""அயோத்திராமன் இந்த இடத்தில்தான் அவதரித்தான். இதுவே இந்துக்களின் நம்பிக்கை!'' என்ற ஒரு பொய்யைச் சொல்லி பாபர் மசூதியை இடித்து அழித்த பிறகு தோண்டிப் பார்க்கவும் ஏற்பாடு செய்தது பாரதிய ஜனதா ஆர்.எஸ்.எஸ். கும்பல்; ஆனால், பாராளுமன்ற அரசியலைச் செய்வதற்காக ""சட்டம் என்ன சொல்கிறதோ அதை ஏற்போம்'' என்று இன்னொரு பொய்யை மக்கள் முன்னால் வீசி நாடகமும் ஆடியது.
அந்த அயோக்கியனுக்காவது "சட்டத்தின் முன் ஆப்பசைத்த குரங்காக மாட்டிக் கொண்டவன்' என்ற அடையாளம் உண்டு. ஆனால் "கும்பகோண மடம்' என்றொரு கேடுகெட்ட திருட்டுக் கும்பல் இருக்கிறதே அதற்கொரு ஒழுங்கான முகவரி கிடையாது. அது நிறுவப்பட்டு சுமார் 160 ஆண்டுகள் இருக்கலாம்; தான்தான் காஞ்சிமடம், ஆதிசங்கரர் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் தனக்கே தனக்கென்று (ஸ்வயம் மடம், மத்தியமடம்) அந்த மடத்தைக் கட்டியதாக ஒரு புளுகை அவிழ்த்துவிட்டு (இன்று ஜெயேந்திரரின் பிணை விண்ணப்பம் வரை) திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது. ஆதிசங்கரரின் மற்ற நான்கு மடங்களின் கண் முன்னாலேயே இதைச் சொல்வது மட்டுமல்லாமல், இன்றுவரை அவை அனைத்துமே தனக்குக் கீழ் அடங்கிய கிளை மடங்கள் என்று கம்பீரமாக, ஒய்யாரமாகப் பிதற்றிக் கொண்டும் இருக்கிறது.
இந்த வேடதாரியைப் பார்த்த பா.ஜ.க.வே கொஞ்சம் மிரண்டு போனது; ""ஒரு 160 வருசத்தை 2500 வருசமாக்கி என்ன வித்தை காட்டுகிறானடா இந்த ஜெகஜாலக் கில்லாடி'' என்று வியந்து காஞ்சி மடத்தானிடம் வந்து சரணடைந்து விழுந்து விட்டது.
அந்தப் பொய்கள், புரட்டுக்கள் பற்றிப் பல நூல்கள் வந்துவிட்டன. திராவிடர் கழகத்திலிருந்து கி. வீரமணி எழுதிய "சங்கராச்சாரி யார்?', அருணன் எழுதிய "சங்கரமடத்தின் உண்மை வரலாறு' போன்றவை குறிப்பிடப்பட வேண்டியவை. அவை முக்கியமாக வைணவ பக்தர்களின் நூல்களை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டவை. இவை தவிர, சமஸ்கிருத அறிஞர்களான இறைநம்பிக்கை கொண்ட சைவப் பார்ப்பனர்களிடமிருந்தே பல நூல்கள் வந்துள்ளன. அவற்றை "சிருங்கேரி சங்கர மடத்தின் அவதூறு' என்று ஓரங்கட்டி வைத்தது காஞ்சிமடம் அதாவது ஒரிஜினல் கும்பகோணம் மடம். ஆனால் அவர்கள் சிருங்கேரி மட ஆதரவாளர்கள் அல்ல. ஆதிசங்கரர் மீது பக்தி கொண்ட பொதுவான நபர்கள்தான். அந்த நூல்கள்: முதலில் 1963இல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு பிறகு தமிழ் ஆங்கிலம் என்று இரு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட முடிகொண்ட வெங்கடராம சாஸ்திரி என்பவரின் "காமகோடி சதகோடி' என்ற நூலும், "ஸ்ரீ கும்பகோணம் மடம் அதன் உண்மை' (1965) ங்பாகம்1: ஆர். கிருஷ்ணசாமி (அய்யர்); பாகம் 2: கே.ஆர். வெங்கட்ராமன்சி என்ற நூலும் ஆகும். இரண்டுமே காஞ்சி மடத்தின் பொய்களைக் கண்டித்து ஏராளமான ஆதாரங்களுடன் எழுதப்பட்டவை.
எல்லா விமரிசனங்களோடும் அவர்கள் முன்வைத்த வாசகர்களுக்கான வேண்டுகோள் மிக மிக முக்கியமானது: ""கும்பகோணம் மடத் தில்லுமுல்லுக்காரர்கள் புராணங்கள், கிரந்தங்கள் (நூல்கள்) போன்றவற்றை ஆதாரமாக வைக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை, அவை சொல்லாத விஷயங்களைக் காட்டி அவைகளே மூல மேற்கோள்கள் என்று பொய் சொல்லி வாதாடுவதையே நாங்கள் ஏற்க முடியாது.'' அந்த நூலாசிரியர்கள் தங்கள் முன்னுரையில் மேலும் சொன்ன முக்கியச் செய்திகள்: ஜெர்மனிய கோயபல்சையும் பொய்யில் விஞ்சுபவர்கள் கும்பகோணம் மடத்தார்; அவர்கள் பழைய ஆவணங்களை, சாகித்தியங்களைத் திருத்திப் புரட்டிவிட்டார்கள்; இடைச்செருகல் செய்தார்கள்; நவீன கால ஆய்வாளர்களையும் தங்கள் கும்பலில் சேர்த்தார்கள்; உதிரிகளாகத் திரியும் தனிப்பட்ட பத்திரிக்கையாளர்கள் புரோகிதர்கள் பண்டிதர்களுக்கு லஞ்சப் பணம் கொடுத்து ஊழல்படுத்திப் பிரச்சாரக் கருவிகளாக மாற்றினார்கள்; இலக்கிய, சமூக, மத, அரசியல், வியாபார, தொழில்துறை விற்பன்னர்களை ஊழல்படுத்தி மடத்தின் சீடர்களாக்கினார்கள்.
இத்தனைக் "கல்யாண குணங்களை'யும் சாரமாக்கிச் சொல்ல வேண்டுமானால் உலகில் உள்ள ஒரே ஒரு சொல் பிற்கால லத்தீன் மொழியில்தான் இருக்கிறது. அது "கிரிமினாலிஸ்' என்பது. ஆங்கிலத்தில் அதுவே "கிரிமினல்'. இதைத்தான் ஜெயேந்திரருக்கு எதிராக அரசு வழக்குரைஞர் சொன்னார். இதில் சிறு திருத்தம் அந்த ஆசாமி ஏதோ ஒரு கிரிமினல் அல்ல; அது பார்ப்பனக் "கிரிமினல் பரம்பரை'.
கும்பகோணம் மடம் அதாவது "காஞ்சிமடம்' என்று சொல்லப்படும் சங்கரமடம் 2500 ஆண்டுகள் பழமையானது என்று மறுபடி மறுபடி சொல்லப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்த ஒரு தத்துவாசிரியர் புத்தனே. அவருக்கும் முன்னால் சங்கரனைக் கொண்டு வைக்கின்ற அசட்டுத் துணிச்சல் காஞ்சி மடத்துக்கே உண்டு. எந்த ஆய்வாளருமே இப்படிச் சொல்லவில்லை; ஆதிசங்கரர் காலம் கி.பி. 800 என்று டி.டி.கோசாம்பி, அம்பேத்கர் போன்றோர் திட்டவட்டமாகச் சொல்கிறார்கள். "காஞ்சிமடம்' மட்டுமே ஆதிசங்கரர் காலத்தை "கி.மு. 508 கி.மு. 476' என்று முன் தள்ளி வைக்கிறது.
இவர்களது பொய்கள் அத்தனையும் ஆதிசங்கரன் அவதாரம் என்ற பொய்யின் மீதே கட்டப்பட்டன. ""பூலோகத்தில் அனுட்டானம் (மக்கள் வாழ்க்கை முறை) மிகவும் கெட்டிருப்பதாக பிரும்மாவிடம் நாரதர் சொல்லி, அவர் மகேசுவரரிடம் சொல்லி, தர்மத்தைக் காக்க அவரே சங்கர அவதாரம் எடுக்கிறார்!'' (ஆனந்தானந்த கிரீய சங்கர விஜயம் என்ற கதை நூலில் இருந்து ஆர். கிருஷ்ணசாமி தனது நூலில் காட்டும் மேற்கோள்) இதுவே பொய்களுக்கான ஆணிவேர். இப்புராணம் கும்பகோண மடத்தின் கற்பனைச் சரக்கு.
பல ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஆதிசங்கரரின் தத்துவம் சமண பௌத்த மதங்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டதே; அதன் வாதங்கள் பௌத்த தத்துவத்திலிருந்து திருடப்பட்டவை. அவரது வாதுகளும் பிற மதத்தவரை அழிப்பதற்காக, குறிப்பாக, குமரிலபட்டர் இறப்புக்கும், மண்டனமிஸ்ரர் அத்வைத மதத்துக்கு மாறுவதற்குச் செய்த மிரட்டல்களும் அறிவு நேர்மை அற்றவை. ஆதிசங்கரர் மடங்கள் அமைத்தது வேத மதத்தைக் கட்டிக் காக்கவும், எந்த ஒரு ஆட்சி வந்தாலும் வருணாசிரம தர்மம் சரிந்து விழாமல் தூக்கி நிறுத்துவதற்காகவும்தான். பெரிய நடு சின்ன சங்கரன்கள் அதே கொள்கையுடையவர்களே. இது நாடறிந்த விசயம்.
ஆதிசங்கரர் அமைத்ததாக 4 மடங்கள் உண்டு. வடக்கே பத்ரிநாத், கிழக்கே பூரி, மேற்கே துவாரகை, தெற்கே சிருங்கேரி. இந்த 4 மடங்களுமே ஆதிசங்கரர் கி.பி. 800இல் கேரளத்தில் உள்ள காலடியில் பிறந்தார் என்கின்றன; அதுபோலவே, வடக்கே கேதார்நாத்தில் இயற்கையோடு கரைந்து மறைந்துவிட்டார் (அந்தர்தானம்) என்கின்றன. ஆனால் இதற்கு நேர்மாறாக, ஆரம்பத்தில் ஆதிசங்கரர் சிதம்பரத்தில் பிறந்தார் என்று சொல்லிவந்த கும்பகோணம் மடம் பிறகு பிறப்பு காலடி என்ற ஊரில் என்று மாற்றிக் கொண்டது. ஆனால் அவர் அந்தர்தானம் ஆனது காஞ்சி காமாட்சி கோயிலில் என்று சொல்ல ஆரம்பித்து இன்றுவரை விடாப்படியாக அப்படியே பொய் சொல்லி வருகிறது.
காஞ்சியில் ஆதிசங்கரர் நிறுவியது மத்தியமடமாம்; மற்றவை கிளை மடங்களாம். காஞ்சி மடத்தில்தான் ஆதிசங்கரர் எல்லாம் அறிந்த ஞானநிலையை அடைந்தாராம். அதன் பெயர் சர்வக்ஞ பீடம். மற்ற நான்கு மடங்களும் அந்தப் பொய்களை மறுத்தன, இன்றுவரை மறுக்கின்றன. காஞ்சி "மகாப் பெரியவர்' காலத்திலேயே வடக்கே காசியில் இருந்த வேதபண்டிதர்கள் அவரை மறுத்துத் தீர்மானம் எழுதி அறிக்கை விட்டார்கள். பதிலுக்கு "மகாப் பெரியவாள்' காசு கொடுத்து காசி மற்றும் கல்கத்தாவிலிருந்து ஆள்பிடித்து எதிர் அறிக்கையும் விடச் செய்தார். காஞ்சிமடம் காட்டுகின்ற அத்தனைப் பழைய ஆதாரங்களுமே போலிகள். "மடாம்நாய ஸேது' (மட வரலாறு) (நான்கு மடங்களுக்கும் பொதுவான மடவரலாறு இருக்கும்போது காஞ்சிமடம் தனக்கேயான ஒரு வரலாற்றை உருவாக்கிக் கொண்டது.), "குருரத்ன மாலிகா' (குரு வரலாறு), "மாதவீய சங்கர விஜயம்' என்று நான்கு மடங்களாலும் மேற்கோள் காட்டப்படும் வரலாற்றிலிருந்து திருடிச் செய்த "வியாஸாசலீயம்' மற்றும் "ஆனந்தானந்தகிரிய சங்கர விஜயம்' என்று அனைத்துமே புளுகு மூட்டை என்று கிருஷ்ணசாமி (அய்யர்) தனது நூலில் சொல்கிறார்.
எல்லாப் புரட்டுக்களையும் அவர்கள் ஒரே நாளில் செய்யவில்லை. கும்பகோணம் மடத்தில் இருந்த சங்கராச்சாரிகள் அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருந்தார்கள். அதனால்தான் திருட்டைக் கண்டு பிடித்தார்கள் பல பண்டிதர்கள்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால், "பெரிவாளு'ம் அவருக்கு முந்தைய ஆசாரியர்களும் தில்லுமுல்லுக்குப் பேர் போனவர்கள்; இவர்கள் அத்தனைப் பேரும் கன்னட ஸ்மார்த்தப் பார்ப்பனப் பிரிவினர். "மகாப் பெரியவாளும்' கன்னட ஸ்மார்த்தரே. எனவே ஒரு பிரிவு ஆதிக்கத்தைத் திட்டமிட்டுப் பரம்பரையாக்கி, சிருங்கேரி மடத்திலிருந்து பிரித்து விட்டார்கள். அப்புறம் நடந்த கதை உங்களுக்கே தெரியும்.
-------
புதுமடம் என்பதால் புதுப் புராணங்கள், புதுக்கதைகள் விளைந்தன. ஏற்கெனவே இருந்த நூல்களைத் திருடி மாற்றி வியாஸாசலீயம், ஆனந்தானந்தகிரி சங்கர விஜயம் போன்ற கிரந்தங்களை (நூல்களை) உற்பத்தி செய்து கொண்டார்கள். மேலும் "சிவரஹஸ்யம்', "மார்க்கண்டேய ஸம்ஹிதை' என்ற புராணங்களையும் தயாரித்தார்கள். இவை கும்பகோணம் மடப் பிறாமணாள் கபே தயாரிப்புக்கள்.
சுருக்கமாக இதன் வரலாறு என்ன? 1821இல் கும்பகோணம் மடம் தொடங்கப்பட்டது. இது சிருங்கேரியின் கிளை மடம். பிறகு தில்லுமுல்லுகள். 1842இல் காஞ்சி காமாட்சி கோயில் கும்பாபிஷேகம் நடத்த பிரிட்டிஷாரிடம் "அனுமதி' வாங்கி இந்த சர்க்கஸ் கூடாரம் (யானை, குதிரை, ஒட்டகம், பல்லக்கு சகிதமாக) காஞ்சி வந்தது. அதற்குமுன் காமாட்சிக்கே கூட அங்கே கோயில் இல்லை. அந்தக் கோயில் தாய்த்தெய்வ வழிபாடு நடந்த இடம். அந்த இடத்தைச் சுற்றி சமணப் பள்ளிகள், புத்தர் கோயில்கள் இருந்தன; பிறகு அப்புறப்படுத்தப்பட்டன. அப்படி மாற்றப்பட்ட ஒரு கோயிலில்தான் காமாட்சிக்கு இடம் உருவாக்கி காமகோடி பீடமும் கண்டார்கள் சங்கரமடத்தார். அங்கிருந்து 1/4 மைல் (சுமார் 1/2 கி.மீ.) தொலைவில் தற்போது அறியப்படும் காஞ்சி சங்கர மடத்தையும் உருவாக்கிக் கொண்டார்கள்.
தி.க.விலிருந்து தி.மு.க. வந்தது; தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க., ம.தி.மு.க. வந்தது. ஆனால் அ.தி.மு.க. இன்று "பெரியார் தோற்றுவித்த மையக்கட்சியே அ.தி.மு.க.தான்' என்று சொன்னால் எப்படி இருக்கும்? அதுபோலத்தான் கும்பகோண மடம் காஞ்சிமடமாகி, "நாங்களே ஆதிசங்கரர் தோற்றுவித்த மையமடம்' என்று சொல்லிக் கொள்கிறது. தவிர, 2500 ஆண்டு பாரம்பரியம் என்று ஒரு பொய் சொன்னதால், அதை மறைக்க 70 சங்கராச்சாரிகளைப் பொய்யாகப் பட்டியல் போட்டது காஞ்சி மடம். மற்ற எல்லா சங்கர மடங்களுக்குமே வயது சுமார் 1200 வருடங்கள்தான் அவர்கள் இதை மறைப்பதில்லை. கும்பகோண மடத்துக்கே வயது சுமார் 183 தான். காஞ்சி மடத்துக்கு வயது சுமார் 150 வருடங்கள்தான்.
காஞ்சி (ஒரிஜினல் கும்பகோணம்) மடம் உற்பத்தி செய்த "2500 ஆண்டு பாரம்பரியம்' என்ற புராணப் புளுகுகளுக்கு எதிராக முக்கியமான சில கேள்விகளை வைத்தாலே போதும் உண்மை துலங்கி விடும்:
1. 2000 ஆண்டுப் பழமை வாய்ந்த தொல்காப்பியத்தில் சங்கர தத்துவம், காஞ்சி சங்கரமடம் பற்றிய சான்றுகள் எதுவுமே இல்லை. ஏன்?
2. சுமார் 250 (கி.பி.) என்று சொல்லப்படும் கடைச்சங்க இலக்கியத்தில் கூட காஞ்சி மடச் சான்று இல்லை. 19ஆம் நூற்றாண்டுக்கு முந்திய எந்தத் தமிழ் இலக்கியங்களிலும் காஞ்சிமடச் சான்றுகள் எதுவுமில்லை; ஏன்?
3. 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "மாதவீய சங்கர விஜயம்' நூலில் காஞ்சி மடப் பரம்பரை இல்லை, ஏன்?
4. கி.பி. 200க்கு முன் காஞ்சியில் புத்த மையம் அமைக்கப்பட்டது குறித்துப் புத்தமதச் சான்றாதாரங்கள் உள்ளன. அதேபோல சீனப் பயணியும், அறிஞரும், புத்தமத ஆய்வாளருமான யுவான் சுவாங் காஞ்சியைச் சுற்றியுள்ள நாட்டை "திராவிடம்' என்று குறிப்பிடுகிறார். அங்கே காஞ்சிமடம், சங்கர தத்துவம் பற்றி எழுதவில்லையே, ஏன்?
5. 11,12ஆம் நூற்றாண்டில் பிறந்த விசிஷ்டாத்வைதம் பரப்பிய இராமானுசர் காஞ்சி மடம் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. காஞ்சிதான் சர்வக்ஞ பீடம் என்பர் காஞ்சி மடத்தார். எனில், இராமானுசர் தன் எதிரிமத, சித்தாந்தங்களுக்கு எதிரான போரை காஞ்சி சர்வக்ஞ பீடத்திலிருந்து (சர்வக்ஞ = எல்லாம் உணர்ந்தவர் என்று அங்கீரிக்கப்பட்ட) தொடங்கவில்லையே ஏன்?
அதேபோல, தனது பாஷ்யத்திற்கு (விளக்க உரை) போதாயனர் விருத்தியைத் (இலக்கண விளக்கம்) தேடி இராமானுசர் காச்மீரம் போனார். காஞ்சி சர்வக்ஞ பீடமானால், இவர் ஏன் நூலைத் தேடி காச்மீருக்கு ஓடவேண்டும்? மடமிருந்ததாகச் சொல்லப்பட்ட பெரியகாஞ்சி (சிவகாஞ்சி)யிலிருந்து ஒரே நாளில் சின்னக் காஞ்சிக்கு (விஷ்ணு காஞ்சி) எடுத்துச் சென்றிருக்கலாமே?
6. 1791இல் திப்பு சுல்தான் காஞ்சி வந்தார். தந்தை விட்டுச் சென்ற காஞ்சிக் கோயில் திருப்பணிகளுக்கு மறு ஏற்பாடு செய்து மேற்பார்வை வேலையை சிருங்கேரி சங்கர மடத்திடம் ஒப்படைத்தார்; ரதவிழாவும் நடத்தினார். (ஆதாரம்: ஜி.எஸ். சர்தேசாய், மராத்தியர்களின் புதிய வரலாறு, தொகுப்பு 3, பக். 190) அப்போது காஞ்சி சங்கர மடம் மத்தியமடமாக பெரிய மடமாக இருந்திருந்தால், உள்ளூரிலேயே பொறுப்பை ஒப்படைத்திருப்பாரே?
***
2500 ஆண்டுப் பாரம்பரியம் என்ற பிரும்மாண்டமான கட்டுக்கதையை உருவாக்கிய சாமர்த்தியம் மட்டுமல்ல; பின்னாளில் மடச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக 1940ஆம் ஆண்டுகளில் இந்திய அரசியல் சாசனம் எழுதப்படும்போதே 26வது விதியை வெறுமனே "மதச் சுதந்திரம்' என்றிருந்ததை மாற்றுவதற்காக, பிரிட்டிஷ் அதிகாரிகளின் குழுக்கள், நேரு, பட்டேல், சாசன உறுப்பினர்களில் இருந்த பார்ப்பனர்கள் என்று எல்லோரையும் சரிக்கட்டி ""ஒவ்வொரு மதப்பிரிவு அல்லது எந்த ஒரு வகைப் பிரிவைச் சேர்ந்ததாயினும் அவற்றுக்கு உரிமை / சுதந்திரம் உண்டு'' என்று, "மகாப்பெரியவாள்' பருண்மையாக்கினார், "உலகம் மாயைதானே' என்று சும்மா இருந்துவிடவில்லை.
பின்னாளில் "அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்று தமிழக அரசு சட்டம் கொண்டு வர மத்திய அரசிடம் அங்கீகாரம் கோரியபோது அது மறுக்கப்பட்டது. காரணம், விளக்கமாய் அமைந்த அந்த 26வது விதிதான். காஞ்சி மடத்தின் கிரிமினல் மூளை என்பது இதுதான்.
இன்னொரு விதத்திலும் ஆதி சங்கரனுக்கு ஏற்ற சீடர்களே இவர்கள். ""கடவுளின் அவதார பீடத்திலேயே இத்தனைப் பெரிய அவக்கேடா? ஒரு சாமி ஜெயிலுக்குப் போவதா? என்று கேட்கிறார்களே?'' என்று கேட்டபோது, ஜெயேந்திர சுப்பிரமணி சிறையிலிருந்தே விளக்கம் கொடுத்தார். ""ஸ்ரீராம பிரானுக்கே மானுட அவதாரம் எடுத்தபோது முன் கருமவினை தொடர்ந்ததல்லவா, அதுபோல நானும் அனுபவிக்கிறேன்'' என்றார். ஆதிசங்கரருக்கு கடைசி காலத்தில் ஆசனவாய் வியாதி வந்ததாம். இதைச் சொல்லி, ""கடவுள் அவதாரமான ஆதிசங்கரருக்கே ஆசனவாய் வியாதியா?'' என்று அந்தக் காலத்திலேயே ஒரு விவாதம் எழும்பியதாம். அதற்கு அந்நாளைய சங்கராச்சாரிகள் ஜெயேந்திரர் போன்றுதான் விளக்கம் கொடுத்தார்களாம்.
திருட்டுச் செய்யலாம், கொலை செய்யலாம் அதற்கும் மாயாவாத விளக்கம் உண்டு; அடுத்தவர் மனைவியைப் பெண்டாளலாம் அதற்கும் திராவிடச் சிசு (!) ஞானசம்பந்தன் சமணப் பெண்களைக் கற்பழிக்கத் திருவுளம் கேட்டானே, அதுபோல விளக்கம் சொல்லக் கூடும்.
இப்போது சொல்லுங்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இந்தக் காஞ்சி சங்கரமடத்தைத் தேடி ஓடிவந்தது பொருத்தம்தானே? அவர்களின் பாணியிலேயே திருப்பிப் போடுவதானால், காஞ்சிமடம் 2500 ஆண்டுதானா என்பதற்கான சான்று தேடுவதற்காகத் தூலமாகவே அந்த இடத்தையே இடித்துப் பார்த்து விட்டால் என்ன?
புதிய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்குமா? அல்லது, புதிய கிரிமினல் கேஸ்களுக்கான ஆதாரங்களாக ஏதாவது சவங்கள், கிவங்கள் கிடைக்குமா?
எப்படி இருந்தாலும் பலன் கிடைக்கும்; எது நடந்தாலும் நல்லதாகத்தானே நடக்கும்?
கடம்பன்