Language Selection

சமர் - 23 : 07 -1998
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலண்டனில் இருந்து புலம் என்ற சஞ்சிகை ஒன்று வெளிவந்துள்ளது. இலணடன் ஐ.பி.சி தமிழ் வானொலிப் பிரிவால் நடத்தப்படும் இச்சஞ்சிகை தனது முதலாவது இதழிலேயே தன்னைத்தான் நிர்வாணமாக்கியுள்ளது.

ஐ.பி.சி வானொலி குறுகிய தமிழ்த் தேசிய இனவாதத்தை கக்குவதுடன் , நடுநிலைத்தன்மையைக் கூடப் பேண முடியாத ஒரு வானொலியாக உள்ளது. இதற்கு வெளியில் இச் சஞ்சிகை சினிமா விளம்பரங்கள் முதல் புலி விளம்பரங்கள் ஈறாகக் கொண்டு வெளியாகி உள்ளது. இச் சஞ்சிகை சரிநிகர் போன்ற பத்திரிகையில் இருந்து மறுபிரசுரம் செய்த கட்டுரைக்குக் கூட நன்றி போட முடியாத ஏதோ புதிதாக தாமே எழுதிய மாதிரி பிரசுரித்து, ஒரு பத்திரிகை மரபைக் கூட மறுத்து நின்றது. இச் சஞ்சிகை மார்க்சியத்துக்கு எதிராக கட்டுரைகளைக் கொண்டு வெளிவந்ததுடன் மட்டும் இன்றி யமுனா ராயேந்திரன் போன்ற மிக மோசமான இந்திய தமிழ் சினிமாவை முதலாளித்துவத்தை நியாயப்படுத்த மறுவாசிப்பு செய்து நுண் அரசியலில் கண்டு நியாயப்படுத்துவது போன்று பல கட்டுரைகளைக் கொண்டு இருந்தது.

இதில் இரு வண்ணங்களைப் பார்ப்போம் . மு . புஷபராசன் ருசிய மொழியில் இருந்து மொழி பெயர்த்து வெளியிட்ட செய்தியைப் பார்ப்போம் .

' உக்கிய மரக்குற்றியுள் எறும்புகளின் குடியிருப்பை அறியாது அதை நெருப்பினுள் எறிந்தேன்.

சுவாலையில் குற்றி எரிந்து சடசடத்தது. எறும்புகள்  தடுமாற்றத்துடன் வெளிவந்து அங்குமிங்கும் ஓடின. வெந்த குற்றி நுனியை நோக்கி ஓடிய அவை துடித்துப் புரண்டு நெளிந்தன. குற்றியை எடுத்து அருகில் உருட்டிவிட்டேன். அநேக எறும்புகள் சுதாகரித்து மணலில் தப்பிச் சென்றன.

ஆனால் அதிசயம் அவை நெருப்பை விட்டு ஓடிச் செல்லவில்லை.

மிக விரைவில், பயத்திலிருந்து மீண்டு , ஒருவகை வேகத்துடன் திரும்பி வந்து கைவிடப்பட்ட தமது வாழ்விடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தன. அவைகளிற் பல எரிந்து கொண்டிருந்த மரக்குற்றியில் மீண்டும் ஏறின. அவற்றின் மேல் ஓடின . எரிந்து இறந்தன. "

என மு. புஷ்பராசன் அலெக்சாண்டர் கொல்ரெனிஷ்ரன் என்ற ருசிய எழுத்தாளனின் சிறு பகுதியை மொழி பெயர்த்து , சோவியத் பாட்டாளி வர்க்கம் சமூகமு மீதும், பாட்டாளி வர்க்கம் மீதும் சேறடித்து இருந்தார் . 1970 இல் நோபல் பரிசு பெற்ற இவர் எழுதிய ஒரு நாவலை குருசேவ் ஸ்ராலினுக்கு எதிரான முதலாளித்துவ பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியவர். ¨டாலின் காலத்தில் 8 வருடம் சிறையில் அடைக்கப்பட்ட பின் விடுதலையாகி இவர் ¨டாலின் மரணத்தைத்தான் தனது விடுதலை எனப் பிரகடனம் செய்தார். முதலில் மொழி பெயர்ப்பைப் பார்ப்போம் .

எவ்வளவு திமிர்த்தனமான முதலாளித்துவ எழுத்து பாட்டாளி வர்க்கம் ஆட்சியை கைப்பற்றி முதலாளித்துவ சுரண்டலை மனித விரோத செயற்பாடாகவும் , அது சட்ட விரோதமாகவும் ஆக்கப்பட்டது. மனிதனை மனிதன் சுரண்டுவது தான் மிக மோசமான ஒடுக்குமுறை. மற்றவன் உழைப்பில் குளிர் காயவும் திண்டு கொழுக்கவும் தடைவிதித்ததை சகித்துக் கொள்ள முடியாத எழுத்தாளர்கள், அதை மீள மீட்க , மனிதாபிமானம் , கருத்துச்சுதந்திரம் , கலைச்சுதந்திரத்தின் பேரால் பல படைப்புக்களை முன்வைத்தனர். அதில் ஒரு வடிவம் தான் மேல் உள்ள சிறு மொழிபெயர்ப்பு உவமைக்கதைகள். .. போன்று பலவகையில் பழைய அமைப்பை மீள மீட்க கனவு கண்டவர்களின் படைப்புக்கள் பல தந்திரங்களைக் கையாண்டனர்.

இங்கு எறும்புகள் ஒரு முதலாளியாகவும், நெருப்பில் எரியும் மரக்குற்றி ஸ்டாலின் காலகட்டம் வெளியில் தனக்கும் மரக்குற்றிக்கும் குருசேவ் காலகட்டமாக சித்தரிக்கப்படுகின்றது. மீள மீள முதலாளிகள் போராடியதையும் அதை மீட்டு எடுப்போம் என சபதம் இட்டதைத்தான் இக்குறிப்பு தெளிவாக்குகின்றது.

மு.புஷ்பராசன் என்ற முதலாளித்துவ எழுத்தாளன் இதை மனித விழுமியத்தின் பெயரிலும், மனித உரிமை பெயரிலும் மீள தமிழுக்கு முன்வைத்துள்ளார். சுரண்டுவதும் , சுரண்டப்படுவதும் மனித உரிமை மீறல் அல்ல. அதை ஒடுக்குவதே மனித உரிமை மீறல் எனக் கூறும் இந்தப் படைப்புக்கள் , பாட்டாளி வர்க்க ஆட்சியில் தடை செய்யப்பட வேண்டும். இதற்காக மட்டும் தான் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் கையாளப்படுகின்றது.

யார் சுரண்ட உரிமை கோருகின்றானோ அவன் மனிதன் அல்ல ஒரு மிருகமே.

ஸ்டாலின் வழங்கிய தண்டனை மிகச் சரியானது என்பதை இப்படைப்ப மிக அழகாக துல்லியமாக காட்டுகின்றது. ஆம் ஸ்டாலின் மரணம் தான் பாட்டாளி வர்க்க ஆட்சி முடிவுக்கு வந்ததை , இந்த ருசிய எழுத்தாளன் தனது விடுதலை என்கின்றான். இது எந்த வர்க்கத்தின் கதை என நாம் சொல்வதை விட அவனின் நோபல் பரிசு மேலும் உறுதியாக்குகின்றது.

நோபல் பரிசு என்பது துரோகத்தனத்துக்கும் சுரண்டலுக்கும் மனித விரோதத்துக்கும் பெரும் பணக்கார சுரண்டல் ஆட்சியாளர்களால் , மதவாதிகளால் , பிரபுகளால் வழங்கப்படும் அத்தாட்சியாகும்.

சுரண்டலைக் கோருவது பாட்டாளிவர்க்க சமூகத்தில் எப்போதும் மனித விரோத செயல் தான். இதைக் கோருவது மனித உரிமையல்ல. இதை எதிர்க்கும் , காப்பாற்றும் எல்லா எழுத்தாளர்களும், குரல்களும் உண்மையில் மனித விரோதிகளின் கூட்டாளிகள். இவர்களை வேரறுப்பது தான் இன்றைய வரலாற்று கடமை.

இனி அடுத்த எழுத்தாளர் ப. வி. சிறிரங்கனின் கரடி விடுகையைப் பார்ப்போம். ' இலங்கையில் தேசிய விடுதலைப் போராட்ட விளைவால் தமிழ்மொழி பற்பல மாற்றங்களோடு வளர்வுறுகிறது வெள்ளிடை மலை. " என எடுத்துக்கூறும் சிறிரங்கன் அந்த வெள்ளிடை மலையைக் கொஞ்சம் எழுதியிருக்கலாம் . தமிழ்மொழி வளர்ச்சியை எங்கே தமிழீழப் போராட்டம் வளர்த்து எடுத்தது. இராணுவதாக்குதல் எல்லாம் தமிழ்மொழி வளர்ச்சியாகி விடுமா ? மொழி வளர்ச்சி என்பது இலங்கையில் தேய்மானமாகி உள்ளது. தமிழ்மொழிக்கல்வி என்பதும் , அதன் மீதான வளர்ச்சி என்பதற்கும் தேவை அடிப்படையான அரசியல் பார்வையாகும்.

இவ் அரசியல் பார்வை ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை உள்ளடக்கிய ஒரு பார்வையில் மட்டும் தான் சாத்தியம் . ஏன் முதலாளித்துவ தேசிய எல்லைக்குள் செய்யக்கூடிய தமிழ் சீர்திருத்தம் கூட இன்றித்தான் இன்று இலங்கைத் தேசிய விடுதலைப் போராட்டம் சீரழிகின்றது.

எல்லாம் சுத்த இராணுவாதக் கண்ணோட்டம். அதுவே போராட்டமாக மாறிய பின் எப்படி தமிழ் வளர முடியும்.