08152022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

இலங்கையில் ஒரு புரட்சிகரமான சர்வதேசியத்தை நிறுவும் போராட்டத்தில் ஏற்படும் திசை விலகல்கள் மீது

மிக அண்மையில் "தமிழீழ புதிய சனநாயக கட்சி" ஒன்றை "தேச பக்தன்" இதழ் பிரகடனம் செய்திருந்தது. 1983 இல் எப்படி பல்வேறு இயக்கங்கள் உருவானதோ, அதற்கு எப்படியான ஏற்ற சூழல் இருந்ததோ, அதையொத்த "கட்சி"ப் பிரகடனங்கள் புதிய போக்காகியுள்ளது. "கட்சி"ப் பெயரிலான பிரகடனங்கள் புரட்சியை ஏற்படுத்திவிடுவதில்லை. இலங்கையில் சிங்கள இனவாத இன அழித்தொழிப்பிற்கு எதிரான போராட்டத்தில், புலிகள் வலது பிற்போக்கு இனத் தேசியவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் நிலையில், மாற்றான கட்சிப் பிரகடனங்கள் விசனிக்கத் தக்கவகையில், அதன் அரசியல் வெளிப்பாடுகள் காணப்படுகின்றது. விமர்சன ரீதியாக பலவற்றை தேசபக்தன் கொண்டிருந்த போதும், முக்கியமான கோட்பாட்டு விடயங்கள் மீது மட்டும் விமர்சிக்க முனைகின்றது.

இலங்கையில் ஒரு பாட்டாளி வர்க்க கட்சியை உருவாக்குவதற்கும், ஒரு முற்போக்கு தேசிய முன்னணியை உருவாக்குவதற்கு முன், குறைந்த பட்சம் சில அடிப்படையான அரசியல் நிலைமைகளை ப+ர்த்தியாக்கியிருக்க வேண்டும்.

1.ஏகாதிபத்திய பொம்மை சிங்கள இனவாத அரசு இன அழித்தொழிப்பையும், புலிகளின் வலது இனவாதப் பிற்போக்கையும், இலங்கை நிலைமையில் குறிப்பாக கவனத்தில் கொண்டே கட்சிப் பிரகடனம் செய்யப்பட வேண்டும். அதாவது இலங்கையில் ஒரு கட்சி கட்டப்படும் வடிவமும், இந்தியாவில் ஒரு கட்சி கட்டப்படும் வடிவமும் முற்றாக வேறுபட்டவை. இந்தியாவில் 1960 களில் ஏற்பட்ட நக்சல்பாரி எழுச்சியின் தோல்விகள், அதன் மீதான அரசியல் விவாதம் பல கட்சிகளை உருவாக்கியது. இது சரியான அரசியல் மார்க்கத்தை தனித் தனியான அரசியில் அணிதிரட்டல்களில் இருந்து, நடைமுறையூடாக நிறுவி ஒன்றுபட்ட கட்சியை நோக்கி முன்னேறும் அரசியில் நடைமுறையை, இந்தியாவின் குறிப்பான புரட்சிகர சூழல் ஏற்படுத்தியுள்ளது. அதாவது பல குழுக்கள் தனித் தனியாக உருவாகி, அதில் இருந்து ஒன்றுபட்ட கட்சியை வந்தடையும் நிலைமை அங்கு காணப்படுகின்றது. இது 1960 களில் ஏற்பட்ட எழுச்சி, தோல்வியில் எற்பட்ட அனுபவ ரீதியான நடைமுறை ஊடாக, தத்துவார்த்த ரீதியில் முரண்பாடுகள் உருவான போது, அங்கு இவ் உருவாக்கம் சட்ட பூர்வ, சட்ட விரோத நிலைமைகள் ஊடாக பல கட்சிகள் வந்தடைந்தது. ஒரு கட்சியில் இருந்து புரட்சிகர முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு பல கட்சிகள் உருவாகுவதும், அதில் இருந்து ஒரு ஒரே கட்சியை நோக்கி மீள முன்னேறுவதும் என்ற நடைமுறை காணப்படுகின்றது.

இந்த நிலைமை இலங்கைக்கு பொருந்துமா? இலங்கையில் நிகழும் இனவாத யுத்தமும், பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர தொடர்ச்சியின்மையும் அதிகளவுக்கு பாதகமாகவுள்ளது. அத்துடன் சட்ட பூர்வமான அனைத்து செயல் களமும் பாசிய வன்முறைக்கும், படுகொலைக்கும் உள்ளாவதால், சட்ட விரோதமான செயல் வடிவம் மட்டுமே மாற்றுப் பாதையாக உள்ள போது, கட்சி கட்டப்படும் வடிவம் முற்றாக மாறானது.

கட்சியை மார்க்சிய லெனிய மாவோ சிந்தனைக்குள் காணப்படும் முரண்பாட்டின் அடிப்படையில் (இந்தியாவில் உருவாகுவது போல்) மிக இறுக்கமான ஒரே கோட்பாட்டு நபர்களைக் கொண்டு மட்டும் உருவாக்க வேண்டிய அவசியம் இங்கு அற்றுப் போகின்றது. மார்க்சிய லெனிய மாவோ சிந்தனை ஏற்றுக் கொள்ளும், பரந்த புரட்சிகர பிரிவை உள்ளடக்கிய வகையில், இக்கட்சி முரண்பட்ட பிரிவுகளை உள்ளடக்கியே உருவாக்கப்படவேண்டும். ஏனெனின் பொதுவாகவே பாசிசம் அனைத்து சட்ட பூர்வ ஜனநாயக வடிவங்களை ஒடுக்குவதால், பாட்டாளி வர்க்க சக்தி இதனால் பலத்த நெருக்கடிகளை முகம் கொடுக்கும் போது, முரண்பட்ட கோட்பாட்டு உருவாக்கம் இயல்பாகின்றது. இந்த முரண்பட்ட பிரிவுகளிடையே பாட்டாளி வர்க்கப் புரட்சியை நேசித்து போராடக் கூடிய பிரிவுகளின் ஐக்கியம், முரண்பாட்டையும் பிளவையும் விட முதன்மையானது. இலங்கையின் பாசிச நெருக்கடிக்குள் ஐக்கியம் மார்க்சிய லெனிய மாவோ சிந்தனையை முன்வைக்கும் சக்திகளுக்கு முதன்மையானது. முரண்பாடு இரண்டாம் பட்சமானது. இது மட்டும் தான் இலங்கையில் புரட்சிகர சூழலை உருவாக்கும் ஆற்றல் வாய்ந்தவை. இங்கு ஐக்கியம் புரட்சிகர நெருக்கடிகளை சந்திக்கின்றமையால், பிளவு இரண்டாம் பட்சமாவதுடன், ஐக்கியத்தை நோக்கிய தேடுதல், கோட்பாட்டு ஒருமையை புரட்சிகர சரியான பாதை உருவாக்குவதை தீவிரமாக்கும். இங்கு பிளவு என்பது, முரண்பாடு என்பது குறித்த புரட்சிகர நெருக்கடிகளில் அர்த்தமுள்ள அரசியல் நடைமுறைப் பாதையில் களையப்பட்டுவிடும்.

இதை விடுத்து பிளவு ஏற்படின் அது கோட்பாட்டு அடிப்படையை கொண்டிருப்பின், அப்பிளவு  ஐக்கியம் ஏற்பட்ட பின்  ஏற்படின், ஐக்கியம் ஏற்படாத பிளவுகள் நீடிப்பதை விட ஒரு முன்னேற்றமான நிலையில் நிகழ்வதாக இருப்பதால், அப் பிளவையிட்ட அச்சம் இரண்டாம் பட்சமாகி விடுகின்றது. இன்று ஐக்கியம் எல்லாவற்றையும் விட முக்கியமானது, முதன்மையானது. இதை காணத் தவறும் எல்லா நடத்தைகளும், குறிப்பாக இலங்கை நிலைமையை மதிப்பிடத் தவறியதன் விளைவாகும். இது குழுவாதத்தின் பொதுவான தன்மையாகும். இது இலங்கையின் புரட்சிகர நிலைமையை உருவாக்கத் தடையான குறுங்குழுவாதமாகும்.

2. ஐக்கியத்தை முதன்மையானதாக முன்வைத்து, உருவாக்காத கட்சிப் பிரகடனங்களை முன்வைக்கும் போது, குறைந்த பட்சம் ஒரு கட்சி தனது திட்டத்தின் அரசியல் உள்ளடக்கத்தை, அரசியல் சக்திகள் மத்தியில் விரிவாக விவாதித்து இருக்கவேண்டும். முரண்பட்ட அனைத்து விடயங்களையும் முழுமையாக விவாதித்து இருக்க வேண்டும். திட்ட அரசியல் அடிப்படைகள், முரண்பட்ட கூறுகளை தனித்துவமாக, அவற்றை விரிவாக பரந்த தளத்தில் விவாதிக்காத கட்சிப் பிரகடனங்கள் குறுங்குழுத்தன்மை வாய்ந்தவையாகும். இது ஐக்கியத்தை புறக்கணிக்கும் தனிமைவாத பண்பாடாகும். இலங்கையின் நெருக்கடியான அரசியல் நிலையில் இது போன்ற செயல்கள் சிறுபிள்ளைத் தனம் வாய்ந்தவையாகும். விவாதமும் இன்றியும், ஐக்கியத்தை முதன்மைப்படுத்தாத கட்சிப் பிரகடனங்கள், கடந்த கால இயக்க பாணியிலான தொடர்ச்சியேயாகும். இலங்கையின் குறிப்பான நிலைமை பற்றி மதிப்பீடு இன்றி இவை வெளிவருவது, புரட்சிகர நிலலமை மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி மேலும் பின் தள்ளுவதாகும்.

3.கட்சி ஒன்றை இன்று பகிரங்கமாக பிரகடனம் செய்வது என்பது, இலங்கையின் நிலைமையை மதிப்பிடத் தவறியதன் விளைவாகும். கட்சி ஊழியர்களையே உருவாக்க முடியாத புறநிலை உள்ள போது, அதுவே பணியாக உள்ள போது, கட்சிப் பிரகடனங்கள் வெறும் விளையாட்டு விளம்பரமாகிவிடுகின்றது. கட்சி பற்றிய புரட்சிகரத் தன்மையைப் பொதுத் தன்மையில் கேலிக்குரியதாக்கிவிடும். பகிரங்கத் தன்மை மேலும் புரட்சிகர நெருக்கடியை தோற்றுவித்து, குறைந்த பட்ச வேலையைக் கூட முடமாக்குவதாகும். கட்சியின் பணி பற்றிய மதிப்படின்றியே குறுங்குழுவாத பிரகடனமாகவே முன் வருகின்றது.

"தமிழீழ புதிய சனநாயக கட்சி" யின் அரசியல் திட்டம் மீதான விவாதத்தை செய்வதற்கு, அதை இது வரை பார்க்கமுடியவில்லை. ஆனால் சில கட்சி வெளிப்பாடுகளை, கொள்கைகளை தேசபக்தன் இதழில் வெளிப்படுத்தியிருந்தனர். இதன் மீதான விமர்சனம் இன்று அவசியமாகிவிடுகின்றது.

முதலாவதாக அவர்களின் கட்சிப் பெயர் "தமிழீழ புதிய சனநாயக கட்சி" என்று குறிப்பிடுகின்றனர். புதிய சனநாயக கட்சி என்பதன் பின்னால் உள்ள வர்க்க அடிப்படை, அரசியல் ரீதியாக கேள்விக்குள்ளாகின்றது. புதிய சனநாயக புரட்சி ஜனநாயகப் புரட்சியை அடிப்படையாக கொள்கின்றது. இது சாராம்சத்தில் தேசிய முதலாளித்துவ பிரிவை உள்ளடக்கிய ஒரு முன்னணியாக இருக்கும் போது, அது ஒரு கட்சியாக எப்படி இருக்க முடியும். கட்சி என்பது ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியாகவே எப்போதும் இருக்கின்றது. புதிய சனநாயகம் என்பது இரண்டு வர்க்கத்தின் (பாட்டாளி மற்றும் தேசிய முதலாளிகளின்) புரட்சிகர போக்காக இருப்பதால் மட்டுமே, அக்கால கட்டம் புதிய சனநாயகம் என்று வரையறுக்கப்பட்டது. இந்தக் கால கட்டத்தில் ஒரு முன்னணியிருக்க முடியுமே ஒழிய, கட்சி என்பது வர்க்க சமரசத்தை அரசியல் ரீதியில் கொண்டதாகும். இரண்டு வேறுபட்ட வர்க்கத்தின் அரசியல், ஒரு கட்சியில் எப்படி ஒன்றுபட்டு இருக்க முடியும். ஒரு முன்னணியில் இது சாத்தியமானது. கட்சியில் சாத்தியமானதில்லை. ஒரு முன்னணி, ஒரு கட்சியின் அரசியல் உள்ளடக்கம், வேறுபாடு சரியாக புரிந்து கொள்ளாத வரை, புதிய சனநாயக புரட்சியின் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாது.

தேசிய முதலாளித்துவ பிரிவுகளின் சனநாயகப் புரட்சி, ஏகாதிபத்திய சகாப்தத்தில் குறிப்பாக சோவியத் புரட்சியின் பின்பு, தனித்துவமாக சொந்த வர்க்க ஆற்றலூடாக புரட்சி செய்யும் ஆற்றலை இழந்துவிட்டது. அப்படி ஒரு முயற்சியை செய்து முன்னேறும் ஒவ்வொரு நிலையிலும், அது தரகு முதலாளித்துவ பிரிவாக சீரழிகின்றது. ஆனால் சனநாயகப் புரட்சி உலகமயமாதல் நிகழ்ச்சியூடாக தீவிரமான கொதி நிலையில் வெளிப்பட்டுவருவது இயங்கியலாக உள்ளது. இந்த நிலையில் பாட்டாளி வர்க்கம் தனது வர்க்க கடமையுடன், தேசிய ஜனநாயகப் புரட்சியையும் நடத்த வேண்டிய பொறுப்பை கவனத்தில் கொள்கின்றது. பாட்டாளி வர்க்கம் சனநாயகப் புரட்சியை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு ஏகாதிபத்திய  சகாப்தம் நீடிக்கின்றது. இந்தக் கால கட்டத்தை உள்ளடக்கிய புரட்சிகர சமூக அமைப்பை உருவாக்க, புதிய சனநாயக கால கட்டம் வரையறுக்ப்பட்டு புதிய சனநாயக அரசியல் நடைமுறை ஐக்கியத்தின் ஊடாக ஒருங்கமைக்கப்படுகின்றது.

இங்கு இந்த புதிய ஜனநாயக கால கட்டத்திய அணிகளை ஒன்றிணைப்பதில் பாட்டாளி வர்க்கம் முன்முயற்சி எடுக்கின்றது. பாட்டாளி வர்க்கம் தனது சொந்த கம்யூனிசக் கட்சியை தாண்டி, பல்வேறு வர்க்கப் பிரிவுகளை தனது தலைமையில் ஒன்றிணைக்க கட்சியை அல்ல முன்னணி அமைப்புகளை உருவாக்கின்றது. சனநாயகப் புரட்சிகர கடமைகளை நிறைவு செய்யும் திட்டத்தை அடிப்படையாக கொண்ட, பல்வேறு வர்க்க பிரிவுகளின் கோரிக்கையை உள்ளடக்கிய ஐக்கிய முன்னணியை உருவாக்கின்றது. இதற்குள் பாட்டாளி வர்க்கம் உள்ளிட்ட தேசிய முதலாளித்துவ கூறுகளும், சனநாயக கடமைக்கு அப்பால் தனது வர்க்க நலனை நிறைவு செய்யும் கடமையை கொண்டு காணப்படுகின்றது. சனநாயகப் புரட்சிக்குரிய கடமைகளை சனநாயகக் கட்சி ஒன்று தலைமை தாங்கும் பட்சத்தில், பாட்டாளி வர்க்க கட்சியின் வர்க்கக் கடமை கேள்விக்குள்ளாகி விடுகின்றது. கட்சி என்பது ஒரு வர்க்கத்தின் தலைமை தாங்கும் அமைப்பு என்பதால், அது ஒன்றில் பாட்டாளி வர்க்க நலன் அல்லது தேசிய முதலாளித்துவ வர்க்க நலனை பிரதிபலித்தேயாக வேண்டும். இது புதிய சனநாயக கடமையை, அதன் அரசியல் உள்ளடக்கத்தின் மீது அரித்துவிடுகின்றது. இங்கு புற நிலையாக பாட்டாளி வர்க்க கட்சி உள்ள போது, இந்த சனநாயக கட்சிக்கிடையில் வேறுபாடு அரசியல் மார்க்க ரீதியாகவே அதிகரித்து விடும் அல்லது அது மறைந்து விடும். பாட்டாளி வர்க்கத்தின் கடமைக்கும், சனநாயக கட்சியின் கடமைக்குயிடையில் உள்ள புரட்சிகர இடைவெளி, அடிப்படையில் எதுவுமற்றதாக அல்லது உறவற்றதாக மாறிவிடுகின்றது. புதிய சனநாயக புரட்சி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட வர்க்கங்களின் ஐக்கியத்தை உள்ளடக்கிய காலகட்டம் என்பதால், அதை ஒரு கட்சி பிரதிநிதித்துவம் செய்ய முடியாது, ஒரு ஐக்கிய முன்னணி தான் பிரநிதித்துவம் செய்ய முடியும். இல்லாத வரை கட்சியை புரிந்து கொள்ளும் அரசியல் மற்றும் வர்க்க உள்ளடக்கம் சிதைக்கப்படும்.

இங்கு மற்றொரு பிரச்சனையாக, இலங்கையில் "புதிய ஜனநாயக கட்சி" ஒன்று முன்கூட்டியே இருந்து வருகின்றது. இதற்கு முன் "தமிழீழ" என்று இணைத்துக் கொண்டதன் மூலம், நடைமுறை குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அரசியல் குழப்பத்தையும் உருவாக்கிவிடுகின்றது. அவர்கள் புதிய ஜனநாயக கட்சியை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியாக கருதும் போக்குடன் செயல்படும் போது, "தமிழீழ புதிய சனநாயக கட்சி"ப் பிரகடனம் மேலும் கம்யூனிச அடிப்படை மீதான திரிபை ஏற்படுத்தி விடுகின்றது. புதிய ஜனநாயக காலகட்டம் பற்றிய அரசியல் வரையறையை, கட்சிக்குள் உள்ளடக்குவதன் மூலம், பாட்டாளி வர்க்கத்தின் கடமையை சனநாயக கடமைக்குள்  உள்ளடக்குவதாகும். இது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கடமையை கைவிட்டுச் செல்வதாகும். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேசிய முதலாளித்துவத்தை தாண்டி, இக்கட்சிகளின் அரசியல் கோரிக்கை நகரமாட்டாது. ஏனெனின் இக் கட்சிகளின் பெயர்களின் உருவாக்கம், அதைத் தான் எல்லைப்படுத்துகின்றது. இங்கு பாட்டாளி வர்க்கத்தின் கைகள் கட்டிப் போடப்படுகின்றன. ஏனெனின் கட்சியின் நோக்கம் புதிய சனநாயக கடமையுடன் நின்று போகின்றது.

தேசியம் பற்றிய தேசபக்தன் அரசியல் வரையறை இதை மேலும் தெளிவாக்கின்றது. இதைப் பார்ப்போம். "... நவகொலனி நாட்டு  தொழிலாளி வர்க்கமும், புரட்சிகர சக்திகளும் எதன் அடிப்படையில் தேசிய இனம் என வரையறுப்பது, தேசிய சுயநிர்ணய உரிமையை தேசிய அரசுக்கான போராட்டத்தை எப்போது முன்னேடுப்பது, ஆதாரிப்பது, "தேசியக் கோரிக்கை எல்லாம் முதலாளித்துவ கோரிக்கையே ஒழிய பாட்டாளி வர்க்க கோரிக்கை அல்ல" என பார்த்து நவகொலனிய தேசியப் பிரச்சனையை  குறிப்பாக  புரிந்து கொண்டு தெளிவான நிலைப்பாட்டை எடுக்காது அன்னியப்படுகின்றனர்." என்று தமிழீழ மக்கள் கட்சி திட்டம் மீதான விமர்சனத்தில், எனது தேசிய இனப் பிரச்சனை தொடர்பான நூலின், தலைப்பின் ஒரு பகுதியை விமர்சிக்கின்றனர்.  தேசிய இனப் பிரச்சனை தொடர்பான தேசியவாத விளக்கங்கள் புதிய ஜனநாயக புரட்சியின் அரசியல் உள்ளடக்கத்தை புரிந்து கொள்ள தவறியதைக் காட்டுகின்றது. ஏன் பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் புதிய ஜனநாயகப் புரட்சி முன்வைக்கப்படுகின்றது என்பது தொடர்பாகவோ, ஏன் முதலாளித்துவ நாடுகளில் இவை வைக்கப்படுவதில்லை என்பது தொடர்பாகவோ எந்தவிதமான அரசியல் விளக்கமின்மையே, தேசியத்தை தனித்துவமாக விளக்கும் பண்பு எழுகின்றது. தேசியத்தை மூன்றாம் உலக பாட்டாளி புரிந்து கொள்ளும் வடிவத்துக்கும், முதலாளித்துவ நாட்டு பாட்டாளி புரிந்து கொள்ளும் வடிவத்துக்கும் வேறுபாடு இருக்க முடியுமா?  இல்லை ஒருக்காலும் இல்லை. சர்வதேசியத்தை ஏற்றுக் கொள்ளும் பாட்டாளி வர்க்கம், தேசியத்தை எப்போதும் அதன் வர்க்க கண்ணோட்டத்தில் புரிந்து கொள்கின்றது. இங்கு வேறுபட்ட ஏற்றத் தாழ்வான சமூக பொருளாதார நிலைமைகளால், சர்வதேசிய கடமையை நிறைவு செய்யும் பாதை வேறுபடுகின்றது.

புதிய ஜனநாயக புரட்சி உள்ளடக்கத்தில் சர்வதேசிய கடமையை முன்னெடுக்கும் அதே நேரம், தனது தலைமையில் சனநாயக புரட்சியையும் நிறைவு செய்கின்றது. சர்வதேசிய வாதிகள் எப்போதும் ஜனநாயகக் கடமையை ஏற்றுக் கொள்வதுடன், அதைக் கோரவும் செய்கின்றனர். ஏகாதிபத்திய உலகமயமாதல் தேசங்களின் தேசிய சொத்துரிமைகளை அழித்து உலகமயமாதலை தீவிரமாக்கும் போது, தேசங்களுக்கான தேசிய முதலாளித்துவ போராட்டங்கள் இயல்பாக எழுகின்றன. அது தனது தேசிய முதலாளித்துவ கோரிக்கையை முன்வைக்கின்றன. இந்த தேசிய அழிப்பை பாட்டாளி வர்க்கம் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. ஏகாதிபத்தியம் தேசிய முதலாளித்துவத்தை அழித்து ஒழிக்கும் போது, அதில் ஜனநாயகம் மற்றும் தேசத்தின் பாதுகாப்பு குறித்து போராடுகின்றது. புதிய ஜனநாயகப் புரட்சி உள்ளடக்கத்தில் தேசிய முதலாளித்துவத்தின் தேசிய கோரிக்கையையும் இணைத்தே முன்னெடுக்கின்றது. அதை தனது சொந்த தலைமையில் முன்னெடுப்பதில் பாட்டாளி வர்க்கம் தயங்கியதில்லை. அதை மூன்றாம் உலக நாடுகளின் சர்வதேசிய பொது வழியாக மார்க்சியம் முன்வைக்கின்றது.

இதனால், "தேசியம்" முதலாளித்துவ கோரிக்கை அற்றதாகி விடுமா? தேசியம் என்பது தேசங்களின் உருவாக்கத்தை குறித்து நிற்கின்றது. இந்த தேசங்களில் தேசிய முதலாளித்துவம் தனது சுரண்டலை அடைப்படையாக கொண்டே தேசங்களை நிர்ணயம் செய்கின்றது. ஆனால் பாட்டாளி வர்க்கம் இந்த தேசியத்துக்கு பதில் சர்வதேசியத்தை முன்வைக்கின்றது. இது தேசியத்தின் சுரண்டல் வடிவத்தை திட்டவட்டமாக எதிர்த்து நிற்கின்றது. தேசியத்தை யாரும் குறிப்பாக புரிந்து கொள்ள முடியுமா? அல்லது பொதுவாக புரிந்து கொள்ள முடியுமா? நவகாலனி தேசத்தை பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ தேசியம் அல்லாத வகையில் எப்படி தேசியத்தைப் புரிந்து கொள்வது? தேசியத்தை பாட்டாளி தேசியமாக புரிந்து கொள்வதா? அப்படியாயின் ஏன் புதிய ஜனநாயக புரட்சி அவசியமாகின்றது! அடிப்படையான கேள்வி நவகாலனிய நாடுகளில் தேசிய முதலாளித்துவ கூறுகள், தேசிய முதலாளித்துவ புரட்சியை கோராதா? அதற்கும் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்துக்மிடையில் உள்ள வேறுபாடு என்ன? புதிய ஜனநாயக புரட்சிகர அரசில் தேசிய முதலாளிகள் இருப்பார்களா இல்லையா? தேசிய முதலாளித்துவ உற்பத்தி, அதை ஒட்டிய பண்பாட்டு அம்சத்தை பாட்டாளி வர்க்கம் அங்கீகரிக்குமா இல்லையா? இதில் இருந்து குறிப்பாக தேசியத்தை புரிந்து கொள்ளாத தேசியம் எப்படி வேறுபடுகின்றது? கேள்வி தேசிய முதலாளித்துவம் தனது கோரிக்கையை முன்வைக்கின்ற போது, அதில் இருந்து திட்டவட்டமாக சர்வதேசியம் எப்படி வேறுபடுகின்றது. இது திட்டவட்டமாக வர்க்கக் கண்ணோட்டம் கொண்டவை. ஒரே வேறுபாடு தேசியம் முதலாளித்துவ கோரிக்கை என்பதை அங்கீகரிப்பது தான். "குறிப்பாக" இதை மறுப்பது, இல்லை என்பதும் உள்ளடக்கத்தில் முதலாளித்துவத்துக்கு சர்வதேசியத்தை அடகுவைப்பதாகும். தமிழீழ புதிய ஜனநாயக கட்சி  என்பது, ஐக்கிய முன்னணிக்கு (முன்னணி முரண்பட்ட வர்க்கத்தை தேசியக் கோரிக்கையிலும், சர்வதேசிய கோரிக்கையிலும் ஏற்றுக் கொள்கின்றது.) பதில் கட்சியை (கட்சி முரண்பட்ட வர்க்க கோரிக்கையை மறுக்கின்றது) பிரகடனம் செய்யும் போது,  புதிய ஜனநாயகப் புரட்சியை முதலாளித்துவ புரட்சியாக்கி, சர்வதேசிய கடமையை வர்க்கம் கடந்த தேசியத்தின் பின் கைவிடக் கோருகின்றது. ஏகாதிபத்திய சகாப்தத்தைப் புரிந்து கொள்வதும், இது உலகை உலகமயமாக்கி வரும் போக்கில் தேசங்கள் அழிக்கப்படும் போது, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில், தேசிய கடமையை பாட்டாளி வர்க்கம் நிறைவு செய்ய அதாவது ஜனநாயக கடமையையும் தனது தலைமையில் முன்னெடுப்பதில் தான், புதிய ஜனநாயகப் புரட்சி சர்வதேசிய வழியாக உள்ளது. இது தேசியத்தின் கடமையை நிறைவு செய்யும் போது, அதன் வர்க்க அடிப்படையை தெளிவாக வரையறுக்கின்றது. அதன் வர்க்க சக்திகளின் பிரதிநிதித்துவத்தை தெளிவாக புதிய ஜனநாயக புரட்சி வரையறுத்து அங்கீகரிக்கின்றது. இதுதான் அடுத்த கட்ட வர்க்கப் புரட்சியை, பாட்டாளி வர்க்கம் எடுத்துச் செல்ல அணிகளை அரசியல் மயமாக்கின்றது. புதிய ஜனநாயக கடமையை முடிவுக்கு கொண்டு வந்து (தேசியம் முதலாளித்துவ கோரிக்கையை உள்ளடக்கிய ஜனநாயகப் புரட்சிகர கடமை முடிவுக்கு வந்ததை என்பதை அங்கிகரித்து), சோசலிச புரட்சியை நடத்த, புதிய ஜனநாயக கட்டத்தின் வர்க்க பகுப்பாய்வும், அதன் அடிப்படையிலான அணிதிரட்டலும், அடிப்படையான அரசியலே புரட்சிகரமான அரசியல் வழியாகும்.

ஐக்கியம் பற்றிய கட்டுரையில் "... சிறுபான்மை மத மக்கள், சைவ ஆதிக்க  சக்திகளது, மத மூட நம்பிக்கை கருத்துக்களின் ஒடுக்கு முறைக்கும் முகம் கொடுக்கின்றனர். ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் வேளாள சாதிய சக்திகளின் சாதி ஒடுக்குமுறை கருத்துக்களுக்கும் முகம் கொடுக்கின்றனர்" இலங்கை நிலைமையை மிக மோசமாக புரிந்து கொண்ட வடிவம் இது. இந்திய இனவாதிகள் மற்றும் சாதி சங்கங்கள் வடிவில் இலங்கை நிலைமையை விளக்குவது அபத்தமானது. சைவ ஆதிக்கம், மற்றைய மதங்கள் மீது ஒரு ஆதிக்க மதப் போக்காக காணப்படுகின்றதா? என்ன பருமையான ஆய்வு இதற்கு உண்டு. மிக மோசமான தேசிய விடுதலை இயக்கங்கள் கூட சைவ அடிப்படை வாதத்தைக் கொண்டு அணிதிரட்டியதுமில்லை, வன்முறையைக் கையாண்டதுமில்லை. இதில் ஒரு முற்போக்கான தன்மையை கொண்டிருந்ததுக்கு காரணம், சைவ மதம் மீதான ஆழமான மதப் பற்றின்மையேயாகும. அத்துடன் மத ஆதிக்க சக்திகள் ஒரு அரசியல் சக்தியாக தமிழ் சமூகத்தில் உருவாகிவிடவில்லை. தற்செயலான உதிரிச் சம்பவங்கள் அரசியல் ஆதிக்கமின்றி நடக்கின்ற போது அது பொதுமையாகிவிடாது. இதை பார்க்க தவறி சைவ ஆதிகத்தை முன்னிலைப்படுத்தி முதன்மை முரண்பாடுகளில் ஒன்றாக காட்டுவது, சிறுபான்மை மதப் பிரிவுகளை, அதன் பிற்போக்கு தன்மையுடன் சலுகை வழங்கி அணிதிரட்ட முயலும் காரியவாதமாகும். சமூகத்தில் ஆதிகத்தில் உள்ள சைவ பண்பாட்டை விமர்சிப்பதை இட்டு விமர்சனம் கேள்விக்கு உள்ளாக்கவில்லை.

அடுத்து சாதி ஒடுக்கு முறையை வேளாள சாதியமாக காட்டுவதும், அதன் ஒடுக்கு முறையாக காட்டுவதும், அரசியலில் சாதி சங்க நிலையாகும். இந்தியாவில் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக பார்ப்பானை முன்வைப்பது எப்படி அபத்தமாகவும், சாதி சங்க நிலையாக இருக்கின்றதோ, அதுவே இங்கும் பொருந்தும். இந்தியாவில் பாhப்பனை அல்ல, பார்ப்பானிய சிந்தனைக்கும் அதன் பண்பாட்டு கலாச்சாரத்துக்கும் எதிராகவே மார்க்சியம் சாதிய ஒடுக்கு முறையை இனம் காட்டி, அதை ஒழிக்க போராடுகின்றது. இந்த பார்ப்பானிய சிந்தனையில் இருந்து விடுபடும் எந்த சாதிப் பிரிவு நபரும், சாதிக்கு எதிராக போராட முடியும். அது போல் பார்ப்பானிய சிந்தனையை கொண்ட எந்த சாதிப் பிரிவும், சாதிய ஒடுக்க முறையை கையாள முடியும். இங்கு குறித்த சாதிக்கு மட்டும் அவை குறிப்பானவையல்ல. சாதியின் நலன்களை அதிகம் அனுபவிக்கும் படிநிலைச் சாதிப் பிரிவுகள், அதை பாதுகாக்க சாதிய வன்முறையில் ஈடுபடுவது அதிகமாக இருக்கும். நலன்களை அடிப்படையாக கொண்டு மட்டுமே சாதிய வன்முறையும், ஒடுக்குமுறையும், அடக்குமுறையும் காணப்படுகின்றது. நலன் சார்ந்து படி நிலை சாதிகள், படி நிலை வன்முறையை கையாள்வதை பொதுவாக காண மறுத்து, குறித்த சாதி மீது மட்டும் குறிப்பிடுவது மார்க்சிய வழியல்ல, சாதிய அரசியலாகும். அதாவது இந்தியாவில் இன்று படிநிலை சாதிய ஆதிக்க வடிவில், அதிகளவில் சாதிய வன்முறையில் ஈடுபடும் வன்னியர், வேளார், கள்வர் போன்ற ஆதிக்க சாதிகளை குற்றம் சாட்டுவதும், அவர்களை மட்டும் குறித்த அடையாளம் காட்டுவதும் மார்க்சியமல்ல. சாதிய ஒடுக்குமுறையில் படிநிலை சாதிப் பிரிவுகள் தமது சாதிய நலன்களில் இருந்து, மற்றைய பிரிவுகள் மீது வன்முறையை கையாளுகின்றது. இந்த அடிப்படை தான் சாதிக் கட்டமைவை பாதுகாக்கின்றது. இந்த சாதிய படி நிலையை பார்ப்பானிய சித்தாந்தம், இந்து மத வடிவம் ஊடாக கட்டமைத்துள்ளது. சாதி ஒழிப்பில் பார்ப்பானிய சித்தாந்தத்தை வேரறுக்க வேண்டும். இதைக் கையாளும் எல்லா சாதிப் பிரிவுகளையும் ஈவிரக்கமின்றி எதிர்த்து போராட வேண்டும். ஆதிக்க சாதிகளின் குறித்த நலன்கள் சார்ந்து அதிக நலனை பெறுகின்ற போது, கையாளும் வன்முறை படிமுறைத் தன்மை கொண்டவையே ஒழிய, ஒரு சாதிக்குரியவை மட்டுமல்ல. அதனால் குறித்த சாதியை எதிராக நிறுத்துவது தவறானது, மாறக சாதிய கோட்பாட்டுக்கு எதிராக நிறுத்தமுடியும். இலங்கையிலும் பார்ப்பனிய சித்தாந்தமே சாதிய ஒடுக்கு முறை வடிவில் எதிராக நிறுத்தப்பட வேண்டும். பார்ப்பான் இருக்கின்றான இல்லையா என்பதல்லா அந்தச் சிந்தனை இருக்கின்றதா இல்லையா என்பதே இங்கு அடிப்படையாகும். இந்தியாவில் பார்ப்பனியம் நேரடிச் சாதி வன்முறையில் ஈடுபவது அருகிப் போன நிலையில், படிமுறை ஆதிக்க சாதிகள் அதை கையாளுகின்றன. அதனால் அவற்றை (வன்முறையில் ஈடுபடும் சாதிகளை) எதிராக பிரகடனம் செய்வது திட்டவட்டமாக சாதி அரசியலாகும். இதுதான் இலங்கை நிலமையும். மாறாக பார்ப்பனிய சிந்தனையையும் அது சார்ந்த இந்து மதத்தையும் எதிராக நிறுத்தப்பட வேண்டும். இங்கு படிமுறை சாதிய நலன்கள் சார்ந்து வன்முறையில் ஈடுபடும் சாதிய போக்கை குறிப்பாக்கி விமர்சித்து எதிர்த்துப் போராட வேண்டும். இதை பொதுவாக்குவது சாதிய அரசியலாகும். சாதியத்துக்கு எதிரான பொதுவான போக்கு பார்ப்பனிய சித்தாந்தததுக்கு எதிரான அரசியலாகும்.

"யாழ், சைவ, வேளாள ஆதிக்க கருத்தமைவு, முஸ்லீம் மக்களையும், மலையகத் தமிழ் மக்களையும் இணைக்கவும் சிறுபான்மையினர் ஐக்கியத்துக்கு தடையாகவும் விளங்கியது." இலங்கை நிலைமையை யதார்த்தத்துக்கு புறம்பாக புரிந்து திரித்துக் காட்டுவது நிகழ்கின்றது. மலையக, முஸ்லீம் மக்களின் ஐக்கியத்துக்கு தடையாக இருந்தது, விடுதலை இயக்கங்களின்  அரசியல் தன்மையே ஒழிய, சாதிய மத வடிவங்கள் அல்ல. எந்த இயக்கமும் சாதி, மத அடிப்படையில் தங்கள் அணிகளை திரட்டியது கிடையாது. (அவை இன அடிப்படையிலேயே தங்களை அணிதிரட்டின.) விதிவிலக்கான தனிப்பட்ட சம்பவங்கள் பொதுவானவையாகிவிடாது. ஏன் சைவ வேளாள ஆதிக்க கருத்து தமிழீழ்ப் போராட்டத்தில் மற்றைய சாதிப் பிரிவுகளை அணிதிரட்டவில்லையா? சைவ வேளாள ஆதிக்க கருத்து அதையும் அல்லவா தகர்த்திருக்க வேண்டும். ஆனால் போராட்டத்தில் வேளார் அல்லாத பிரிவு அல்லவா, அதிகமாக அணிதிரண்டுள்ளது. இங்கு ஏன் சிங்கள மக்களின் ஐக்கியமும் தகர்க்கப்பட்டது. இதை சாதிய மத விளக்கங்கள் விளக்கிவிடமாட்டாது. இது கரியவாத நோக்கில் விளக்குவதாகும். போராட்டத்தின் தவறுகளை அரசியல் ரீதியாக புரிந்து கொள்ளாத வரை, தவறுகளை இது போன்ற குறுகிய அரசியல் போக்கில் விளக்குவது நிகழ்கின்றது.

 

தமிழீழப் போராட்டத்தில் சாதிய மத அணிதிரட்டல் நடந்ததாகவோ, அதனால் தான் சிறுபான்மை மற்றும் பெருபான்மை மக்கள் பிரிவு மீது வன்முறை கையாளப்பட்டது என்பதை விளக்க, எந்த விதமான பருமையான ஆய்வும் இது வரை இவர்களிடம் கிடையாது. சொந்த மனவிருப்பங்கள், போராட்டத்தில் இருந்து விலகிச் சென்ற போக்கில், அரசியல் ரீதியாக ஆய்வுகளை கைவிட்ட தன்மை, குறுகிய குறுக்கு வழியில் விளக்குவது நிகழ்கின்றது. பள்ளிவாசல் தாக்குதல், விகாரைத் தாக்குதல் கூட மத அடிப்படை வாதத்தில் இருந்து நடத்தப்பட்டவையல்ல. புலிகளின் அரசியல் நிலையில் தாக்குதல் தன்மைகளை ஆராயின், இது தௌளத் தெளிவாக புரியும். சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை பிரிவு மக்கள் மீதான தாக்குதலும் சரி, சொந்த இனத்தின் மீதான வன்முறையையும் கூட, அதன் அரசியலில் நாம் தேட வேண்டுமே ஒழிய, குறுக்கு வழியில் அல்ல. சமூக இயக்கத்தில் இருந்து அன்னியமான, நடைமுறைக்கு எதிரான, சமூக மாற்றத்தை சிந்திக்காத புலியெதிர்ப்பு நபர்கள், குழுக்கள் புலியை அரசியலுக்கு வெளியில் நின்று விளக்குவது போல், விளக்கவது அரசியல் ரீதியாக அபத்தம் வாய்ந்தவை. இதை அவர்கள் மேலும் "யாழ் சைவ வேளாள ஆதிக்கம் புதிய வடிவில் தன்னை மறு உருவாக்கம் செய்யப்பட்டது. இது தமிழீழ இயக்க தலைவர்களின் அறியாமை, தவறு அல்லது தமிழீழ குட்டி முதலாளிய அரசியலின் வெளிப்பாடு" கடந்த கால தேசியப் போராட்ட சிதைவை, அதன் வன்முறைப் போக்கை, ஜனநாயக விரோதத்தை இப்படி விளக்குவது மார்க்சிய வழியல்ல. இதை சாதிய, இனத் தலைவர்கள் விளக்கிவிடும் பாதையாகும். ஒரு சமுதாயத்தில் மதம், பண்பாடு, பொருளாதாரம் போன்ற பல்வேறு சமூக மேல்கட்டுமான கூறுகள் அதன் பொதுவான வெளிப்பாட்டை சமூக விளைவாக்கின்றது. இது எல்லா சமூகத்துக்கும் பொதுவானது. இங்கு போராட்டம் நிகழ்கின்ற போது அதிலும் பிரதிபலிக்கின்றது. ஆனால் ஒரு அரசியல் இயக்கம் இதை மட்டும் கொண்டு தனது தன்மையை வெளிப்படுத்துவதில்லை. வர்க்க அரசியல் போராட்ட தன்மையைக் கொண்டே சமூகத்தின் போக்கை, அதன் மீதான மாற்றத்தை, தனது பிரதிபலிப்பை வெளிப்படுத்துகின்றது. ஒரு இயக்கத்தின் போக்கை அதன் அரசியல் மீது, அதன் வர்க்க தன்மை மீது ஆராய வேண்டும். இங்கு மதச், சாதிய கூறுகள் செயல்படலாம், செயல்பாடமலும் போகலாம். ஆனால் சாதிய, மத கூறுகளை அடிப்படையாக கொண்டு சமூகப் போக்கை ஆய்வு செய்வது மார்க்சியமல்ல. மார்க்சியம் சமூக இயக்கத்தை அதன் வர்க்கத் தன்மையில் இருந்து, உற்பத்தி உறவுகளில் இருந்து, வர்க்க போராட்டங்களில் இருந்து ஆராயக் கோருகின்றது. அங்கு மதம், சாதியக் கூறுகள் இருக்கும், இருக்காமல் விடும் அல்லது தன்னை வெளிப்படுத்தாது. இன்று முஸ்லிம் மக்களை மதச் சிறுபான்மையாக விளக்கும் பல்வேறு விளக்கங்கள் கூட இதில் இருந்தே தோன்றுகின்றது. முஸ்லிம் மக்களை ஒரு சிறுபான்மை தேசிய இனம் என்பதை மறுத்து, மதச் சிறுபான்மை இனமாக காட்டுவதும், இந்து சைவ வேளாள விளக்க சாதிய மதச் கண்ணோட்டத்தில் இருந்தே வருகின்றது. இதனால் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலை மதத் தாக்குதலாக காட்டுவதன் ஊடாக, முஸ்லிம் மக்கள் மீதான வன்முறையை, சிறு தேசிய இனம் மீதான தாக்குதல் என்பதை மறுப்பது நிகழ்கின்றது. இது அரசியல் ரீதியாக முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலை ஊக்குவிக்கின்றது. ஏனெனின் தாக்குதலின் தன்மையை தவறாக விளக்கும் போது, தாக்குதல் மறைமுகமாக ஊக்கம் பெறுகின்றது. இதுபோன்று தலைவர்களின் அறியாமை, தவறு  என்பது அரசியலைக் கடந்து விளக்குவதாகும். அறியாமையும், தவறும் எல்லாப் போராட்டத்திலும் இருப்பவைதான்.

அடுத்து அரசியலை கைவிட்டுச் செல்லும் மார்க்கத்தைப் பார்ப்போம் "வல்லரசியம், நவகொலனிய கட்டத்தில் என்றும் இல்லாதவாறு உலகமயமாகி வருகின்றது" இங்கு வல்லரசியம் என்ற சொற்பிரயோகம் அரசியல் பிறழ்ச்யின் விளைவாகும். ஏகாதிபத்தியம் என்ற சொல்லுக்குப் பதிலாக வல்லரசியம் என்ற சொல்லை முன்வைப்பதன் மூலம், ஏகாதிபத்திய அரசியல் உள்ளடக்கம் சந்தப்படுத்தப்படுகின்றது. வல்லரசு என்பது அனைத்து மேலாதிக்க அரசுகளையும் குறிக்கும். வல்லரசு என்பது வல்லமை கொண்ட அரசாக மட்டும் இருக்கும் போது, அது ஏகாதிபத்திய மூலதன மற்றும் நிதி ஆதிகத்தை மறுக்கின்றது. ஏகாதிபத்தியம் வல்லரசு என்ற வல்லமையில் உருவானவையல்ல. ஏகாதிபத்தியம் எல்லாவற்றிலும் ஏகபோகத்தைக் கொண்டு, வல்லமைக்கு பதில் அடக்கியாளும் புதிய மூலதனத்தின் ஆதிகத்தைக் குறித்து நிற்கின்றது. லெனின் ஏகாதிபத்தியத்தை வரையறை செய்த புதிய சூழல் நிலவ முன்பு, வல்லரசுகள் யதார்த்தத்தில் இருந்தன. ஆனால் புதிய சர்வதேச நிலமை ஏகாதிபத்திய வரையறையை வரையறுக்க லெனுக்கு வழிகாட்டியது. சொற்களை தமிழ்ப் படுத்துகின்றோம் என்ற பெயரில், அரசியல் ரீதியாக ஒரு சொல்லின் போராட்ட அரசியல் மார்க்கத்தை சிறுமைப்படுத்துவது கூட, நவீன மொழியில் ஊடான அரசியல் திரிபுவாதம் தான். மொழியில் சொற்களை மாற்றுவதன் மூலம், அச் சொற்களின் உள்ளடக்கத்தை யதார்த்தமான உலகில் மாற்றிவிடுவதில்லை. ஆனால் புதிய சொற்களின் ஊடாக உள்ளடக்கம் திரிக்கப்பட்டு அதன் மீதான கடுமையை மந்தப்படுத்துகின்றனர். தாழ்ந்த சாதிகளை அரிஜன், தலித் ஆக்கியதும், சேரிகளை காலனியாக்கியதும், கற்ப்பழிப்பை வல்லுறவு ஆக்கியதும், மார்க்சிய தலைவர்களுக்கு பதில் புத்தீஜீவிகள் என்று பெயரை மறைப்பதும், கம்யூனிசக் கட்சியை சோசலிச மற்றும் புதிய ஜனநாயக கட்சியாக்குவதும், ஏகாதிபத்தியத்தை வல்லரசாக்குவதும், அரசியல் ரீதியில் வர்க்கப் போராட்டத்தை சிதைக்கும் திரிபு தான்.

உலகமயமாதல் நவகாலனித்துவ கட்டத்துக்குரியது என்பது அரசியல் ரீதியில் தவறானது. உலகமயமாதல் காலனியம், அரைக் காலனியம், நவகாலனியம், மறு காலனியம் என்று பல்வேறு ஆதிக்க வடிவங்கள் மீது கட்டமைக்கப்படுகின்றது. அத்துடன் உலகமயமாதல் நவகாலனிய கட்டத்தில் தொடங்கியது அல்ல. ஏகாதிபத்தியமாக முதலாளித்துவம் முதிர்ந்தது முதலே இது தீவிரமாகியது. இந்த வளர்ச்சியின் உச்ச நிலையை இன்று நாம் சந்திக்கின்றோமே ஒழிய, இதன் வளர்ச்சியின் தீடீர் வேகம் ஏகாதிபத்திய உருவாக்கத்திலேயே தொடங்கிவிட்டது.

அடுத்து உலகமயமாதல் நவகாலனிய காலத்தில் ஏகாதிபத்திய மயமாதலை உருவாக்கின்றது என்பது முழுமையானவையல்ல. உலகமயமாதல் ஏகாதிபத்திய நாட்டை சார்ந்து விரிவாகவில்லை. தேசம் கடந்த தனிப்பட்ட பன்நாட்டு கம்பனிகள் சார்ந்தே விரிவாக்கப்படுகின்றன. இன்று பெரும் மூலதனமாக மாறியுள்ள தனிப்பட்ட தனியார் மூலதனங்கள் சார்ந்தே உலகமயமாதல் விரிவாகின்றது. இந்த விரிவாக்கத்தில் தனிப்பட்ட ஏகாதிபத்திய நாட்டுக்கும், தனிப்பட்ட நபர்களின் மூலதனத்துக்கும் இடையில் உள்ள முரண்பாட்டில், உலகமயமாதல் மூலதனத்தைச் சார்ந்து நிற்கின்றது. ஆனால் ஏகாதிபத்திய நாடுகள் இந்த மூலதனத்தை பிரதி செய்வதால் அந்த நாட்டு ஆதிக்கம் பொதுவான வடிவமாக காணப்படுகின்றது. ஆனால் இன்று மிகப் பெரும் மூலதனத்துக்கிடையில் நடக்கும் திருமணங்கள் (திருமணம் என்றே முதலாளித்துவ அறிஞர்கள் அழைக்கின்றனர்.)  விவாகரத்தின்றி, உருவாகின்ற போது, இது ஏகாதிபத்திய நாடுகளுக்குள் புகுந்து விடுகின்றது. இதனால் ஏகாதிபத்திய நாட்டு நலனை விட மூலதனம், தனது நலனை முதன்iமையாக கொள்கின்றது. இதன் போக்கில் தான் பிராந்தியங்கள் ஒன்று சேர்வதும், தமக்குள் திருமணத்தை  செய்வதை கோருவதும் நிகழ்கின்றது. இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெரு மூலதனங்களை திரட்டி சில ஏகாதிபத்தியங்களை ஒன்றாக்கி ஒரு சுப்பர் ஏகாதிபத்தியமாவதை  பொது அரசியல் மார்க்கமாக்கின்றனர். ஆனால் மூலதனம் தனது சொந்த குணத்தை அடிப்படையாக கொண்டு ஏகாதிபத்திய எல்லையை தாண்டி, மூலதனத்தை தனிப்பட்ட கம்பனிக்குமிடையில் குவிக்கின்றது. இது ஏகாதிபத்திய நாட்டுக்கும் தனிப்பட்ட பன்நாட்டு கம்பனிக்கிடையில் முரண்பாட்டை கொண்டு வருகின்றது. பன்நாட்டு கம்பனியின் மூலதனம் ஒரு துறையில் இருந்து மற்ற துறைக்குள் தாவுகின்ற வளர்ச்சி, கம்பனிக்கிடையிலான முரண்பாட்டை உருவாக்கின்றது. இங்கு இம் முரண்பாடுகள் ஏகாதிபத்திய கட்டமைவை சார்ந்தும், வெளியிலும் நிகழுகின்றது. ஆனால் உலகமயமாதல் ஏகாதிபத்திய அடிப்படை மீது தான் இன்னமும் தன்னை கட்டமைக்கின்றது. புதிய போக்கும், புதிய நிலைமையில் புதிய வழியில் வளர்ச்சியுற்று வருகின்றது. இதுவே உலகமயமாதலின் அடுத்த கட்ட பாய்ச்சலாகும். இது நிச்சயமாக தனிப்பட ஏகாதிபத்திய நாட்டை சார்ந்திருக்காது. இது சில ஏகாதிபத்தியத்தை ஒன்றிணைத்து அதைச் சார்ந்தும் நிற்கும். அதை கடந்து செல்லும் போது, கம்பனிகள் ஏகாதிபத்திய தன்மையை எடுத்துவிடும். இதுவும் ஒன்றை ஒன்று விழுங்கும் போது, பரந்து பட்ட மக்களை எதிரியாக எதிர் அணியில் நிறுத்தும். அதுவே இறுதியானதும், உச்ச சுரண்டலை விரிவாக்கும் மூலதன வளர்ச்சியின் எல்லையாகும். இந்த மூலதன வளர்ச்சி மறு உற்பத்திகளை விழுங்குவதை முடிவுக்கு கொண்டு வந்து விடுவதால், மக்களை ஒட்ட உறுஞ்சுவது மட்டுமே, ஒரே ஒரு நிகழ்ச்சிப் போக்காக மூலதனத்துக்கு முன்பாக இருக்கும்.

தமிழீழ புதிய ஜனநாயக கட்சி  குறிப்பிடுவதைப் பார்ப்போம். "வல்லரசியத்தின் புதிய முகத்தை (இதை அவர்கள் 1970 களின்  பிற்பகுதியில் என்று குறிப்பிடுகின்றனர்.) அதன் உட்சாரத்தில் புரிந்து கொள்வதில் தொழிலாளி வர்க்க அரசியல் இயக்கம் கூட கோட்பாட்டு முன்முயற்சி எடுக்க தவறியது. இதனால் இன்றும் கூட நவகொலனியமாக அல்லது புதுக் கொலனியமாக மாறிக் கொண்டிருப்பதாகவே சில தொழிலாளி வர்க்க இயக்கங்கள் பார்க்கின்றன." என்ற கூறுகின்ற கூற்றை பார்ப்போம். இங்கு முதலில் புதுக் காலனி என்ற கூறுவதும், மறு காலனி என்று கூறுவதுக்கும் இடையில் கூட கோட்பாட்டு வேறுபாடு நிறையவே உள்ளது. புதுக் காலனி என்பது முன்பு காலனியாக இருந்தை மறுக்கின்றது அல்லது மென்மைப்படுத்தி அதன் தொடர்ச்சியை சிதைக்கின்றது. மறுகாலனி முந்தியதன் தொடாச்சியை ஏற்றுக் கொள்கின்றது. அது மீண்டும் நாட்டை காலனியாக்க, துடிப்பதை தெளிவாக்கின்றது. 1970 களின் பின்னால் தான் நவீனமயமாக்கல், உலகமயமாதலை கோர முகத்தை வெளிக்காட்டியது எனின், அதற்கு முன்பு என்னவாக, எப்படி இருந்தது. 1970 களின் பின்பு உலகமயமாதல் நவகாலனியை உருவாக்கியது எனின், அதற்கு முன்பு அந்த நாடுகளில் இருக்கவில்லையா? ஏன் அதற்கு முன்பு நவகாலனிய நாடுகள் உலகில் இருக்கவில்லையா?

இங்கு அடிப்படையான விவாதம், உலகமயமாதல் ஏகாதிபத்திய தோற்றத்திலேயே அதன் அரசியல் உள்ளடக்கமாகியது. இரண்டு ஏகாதிபத்திய யுத்தங்கள் சரி, பின்னால் நீடித்த நெருக்கடிகள் சரி எதை காட்டுகின்றன. உலகை மூலதன வடிவில் உலகமயமாக்கும் எல்லையில் நடந்தவை தான். ஒவ்வொரு கால கட்ட வளர்ச்சியும் பாய்ச்சலை நிகழ்த்துகின்ற போது, பண்பு மாற்றமடைகின்றது. இந்த பண்பு மாற்றம் முந்தையதின் தொடர்ச்சி தான். இந்த பண்பு மாற்றம் எல்லா நாடுகளையும் ஓரே விதமாக அணுகுவதில்லை, கையாள்வதில்லை. அது அந்த நாடுகளின் குறிப்பான நிலைமையுடன் தொடர்புடையது. எனவே நிகழ்கின்ற மாற்றங்கள் உள்நாட்டு வர்க்கப் போராட்டத்தின் குறிப்பான நிலைமையுடன் தொடர்புடையது. ஒரு நாட்டின் பண்பியல் ரீதியான மாற்றம் சிலவேளைகளில் மெதுவாகவும், சில வேளைகளில் பாய்ச்சல் மூலமும் நிகழ்கின்றது.

முதலாளித்துவம் பிரான்சில் புரட்சியூடாக பாய்ச்சல் ஊடாக நிகழ, பல ஐரோப்பிய நாடுகளில் மெதுவாக படிப்படியாக நிறைவேறியது. இதுதான் உலகமயமாதல் போக்கில் வெளிப்படுத்தும் போக்காகும். அரைக்காலனி நவகாலனியாகவோ, மறு காலனியாகவோ மாறுவது என்பது எப்படி எந்த நிலைமைகள் ஊடாக எந்த பண்பு மாற்றத்தின் ஊடாக வந்தடைந்தது, என்பது சமூக பொருளாதார பண்பாட்டு நிலைமைகளுடன் தௌள தெளிவாக வரையறுக்கப்பட வேண்டியவை. ஒரு சமூகம் பற்றிய ஆய்வு சமூக பொருளாதார பண்பாட்டு மாற்றங்கள் மீது நடத்தப்பட்டு நிறுவப்பட வேண்டும். இதை மறுத்து குற்றச்சாட்டுகளை வைப்பதன் மூலம், விருப்பங்கள் சமூக வடிவங்களாகி விடாது. உலகம் முழுக்க நவகாலனி அரசுகளாக இருப்பதாக காட்டும் போக்கு, இந்த குற்றச்சாட்டின் பின் வெளிப்படுகின்றது. ஏகாதிபத்திய உலகமயமாதல் வளர்ச்சியில் ஏற்பட்ட மாறுதல், உலகளாவிய வர்க்கப் போராட்ட வீழ்ச்சியில் நடந்தது. சோவியத்தின் முதலாளித்துவ மீட்சியை தொடர்ந்து, 1970 களின் இறுதியில் சீனாவில் நடந்த முதலாளித்துவ மீட்சி சர்வதேச ரீதியாக வர்க்கப் போராட்ட சிதைவை ஏற்படுத்தியது. இது உலகமயமாதலை தீவிரமாக்கியது. ஆனால் இந்த தீவிர மயமாக்கல் ஒவ்வொரு நாடுகளின் குறிப்பான வர்க்கப் போராட்ட நிலைமைகளுடன் தொடர்புடையதாக இருப்பது, அதன் உள்ளார்ந்த விதியாக இருந்தது. பலமாக வளர்ச்சி பெற்ற பாட்டாளி வர்க்கம், வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்த நாடுகளில் உலகமயமாதல், வர்க்கப் போராட்டம் சிதைந்த நாடுகளை விட மெதுவாகவே நடைமுறைக்கு வந்தது. உலகமயமாதல் பண்பு மாற்றத்தை திகதி குறித்தோ, கால எல்லை குறித்தோ உலகளவில் பொதுவாக வரையறுத்து விடமுடியும். ஆனால் அதை தனிப்பட்ட நாடுகளுக்கு பொதுமைப்படுத்த முடியாது. மாறாக சமூக பொருளாதார பண்பாட்டு மாற்றத்தில் இருந்து தனிப்பட்ட நாடுகளுக்கு வரையறுக்க முடியும். இன்றும் நவகாலனி அல்லாத காலனிகளும், மறுகாலனிகளும், அரைக்காலனிகளும் உலகில் நிலவுகின்றன, உருவாகின்றன. அரைக் காலனிய பொருளாதார வடிவம் உலகமயமாதலின் நீதி மூலதனத்துக்கு முன், தனிப்பட்ட நாடுகள் முற்றாக நவகாலனிய பொருளாதார வடித்துக்குள் சோரம் போய்விடவில்லை. இதனால் மட்டுமே ஏகாதிபத்தியத்துக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் தொடர்ச்சியாக நிலவுகின்றன. நவகாலனித்துவம் முழுமை பெற்று முதர்ச்சியடைகின்ற போது மறுகாலனியாக்க வடிவமே அங்கு நிகழ்ச்சி போக்காக இருக்கின்றது. இது இராணுவ ரீதியாக ஆள்வதை குறித்தல்ல, பொம்மை அரசு ஊடாக ஆள்வதைக் குறித்தும் நிற்கின்றது. அரைக்காலனி என்பது தேசிய விடுதலையைத் தொடர்ந்து உருவானதால் தேசிய பொருளாதாரத்தை தக்கவைக்கின்றது. அதே நேரம் ஏகாதிபத்திய பொருளாதாரத்தை பாதுகாத்து விரிவாக்க உதவி செய்கின்றது. இதில் ஏற்படும் பண்பியல் மாற்றம் (ஏகாதிபத்தியத்தை விரிவாக்கும்) நவகாலனியாக்கத்தை உருவாக்கின்றது. இது முதிர்வுறும் போது மறுகாலனியாக்கம் நிறைவுறுகின்றது. இந்த நவகாலனித்துவத்தை நோக்கிய சீரான மாற்றமின்றி மறுகாலனியாக்கம் நிகழமுடியும். இது உள் நாட்டு வர்க்கப் போராட்டம் தீவிரமாக உள்ள போது, நவகாலனியாக்கம் நிகழ்வது பின்தள்ளப்படும் நிலமையாலும், உலகளாவிய தீடிர் திருப்பங்கள மற்றும் வர்க்கப் போராட்டத்தின் பின்னடைவுகள் வேகமான மறுகாலனியாக்கத்தை உருவாக்கும். அதாவது புதிய ஜனநாயகப் புரட்சி முதலாளித்துவ புரட்சியை குறுகிய காலத்தில் பூர்த்தி செய்து, சோசலிசத்தை நோக்கி எவ்வளவு வேகமாக நகர்கின்றதோ, அதுபோல் நவகாலனித்துவ மாற்றத்தை மிக குறுகிய காலத்தில் நிறைவு செய்து மறுகாலனியாக்கத்தை நிறைவு செய்யும்.

அடுத்து குறிப்பிடுவதைப் பார்ப்போம். "தமிழீழ மக்கள் கட்சி" போல், "ஜப்பானை  நவகொலனிய அரசாக பார்க்கின்றனர்." என்று தமிழீழ புதிய சனநாயக கட்சி குறிப்பிடும் போது, யப்பானை நவகாலனிய அரசாக ஏற்றுக் கொள்ளும் அரசியல் வெளிப்படுகின்றது. இது ஏகாதிபத்திய வரையறையை யப்பானுக்கு பொருத்த மறுக்கின்றது. இது ஆசியாவில் கையாளும் ஏகாதிபத்திய விரிவாக்கத்தை குறிப்பாக மூடிமறைக்கின்றது. நான் யப்பான் பற்றிய விவாதம் ஒன்றை இதே இதழில் தமிழீழ மக்கள் கட்சி விவாதத்தில் செய்துள்ளேன். யப்பான் ஒரு ஏகாதிபத்திய அரசாக இருக்க, அதை நவகாலனிய அரசாக காட்டும் அரசியல் அடிப்படை வர்க்கப் போராட்ட திரிபில் எழுபவை தான். இது லெனின் வரையறுத்த ஏகாதிபத்திய வரையறையை அரசியல் உள்ளடக்கத்தில் மறுக்கின்றது. தமிழீழ மக்கள் கட்சி ஜப்பானை நவகாலனியாக பார்க்க, தேசபக்தன் அதை அவர்களுக்கு திருத்தம் செய்து வல்லரசிய நவகாலனியாக பார்ப்பதாக விளக்குவதுடன், இந்த விளக்கத்தை தாமும் ஒப்புக் கொள்வதாக குறிப்பிடுகின்றனர். யப்பான் எந்த ஏகாதிபத்தியத்தின் நவகாலனியாக இருக்கின்றது. உலக உற்பத்தியில் இரண்டாம் இடத்தை வகிக்கும் யப்பானின் நிலையை சற்றுப் பார்ப்போம்.

1995 இல் உலக சனத் தொகையில் யப்பான் 2,23 சதவிகிதத்தை கொண்டிருந்த போது, உலக வருமானத்தில் 17,68 சதவிகிதத்தை  யாப்பான் உலகமயமாதல் மூலதனத்தின் ஊடாக திரட்டியது. 1998 இல் உலகின்  உலகமயமாதலை  தீவிரமாக்கிய 100 முன்னணி நிறுவனங்களில், 22 பன்நாட்டு நிறுவனங்கள் யப்பானுக்கு சொந்தமாக இருந்தது. இதன் மொத்த மூலதனத் திரட்சி 8,33,900 கோடி பிராங்காகும். ஐந்தாவது இடத்தில் உள்ள முதல் யப்பானிய நிறுவனத்தின் மூலதனம் 79,300 கோடி பிராங்காக இருக்க, முதல் 100 இல் இறுதியான யப்பான் நிறுவனத்தின் மூலதனம் 15,200 கோடி பிராங்காகும். இது போல் முதல் 200 பன்நாட்டு நிறுவனங்களில் 36 யப்பானுடையதாகும். இது போல் முதல் 40 உலக வங்கியில் 10 யப்பானுடையதாகும். முதல் பத்து வங்கியில் 6 யப்பானுக்கு சொந்தமானதாகும். முதல் 40 வங்கியில் யப்பானுடைய 10 வங்கியின் மூலதனம் 4,25,332 கோடி டொலராகும். 1990 இல் முதல் பத்து பணக்காரர்களில் யப்பானைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேர் இருந்தனர். 1999 இல் முதல் 200 பணக்காரக் கும்பலில் 19பேர் யப்பானியர் ஆவர். 2000 ஆண்டில் முதல் 400 பணக்கராரில் 27 பேர் யப்பானைச் சேர்ந்தவர்கள்.  இதில் முதல் பணக்காரனின் சொத்து 1940 கோடி டொலராக இருக்க இறுதியான முதல் 400 பணக்காரனின் சொத்து 160 கோடி டொலராக உள்ளது. இது யப்பானின் நிலையை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றது. உலகமயமாதலில் யப்பான் எப்படி நவ காலனியாக இருந்த படி, மூலதனத்தை திரட்ட முடியும். லெனின் ஏகாதிபத்திய வரையறையை யப்பான் உள்ளடக்கின்றது. லெனினின் வரையறை இந்த நூலில் உள்ளது. பார்க்க. யப்பான் ஒரு ஏகாதிபத்தியமே ஒழிய வல்லரசோ, நவகாலனியோ அல்ல. உலகமயமாதலில் ஒரு பிரதான நாடு, உலக செல்வத்தில் இரண்டாவதாக சூறையாடும் நாடு, பற்றிய மூடிமறைப்பு ஏகாதிபத்தியத்தை திரித்து காட்டுவதாகும். சீன புரட்சியில் மாவோ சீனாவை ஏகாதிபத்திய நாடாகவே வரையறுத்தார். நவசீனப்புரட்சியின் வரலாற்று நூலில் பக்கம் 259 இல் ஜப்பானிய ஏகாதிபத்தியம் பற்றி தெளிவாகவே கூறப்படுகின்றது. மாவோ யப்பானை "சீன - ஜப்பானிய யுத்தம் இருபதாவது நூறாண்டின் முப்பதாவது ஆண்டின் ஆரம்பமாகும். பத்தாண்டுகளில், ஒரு அரைக்காலனி அரை நிலப்பிரபுத்துவ சீனாவிற்கும் ஓர் ஏகாதிபத்திய ஜப்பானுக்கும் இடையே நடைபெறும் ஒரு ஜீவ மரண யுத்தம் அன்றி வேறு எதுவும் அல்ல. இங்குதான் பிரச்சினை முழுவதின் அடிப்படை அடங்கியுள்ளது" என்றார். ஒரு ஏகாதிபத்தியம் தனது தன்மையில் இருந்து பின்நோக்கிச் செல்வதில்லை. ஏகாதிபத்தியம் ஒரு பொருளாதார முறையின் விளைவு என்பதால், அது பின் நோக்கி நகர்வதில்லை. மாற்றம் அதைத் தாண்டி செல்லுதல் அல்லது ஒரு வர்க்கப் புரட்சி என்ற இரு போக்குதான் நிகழ்ச்சி நிரலாக உள்ளது. தாண்டுவது என்பது, உலகமயமாதலில் நாடு கடந்த ஏகாதிபத்திய மயமாதலை பன்நாட்டு நிறுவனங்கள் வந்தடைவதாகும்.

சீனப் புரட்சியில் மாவோ வரையறுத்த யப்பானிய ஏகாதிபத்தியம், இன்று திடிரென வல்லரசு நவகாலனியாக மாறியது என்பது அரசியல் திரிபாகும். இதை தேசபக்தன் இதழ் கூறுகின்ற போது, ஏகாதிபத்தியத்துக்கு பதிலாக முன்வைக்கும் வல்லரசு பற்றிய கோட்பாடு, அரசியல் சிதைவையும் நிர்வாணப்படுத்துகின்றது.

மூன்று உலக கோட்பாட்டை தொட்டு அதில் "... மேலும் ஒருபடி சென்று ரசியாதான் மிகக் கொடூரமான யுத்த வெறி கொண்டது..." என்று கூறுவதன் மூலம் தேசபக்தன் இதை மறுக்கின்றது. சர்வதேச நிகழ்வுகளை என்? எதற்காக? என்ற கேள்வியின்றி மறுக்கின்ற போது, பொது வர்க்க அரசியலில் இருந்து விலகிச் சென்று விடுகின்றனர். 1960 களில் சீனா, சோவியத் விவாதம் சோவியத்யூனியனை சமூக எகாதிபத்தியமாக வரையறுத்த போது, அதன் அரசியல் உள்ளடக்கம் இதை தெளிவாகவே வரையறுத்தது. மாபெரும் விவாதத்தில் சீனா சார்பாக சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒன்பதாவது விமர்சனத்தை தொடர்ந்து "குருசேவ் ஏன் விழுந்தார்?" என்ற தலைப்பில் 21.11.1964 எழுதிய பகிரங்க கடிதத்தில் இருந்தும், பின்னால் 22.4.1970 இல் "லெனினியமா, சமூக ஏகாதிபத்தியமா?" என்ற விமர்சனத்தில் இருந்தும்  பார்ப்போம். "... யுத்தவெறியைத் தூண்டத் தம்மால் இயன்றதனைத்தையும் செய்ய, தற்போதைய சர்வதேசியச் சூழ்நிலை "புதியதொரு உலக யுத்தம் என்ற ஆபத்தைக் கர்ப்பத்தில் கொண்டிருக்கின்றது" என்று கூப்பாடு போட்டு, "விரோதிகளை முந்திக் கொள்வது" என்று கூறி வெளிப்படையாகப் பயமுறுத்துகிறார்கள். தமது "யுத்த தந்திர எவுகனைகள்" களால் "எந்த இடத்திலுள்ள எந்த இலக்கையும் அழித்தொழிக்க முடியும்" என்று பகட்டுகிறார்கள். அவர்கள் இராணுவச் செலவை மேலும் வெறித்தனமாக அதிகரித்து, ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கான அணிதிரட்டலையும் தயாரிப்புகளையும் தீவிரப்படுத்தி ஹிட்லர் மாதிரி மின்னல் வேகத் தாக்குதல் ஒன்றை தொடுக்கச் சதி செய்திருக்கிறார்கள்... அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் போல், ரசியத் திரிபுவாதச் சமூக - ஏகாதிபத்தியத்தின் ஆட்சியிலிருக்கும் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் உலக யுத்தம் ஒன்றை ஆரம்பிக்கத் தயார் செய்து கொண்டிருக்கும் இன்னொரு தலையாய குற்றவாளியாக மாறியுள்ளனர்...

...ரசியத் திரிபுவாதம் ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்காவில் அதன் விஸ்தரிப்பு, சூறையாடல் ஆகியவற்றின் மூலம், இந்தப் பிரதேசங்களின் மக்களுக்கு எதிராகத் தன்னைத் தானே நிறுத்தி வைத்திருக்கிறது.... உலக ஏகாதிபத்திய அணிகளில் ரசியத் திரிபுவாதச் சமூக ஏகாதிபத்தியம் சேர்ந்திருப்பதால், ஏகாதிபத்திய நாடுகள் மத்தியிலுள்ள முரண்பாடுகள் மேலும் கூர்மையாயிருக்கின்றன. தத்தம் செல்வாக்குப் பிராந்தியங்களை விஸ்தரிக்கும் முயற்சியில் சமூக ஏகாதிபத்தியமும், ஏகாதிபத்தியமும் தீவிரமான போட்டியில் ஈடுபடுகின்றன." இதைத் தான் தேசபக்தன் மூன்று உலக கோட்பாட்டு மறுப்பின் பின், மறுக்கின்றனர். ஆனால் சர்வதேச விவாதம் முழுக்க இதை தெளிவுபட விரிவாக எடுத்துரைக்கின்றது.

ரசிய ஏகாதிபத்தியம் யுத்த வெறியுடன் புதிதாக அரங்கில் நுழைந்ததையும், புதிய உலக நெருக்கடியை வித்திட்டதையும் மறுப்பது, உள்ளடக்கத்தில் சமூக ஏகாதிபத்தியமாக ரசியா மாறியதையும், அன்றைய சர்வதேச விவாதத்தையும் மறுப்பதில் போய்விடுகின்றது. பாட்டாளி வர்க்க அரசு சமூக ஏகாதிபத்தியமாக மாறுகின்ற போது என்ன நடக்கும். ஏகாதிபத்தியத்துடன், ஏகாதிபத்திய நலனை அடையும் போட்டியில் புதிதாக குதிக்கின்றது. உலகம் ஏகாதிபத்தியத்துக்கு இடையில் பங்கிடப்பட்ட நிலையில் இருக்கின்ற போது, புதிதாக ஏகாதிபத்திய கொள்கையுடன் போட்டியில் ஈடுபடுகின்ற போது, பங்கிடப்பட்ட சந்தையை கைப்பற்றும் யுத்தவெறியை பகிரங்கமாகவே கோருவது ஏகாதிபத்திய தன்மையாகும். சந்தைகள் ஒரு சமநிலையில் முரண்பாட்டுக்கிடையில் ஏகாதிபத்தியத்துக்கிடையில் பங்கிடப்பட்ட அமைதியை கெடுக்கும், புதிய நாடாக, ரசிய சமூக ஏகாதிபத்தியம் மாறியது. இது சந்தைக்காக ஏகாதிபத்திய யுத்த வெறியை தூண்டியது. அமெரிக்கா, பிடித்து வைத்திருந்த சந்தைகளை தற்பாதுகாக்கும் தற்காப்பில் ஈடுபட, சமூக ஏகாதிபத்தியமும் அதை கைப்பற்றும் போட்டியில் ஈடுபட்டது. இந்த சர்வதேச சந்தை போட்டியில் ரசியா ஈடுபட்ட நிகழ்வு ஆக்கிரமிப்பு வழியில் தான் சர்வதேச போக்கு வழிகாட்டியது. இந்த போட்டியில் மற்றைய ஏகாதிபத்தியங்கள் தற்காப்பு நிலை எடுத்தன.

இதை மறுப்பது, அரசியல் ரீதியாக ரசியா ஒரு ஏகாதிபத்திய நாடு இல்லை என்பதாகிவிடும். இல்லையாகிவிட்டால், கோட்பாட்டில் சர்வதேச புரட்சிகர நிலைமையை கைவிட்டுச் செல்வதாகும். சர்வதேச நிலைமைகளையும், சர்வதேச பாட்டாளி வர்க்க விவாதத்தையும் ஒரு சேர புரிந்து கொண்டு ஆராயத் தவறுகின்ற போது, பாட்டாளி வர்க்க ஆய்வையும், அதன் புரட்சிகர நிலையையும் கைவிட்டுச் செல்வது நிகழ்கின்றது. இதை விட்டு விட்டு சர்வதேச ரீதியாக, திரிபுவாதிகள் தமது திரிபுவாத நிலைக்கு இசைவாக, இதை திரித்து புரட்டி முன்வைத்த வாதங்களை கூட்டியள்ளி, அதில் இருந்து சர்வதேச விவாதங்களை, மார்க்சிய உள்ளடக்கங்களையும் மறுப்பது அரசியல் ஆய்வாகாது. எல்லா திரிபுவாதிகளும், மார்க்சிய தலைவர்களின் மேற்கோள்களை திரித்து புரட்டித்தான், தமது எல்லாவிதமான துரோகத்தையும் செய்தனர். இதைக் காணத் தவறி, அவற்றைக் கொண்டே மார்க்சிய சர்வதேச விவாதத்தையும், அதன் அரசியல் உள்ளடக்கத்தையும் மறுப்பது, புரட்சிகரமான அரசியலும் அல்ல, ஆய்வுமல்ல.

இனி மூன்று உலக கோட்பாடு தொடர்பாக பார்ப்போம். "மாவோவின் பெயரில் வந்தது. "புதிய ஜனநாயக சீனக்குடியரசு" தனது வெளியுறவுக் கொள்கையாக கடைப்பிடித்த ஒரு கொள்கையை உலகப் புரட்சி இயக்கத்தின் கோட்பாடாக "மாஓ"வின் மறைவின் பின் மாவோவின் கோட்பாடாக சீன முதலாளித்தவ பாதையாளர்களால் முன்வைக்கப்ட்டது" என்று தேசபக்தன் குறிப்பிடுகின்றனர். முதலில் மார்க்சிய ஆய்வும், நிராகரிப்பும் மூன்று உலக கோட்பாட்டு உள்ளடக்கம் மீது இருக்க வேண்டும். யாரால் எப்போது எங்கு வைக்கப்பட்டது என்பதும், யார் இதை பயன்படுத்தினர் என்பதும், யார் எழுதினர் என்பதும், மார்க்சிய ரீதியில் இரண்டாம் பட்சமானவையாகும்.  மூன்று உலக கோட்பாட்டின் அரசியல் உள்ளடக்கம் கோட்பாட்டு ரீதியாக மார்க்சிய வழி சார்ந்ததா? அல்லது இல்லையா? என்பதே முதன்மையான விமர்சன ஆய்வு வழியாகும். சீன முதலாளித்துவ திரிபுவாதிகள்  பயன்படுத்தியது என்பது இரண்டாம் பட்சமானது. எல்லாத் திரிபுவாதிகளும் மாhக்சிய தலைவர்களின் மேற்கோள்களின் பின்புதான் தமது திரிபுவாதத்தை, திரித்துப் பயன்படுத்தினர். கோட்பாட்டு அடிப்படையில் ஒரு கோட்பாடு மார்ச்சிய அடிப்படை உள்ளடக்கத்துக்கு புறம்பாக இருக்கின்றது எனின், அதை தெளிவாக கோட்பாட்டில் நிறுவ வேண்டும். இதைவிட்டு சீனா அப்படி செய்தது, இப்படி இருந்தது என்பது அரசியல் விவாதம் அல்ல. கோட்பாட்டில் சரி என்று "இரு முக்கிய முடிவுகள்" என்ற நூலில் "தமிழ் மாநில அமைப்புக் கமிட்டி இந்திய பொதுவுடமைக் கட்சி (மாபுக்சிஸ்ட் லெனிஸ்ட்)" 1981 இல் நிறுவியதை கோட்பாட்டு ரீதியாக இதுவரை மறுத்து நிறுவியதில்லை. இதை மறுக்கும் கோட்பாட்டு விவாதம் இன்றி, அணிகளை பிளப்பதும் அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதும், பிற்போக்கு தன்மையானதாகும். 1959யில் பீங்கிங்கில் அச்சான நவ சீனப் புரட்சியின் வரலாறு நூலில் 1940 களின் நிலமையை மாவோவின் தலைமையிலான சீனகட்சி சொந்தப் புரட்சியைக் கையாளும் போது  "சர்வதேச ரீதியாக மூன்று வகைப்பட்ட சக்திகள் இருந்தன: ஜப்பான், அமெரிக்காவும் பிரிட்டனும், சோவியத்யூனியன், கட்சி இத்தகைய சக்திகளுக்கிடையே கண்டிப்பான வேறுபாட்டினை செய்தது." இது சோவியத்யூனியன் அமெரிக்கா பிரிட்டனுடன் இரண்டாம் உலகயுத்தத்தில் பாசிசத்துக்கு எதிரான ஐக்கிய முன்னணி உருவாக முன்பே, மாவோ கடைபிடித்து வரையறுத்த சர்வதேச மூன்று வகைப்படுத்தப்பட்ட புரட்சிகர பார்வையாகும். மூன்று உலக கோட்பாட்டு விவாதம் இன்றி அணிகளை பிளப்பது அரசியல் ரீதியாக தவறானவை.

15 அம்ச விடையங்களை உள்ளடக்கி "தமிழீழ புதிய சனநாயக கட்சி"யின் பிரகடனம் மற்றும் ஐக்கியத்துக்கான அறிக்கை மீதான, மேலதிகமான சில கருத்தைப் பார்ப்போம்.

தேசபக்தன் முதல் பக்கம் இரண்டாம் பந்தியில் "புலிகள் இயக்கம் மட்டுமே தேசிய விடுதலை யுத்தத்தை தொடர்ந்து" என்ற கருத்து வரையறை முற்றாக கோட்பாட்டு தவறைக் கொண்டது. இது பாட்டாளி வர்க்க தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும், புலிகளின் விடுதலைப் போராட்டத்துக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை மறுக்கின்றது. ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் குறைந்த பட்சம் ஏகாதிபத்திய எதிர்ப்பு, தரகு முதலாளித்துவ எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு அடிப்படையானது. இதை ஏற்றுக் கொள்ளாத புலிகளின் போராட்டத்தை தேசிய விடுதலைப் போராட்டம் என்று வரையறுப்பது தவறானது.

அதே பந்தியில் மற்றைய குழுக்கள் தொடர்பாக "சிறிலங்கா அரசின் "தேசிய சனநாயக" நீரோட்டத்தில் ... அல்லது சமாதான இயக்கங்களில் மனிதவுரிமை அமைப்புகளில் கரைந்து விட்டனர்" என்பது கோட்பாட்டு தவறை விதைத்துச் செல்லுகின்றது. அந்த இயக்கங்கள் அரசு மற்றும் ஏகாதிபத்திய கைக்கூலி அமைப்பாக, துரோக அமைப்பாக இருப்பதை மறுக்கின்றது. மாறாக சமாதான வாதியாகவும், அரசின் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து விட்டதாக பிரமையை விதைக்கின்றது. இது சிறிலங்கா அரசு பற்றி சனநாயக பிரமையை, சமாதான இயக்கம் பற்றிய நம்பிக்கையை விட்டுச் செல்லுகின்றது.

இரண்டாம் பக்கத்தில் முதல் பந்தியில் "புலிகளின் தலைமையிலான போராட்ட.." வழிபற்றி கூறப்படுவது முற்றாக தவறானது. தீர்க்கமான தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்துவதாக கூறுவதன் மூலம், தேசிய கடமையை புலிகளிடம் விட்டுச் செல்வதற்கு வழிகாட்டுகின்றது. அத்துடன் முதலாளித்துவ வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறுவது, அதைவிட தவறாகும். தேசிய முதலாளி வர்க்கத்தை எந்த விதத்திலும் பிரகடனம் செய்யவில்லை. அப்படிச் செய்யின் அதன் எதிரிகளை தெளிவாகவே பிரகடனம் செய்யும் அல்லவா!

அதே பந்தியில் புரட்சிகர தேசிய போராட்ட வழி உருவாகமைக்கு தேசிய சர்வதேச சூழ்நிலை முக்கிய பங்காற்றியது என்பது தவறானது. இது மிகச் சிறுபங்கு மட்டுமேயாகும். மாறாக சொந்த அரசியல் வழிதான், அதாவது எந்த வர்க்கம் தலைமை தாங்குவது என்பது முதல் யார் நட்பு சக்தி என்பதும், யார் எதிரி என்பது வரை பிரகடனம் செய்து வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்காமை தான் முக்கியமான காரணமாகும். இன்று சர்வதேச மற்றும் தேசிய சூழலை விட, சொந்த வர்க்க மற்றும் எதிரி பற்றிய தெளிவும், அணிதிரட்டலும் தீர்க்கமானது.

அதே பக்கத்தில் இராண்டம் பந்தியில் யே.வி.பியின் தேசிய சோசலிசம் என்பது எதையும் விளக்கிவிடவில்லை. ஒரு நாட்டில் சோசலிசம் கட்டமைப்பது தவறானவையாகி விடாது அல்லவா. யே.வி.பி சோசலிசத்தை முன்வைத்ததா? உச்சரிப்பு வாதங்களை தாண்டி அதன் அரசியல் உள்ளடக்கம் சோசலிசமாக இருப்பதில்லை இருந்ததில்லை.

இலக்கம் 2இல் "தரகு, முதலாளிய அதிகார வர்க்க முதலாளித்துவம்.." என்ற விளக்கம் என்ன? தரகு முதலாளித்துவம் சரியானது. அதிகார வர்க்க முதலாளித்துவம்  என்பது என்ன? அதன் வர்க்க பிரதிநிதித்துவம் எது? அதாவது முதலாளித்துவத்தின் எந்தப் பிரிவை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

இலக்கம் 3 இல் அதிகார வர்க்க முதலாளிகள் என்று குறிப்பிட்டு அதை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள தமிழர்கள் என்று குறிப்பிடுவது ஆச்சரியமாக உள்ளது. மேற்கில் புலம் பெயர்ந்த தமிழர்களிடையே உள்ள இறக்குமதி வர்த்தகம் சார்ந்த முதலாளிகள் பற்றிய பிரமையே விதைக்கப்படுகின்றது. அந் நாடுகளில் எந்த விதமான சமூக தகுதியும் அற்ற இந்த பிரிவு, தமிழர்களிடையே ஒரு அதிகாரம் கொண்ட வர்க்கமாக இருப்பதில்லை. புலம் பெயர் சூழலில் சொகுசாக பிழைத்துக் கொள்ள, இலங்கையில் இருந்து பெறும் பொருட்களை அடிப்படையாக கொண்டே உயிர் வாழ முனைகின்றது. இது குறித்த இந்த தலைமுறைக்குட்பட்ட ஒரு எல்லையை மட்டும் கொண்ட பிரிவாகும். இது தமிழீழத்தில் சரி, இலங்கையில் சரி இதுவரை எந்த விதமான மூலதனத்தையும் இடவில்லை. அது போல் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கமாகவும் இல்லை. அப்படியிருக்க எப்படி அதை எதிரியாக காட்டுவது நிகழ்கின்றது.

அதே பந்தியில் புலிகளுக்கு முதலாளிகள், பணக்கார விவசாயிகள், நடுத்தர மேல்மட்டம் முழுமையான ஆதரவை வழங்குகின்றது எனின், எதை அடிப்படையாக கொண்டு இதை விளக்குகின்றீர்கள்? புலிகளின் வர்க்க அணிதிரட்டலில் எதிரிகளை பிரகடனம் செய்யாத எல்லையில், இதை கற்ப்பிப்பதில் அர்த்தமில்லை. பிரகடனம் செய்யாத நிலையிலும், குறைந்த பட்சம் நடைமுறை பொருளாதார வடிவத்தில் கூட இதை நிறுவமுடியாது. தரகு மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கம் பால் எப்படி இருக்கின்றது என்பதும், அதில் இருந்து இதை எப்படி வேறு பிரித்து வந்தடைகின்றீர்கள் என்பதும் ஆச்சரியமாக உள்ளது. இந்தப் பிரிவு ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஊசலாடுகின்றனர் என்பது, ஏதோ அதை எதிர்த்து நின்ற வழியில் என்ற கற்பனையை பிரதிபலிக்கின்றது. எதிர்த்தே போராடாத, சொந்த அணிக்குள் கூட பேசாத விடயத்தில் எப்படி, ஊசாலாட்டம் இருக்கும். இஸ்ரேல் பாணி கனவுகளில் பிரமை கொண்ட இயக்கம், ஏகாதிபத்திய தயவில் தமிழீழம் அமைக்க உறுதி கொண்ட இயக்கம், ஊசலாடுவதில்லை. அது தெளிவாகவே இருக்கின்றது.

5 இல் பெண்கள், சிறுபான்மை மத மக்கள், ஒடுக்கப்பட்ட சாதி மக்களுடன் கூட்டிணைந்து போராடுவது என்பது, இருக்கும் அரசியல் எல்லையில் பிற்போக்கில் அணிதிரள்வதாகும். புதிய ஜனநாயக புரட்சிக் கடமையை கைவிட்டு அணிதிரளுவதை குறிக்கும். உதாரணமாக சிறுபான்மை மத மக்களுடன் எப்படி புதியஜனநாயக புரட்சியை நடத்த முடியும். இலங்கையில் சிறுபான்மை மத மக்கள் என்று எவர்களை கருதுகின்றிர்கள். கிறிஸ்தவ மக்களையா? மத அடிப்படையில் அணிதிரள்வது பிற்போக்கானது. தனிப்பட்ட மனிதனின் மத வழிபாட்டுச் சுதந்திரம் வேறானது. மத மக்கள் என்பது அடிப்படையில், பிற்போக்கில் அணிதிரள்வதாகும். புதியஜனநாயக புரட்சியில் மத மக்களுடன் கூட்டமைக்காது. இது புதிய ஜனநாயக கடமைக்கு எதிரானது.

6 இல் இலங்கை அரசுக்கு எதிராக போராடும் புலிகள் உட்பட அனைத்து கட்சிகளுடனும், எல்லா வர்க்க போராட்ட சக்தியுடனும் இணைந்து என்று கூறப்படுகின்றது.. சிறிலங்க அரசுக்கு எதிராக இன அடிப்படையில் போராட முனையும், அதாவது எதாவது ஒரு ஏகாதிபத்தியம் சார்ந்து அல்லது அது போன்ற எதாவது ஒன்றுடன் நாம் இணையமுடியுமா? புதிய ஜனநாயக புரட்சியை முன்னெடுக்க, தேசிய புரட்சியின் பிரதான எதிரியான ஏகாதிபத்தியத்தை, தரகு முதலாளித்துவத்தை, நிலப்பிரபுத்துவத்தை எதிர்க்காத எந்த சக்தியுடனும், இணையமுடியாது. இங்கு எல்லா கட்சியும் என்பதும், எல்லா வர்க்கமும் என்பதும், கோட்பாடற்ற இணைவை, சிறிலங்காவுக்கு எதிராக முன்நிறுத்துகின்றது. சிறிலங்கா அரசுக்கு எதிரான மற்றொரு ஏகாதிபத்தியம் கூட, இனவிடுதலை போராட்டத்தில் ஈடுபட முனையும் போது, எப்படி தேசிய சக்திகள் கூட்டுக்குப் போகமுடியும்.

7 இல் தமிழ் குறுந்தேசியவாதமும் என்பது, தமிழ் இனக் குறுந் தேசியவாதம் என்பதே சரியாகும். இனக் குறுந் தேசியவாதம் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்காது. இது உங்கள் முந்திய மதிப்பீட்டுக்கு அதாவது புலிகள் தேசிய சக்தி என்றதுக்கு முரணானது.

10 இல் மற்றைய இனங்கஞடன் கூட்டிணைந்து போராடுவது என்பது, இனங்களின் இணைப்பை மறுக்கின்றது. இந்த அடிப்படையில் சுயநிர்ணயம் பற்றிய கோட்பாடு கைவிடப்படுகின்றது. சிங்கள பாட்டாளி வர்க்கம் பிரிவினையை ஏற்றுக் கொள்ளும் போது, தமிழீழ பாட்டாளி வர்க்கம் ஐக்கியத்தை கோரி பிரச்சாரம் செய்வது எந்த இடத்திலும் முன்வைக்கப்படவில்லை. இந்த நிலைமை ஏற்படும் ஒரு நிலையில், புதிய ஜனநாயக புரட்சியை சேர்ந்து நடத்துவது பற்றி பேசவில்லை. மாறாக சர்வதேச நாடுகளுடன் எப்படி உறவு உள்ளதோ, அதே பாணியில் கூட்டிணைவு வைக்கப்படுகின்றது. இது சுயநிர்ணயத்தின் அரசியல் உள்ளடக்கத்தை வெட்டித் திருத்துவதாகும். இலங்கை இன்னமும் ஒரே நாடாக இருக்கின்ற போது, இனங்கள் பிளவுபட்டுள்ள நிலையில் இதை கையாளும் பாட்டாளி வர்க்கம், சுயநிர்ணயத்தில் உள்ளடகத்தை சரியாக பிரயோகிக்க வேண்டும். திட்டவட்டமாக ஐக்கியம் பற்றியும், பிரிவினை பற்றிய நிலைப்பாட்டை பேச மறுக்கின்றது. ஏதோ இது பற்றி விவாதம் இல்லாத மாதிரி பூசி மெழுக முயலுகின்றது. இவை விவாதத்துக்கு வரமாட்டாத கற்பனை புனைவுகள் அல்ல. இதை பற்றிய மௌனம் அடிப்படையில் சந்தர்ப்பவாதமாக இருப்பது, பரிணமிப்பது தெளிவானது. முன்பு அகதிகள் குரலில் புலிகளை எதிர்ப்பதும் இல்லை, ஆதரிப்பதும் இல்லை என்ற நிலைப்பாடு, சந்தர்ப்பவாதத்துடன் கூடிய காரிய வாதமாகும். இதுவே ஐக்கியத்துக்கும், பிரிவினைக்கும் நிகழ்கின்றது. மாறாக கூட்டிணைவு முன்நிறுத்தப்படுகின்றது.

12 இல் "சட்ட விரோத மற்றும் தடை செய்யப்ட்ட இயக்கங்களுடன்" உறவு கொள்ளக் கூடாது என்பது சர்வதேசியத்தை மறுப்பதாகும். மூன்றாம் உலகில் உருவாகும் எல்லா மார்க்சிய லெனினிய அமைப்புகளும், தேசிய விடுதலை அமைப்புகளும் சட்ட விரோதமாகவே இருக்கின்றது. அது அரை மற்றும் பகிரங்கமான அமைப்புகளாகவும், வர்க்கப் போராட்டம் கூர்மையடைகின்ற போது  முற்றாக சட்ட விரோத அமைப்பாகவும் இருப்பது இயல்பு. அதனுடன் தொடர்பு கொள்வது சர்வதேசியத்தின் கடமையாகும். இதை மறுக்க முடியாது. குறிப்பான நிலைமையை பொதுவாக்கும் பண்பு, சர்வதேசியத்தில் இருந்து விலகிச் செல்லத் தூண்டுவதாகும். வாழும் நாட்டில் புரட்சிகர தன்மைக்கு ஆதரவு வழங்க மறுப்பது சர்வதேசியத்துக்கு எதிரானதாகும். குறிப்பான நாட்டில், குறிப்பான நிலைமையை கவனத்தில் கொண்டு பரிசீலிப்பது இதில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். ஆனால் குறிப்பானதை அடிப்படையாக கொண்டு மறுப்பது சர்வதேசியத்தையும், போராட்டம் வர்க்கப் போராட்ட கூர்மையில் தவிர்க்க முடியமால் சட்ட விரோதமாக மாறும் தன்மையை, மறுக்கும் அரசியல் வடிவத்தை கோட்பாட்டில் விதைப்பதாகும். சட்ட விரோதமானதும், தடை செய்யப்பட்டதும் புரட்சிகரமான அரசியல் வழிப்பட்டது அல்ல என்ற நிலைக்கு, சரிவதாகும். அத்துடன் இதை தன்னார்வக் குழுக்களுடன் பொருத்திக் காட்டி மறுப்பதும், இதை பொதுமையாக எதிரி வர்க்க நிலைக்கு இட்டுக் கட்டுவதாகும். சட்ட விரோத, மற்றும் தடை செய்யப்பட்ட இயக்கம் புரட்சிகரமாக இருப்பதில்லையா என்ற கேள்வி, இங்கு எழுப்பப்படுகின்றது.


பி.இரயாகரன் - சமர்