Language Selection

சமர் - 29 : 11 - 2001
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வடக்கு கிழக்கில் புலிகளின் ஆட்சேர்ப்பு தொடர்பாக அண்மைக் காலத்தில் தொடாச்சியான பாரிய சர்ச்சைகள் எழுகின்றன. இது தொடர்பாக மட்டக்களப்பு - திருமலை ஆயர் ஜோசப் கிய்ஸ்லி சுவாம் பிள்ளை, இராம கிருஷ்ண மிஷன் பிரதிநிதி பத்மநாதன், மட்டக்களப்பு சமாதான குழு உறுப்பினர் அன்டன் மாhட்டின், மனித நேயர் நிலைய பிரதிநிதி எஸ். கமலநாதன் ஆகியோர், கிழக்கு புலிகளின் அரசியல் பொறுப்பாளர் கரிகாலனையும் வேறு முக்கிய உறுப்பினர்களையும் சந்தித்து பேசியுள்ளனர். இது தொடர்பாக புலிகள் "எமது விடுதலைப் போராட்டக் கொள்கைக்கு அமைவாக வீட்டுக்கு ஒரு வீரனைத் தரவேண்டுமென்றே கோரிக்கை விடுத்தோம். அதற்கு அமைவாகவே பெற்றோர்கள் பிள்ளைகளை எங்களிடம் கையளித்து வருகிறார்கள். ... ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்கப்பட்டுள்ள பெற்றோர் குழுவினரே, பிள்ளைகளின் பெற்றோர் மூலமாக கையளித்து வருகிறார்கள். சிலர் அச்சம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களின் சொத்துகளை நாம் கண்காணித்து வருகின்றோம்." என்று தெரிவித்த பின்னனியில், இந்த விடயம் மக்கள் மத்தியில் புதிய பாரிய முரண்பாட்டை புலிகளுடன் ஏற்படுத்தியுள்ளதை காட்டுகின்றது. இங்கு புலிகளின் கருத்துக்களான கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபடவில்லை, சொத்துகளை பறிமுதல் செய்ய வில்லை என்ற கூற்றுக்கு மாறாக, அவர்களின் முரண்பாட்டை தெளிவாக கொண்டு வருகின்றது.

 

முதலில் இது தொடர்பான பேச்சு வார்த்தை தன்னியல்பாக எந்தவிதமான அடிப்படையுமின்றி நடக்கவில்லை. மக்களின் முரண்பட்ட பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டே, முக்கிய பிரமுகர்கள் புலிகளை சந்திக்கின்றனர். இந்த பேச்சு வாhத்தைகளின் போது, புலிகள் தெரிவித்த கருத்துகள், உண்மையின் பக்கத்தை மறைமுகமாக தெளிவாக்குகின்றது. வீட்டுக்கு வீடு ஒருவன் அல்லது ஒருத்தியை போராட்டத்துக்கு தரவேண்டும் என்பது, உள்ளடகத்தில் கட்டாயமான ஆட்சேர்ப்புதான். ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்கப்ட்ட குழு என்பது தன்னியல்பாக உருவாகிவிடவில்லை. மாறாக ஆட்சேர்ப்புக்காக உருவாக்கப்படுகின்றது. யாரால் உருவாக்கப்பட்டதெனின் புலியால் தான். உருவாக்கப்பட்ட குழு கட்டாய ஆட்சேர்ப்பை நடத்துகின்றது. சிலர் அச்சம் காரணமாக வெளியேறுகின்றனர் எனின், அங்கு கட்டாய ஆட்சேர்ப்பு நடக்கின்றது. கட்டாய ஆட்சேகரிப்பு இல்லை எனின், ஏன் வெளியேறுகின்றனர். என்ன அச்சம் தான் புலிகளையிட்டு மக்களுக்கு எற்பட்டது? வெளியேறிவர்களின் சொத்துகளை பாதுகாக்கின்றோம் என்பதே, ஆட்சேகரிப்புக்கு உடன் படாதவர்களின் சொத்துகள் பறிமுதலானதை தெளிவாக்கின்றது. இது போல் தான் வடக்கில் இருந்து முஸ்லீம் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியதாக கூறிய புலிகள், முஸ்லீம் மக்களின் சொத்துகளுக்கும் கூறிய காரணமாகும். தெளிவாக கட்டாய ஆட்சேர்ப்புக்கு உட்பட மறுக்கும் மக்களின், சொத்துகள் பறிமுதல் செய்யப்படு;கின்றது. இது வெறுமனே கிழக்கில் மட்டுமல்ல. வடக்கிலும் நடக்கின்றது. தொண்டர் படை பிரிவுகள் முதல் அனைவரும் கட்டாய ஆட்சேர்ப்புக்குள்ளாகி வருகின்றனர். இது வௌ;வெறு வடிவங்களில், வௌவேறு துணைக் காரணத்துடன் அரங்கேறுகின்றது.

இந்த இடத்தில் மக்கள் தாமாக பெருமளவில் நெற்றில் திலகமிட்டு இணைகின்றார்கள் எனின், அது அரசியல் ரீதியாக விளக்கப்பட வேண்டும். புலிகளின் இயல்பான ஆட்சேகரிப்பு என்பது குறந்தேசிய அரசியல் எல்லைக்குள், துணிச்சல்வாதம் சார்ந்த ஆயுத கவர்ச்சியிலும் இராணுவ கவாச்சியிலும் பொதுவாக நடைபெறுகின்றது. அரசியல் கொள்கை, அரசியல் நோக்கம் என்பது பொதுவான ஒரு அரசியல் வழியில் அல்லாமல், குறிப்பான கவர்ச்சிகரமான ஒற்றை பரிமாண கோசங்களை ஆதாரமாக அடிப்படையாக கொள்கின்றது. இதற்கு இராணுவ சாகச நிகழ்ச்சிகள் ஆதாரமாக துணையாக உள்ளது. அதை அறுவடை செய்ய மக்கள் மேல் இராணுவம் தாக்குதல் செய்ய வேண்டும். அதற்கு ஏற்ற தாக்குதலை நடத்திவிடுவதே, புலிகளின் அரசியல் மூல உபாயமாகும்.

இந்நிலை தான் புலிகளின் நீண்ட வரலாற்றின் ஒரு தொடர்ச்சியான அனுகுமுறையாகும். அப்படியிருக்க எப்படி திடிரென மக்கள் புலிகளின் பின் இணையமுடியும்;. வீட்டுக்கு வீடு ஒவ்வொருவர் எப்படி எந்த அரசியல் நலனில் இணைகின்றனர். மக்களின் பிரச்சனைகள் பலவாக பல வடிவில் இருக்கும் போது, அதை கடந்து புலிகளின் குறுந்தேசியத்தின் எந்த கோசத்தில் இணைகின்றனர். மக்கள் அல்லாத எந்த பிரிவும் தனது நலன் சார்ந்தே போராட்டத்தில் இணைகின்றனர் அல்லது எதிர்க்கின்றனர் அல்லது வெளியில் பார்வையாளனாக நீடிக்கின்றனர். மக்கள் நலன்கள் வேறு ஒன்றாக இருக்க, புலிகளின் நலன்களை அதனுடன் தொடர்பற்றதாக இருக்க, எப்படி மக்கள் புலிகளின் பின்னால் அணி திரள்வர்.

சிங்கள இனவெறி அரசின் கூலிப்பட்டாளங்கள் சந்திக்கும் ஆட்சேர்ப்பு நெருக்கடி கூட, கட்டாய ஆட்சேகரிப்பை உருவாக்கவில்லை. ஆனால் ஒரு போராடும் அமைப்பு ஈடுபடுமளவுக்கு, அதை மூடிமறைக்க முனையுமளவுக்கு போராட்டத்துக்கு என்ன நேர்ந்தது. மக்களின் அடிப்படை தேவைகளை உள்ளடக்கிய போராட்டமாக போராட்டம் மாறாத வரை, மக்கள் போராட்டத்தில் இருந்து விலகி நிற்பதும் விலகிச் செல்வதும் நிகழ்கின்றது. ஆட்சேர்ப்பில் பெண்விடுதலை கோசமாகிய போதும், சமூக தளத்தில் உண்மையில் பெண்விடுதலை எதையும் வைத்து போராடவில்லை. இன்று பெண்விடுதலை என்ற கோசத்திலும்; மந்த நிலையே நிகழ்கின்றது. சுமூகத்துக்கும் புலிகளின் போராட்டத்துக்குமிடையில் பெண்விடுதலை, சாதிஒழிப்பு, சுரண்டல் ஒழிப்பு, தேசிய நலன்கள் சார்ந்து ஆழமாகவும் அகலமாகவும் பிளவுபட்டே வருகின்றது. இந்நிலையில் எப்படி மக்கள்,  போராட்டத்துடன் தன்னியல்பாக தன்னிச்சையாக இணைவர். இந்த பிளவு அகலமாக ஏற்பட, மக்களை எதிரியாக கணித்து கட்டாய ஆட்சேகரிப்பு நிபந்தனையாகின்றது. இது பிளவை மேலும் ஆழமாக்குகின்றது. இது எதிரிக்கு கொண்டாட்டமே.  போராட்டத்துக்கோ பாதகமானவைதான்.

இந்த கட்டாய ஆட் சேகரிப்பு புதிய சமூக நெருக்கடியை கொண்டு வருகின்றது. நாட்டை விட்டு வெளியேறுவது பெருமளவில் வடக்கு அதிலும் யாழ் சார்ந்து இருந்த நிகழ்வு, இனி கிழக்கையும் பெருமளவில் வெளியேறத் தூண்டுவதாக உள்ளது. அண்மையில் சர்வஜன வாக்கெடுப்பு இலங்கையில் நடத்த முற்பட்ட போது, பலர் இதை வீராவேசமாக எதிர்த்தனர். அகதியாகி இடம் பெயர்ந்துள்ள தமிழ் மக்களைச் சார்ந்து இதை எதிர்ப்பதாக கூறிய போது, எதிர்ப்புகான உண்மைக் காரணத்தை குழிதோண்டிப் புதைப்பதில் தமக்கிடையில் போட்டியிட்டனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழ் மக்களின் சுயஇருப்பை கேள்விக்குள்ளாக்கியிருக்கும். எந்த போராட்டமும் சந்திக்காத ஒரு துயரத்தை அம்பலப்படுத்தியிருக்கும். இன்று தமிழ் மக்கள் என்று மலையக, முஸ்லீம், தமிழ் மக்கள் என அனைவரையும் உள்ளடக்கியா கணக்கெடுப்பது? வடக்கில் இருந்து முஸ்லீம் மக்களை சொந்த மண்ணில் இருந்து தமிழ் புலிகள் துரத்திய நிலையிலும் படுகொலை செய்த நிலையிலும், முஸ்லீம் மக்களை தமிழ் மக்கள் என உள்ளடக்க முடியுமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்திருக்கும். அத்துடன் போராட்டம் சார்ந்து இறந்த ஒரு லட்சத்;துக்கு மேற்பட்டோர், மேற்கு நோக்கி புலம் பெயர்ந்த 5 லட்சத்துக்கு மேற்பட்டோர் (அண்ணளவாக 7 லட்சம் பேர் வரை இருக்கலாம்), இந்தியாவுக்கு புலம் பெயர்ந்த ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர், கொழும்பு நோக்கி புலம் பெயர்ந்த 4 அல்லது 5 லட்சத்துக்கு மேற்பட்டோh அணைவரும் ஏதோ ஒரு வகையில்; மண்ணை விட்டு வெளியேறிய தமிழர்கள் ஆவர். அதாவது போராடும் மண்ணில் இருந்து 12 லட்சத்துக்கு அதிகமானோர் காணாமல்; போய்யுள்ளனர். இதைவிட வடக்கில் இருந்து 1 லட்சம் முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டுவிட்டனர். அதாவது 1981 மக்கள் தொகை அடிப்படையில் அரைவாசிக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் காணாமல் போய்விட்டனர். இந்த தொகையில் பெரும்பகுதி அதாவது 80 சதவீதத்துக்கு அதிகமாக, அந்த மண்ணுக்கு இனி ஒரு போதும் திரும்பிப் போய் வாழப்போவதில்லை. இந்த பாரதூரமான சமூகச் சிதைவும் குடிபெயருதலும் கூட, போராட்டத்தின் ஜனநாயகமின்மையில் இருந்து உருவானதே. அரசின் கொடூரமான அழித்தொழிப்பு இந்த மக்களை போராடும் மண்ணில் இருந்து துரத்தியது என்பது, ஒரு பக்க சார்பானது மட்டுமேயாகும். ஏன் எனின் போராடும் மண்ணில் இன்னமும் போராடும் மக்கள் இருக்கும் ஒரு இடத்தில் இருந்து, மக்களை துரத்தியது போராட்டத்தின் இயங்கியலற்ற தன்மையே. இன்று கட்டாய ஆட்சேகரிப்பு, மண்ணை விட்டு வெளியேற்றும் எண்ணிக்கையை வரைமுறையற்றதாக்கப் போகின்றது. இது கிழக்கிலும் அகலமாகின்றது.

இங்கு அடுத்த சோகம் பெருமளவில் வெளியேறியவர் உழைப்பில் ஈடுபடக் கூடிய மனித வளத்தை கொண்டவர்களும், அடுத்த தலைமுறையை ஆற்றலுடன் உருவாக்கும் இனவிருத்தி வலிமையுடைய சமூகப் பிரிவே வெளியேறியது. புலம் பெயர்வால் எற்பட்ட குடும்ப பிளவுகளும் பிரிவுகளும், யுத்த நெருக்கடிகள், ஆண்களின் மரணங்கள் என எண்ணற்ற காரண காரியத்துடன் குழந்தை பிறப்பு வீழ்ச்சிக்குள்ளாகியுள்ளது. இது வடக்கு கிழக்கில் தமிழ் இனத்தின் இருப்பை பாரிய சரிவுக்குள்ளாக்கி, சனத் தொகை வீழ்ச்சியை துரிதமாக்கியுள்ளது. அத்துடன் வெளியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்களாக இருப்பதால், திருமணங்கள்  2, 3 லட்சம் இளம் பெண்களை தவிர்க்க முடியாமல் உடனடியாகவே மண்ணில் இருந்து வெளியேற்றத் தூண்டுகின்றது. அத்துடன் தொடர்ச்சியான குடிபெயர்வு நிகழ்ந்த வண்ணமே உள்ளது. எனவே தமிழ் மக்களின் மண்ணின் இருப்பு என்பது வீழ்ச்சி கண்டு வருகின்றது. ஒவ்வொரு போராட்டத் தவறும், மக்களுக்கும் மண்ணுக்கும் இடையிலான பிடிப்பை தகர்க்கின்றது. போராட்டம் மேலும் ஆழமாக சீரழிவதை துரிதமாக்குகின்றது. போராட்டத்தை புலிகளின் போராட்டமாக அல்லாது, மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும்;. மக்களின் அடிப்படை உரிமைகளை இனம் கண்டு, அவர்களின் வாழ்வுக்கான தேவைகளுடன் போராட்டம் தன்னை இசைவாக மாற்றி அமைக்கத் தவறுகின்ற நிலையில், போராட்டம் அரசியல் ரீதியாக மேலும் சீரழிந்து சிதைவதை யாரும் தடுக்க முடியாது.