சிங்கள இனவாத அரசு கட்டவித்துவிட்ட இனவாத யுத்தம் என்றுமில்லாத வகையில் புதிய நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. நிலமை நிமிடத்துக்கு நிமிடம் தீவிரமான மாற்றத்தை கோரிநிற்கின்றது. தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையும், புலிகளின் தமிழீழ தாயகமும் ஒரு தீர்க்கமான நெருக்கடிக்குள் நகர்ந்துள்ளது. இக்கட்டுரை எழுதிக் கொண்டிருந்த அந்த நிமிடத்துக்கும், அடுத்த நிமிடத்துக்கும், இது வெளிவரும் போது நிலைமை மேலும் மாற்றத்தை சந்தித்துவிடும் என்ற நிலையிலும், யுத்தத்தின் தீவிரத்தையும் இலங்கை நிலமையையும் ஆராய்வது அரசியல் தீதியாக தீர்க்கமானதாக உள்ளது.

அரசு, புலிகளின் தமது பக்க செய்திகளையே தமது நலனுடன் வெளியிட்ட நிலையில், இதைத்தாண்டி மக்கள் நிலமையை புரிந்து கொள்ளமுடியாத நிலையில், இக்கட்டுரை முக்கியமானது. இலங்கை நெருக்கடியை ஒட்டிய சர்வதேச நகர்வுகளை முழுமையான தகவல்களை அரசு யுத்த நிலமையை தணிக்கை மூலமும், புலிகள் தனது சொந்த புகழ்வுடாக பாதகமானதை மறைப்தால், தமிழ் மீடியா புலிசார்ந்து தவறான விளக்கங்கள் ஊடாக வெளிநாட்டு நகர்வை திரித்துக் காட்டுவதாலும், தீவிரமான யுத்த கெடுபிடியின் விளைவுகளை பற்றிய முடிவுகளை வந்தடைவது சிக்கலாகியுள்ளது.

இந்த நிலையில் அண்மைய நிலமையை இக்கட்டுரை ஆராய்கின்றது. இராணுவ ரீதியான ஆயுத இழப்பு, கைப்பற்றல் போன்ற அரசியலிலும், இராணுவ நடவடிக்கையில் கிடைக்கும் தோல்வி வெற்றியை மட்டும் அடிப்படையாக கொண்டு மதிப்பீடும் இலங்கை யுத்த அரசியல் வரலாற்றில், அண்மைய புலிகளின் முன்னேற்றம் பாரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. புலிகளுடன் உடன்பாடத பிரிவுகளையும், நடுநிலைப் பிரிவுகளையும் ஆணையிரவு வெற்றி அலையாக அள்ளிச் சென்றுள்ள நிலையில், அரசியல் ரீதியான ஆய்வுகள், கருத்துகள் மேலும் தனிமைப்பட்டுள்ளது அல்லது அவை அலட்சியப்படுத்துவதன் ஊடாக வரப்போகின்ற புதிய நெருக்கடிக்கான தயாரிப்பை இழந்து நிற்க்கின்றது.

தமிழ்மக்கள் வாழும் சொந்த நிலப்பரப்பில் அன்ணிய இராணுவங்கள் அணைத்தும் நிபந்தனையின்றி அகற்றப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ள மார்க்சியவாதிகள், அதை புலிகள் செய்தாலும் வரவேற்றப்பதில் எந்தவிதமான தயக்கமும் காட்டியது கிடையாது. சிங்களஇனவெறி இராணுவமாகட்டும், அன்னிய இராணுவமாகட்டும், அவை அக்கற்றப்படவேண்டும் என்பது மார்க்சியவாதிகளின் உறுதியான நிலைப்பாடாகும். ஆனால் எங்கள் முரண்பாடு அன்னிய இராணுவத்தை அகற்றும் மண்ணில், தேசத்தின் தேசிய பொருளாதாரத்தை உருவாக்கவும், பாதுகாக்கவும், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேசிய யுத்தத்தை பிரகடனம் செய்யவேண்டும் என்பது எமது உறுதியானநிலை. எமது பண்பாட்டை, கலாச்சாரத்தை வன்முறையற்ற ஜனநாயக வடிவமாக்கி, சீராழிந்த ஏகாதிபத்திய பண்பாடு உடுருவுவதை தடுத்து, அதற்க்கு எதிராக போராடுவதும் தேசிய நிபந்தனையாகும். இதுமட்டுமே தேசத்தின் அடிப்படையான உள்ளடக்கமாகும். இதை புலிகள் செய்யாத எல்லா நிலையிலும், அவர்கள் அகற்ற முனையும் இனவாத சிங்கள தேசிய இராணுவத்தக்கு பதில், ஏகாதிபத்தியத்திடம் தேசியத்தை அடகுவைப்பதாகும். இது பொருளாதாரம், பண்பாடு, கலாச்சார ரீதியாக ஏகாதிபத்தியத்தை சார்ந்து நிற்ப்பதன் மூலம், புலிகளின் தேசிய இராணுவம் என்பது ஏகாதிபத்தியத்தின் கைகூலி இராணுவமாக அல்லது ஏகாதிபத்திய இராணுவத்தை சிங்கள இராணுவத்தக்கு பதில் நிறுத்துவதில்  முடியும்.

புலிகள் வன்னியல்  முன்னேறியதும், ஆணையிரவு முகாம் பிடித்ததும், யாழ் குடாநாட்டை நோக்கி முன்னேறிச் செல்வதும், இராணுவ ரீதியான வெற்றியா எனின் இன்னமும் இல்லை என்ற உண்மை பலர் காணத்தவறிவிட்டுகின்றனர். யாழ்குடா நாட்டை விட்டு 1995 இல் புலிகள் மிககுறுகிய காலத்தில் தற்காப்பு யுத்தம் செய்தபடி பின்வாங்கியபோது என்ன நிலையிருந்ததோ, அதுவே இன்று தலைகீழாக நடக்கின்றது. அண்மையில் சிங்கள இனவெறி இராணுவப் பின்வாங்கியது, அன்றைய புலிகளின் பின்வாங்களை ஒத்த தன்மை கொண்டவை. அன்று இராணுவம் முன்னேறி பிடித்தவை எப்படி வெற்றியாக இருக்கவில்லையோ, அதுபோல் புலிகள் இன்று முன்னேறி பிடித்தவையும் வெற்றியாக இருக்கவில்லை. யுத்தத்தில் தீர்க்கமான யுத்தமின்றி, சொந்த பலம் பலவீனத்தினுடாக அன்றும் இன்றும் பின்வாங்கியது மட்டுமே நிகழ்ந்தது. ஆனால் புலிகள் போராட்ட அமைப்பாக இருப்பதாலும், இராணுவம் கூலிப்பட்டளமாக இருப்பதால், இதன் போக்கில் மாறுபட்ட தன்மைகள் காணப்பட்ட போதும், நடப்பது தற்காப்புடன் கூடிய சிறுசண்டை கொண்ட பின்வாங்கள் என்பதை புரிந்து கொள்வது அவசியமாகும். இதனால் யுத்தத்தின் போக்கில் வெற்றி இன்னமும் தீர்க்கமாகிவிடவில்லை.

யுத்தத்தின் போக்கில் தீர்கமான நிலமை இனித்தான் ஏற்படப்போகின்றது. வெற்றியா, தோல்வியா அல்லது இழுபறியா என்ற முடிவை நோக்கி நகர்வதற்க்குரிய கால எல்லை ஒன்று ஏற்பட்டுள்ளது. யுத்தத்தின் போக்கில் நாலு முக்கியமான முடிவுகளில் ஒன்று உடனடியாக நிகழ உள்ளது.

1.யுத்தம் இனித்தான் தொடங்கவும், தீவிரமடையவும் போகின்றது. இது வெற்றி தோல்வி, இழுபட்ட யுத்தம் என்ற நிலைக்குள் நகரவுள்ளது. அல்லது,

2.தொடர்ச்சியாக பின்வாங்கிய படைகள், அதன் தொடர்ச்சியில் முற்றாக புலிகளிடம்  உயிர்பாதுகாப்பு என்ற நிபந்தனையுடன் சரணடைவது. அல்லது,

3.அரசு படைகளை முற்றாக புலிகளின் பாதுகாப்புடன் விலக்கிக் கொள்வது. அல்லது

4. அன்னிய பன்நாட்டு படைப் பிரிவு ஒன்று அமைதியின் பின்னால், மக்களின் நலனின் பின்னால், தீர்வுத்திட்டத்தின் பின்னால், படைகளை விலக்கிக் கொள்வதின் பின்னால்  தலையிடுவது. இந்த நிலமைக்கு முன் அன்னிய மனித உரிமை அமைப்புகள், உதவி அமைப்புகள், மருத்துவ அமைப்புகள் நிபந்தனையின்றி மக்களின் நலன்களை கூறியபடி களமிறங்கி  (இந்த வகையில் களமிறங்கி இருந்தவை புலம்பத் தொடங்கிவிட்டன) அன்னிய இராணுவ வருகைக்குரிய நிலமையை தோற்றுவிப்பர். அதன் பின்னனியில் புலிகளின் ஆயுதம் களையப்படும்

இந்த நான்கில் எதாவது ஒன்று அல்லது அதன்மேல் இரண்டவாது (அன்னியத் தலையீடு) நிகழவுள்ளது. இதில் அன்னிய பன்நாட்டு படையிறக்கம் நிகழ இருப்பதை தீர்க்கமாக காணத்தவறியிருப்பதும், அதை மக்கள் முன் வைத்த விழிப்படையச் செய்யாது இருப்பதும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆபாத்தனதாகும். இந்தியா தலையீடுபற்றிய கருத்துகள் மீது கவணத்தை குவித்த அபிரயங்களை தெரிவிப்பவர்கள், பன்நாட்டு படைப்பிரிவு ஒன்று இந்திய தலைமையில் அல்லது இந்தியா உள்ளிட்ட மற்றொரு படைத் தலைமையில் தலையீடும் சத்தியம் நெருங்கிய நிலையில் உள்ளது என்பதை காணத் தவறிவிட்டனர். இனவாத சிங்களஅரசு படை, யாழ்குடாநாட்டில் தோற்கின்ற அல்லது வெளியேற்றுகின்ற நிலையில் அன்னியப்படை தலையீடு உடனடியாக நிகழ உள்ளது. சரணடைவு மட்டுமே அன்னியபடை இறக்கத்துக்கு நியாப்படுத்த முடியாத இக்கட்டான நிலமையை தோற்றுவிக்கும்.

இலங்கையினதும், தமிழ் மக்களினதும் தேசியத்தை அழிக்கும் வகையில் அமெரிக்கா, இந்தியா, நோர்வை, பிரிட்டன் போன்ற பல நாடுகள் தொடர்ச்சியாக கூடி ஆராய்வதுடன், நிலமையை அவதனத்துக்குள்ளாக்கிய வண்ணம் உள்ளது. அரசு படையை பலப்படுத்தி அதனுடாக புலிகளை பின்னடைய வைப்பது அல்லது தலையீடு என்ற நிலைக்கு சாதகமான போக்குகளை ஏகாதிபத்திய அரசுகள் புதிய உலக மயமாதல் கண்ணோட்த்தில் கூட்டாகவும், பிரந்திய அரசுகளின் துணையுடன் முடுக்கிவிட்டுள்ளது. இந்த வகையில் ஐ.நா, சர்வதேச மனிதவுரிமை அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம் போன்றன தமது பங்கை கவணமாக இதற்கு ஆதாரவாக உருவாக்கி, நிலமையை சர்வதேசமயமாக்கி மக்களின் மனிதவுரிமையை முதன்மைப்படுத்தியுள்ளனர்.

நிலமை மோசமாக காட்டி, படை வெளியேற்ற உதவியாக, அன்னிய தலையீட்டின் தேவையை கோரி கருத்துகளை திட்டமிட்டு அரசு உருவாக்கியது. உத்தியபூர்வமற்ற வகையில் இந்தியா தலையீட்டை நோக்கி விடப்பட்ட பல்வேறு கோரிக்கைகள், இந்தியா அரசு இது தொடர்பாக விட்ட அறிக்கைகள், புலிகளை அரசியல் ரீதியாக திகைக்கவைத்து. எதிர்பாராத இந்த நிலைமையில் புலிகள் அரசியல் ரீதியாக திகைக்கவைத்தன் மூலம் மௌனம் சாதிக்கவைத்து. இந்திய தலையீட்டு கோரிக்கைக்கு இந்திய அரசு உடனடியாக கூடி முடிவு எடுத்து விட்ட அறிக்கைக்கு, போராடும் புலிகள் உடனடியாக பதிலாளிக்க முடியாத அரசியல் சூனியம் நிலவியது. புலிகளின் பதில் அண்ணளவா ஒருவாரம் கழித்து வெளியான போது, ராஜதந்திர ரீதியாக அந்த அறிக்கை முழுமையாக புலிக்கு சாதகமாக மாறிவிடவில்லை. இராணுவ வீரர்கள் யுத்தத்தை விட்டு பின்வாங்கிச் சென்றாலும், அவர்களின் உயிருக்கு புலிகள் அச்சறுத்தல் விடும் பயங்கரவாதிகள் என்ற அடிப்படையில், மனிதாபிமான உதவிபற்றி பேசிக் கொண்டிருந்த போது, புலிகள் மௌனம் சாதித்தன் மூலம் அதை உறுதி செய்வதாக இருந்தது.  தலையீட்டுக்கு எதிரான பிரிவுகள் இந்தியா அரசை நிர்ப்பந்திக்க முடியாத அனவுக்கு, புலிகளின் பதில் அரசியல் ரீதியாக காலம் தாழ்த்தி வெளிவந்தன் மூலம், அரசியல் தவறை செய்தனர்.

அடுத்த அரசியல் தவறை அந்த பதிலில் விட்டுச் சென்றனர். தமிழ் மக்களின் போராட்டம் இலங்கையின் உள்நாட்டு பிரச்சனை என்பதையும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்பதை தேசிய கண்ணோட்த்தில் நின்று பிரகடணம் செய்யத்தவறினர். தேசத்தின் தேசியப் போராட்த்தில் எந்த அன்னியப்படை தலையிட்டாலும், அதை எதிர்த்து போராடுவோம் என்ற சூள்ளுரைக்க தவறினர். எந்த அன்னிய படையும் எமது சுயநிர்ணய உரிமையையும் பெற்றத் தரமுடியாது என்பதையும், அதில் தலையிட உரிமையில்லை என்பதையும், எமது சொந்த  தேசியவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க உறுதி கொண்டுயிருப்பதை பிரகடனம் செய்யவில்லை. புலிகளின் தமிழீழ தாகம் அடிப்படையில் இனவிடுதலையை அடிப்படையாக கொண்டது என்பதால், தேசியத்தின் அடிப்படை உள்ளடக்கமான ஏகாதிபத்திய எதிர்ப்பை பிரகடனம் செய்யவில்லை. இனவிடுதலையை முன்வைக்கும் போது, அன்னிய தலையீடுபற்றி  தயக்கத்துடன் கூடிய அனுகுமுறை, தமிழ்மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கைக்கு ஆபாத்துவிளைவிக்கவுள்ளது.

இலங்கையில் இராணுவ ரீதியாக பன்நாட்டுப்படையொன்று இறங்க தயாராகி வரும் நிலையில், புலிகள் மௌனத்துடன் கூடிய இராணுவ முன்னெடுப்புகள் அவர்களை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி விடவுள்ளது. யாழ்குடாநாட்டை புலிகளிடம் இருந்து இலங்கை அரசு ஆக்கிரமித்த போது, மக்களையிட்டு கவலைப்பாடத சர்வதேச ஏகாதிபத்தியங்கள், அரசின் ஆக்கிரமிப்புக்கு நெருக்கடி ஏற்படுகின்றபோது, முதலைக் கண்ணீர் வடித்தபடி களம் இறங்க தயாரவதை அரசியல் ரீதியாக மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். இதை புலிகளின் சூனியமான அரசியலால் புரிந்த கொள்ள முடியாத இனவாத அடிப்படையை கொண்டு காணப்படுகின்றனர். உலகளவில் ஏகாதிபத்தியங்கள் நடுநிலை வகிப்பதில்லை. மாறாக தனது கொள்ளையை தொடர சாதகமான நிலமையை கவனத்தில் கொண்டு, போராட்ட அமைப்புகளை அடக்குகின்றன. ஒரு நாட்டின் தேசியத்தை உலகமயமாதல் அனுமதிக்காது என்பது தௌளத் தெளிவானது. இந்த வகையில் தமிழ் தேசியம் உருவாகுவதை உலகமயமாதல் ஒருக்காலும் அனுமதிக்காது. இனவிடுதலையை அடிப்டையாக கொண்டு பொருளாதாரத்தில் ஏகாதிபத்திய கைக்கூலியாக தரகுதனத்தை ஏற்றுக் கொள்ளும் குழுக்களின் இருப்பு குறித்து, உலகமயமாதல் மொத்த நாட்டை தனது நலனுக்கு சாதகமாக மேலும் விரைவுபடுத்த மட்டும் பயன்படுத்தும். இந்த வகையில் இலங்கை உலகமயமாதல் நிபந்தனைக்கு முற்றாக சரணடைந்துள்ளது. எல்லாவிதமான தேசிய முதலாளித்துவ வாதமும் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அதை மோசடி செய்ய இனவாதத்தை கட்டமைக்கின்றது. இந்த தீவிர இனவாதம் இலங்கையில் அமைதியாக சுரண்ட ஏகாதிபத்தியத்துக்கு தடையாக அமைவதால் (மூலதனத்துக்கும், அதை விரிவாக்கவும் பாதுகாப்பற்ற யுத்த சூழல்), யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்த்தை ஏற்படுத்துகின்றது.

இலங்கையில் தலையீடு ஒன்றை நடத்த, அமெரிக்க உள்ளிட்ட பன்நாட்டுப் படையுடாக நிகழ்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்த தலையீடு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை கேள்விக்கிடமின்றி நசுக்கும். புலிகளின் இனதேசியத்துக்கு எதிராக சலுகைகளை வழங்கும். இதனால் புதிய நெருக்கடிகளை புலிகள் முதன்முதலாக ஆழமாக எதிர்கொள்வர். புலிகளின் இராணுவாத அரசியல் ஆயுதம், பணம் மூலம் கட்டமைக்கப்பட்டு, உலகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஆயுதம் பணத்தை கொண்டு வரும் அணைத்து முயற்சியையும் அமெரிக்க கட்டுப்படுத்தும். இதை புலிகள் மீறுவது என்பது சாத்தியமில்லை. புலிகள் சர்வதேசரீதிய ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து இதை செய்வதில்லை என்ற ஒரே காரணம், புலிகளை தனிமைப்படுத்த போதுமானது.

இந்த நிலையில் சர்வதேச பன்நாட்டு தலையீடு புலிகள் முன் சில அடிப்டையான முடிவுகளை நோக்கி நகர்த்தும்.

1.அமெரிக்க தலைமையிலான சர்வதேச ஆக்கிரமிப்பாளன் வைக்கும் முடிவுக்கு புலிகள் கட்டுப்பட்டு போராட்டத்தை கைவிடுதல். அல்லது ஒருபகுதி இதை ஏற்றக் கொண்டு துரோகியாகுதல்.

2.ஒருபகுதி அல்லது முழு அமைப்பும் எதிர்த்து போராடுதல் மூலம் முற்றாக அழிதல். அதாவது சர்வதேச மற்றும் உள்நாட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதாரவற்ற நிலைமையால் தனிமைப்பட்டு போராடி அழிதல்.

3.புலிகள் தேசியத்தில் (ஏகாதிபத்திய எதிர்ப்பில்) இடது தன்மையை எடுத்து, போராட்த்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் சர்வதேச ஆதாரவுடன் போராட்டத்தில் நீடித்தல். இந்த நிலமை உருவாக புலிகளின் வலது பிரிவுக்கு எதிரான இடது பிரிவுகள் நடத்தும் ஒருபோராட்த்தின் ஊடாகவே நிகழும்.

இந்த நிலமை தலையீடு நிகழும் பட்சத்தில் ஏற்படும். தலையீடு நோக்கிய அச்சுறுத்தல், தயாரிப்பு கட்டத்தில் பல்வேறு நாடுகள் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. சர்வதேச அங்கீகாரத்தை பெறும் முயற்சிக்கு மனிதஉரிமை அமைப்புகள், மருத்துவ உதவி அமைப்புகள், உதவி அமைப்புகளின் அறிக்கைகள் என்றுமில்லாத வகையில் ஒங்கி ஒலிக்கின்றன. வேண்டுகோள்கள் தொடர்ச்சியாக விடப்படுகின்றன. ஐக்கியநாட்டுச் சபை அதிக அக்கறையெடுத்து வருகின்றது. அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ், நோர்வை, இங்கிலாந்து போன்ற நாடுகள் உள்ளிட்ட சர்வதேச ஆக்கிரமிப்பளார்கள் அடிக்கடி கூடி சதித்திட்டங்கள் தீட்டுகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு சதியை முறியடிக்க புலிகள், மக்களுக்கு போராடும் தேசிய சுயநிர்ணய ஜனநாயகத்தை அங்கிகாரிப்பதும், முஸ்லிம் மக்களை மீளக் குடியேற்றுவதும், சுயநிர்ணயத்தை உயர்த்துவதும் (திம்புக்கோரிக்கையின் அடிப்படையில்), ஏகாதிபத்திய எதிர்ப்பை பிரகடணம் செய்வதன் ஊடாக, ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் சார்ந்து, போராட்டத்தை அரசியல் மயப்படுத்த வேண்டும். இனவெறி அரசுக்கு சார்பாக களம் இறங்கும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்தை, தியாகத்தை, இனயுத்தம் என்ற நிலையில் இருந்து தேசிய யுத்தமாக மாற்றவேண்டும். இதுமட்டுமேதான் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை முறியடித்து சுயநிர்ணய உரிமையை தமிழ் மக்களுக்கு பெற்றுத்தரும்.

பி.இரயாகரன்.

14.5.2000

இக் கட்டுரை எழுதிய பின்பு, மிக தீவிரமான யுத்த நிலைமை பகிரங்கமான காரணமின்றி சூனியமான அமைதியாகியது. புலிகள் யாழ்குடா நாட்டை கைப்பற்ற பிரகடனம் செய்து, மக்களை யுத்த பிரதேசத்தில் இருந்து வெளியேற ஒன்றுக்கு மேற்பட்ட வேண்டுகோள்களை விட்டதுடன், இராணுவத்தை சரணடையக் கோரி, ஒன்றுக்கு மேற்பட்ட கால அவகாசத்தையும் கொடுத்தனர். இது யுத்தத்தின் போக்கை தீர்க்கமாக்கும் குறித்த தன்மையை வெளிப்படுத்தியது. சர்வதேச ரீதியாக புலிகளின் அரசியல் பினாமிகள் இவற்றைக் கொண்டு சொந்தப் பிழைப்பை நடத்த, யாழ்குடாநாட்டைக் கைப்பற்றுவது பற்றி பலவிதமான பந்தாக்களைச் செய்தனர்.

ஆனால் புலிகளின் சொந்த யுத்த முடிவுகள் அவர்களின் முடிவுகளில் தங்காமல், சர்வதேச நிலைமைகளில் சார்ந்திருக்கும் புதிய சர்வதேச நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் சர்வதேச தலையீடு என்றுமில்லாத அளவுக்கு மிக தீவிரமாகியுள்ளது. இலங்கையில் எந்த நெருக்கடி ஏற்படினும் சர்வதேச தலையீடு நிகழும் வாய்ப்புக்குரிய சகல தயாரிப்பும் செய்யப்படுகின்றது. ஏகாதிபத்தியங்கள் தொடர்ச்சியாக இலங்கையில் விரிவாக தலையீடுவதுடன், சகல விதமான ராஜதந்திர முயற்சிகளிலும் ஈடுபடுகின்றது. இராணுவ ரீதியாகவும், நிதி ரீதியாகவும் விரிவாக உதவுவதுடன், இராணுவ ஆலோசனைகளையும் வழங்குகின்றது.

இலங்கையில் ஏகாதிபத்திய பன்நாட்டு படை தலையிட்டு புதிய சர்வதேச நெருக்கடியை எதிர் கொள்வதா அல்லது இலங்கை இராணுவம் ஊடாக நிலைமையை சமாளிப்பதா என்பதில், ஏகாதிபத்தியங்கள் தமது கவனத்தைக் குவித்து இலங்கையில் முகாமிட்டுள்ளனர். அந்த முயற்சியில் தமது காலை இறக்கியுள்ளனர்.

இந்த நிலையில் புலிகள் செய்த மண் மீட்பு யுத்தப் பிரகடனம் திடீரென காரணமின்றி  கைவிடப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் முன்வைக்கப்படவில்லை. இங்கு நிகழ்ந்தது என்ன? இரண்டு தெளிவான காரணங்கல்  ஏதாவது ஒன்று காரணமாக இருந்துள்ளது.

1.சர்வதேச ஏகாதிபத்தியங்கள் திட்ட வட்டமாக நேரடியாகவே புலிகளுக்கு எச்சரிக்கை செய்து, யுத்தத்தை நிறுத்தியிருக்க வேண்டும். அதாவது புலிகளை கட்டுப்படுத்தக் கூடிய வகையில் புலிகளின் அரசியல், இராணுவ வழிகள் மீது செல்வாக்கு வகிப்பவர்களாக இருக்கின்றனர்.

2.சர்வதேச பன்நாட்டு படைகளின் தலையீட்டின் அபாயத்தை புரிந்து, அதை தடுக்க யுத்தத்தை நிறுத்தியிருக்க வேண்டும்.

இந்த இரு போக்கிலும் புலிகளின் மௌனம், எதிரியை மக்களுக்கு இனங் காட்ட மறுப்பதும் தேசிய சுயநிர்ணய உரிமைக்கு வேட்டு வைப்பதாகும். சர்வதேச நிhப்பந்தங்களை எதிர் கொள்ள, இராணுவ ரீதியான கொரில்லா வழிமுறையை புலிகள்  கைக்கொள்ளும் தன்மை வெளிப்படுகின்றது.

சர்வதேச ராஜதந்திர முயற்சிகள், தலையீட்டை இலகுபடுத்தும் வகையில் சிங்கள இனவாத அரசிடம் கோருகின்ற தீர்வுத் திட்டங்கள் இனவாத நாற்றத்தால் நாறிவரும் நிலையில், அதை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தும் போக்கில் ஏகாதிபத்திய தலையீட்டு அபாயத்தை அம்பலம் செய்வது அவசியமாகும். ஏகாதிபத்தியங்கள், உலகை ஆளத் துடிக்கும் ஒரு வெறி கொண்ட சுரண்டல் நாய்களாகும். இது சகல செய்தி ஊடகங்கள் ஊடாகவும், தனது இராணுவ அரசியல் பலத்தினூடாகவும் நாய்வாலை நிமிர்த்தியதாக நம்பவைத்துவிடக் கூடிய சகுனிகள் என்பதை புரிந்து கொண்டு, சுயநிர்ணயத்தை உயர்த்தி அதை அடிப்படையாக கொண்டு, சுயநிர்ணயத்தை குழிதோண்டிப் புதைக்க முனையும் அனைத்தையும் அம்பலப்படுத்தி அரசியல் மயமாக்க வேண்டும்.

ஆனால் புலிகளின் நீண்ட மௌனங்கள், எதிரியை இனம் காட்ட மறுப்பதும், நிலைமை நேரடியாக வரும் போது கொரில்லா வடிவமான தாக்குதல் வழியை கொள்ளத் தயாராக இருப்பதும் அல்லது அரசியல் ரீதியாக சரணடைய தயாராவதும் என்ற பாதையை கைக் கொள்கின்றனர். சரணடைவு அற்ற கொரில்லா தாக்குதல் பணி நடவடிக்கைகளை, ஏகாதிபத்தியம் பயங்கரவாத நடவடிக்கையாக உலகமயமாக்கி, தனது ஆக்கிரமிப்புக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் புதிய நிலைமையும் காணப்படுகின்றது.

யாழ்குடா நாட்டை கைப்பற்ற புலிகள் நடத்தும் எந்த தாக்குதலும், சர்வதேச தலையீட்டை உருவாக்கிவிடும் என்றளவுக்கு நிலைமை காணப்படுகின்றது. மாறாக குடாநாட்டை பற்றி ஏகாதிபத்தியம் முடிவு எடுக்க நேரம் கொடுக்காமல் கைப்பற்றவும், கைதான இராணுவத்தை விடுவிக்கின்ற ஒரு நிலைமையில் மட்டுமே, பன்நாட்டு தலையீட்டை நியாயப்படுத்த முடியாத நெருக்கடியை ஏகாதிபத்தியத்துக்கு ஏற்படுத்தும். கொரில்லா பாணியிலான திடீர் தாக்குதல் ஒன்றின் மூலம் கைப்பற்றும் வழியில் தான் புலிகள் திட்டமிடுவர் என்பது ஊகிக்க கூடியவை தான் இதை எதிரியும் எதிர் கொண்டு காத்திருப்பான் என்பதுடன், அதை எப்படி தலையீட்டுக்கான பாதையாக மாற்றுவது என்பதையும் ஏகாதிபத்தியம் திட்டமிடும். இது யுத்தத்தை நீடித்த வகையில் இழுபட வைப்பதும் அல்லது மக்கள் படுகொலையை நடத்துவதும், அதன் மூலம் தலையீட்டுக்கு மனிதாபிமான முகம் வழங்குவது ஒரு வழியாகும். அல்லது புலிகள் கைப்பற்றிய இராணுவத்தை கொன்று விட்டதாகவும் அல்லது மீட்க போவதாக பிரகடனம் செய்த படியும், திடீர் தாக்குதலில் கைப்பற்றப்படும் போது புலிகளுக்கு எதிராக இயங்கிய ஆயிரக்கணக்கான அரசு கைகூலிகளின் பாதுகாப்பு பற்றி கூறிய படி, தலையீட்டுக்கான வாய்ப்பு விரிவாக பயன்படுத்தப்படும்.

இந்த நிலைமை ஒருபுறமிருக்க, யாழ் குடாநாட்டில் இராணுவம் தன்னை மீள ஒழுங்கமைத்துள்ளது. கூலிப் மாரடிக்கும் பட்டாளமாக இருந்த போதும், எதற்காக சண்டை செய்கின்றோம் என்று தெரியாத நிலையில் இருந்து, புதிதாக தமது உயிர் பாதுகாப்புக்காக தற்காப்பு சண்டை அல்லது முன்னேறிய சண்டை என்ற நிலைக்குள் இராணுவம் யுத்தத்தை நடத்துவதில் ஒருங்கமைத்துள்ளது. இந்த புதிய நிலைமை ஏற்பட புலிகளின் சொந்த தவறுகள் தான் காரணமாகும். யுத்த முனையில் கைதிகள் பற்றிய புலிகளின் மக்கள் விரோத அரசியல் கண்ணோட்டம், கைதிகளை பிடிக்கப்படுவதை தவிர்த்து கொன்றுவிடுவதை ஒரு யுத்த வழியாக கொண்டிருந்தனர். முல்லைத்தீவு இராணுவ முகாம் அழிப்பில் எந்த ஒரு இராணுவமும் கைது செய்யப்படவில்லை என்ற புலிகளின் நிலைமை, இராணுவத்தில் உயிருக்கான தற்காப்பு பீதியை தீவிரமாக்கின்றது. இங்கு புலிகள் ஒரு இராணுவத்தையும் கைது செய்யவில்லை என்கின்ற போது, கடைசி இராணுவ வீரன் வரை போரிட்டு மடிந்தானா? அவன் வீரானாக போராடினானா? புலிகள் கூட சயனைட்டை பாவிப்பதன் மூலம் தற்கொலைக்கு பாதை காட்டும் போது, கூலி இராணுவம் எப்படி கடைசி இராணுவம் வரை போராடியிருக்கும்?   இது போன்ற புலிகளால் கைப்பற்றப்பட்ட பல யுத்த முனைகள் இதை தெளிவாக பிரதிபலித்தது. இந்த இடத்தில் புலிகள் விட்ட சரணடைவுக் கோரிக்கைக்கு ஒரு இராணுவ வீரன் கூட காது கொடுக்கவில்லை. ஏன்? இவை முன்பு கைதிகளை கையாண்ட அரசியல் வழியினால் ஏற்பட்டது. சிங்கள இராணுவம் போராட விரும்பாத ஒரு மனநிலையிருந்தும், அவர்கள் சரணடைய தயாராக இல்லை. உலக வரலாற்றில் யுத்தம் செய்ய விரும்பாத இராணுவம், தோல்வி பெறும் இராணுவம், பெரும் தொகையாக சரணடைவது வரலாறாகும். ஆனால் இது இலங்கையில் விதிவிலக்காகும். இது புலிகளின் தவறான அரசியல் மார்க்கத்தினால் ஏற்பட்டது. இதை ஒத்த இன்னொரு உதாரணமாக புலிகள் எதிரியாக காட்டி அழித்தொழிப்பை செய்த சொந்த மக்கள் பிரிவை சேர்ந்த நபர்கள், உலக வரலாற்றில் எந்த போராட்டமும் செய்ததில்லை. ஆனால் அதே போல் அதிக எதிரியைக் கொண்ட இயக்கமாகவும் புலிகளே உலக வரலாற்றில் காணப்படுகின்றனர். அதிகமான எதிரிகளை பிரகடனம் செய்து அழிக்கும் போது, நேர்விகிதத்தில் எதிரிகள் அதிகரிக்கின்றனர் என்பது புலிகளின் வரலாறு காட்டுகின்றது. கைதிகளை பிடிக்க மறுத்து கொன்றுவிடும் போது, தற்பாதுகாப்புக்காக போராடும் தன்மை வளர்ச்சி பெறுகின்றது. அதாவது ஒரு போராட்டம் வெற்றி பெறுவதற்கான சூழலை கடுமையாக்குகின்றது. இதனால் அர்த்தமற்ற சொந்த தியாகங்கள் ஊடாக மனித உயிர்கள் வீணாடிக்கப்படுகின்றது. போராட்டம் அதிக நண்பர்களை தேட வேண்டுமே ஒழிய எதிரிகளை அல்ல. ஒரு சமுதாயத்தில் சமுதாய விரோத தன்மை கொண்ட எதிரிகள் மிக சிறதாளவாகவே இருக்கும். ஆனால் புலிகளின் போராட்டம் அதிக எதிரிகளை உருவாக்கியுள்ளது. அத்துடன் சரணடையும் கூலிப் பட்டாளத்தை கைதிக்குரிய நடைமுறையைக் கையாளாமை, போராட்டத்தை மிக கடினமாக்கி தியாகத்துடன் கூடிய மனித இழப்பை அதிகம் கோருகின்றது. நிலைமை தெளிவாக, இராணுவ சரணடைவை உருவாக்காது என்பதை தெளிவாக்கின்றது. சுற்றி வளைக்கப்பட்ட குடாநாட்டு இராணுவம் தற்காப்புக்காக கடைசி இராணுவம் இருக்கும் வரை போராடியேயாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வாழ்வுக்கான விதியாகியுள்ளது. இது போராட்டத்தை பாரிய இழப்பின் ஊடாக சந்திக்க வேண்டிய நிலைமையை தீர்க்கமாக்கியுள்ளது. இது சர்வதேச தலையீட்டுக்கான பாதையை செப்பனிடுகின்றது.

தமிழ் மக்களின் நீண்ட தியாகத்துடன் கூடிய தேசிய விடுதலைப் போராட்டம், உலகமயமாதல் ஒழுங்கில் நடக்கும் தலையீட்டின் ஊடாக, தேசிய சமூக பொருளாதார பண்பாடுகள் சிதைக்கப்படும் அளவுக்கு புதிய நிலைமைகள் காணப்படுகின்றது. புலிகள் தேசிய விடுதலைக்கு பதில் இனவிடுதலையை வைப்பதால், இதன் அபாயம் மேலும் அதிகமாகியுள்ளது. தேசிய விடுதலை சமூக பொருளாதார பண்பாட்டுக் கூறுகளை அழிக்கும் அனைத்து போக்குக்கும் எதிராக போராட வேண்டும். உலகமயமாதல் தேசிய எல்லை கடந்து வளர்ச்சி பெறுகின்ற போது, அது தமிழ் தேசியத்தையும் விட்டு விடுவதில்லை. இது சிங்கள இனவாத அரசின் ஆதரவுடன் அதை அழிப்பதில் பின்நிற்க்கவில்லை. இதை புலிகள் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டு போராடாத வரை, புலிகளின் தேசியம் இனத் தேசியமாகவே இருப்பது மறுக்க முடியாத அரசியல் உள்ளடக்கமாகும். சிங்கள இனவெறி அரசு சிங்கள இன தேசியத்தின் பின், ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி இராணுவமாக மாறிவரும் போக்கில் இருந்து, தமிழ் மக்களின் தேசியம் வேறுபட வேண்டுமாயின், எதை இனவெறி அரசு செய்கின்றதோ அவை அனைத்தையும் எதிர்த்து புலிகள் போராட வேண்டும். இல்லாத வரை இத் தேசியம் ஏகாதிபத்திய நுகத்தடிக்குள் வீழ்வது தவிர்க்க முடியாது.