலே கொண்டை இருந்தால் சிங்கு;மூஞ்சியை மூடி முடி இருந்தால் முஸ்லீம்பட்டை,கொட்டை,மொட்டை போட்டால் இந்து என்று ஆக மொத்தத்திலே மதங்களின் மகிமை எல்லாம் மயிரிலேதான் இருக்கிறது. ஆன்மீகத்தேடல்,ஆன்மீகத்தேடல் என்கிறான்களே அதை அங்கேதான் தேடுகிறான்கள் போலே.