Language Selection

புதிய கலாச்சாரம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

 கம்பி நீட்டப் பார்த்த ஜெயேந்திரனை, ஜெயலலிதா அனுப்பி வைத்த "நரகாசுரர்கள்' மெகபூப் நகரில் சுற்றி வளைத்தபோது ""போடு சிவலோகத்துக்கு ஒரு போனை'' என்று சங்கராச்சாரி தனது ஆன்மீக பலத்தைக் காட்டியிருந்தால் நாமும் ""சூப்பர்ரா சுப்பிரமணி'' என்று சொக்கிப் போயிருக்கலாம். ஆனால் கதை கந்தலாகி கவுண்டமணி லெவலுக்குப் போய் ""சி.எம்.முக்குப் போடுறா செல்லை'' என்று அரசியல் செல்வாக்கை அவிழ்த்து விட்டதைப் பார்த்தவுடன், ஓடுவது பக்திப் படமல்ல என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள் மக்கள்.

 

 குப்பனும், சுப்பனும் இப்படிப் பேச முடியுமா? அவிழ்ந்து விழுந்த லுங்கியைக் கட்டிக் கொள்ளக் கூட அனுமதிக்காமல், ""ஐயா கூப்புடுறாரு வாடா'' என்று ஏழை பாழைகளை நெட்டித் தள்ளும் போலீசு, ஆதாரங்களை வைத்துக் கொண்டு ஆறு மணிநேரம் தாஜா செய்து ஒரு வழியாகச் சிரமப்பட்டு ஜெயேந்திரனை சீமைப் பசுவைப் போல ஓட்டி வந்திருக்கிறது.

 

 கைது செய்ய வந்த அதிகாரிகளிடமே, ""இது பிராமணாள் வேன் மத்தவா ஏறப்படாது'' என்று சாதி வெறிகாட்டிய இந்த தண்டக்கோல் மைனரை தீண்டாமைக் குற்றவழக்கில் கைது செய்து தெருவில் இழுத்து வராமல் தனி விமானம், தனி மரியாதை என சட்டம் தயிர்சாதமாய்க் குழைந்திருக்கிறது. நள்ளிரவில் வெறும் வயிற்றோடு கைது செய்யப்படும் விசாரணைக் கைதிகள் காலையில் ஒரு டீயும், பன்னும் கேட்டாலே, ""தொரைக்கு கரெக்டா டிபன் கேக்குதா? போய் கக்கூசைக் கழுவுடா!'' என்று ஏறி மிதிக்கும் போலீசு, கொலைக் குற்றவாளி ஜெயேந்திரன் ஆசன வாயால் போட்ட உத்திரவுக்கு அடிபணிந்து, பேள்வதற்குத் தலைவாழை இலை அறுத்துத் தந்திருக்கிறது. ஏழை பாழைகள் எங்கள் கால் தூசுக்குச் சமம் என பல சித்திரவதைகளில் நிலைநாட்டுகிறது போலீசு. உன் சட்டமும் போலீசும் என் காலைக் கடனுக்குச் சமம் என நிரூபித்திருக்கிறார் சங்கராச்சாரி. அவாளின் "சிவில் வாருக்கு' முன்னாலே போலீசின் ரிவால்வர் எம்மாத்திரம்?

 

சாதாரணக் குறவர் என்றால்
ஆளே காலி!
சமயக் குரவருக்குச்
சாய்வு நாற்காலி!

 

 போலீசுதான் இப்படியென்றால், வாதங்களின் துணை கொண்டு வில்லனை விரட்டிப் பிடிக்க வேண்டிய நீதிபதியோ முதல் சந்திப்பிலேயே காதல் வயப்பட்ட கதாநாயகியைப் போல ""சுவாமிகளை ஜாகை வைக்க ஜட்ஜூகளின் தனி பங்களாக்கள் காலியிருக்கிறதே'' என்று கண் ஜாடை காட்டுகிறார். அது மட்டுமல்ல, செசன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்யாமல் நேரடியாக உயர்நீதி மன்றத்திலேயே ஜாமீன் முறையிட அனுமதி. சட்டத்தை மதிக்கும் சாதாரண நந்தன்களுக்கு ஒரு அவசரம் என்றால் விலகாத நந்தி, ஒரு பக்தனைப் படுகொலை செய்த பாதகனுக்கு விருட்டென்று விலகி வழிவிட்டது எங்ஙனம்?

 

 தாழ்த்தப்பட்ட மக்கள் சுத்தமில்லாதவர்கள், வேலைக்குப் போகிற பெண்களிடம் ஒழுக்கமிருக்காது என்று உழைக்கும் மக்களைப் பார்த்து சாதிக் கொழுப்பேறி பேசிப் பேசியே உதிரக் கொதிப்பேறிய இந்தச் சமூகக் குற்றவாளிக்கு சிறப்பு மருத்துவ வசதி. பெண்களைக் காமவெறியோடு பார்த்துப் பார்த்தே கண் அழுத்த நோய் பிடித்த "ஞான திருஷ்டிக்கு' கண் மருத்துவம்.

 

 ஆயிரக்கணக்கில் கைதான அரசு ஊழியர்களை ஆடு, மாடுகளைப் பட்டியில் அடைப்பது போல் அடைத்து சட்டம் அப்படித்தான் என்ற அதிர்ச்சியில் சிலரைச் சாகடித்த அரசு, இன்று பல்வேறு வழக்குகளில் முதல் குற்றவாளியான சங்கராச்சாரிக்குச் சலுகை காட்டும் மர்மமென்ன? ஒரு காலத்தில் மன்னர்களைக் கைக்குள் வைத்துக் கொண்டு ஒரு குலத்துக்கு ஒரு நீதியான மனுநீதியை சமூகத்தில் அமல்படுத்திய பாரம்பரிய ஜட்ஜான பார்ப்பன மதகுருவும், அதிகார வர்க்கம்தான் என்ற "ஒரே சாதிப்' பாசமா?

 

 சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் "பணியை நிரந்தரமாக்கு' என்று போராடியதற்காக நள்ளிரவு வேளையில் நடுரோட்டில் சாலைப் பணியாளர்களை போலீசு அடித்து நொறுக்கியபோதும், அள்ளிக் கொண்டு போன போதும் ஜட்ஜ் பங்களா காலியாகவில்லையே ஏன்? ஒரு குடம் தண்ணீருக்கு வழியில்லை என்று உழைக்கும் மக்கள் போராடினால் சிறப்பு அதிரடிப்படை வருகிறது! ஒரு கொலைக் குற்றவாளிக்கு சிறையில் சிறப்புத் தண்ணீர் தொட்டி வைத்துத் தர நீதிமன்றமே ஏற்பாடு செய்து தருகிறது. யாருக்கு சட்டம் சேவை செய்கிறது? கூலி ஏழை விவசாயிகளுக்கு நாட்டில் எலிக்கறி. கூலிப்படைத் தலைவனுக்கு சிறையில் பூரி சப்பாத்தி.

 

 சுதந்திரமாய் வெளியில் வாழ அனுமதிக்கப்பட்டிருப்பதாய்ச் சொல்லப்படும் மக்கள் ""நாங்கள் வாழ வழியில்லை, விவசாயத்திற்கு மானியம் கொடு, விலையில் சலுகை காட்டு'' என்று வீதிக்கு வந்து போராடினால் அடி, உதை. கைதியாய் உள்ளே இருக்கும் சங்கராச்சாரிக்கு அவாள் விருப்பத்தை நிறைவேற்ற அரசு செலவில் பூ, பழம் சலுகை. வெளியில் இருப்பவர்களுக்கு அகப்படாத இகலோக சுகங்கள்  உள்ளே இருப்பவனுக்குக் கிடைப்பதன் உள்அர்த்தமென்ன?

 

 ஒரு திருகாணி திருடிய குற்றத்திற்காக நாள் முழுக்க குத்துக்கால் போட்டு உட்கார வைத்தே விசாரணைக் கைதிகளை வதைக்கும் போலீசு, சங்கராச்சாரி ஒரு சாய்வு நாற்காலி கேட்டதற்காக நள்ளிரவில் மூடிய கடைகளைத் திறக்க காஞ்சிபுரம் கடைத் தெருவில் அலைந்திருக்கிறது. அணில் குத்தும் குறவனுக்கு குதிகாலில் லாடம் கட்டி அடி; ஆளையே குத்தும் சமயக் குரவனுக்கோ அலுப்பு தீர சாய்வு நாற்காலி.

 

 "சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்' என்று கூறும் நீதிபதிகளே ""கோர்ட்டுக்கு வந்த இடத்தில் கோலை வைத்துக் கொண்டு பார்கவுன்சிலில் பூஜை செய்தது விதி மீறல்'' எனச் சீறக்காணோமே. ஏன்? அரை நாளில் நூற்றுக்கணக்கான ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் விறுவிறுப்பு நீதிபதிகள் எந்தவித அருவெறுப்புமின்றி சங்கராச்சாரியின் ஜாமீன் மனுவை நாய் கவ்விய கந்தல் துணியாய் இழுத்துக் கொண்டே போகும் ரகசியமென்ன?

 

 வேறொன்றுமில்லை. ""அதிகாரவர்க்கம் என்பது அரசின் உணர்வு; அரசின் சித்தம். அரசின் அதிகாரம் வெளித்தோற்றத்திற்கு பொது நன்மையின் பிரதிநிதியாகவும், பாதுகாவலனாகவும் காட்டிக் கொண்டாலும் அதன் உண்மையான அர்த்தம் வேறு, அதற்குப் பின்னால் ஒரு திட்டவட்டமான தனிச்சலுகை பெற்ற கோஷ்டியின் நலன் இடம் பெற்றிருக்கிறது'' என்றார் கார்ல் மார்க்ஸ்.


மகா பாவியும் மற்ற பாவிகளும்

 என்ன நடந்து விட்டது இப்போது? சந்தேகம் என்று இரவில் பிடித்துச் செல்லப்படும் காசுமீர், மணிப்பூர் மக்களைப் போல கைதுக்குப் பிறகு காலையில் எங்காவது பிணமாகக் கிடந்தாரா சங்கராச்சாரி? சந்தேகக் கேசில் பிடித்துப் போன சென்னை கே.கே. நகர் இளைஞரைப் போல சங்கராச்சாரியின் காலை ஒடித்ததா போலீசு? கொலையே செய்தாலும் சங்கராச்சாரியின் காலைக் கடனுக்கும், ஊளைச் சதைக்கும் ஒரு குறையும் வராமல் பராமரிக்கிறது அரசு.

 

 "சட்டப்படி சங்கராச்சாரியைக் கைது செய்ததே தவறு' என அரசியல் அமைப்பே ஒரு தனிமனிதனுக்குச் சமமில்லை என்று சவால் விடுகிறது பார்ப்பன மதவெறிக் கும்பல். வீரப்பனுக்குச் சோறு கொடுத்தவர்கள் என்ற சந்தேகத்துக்காகவே ஆண்டுக் கணக்கில் சிறையிலிருக்கும் அப்பாவி "இந்துக்களுக்காக'க் குரல் கொடுக்காத இவர்கள் பார்ப்பன சங்கராச்சாரிக்காகப் படைகட்டி வேலை செய்கிறார்கள்.

 

 அதிகார வர்க்கமும் எந்த கைதிக்கும் இல்லாத வகையில் சிறைக்கு உள்ளேயே பூசை, புனஸ்காரம் என்று அக்கிரகாரத்தை ஏற்படுத்தித் தருவதுடன், வேலூர் சிறைக்கு வெளியேயும், சூடம், சாம்பிராணி வழிபாடு என்று அங்கே ஒரு கோயில் கடை போடாததுதான் பாக்கி. நீதிமன்றக் காவலில் சங்கராச்சாரி இருக்கிறார் என்பதைவிட சங்கராச்சாரியின் கஸ்டடியில் நீதித்துறை இருக்கிறது என்பதுதான் உண்மை. இப்படி ஜெயிலை மடமாக்கி மக்களின் வரிப்பணத்தை "ஸ்வாஹா' செய்வதை விடப் பேசாமல் மடத்தையே ஜெயிலாக்கி விடலாம். அரசு ஊழியர் போராட்டத்தின் போது ""நாம் பப்ளிக்கா வரப்படாது'' என்று பம்மிய பல பார்ப்பனர்கள் இப்போது ""பெரியவாளை விடுதலை செய்'' என்று பிராமணர் சங்கமாய் நடுரோட்டில் குதித்து விட்டார்கள்.

 

 சாதியக் கொடுமைகளுக்காகவும், கூலி உயர்வுக்காகவும் போராடும் தொழிலாளர்களை அடித்து அம்மணமாக்கி ஆற்றில் பிணங்களை மிதக்க விடுகிறது போலீசு (மாஞ்சோலை). ஆனால் ஒரு கொலைக் குற்றவாளி தனது விருப்பார்வங்களை அரசுச் செலவில் அனுபவித்துக் கொள்ள நீதித்துறையே பாப்பாரப் படித்துறையாகிறது. மடத்திலிருந்து ஓடிப்போன சங்கராச்சாரிக்கு மனுப்போடும் இந்துவெறிக் கும்பல் அன்றாடம் வேலையிலிருந்து விரட்டப்படும் தொழிலாள இந்துக்களின் நலன்களுக்காக வீதிக்கு வந்து விடைத்தது உண்டா?

 

 தொழிலாள "இந்துக்களுக்காக' முதலாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்த நிர்ப்பந்திக்காத திரிசூலத்தில் ஒரு சூலமான தொகாடியா ""காசுமீர் போராளிகளிடம் கூட பேச்சுவார்த்தை நடத்தும் அரசு காஞ்சிப் பெரியவாளை அழைத்துப் பேசியிருக்கக் கூடாதா?'' என்று நியாயம் கேட்கிறார்.

 

 ஒரு வாதத்திற்கே ஒப்புக் கொள்வோம். பேச்சு வார்த்தையின் நிபந்தனையாக காசுமீர் "தீவிரவாதிகள்' தங்களிடமுள்ள ஆயுதங்களைக் கீழே போட முன்வரவேண்டும் என்கிறது அரசு. வரலாறு நெடுக பலதரப்பு மக்களின் இரத்தத்தைக்  குடித்த, வர்ணாசிரம தர்மம் என்ற பார்ப்பன பயங்கரவாத ஆயுதத்தைக் கீழே போட சங்கராச்சாரி தயாரா?

 

 இல்லை, எந்த காலத்திலும் பார்ப்பன பலாத்காரமும்; ஒரு குலத்துக்கு ஒரு நீதியுமே சங்கராச்சாரி அறிவிக்கும் அருள்வாக்கு. ""கைது'', ""காவல்'' என்ற வார்த்தைகளுக்கான அர்த்தத்தையே மாற்றி அனுபவித்துச் சட்டத்தையே "கற்பழித்து' விட்டார் சங்கராச்சாரி. சட்டத்துக்கு முன் அனைவரும் சமமில்லை என்பதை சங்கராச்சாரியின் கைது விவகாரங்கள் மூலமாக நிரூபித்து விட்டது அரசு.


துரை. சண்முகம்