Language Selection

சமர் - 28 : 03 - 2001
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அண்மையில் பிரஞ்சுப் பத்திரிகையான லிபரேசனுக்கு (LIBRATION - 15.12.2000), சிறந்த சிறுகதை எழுத்தளார் என்று ஒளிவட்டம் கொடுக்கப்பட்ட கலாமோகன் கொடுத்த கருத்துகளில், வலதுசாரி அரசியல் புளுத்துப் போய் வெளிப்பட்டது. இக்கருத்துகள் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக, பிரஞ்சு ஏகாதிபத்திய நோக்கத்தை திருப்தி செய்து, அதன் நலன்களை பாதுகாக்க முனைந்து நிற்பதை இனம் காட்டி அம்பலம் செய்வது அவசியமாகும். "பிரான்சில் புகலிடம் பெற்ற தமிழ் அகதிகளில் 90 சதவீதமானவர்கள், கள்ள (பொய்யான) அகதிகள் ஆவர். ஏனென்றால் இவர்கள் பிரஞ்சு பிரஜா உரிமை பெற காத்துக் கிடப்பவர்கள்" என்று சிறந்த சிறுகதை எழுத்தாளர் என புகழப்படும் கலாமோகன், தன்னைத் தானே நிர்வாணப்படுத்த தயங்கவில்லை. இந்தக் கூற்று சர்ச்சைக்குள்ளாகியதை அடுத்து, கலாமோகன் 23.12.2000 வெளியிட்ட துண்டுபிரசுரத்தில், லிபரேசன் பத்திரிகை தனது கருத்தை திரித்து, அகதிகளுக்கு எதிரான வகையில் பயன்படுத்திவிட்டதாகவும், அதை நிவர்த்தி செய்ய அவர்களிடமே இடம் கேட்டிருப்பதாகவும் கூறி, தனது சொந்த வலதுசாரி அரசியலுக்கும், பாலியல் வக்கிர இலக்கியத்துக்கும் கவசமிடமுனைகின்றார்.

 

அகதி என்பதன் விளக்கம் என்ன? ஏகாதிபத்தியங்கள் தனது வர்க்க நோக்கில் மட்டுமே, அகதி என்ற சொல்லுக்கு விளக்கம் அளிக்கின்றன. அரசினால் நேரடியாக தனிப்பட பாதிகப்பட்ட அரசியல் காரணங்களை உள்ளடக்கியே, அரசியல் புகலிடம் பற்றிய விளக்கத்தை கொண்டு மேற்கு நாடுகள் செய்ற்படுகின்றன. இதில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு அகதி அந்தஸ்து கொடுப்பதில்லை என்பதில் உறுதியாகவும் உள்ளனர். பொதுவாக வேறுபட்ட அணுகுமுறையை அரசினதும் சமூகத்தினதும் இனவாத நிறவாத கண்ணோட்ட அடிப்படையில், தமக்குள்ளும் முரண்பட்டே கொண்டிருக்கின்றன. அரசியல் காரணம் அல்லாத அனைவரையும் பொருளாதார அகதியாகவே கணிக்கின்றன. ஏகாதிபத்தியம் தனது உலகமயமாதல் நோக்கத்தை விரிவாக்கும் அடிப்படையில், ஜனநாயகத்தை பேணுவதாக காட்ட அகதி பற்றிய விளக்கவுரைகளை கூட மீறிய வகையில், கலாமோகன் "பொய்யான அகதிகள்" என்று கூறுவது வலதுசாரி அரசியல் கடைந்தெடுத்த பொறுக்கித்தனமாகும். ஏகாதிபத்தியம் பொய்யான அகதி என்பதற்கு பதில், பொருளதார அகதிகள் என்றே குறிப்பிடுகின்றது. புலம்பெயர் தமிழர்களை ஆராயின்  அரசியல் மற்றும் பொருளாதார அகதிகளை உள்ளடக்கியதே. சமூக ஆய்வை நாம் செய்யின், நேரடியாக அரசு மற்றும் இயக்கங்களால் பாதிகப்பட்ட அல்லது பாதிப்பை உணர்ந்தவர்கள் மட்டுமே அரசியல் அகதியாவர். மற்ற அனைவரும் பொருளாதார அகதியாகவே இருக்கின்றனர்.

அரசியல் அகதியும் சரி, பொருளாதார அகதியும் சரி ஏகாதிபத்திய நாட்டில் வாழ்வதற்கான போராட்டத்தில், பொய்யான அடிப்படைகளை கொண்டே பொதுவான அரசியல் அகதி அந்தஸ்து கோருவது என்பது, அகதியின் சொந்த வெளிப்பாடு அல்ல. மேற்கின் கடும் போக்கான இனவாதத்தையும் நிறவாதத்தையும் முறியடித்து தங்கி வாழ, இவை நிபந்தனையாகின்றன. உலகம் முழுக்க உலகமயமாதல் ஒழுங்கில் புகுந்து செல்லும் இவ் நாடுகளின் மூலதனமும் அதன் சொந்தக்காரர்களும் சுதந்திரமாக, ஜனநாயகமாக இயங்கும் போது, ஏன் உழைப்பவன் மட்டும் வேலியிட்டு தடுக்கப்பட வேண்டும். உலகம் முழுக்க எங்கும் சென்று வாழும் உரிமை மனிதனுக்கு உண்டு. அதை தடுக்கும் உரிமை மூலதனத்துக்கு கிடையாது.

ஆனால் வாழ்வில் மனிதனை சுரண்டிக் குவிக்கும் மூலதனமும், அதை வைத்திருப்பவனும் சுதந்திரமாக உலகெங்கும் இயங்க, அதன் அடிமைகள் அனைத்து வழியாலும் குறித்த எல்லைக்குள் அடிமையாக இருக்க நிர்பந்திக்கப்படுகின்றனர். இந்த வகையில் இதை அத்து மீறுபவன், உலகமயமாதலின் கோட்டை கொத்தளங்களின் மேல் உள்ள முள்ளாக மாறிவிடுகின்றான். ஏகாதிபத்திய நாட்டின் அடி வயிற்றிலேயே புகுந்து விடுவதால், வயிற்றிலேயே இது கருக்கட்ட தொடங்குகின்றது. இங்கு ஏகாதிபத்திய இன மற்றும் நிறவாத நோக்கத்தை முறியடிக்க, பொய்கள் மற்றும் இங்கு வாழ்வதற்கான போராட்டத்தில் மனித சமூகத்துக்கு எதிராக அல்லாத அனைத்துவிதமான வடிவங்களும் வழிவகைகளும் அவசியமான நிபந்தனையாகின்றது. எம் நாடுகளை ஈவிரக்கமின்றி சுரண்டி சூறையாடி, எமது நாட்டின் சுய பொருளாதார வடிவத்தை தகர்த்து அழிக்கின்ற போதும், எமது விடுதலைக்கான போராட்டங்களை அழித்து ஒழிக்க வழிகாட்டும் போது, பொருளாதார அகதிகள் பிழைப்பு தேடி நாடு பல கடந்து செல்வது ஒரு ஜனநாயக உரிமையாகின்றது. பிழைப்பு என்பது அதன் நிபந்தனையாகின்றது. சுரண்டலும், சூறையாடலும் தவிர்க்க முடியாத உள் நாட்டு யுத்தங்களை, எந்த வழியிலாவது மண்ணுக்குள் கொண்டு வந்துவிடுகின்றது. அரசியல் அகதிகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றனர். அரசியல் மற்றும் பொருளாதார அகதிகளை உற்பத்தி செய்பவர்கள், இந்த ஏகாதிபத்தியத்தின் உலகமயமாதலாக இன்று உள்ளது. இந்த அகதிகளை பொய்யான அகதி என்று சொல்பவர்கள், வலதுசாரி கைக்கூலிகள் மட்டுமே.

 

எமது சமூகத்தின் அகதிகள் பற்றிய விமர்சனம், அகதியின் பொய்யான வாக்கு மூலங்கள் மீதும், மற்றைய நடவடிக்கைகள் மீதும் கட்டமைக்க முனைவது வலதுசாரித்தனத்தின் காட்டிக் கொடுப்பாகும்;. அரசியல் அகதியும் கூட பொய்களையும் கூற வேண்டிய நிலை ஏன் ஏற்படுகின்றது? இங்கு பொய் என்பது போராட்டத்துக்கானதும், வாழ்வதற்குமான ஒருவழிப்பாதைதான். பொய்கள், ஏகாதிபத்திய அமைப்பின் ஜனநாயகமற்ற இனநிறவாத வன்முறை மீது கட்டமைக்கப்படுவது நிபந்தனையாகவும், உரிமையாகவும் இருக்கின்றது.

 

எமது அகதிகள் மீதான விமர்சனம் அரசியல் சார்ந்ததாகவே இருக்கமுடியும்;. அது காட்டிக் கொடுக்கும் கைக்கூலித்தனத்தின் மேல் அல்ல. இங்கு அரசியல் சார்ந்தே அரசியல், பொருளாதார அகதிகளை வகைப்படுத்த வேண்டும். அண்ணளவாக 99 சதவீதமான பொருளாதார அகதியும், ஒரு சதவீதமான அரசியல் அகதியும் ஏன் புலம் பெயர் நாட்டுக்கு வந்தனர். அவர்களின் வர்க்க குணாம்சம் எப்படி உள்ளது என்று ஆராய வேண்டும்;. இதற்கு இலங்கையின் குறிப்பான எல்லா நிலைமைகளையும், உலகமயமாதலின் எல்லா தலையீட்டையும் பகுத்தாய்வு செய்யப்பட வேண்டும்;. அகதியின் நோக்கம், அரசியல் பொருளாதார அகதிக்கு இடையில் வேறுபாடுகள் பொதுவில் எப்படி தகர்த்துள்ளது என்று விமர்சிக்க வேண்டும்;. அவர்களின் வர்க்க நோக்கம் எப்படி, எதைக் கோருவதாக உள்ளது என்று விமர்சிக்கவேண்டும்;. பொதுவான யுத்த காரணத்தைச் சொல்லி தமது அகதி நிலையை நியாயப்படுத்தும், எல்லா வகையான பூர்சுவா நியாய வாதங்களையும் தகர்க்க வேண்டும்;. பூர்சுவாவின் மனப்பாங்கை அனைத்து தளத்திலும் பகுத்தாய்வு செய்து விமர்சிக்க வேண்டும்;.

லிபரேசன் பத்திரிகை கலாமோகனின் கருத்துகளை உண்மையில் திரித்ததா எனின், நிச்சயமாக இல்லை. லிபரேசன் பத்திரிகை அகதிகள் சார்பான ஒரு நிலைப்பாட்டையே கடைப்பிடிக்கின்றது. தொடர்ச்சியாக அகதிகள் உரிமை தொடர்பாக பலபக்க செய்திகளையும், சிறப்பு விசேட இணைப்புகளையும் கூட லிபரேசன் வெளியிட்டே உள்ளது. லிபரேசன் பத்திரிகை மீதான விமர்சனம், அரசியல் ரீதியாக மார்க்கிய அரசியல் வழியில் செய்யப்பட வேண்டியவை. அகதிகளை ஒட்டியோ, நாசிகளுக்கு எதிராக அதன் போராட்டத்தையோ பொதுவாக குற்றம் சுமத்தமுடியாது. ஆனால் இந்த பத்திரிகை இந்த சமூக எல்லைக்குள் தீர்க்கும் முறை பற்றிய, சீர்திருத்தவாத முதலாளித்துவமே அரசியலே இங்கு விமர்சனத்துக்குரியதாக உள்ளது. அகதியின் தோற்றம் அதன் சமூக பொருளாதார காரணங்களை ஆய்வு செய்து, அதை வர்க்க போராட்டம் மூலம் தீர்க்க, வழிகாட்ட தவறுவது அதன் அரசியலாக உள்ளது. பிரஞ்சு வலதுசாரிகள் சார்பான இனநிறவாதிகளை அம்பலம் செய்து, பிரான்சின் பிரபலமான 54 கலைஞர்களின் இன நிற எதிர்ப்பு கேலிப்படங்களை, 17.2.1997 இல் சிறப்பு இனைப்பாக வெளியிட்டது. இது போன்று தொடர்ச்சியாக வாழும் உரிமை மறுக்கப்பட்டவர்களின் (விசா அற்றவர்களின்) போராட்டங்களை CGT போன்ற முன்னணி தொழில் சங்கங்கள் இணைந்து தொடர்ச்சியாக முன்னெடுத்து நடத்தும் போராட்டத்துக்கு, முன்னுரிமை கொடுத்து பல தொடர்ச்சியான சிறப்புச் செய்திகளை வெளியிட்;டு வந்தது, வருகின்றது. இது போன்று அண்மையில் IBM கம்யூட்டர் உரிமையாளர் நாசிகளுடன் இரண்டாம் உலக யுத்தத்தில் நெருக்கமான தொடர்பு இருந்தை, பல பக்க தலைப்பு கட்டுரையில் ஆதாரத்தடன் 13.2.2001 இல் வெளியிட்டுள்ளது. இது போன்று பலவற்றை இப்பத்திரிகை வெளிக் கொண்டுவருகின்றது. ஆனால் கலாமோகனை கண்டித்து வெளியிட்ட சுகன், ஷோபா சக்தி துண்டுபிரசுரத்தில் "LIBERATION பத்திரிகை ஒன்றும் லப்பா சிப்பா பத்திரிகை கிடையாது. பிரெஞ்சு வெகுஞனக் கருத்தாடலை உருவாக்குவதில் பிரதான பாத்திரத்தை வகிப்பது, ஏற்கனவே எங்களை பொருளாதார அகதிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் வெகுஜன ஊடகங்கள் எழுதிக் கொண்டிருக்கின்றன" என்று எழுதுகின்றனர். அகதிகளை பயங்கரவாதியாக எங்கே எப்போது லிபரேசன் சித்தரித்துள்ளது. பொருளாதார அகதி, அரசியல் அகதி என்பதை அதன் அரசியல் எல்லை தான் வகுக்கின்றது. மறு தளத்தில் இதில் உண்மை உண்டு. பொருளாதார அகதி மறைமுகமான ஒரு அரசியல் அகதி என்பதை, மார்க்சிய பொருளாதார சமூக ஆய்வு மட்டுமே செய்கின்றன. லிபரேசன் போன்ற முதலாளித்துவ பத்திரிகைகளும், மற்றைய கோட்பாட்டாளர்களும் செய்வதில்லை. இதை நீங்களும் உங்கள் கோட்பாடுகளும் கூட செய்யப் போவதில்லை. இந்த சமூக அமைப்பில் அரசியல், பொருளாதார அகதிகள் என்ற இரண்டு பிரிவுகள் உள்ளதை மறுத்து, பொதுவான வகைப்படுத்தல் அரசிலற்ற சூனியத்தில் உருவாகுபவை தான். இலங்கையில் யுத்தப் பாதிப்பில் இருக்கும் அனைவரையும், நேரடியான அரசியல் பாதிப்பு கொண்ட ஒருவரையும் எது வேறுபடுத்துகின்றது. ஏது நாட்டை விட்டு ஒடவைக்கின்றது அல்லது எது தலைமறைவாக்கின்றது? புலம்பெயர் நாட்டில் அரசியல் செயற்பாட்டாளருக்கும், பொது மக்களுக்கும் உள்ள பாதிப்புகளை எது வேறுபடுத்துகின்றது? இங்கு அரசியலும், நேரடி அரசியலற்ற இயல்பான அரசியல் பொருளாதாரமுமே என்பது வெள்ளிடைமலை.

கலாமோகன் தனது கருத்தை லிபரேசன் திரித்து விட்டதாக கூறுவது என்பது அப்பட்டமான கதையளப்பாகும்;. இதை எதிர்த்து அகதிகள் சார்பாக வழக்கு போட முடியுமா? என்று சவால் விடுகின்றோம்;. இதற்கு ஏற்படும் செலவில் பங்களிக்கவும், உதவி செய்யவும் என்று தயாராகவே உள்ளோம்; முடியுமா? இதை விட்டுவிட்டு திரித்து விட்டார்கள், மறுத்து எழுத அவர்களிடமே இடம் அரைப் பக்கம் கேட்டுள்ளேன் என்ற கதைகள், எல்லாம் மோசடித்தனமான தற்காப்பாகும்;.

அடுத்து தான் ஒரு உண்மையான அகதியெனவும், பிரஞ்சு பிரஜா உரிமை பெறாதவர்கள் தான் உண்மையான அகதியென சொன்னதன் மூலம், புத்திஜீவித்தனத்தின் வரட்டுத்தனத்தை வலதுசாரித்தனத்தில் இருந்து வெளிப்படுத்தியுள்ளார். பிரஜா உரிமை பெற்றவர்கள் உண்மை அகதியல்ல, பெறாதவர்கள் அகதிகள் என்ற எடுகோள் அறிவுக்கும், அரசியலுக்கும் கிட்டக் கூட நெருங்க முடியாத சூனியத்தை வெளிப்படுத்துகின்றது. இவர்களின் இலக்கியங்களின்  உள்ளடக்கங்களை, இதிலிருந்தே புரிந்து கொள்வதே சிறப்பானது. தான் அகதியாக காரணம் தினபதி பத்திரிகையில் (இங்கு பத்திரிகையாளன் என்று வலிந்து கூறப்படுகின்றது) வேலை செய்த போது நடந்த இனக்கலவரமும், அதை பார்த்து பயந்ததன் விளைவால் அகதியாக வந்தாராம்;. அதுவும் பிரஞ்சு நாட்டை தெரிவு செய்ய, பிரஞ்சு இலக்கியவாதி யாரோ ஒருவரின் நாவல் துணையாக நின்றதாக கூறி, தனது இலக்கிய மேன்மையை வலிந்து காட்டி மெச்சிக் கொண்டார்.

வலதுசாரி பத்திரிகையான தினபதியில் வேலை செய்த இந்த பத்திரிகையாளன், இனக் கலவரத்தால் நாட்டை விட்டு ஒடோடி வந்தாராம். இனக்கலவரம் நடந்து கொண்டிருந்த நிலையில் எப்படி அகதியாக இருந்தபடி, ரிக்கற் எடுத்து இனக்கலவரம் நடந்து கொண்டிருந்த பல வீதிகள் தாண்டி விமானம் வரை சென்று, இங்கு அரசியல் அகதியாக வரமுடிந்தது என்பதை லிபரேசன் கேட்கவில்லை. அத்துடன் பொதுவான இனக் கலவரத்துக்கு, அகதி அந்தஸ்து இங்கு கொடுக்கப்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டவில்லை தான். 1983 கலவரம் தமிழ் மக்களை அகதியாக்கி, தமிழ் பிரதேசத்தை நோக்கி மக்களை கப்பல் கப்பலாக குடிபெயர வைத்த போது, இவர் பாதுகாப்பு அற்ற பிரதேசத்தில் இருந்தபடி பிரான்ஸ் செல்லும் வர்க்க கண்ணோட்டம், கடைந்தெடுத்த பொருளாதார பூர்சுவத்தனமாகும். இந்த அகதிகளின் துயரமும், போராட்டத்தை மேலே தள்ளிச் சென்ற வரலாற்றில், பூர்சுவா வலதுசாரிகள் நாட்டை விட்டே தப்பியோடி "பொய்யான" அரசியல் புகலிடத்தை மண்டியிட்டே எடுத்துக் கொண்டனர். இவரின் அரசியல் புகலிடம் கூட பொதுவான இனக்கலவரம் மீதாக இருப்பதால், பிரஞ்சு அரசியல் அகதி உரிமை மீதான இவரின் கூற்றுப்படி "பொய்யான" அடிப்படை மீதே பெறப்பட்டதாகும். பொதுவான நிகழ்ச்சிக்கு அரசியல் புகலிடம் என்பது கிடையாது. அப்படி இனக் கலவரத்துக்கு இருக்க முடியும் எனின், தமிழ் பேசும் மக்கள் எல்லோருக்கும் அது பொருந்தும். பிறகு ஏன் பொய்யான காரணம் என்று சொல்லி பிதற்ற வேண்டிக் கிடக்கின்றது. இறுதியாக இவர், தான்  நாட்டுக்கு திரும்பிச் செல்ல முடியாது என்கிறார். காரணம் "யுத்தத்தால் எனது நாடு அழிந்துவிட்டது, நான் மீண்டும் அங்கு போக விரும்பவில்லை" எவ்வளவு கேவலமாக வலதுசாரி பூர்சுவ வாதங்கள். தன்னைத் தான் ஒரு பொருளாதார அகதி என்பதை, மூடிவைக்க முடியாமல் தன்னையறியாமலே வெளிப்படுத்திவிடுகின்றார். பொருளாதாரம் அழிந்ததால் நான் செல்லவிரும்பவில்லை. உன்னிடம் இரண்டு கைகள் உழைக்க இருக்கின்றது என்பதை அடிக்கடி மறப்பவர்கள், வலதுசாரிகள் மட்டுமேயாவர். "புகலிடத்தில் வாழ்வதென்பது மரண தண்டனைக்கு ஒப்பானது" என்று கூறும் இவர், எம் நாடு சென்று உழைத்து வாழ்வது  மரணத்தைவிட மேலானது அல்லவா. என்ன தான் கூறினாலும் ஒரு பூர்சுவா கனவு கொண்ட பொருளாதார அகதி இதை மட்டும் செய்யப்போவதில்லை. தனது வலதுசாரி அரசியலின் கண்ணோட்டத்தில் விளக்கங்கள் சொல்லி நியாயப்படுத்தியே, பொருளாதார பிழைப்புவாதம், இலக்கிய அரசியலாகின்றது.