சரிநிகர் 133 இல் (ஒக்-நவம்பர் 1997) சரிநிகரின் முக்கியமானவரும் சரிநிகரின் அரசியலைத் தீர்மானிப்பவருமான நாசமறுப்பான், 'முன்றும் முன்றும் முடிபும்" என்ற கட்டுரையில், இனவாதத்தை மூடி மறைத்து மீளவும் முருங்கை மரத்தில் ஏறும் வேதாளமாக மாறிய விந்தையைப் பார்ப்போம் .

"ஆக மொத்தத்தில் அரசின் திட்டங்கள் புலிகளிடம் பெரிதாக வெற்றி பெறவில்லையென்றே சொல்ல வேண்டும் "

இது ஐனாதிபதிக்கு ஓரளவு புரிந்திருக்கிறது. தனது மதிமந்திரிகளதும், சரத் முனசிங்க போன்ற முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்கும் இராணுவப் பேச்சாளர்களையும் நம்பினால், தனது நிலை அம்போ ஆகிவிடும் என்பது அவருக்கு ஓரளவு தெரிந்திருக்கிறது. இதனால்தான் அவர் பேச்சுவார்த்தை பற்றி எந்த நிபந்தனைகளையும் விதிக்காமல் பூடகமாக அறிவித்திருக்கிறார்.

உண்மையில் இவ்வாறான புரிதல் ஒரு நல்ல சகுனம் தான்.  ஐனாதிபதி இந்த விடயத்தை தீவிரமாக யோசித்து யுத்த நிறுத்தத்துக்கு இறங்குவது பற்றி பேசுவது பயனுள்ளதாக இருக்கும்." என நாசமறுப்பான் மக்களை நாசமாக்க இரண்டரை வருடத்துக்கு முன் சந்திரிகா ஆட்சிக்கு வந்தபோது என்ன எழுதினாரோ, அதையே மீளவும் நாசூக்காக முன்வைத்துள்ளார். இன்று சந்திரிகையின் ஐனநாயகத்தில், முற்போக்கில் கொஞ்சப் பேர், சந்திரிகா தீவிரமாக யோசிக்க உதவி பிழைக்க உதவிய அன்றைய சரிநிகர் கட்டுரைகள் போல், இன்று எஞ்சியோரை சந்திரிகாவின் பின் அணிதிரள, முற்போக்கு சந்திரிகையை ஆதரிக்க மறைமுகமாக கட்டுரை கோருகின்றது. ஏன் நாசமறுப்பானே சிலவேளை சந்திரிகா தீவிரமாக யோசிக்க ஆலோசகராகி விடுவாரோ என்ற ஐயத்தை கட்டுரை விட்டுச் செல்கிறது.

சந்திரிகா என்ற தனிநபர் எப்போதும் நல்லவர்,  அவர் உண்மையானவர், நம்பிக்கையானவர்,  அவர் ஐனநாயகத்தை நேசிப்பவர், அவர் ஓர் இனவாதியல்ல எனப் பலப்பலவாக வித்தைகாட்டி பலரை இனவாதியாக்கி பின் அவர்களே இனவாதத்தை பாதுகாக்க புறப்பட்ட பின், மிகுதிப் பேரையும் அதற்குள் சிதைக்க எண்ணியதன் வெளிப்பாடு தான் நாசமறுப்பானின் சந்திரிகா பற்றிய கற்பனைச் சித்திரம்.

இரத்வத்தை, சரத் முனசிங்க போன்றவர்கள் தான் சந்திரிகாவை இனவாதியாக நடத்துவதாகக் காட்டி, அதை உடைத்து வெளியில் வருவார், வருகிறார், வந்திட்டார் என சினிமாத்தனம் செய்வதும் சுத்த மோசடித்தனமாகும்.  ஓர் அரசு, அதன் அடிப்படை என அனைத்தும் சில அடிப்படை நிபந்தனைகளைக் கொண்டது.  இந்த அரசு என்பது ஏதோ ஒரு வர்க்கத்திற்கு கருவியாகவே செயல்படுகின்றது.  செயல்பட முடிகின்றது. ஒருக்காலும் இதற்கு வெளியில் எந்த தனிநபரோ, குழுவோ செயல்பட முடியாது.

எந்த வர்க்கத்தை பிரதிநிதிப்படுத்துகின்றனரோ அதற்கு மட்டுமே தலைமை தாங்க முடியும். இங்கு அரசு என்பது ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியாகத்தான் எப்போதும் இருக்க முடியும். யார் தலைகீழாக நின்றாலும் என்ன தான் செய்தாலும் சரி தனது வர்க்கத்துக்கு வெளியில் ஒருக்காலும் சேவை செய்ய முடியாது.  சிலவேளை நாய் வாலைக்கூட நிமிர்த்தி விட முடியும். ஆனால் ஒருக்காலும் அரசு வர்க்கத்துக்கு வெளியில் இயங்க முடியாது.

இலங்கை அரசு தரகு முதலாளித்துவ அரை நிலப்பிரபுத்துவத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசாக உள்ளது. இவ்வரசு ஏகாதிபத்தியத்தை திருப்தி செய்யும் அரசாக உள்ளது. இந்த நிலையில் இதை செம்மையாக பிரதி செய்ய இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் அச்சில் தனது ஆட்சி அமைப்பை, அரசு வடிவத்தை கொண்டுள்ளது.

இந்த அரசு வடிவம் மாறாத வரை, இந்த என்றென்றைக்கும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு தான் உயிர் வாழ முடியும். இது இலங்கையின் இன்றைய நாளைய யதார்த்த நிலை. இந்த அரசியல் அடிப்படையை யார் பார்க்க மறுத்து கைவிட்டு செல்ல முனைகின்றனரோ, அவர்கள் உண்மையில் மறைமுகமாகவேனும் இனவாதத்துக்கு உதவுபவர்களாகவே இருக்கின்றனர். இருப்பர்.

பாட்டாளி வர்க்கம் ஆட்சி அமைக்கும்  போது மட்டும் தான் உண்மையில் இனவாதம் கைவிடப்படுவது மட்டுமன்றி தொடர்ச்சியாக இனவாதத்துக்கு எதிராகப் போரிடும். இன்றைய ஏகாதிபத்திய சகாப்தத்தில் இலங்கை போன்ற நாடுகளில் முதலாளித்துவ புரட்சி நடக்க முடியாது என்பதால், இனவாதம், மற்றும் சமுதாயப் பிளவுகளை முன்வைத்துத்தான் அரசு நீடிக்க முடியும்.

இந்த நிலையில் எப்படி சந்திரிகா, பீரிசு, கதிர்காமர் போன்றோர் இனவாதத்தைக் கைவிட்டு வருவார்?

சிலவேளைகளில் மூடி மறைத்த இனவாதம் மூலம் அற்ப தீர்வுகளை முன் வைக்கலாம். ஏனெனில் போராட்டங்கள், எழுச்சிகளை தடுக்க அற்ப சலுகைகளை வீசி எறிந்து போராட்டத்தை விலைக்கு வாங்குவதன் மூலம் இனவாதததை குறைத்தோ அல்லது இல்லாது போன்றோ நடிக்க முயலலாம். ஆனால் இனவாதம் சமுதாயத்தில் அடி ஆழத்தில் கட்டியமைக்கப்பட்டபடி, அதன் அரசு வடிவம் நீடிக்கும் வரை இனவாதம் ஒடுக்குமுறை சமுதாயத்தில் இருக்கும் நீடிக்கும்.

இன்று ஓர் இனவாத கட்சியை பிரதிசெய்யும் ஒரு பச்சை இனவாதி பாசிட்டான சந்திரிகா ஒரு மோசமான நடிகையும் கூட. இந்தக் கொலை வெறி பிடித்த சந்திரிகா இனவாதத்தை கைவிட்டு திருந்தி விழித்துக் கொண்டு  மக்களை வழிகாட்ட முனைகின்றார் எனக் காட்டுவது கபடம் நிறைந்த மோசடியாகும்.

நாசமறுப்பான் போன்றவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை விட மக்கள் நாளாந்தம் சொந்த அநுபவத்தில் "விடிவெள்ளிகளின்"  பின்னுள்ள ஏகாதிபத்திய சார்பு பச்சை இனவாதத்தை இனம் கண்டு கொள்கின்றனர். இவர்களை நாசமறுக்கவோ என்னவோ தான் தனது பெயரைக் கூட நாசமறுப்பானாக்கி கொண்டே இப்படி எழுத முடிகிறது. வரலாறு மக்களினதே ஒழிய, எதிரிகளை மூடி மறைப்பவர்களதோ அல்லது எதிரிகளின் தயவில் பிழைப்பவர்களினதோ அல்ல.