10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

நேபாள புரட்சி: வெற்றிக்கான பாதை......! ஆய்வறிக்கை.

இந்த நூற்றாண்டின்,உலக உழைக்கும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய நேபாள புரட்சி,நேபாள மாவோயிச கட்சித் தலைமையின் துரோகத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டு பின்னடைவை சந்தித்துள்ளது.அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டு விட்டது.செம்படையை நேபாள ராணுவத்தைக் கொண்டு பிரசந்தா,பாபுராம் கும்பலின் உத்தரவின் பேரில் நேபாள ராணுவத்தின் மூலம் நயவஞ்சகமாக சுற்றி வளைத்து களைக்கப்பட்டுவிட்டது.

பிரசந்தா,பாபு ராம் துரோகக்கும்பலின் நடவடிக்கைகள் மீது தோழர் கிரண் தலைமையிலான குழுவினர் அவநம்பிக்கை கொண்டிருந்தாலும்,கட்சிக்கட்டுப்பாடு என்பதற்குள் மூழ்கி எதிர்த்து போராடி முறியடிக்காமல் இருந்துள்ளனர்.தற்போது நிலைமை கைமீறி சென்ற பிறகு துரோக கும்பலுக்கு எதிராக போராட ஆரம்பித்துள்ளனர்.தமது இந்த நடவடிக்கை தாமதமானது எனபதை அவர்களே வெளிப்படுத்தியுள்ளனர்.

புதிய ஜனநாயக புரட்சிக்கும்,சோசலிசத்திற்கும் இடையிலான இடைவெளி குறைந்துள்ளதால், சந்தேகத்திற்கு இடமின்றி நேபாளத்திற்கு தற்போது புதிய ஜனநாயக புரட்சி தேவையற்றது என்றும் ,  அதில் நாம் பெருமளவு அடைந்து விட்டோம், மீதி சோசலிசம் முக்கிய நிகழ்ச்சி நிரலாக வரும்போது அடைந்துவிடுவோம் , மேலும் தற்போது கட்சியின் முக்கியப் பணி முதலீட்டு நாடுகளுக்கு சாதகமான சூழலையும், உற்பத்தி சக்திகளையும் உருவாக்குவதுதான் பிரசந்தா எனவும் கூறி இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.

மேற்கண்ட கருத்துகள் மூலம் பிரசந்தா,பாபு ராம் கும்பல் அப்பட்டமாக புரட்சியை ஆளும்வர்க்கங்களிடம் காட்டிக்கொடுத்துள்ளனர் என்பது மிகவும் வெளிப்படையாக சந்தேகத்திற்கு இடமின்றி தெள்ளத்தெளிவாக தெரிந்திருந்தாலும், இவர்களே கட்சியில் பெரும்பான்மையாக உள்ளனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அண்மையில் நேபாள மாவோயிசக் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பசந்தா அவர்கள் துருக்கி மா-லெ.கம்யூனிசக்கட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் நேபாள புரட்சியை காட்டிக்கொடுத்த கும்பலையும், இந்த துரோகக்கும்பலை தாங்கள் முழுமையாக நம்பி ஏமாந்து போனதை பற்றியும் விரிவாக விளக்கியுள்ளார்.

”அப்போது ஜனநாயக் குடியரசு என்பதை செயல் தந்திரமாக ஏற்றுக்கொண்டோம். அதனை நாங்கள்  செயல் தந்திர மாற்றம்  என்றே கூறினோம். அப்போது நாங்கள் எடுத்த பாராளுமன்ற பாதை நிச்சயமாக ஒரு திருப்புமுனை. அதுவே எங்களை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாடு நிச்சயமாக இந்த சுழல் உருவாக்கத்தின் ஒரு காரணி”.

”இன்றையச் சூழலில் திரும்பி பார்க்கும்போது எங்களது கட்சியின் முந்தைய நிலைப்பாடுகள் குறித்து மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம். ஜனநாயகக் குடியரசு என்பதை செயல் தந்திரமாக 2005 கூட்டத்தின் போது ஏற்றுக்கொண்டது, நேபாள நாடாளுமன்றவாதிகளுடன் டில்லியில் 12 அம்ச ஒப்பந்தம் ஏற்படுத்தியது ஆகியவை இந்த மொத்த செயல்பாடுகளிலும் முக்கிய பங்கை கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் இந்த செயல் தந்திரம் மூலம், மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் கிளர்ச்சி என்னும் சூழலை ஏற்படுத்தி, நகரங்களில் புரட்சிகர கட்டமைப்பை ஏற்படுத்த  உதவும் என்பதால் இது அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எமது கட்டமைப்பை வலுப்படுத்த நாங்கள் நகரங்களுக்கு வந்தோம். ஆனால் கொந்தளிப்பான கடந்த பத்துவருட மக்கள் யுத்தத்தில் நாங்கள் பெற்ற அனைத்தும் தற்போது எமது கைகளை விட்டு போய்விட்டது. அண்மையில் தலைவர் பிரசந்தா அந்த 12 அம்ச ஒப்பந்த்தை அடையும் முன்பாக,  இந்திய விரிவாக்கவாதிகளுடன் டில்லியில் செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன என்பதை வெளிப்படுத்தியிருந்தார். இந்து பத்திரிக்கைக்கான ஏப்ரல் 16- நேர்காணலில் டில்லியுடன் பன்னிரெண்டு அம்ச ஒப்பந்தத்துடன் தொடங்கிய பயணம் தற்போது முடிவை நெருங்கிக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.  நேபாள ராணுவத்தை வைத்து மக்கள் விடுதலைப் படையின் முகாம்களை சதித்தனமாக சுற்றிவளைத்து சரணடையச்செய்ய உத்தரவு இட்டதற்குப் பின்னர்தான் இந்த நேர்காணலை அவர் தந்தார். இது பாபுராம், பிரசந்தா கும்பல் பாராளுமன்ற கட்சிகளுடன் சேர்ந்து இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு முன்பாக விரிவாக்கவாதிகளின் முன் சரணடைந்ததையே காட்டுகிறது. இதனை இந்தக் கும்பல் புரட்சியை அடைவதற்கான செயல் தந்திரம் என்று சொன்னது. ஆனால் அது இந்திய ஆளும் வர்க்கங்கள், நேபாள நாடாளுமன்ற வாதிகள் மற்றும் பாபுராம், பிரசந்தா கும்பல் கூட்டு சேர்ந்து நேபாள புரட்சியை முறியடிக்க எடுத்த விரிவான நிலைப்பாடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது அந்தக் கும்பல் நேபாள உழைக்கும் மக்கள் மற்றும் உலக உழைக்கும் மக்களிடம் புளுகியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு எதிரான சதியில் ஈடுபட்டதையே காட்டுகிறது”, என்றும் கூறியிருக்கிறார்.

தோழர் பசந்தாவின் மேற்கண்ட கருத்துகளில் ஜனநாயக குடியரசு என்ற எமது செயல்தந்திரம் தான் இப்போதைய பின்னடைவுக்கு காரணம், இது இந்திய நேபாள ஆளும்வர்க்கங்கள் பிரசந்தா,பாபுராம் கும்பல் கூட்டுசேர்ந்து செய்த சதியாகும். ஆனால் நாங்கள் இதை புரிந்துகொள்ளாமல் இருந்துவிட்டோம் என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்களும் பிரசந்தா,பாபுராம் துரோகக்கும்பலை தற்போது எதிர்த்து போராடுபவர்களுமான தோழர்கள் கிரண்,பசந்தா,கஜிரோல்,பாதல் போன்றவர்களால் கூட கட்சித்தலைமையின் சூழ்ச்சியை புரிந்துகொள்ள முடியாமல் அதற்கு பலியாகியிருக்கிறார்கள்.

இவர்களாலேயே புரிந்துகொள்ள முடியாத போது கட்சி அணிகளும்,நேபாள உழைக்கும் மக்களும் கட்சித்தலைமையின் துரோகத்தை புரிந்துகொள்ளாதது அதிசயமான நிகழ்வல்ல.

கடந்த 10 ஆண்டுகால புரட்சியின் பயன்கள் அனைத்தையும் முற்றாக இழந்த பின்னரும் கூட கட்சித்தலைமையின் துரோகத்தை, அதை எதிர்க்கும் புரட்சிகர குழுவினர் இன்னமும் தெளிவாக வரையறுத்து புரிந்துகொள்ளாமல்தான் உள்ளனர்.

தோழர் பசந்தாவினுடைய பேட்டியில் கட்சித்தலைமையின் துரோகத்தைப்பற்றியும்,  நேபாள புரட்சியை முறியடிக்க இந்திய, நேபாள ஆளும்வர்க்கங்களின் செயல்பாடுகளைப்பற்றியும் அதாவது முக்கியமாக புறநிலைசக்திகளின் செயல்பாடுகளைப் பற்றிய தமது குழுவின் கருத்துக்களையே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இப்படிப்பட்ட பின்னடைவுகளுக்கு புறநிலை சக்திகளின் எதிர் வினையாற்றல்கள் இயல்பானவைகளாகும். இதற்கு எதிரான அகநிலை சக்திகளின் செயல்பாடுகளும், வினையாற்றல்களுமே வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் தீர்மானகரமான காரணியாகும். இதன் அடிப்படையில் தோழர் கிரண் தலைமையிலான அணியினர் நேபாள புரட்சியின் பின்னடைவை பரிசீலக்கவில்லை என்பதைத்தான் மேற்கண்ட பேட்டியில் உள்ள அவரது கருத்துகள் நமக்குப் புலப்படுத்துகிறது.

எந்த ஒரு நாட்டிலும்  புரட்சிக்கு எதிராக பாட்டாளி வர்க்க கட்சியில் ஒளிந்துகொண்டிருக்கும் ஆளும் வர்க்க பிரதிநிதிகளும், ஆளும் வர்க்கங்களும் பல்வேறு சதிகளின் மூலம் புரட்சியை முறியடிக்க முயற்சிப்பார்கள் என்பது இயல்பானதொரு நடவடிக்கையே தவிர அதிசய நிகழ்வல்ல.

நேபாள சமூகத்தை விட  மிகவும் முன்னேறியச் சமூகங்களான சோவியத் ஒன்றியத்திலும், சீனத்திலும் கூட கட்சியில் ஒளிந்துகொண்டிருந்த முதலாளித்துவ கும்பலின் சதிகளால் அந்நாடுகளில் புரட்சி பின்னடைவுக்குள்ளானதை வரலாற்றில் நாம் பார்த்தேதான் இருக்கிறோம்.

அவ்விரு நாடுகளிலும் புரட்சி வெற்றியடைந்து பல பத்தாண்டுகளுக்குப் பின்னர்தான், முதலாளித்துவவாதிகளால் அதை முறியடிக்க முடிந்தது. அந்நாடுகளில் இச்செயல் அவ்வளவு எளிமையான ஒன்றாகவும் இல்லை. அப்படி இருக்கவும் முடியாது. ஏனென்றால் அவ்விரு நாடுகளின் மொத்த சமூகமும் இந்திய, நேபாள நாடுகளை  விட, சிந்தனாரீதியாக மிகவும் முன்னேறிய சமூகங்களாகும். இதன் காரணமாக கட்சியில் ஒளிந்துகொண்டிருந்த முதலாளித்துவவாதிகள் தோழர்கள் லெனின்,ஸ்டாலின் மற்றும் தோழர் மாவோ ஆகியோருக்குப் பின்னர் தான் கட்சியையும், ஆட்சியையும் பிடிக்க முடிந்தது. கட்சியில் இருந்த உண்மையான பாட்டாளி வர்க்க சிந்தனையாளர்கள் ஆயிரக்கணக்கானோரை நயவஞ்சகமாக கொலை செய்தும், சிறையில் அடைத்தும் தமக்கான நிலையை கட்சியிலும், ஆட்சியிலும் நிச்சயமான வகையில் உறுதி செய்து கொண்ட பின்னர்தான், தமது முதலாளித்துவ நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த முடிந்தது. இதையும் கூட முழுக்க, முழுக்க ராணுவ ஒடுக்குமுறை மூலமே நிறைவேற்றிக்கொண்டனர்.

ஆனால் நேபாளத்திலோ புரட்சி முடிவடைவதற்கு முன்பாகவே மிகவும் வெளிப்படையாகவும், கட்சியில் உள்ள பாட்டாளி வர்க்க சிந்தனையாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நெருக்குதலையோ, அழிவையோ ஏற்படுத்தாமலேயே முதலாளித்துவவாதிகள் தமது நோக்கத்தை எளிமையாக நிறைவேற்றிக் கொண்டுள்ளனர். இந்த நிகழ்வு நேபாளத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் முழு முற்றாக பொருந்தக் கூடியதாகும். இவ்விரு நாடுகளிலும் செயல்பட்ட, செயல்படும் புரட்சிகர சக்திகளின் செயல்பாடுகளை தொகுத்துப் பார்க்கும்போது இரண்டுமே உள்ளடக்கத்தில் ஏறத்தாழ ஒன்றாகவே உள்ளது.

நேபாள, இந்திய புரட்சிகர அமைப்புகளின் செயல்பாடுகளின் நடவடிக்கைகளில் உள்ள ஒரே வேறுபாடாக தோன்றுவது இந்திய புரட்சிகர சக்திகள், நேபாள புரட்சிகர சக்திகள் முன்னேறிய அளவிற்கு புரட்சியில் முன்னேறாமல் ஒவ்வொரு முறையும் தோல்வியை தழுவிக்கொள்கின்றனர் என்பதே ஆகும்.

ஆனால் நேபாள புரட்சிகர சக்திகள் வெற்றியின் விளிம்புவரை சென்று பின்னடைவை சந்தித்துள்ளதைப், போன்று தோற்றமளித்தாலும், உள்ளடக்கத்தில் இவ்விரு நாடுகளின் புரட்சிகர சக்திகளின் பின்னடைவில் குறிப்பிடும்படியான தனித்துவம் ஏதுமில்லை

ஏனென்றால் நேபாள புரட்சிகர சக்திகளின் எழுச்சி, முன்னேற்றம் என்பது மன்னராட்சியை தூக்கியெறிவது என்பதில் மட்டுமே மேலாண்மை செலுத்தியுள்ளது. மன்னராட்சியை தூக்கியெறியும் அளவுக்கு மட்டுமே அது உள்ளடக்கத்தையும், வீரியத்தையும் கொண்டிருந்தது என்பதுதான் நேபாள படிப்பிணையில் இருந்து நமக்குத் தெளிவாக புலப்படுகிறது.

தோழர் பசந்தா அண்மையில் வெளியிட்ட கருத்துகளும்  கீழ்கண்டவற்றையே சாரமாக உள்ளடக்கியிருக்கிறது. மன்னராட்சியை தூக்கியெறியும் போராட்டத்தையும் கூட நடத்துகின்ற திறனும், ஆற்றலும்  இல்லாத நேபாள முதாலாளித்துவவாதிகள், தம்மால் செய்ய வக்கற்ற ஒன்றை பாட்டாளி வர்க்க அமைப்பைக் கொண்டு சாதித்துக்கொண்டுள்ளன.

எனவேதான் மன்னராட்சிக்கெதிரான புரட்சிகர சக்திகளின் போராட்டத்தை இந்திய, நேபாள ஆளும் வர்க்கங்களும் மறைமுகமாக ஆதரித்துள்ளன. அதை நேபாள மாவோயிசக் கட்சியில் ஒளிந்துக்கொண்டிருந்த தமது பிரதிநிதிகளான பிரசந்தா, பாபுராம் தலைமையிலான  கும்பலின் மூலமே சாதித்துக் கொண்டுள்ளன.

சீனத்தில்  பாட்டாளி வர்க்க கட்சியில் ஒளிந்துகொண்டிருந்த முதலாளித்துவ பாதையாளர்களை முறியடிக்க தோழர் மாவோ கலாச்சார புரட்சியை  முன்வைத்து நடைமுறைப்படுத்தினார். சீன சமூகத்திற்கு, முதலாளித்துவ பாதையாளர்களை முறியடிக்க மக்கள் சக்தியைக் கொண்டு, ஒரு கலாச்சார புரட்சியை மட்டுமல்ல பல கலாச்சார புரட்சிகளை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார் தோழர் மாவோ. ஆனாலும் கூட முதலாளித்துவ பாதையாளர்கள் கலாச்சார புரட்சியையும் மீறி தோழர் மாவோவின் இறப்பிற்குப் பின்னால் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றிக் கொண்டனர்.

சோவியத் புரட்சியின் படிப்பினையிலிருந்துதான் முதாலாளித்துவ பாதையாளர்களை, மாபெரும் மக்கள் சக்தியைக் கொண்டு முறியடிக்க வேண்டும் என்ற முடிவிற்கு தோழர் மாவோ வந்தார். அதனடிப்படையிலேயே கலாச்சார புரட்சியை நடத்தினார். முதலாளித்துவ பாதையாளர்களை முறியடிக்க புரட்சிகர சக்திகள் மக்களை பயன்படுத்திக் கொள்வது மட்டுமல்ல, புரட்சியின் அகநிலைச் சக்திகளான மக்களே முதலாளித்துவ பாதையாளர்களை இனம் கண்டுகொள்வதற்கான திறனை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிக்  களமாகவும் திகழ்வதுதான் கலாச்சார புரட்சியின் உள்ளடக்கமாகும்.

உழைக்கும் மக்களை  அப்படி தயார் செய்வதற்கு முன்பாகவே தோழர் மாவோவின் இறப்பும் முதலாளித்துவவாதிகள் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றுதலும் நிகழ்ந்துவிட்டது. சீனத்தின் இந்த அனுபவத்தில் இருந்து கட்சிக்கு வெளியில் உள்ள உழைக்கும் மக்கள் மட்டுமல்ல, கட்சியில் உள்ளவர்கள் கூட முதலாளித்துவ பாதையாளர்களை அடையாளம் காணமுடியாமலும், அப்படியே கண்டுபிடித்தாலும் அதை முறியடிக்க மக்கள் சக்தியை பயன்படுத்தும் ஆற்றலோ, திறமையோ இல்லாதவர்களாவே இருந்துள்ளனர்.

இதிலிருந்து சீனத்தில் கலாச்சார புரட்சி, மக்கள் செல்வாக்குப் பெற்ற தோழர் மாவோவின் மீதான மக்களின் உயரிய நம்பிக்கையின் வெளிப்பாடாகவே  வெளிப்பட்டுள்ளது. சீனத்தில் மட்டுமல்ல உலக பாட்டாளி வர்க்க அமைப்புகள் அனைத்தின் செயல்பாடுகள், அனுபவங்கள் ஆகியவற்றை பார்க்கும்போது உறுதியான கட்சித்தலைமை என்பது குறிப்பிட்ட சமூகத்தின் நற்பயன் சார்ந்த ஒன்றை போன்றே தோற்றமளிக்கிறது.  சோவியத் யூனியனுக்கு தோழர்கள் லெனின், ஸ்டாலினை போன்று சீனத்திற்கு தோழர் மாவோ கிடைத்தது அந்நாடுகளின் நற்பயன்தான் போலும்!. ஆனால் இந்தியாவிற்கும், நேபாளத்திற்கும் இதுவரை அப்படி ஒரு நற்பயன் வாய்க்கவே இல்லை!

தவறு மற்றும் முதலாளித்துவ பாதையாளர்களுக்கு எதிரான மக்கள் எழுச்சி,  கட்சித் தலைமையை மட்டுமே சார்ந்திராமல் பிரதான அகநிலைச் சக்திகளான  அணிகள் மற்றும் உழைக்கும் மக்களின் அரசியல், சித்தாந்த வளர்ச்சி   அடிப்படையிலான அடித்தளத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையே உலக புரட்சிகர அமைப்புகளின் அனுபவங்கள் நமக்கு உணர்த்துகிறது. ஆனால் இது சாத்தியமா? எப்படி இதை சாதிப்பது? இப்பணி உலக பாட்டாளி வர்க்கம் இது வரை சந்தித்தவற்றிலேயே மிகவும் சவாலான பணிதான் என்றாலும், இதை சாதிப்பதைத் தவிர நமக்கு வேறு வழியேதும் இல்லை.

ஆனால் இந்தப் புரிதலை கட்சி அணிகளுக்கும், உழைக்கும் மக்களுக்கும் தற்போது உலக கம்யூனிச இயக்கங்கள் கடைபிடிக்கும் சித்தாந்த பயிற்சி அளித்தல் என்ற வடிவத்தின் மூலம் கட்சி அணிகளின் உயர்ந்த புரிதல் மட்டத்தையே உயர்த்த இயலாதபோது, உழைக்கும் மக்களுக்கு அதை தருவது என்பது சாத்தியமே இல்லை.

உலகின் ஏனைய நாடுகளை விட இந்திய, நேபாள நாடுகளில் உள்ள புரட்சிகர அமைப்புகளுக்கு இது பன்மடங்கு சவால் நிறைந்த பணியாகும். உலகில் ஏனைய நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்க அமைப்புகளிலே கூட, கட்சி அணிகள் அரசியல், சித்தாந்த புரிதலின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்படுவதற்கு மாறாக தலைமை மீதான நம்பிக்கை, விசுவாசம் என்ற அடித்தளத்தின் மீதே பெருமளவு கட்டி எழுப்படுகிறது.

இந்த நம்பிக்கை, விசுவாசம் ஆகிய பண்புகள் சொத்துடைமை வர்க்கப் பண்பின் தொடர்ச்சியாகவே பாட்டாளி வர்க்க அமைப்புகளிலும் செல்வாக்கு செலுத்துகிறது. இத்தன்மை இந்திய, நேபாள நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்க அமைப்புகளில், இச்சமூகங்களுக்கே உரித்தான வகையில் தனித்தன்மையுடன் மேலாண்மைப் பெற்று விளங்குகிறது.

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இவ்விரு நாடுகளிலும் உள்ள சமூகங்கள் பார்ப்பனிய பண்பாட்டையும் அதனடிப்படையிலான வாழ்வியலையுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றன. பார்ப்பனியம் இந்திய, நேபாள ஆளும் வர்க்கங்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து பிற்போக்கு சக்திகளுக்கும் மிகச் சிறந்த ஆயுதமாகும்.

எனவே இவ்விரு நாடுகளின் தனித்தன்மையான பார்ப்பனியத்தை பற்றிய தெளிவான வரையறையை இந்நாடுகளில் உள்ள புரட்சிகர அமைப்புகள் கொண்டிருப்பது தவிர்க்கவியலாத தேவையாகும். இதைக்கொண்டிராத எந்த ஒரு புரட்சிகர அமைப்பும், தமது இலக்கை நோக்கிய பயணத்தில் ஒரு அங்குலம் கூட முன்னேற இயலாது.

இவ்விரு நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்க அமைப்புகள், தமது அணிகளுக்கு அரசியல், சித்தாந்த பயிற்சி அளிக்க நடத்தும் வகுப்புகளின் மூலம் இதுவரை ஆதாயம் அடைந்து வருவது பார்ப்பனிய சக்திகளே ஆகும். இவர்களின் மூதாதையர்கள் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, தமக்கு எதிரான அனைத்து சித்தாந்தங்களையும் தின்று, செறித்துவிட்டதைப் போன்றுதான் மார்க்சியத்தையும் தின்று செறித்துவிடும் திசையை நோக்கி இதுவரை  அவர்கள் வெற்றிகரமாக நடை போட்டு வருகின்றனர். இதை நிரூபிக்கும் வகையில் தான் இந்திய, நேபாள புரட்சிகர அமைப்புகளின் பின்னடைவுகளும், தோல்விகளும் அமைந்துள்ளன. இதனடிப்படையில்தான் ஜனநாயக மத்தியத்துவம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகிய பாட்டாளி வர்க்க உயரிய கோட்பாடுகளையும் இந்நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கங்கள் தமது நலன்களுக்கு ஏற்ப, பார்ப்பனிய நடைமுறைகளின் மூலம் மடைமாற்றிக் கொண்டுள்ளனர். இப்படி இவர்கள் பாட்டாளி வர்க்க அமைப்பையும், அதன் உயரிய கோட்பாடுகளையும் பயன்படுத்திக் கொள்வதை புரிந்து கொள்வதில் உழைக்கும் மக்களிடையே உள்ள அரசியல், சித்தாந்த புரிதல் பற்றிய  போதாமை நீடித்திருக்க வேண்டியது இவர்களுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ளது.

எனவே ஆளும் வர்க்கங்களின் இந்த நயவஞ்சகத்தை உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ள அவர்களின் வாழ்நிலையிலிருந்து, அதை அடையாளம் காண தேவையான அரசியல், சித்தாந்த புரிதலை தருவதற்கான வழிமுறையை நாம் உருவாக்கியாக வேண்டும்.

குறிப்பிட்டதொரு சமூகத்திற்கு எப்படியான சமூக மாற்றம் தேவைப்படுகிறதோ, அதை அம்மக்களின் வாழ்வியலில் இருந்து, அவர்களுக்கு புரிந்த மொழியில் புரிய வைப்பதும், அதனடிப்படையில் அவர்களை போராட வைத்து, இப்போராட்டத்தின் ஊடே அவர்களுக்கு அரசியல், சித்தாந்த பயிற்சி பெறுவதற்கான வழிமுறையை நாம் உருவாக்கியாக வேண்டும்.

குறிப்பாக புதிய ஜனநாய புரட்சியின் சாரம் விவசாயிகளுக்கான விவசாய புரட்சி என்பதை நாம் அறிவோம். இந்த புதிய ஜனநாயக புரட்சியின் சாரத்தை உழுபவருக்கே நிலம், உழைப்பவருக்கே அதிகாரம் என்ற முழக்கத்தின் உள்ளே தோழர் மாவோ உள்ளடக்கியுள்ளார். இதைத்தான் இந்திய நக்சல்பரி புரட்சியாளர்களும் அடிப்படையாகக் கொண்டுள்ளனர்.

இன்றைய நிலையில் இந்தியாவில் விவசாயம் லாபமற்ற தொழிலாக மட்டுமல்ல, அது தற்கொலைக்கான தொழிலாகவும் இந்திய ஆளும் வர்க்கங்களால் மாற்றப்பட்டுவிட்டது. இதனால் இந்திய விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெயியேறும் நிகழ்வு மிக விரைவாக  நிகழ்ந்து வருகிறது. ஆனால் இப்படி  விவசாயத்தில் இருந்து வெளியேறும் விவசாயிகளுக்கு வாழ்வளிக்கக் கூடிய மாற்று ஏதும் உருவாக்கப்படவில்லை. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினரான விவசாயிகளுக்கு வாழ்வளிக்க வேறெந்த துறையிலும் வாய்ப்பேதும் இல்லை. அதிலும்  உலக ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்யும் தரகு முதலாளித்துவத்திற்கு இதற்கான தகுதி முற்றாக இல்லவே, இல்லை.

 

எனவே, விவசாயமே இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வளிப்பதற்கான தகுதிப் பெற்ற ஒரே தொழிலாகும்.இதன் மூலமே பெரும்பானமை மக்களுக்கு வேலைவாய்ப்பளித்து,  அவர்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க முடியும்.நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும், போது மட்டுமே தேசிய சந்தை உருவெடுக்கும்.மக்களின் வாங்கும் சக்தி பெருகாத வரை நாடு தொழில்மயமாவது என்பது சாத்தியமேயில்லை.

ஆனால் ஆளும்வர்க்கங்களோ ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை மறுகாலனியாக்கும் முனைப்பில் விவசாயத்தை ஏறத்தாழ அழித்துவிட்டது.இதன் மூலம் நாட்டின் பெரும்பான்மை மக்களை அழிவின் விளிம்பிற்கே கொண்டுவந்துவிட்டது.இப்படி அழிவின் விளிம்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விவசாயிகள்தான் புரட்சியின் பிரதான சக்திகள் ஆவர்.விவசாயிகளை அவர்களின் வாழ்நிலைக்கோரிக்கைகளில் இருந்து தொடங்கி போராட வைப்பதும்,இதையே அவர்கள் அரசியல்,சித்தாந்த பயிற்சி பெறுவதற்கான களமாகவும் உருவாக்குவதே புரட்சிகர அமைப்புகளின் அத்தியாவசிய பணியாகும்.கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பார்ப்பனிய வாழ்வியலையே அடிப்படையாகக் கொண்டுள்ள இந்திய,நேபாள சமூகங்களே உலகில் உள்ள சமூகங்களிலேயே, சிந்தானா ரீதியாக மிகவும் பின்தங்கிய சமூகங்களாகும்.

இவைகளின் அன்றாட வாழ்வியலே  பார்ப்பனியமாக உள்ளதால், கொத்தடிமைத்தனமும் அதன் அடிப்படையிலான பற்று, விசுவாசத்தை தமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகக் கொண்டுள்ளவைகள்.இந்திய நேபாள சமூகங்களின் இந்த தனித்தன்மையின் காரணமாக எதிர்புரட்சியாளர்களை முறியடிப்பதற்கான சீனத்தின் கலாச்சாரப் புரட்சி என்ற வழிமுறை மட்டும் இங்கு போதுமானதல்ல.அதிலும் கலாச்சாரப் புரட்சி,புரட்சிக்கு பிந்தைய சமூகத்திலுள்ள எதிர்புரட்சியாளர்களை முறியடிப்பதற்கான உள்ளடக்கத்தைக் கொண்டதாகும்.இந்திய, நேபாள சமூகத்தன்மையின் அடிப்படையில் இருந்து மக்களை புரட்சிக்கு அணிதிரட்டும் போதே கட்சியில் ஒளிந்து கொண்டிருக்கும் எதிர்புரட்சியாளர்களை முறியடிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் கடந்த 8-ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செயல்பட்டு வருகிறோம்.

இதற்காக இந்நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய விவசாயிகளிடம் விரிவான ஆய்வொன்றை நடத்தி கீழ்க்கண்ட கோரிக்கைகளை தொகுத்துள்ளோம்.

மத்திய, மாநில அரசுகளே!

1.விவசாயத்தை நாட்டின் தொழிலாகவும்,அத்தியாவசிய தொழிலாகவும் அறிவித்து நடைமுறைப்படுத்து!

2.நிலப்பிரபுக்கள்,மடங்கள்,ஆதீனங்கள்,கோயில்கள் ,நவீன கால நிலப்பிரபுக்களான கார்ப்பரேட் முதலாளிகள்,நடிகர்கள்,பெரும் பணக்காரர்கள் வாங்கி குவித்துள்ள நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை கூலி ஏழைவிவசாயிகளுக்கு பிரித்து வழங்கு!

3.விவசாய விளை பொருட்களுக்கான விலையை தீர்மாணிக்கும் உரிமையை விவசாயிகளுக்கே வழங்கு!

4.ஒவ்வொரு சாகுபடிக்கும் ஆகும் முழுச்செலவையும் விவசாயிகளுக்கு கடனாக வழங்கு!

5.நாடு முழுக்க விவசாய விளை பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்யும் முறையை ஏற்படுத்து.

மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தும் தமது வாழ்நிலை அனுபவங்களில் இருந்து விவசாயிகளே  வந்தடைந்தவைகள்.இக்கோரிக்கைகள் பொருளாதார வடிவைக்கொண்டிருந்தாலும் இவைகள் நிலவுகிற சமூக அமைப்பில் தீர்க்க முடியாதவைகள் என்பதால் இவைகள் முழு முற்றாக அரசியல் கோரிக்கைகளாகும்.இவைகள்தான் இந்திய ஆளும்வர்க்கங்களால் அழிவின் விளிம்பில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விவசாயிகளை பாதுகாக்கும் உள்ளடக்கத்தைக் கொண்டதாகும்.இதனோடு இந்திய உழைக்கும் மக்கள் அனைவரின் நலனையும், தேசிய முதலாளிகளின் நலனையும் உள்ளடக்கியதாகும்.இதன் காரணமாக இக்கோரிக்கைகள் முன்வைக்கப்படும் அந்தக்கணமே நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கும் அவர்களின் விரோதிகளுக்குமான போர் தொடங்கிவிடுகிறது.

தமது கோரிக்கைகளின் சந்தேகத்திற்கு இடமில்லாத, மிகத்தெளிவான நியாயத்தில் இருந்து, இதற்கெதிரான தமது விரோதிகளின் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் புரிந்துகொள்வார்கள்.இந்த நீடித்த, இடைவிடாத போராட்டத்தின் ஊடாக நாட்டின் பெரும்பான்மை மக்கள் அரசியல், சித்தாந்த பயிற்சி பெறுவதற்கான களத்தை உருவாக்குவதே புரட்சிகர தலைமையின் தலையாயப் பணியாகும்.இப்பணி எந்த அளவிற்கு நேர்த்தியாக, உயரிய மட்டத்தில் செழுமைப்படுத்தப்படுகிறதோ, அந்த அளவிற்கு உழைக்கும் மக்களின் புரட்சிகர ஆற்றல் பெருக்கெடுக்கும்.

எமது மேற்கண்ட நிலைப்பாட்டை நாங்கள் முன்பு செயல்பட்ட சி.பி.ஐ-எம்.எல்(மா.அ.க) தலைமையிடம் முன்வைத்தோம்.எமது இந்த முன்னெடுப்பு தமது நோக்கத்திற்கு எதிரானது என்பதால், எம்மை அவர்கள் நயவஞ்சகமான முறையில் விவசாய அமைப்பின் மாநில தலைமையைத்தந்து திசைத்திருப்ப பார்த்தனர்.அது முடியாது போகவே தமது வர்க்க தன்மைக்கு ஏற்ப அமைப்பில் இருந்து எம்மை ஒதுக்குதல்,ஓரங்கட்டுதல்,இழிவுபடுத்துதல் ஆகியவைகள் மூலம் பணிய வைக்க முயற்சித்தனர்.

இவைகளை புரிந்து கொண்ட நாங்கள் எமது நிலையில் மேலும் உறுதியாக நின்றோம்.இப்போதும் அதை விவசாயிகளிடையே கொண்டு செல்லும் பணியையே அடிப்படையாக்க் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

மொத்தத்தில் இதுவரை நாம் பரிசீலித்தவற்றை தொகுத்துப் பார்க்கும் போது, புதிய ஜனநாயக புரட்சியை நடத்துவதற்கான சமூக அடித்தளத்தைக் கொண்டுள்ள நாடுகளில் அதிலும் குறிப்பாக பார்ப்பனியத்தை வாழ்வியலாக கொண்டுள்ள இந்திய, நேபாள சமூகங்கள் தத்தமது சமூகங்களின் பின்தங்கிய நிலை,தனித்தன்மை ஆகியவைகளுக்கு ஏற்ப புரட்சியின் அகநிலை சக்திகளான நாட்டின் பெரும்பான்மை மக்களான உழைக்கும் மக்களை புரட்சிக்கு அணி திரட்டுவதற்கும்,அரசியல் சித்தாந்த பயிற்சி அளித்து வளர்த்தெடுப்பதற்கும், இதன் மூலம் பாட்டாளிவர்க்க அமைப்புகளில் ஊடுருவி, அதை உள்ளிருந்தே சீர்குலைக்கும் எதிர்புரட்சியாளர்களை இனம் கண்டு முறியடிப்பதற்கான வழி முறையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே தேவையாக உள்ளது.

குறிப்பு:-

நாங்கள் இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போதே நேபாள புரட்சியை காட்டிக்கொடுத்த பிரசந்தா,பாபுராம் கும்பலின் துரோகத்தை முறியடித்து,நேபாளத்தில் புதிய ஜனநாயக புரட்சியை தொடர்வதற்கு மீண்டும் ஆயுதப்போராட்ட பாதையில் போராடப் போவதாகவும்,புதிய கட்சியை துவக்கப்போவதாகவும் தோழர் கிரண் தலைமையிலான அணியினர் தமது கட்சி கூட்டத்திற்கு பின்னர் முறைப்படி அறிவித்துள்ளனர்.புரட்சிகர பாதையில் முன்னேற துரோகக் கும்பலுக்கு மாற்றாக துவங்கப்பட்டுள்ள நேபாள கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் கட்சிக்கு எமது புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதோடு தாங்கள் இதுவரை இருந்த ஒன்றுபட்ட கட்சியின் அனைத்து செயல்பாடுகளையும் முடிவுகளையும் மறுபரிசீலனை செய்து தொகுத்து சரியான அடிப்படை நிலைப்பாடுகளை தீர்மானிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.விரைவில் மா-லெ-மா கோட்பாடுகளின் அடிப்படையில் புரட்சியில் முன்னோறுவதற்கும்,புரட்சியை பாதுகாப்பதற்கும் சரியான முடிவுகளுக்கு வந்தடைவதற்கு எமது மேற்கண்ட கட்டுரையும் அவர்களுக்கு உதவும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

தோழமையுடன்: விவசாயிகள் விடுதலைப் பேரவை,தமிழ்நாடு.

நாள்:26.06.2012.

 

http://suraavali.blogspot.in/2012/06/blog-post_25.html

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்