12062022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

விமானத் தகர்ப்பும், அதன் பின்னான நெருக்கடிகளும்

தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் குண்டு வீசி மக்களை கொன்று போட்ட, சிங்கள இனவாத வான்வழி தாக்குதல்களை நடத்திய விமானங்கள் மேல், அண்மையில் புலிகள் பாரிய தாக்குதலை நடத்தியிருந்தனர். வான் படையின் முதுகெலும்பே தற்காலிகமாக முறிந்துவிடுமளவுக்கு, இந்தத் தாக்குதல் விரிவானதாக இருந்தது. பலத்த பாதுகாப்புகளைக் கொண்ட விமானப்படைத் தளம் மீது, ஊடுருவிய தாக்குதலை நடத்தியதுடன், ஒரு பகுதியினர் தப்பிச் சென்றதுடன், தாக்குதலின் ஒளி நாடாவையும் வன்னியில் வெளியிட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் தற்காலிகமாக தமிழ் மக்கள் மீதான இனவெறி வான்வெளி படுகொலைகளை மட்டுப்படுத்தியதுடன், அரசின் யுத்த பொருளாதார நெருக்கடியையும் அதிகரிக்க வைத்துள்ளது. அதே நேரம் இனவாத கட்டமைப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

 

மறுதளத்தில் 2-8 ஒகஸ்ட் 2001 ஈழமுரசு தலையங்கத்தில் "விமானத்தளத்தை ஊடுருவி சிறுத்தைப் படையணி தாக்குதல்!" என்ற தலைப்பில் எழுதியவர்கள், உப தலைப்பாக "தேசியத் தலைவரின் நேரடிப் பயிற்சி" என்று எழுதினர். 23-29 ஒகஸ்ட் 2001 இல் சுப.தமிழ்ச்செல்வனின் பேட்டியில் "கட்டுநாயக்கா தாக்குதலுக்கு "புலிகளின் குரல்" உரிமை கோரவில்லை - ஆனால் இத் தாக்குதல் குறித்து தமிழ் மக்களும் நாமும் மகிழ்ச்சியடைந்தோம்" என்று கூறினர். புலிகள் இதுவரை உத்திபூர்வமாக உரிமை கோரத நிலையில், இந்த தாக்குதலை நாம் ஆய்வுக்குள்ளாக்க வேண்டியுள்ளது. இங்கு புலிகளின் தலைவர் பெயரிலும், அவரின் நேரடி பயிற்சி (வழக்கமாக வழிகாட்டல்) என்று எல்லாம் எழுதும் பத்திரிகைகள், தனிநபர் வழிபாட்டின் வரம்புக்கு அப்பாற்பட்ட எல்லை மீறல்களை, தன்னிச்சையாக புலிகளின் பெயரிலும், புலிகளின் தலைவரின் பெயரிலும் செய்கின்றனர். அதுவே மேலும் ஆழமாக புலிகளின் சிதைவுக்கான சீராழிவுக்கான கடிவாளமாகவும் உள்ளது.

இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் நீண்ட பல நாட்களாக தி;ட்டமிட்டு ஊடுருவிய போதும், தற்செயலாகவே இது வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதலுக்காக வந்து இறங்கியது முதல் மூன்று முறை தாக்குதல் நடத்தியவர்களைப் பற்றிய சந்தேகத்தை எழுப்பிய தகவல் கொடுக்கப்பட்ட போதும், அதன் மேலான தொடர்ச்சியான அலட்சியமே இந்தத் தாக்குதலை வெற்றி பெறவைத்தது. இல்லாவிடின் எந்த ஒரு நிலையிலும் இத் தாக்குதல் ஆரம்பத்திலேயே தோல்வி பெற்றிருக்கும். இந்த அலட்சியத் தன்மைக்கு சிங்கள இனவாத கட்டமைப்பே அடிப்படையான காரணமாக இருந்துள்ளது. தமிழ் மக்கள் அனைவரையும் புலியாகவும் பயங்கரவாதியாகவும் சித்தரிக்கும் சிங்கள இனவாதம், அனைத்து தரப்பினதும் பொதுவான சமூக பண்பாடாகிவிட்டது. இதனால் தமிழர் என்றால் புலி என்ற இலக்கணத்தில், புலி பற்றிய தகவல் தமிழன் என்ற அடையாளமே போதுமானதாக மாறிவிட்டது. இனவாதம் தமிழ் அடையாளங்கள் முதல் சிறு அசைவு வரை சந்தேகிக்கின்றது. இதனால் தகவல்கள் எல்லையற்ற வகையில் இனவாத அடிப்படையில் குவிகின்ற போது, தகவல்களை சரிபார்க்கும் தன்மையை அலட்சியப்படுத்திவிடுகின்றது. அதாவது வரைமுறையற்ற தகவல்கள், அதன் உண்மையற்ற தன்மைகள், உண்மையானதை உண்மையற்றதாக மூடிமறைத்துவிடுகின்றது. கோருகின்ற தகவல்கள் குறிப்பாக மட்டும் சரியாகவும் பொதுவாக அர்த்தமற்றும் போய்விடுகின்றது. மறுதளத்தில் குறிப்பானதையும் பொதுவானதையும் இனம்பிரிக்க முடியாத வகையில், இனவாத கட்டமைப்பு மாறிவிட்டது. பொதுவான சந்தேக தகவல்கள் இனவாத கட்டமைப்பினால், தகவலற்ற வெற்றிடத்தை சிங்கள இனவாத அடக்குமுறையாளனுக்கு ஏற்படுத்திவிடுகின்றது. இது படிப்படியாக தகவல் கொடுப்பதை கைவிடுகின்றது. இது எதிரியிடம் இருந்து தற்காப்பை உருவாக்கின்றது. தகவல்களை அலட்சியப்படுத்தல் அல்லது அதை கவனிக்க மறுப்பது என்ற தற்காப்பு எல்லைக்குள் தான், இந்த விமானப்படைத் தாக்குதல் வெற்றிகரமாக நடைபெற முடிந்தது. இதை விட்டு இந்தத் தாக்குதல் வெற்றிபற்றி கூறுகின்ற மிகைப்படுத்தலுடன் கூடிய பிரமிப்பை விதைப்பது, அரசியலற்ற  பிழைப்புவாதத்தின் அரசியலாகின்றது.

இந்தத் தாக்குதலை அடுத்து சிங்கள இனவெறி அரசு தமிழ் சிங்கள பிரதேச வேறுபாடு இன்றி, நாட்டை மேலும் ஏகாதிபத்தியத்திடம் அடகுவைத்து கைக்கூலியாவதன் மூலம், சொந்தத் தேசிய அடிப்படைகளை ஆழமாக சிதைத்து ஏகாதிபத்தியத்தின் நேரடியான மறுகாலியாக்கத்துக்கு இட்டுச் செல்லுகின்றனர். புலிகள் இராணுவ விமானத் தளத் தாக்குதலை தாண்டி, தாக்குதலை சர்வதேச சிவில் விமானத்தளத்துக்குள்ளும் விரிவாக்கி நடத்தியது என்பது, மறுகாலனியாக்கத்தை விரைவுபடுத்தும்படி ஏகாதிபத்தியம் கோருமளவுக்கு நேரடியாக இது துணைபோயுள்ளது. இலங்கையில் ஏகாதிபத்திய தலையீடுகளை அதிகரித்துள்ள நிலையில், போராட்டத்தை ஒரு நெருக்கடியான நிலைக்குள் இட்டுச் சென்றுள்ளது.

இராணுவத் தளங்கள் மற்றும் அதனுடன் நேரடியாக தொடர்புடைய இராணுவ இலக்குகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், போராட்டத்தை பலப்படுத்துவதாகவே இருக்கும்;. இராணுவ இலக்கு அல்லாத அதனுடன் நேரடியாக தொடர்பற்ற மறைமுகமான இராணுவ இலக்குகள் மற்றும் சிவில் நிலையங்கள் மேலான தாக்குதல்கள், போராட்டத்துக்கு அதிகமான பாதகத்தை ஏற்படுத்துகின்றன. சிவில் நிலைகள் மேலான தாக்குதல் என்பது, அரசு பயங்கரவாதத்தை மூடிமறைத்து அதை சமூக மயமாக்கிவிடுகின்றது. இந்த வகையான தாக்குதல்கள் சரி, தாக்குதல் நடத்தியவர்களையும் சரி, பயங்காவாத நடவடிக்கையாகவும் பயங்கரவாதியாகவும் காட்டி, இதை உலகமயமாக்கி ஏகாதிபத்திய துணையுடன் அடக்கி ஒடுக்கவும் முடிகின்றது, முனைகின்றது.

இந்த வகையில் எமது தேசிய விடுதலைப் போராட்டம் சார்ந்து பல தரம் பல தவறுகளை  புலிகள் தொடர்ச்சியாக இழைத்தே வந்துள்ளனர். எல்லைப் புற சிங்கள கிராம மக்;கள் மேலான தாக்குதல்கள், முஸ்லிம் கிராம மக்கள் மேலான தாக்குதல்கள், மக்கள் கூடும் கட்டிடங்கள் மேலான குண்டுத் தாக்குதல்கள், சிவில் விமானங்கள் மேலான தாக்குதல்கள், சர்வதேச விமான நிலையங்கள் மேலான தாக்குதல்கள போன்ற பல நடவடிக்கைகள்;, சர்வதேச ரீதியாக எமது தேசிய போராட்டத்தை பயங்கரவாதமாக காட்டி சிதைக்க அழிக்க துணைபோயுள்ளது. இது போன்று அப்பாவி சிங்கள முஸ்லிம் மக்களை எதிரியாக காண்பது, அவர்களை கைது செய்வது, கொல்வதும், முஸ்லிம் மக்களை சொந்த மண்ணில் இருந்து அவர்களின் சொந்த உழைப்பை பறித்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிய நிகழ்வுகள், தமிழ் மக்கள் மீதான சமூக அக்கறை உள்ளவர்கள் மீதான கைதுகள் படுகொலைகள், சர்வதேச ரீதியாக நடத்திய படுகொலைகள் (ராஜீவ் முதல் பாரிஸ் படுகொலைகள் வரை), கைதிகளை கொல்வது, கைதான அல்லது சரணடைந்த எதிரி இராணுவத்தை கொல்வது மற்றும், இது போன்றன தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயத்துக்கான மக்களின் தேசிய போராட்டத்தை, தனிநபர் பயங்கரவாதப் போராட்டமாக சிதைத்துள்ளது. குறைந்த பட்சம் முதலாளித்துவ ஜனநாயகத்தை கூட கடைப்பிடிக்க முடியாத அனைத்து நடவடிக்கைகளும், எமது போராட்டத்தை ஆழமாகவும் அகலமாகவும் பயங்கரவாதமாகவும் சிதைத்து வருகின்றது.

இந் நிலையில் தமிழ் மக்கள் தமது சொந்தப் பிரதேசத்தில் சுயநிர்ணய உரிமையை பெற்று வாழும் உரிமை என்பது, உயிரை விட முதன்மையானது. அந்த உரிமையை சிதைக்கும் வகையில் போராட்டம் நகரும் போது, அதன் சிதைவுக்கான நடவடிக்கைகளும் அதன் மேலான அரசியல் வரலாறு, வரலாற்றுத் துரோகமாக எஞ்சுவது தவிர்க்க முடியாது. இவை பாரிய தியாகங்களையும் தாண்டி விளைவாகுவது யாராலும் தவிர்க்க முடியாது.

இராணுவ இலக்குகளைத் தாண்டிய விடுதலைப் புலிகள் சர்வதேச சிவில் விமானத் தளத்தில் சர்வதேச சிவில் விமானங்கள் (இங்கு இவை சிறீலங்கா விமானமாக இருந்த போதும்) மீது நடத்திய தாக்குதல், தாக்குதலை சர்வதேச மயமாக்கிவிட்டது. இது சர்வதேச விமான சேவை தொடர்பான பாதுகாப்பை சர்வதேச அளவில் ஏகாதிபத்திய முடிவுக்கு விட்டுவிடுகின்றது. இராணுவ விமான இலக்கை தாண்டி, சர்வதேச சிவில் விமானம் மேல் (இந்த இலங்கை விமானம் கூட முழுமையாக இலங்கைக்கு சொந்தமானது அல்ல. 40 சதவீதமான ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பங்கு டுபாயை சேர்ந்த எமிரேட்ஸ்க்கு சொந்தமானது.) நடத்திய தாக்குதல், அன்னிய மூலதனத்தின் மேலானதாக சர்வதேசம் மேலானதாக மாறியமையாலும் (சர்வதேச விமான நிலையம் மற்றும் சர்வதேச தூதரகங்கள் இருக்கும் நாட்டுக்கு மட்டும் சொந்தமானவையல்ல), சர்வதேச சிவில் சேவை மேலானதாக இருப்பதாலும், இதை சாக்காகக் கொண்டு ஏகாதிபத்திய நேரடி ஆக்கிரமிப்பை விரைவுபடுத்தியுள்ளது. அதே நேரம் தாக்குதலின் விளைவால் இலங்கை பொருளாதாரத்தை குறிப்பாக பாதித்ததை விட, மறைமுகமாக உலகமயமாதல் பொருளாதார அமைப்பில் எற்பட்ட பாதிப்பு அதிகமாகவுள்ளது. இதனால் ஏற்படவுள்ள ஏகாதிபத்திய தலையீடு என்பது, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அழித்து சிதைத்துவிடுமளவுக்கு வளர்ச்சி பெறுகின்றது. உலகமயமாதல் பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு கலாச்சாரக் கூறுகள் எமது தேசியத்தை சிதைப்பதையும் அழிப்பதையும் புலிகள் இனம் காட்டி, அதை எதிர்த்து எமது தேசிய பொருளாதாரத்தை உருவாக்கும் போராட்டத்தை நடத்தாத நிலையில், எமது போராட்டம் நீடிக்கின்றது. இந்த நிலையில் உலகமயமாதல் பொருளாதார அலகு மீதான மறைமுக சேதம் என்பது, எமது சுயநிர்ணய போராட்டம் மீதான அழித்தொழிப்பை இலகுபடுத்தி விடும்;.

சர்வதேச சிவில் விமானம் மேலான தாக்குதல் எப்படி உலகமயதால் பொருளாதார அலகை பாதித்துள்ளது என்பதை பார்ப்போம்;. சர்வதேச சிவில் விமானம் மேலான தாக்குதல், விமானப் பறப்புகள் மீதான காப்புறுதியை சில மடங்குகளாக அதிகரிக்க வைத்துள்ளது. இது போன்று கப்பல் போக்குவரத்து மீதும் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கான விமான மற்றும் கப்பல் போக்குவரத்தின் எண்ணிக்கை குறைவடைவது இயல்பானது. இதனால் உலக நிதி மூலதனங்களை திரட்டும் காப்புறுதி நிறுவனங்களின் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது நேரடியாக தவிர்க்க முடியாது. அதேநேரம் தாக்குதலுக்குள்ளான விமானத்துக்கான காப்புறுதி பணக் கொடுப்பனவு, காப்புறுதி நிறுவனத்தின் மூலதனத்துக்கு இழப்பாக வேறு மாறுகின்றது. இதனால் சர்வதேச பன்நாட்டு காப்புறுதி நிறுவனங்கள் இந்த தாக்குதலால் நேரடியாக பொருளாதார பாதிப்பை அடைந்து நிற்கின்றது.

அத்துடன் சர்வதேச சுற்றுலாத்துறை சார்ந்த பன்நாட்டு நிறுவனங்கள், இலங்கைக்கான சுற்றுலாத்துறை வீழ்ச்சி ஊடாக நேரடியாக பாதிப்பை அடைந்துள்ளது. 2000 ஆண்டு உல்லாசப் பயணத்துறை வருமானம் 9024 கோடி ரூபாவாகும். இந்த நிலையில் இலங்கைக்கு வரும் விமானங்களுக்கு 50 முதல் 100 மில்லியன் ரூபாய் வரை, காப்புறுதிப் பணமாக செலுத்த வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது. இதனால் பயணிகளின் கட்டணம் நேரடியாக 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. 2000 ஆண்டில் இலங்கைக்கு வந்த விமானப் பயணிகளின் எண்ணிக்கை 29 லட்சமாகும்;. இதில் 63 சதவீதம் ஸ்ரீலங்கன் விமான சேவையூடாக நடந்த போதும், இந்த விமானப் போக்குவரத்தைக் கூட சர்வதேச ரீதியாக பன்நாட்டு சுற்றுலா நிறுவனங்களே ஏற்படுத்துகின்றன. இந்த தாக்குதலின் பின்பாக 80 வீதமான பயணங்கள் ரத்தாகியதால், இலங்கை அரசுக்கு நேரடியாக 360 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது. இது போன்று சர்வதேச சுற்றுலாத் துறை சார்ந்த பன்நாட்டு நிறுவனங்களுக்கும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத்துறை சார்ந்து நேரடியாக இலங்கையில் 115 000 பேர் தமது தொழிலை இழந்துள்ளனர். இதனால் சமூக சிதைவு ஏற்பட்டுள்ளது.

இந்தத் துறை சார்ந்த உல்லாச விடுதிகள் பாரிய நெருக்கடிக்குள் சிக்கியது. இந்த உல்லாச விடுதிகளில் பெரும்பாலானவை சர்வதேச பன்நாட்டு சுற்றுலா நிறுவனங்களுக்கு சொந்தமானவை மட்டுமின்றி மற்றவைகள் மேல் தனது வலைப் பின்னலைக் கொண்டதுமாகும்.  இந்த பன்நாட்டு உல்லாச விடுதிகளால் எதிர்பார்க்கப்பட்ட 290 மில்லியன் டொலர் வருமானம் 125 மில்லியன் டொலராக சரிந்துள்ளது. அதே நேரம் பல உல்லாச விடுதிகள் மூடப்படுகின்றன.

அடுத்து இலங்கைக்கான கப்பல் மற்றும் விமானக் காப்புறுதிக்கான அதிகாரிப்பு சர்வதேச கப்பல் போக்குவரத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது இலங்கை அல்லாத நாடுகளுக்கான, இலங்கையை அண்டிய கடல் பாதை மற்றும் தரிப்பு நிலையம் மீதான காப்புறுதி அதிகரிப்பு, தவிர்க்க முடியாமல் இலங்கையை விட்டு விலகிய ஒரு சுற்றுப் பயணத்தை நடத்த வேண்டிய அளவுக்கு மாறியுள்ளது. இதனால் கப்பல் பயண நாட்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் அதிக இழப்பு, கப்பல் செலவை அதிகரிக்க வைத்துள்ளது. இதனால் இலங்கை அல்லாத சர்வதேச பன்நாட்டு கப்பல் போக்குவரத்து நிறுவனங்ளின்; செலவு அதிகரித்ததன் ஊடாக, பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதி மீதான செலவு அதிகரித்ததன் மூலம் இலங்கை அல்லாத நாடுகளிலும் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

அதே நேரம் இலங்கைக்கான 5 சதவீதமான சரக்கு விமானப் போக்குவரத்துக்குரிய கட்டணம் அதிகரித்துள்ளது. 2000 ஆண்டு இலங்கை வந்த கப்பல்களின் எண்ணிக்கை 38 322 ஆகும். அதே நேரம் இலங்கைத் துறை முகத்தில் 25 222 000 மெற்றிக் தொன் பொருட்கள் இறக்கப்பட்டன. இந்தக் கப்பல்களுக்கு யுத்தக் காப்புறுதி கட்டணம் 21 அடி கொள்கலனுக்கு 500 டொலராக இருந்தது. கட்டுநாயக்க விமான நிலையம் மீதான தாக்குதலின் பின்பு, விஷேட யுத்த அபாயக் காப்புறுதி என்ற பெயரில் 2500 டொலராக மாறியுள்ளது. இதனால் இலங்கைக்கான கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பன்நாட்டு நிறுவனங்களின் சூறையாடும் ஏற்றமதி இறக்குமதி முற்றாக பாதிப்படைந்துள்ளது.  உதாரணமாக எவர்கிறீன் நிறுவனம் நடத்த இருந்த 38 கப்பல் பயணத்தில் 22ஐ நிறுத்தியுள்ளது. ஹஞ்சின், ஹீண்டாய் நிறுவனங்கள் தனது பயணத்தில் 50 சதவீதத்தை நிறுத்தியுள்ளது. கப்பல் போக்குவரத்தில் ஏற்படுத்தியுள்ள தடை பன்நாட்டு இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை நேரடியாக பாதித்துள்ளது. கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலைய ஆடை தொழில் சார்ந்த 4 லட்சம் பெண் தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் ஆடை ஏற்றுமதி மீதான அதிகரித்த புதிய காப்புறுதி, பன்நாட்டு மூலதன திரட்சிக்கு தடையாகியுள்ளது. இதனால் செய் ஆடையின் விலை உயர்ந்ததன் மூலம், சர்வதேச அளவில் அதிகரிப்பை கோரும் அதே நேரம், இதை உருவாக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தில் சரிவை ஏற்படுத்திவிடுகின்றது. ஆடை உற்பத்தியில் ஈடுபடும் சர்வதேச பன்நாட்டு கொள்ளைக்கார நிறுவனங்கள், இதை சகித்துக் கொள்ள தயாரக இல்லை. இதனால் கூலிக் குறைப்புக்கும், வேலை இழப்புக்கும் தொழிலாளர்களை இட்டுச் செல்லுகின்றது. இந்த பன்நாட்டு புடவை சார்ந்த தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் 26 930 கோடி ரூபாவாகும். இதில் பாரிய வீழ்ச்சிக்கு இந்தத் தாக்குதல் வழி சமைத்துள்ளது. பன்நாட்டு ஆடைத் தொழில் சார்ந்த வருமான வீழ்ச்சியை பன்நாட்டு மூலதனம் சகித்துக் கொள்ளப் போவதில்லை. அந் நிறுவனங்கள் புலிகளை அழித்தொழிப்பதில் அரசுடன் முரண்பாடு கொள்வதில்லை. தமது சுரண்டலை மேலும் அதிகரிக்க, புலிகளை அழித்தொழிப்பது பன்நாட்டு நிறுவனங்களுக்கு நிபந்தனையாக இன்று மாறிவிட்டது.

இது போன்ற நேரடியாக விமான சேவை மூலம் நடத்திய ஏற்றுமதிகள் பாதிப்படைந்துள்ளது. பழம் மற்றும் மரக்கறி ஏற்றுமதி மூலம் கிடைத்த வருமானம் 53 லட்சமும், மீன் ஏற்றுமதி மூலம் 3782 லட்சம் ரூபாவும், வளர்ப்பு மீன் ஏற்றுமதி மூலம் 5603 லட்சம் ரூபாவும், அணி கலன்கள் மணிக்க கல் ஏற்றுமதி மூலம் 14546 லட்சம் ரூபாய் வருமானம் விமானம் மூலம் நிகழ்ந்துள்ளது. இந்த ஏற்றுமதியில் பெரும்பான்மை புலம் பெயர் சமூக தேவையுடன் தொடர்புடையதாக இருந்தது. இந்த நிலையில் புலம் பெயர் சமூகத்தின் தேவையை ஒட்டிய ஏற்றுமதிப் பொருட்கள் விலை ஏற்றத்தை சந்தித்துள்ளது. இது சார்ந்த இலங்கையில் வளர்ச்சி பெற்று இருந்த உள்ளூர் உற்பத்திகள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. சிவில் விமானத் தளத்துக்குள் இத்தாக்குதல் நகர்ந்ததன் மூலம், உள்ளூர் மற்றும் சர்வதேச உற்பத்திகள் பாதிப்படைந்ததுடன், நேரடியாக மக்களின் வாழ்வில் வீழ்ச்சியை சாதித்துள்ளது.

உலகமயமாதல் அதிக மலிவான மனித உழைப்பை அதிகம் சுரண்டும் ஆசிய பிரதேசங்களில், தமது முதலீட்டை நகர்த்தி சுரண்டி வரும் பொருட்கள் மீதான விலை அதிகரிப்பு, உலகமயமாதலின் அடிப்படை சூறையாடும் சுரண்டும் நோக்கத்தை, மறைமுகமாக பகுதியளவுக்கு தேக்கத்துக்குள்ளாக்கியுள்ளது. மூலதனக் குவிப்பில் அதிக சுரண்டலால் கிடைக்கும் லாபத்தில் ஏற்படும் நெருக்கடி, இலங்கை மீதான ஏகாதிபத்திய தலையீட்டை கூர்மையாக்கியுள்ளது. இலங்கையில் நேரடி சுரண்டல் மற்றும் சுற்றியுள்ள நாடுகளின் மலிவு கூலியைக் கொண்ட சுரண்டலை ஏதோ ஒரு விதத்தில் பாதிப்படைந்து உலகமயமாதலில் சந்திக்கும் நெருக்கடி, எமது போராட்டத்தை வெளியில் இருந்து அழிப்பதை தீவிரமாக்கியுள்ளது. தமிழ் பேசும் மக்களின் தேசிய பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட சுயநிர்ணயத்தை, மறுத்து நிற்கும் புலிகளின் அரசியல், அதை நோக்கி அணிதிரட்டப்படாத மக்களைக் கொண்ட எமது தேசிய விடுதலைப் போராட்டம் மீதான ஏகாதிபத்திய தாக்குதல், ஈவிரக்கமற்ற அழிவாகவே இருப்பது அதன் நிபந்தனையாகும். எகாதிபத்திய பொருளாதார இலக்குகள் மீதான தாக்குதல்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கப்படும் போது, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அரசியல், சமூக மயமாக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லாத தாக்குதல் ஏகாதிபத்திய பொருளாதார சமூக அடிப்படையையே தமது அரசியலாக கொண்ட மக்களையே, ஏகாதிபத்திய தலையீட்டின் போது போராட்டத்துக்கு எதிராக திருப்பிவிடும்.

அதே நேரம் இராணுவ இலக்கு கடந்து சிவில் விமானங்கள் மீதான தாக்குதலால் விமானம் மற்றும் கப்பல் மீதான காப்புறுதியை அதிகரிக்க வைத்துள்ளது. இதனால் இலங்கைப் பொருளாதாரம் பாரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதிக காப்புறுதியால் இலங்கையில் உற்பத்தியாகும் பொருட்களின் விலை அதிகரித்து, ஏற்றுமதி தடைப்படுவதால் உற்பத்தியில் வீழ்ச்சி அதன் நிபந்தனையாகின்றது. எற்றுமதிக்கு கோரும் அதிக கட்டணம் உற்பத்தி பொருட்களின் விலை குறைப்பை கோருகின்றது. அதே நேரம் இறக்குமதிப் பொருளின் விலை அதிகரிப்பால் வாழ்க்கைத் தரம் இலங்கையில் வீழ்ச்சியடைகின்றது. இது யுத்தப் பொருளாதாரத்துடன் அதிக நெருக்கடியை சந்திக்கும் அதேநேரம், தமிழ் மக்கள் மேலான சுமை மேலும் அதிகமாகிவிடுகின்றது. பொருளாதாரத்தில் ஏற்படும் சுமை தமிழ் மக்களுக்கே மேலும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இந்த பொருளாதார நெருக்கடி சிங்கள மக்களை விழிப்புற வைப்பதற்கு இனவாத யுத்தம் ஒரு தடையாக உள்ளவரை, யுத்தம்  மூர்க்கமாகின்றது. பொருளாதார நெருக்கடியை கடந்து யுத்தம் செய்வதற்கான இராணுவ தளபாட வசதிகளை, ஏகாதிபத்தியங்கள் நிபந்தனையின்றி தாராளமாக கொடுத்து உதவ காத்துக்கிடக்கின்றன. புதிய தொழில் நுட்ப வளர்ச்சியில் இராணுவ தளபடத்தை மாற்றியமைக்கின்ற நிலையில், காலாவதியான தொழில் நுட்ப ஆயுதங்களை மலிவு விலையிலும், இனாமாகவும், கடனாகவும் கொடுப்பதன் மூலம், மூன்றாம் உலக நாடுகளை பொருளாதார ரீதியாக அடிமைப்படுத்தி சுரண்ட, ஒரு ஊடகமாகின்றது. ஒரு இனவாத பாசிச அரசுக்கு பொருளாதார நெருக்கடி என்பது கடன் கொடுப்பவன் இருக்கும் வரை, உழைக்கும் மக்கள் உழைக்கவும் அதைச் சுரண்ட அனுமதிக்கும் வரை வெற்றுரைகள் தான். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேசிய போராட்டத்தை உயர்த்தியும், மக்களைச் சார்ந்து நிற்ப்பதும் அவசியமாகும். அதே நேரம் மக்கள் மற்றும் சிவில் துறைகள் மேலான தாக்குதலை தவிர்ப்பதும், எமது தேசிய விடுதலைப் போராட்டம் சரியான திசை வழியில் செல்வதற்கான ஒரு நிபந்தனையாகும்.


பி.இரயாகரன் - சமர்