சமூகத்தை புரிந்து கொள்ள முயல்வோம்

நீண்ட இடைவெளிக்கு பின் சமர் உங்கள் கைக்கு கிடைக்கின்றது. |ஆணாதிக்கமும் பெண்ணியமும்| என்ற தலைப்பிலான நூல் ஒன்றை எழுதி முடிக்கும் பணி காரணமாகவே சமர் காலதாமதமாகியது. இக்கால இடைவெளியில் பலவிடயங்கள் உலகளவில் நடைபெற்றன.  அவைகள் சிலவற்றை துண்டுப்பிரசுர வடிவில் கொண்டு வந்திருந்தோம். அதில் முக்கியமானவை இதில்  பிரசுரமாகியுள்ளது.

 

 

புலம்பெயர் சமூகத்தின் அனைத்து நாடு தழுவிய அளவில் புரட்சிகரமான போக்கு மேலும் மேலும் இழிந்து போகின்றது. வன்முறை, தனிநபர் காழ்ப்புணர்வுகள் கூடிய தூற்றும்; சமூக அரசியல் வடிவம் எல்லாத் தளத்திலும் விரிவாகியுள்ளது. மறுதளத்தில் இன்று புரையோடிப் போயுள்ள சமூகம் பற்றிய அக்கறையின்மை, அரசியல் மாற்றுக்கான நேர்மையான தேடுதலை கைவிட்டுச் செல்வதன் ஊடாக மேலும் தன்னை நிர்வாணமாக்கி வருகின்றது.

இன்று புலம் பெயர் சூழலில் வந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகள் அனைத்தும் விதிவிலக்கின்றி தனிமனிதர்களின் எழுத்துச் சுதந்திரத்துக்கு வேட்டு வைக்க பின்நிற்கவில்லை. எழுத்துச் சுதந்திரத்தின் வானளவு பாதுகாவலராக பிரகடனம் செய்த படி வாழும் புலம்பெயர் சஞ்சிகைகள் உண்மையில் அதற்கு எதிரானவை. அம்மா 9,10 இல் எனது ஒரே எழுத்துகளை இரு முறை அறுவைச் சிகிச்சை செய்து அலங்கோலப்படுத்தி அசிங்கப்படுத்தினர். ஆனால் எந்த எழுத்தையும் தனி மனித சுதந்திரத்தை உள்ளடக்கி வெட்டியதில்லை என்று அம்மா எழுதக் கூட தயங்கியதில்லை. ஆனால் நிலைமை இதற்கு தலைகீழானவை. உயிர் நிழல் இது போல் எனது எழுத்தை வெட்டித் திருத்தியது. நோர்வே சக்தி இதழ் கூட இதை செய்தன. எக்ஸில்; எனது எழுத்தைப் போட இடம் இல்லை என்று கட்டுரையைப் பார்க்காமலே கூறிவிடுகின்றனர்.

இந்தளவும் எதன் அடிப்படையில் நிகழ்கின்றன என்பதே அடிப்படையிலான கேள்வியாகும். மார்க்சியம் பற்றி ஏதும் தெரியாது, மார்க்சிய எதிர்ப்பில் அதன் மீதான வெறுப்பில் புலம்பெயர் இலக்கிய உலகம் கைகோர்க்கின்றது. எவ்வளவு முரண்பாடு இருந்தாலும் இவர்கள் தமது பொதுப் பார்வையில் மார்க்சியத்தை அன்னியப்படுத்துவதில் பொது உடன்பாடு உடையவர்களாக உள்ளனர். இச்சஞ்சிகையை நடத்துபவர்கள் ஒரு எழுத்தாளராக எழுதும் முழுமையான ஆற்றல் அற்றவர்களாக இருந்தபடி, ஆங்காங்கே சிலவற்றை எழுதும் இவர்கள் சமூகம் மீதான ஒரு சீரிய பார்வையற்றவர்கள். சாதாரண குட்டி பூர்சுவா மனவிருப்புகளை வெளிப்படுத்தும் இவர்கள், மார்க்சியத்துக்கு எதிராக எழுதுபவர்களுக்கு விருந்து வைத்து எழுத வைப்பவர்கள். மார்க்சியத்துக்கு எதிராக தம்மை பிரமுகராக்கியவர்களிடம், சீடர்களாக தரையில் அமர்ந்த படி, தயவு கூர்ந்து எழுத இரந்தும் கேட்ட படி இந்தியா வரை தமது பணம் மற்றும் கூட்டங்கள் வைப்பது வரை, புலம் பெயர் இலக்கிய சஞ்சிகைகள் சார்ந்த இலக்கியம் சீரழிந்து போயுள்ளது.

சுரண்ட, அது சார்ந்து ஆணாதிக்கத்தையும், இனவாதத்தையும்..... கட்டமைக்கும் அனைத்து சமூக நடைமுறை போக்கையும் எதிர்த்து போராடும் மார்க்சியத்துக்கு எதிராக, உருவான பிரமுகர்கள் தம்மை இலக்கியவாதியாக குறிப்பிட்டு எழுதும் எழுத்தே சமூக அங்கீகாரம் கொண்டவை என்ற பிரமுகத்தன ஆசை, இவர்களை அவர்களிடத்தில் நக்கி வாழ வைக்கின்றது. இது சமூகத்தின் தேவையை கொச்சைப்படுத்தி மறுத்து நிற்க்கின்றது. மார்க்சியம் எதிர்த்து போராடும் சமூக அவலத்தை பாதுகாக்க அதில் உருவான பிரமுகர்கள், சமூக மாற்றத்துக்கான நடைமுறையை நிராகரிக்கும் இந்த பிரமுகர்களின் எழுத்தால் நிரப்பப்பட்டு வரும் இச்சஞ்சிகைகள், பிரமுகத்தனமான எழுத்தால் சமூகத்தை சோரத்துக்கு இட்டுச் செல்லுகின்றனர்.

மழைக்கு முளைத்த காளான்கள் போல் உருவான சஞ்சிகைகள் எந்த சமூகத் தொடர்ச்சியிலும் உருவானவையல்ல. அதே நேரம் எந்த சமூகத்தையும் பிரதி பலிப்பதாக பிரகடனம் செய்ததில்லை. அதே நேரம் பிரகடனம்  செய்யாத மார்க்சிய எதிர்ப்பை கையாள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இவை தனிநபர் காழ்ப்புணர்வுகளை தமது சொந்த அரசியல் இருப்பாக கொண்டு, பிரமுக இருப்பை கனவு காண்கின்றது.

மறுதளத்தில் புலம்பெயர் இலக்கிய உலகம் தனது சொந்த தனிநபர் காழ்ப்புணர்ச்சிகளை காட்டிக் கொடுக்கவும் தயங்கவில்லை. ஏகாதிபத்திய உள்ளூர் அரசியல் பொலிசுக்கு, மார்க்சியத்துக்கு எதிரான இயல்பான அவர்களின் போக்கு இசைவான காட்டிக் கொடுப்பில் தன்னையும், தனது இலக்கிய சோரத்தையும் பாதுகாக்க முனைகின்றது. என் மீதான ஏகாதிபத்திய அரசியல் பொலிசின் விசாரணை திட்ட வட்டமாக புலம் பெயர் இலக்கிய காட்டிக் கொடுப்பின் ஒரு அங்கம் தான். இதை எல்லா இலக்கியவாதிகளும் காட்டிக் கொடுத்தார்கள் என்ற அடிப்படையில் நான் கருதவில்லை. ஆனால் எனது எழுத்து முடக்கப்பட வேண்டும் என்பதில் புலம்பெயர் இலக்கியம் மனதார விரும்புகின்றது. அது எந்த வழியில் என்றாலும் அதை மறைமுகமாகத் தன்னும் மௌனத்தினூடாக ஆதரவைக் கொடுக்கின்றது. போலித்தனமான பிரமுகத்தன ஆசையுடன் கூடிய இலக்கிய பம்மத்தை நான் ஒருவன் மட்டுமே நிர்வாணப்படுத்துவதால், எனது எழுத்தின் இருப்பு அச்சுறுத்தலாக உள்ளது. இது நின்று போவது பிரமுகர்களின் பொற் காலம் என்று நம்பும் நிலையில், இதற்கு எதிராக முடிந்ததை செய்ய முயலுகின்றது. ஆனால் சமரின் இருப்பு தான் மற்ற எந்த புலம்பெயர் நாட்டையும் தாண்டி பிரான்சில் மார்க்சியத்துக்கு எதிரான சஞ்சிகையின் வரவை நிலை நிறுத்துகின்றது என்பதை காணத் தவறுகின்றது.

என் எழுத்துக்கு புலம் பெயர் நாட்டில் இருந்து இலங்கை வரை கோட்பாட்டில் பதில் அளிக்க முடியாதவர்கள், எனது எழுத்தை "தனிநபர் தாக்குதல்" கொண்டவை என்ற அவதுற்றைப் பொலிந்து, தமது சோரம் போகும் அரசியல் பிழைப்பை பலர் செய்ய பின்நிற்கவில்லை. எனது எழுத்து "தனிநபர் தாக்குதல்" கொண்டது எனக் கருதின், அதை கோட்பாட்டில் செய்யாத வரை, இப்படி கூறுவதே தனிநபர் தாக்குதல் தன்மை வாய்ந்தவை என்பதில் சந்தேகம் இருக்கமுடியாது.

புலம்பெயர் சமூக சிதைவுகள் விரிவாகி மனித அவலங்கள் கூர்மையாகி வரும் இன்றைய நிலையில் அது பற்றி யாரும் பேசுவதில்லை. புலம் பெயர் அவலம் மேலும் மேலும் விரிவாகி வரும் போக்கில், அவற்றை பற்றி அக்கறை கொள்ள வேண்டிய சமூகப் பொறுப்பு எம்முன்னுள்ளது.

இந்த சமரில் இருந்து மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளும் போக்கில் ஏற்படும் மார்க்சிய விலகல் சார்ந்து, விமர்சனத்தை தீவரமாக்க வேண்டியளவுக்கு புறநிலைமை கோருகின்றது. இது மேலும் தத்துவார்த்தம் சார்ந்து சமர் இருப்பது தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது.