Language Selection

சமர் - 24 : 10 -1998
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

குப்பையைக்கிண்டி பொறுக்கி வாழ நிர்ப்பந்திக்கும் நவநாகரிக உலகில், மிருகத்திலும் கேவலமாக எலும்புக் கூட்டு மனிதனாக வாழ நிர்ப்பந்தப்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த "ஐனநாயக சமாதான" உலகம். இங்கு  நூற்றியிருபது கோடி மக்கள் அடுத்த நேர உணவுக்கு வழி தெரியாது பரிதவிக்கும் படுமோசமான வறுமையில் வாடுகின்றனர். ஐம்பது கோடி  மக்கள் ஒரு வாய் குடிக்க தண்ணீர் இன்றி   பரிதவிக்கின்றனர். இருபத்திஐந்து கோடி பச்சிளம் பாலகர்கள் உடல் உழைப்பிலும், விபச்சாரமும் செய்யவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதே தொகை கொண்ட  மக்கள் சாதியத்தால் ஒடுக்கப்பட்டு தொட்டாலே தீட்டு எனக் கூறி சேரியில் தள்ளி கையேந்த வைக்கப்பட்டுள்ளனர். இப்படி எங்கும் எல்லாம் உலகமே மனிதனின் துன்பங்களினதும் துயரங்களினதும் நரகமாய் சாக்கடையாய் உள்ளது.

 

 

இதே நேரம் இலங்கையில் இனவாத யுத்தம் மக்களை மேலும் மேலும் துன்பத்துக்குள்ளும், துயரத்துக்குள்ளும் நகர்த்துகின்றது. தமிழ் பேசும் மக்களை இலங்கையில் நாயிலும் கீழாக வாழ வைத்துள்ள இனவாதிகள், அவர்களைக் கொன்றும், பெண்களை பாலியல் பலாக்காரத்துக்கு உட்படுத்தியும், சிறார்களை குண்டு மழைக்குள் மிரட்டி நலிவுற்ற எதிர்கால தமிழ் சமூகத்தை உருவாக்கவும், தமிழ் பேசும் மக்களின் வாழ்வை அழித்தும் சூறையாடியும், சொந்த மண்ணை கவர்ந்தும், பயங்கரவாதிகளாக காட்டியும், கைது செய்தும், சித்திரவதை செய்தும் முடிவற்ற எல்லையில்லாத அரக்கத் தனத்தில் ஈடுபட்டுள்ளது.

மறுபுறம் புலிகள் தமிழ்பேசும் மக்களின் ஐனநாயகத்தை, சுதந்திரத்தை மறுத்து, நியாயமிக்க போராட்டத்தை சுத்த இராணுவவாதத்துக்குள் நகர்த்தி, இன்று  போராட்டத்தை மீளமீள  தொடர்ச்சியான முட்டுக்கட்டைக்குள் இட்டுச் செல்கின்றனர்.

இலங்கை இன்று ஏகாதிபத்திய நுகத்தடிக்குள் மறுகாலனியாக்க வேகம் பெற்றுள்ளது. மக்கள் வாழ வழிதெரியாது முழிபிதுங்கி நிற்க்கின்றனர். கடன்வாங்க நிர்ப்பந்திக்கும் ஏகாதிபத்தியம், மானியங்களை நிறுத்தவும், ஏகாதிபத்தியத்துக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யவும் உத்தரவிடுகின்றது. வரவுசெலவை ஏகாதிபத்தியமே தயாரிக்கவும், யுத்தத்தை நடத்தவும், மக்களை ஒட்ட உறுஞ்சவும் என நாட்டின் உயிர் மூச்சை நெரிப்பதில் தமது கைக்கூலிகளை வைத்துள்ளது. தமிழ்பேசும் மக்களின் ஐனநாயக உரிமையை பறிக்கக் கூட இன்று ஏகாதிபத்தியம் வந்துவிட்டது.

பெண்கள் அதே ஆணாதிக்கப் பிடியில் தொடரும் நிலை. பற்பல வேஷங்கள், கோட்பாடுகள் வந்து சென்றன செல்கின்றன வருகின்றன. பெண்கள் ஆணாதிக்க அதே சுரண்டல்.

சாதியம் தனது போராட்ட வீறு இழந்து அதே சேரியில் முடங்கிக்கிடக்கின்றது. சேரி பெயரில் "காலனி" என பெயர்மாற்றம் கண்டதுதான் மிச்சம். சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் புதிய சாதிய கோசங்களால் மீண்டும் ஒடுக்கப்படும் கொடூர நிலை.  மாற்றம் எல்லாம் வசதியாக சிலர் சுரண்டிவாழக் கோருவதற்க்கு அப்பால் நகரவில்லை.

இப்படி மக்களின் துன்பங்கள், துயரங்கள் தொடர, இவைகளை கேலி பேசியபடி அண்மைக் காலமாக மக்களின் போராட்ட உணர்வை, தியாகத்தை அரசியல் அற்ற புலியெதிர்ப்பு  கோசத்தின் பின்னால், முற்போக்கு வேஷசத்தில் கொச்சைப்படுத்தி கருத்துச் சுதந்திரத்தின் பெயரில் வெளிவரத் தொடங்கிய வெளியீடுகள், மக்களை வழிகாட்ட எந்த முயற்சிகளுமின்றி, அவர்களுக்கு எதிராக கூடிக்குடித்து கும்மாள வம்புகளுக்குள் கூத்தடிப்பாக பலதளத்தில் களம் கண்டுள்ளது.

முற்போக்கு வேடமிட புலியெதிர்ப்பு கோசம் மட்டும் போதுமானது என நினைக்கின்றனர் பலர். புலியெதிர்ப்பு கோசத்தின் பின் மக்கள் விரோத அரசியலை அரங்கேற்றுகின்றனர் சிலர். சிலர் அரசுக்காகவே சேவகம் செய்யும் நாய்களாக  தமது துரோகத்தை அரங்கேற்றுகின்றனர். சிலர் கடைந்தெடுத்த வியாபாரிகளாக அரசியலைப் பயன் படுத்தி மக்களை வறுகத் தொடங்கியுள்ளனர். இன்னுமொரு கூட்டம் இன்று நடைபெறும் போராட்டத்தை கொச்சைப்படுத்திய படி தமது வக்கிரங்களை வெளியிடுகின்றனர். இன்று ஆயிரம் ஆயிரம் மக்கள் எம் நாட்டில் தமது உயிரை, உடைமைகளை, வாழ்வை இழந்து நாதியற்ற மக்களாக உள்ள நிலையில், அவைகள் எல்லாம் இவர்களுக்கு   பொழுதுபோக்கு விடையமாக, மக்களின் தியாகங்களை தமது அரிப்புகளுக்கு தீனி போடும் விடையங்களாக மாற்றிவிட எந்த வெட்கமுமின்றி வெளிக்கிளம்பியுள்ளனர்.

இன்று சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்கு எதிராக   போராடி ஆயிரம் ஆயிரமாக இறந்துபோகும்   போராளிகளின் தியாகங்களை, போராட்டயுணர்வுகளை புலியெதிர்ப்பு கோசத்தின் ஊடாக கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தி சேறுவீசும் இவர்கள் மக்களுக்காக என்ன செய்கின்றனர் எனக் கேட்டால் போதைத்தன கலாச்சார சீரழிவைத்தான் "கட்டுடைத்த" புரட்சியாக முன்வைக்கின்றனர்.

போராட்டத்தின் பின் உள்ள தியாகங்கள், போராட்ட உணர்வுகள் கொச்சைப்படுத்த முடியாத மகத்தானவை. இதில் உள்ள விமர்சனம் புலிகளின் அரசியல் தான். போராட்டத்தின் நியாயமான பக்கங்கள், அதற்க்கு போராட வேண்டிய உணர்வுகள், அதற்கான தியாகங்கள் புலிகள் என்பதால் கொச்சைப்படுத்தி வந்த இந்த வம்பளக்கும் பிரிவு, மாற்றாக எதையும் வைக்க முடியாத நிலையில் முதலாளித்துவ சீரழிவுக்குள் சிக்குண்டு அலைகின்றனர்.

இன்று இலங்கையில் இனவாத யுத்தம் மக்களை சொல்லொண்ணர துன்பத்திலும், துயரத்திலும், அவ் வாழ்வை வார்த்தைகளால் எழுதமுடியாத வேதனைகளுக்குள் இட்டுச் சென்றுள்ளது. இவற்றைப்பற்றியோ, ஆணாதிக்க கொடுமைகளையோ, சாதிய கொடூரங்களையோ.....  எந்தவிதமான சமூக அக்கறையுமின்றி, புலம் பெயர் நாட்டில் சந்திக்கின்ற முடிவற்ற நெருக்கடிகளைப் பற்றி எந்த உணர்ச்சிகளுமின்றி இவைகளை புலியெதிர்ப்பின் பின் மூட்டை கட்டி வைத்துக் கொண்டு, அதில் ஏறிநின்ற படி புகழ் உரைக்கவும், பெருமை பேசிக்கொள்ளவும் பின்நிற்காத கூத்தும், குடியும் கும்மாழமும், கொசிப்பும், முதுகு சொறிவும் தான்,  புலிக்கு மாற்றாக இவர்கள் வைத்திருக்கும் ஒரே வேலைத் திட்டமாகும்.

எல்லாவற்றுக்கும் இவர்களிடம் உள்ள ஒரே பதில் புலிகள் கருத்துச் சுதந்திரத்தை மறுப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதாகும். இன்று இவர்களுக்கு புலிகள் கருத்துச் சுதந்திரத்தை மறுக்க, இவர்களிடம் என்ன மாற்று தீர்வு, மாற்று வழி உண்டு எனின் "முதலாளித்துவ சீரழிவும்", அதில் வம்பு விவாதம் நடாத்துவதும்தான்.

இலக்கியம் என்பதும், எழுத்து என்பதும் முதலாளித்துவ சீரழிவுகளோடும் ஏகாதிபத்தியத்தின் எச்சிலை விழுங்கிக் கொண்டும் அதற்க்கு விசுவாசமிக்கதாகத்தான் படைக்கமுடியும் என வாதிடும் இக்கும்பல் இச் சீரழிவில் சிக்குண்டு இப்புலம் பெயர் சூழலில் உருவாகி வருவது புகலிட இலக்கியத்துக்கும் எமது போராட்ட உணர்வுகளுக்கும் எதிர்நிலை கொண்டதாகவே காணப்படுகின்றது. சமூகச் சீரழிவின் வெளிப்பாடான குடியும், போதையும், "டிஸ்கோ"தனங்களும் தங்களது முற்போக்கை நிர்ணயம் செய்யும் காரணியென புதியவியாக்கியானம் கொடுக்கும் இக்கும்பல், எமது மக்களின் போராட்ட உணர்வுகளைப்பற்றி எவ்வித அக்கறையுமற்று எதிர் நிலை கருத்துகளை வைப்பதும் சீரழிவு கலாச்சாரங்களை தூக்கிப் பிடிப்பதும் மிகவும் கண்டனத்துக்குரிய விடையமாக இருக்கின்றது.

இவர்களின் இந்த முதலாளித்துவ கலாச்சார சீரழிவின் உச்சநிலைக்கும், கொசுப்புத்தனத்துக்கும் எடுத்துக்காட்டாக அண்மையில் இவர்களால் வெளியிடப்பட்ட இரண்டு துண்டுப் பிரசுரத்தையும் நாம்கவனத்தில் கொள்ளலாம். சமீபத்தில் வெளி வந்த "இருள்வெளி" மலர்பற்றி "சுகிக்க" அழைத்த  துண்டு பிரசுரத்தில் (பார்க்க பிரசுரத்தை) "நாலுநியாயத்தை அடிச்சுக் கதைக்க "வைன் விஸ்கி பியர்" எனப் போட்டு (இங்கு சுகிக்க பெண் மட்டுமில்லை. அதையும் போட்டு இருந்தால் மேலும் பின்நவீனத்துவ வழியில் கட்டுடைத்த மாதிரி இருந்திருக்கும்.)  ஆயிரம் ஆயிரம் மக்களின் தியாகத்தையும், போராட்டயுணர்வுகளையும் "வசந்தகால ஒன்றுகூட"லில் "சுகிக்கவும்", "நாலுநியாயத்தை அடிச்சுக் கதைக்க"வும் "வைன்", "விஸ்கி", "பியர்"ரை..... குடித்து கூத்தடிக்கவும் சமூகப் பற்றாளர்களை அழைத்து, போராட்டத்தை கேவலப்படுத்த அழைத்த, இந்த "முற்போக்கு" வேடமிட்ட பிற்போக்குகளை இனம் கண்டு அம்பலப்படுத்த வேண்டியது, சமூக அக்கறை கொண்டோரின் இன்றைய வரலாற்றுக் கடமையாகும்.

மக்களின் பிரச்சனையை சொல்லி "தின்ன", "குடிக்க", "சுகிக்க", "வம்பளக்க", "முதுகுசொறிய" அழைப்பதன் மூலம், மக்களுக்காக போராட வேண்டிய மிக பொறுப்புள்ள அர்பணிப்புள்ள சீpரிய பணியை கேவலப்படுத்துவதன் ஊடாக,  இவர்களின் கனவுகளும் தீர்வுகளும் நனவாகின்றது. இன்று மண்ணில் தியாகம் செய்யும் ஒருவனின் உணர்வுகளில் நூறில் ஒரு பங்கு கூட செய்ய முடியாத இந்த கூட்டத்தின் நக்கிப்பிழைக்கும் அரசியல் கேவலத்தை  சமூக அக்கறைக்குரியவர்கள் இனம் காணவேண்டியது கடமையாகும். சமூக அக்கறைக்குரியவர்களாக தம்மைத்தாம் சொல்லிக் கொள்ளும் இவர்கள், சமூகத்தின் ஏதாவது ஒரு பிரச்சனையை எடுத்து அதற்காக நேர்மையாக உழைக்க முடியாத இவர்களின், மோசடியை இனம் கண்டு கொள்ள வேண்டியது இன்றைய சமூக கடமையாகும்.

மக்களின் வறுமை, இனஒடுக்குமுறை, மக்களுக்கு மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரம், ஆணாதிக்கம், சாதிய கொடூரங்கள்.......போன்ற துன்பங்கள், துயரங்கள் "சுகிக்கும்" வக்கிரங்களால் மேலும் அதிகரிக்குமே தவிர,  மக்களின் பிரச்சனைக்கான தீர்வு இந்த மாதிரியான "பம்பல்" அரசியல் கும்மாளங்களினால் தீர்வதில்லை. மாறாக மேலும் அதிகரிக்கவே செய்கின்றது..

புலிகளை ஐனநாயக விரோதிகள் எனக் கூறிக் கொண்டு மக்களுக்காக உண்மையாக இருப்பதாக கூறிக் கொள்ளும் இவர்களின் போதைத்தனமும் முதலாளித்துவ சீரழிவுகளும் புலிகளின் நடவடிக்கைகளை விட மிககேவலமானதும், மோசமானதாகும். அவர்களின் ஐனநாயக விரோதத்தை விட மக்களின் தியாகங்களை, போராட்ட உணர்வுகளை விபச்சாரம் செய்யும் - சேற்றில் உழலும் இவர்களின் பன்றித்தனம் தான் மிக மோசமானது.

இன்று தேவை மக்களுக்காக உண்மையில் போராடும் நேர்மையான மனிதர்கள்தான். போராட்ட தியாகங்களை மதிக்கும், போராட்டத்தை நேசிக்கும், புலிகளின் அரசியலை கேள்விக்குள்ளாக்கும்  அதற்க்கு மாற்றான போராட்டப் பாதையை வைக்கும் கோட்பாடுகள் தான் உண்மையான முற்போக்கு மாற்று அரசியலாகும்.

அரசின் இனவாதத்துக்கு எதிராக உறுதியாக போராடவும், புலிகளின் அரசியல் வழியை விமர்சிக்கும் தெளிவான போராட்ட மார்க்கம் மட்டும்தான் மக்களின் பிரச்சனைக்கு உண்மையாக போராட அழைக்கும் அறைகூவலாகும்.

றயா, அசோக்

குறிப்பு:- இத் துண்டுபப்பிரசுரம் வெளியாகிய பின் நடந்த இந்த தின்டு குடித்த சந்திப்புக்கு சமூக அக்கறைக்குரியோர்  கலந்து கொள்ளாது பகிஸ்கரித்தனர். அதே நேரம் இதில் அரைக்கரவாசி இலங்கை அரசுடன் இயங்கும் துரோககுழுக்களின் ஆதராவாளர்கள் அனுதாபிகள் தயவுடன் முதுகு சொறிவோர் மற்றும் குடிப்பதற்க்கு நாக்கை தொங்கப் போட்டபடி அலைந்து திரிவோர் உள்ளடக்கி நடந்த கூத்தடிப்பில் சமூகம் பற்றி எந்தவிதமான அக்கறையுமின்றி தம்மைத்தாம் முதுகு சொறிவதிலும், குடித்து கும்மளமடித்தும் தமது சமூக சிராழிவை மிகதுல்லியமாக மீள ஒருமுறை நடைமுறையில் இனம்காட்டிக் கொண்டனர்.