Language Selection

சமர் - 28 : 03 - 2001
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மலடாகிப் போன வக்கற்ற புலம்பெயர் இலக்கிய நடத்தைகளை இட்டு எழுதுவது காலத்தையும், இடத்தையும் விரயமாக்குவதாகவே மாறிவிட்ட நிலையில், இதை அம்பலம் செய்யும் வகையில் சிற்சில குறிப்புகள் அவசியமாகி விடுகின்றது.

 

பாராளுமன்றம் பன்றிகள் கூடிக் குலாவும் சகதியாக இருக்குமளவுக்கு அதன் பிரதிநிதிகள், ஊழல், லஞ்சம், விபச்சாரம், சாதிச் சங்க அரசியல், நிற அதிகாரம், ரவுடித்தனம், கடத்தல், திருட்டு, உழைப்பை உறிஞ்சும் அட்டைகள் என்று சமுதாயத்தின் இழிந்து போன அனைத்து சமுதாய விரோதிகளும் கூடி புரண்டு எழும் நாற்றத்தால் அழுகிக் கிடக்கின்றது. இந்தப் பாராளுமன்றங்கள் எப்படி மக்களுக்கு விரோதமாக இருக்கின்றதோ, உலகத்தில் உள்ள கழிசடைகள் எல்லாம் ஜனநாயகத்தின் பெயரில் கூடுமிடமாக இருக்கின்றதோ, அது  போன்று தான் புலம் பெயர் இலக்கியச் சந்திப்பும் இருக்கின்றது என்றால் மிகையாகாது.

புலம் பெயர் இலக்கியச் சந்திப்பு ஏன் நடத்துகின்றார்கள் என்று கேட்டால் அதற்குக் கூட பதிலளிக்க முடியாத வகையில், சமூக நோக்கம் சிறிதும் அற்றவையாகி வக்கற்றுப் போய் மலடாகியுள்ளது. கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் பின்பும், சமூகத்தின் நோக்கத்தில் உண்மையையோ, நேர்மையையோ கொண்டிருப்பதில்லை. மலடாகிப் போன மலட்டுத் தனத்தில் வக்கற்றவர்களாகி உயிர்ப்பற்ற வம்புகளின் இன்ப நுகர்வில் காலத்தையும், சமூகத்தையும் இட்டு வக்கரித்து பிதற்றுவதே இதன் பொழுது போக்கு. காழ்ப்பு உணர்வுகள், சதிகள், திட்டமிட்டே தாக்குவது, முதுகு சொறிவது, குறுகிய நோக்கில் சாதி மற்றும் சமுதாயத்தில் எதாவது ஒன்றை இட்டு, சமூக நோக்கமின்றி முன்னிலைப்படுத்தி அதில் குளிர் காய்வது, பெண்ணியம் பேசிய படி கலந்து கொள்ளும் பெண்களை ஆணாதிக்க வடிவில் இழிவாக கொச்சைப்படுத்துவதும் பயன்படுத்துவதும், தமது உப்புச் சப்பற்ற பல பக்கக் கட்டுரைகளை பைபிள் மாதிரி, எழுதியதை ஒப்புவிப்பதை நோக்கமாக கொள்வது, விவாதங்கள் நடத்த முடியாத அளவுக்கு அறிவற்ற குருட்டுத்தனத்தில் இருந்து வீம்பு பண்ணுவது, எங்கள் அறிவுத் தேடலை பன்முகப்படுத்துகின்றோம் என்ற வம்பு வாதங்களின் பின்பு ஓணான் போன்று தமது நிறம் மாற்றும் வக்கற்ற தன்மைக்கு விளக்கம் அளிப்பது, நேரடி வன்முறை என்று, சமுதாயத்தை இட்டு அலட்டிக் கொள்ளாமல், போதைவஸ்து கடத்தியவர்களும், ஜனநாயக படுகொலைகளை நியாயப்படுத்தியவர்களும், உற்றர்ரும், உறவினரும், நண்பர்களும், இலக்கியம் சமுதாயத்துடன் தொடர்பற்றது என்று சமுதாயத்தில் இருந்து விலகி வக்கற்று பீற்றுபவர்களும் என்று பல வண்ண சமூக இழிவுகள் சேர்ந்து, யதார்த்தத்துக்கு புறம்பாக தமது வம்புத் தனங்கள் மூலம் சீரழிந்து கிடக்கின்றனர்.

பாரிசில் மார்கழி 23,24 ஆம் திகதிகளில் நடந்த இலக்கியச் சந்திப்பும் இதையே மீண்டும் சாதித்தது. ஆனால் இந்த சந்திப்பு தனக்குத் தானே மார்க்சிய முலாமிட நாய் வாலை நிமிர்த்த பிரயத்தனம் செய்தது. யாரை மட்டம் தட்டுவது, விவாதத்தின் ஒழுங்கு முறைகள் மூலம் யாரை புறக்கணிப்பது, யாருக்கு நேரம் கூட்டுவது குறைப்பது என்று திட்டமிட்டு தீர்மானித்து, அதை எப்படி மறைமுகமாக கட்டுப்படுத்துவது என்று பல சதிகளை, திட்டமிடுதலைக் கொண்டே "சுதந்திரமான" "ஜனநாயக" ~விவாதத்தை" நடத்தினர். பாரிசில் எக்ஸில், உயிர்நிழலை அடிப்படையாக கொண்டு உருவான மோதல், சென்ற வருடம் வன்முறையாக வெடித்தது. இதில் இரண்டு அணியாக களம் இறங்க, சிலர் வாலை அங்கும் இங்குமாக இதற்குள் நுழைத்தபடி நகர்ந்து மலடாகிப் போன புலம் பெயர் வக்கற்ற வக்கிர இலக்கியம், இன்று இறுகிய இரு போக்குகளை எடுத்துள்ளது.

எக்ஸில் மார்க்சிய எதிர்ப்பை அடிப்படையாக கொண்டு வலதுசாரி வலது அரசியல் பக்கம் குறுகிய தீடீர் அதிர்ச்சி மலட்டுக் கோசங்கள் ஊடாக தன்னை நிலைப்படுத்த முனைகின்றது. மறுபுறம் உயிர்நிழல் இதனுடன் இணங்கிப் போகாத அனைத்து வகையான வக்கற்ற மலட்டு அரசியல் ஓடுகாலிகளின் வலது இடது ஜென்மங்களின் பின்னால், தனக்குத் தானே மார்க்சிய முலாம் பூச விரும்புகின்றது. மார்க்சியத்தின் வர்க்கப் போராட்டமும், அதன் மேலான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், தொடர்ந்தும் வர்க்கப் போராட்டத்தை தொடர்வதையும் மறுத்து, அதை எதிர்த்து மார்க்சியத்தை திரித்து மலடாக்கி, அதை மார்க்சியமாக காட்டி தனக்குத் தானே ஒளிவட்டத்தை போட்டுக் கொள்ள முனைகின்றனர். இவ்விரண்டுக்கும் இடையில் அங்கும் இங்குமாக அலைவுகள் இருந்த போதும், இதன் பண்பு தெளிவுபட கோடுபிரிக்கத் தொடங்கியுள்ளது. எக்ஸிலின் வலது அணியில் தனிப்பட்ட காரணங்களால் இடம் கிடைக்காத வலதுகள், உழைக்கும் மக்களை எதிர்த்து அம்மாவின் பின்னால் அணிகட்டி கோஸ்டி கானம் கோலோசுகின்றது. கோஸ்டி கானம் மேலும் ஆழமாக புதிய கோஸ்டிகள் சார்ந்து சஞ்சிகளையும், மலர்களையும் பெத்துப் போடுவது தவிர்க்கமுடியாது விளைவாகின்றது. இதன் தொடர்ச்சியில் சனதருமபோதினி என்ற மலர் அண்மையில் வெளியாகியது. இதன் வெளியிட்டு ஆசிரியர் குறிப்பில், சமரை மையமாக வைத்து சேறுயடிப்பை தொகுத்துள்ளது. சென்ற மலர் இருள்வெளி போல், ஒடுக்கபட்ட மக்களை எதிர்த்து தனது பிதற்றலையே மீளவும் புலம்ப முடிந்துள்ளது.

பாரிசில் தொடங்கிய அரசியலில் வக்கற்றவர்களின் இலக்கிய மோதல், சமுதாய மாற்றத்தை நடைமுறையில் சாதிக்க போராட வேண்டும் என்று கோராத, இதை நிராகரிக்கின்ற இலக்கிய பிழைப்புவாதிகள் அனைவரையும் இதற்குள் அணிதிரட்ட தொடங்கியுள்ளது. புலம் பெயர் அனைத்து நாடுகளிலும், இந்தியாவிலும் இப்பிளவு சார்ந்து ஆழப்படுத்தியுள்ள அதேநேரம், இது இலங்கைக்குள்ளும் புகுந்து வருகின்றது. இதை வக்கற்றவர்களின் மலட்டுக் கோட்பாட்டில் சாதிக்கவில்லை. மாறாக அவர்களின் எழுத்துக்கான முன்னுரிமையும் நிராகரிப்பையும் (அதாவது அவர்களுக்கிடையில் உள்ள முரண்பாட்டை பயன்படுத்தல்) அடிப்படையாகக் கொண்டும், தனிப்பட்ட உறவுகளை ஏற்படுத்தல் மூலமும், விமர்சனமற்ற குழையடிப்பும், அவர்களின் எதிரிகளை தூற்றுதல் மூலமும், தனிப்பட்ட தாக்குதலை முதுகுக்கு பின்னால் கட்டமைத்தும், சமுதாயம் சார்ந்த வக்கற்றுப் போன மலட்டு இலக்கியம்  ஒன்றுக்கு பணத்தை கொடுப்பதன் மூலமும், வெளிநாட்டு வக்கற்ற இலக்கிய சுற்றுப் பயணத்தை குலுக்கல் சீட்டாக இவர்கள் முன் நிறுத்தி, கனவுகளில் மிதக்கவிட்டதன் மூலம், இந்த அணி பிரிதல் சாத்தியமாகியுள்ளது. சீட்டுக் குலுக்கலில் வெற்றி பெற, இலங்கை இந்தியாவில் வாழும் மலட்டு இன்ப நுகர்ச்சி இலக்கிய நீட்சைகள், டிஸ்கோ நடனக்காரிகள் போல் உரிந்துவிட்டு ஆடும் "சுதந்திர" "ஜனநாயக" வேஷைத்தனத்தில் தலைகால் தெரியாமல் குதித்தாடுகின்றனர். இந்த வெளிநாட்டு பயணக் குலுக்கல் மற்றும் தமது தெரிவில் தமது குறுகிய வக்கற்ற திடீர் மலட்டு அதிர்ச்சி கோசங்களை உச்சரித்து, கூப்பிட்டவரை உச்சி குளிர வைக்கும் நபர்களை முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். அனைத்துக்கும் பணத்தை ஆதாரமாக, அடிப்படையாக கொள்ளுகின்றனர். இந்தியா, இலங்கையில் இருந்து பிழைப்புவாத பிரமுகர்களை கூப்பிடுவதே ஜனநாயக புரட்சியாகவும், புலம் பெயர் இலக்கியமாகிப் போனது ஆச்சரியமானது அல்ல. இது சாதி பார்த்து, பிரமுகத்தனம் பார்த்து, மார்க்சிய எதிர்ப்பின் அளவு கோல் பார்த்து, இதில் எது தமது  வக்கற்ற அரசியல் மலட்டு பிழைப்பவாத பிளவு அரசியலுக்கு சாதகமானது என்று கணிப்பிட்டே, தமது குலுக்களில் கூட மோசடி செய்கின்றனர்.

இந்தியாவில் இருந்து இலங்கை வரை இந்த குலுக்கல் விரவிப் பரவுகின்றது. ஏகாதிபத்திய பாலியல் நோயால் வக்கிரம் பிடித்த ஆணாதிக்க கழிசடை நாயகன் சாருநிவேதாவின் ஐரோப்பிய இலக்கிய வக்கற்ற மலட்டுச் சுற்றுப் பயணமும் (பார்க்க பெட்டிச் செய்தியை), இலங்கையில் இருந்து வந்த டொமினிக் ஜீவா என, வக்கற்ற இரு மலட்டு எதிர் அணி சார்ந்து இலக்கியச் சந்திப்பின் கோஷ்டி கானத்தில் கலந்து கொண்டனர். இது போன்றே சில மாதத்துக்கு முன் நடந்த பெண்கள் சந்திப்பிலும் நடந்தது. புலம் பெயர் இலக்கிய நடத்தை என்பது, இலங்கை இந்தியாவில் வக்கற்றுப் போன பிரமுகர்களின் தயவிலான கோஷ்டி கானத்தில் புலம் பெயர் இலக்கிய வானில் பாடப்படுகின்றது. இந்த வக்;கற்றவர்கஙளின் இன்ப நுகர்ச்சி எப்போதும் சந்திப்புகளின் இறுதியில் அருந்தும் மதுவில் புளுத்து வெளிப்படுவது வழக்கம்;. இங்கு வன்முறை, சாதி வக்கிரம், நிற வக்கிரங்கள், ஆணாதிக்க கொப்பளிப்புகள் உச்ச வெறியில் உளறும் போதும் தலைகால் தெரியாது பீறிடுவதே புலம் பெயர் இலக்கியத்தின் உச்சமாகும்.

புலம் பெயர் வக்கற்ற மலட்டு இலக்கியத்தின் நியாயப்படுத்தலை படுகொலை செய்யப்பட்ட சபாலிங்கம் பெயரில் பூசி மெழுகுகின்றனர். புலம் பெயர் இலக்கிய சஞ்சிகை சரி, இலக்கியச் சந்திப்பு தொடங்கியவர்களும், தொடங்கிய சமூக நோக்கம் சீரழிந்த போது, பலரை அதில் இருந்து ஒதுங்க வைத்தது. இந்த இலக்கியச் சந்திப்பு தொடங்கியதுக்கும் சபாலிங்கத்துக்கும் எந்தவித உறவு ஒட்டோ கிடையாது. சபாலிங்கம் கடைந்தெடுத்த வகையில், புதிதாக வந்த அகதிகள் சார்ந்து நியாயமற்ற வகையில் அவர்களை மூலதனமாக்கிய ஒரு வியாபாரி தான். இங்கு அல்லல்பட்டு வந்த அகதிக்கு நியாயமான வகையில், பணம் பெற்று உதவிய சமூகவாதியல்ல. சமூகப்பற்று என்பது இந்த அகதிகளை மனிதநேயத்துடன் அணுகுவதும், அவர்களிடம் இயன்றதை மட்டும் பெற்று உதவுவதுமே. ஆனால் இதற்கு மாறாக பணத்தை கறந்ததன் மூலம், அவரின் சொந்த வாழ்வை மேம்படுத்தும் ஊடகமாக இந்த அகதிகள் இருந்தனர். இலங்கையில் இருந்து வரும் அகதிகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டிருந்தவர், அவர்களிடம் வியாபாரியாக நடந்தவர், புலம்பெயர் மற்றும் சமூகம் பற்றி இலக்கியத்தில் மனிதாபிமானியாக, சமூகப் பற்றாளனாக இருந்தார் என்று பசப்புவது உண்மைக்கும், நேர்மைக்கும் மாறானது. இரட்டை நடத்தைகள் சமூக உறவில் சாத்தியமானது அல்ல. மனித உரிமைக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய கைக்கூலித்தனத்தில் பணம் பெற்று, இலங்கை அரசின் பாதுகாப்பு பெற்று வெளியிடும் வெளியீடுகளை, மொழி பெயர்த்து ஏகாதிபத்திய அரசியல்வாதிக்கு விசுவாசமாக விநியோகித்து, ஏகாதிபத்திய கைக்கூலியாகி புலம் பெயர் இலக்கியவாதியாகியவர். இவர் படுகொலை செய்யப்பட முன்பு மிக குறுகிய காலமே, இந்த இலக்கியச் சந்திப்புகளுக்கு சென்று வந்தவர். ஆனால் புலம் பெயர் இலக்கிய செயற்பாட்டால் தான் கொல்லப்பட்டார் என்பது அப்பட்டமான சோடிப்பும் மோசடியுமாகும். அது சரி இந்த இலக்கிய பிரமுகர் என்ன இலக்கியத்தை புலம் பெயர் சமூகத்துக்கு தந்துள்ளார்! அதில் எது சார்ந்த குறிப்பாக கொல்லப்பட்டார்! வக்கற்றுப் போன மலட்டு எந்த இலக்கியவாதியும் வைக்க முடியாத மர்மமான இலக்கியமாம் அவர் இலக்கியம்!

இலக்கிய சந்திப்பிலும், வெளியிலும் கோஷ்டி சேரும் வக்கற்றவர்கள், இலக்கிய சந்திப்பு புலிகளின் அராஜகத்துக்கு எதிரானது என்றும், அதனால் தான் புலிகள் இதை விரும்பவில்லை என்றும் பலவிதமாக தாலிக்கு முடிச்சுப் போடுகின்றனர். புலிகளின் அராஜகத்துக்கு இலக்கியச் சந்திப்பு எதிரானது என்பது எந்தவிதமான அரசியல் அடிப்படையோ, அதை இதுவென்று சொல்ல எந்தவிதமான அடிப்படையும் ஆதாரமும் கிடையாது. புலிகள் இலக்கியச் சந்திப்பை விரும்புகின்றார்களா எனின் இல்லை. அது புலிகளின் அரசியலுக்கு எதிரானது என்ற அடிப்படையில் அல்ல. புலிகள் அல்லாத எந்தச் செயற்பாட்டையும் புலிகள் விரும்புவது இல்லை. அது சிறு இலக்கிய சஞ்சிகையாக இருக்கட்டும், பாடசாலை பழைய மாணவர் சங்கமாகட்டும், பல்வேறு புலிகளின் பினாமியாக செயற்படும் தொலைக் காட்சி மற்றும் ரேடியோவாக இருக்கட்டும், புலிகளுக்கு சார்பாக புலி அல்லாத பிரிவு பணம் திரட்டுவதாக இருக்கட்டும், சினிமா படம் ஓடுவதாகட்டும், தமிழ் கல்வியாகட்டும், அனைத்தையுமே புலிகள் அல்லாத பிரிவு செய்வதை புலிகள் விரும்பவில்லை. இது சாதாரண பலசரக்கு கடைகள், கோயில்கள் என அனைத்துக்கும் பொருந்தும். இதுவே யதார்த்தமாக உள்ளது. அதற்கு எதிராக புலிகள் இருப்பதே உண்மை. இது போல் தான் இலக்கியச் சந்திப்பு பற்றிய புலிகளின் நிலைப்பாடும் நடத்தைகளும். இதை விட்டு இலக்கியச் சந்திப்பு புலிக்கு மாற்றான, தமிழ் மக்களின் ஒரு அரசியல் மற்றும் இலக்கிய சக்தியல்ல. இதற்கு மாறாக அரசியலில் வக்கற்றுப் போய் கோஷ்டி கானத்தில் இன்ப நுகர்ச்சியை நுகர, இறக்குமதியாகும் இலக்கிய நீட்சைகளின் தயவில் சோகமாக புலம்புவது நிகழ்கின்றது.

விடுதலை இயக்கங்களாலும், புலிகளாலும் மறுக்கப்பட்ட ஜனநாயகமும், ஜனநாயக படுகொலைகளுக்கு எதிராக போராடி மரணித்த ஆயிரக்கணக்கான மனிதர்களின் தியாகங்களையும், மூடிமறைக்கப்பட்ட ஒரு நிலையில் தான் மலடாகிப் போன புலம் பெயர் இலக்கியம் வக்கற்றுப் போய்கிடக்கின்றது. மண்ணில் ஜனநாயகம் கோரி போராடி மரணித்த ஆயிரக்கணக்கான தியாகிகள் பெயரில், அதன் தொடர்ச்சியில் இன்று இந்த இலக்கியச் சந்திப்பு நடக்கவில்லை. தொடங்கிய போது இது பற்றி இருந்த சமூக அக்கறைகளை மூடி மறைத்தபடி, அதை இன்று மறுத்தபடி, அந்த ஜனநாயக அரசியலை கொச்சைப்படுத்தி மீண்டும் மீண்டும் அவர்களை படுகொலை செய்தபடிதான், புலம் பெயர் இலக்கியம் வக்கற்று கோலோச்சுகின்றது. கடந்த கால ஜனநாயக போராட்டத்தை மறுத்து குறுகிய வக்கிரத்துடன் திடீர் கோசங்களை போட்டபடி, வரைமுறையற்ற இலட்சியமற்ற எல்லையற்ற விவாதம் நடத்துவதாக பிதற்றுவதும், தேடுவதாகவும் கூறி, சமுதாய இயங்கியலை கொச்சைப்படுத்துகின்றனர். புலம் பெயர் சமூக பிரச்சனை, வாழும் நாட்டின் பிரச்சனை, சொந்த நாட்டு பிரச்சனை என எதிலும் சமூக அக்கறையும் கிடையாது. இது போல் இவர்களின் இலக்கியம் மற்றும் சந்திப்புகள் கூட இதை பிரதிபலிப்பதில்லை.

புலியெதிர்ப்புக் கோசத்தின் கீழ் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தையே மறுத்து, இலங்கை அரசின் கைக்கூலியாக கோட்பாட்டிலும், நடைமுறையிலும் கோசம் போடுவது வக்கரித்துக் கிடக்கின்றது. எல்லாவற்றுக்கும் புலியெதிர்ப்பு ஊடாக நியாயப்படுத்தி, ஜனநாயக வேடம் போடுவதன் மூலம், பெரும் தேசிய வெறியர்களாக பவனிவருவதில் இலக்கியச் சந்திப்பு வக்கரித்து வெதும்பிக் கிடக்கின்றது. மறுபுறத்தில் புலியெதிர்ப்பில் புலிகளின் ஜனநாயக விரோத நடத்தைகளை தனித்துவமாக்கி, அரசியல் விபச்சாரம் செய்வது மலட்டு தனத்தில் ஒரு வடிவமாகியுள்ளது. இந்த மலட்டுத்தனத்தைத் தான், எம் மண்ணில் நடந்த உன்னதமான ஜனநாயக போராட்டமாக காட்ட முனைவது நிகழ்கின்றது. உதாரணமாக எக்ஸில், முஸ்லிம் சிறப்பு இதழ் வெளியிட வக்கற்றுப் போன மலடுகளை அழைக்கின்றனர். புலிகள் முஸ்லிம் மக்களை ஒரே நாளில் ஈவிரக்கமின்றி குறுகிய குறுந்தேசிய வெறியில், அவர்களின் வாழ்விடத்தை விட்டு துரத்திய மனித விரோத நடத்தைகளை குறிப்பாக்கி, அதை குறுகிய  சிங்கள பெரும் தேசிய இனவாதம் சார்ந்து, புலியெதிர்ப்பு கோசம் போட வக்கற்றவர்களை அழைக்கின்றனர். முஸ்லிம் மக்களையிட்டு, அவர்களின் விடுதலை மீது அக்கறை கொள்பவன், தமிழ் மக்களையிட்டும் அக்கறை கொள்ளவேண்டும்;. இங்கு இரட்டை வேடம் இருக்க முடியாது. எக்ஸில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்த படி (இதை எழுத்தில் வைக்க வக்கற்றவர்கள்), அதை கொச்சைப்படுத்தியபடி தான், முஸ்லிம் மக்களை பற்றி மூக்கால் அழுது சிறப்பு இதழ் வெளியிட முனைகின்றனர். உண்மையில் இதைத் தான் புலிகளுக்கு எதிராக பெரும் தேசிய சிங்கள இனவாதமும் செய்கின்றது. மறுக்க முடியுமா? பெரும் தேசிய இன வாதம் சிறு தேசியத்தை ஒடுக்கும் போது, இங்கு தமிழ், முஸ்லிம், மலையகம் என அணுகுமுறையில் அவற்றுக்கிடையில் வேறுபட முடியாது.

முரணற்ற ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டு அணுகும் போக்குக்கு பதிலாக் சாதியம், இனம், நிறம் என்று சமுதாய பிரச்சனைகளை குறுகிய நோக்கத்துடன் கோசம் போட்டு, அரசியலில் குறுக்கு வழியில் புகுந்து விடும், மலடாகிப்போன மலட்டுக் கோசங்கள் வக்கற்று வக்கரிப்பதே இன்றைய புலம் பெயர் இலக்கியம் என்றால் மிகையாகாது.

 

குறிப்பு -1 "யன்னலைத் திறவுங்கள்" என்ற தலைப்பில் அசோக்கிடம்  சில கேள்விகள் என்ற பெயரில் அவரே எழுதி வெளியிட்ட 18 பக்க பிரசுரத்தில் பெயர் குறிப்பிட்ட சில முன்னைநாள் இவர்களின் சீடர்களையிட்டு  தனிப்பட்ட தாக்குதலை நடத்தியுள்ளார். எந்த விதமான அரசியலையும் கொண்டிராது, அங்கும் இங்கும் தனிப்பட்ட முகம் சார்ந்த உறவை ஒட்டி அலைந்து திரியும் அசோக், முன்னை நாள் சீடர்களையும், நண்பர்களையும் தாக்கிய போது, அந்த தாக்குதலை நடத்த உதவிய சில தனிப்பட்ட சம்பவங்கள் உண்மையாக இருந்த போதும், ஏன் அவர்களைப் பற்றி முன்பே நேர்மையாக முன்வைத்து விமர்சிக்கவில்லை. பாரிசில் புலம்பெயர் இலக்கியத்தில் நேரடி வன்முறையை முதலில் தொடக்கி வைத்த அசோக் கோஷ்டி கானம் பாடத் தொடங்கியது முதல், எதிர்க் கோஷ்டியை தூற்றுவதும், முன்பு தூற்றியவர்களை புரட்சியின் நாயகர்களாக காட்டி அதையே மார்க்சியமாக்கி, அவர்களையும் மார்க்சியவாதியாக காட்டி வியாபாரமாக்கிவிடுவது புலம் பெயர் இலக்கியமாகியுள்ளது. "சதி" அமைப்பான புளொட்டின் மத்தியகுழு உறுப்பினராக இருந்ததனால், முன்னைய உறவுகளையும், பிரமுகத்தனத்தையும் பயன்படுத்தி, புலம்பெயர் மற்றும் இந்தியா இலங்கை வரை தொலைபேசி மூலமே குறுகிய நோக்கத்தில், வக்கற்ற வக்கிரமான மலட்டு அரசியல் பிழைப்பை அண்மைக்காலமாக விரிவாக்கியுள்ளார். இது சார்ந்து கோஷ்டி கானம் இசைப்பதில், அவர் ஒரு குழுவுக்கு தலைவராக இருப்பது இன்றைய புலம் பெயர் இலக்கியமாக உள்ளது.

குறிப்பு -2 கவிஞரும், முஸ்லிம் மக்கள் பற்றி முதலைக்கண்ணீர் வடித்தே அவர்களின் மீட்பாளராக உலாவருபவரும், தற்போதைய புலிகளின் பினாமியுமான வ.ஐ. ஜெபாலனின் தம்பி (அண்ணன் பற்றி விமர்சிக்காத, மற்றவர்கள் விமர்சித்தால் களம் இறங்கும் வாய் திறவாத புரட்சிக்காரன்) உயிர்நிழல் 15 இல் தான் சார்ந்த கோஷ்டி கானத்தில் "புலிகளுடன் சுமுகமாக உறவு கொண்டுள்ள ஒரு நாடக ஆசிரியரின் நாடகம் புலி எதிர்ப்பு நாடகம் எனப் பிழையான..."விளக்கம் கொடுத்ததாக பெயர் குறிப்பிட்டு எழுத வக்கற்று, அம்மா ஆசிரியரை கோஷ்டி கானத்தின் தொடர்ச்சியில் தாக்குகின்றார். இதன் படி தாமும் மற்றவர்களும் புலிகளுடன் சுமுகமற்ற உறவு கொண்டுள்ளதாக சத்தியம் செய்கின்றார். புலிகளிடம் சுமுகமற்ற உறவு கொண்டிருக்கும் அந்த அரசியல் மட்டும் இதுவரை யாருக்கும் தெரியாது. இவர் அண்மையில் இந்தியாவில் நடந்த தமிழினிது இலக்கிய நீட்சைகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு அதை பாதுகாத்து வக்கரித்த போதே இதை உயிர்நிழலில் புலம்புகின்றார். இவர் கோட்பாடற்ற மலட்டு கதம்ப இலக்கியச் சந்திப்புகளை முன்நின்று தலைமையேற்று நடத்தும் போலி மார்க்சிய வேடதாரி, மற்றவர்களை கோஷ்டி கானத்தில் வரைமுறையற்று தாக்கும் போது, புலிகளை எப்படி விமர்சிக்க வேண்டும் என்று கூறுவது கிடையாது. தமிழ் மக்களின் சுயநிர்ணய போராட்டத்தில் என்ன பாத்திரம் எடுக்க வேண்டும், எப்படி புலிகளை விமர்சிக்க வேண்டும் என்று கூறுவது கூட கிடையாது. மாறாக புலி முத்திரை குத்துவதன் ஊடாக வக்கற்ற அரசியல் பிழைப்பை நடத்துவது கோஷ்டி கானத்தின் சோக இசையாகின்றது. புலிகளை இன்று எங்கே எப்படி அரசியல் ரீதியாக விமர்சித்துள்ளீர்கள்! என்ன நடைமுறையை மாற்றாக வைத்துள்ளீர்கள்! இப்படி எதுவும் இல்லாமல் இருக்கும் போது, அதை மற்றவர் மீது சுமத்துவது கடைந்தெடுத்த மோசடியாகும். அண்ணன் ஜெயபாலன் புலிகளுடன் கூடிக்குலாவி நடத்தும் தேன்நிலவு வைப்பாட்டித் தனத்தை, யாரும் கேள்வி கேட்டால் துள்ளிக் குதிக்கும் தம்பி ஸ்பாட்டகஸ்தாசன், மற்றவர்களுக்கு ஆதாரமற்ற முத்திரை குத்துவது புலம் பெயர் இலக்கியத்தின் வக்கற்ற மலட்டுத்தனத்தின் வக்கிரமாக புரையோடிப் போய்க்கிடக்கின்றது.

குறிப்பு 3: அம்மா 13 இல் ஷோபா சக்தி "... அரசின் அனுமதியைப் பெற்று அரசு அனுமதித்த பாதைகளின் வழியே பதாகைகளை உயர்த்திப் பிடித்துவந்து மேதின ஊர்வலத்துக்கு தலைமையேற்று நடத்தி ஒழுங்கமைப்பவர்கள் C.G.T, F.O போன்ற பிரான்சின் ஆகப்பெரிய கருங்காலித் தொழிற்சங்கங்களும் P.K.K, LTTE, JVP போன்றன குட்டி முதலாளிய இயக்கங்களுமேயாவர்" என்று ஒரு கண்டுபிடிப்பை பின்நவீனத்துவ தலித்திய கோட்பாட்டை கைவிட்டு, மீளவும் டிரொக்சிய வழியில் வெளியிட்டுள்ளார்.

இங்கு சட்டத்துக்கு புறம்பாக செயற்பட வேண்டும் என்ற கோசம் தொங்கி நிற்கின்றது.  தொழிலாளி வர்க்கம் வன்முறை கொண்ட மனநோயாளிகள் அல்ல. அப்படி இருக்க வேண்டும் என்று கோருவது, அராஜக வாதத்தின் குட்டிபூர்சுவா மனப்பாங்காகும். தனது உரிமைக்கு போராடும் உரிமை உள்ள வரை, சட்ட விரோதமாக போராட வேண்டியது அவசியமற்றது. சட்டவிரோதமாக மாறுவது என்பது சட்டத்துக்குட்பட்ட போராட்டத்தின் வளர்ச்சியில், அரசு போராடும் உரிமையை மறுக்கின்ற போதே பரிணமிக்கின்றது. அனுமதித்த பாதை வழியாக செல்வது என்பது தவறான உள் நோக்கம் கொண்ட திரிபாகும்;. தொழிற் சங்கங்கள் கோரும் பாதையை பொலிஸ் அங்கீகரிக்கின்றது அல்லது உடன்பாட்டை பேச்சு வார்த்தையில் வந்தடைகின்றது. ஊர்வலங்;கள் நடக்கும் இடம் பிரான்சின் மையமான பகுதியாக இருப்பது, இங்கு குறிப்பான விடயமாக உள்ளது. இத் தொழிற்சங்கங்கள் கருங்காலிச் சங்கங்கள் என்று முத்திரை குத்துகின்றார். எந்த ஆதாரத்தையும் இங்கு அடிப்படையாக வைக்கவில்லை. பிரான்சில் தொழிலாளர்களினதும்; மக்களினதும் பிரதான கோரிக்கைகள், போராட்டங்கள் அனைத்திலும், அரசியல் கோரிக்கைகள் சரியாகவே உள்ளது. 1995 வேலை நிறுத்தம், லொறிச் சாரதிகளின் வாகன மறியல் போராட்டம், 35 மணி நேர கோரிக்கை, ஒய்வு கால நீடிப்புக்கு எதிரான போராட்டம், விசா அற்றோருக்கு விசா வழங்கக் கோரிய போராட்டம், வேலையற்றோர் உரிமை தொடர்பான அண்மைய மிக முக்கிய போராட்டங்கள் அனைத்திலும், C.G.T சரியான அரசியல் கோரிக்கையை முன்வைத்து எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட மறுத்தன. 35 மணிக்கு பதிலாக 32 மணி நேரமும், அனைவரின் ஒய்வு ஊதியக் காலத்தை ஆகக் குறைந்ததுக்கு அதை மேலும் குறைக்கவும் என்று கோரிக்கைகளை முன்வைத்து போராடுவதில், சரியாகவே உள்ளது. இங்கு இத் தொழிற் சங்கம் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இருந்த நேரடி கட்டுபாட்டைக் கூட, அண்மையில் முறித்துக் கொண்டது.  இங்கு பாட்டாளி வர்க்க அரசியல் வழியினூடாக புரட்சிகரமாக்கும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவும் போராட்ட அரசியல் வழிகாட்டல் இன்மையே, இதன் கோரிக்கைகள் வர்க்கப் போராட்ட மார்க்கத்தில் தடம்புரளுகின்றது. இதனால் தனிப்பட்ட சில நபர்கள் துரோகத்தில் ஈடுபடுகின்றனர். இதை வரையறுக்க அரசியல் கல்வியின்மையும், வர்க்க சர்வாதிகார மார்க்கத்தை நோக்கிய போராட்ட இன்மையும், இதன் அடிப்படையாக உள்ளது. பிரஞ்சு தொழிலாளர் வர்க்கத்தினால் எடுத்துக் கொள்ளப்பட்ட முக்கியமான விடயங்களில், சரியான கோசத்தையே இது முன்னிறுத்தியது. இதை மறுத்து மாற்றுக் கோரிக்கையை வைக்க முடியுமா. "சும்மா" எழுந்தமானமாக புலம்புவதை விட்டு ஆதாரமாக வைப்பது அல்லவா நேர்மை. பூர்சுவா இயக்கங்களின் பங்குபற்றல், பிரஞ்சு தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட வரலாற்றில் காணப்படும், ஜனநாயக வழியில் இணைந்து போராடும் வரலாறு தெரியாதவர்களின், அறிவின்மையின் குருட்டுத்தனமான புலம்பலாகும்;. இது இயக்கங்களின் குறுகிய அழித்தொழிப்பு பூர்சுவா தனித் தன்மை வாதத்தின் வெளிப்பாடாகவே, மீளவும் பிரதிபலித்து எழுப்ப்படுகின்றது.