Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கலையரசனின் பிரமுகர்த்தன "மார்க்சியத்தின்" கண்டுபிடிப்பு தான் இது. "தவறை நியாயப்படுத்தி ஏதாவது காரணம் சொல்லத் தானே வேண்டும்" என்று, யோ.கர்ணனின் நூல் மேலான எமது விமர்சனத்துக்கு விளக்கம் கொடுக்கின்றார் கலையரசன். பிரமுகர் என்ற வகையில் மற்றொரு பிரமுகரை உருவாக்கவும், அவரை பாதுகாக்கவும் குறுக்குவழியில் முனைகின்றார் கலையரசன். இதற்காக "தவறு" ஒன்றை, அவர் திடீரெனக் கண்டு பிடிக்கின்றார். வேடிக்கை என்னவென்றால் இவர் "தவறாக" கண்டுபிடித்த விடையம், படிப்பகத்தில் மின்நூலாக்கப்பட்டுள்ள 10000 பிரதிகளுக்கும் பொருந்தும். இவர் சொல்லும் அதே "தவறு"டன் தான் அவையும் இணையத்தில் "உரிமை" மீறி ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது. இப்படி இவர் "தவறு" என்று கூறுவது, மின் நூலாக்கப்பட்டவற்றுக்கு அனுமதியை நாம் பெறவில்லை என்பதுதான். ஆக உங்கள் படிப்பகத்தை மூடக் கோருகின்றார்.

அதே நேரம் அவர் கூறுகின்றார் "கேள்வி கேட்பவர்கள் எல்லாம் பிரமுகர்கள்" என்று நாம் கூறுவதாக. அவரின் பிரமுகர்தன "மார்க்சியம்" இவ்வாறு வேறு கண்டுபிடிக்கின்றது. இப்படி வலது இடது கடந்து, பிரமுகர்கள் எல்லாம் ஒரு அணியாக எம்மை எதிர்கொள்ள அங்குமிங்குமாக பாலம் போடுகின்றனர். புஸ்பராணியின் "அகாலம்" நினைவுக் குறிப்பில் கருணாகரன் முன்னுரை எழுதும் அளவுக்கும், பிரமுகர்கள் பரஸ்பரம் தமக்குள் கம்பளம் விரிக்கின்றனர்.

"கேள்வி கேட்பவர்கள் எல்லாம் பிரமுகர்க"ளா? இல்லை. இப்படிக் கூறுவது தான் உங்கள் அரசியலோ? நாங்கள் பிரமுகர் என்று யாரைக் கூறுகிறோம்? யாரெல்லாம் மக்கள் அரசியலை முன்வைக்காது, ஒரு அமைப்பாகாமல், அமைப்புக்காக வேலை செய்யவில்லையோ அவர்கள் எல்லாம் பிரமுகர்கள் தான். "கேள்வி கேட்டவர்க"ளை பிரமுகராக நாங்கள் என்றும் கருதுவதில்லை.

இப்படி இருக்க, எமது முன்னணிக்குள் இவற்றை மின்னூலாக்கியது "தவறு" என்று கேள்வி எதையும் என்றுமே கேட்காதவர், பேஸ்புக்கில் அதைக் கூறுகின்றார். நாங்கள் பிரமுகர் என்று குறிப்பிட்டு எழுதும் இவரின் கூட்டாளிகள் பற்றி, இன்றல்ல அன்று முதல் தான் எழுதுகிறோம். நீங்கள் உங்களையும் உங்கள் பிரமுகர்தனத்தையும் காப்பாற்றிக் கொள்ள, "சேகுவேரா இருந்த வீடு, மின் நூலாக தரவேற்றம்" என்பதன் பின்னால் ஒளித்து நின்று பேச முற்படுகின்றீர்கள். நாங்கள் நூலை "தரவேற்றி"யது தவறு என்கின்றீர்கள். நாங்கள் மின் ஏற்றிய 10000 ஆவணங்களையும், இந்தத் "தவறுடன்" தான் ஏற்றியிருக்கின்றோம். இங்கு எங்கள் நோக்கம் தவறானதல்ல. அதனால் இதை தவறல்ல என்கின்றோம். ஆக உங்கள் கண்ணோட்டப்படி "தவறு", என்றால், இந்த இணைய நூலகத்தை நாம் நிறுத்த வேண்டும் அல்லவா! சமூக அக்கறையில் உள்ள எவரும் இதைக் கோரமாட்டார்கள். இதை தவறு என்றும் கூறமாட்டார்கள்.

இதற்கு மாறாக உங்களைப் போன்ற பிரமுகர் போல், சமூக நோக்கற்ற செயல்பாட்டை மட்டும் செய்யக் கோருகின்றீர்கள். இந்த மின்நூலகத்தில் நூல்கள் ஏற்றுவது தொடர்பாகவும், இது போன்ற பிரச்சனைகள் வராதா என்று கேள்விகள் அமைப்பில் கேட்கப்பட்டு அமைப்பில் விவாதிக்கப்பட்டு இருக்கின்றது. இங்கு கேள்வி விவாதத்தில் யாரையும் நாங்கள் "பிரமுகராக" அப்போது கூறவில்லை. நீங்கள் அமைப்பில் இதைப் பற்றி கேள்வி எழுப்பி இருக்கவில்லை. உங்களுக்கு இது பற்றி மட்டுமல்ல, அமைப்புக்காக வேலை செய்வது பற்றி கூட அக்கறை எள்ளளவும் இருக்கவில்லை. அமைப்பு இவ்வாறானது போன்ற "பதிப்பகம்" "விற்பனை" "ஆட்சேபனை" போன்ற கோரிக்கைளின் போது, அந்த இணைப்புக்களை நீக்குவது என்ற முடிவை முன்கூட்டியே எடுத்து இருந்தது. ஆக இந்த பிரச்சனையை முன்கூட்டி நாம் விவாதித்திருக்கின்றோம்;, இதை தவறாக வரையறுத்தால், எதையும் நாம் மின் நூலாக்க முடியாது. இது "தவறு" என்று உங்களுக்கு கருத்து இருந்து இருந்தால், அதை அமைப்பில் எழுப்பி இருக்கவேண்டும். அந்த வகையில் "ஏழை படைப்பாளன், ஏழை பதிப்பாளன்" பற்றி சமூக அக்கறையுடன், அமைப்பில் முன்வைத்து அதற்காக முன்னின்று செயல்பட்டு இருக்க முடியும். ஒரு அமைப்புக்காக, அதன் அரசியலுக்காக செயல்பட முடியாத பிரமுகர் அரசியலை நடத்துபவர் நீங்கள். அப்படி இருக்க எப்படி "ஏழை படைப்பாளன், ஏழை பதிப்பாளன்" பற்றி முதலைக் கண்ணீர் தான் வடிக்க முடியும். நீங்கள் உங்கள் பிரமுகர்தனத்தை தொடர, அமைப்பு உதவும் என்று நம்பினீர்கள். அரசியலையும், அது சார்ந்த அமைப்பையும் மையப்படுத்தி இயங்குவதற்கு அப்பால், எந்த தனிநபருக்கும் எமது அமைப்பில் இடமில்லை.

"சேகுவேரா இருந்த வீடு, மின் நூலாக" பற்றி பதிப்பகத்தின் வேண்டுகோளை ஏற்று எமது முந்தைய முடிவுப்படி நாங்கள் அதை உடன் நிறுத்தி விடுகின்றோம். அவர்களின் தார்மீகமான நியாயத்தை நாங்களும் புரிந்துகொண்டு செயல்படுகின்றோம். சமூக நோக்கம் பற்றிய அவர்களுக்கும் எமக்கும் உள்ள இடைவெளியில் இதை புரிந்துகொண்டு, இதை நாங்கள் அணுகுகின்றோம். எமக்குப் பிறகு யோ.கர்ணன் தன் இணையத்தில் இருந்து நீக்கியதை நாங்கள் அவதானித்தோம். இணைப்பை அகற்றலின் பின்னான அவரின் நோக்கம் போல்தான் எங்களும் நோக்கமும் ஒன்றாக இருந்தது.

ஆனால் இதை வைத்து கலையரசன் பிரமுகர் பிழைப்பு அரசியல் செய்யத் தொடங்குவதை நாம் காண்கின்றோம். அமைப்பின் கருத்துக்காக வேலை செய்யாத ஒருவர், அமைப்புக்காக வேலை செய்யும்படி அமைப்பு வேண்டிக்கொண்ட நிலையில் எந்த நடைமுறையிலும் இல்லாதிருந்த ஒருவர், இந்த விடையத்தை இப்போது தூக்கி "தவறாக" காட்டிக்கொண்டு, தன்னை தற்காக்க திடீரென இணையத்தில் எமக்கு எதிராக காட்சியளிக்கின்றார். ஆச்சரியம் தான். இதை "தவறு" என்று ஒன்றைக் கூறி, அதன் பின் ஒளித்து நின்று எமக்கு கல் எறிகின்றார்.  என்னே அவரின் "அரசியல் நேர்மை".

நாம் "மின் நூலாக தரவேற்றம் செய்த"தை நீக்கிய போது "தவறு" என்ற கோணத்தில் இருந்து நீக்கவில்லை. இதே விடையம் போன்று, இதே நீக்கம் போன்று நாளை வேறு நூலுக்கு நடக்காது என்றில்லை. இதுதான் மின் நூலாக்கத்தை முன்னெடுக்கும் எமது சமூக அக்கறை முன்னுள்ள பொது எதார்த்தம். கலையரசனின் கண்டுபிடிப்பான இந்தத் "தவறு" தொடரும் என்பது, மின் நூலாக்கத்தின் பின் உள்ள அடிப்படை உண்மையாகும்.

"தவறு" பற்றி இனி கலையரசனின் பிதற்றல்களை குறிப்பாக ஆராய்வோம். யோ.கர்ணன் நூலை நாம் விமர்சனம் செய்தது "சேகுவேரா இருந்த வீடு, மின் நூலாக தரவேற்றம் செய்த தவறை நியாயப்படுத்த" தான் என்கின்றார் கலையரசன். இப்படி இதுவொரு முரண்பாடாக வெளிவருகின்றது. அவரின் இந்த பிரமுகர்தன இருப்பு அரசியலுக்காக "தவறு" இங்கு வலிந்து கண்டுபிடிக்கப்படுவது வெளிப்படையாகின்றது. வடலி பதிப்பகம், மற்றும் யோ.கர்ணனின் நோக்கம் அல்லது ஆட்சேபனை இதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.

"தவறை நியாயப்படுத்த" "ஏதாவது காரணம்" கண்டுபிடித்ததாகக் கூறும் கலையரசன், தன்னைப் போல், பிறரையும் யோசிக்கின்றார். அவர் தன்னையும் தன் இருப்பையும் நியாயப்படுத்த "ஏதாவது காரணம்" ஒன்றைக் கண்டுபிடிக்கின்றார். இந்த வகையில் "சேகுவேரா இருந்த வீடு, மின் நூலாக தரவேற்றம் செய்த தவறை நியாயப்படுத்தி ஏதாவது காரணம் சொல்லத் தானே வேண்டும்." என்று நூல் மீதான எமது விமர்சனத்தை "ஏதாவது காரணம்" என்கின்றார். வேடிக்கையான பிழைப்புவாத பிரமுகர்களின் நேர்மையற்ற பித்தலாட்டங்கள் இவை.

இந்த பித்தலாட்டத்தின் பின் மூன்று விடையங்களைக் காணமுடியும்.

1.மின் நூலாக்கம் செய்தது தவறு என்கின்றார்.

2.அந்த "தவறை நியாயப்படுத்த" விமர்சனம் செய்கிறோம் என்கின்றார்.

3.இது விமர்சனமல்ல, "ஏதாவது காரணம்" என்கின்றார்.

இப்படி வில்லங்கமாக, வில்லங்கத்தனமாக விளக்கம் கொடுக்கவும், தவறு கண்டுபிடிக்கவும் சில பின்னணி இருந்த போது, இதை மட்டும் நாம் பார்ப்ப்போம்.

நாங்கள் "மின் நூலாக தரவேற்றிய" தென்பது தவறு என்கின்றார். இதில் இருந்துதான் வெளிப்படையான குத்துக்கரணத்தை தொடங்குகின்றார். இந்த நூல் தரவேற்றி அடுத்தநாளே பதிப்பகத்தாரின் கருத்துகளை அடுத்து அதை நீக்கி இருந்தோம். அதை தரவேற்றியது "தவறு" என்ற அடிப்படையில் இருந்தல்ல. நாங்கள் சமூக நோக்குடன் தரவேற்றினோம். அவர்கள் வர்த்தக ரீதியாக இது அவர்களைப் பாதிக்கும் என்று கூறியதன் அடிப்படையில் அதை உடன் நீக்கினோம்.

நாங்கள் இதுவரை மின் நூலாக தரவேற்றியுள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட எதற்கும், சம்மந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெற்று இருக்கவில்லை. ஆகவே இதை தவறு என்று கூறுகின்றவர்களின் நோக்கம், மூடிமறைக்கப்பட்ட உள்நோக்கம் சார்ந்தது. அத்துடன் நாங்கள் விமர்சனத்துக்குள்ளாக்கிய எமது கருத்துக்கு உடன்பாடில்லாத யோ.கர்ணனின் நூலை அவசியம் கருதியே தரவேற்றினோம். வடலி பதிப்பகத்தை நட்டமடையச் செய்யும் உள்நோக்குடன் தான் இதை செய்தோமா சொல்லுங்கள்? வடலி பதிப்பகமோ, யோ.கர்ணனோ கூட இதை எமக்கு எதிராகச் சொல்லமாட்டார்கள். அமைப்பில் இருந்த ஒருவர் இணையத்தில் வந்து சொல்வது ஆச்சரியமளிக்கின்றது. எமது சமூக அக்கறையின் பால், தொடர்ச்சியாக தரவேற்றம் செய்யப்பட்டவற்றில் ஒன்று தான் இது. இந்த வகையில் இணைய நூலகத்தை வர்த்தகமல்லாத சமூக நோக்கில், சொந்த உழைப்பில் நடத்துவதையே தவறாகக் காட்டுவதை இங்கு காண்கின்றோம்.

"மின் நூலாக தரவேற்றம்" தொடரும். தன் நூலை அல்லது குறித்த பதிப்பகத்தார் ஆட்சேபித்தால் மட்டும் அதை நீக்குவோம். மற்றும்படி "மின் நூலாக தரவேற்றும்" "தவறை" தொடர்ந்து நாம் செய்வோம்.

இரண்டாவதாக "சேகுவேரா இருந்த வீடு, மின் நூலாக தரவேற்றம் செய்த தவறை நியாயப்படுத்த" நாம் அந்த நூலை விமர்சனம் செய்ததாக கலையரசன் கூறுகின்றார். இப்படி தன்னைப்போல் பிறரை யோசிக்கின்றார். உங்களைப்போல் நாங்கள் பிரமுகர்கள் அல்ல. அதற்காக அரசியலை பேசுபவர்கள் அல்ல நாங்கள். பிரமுகர்தனத்தை பாதுகாக்க வலது இடது கடந்து முதுகு சொறிவதும் கிடையாது.

போராடுவதையும், அதற்காக விமர்சனம் செய்வதையும் இன்று நேற்று அல்ல நீண்டகாலமாக செய்துவருபவர்கள். 2009 ஆண்டுகளுக்கு முன் புலியை விமர்சிக்காத உங்கள் நடத்தை போன்றோ, புலியல்லாத தளத்தில் பிரமுகர்களை விமர்சிக்காத சந்தர்ப்பவாதிகள் போல், எமது முன்னணிக்குள் அமைப்புக்காக எத்தளத்திலும் இயங்காது உங்கள் பிரமுகர்தன தனிநபர் தனத்துக்கு அமைப்பை பயன்படுத்த முனைந்ததுபோல் அல்ல நாங்கள். ஒரு அமைப்பாக இயங்க வைப்பதன் மூலம், கடந்தகால தனிநபர்களின் (என்னையும் சேர்த்து தான் கூறுகின்றோம்) தவறான நடத்தைகளை எல்லாம் களைய முனைந்தோம். இந்த வகையில் தான் நாங்கள் எல்லோரும் இயங்குகின்றோம்.

இங்கு யோ.கர்ணன் மீதான எமது விமர்சனம் கூட அவர் மறுபக்கத்தை நோக்கி வருதற்காகத்தான். முன்னாள் புலிபிரமுகர்களுடன் கூடி நிற்கும், அந்த பிழைப்புவாத போர் குற்றக் கூட்டத்துடன் கூடி கூத்தடிப்பதில் இருந்து விலகி மக்களை சார்ந்து நிற்க கோரும் அடிப்படையில்தான் இந்த விமர்சனம் கூட. புலிகளின் போர்க்குற்றவாளிகளையும், அடிமட்ட போராளிகளையும் நாம் வேறுபடுத்தியே அணுகுகின்றோம். மீண்டும் அவர்களுடன் கூடிக் கூத்தடிப்பற்கு எதிரான, அரசியல் விழிப்புணர்வைச் சார்ந்தது இந்த விமர்சனம். (புலிகளின் போர்க்குற்றவாளிகள் யார்? என்ற வெளிவரவுள்ள எமது கட்டுரை இதை மேலும் மிக விரையில் தெளிவாக்கும்;)

இந்த வகையில் "தவறை" மறைக்க "ஏதாவது காரணம்" என்று எமது விமர்சனத்தை இட்டுக்கட்டிக் காட்டுவது நகைப்புக்குரியது.

மூன்றாவதாக எமது விமர்சனம் "ஏதாவது காரணம்" என்று கூறுகின்ற "மார்க்சிய" பிரமுகரின் "அறிவும், நேர்மையும்" எம்மை புல்லரிக்க வைக்கின்றது. சரி யோ.கர்ணனின் அரசியல் தான் என்ன? அவரின் நோக்கம் தான் என்ன? நீங்கள் பிரமுகராக உலவ நீங்கள் பயன்படுத்தும் "மார்க்சியத்தை" பற்றி அவரும், அவரின் கூட்டாளிகளும் என்ன நினைக்கின்றனர்? மக்களுக்கு இலங்கை அரசு புனர்வாழ்வு அழிக்கும் இலக்கியம் எப்படிப்பட்டதாக இருக்கும்? யோ.கர்ணனின் இலக்கியம் அரசு புனர்வாழ்வு அழிக்கும் இலக்கியத்தில் இருந்து எப்படி வேறுபடுகின்றது. அறிவாளிகளே! சமூக அக்கறையாளர்களே!! அதையாவது கூறுங்கள்.

மூக்கால் அழுகின்ற "சமூக அக்கறை" தான் "ஒரு நூலில் அந்தப் படைப்பாளனின் உழைப்பு மறைந்திருக்கிறது. அதற்கான ஊதியத்தை பெற அவனுக்கு உரிமையுண்டு." என்கின்றது. ஆக என்ற பிழைப்பு அரசியல். முதலாளித்துவ வர்த்தக கண்ணோட்டம் சார்ந்து வெளிவரும் வக்கிரம். இன்றைய உலகமயமாதல் அறிவுடமை சட்டங்கள் அனைத்தும் மக்களை சுரண்டுவதை அடிப்படையாக கொண்டது. இந்த வகையில் இதற்கு எதிரானவர்கள் நாங்கள். "ஒரு நூலில் அந்தப் படைப்பாளனின் உழைப்பு மறைந்திருக்கிறது. அதற்கான ஊதியத்தை பெற அவனுக்கு உரிமையுண்டு." என்ற வக்கிரத்தின் கீழ் தான் நோய்க்கான மருந்துகள் இன்றி லட்சக்கணக்கானவர்கள் இன்று மரணிக்கின்றனர். "உழைப்பு"க்கு "ஊதியத்தை பெற அவனுக்கு உரிமையுண்டு" என்ற உண்மையை, சமூக அக்கறையில் ஈடுபடுபவனின் உழைப்பின் மேல் முதலாளித்துவ நோக்கை முன்வைத்து கோருவது, அந்த நோக்கத்தின் பால் உண்மையில்லை என்பதை தாண்டி இதற்கு விளக்கம் கிடையாது.

இங்கு யோ.கர்ணன் போராடியது, அவர் தன் காலை இழந்ததெல்லாம் "ஊதியத்தை" பெறும் நோக்கில் இருந்தல்ல. இப்படிப்பட்ட ஒருவர் மிகக்குறுகிய காலத்தில் ஊதியம் பெறும் நோக்கில் தன் படைப்பை படைத்தார் என்று கூறுவது எல்லாம் ஆச்சரியமானது. மலிவான உத்தி சார்ந்தது.

கலையரசன் மேலும் எழுதுகின்றார் " .."வர்க்க அரசியலில் உறுதியாக நிற்கும்" படிப்பகம், குறைந்தது ஆயிரம் பிரதிகளையாவது காசு கொடுத்து வாங்கி, இந்தியா, இலங்கையில் இருக்கும் நூலகங்களுக்கு அனுப்பி விட்டு, மின் நூலையும் வெளியிட்டு இருந்தால் பாராட்டலாம்" என்கின்றார். நல்லது வர்க்க அரசியல் என்பது இதைச் செய்வது தானோ? இந்த அடிப்படையில் தான் முன்னணியில் இருந்தீர்களோ!? பிரமுகர்களின் புத்தகங்களை போடுவதை தான், முன்னணியில் எதிர்பார்த்து காத்திருந்தீர்களோ! "வர்க்க அரசியல்" என்று நீங்கள் கருதுவது என்ன? அதைச் சொல்லுங்கள்? எங்களிலிருந்து மாறுபட்டு அதை எப்படி நீங்கள் முன்னெடுக்கின்றீர்கள்;? அதைச் சொல்லுங்கள்? சரி யார் பிரமுகர்கள்? உங்களில் இருந்து அவர்கள் எந்த வகையில் வேறுபடுகின்றனர்? சொல்லுங்கள்.

நாங்கள் வர்த்தகமல்லாத சமூக நோக்கில் இருந்து, ஆயிரத்தில் ஒன்றாக மின்நூலாக்கிய நூல் மீது, அதுவும் அவர்கள் ஆட்சேபித்த உடன் நீக்கியவர்கள். இந்த நிலையில் "ஊதியத்தை பெற அவனுக்கு உரிமையுண்டு" என்று கூறுகின்றவர்களின் குறுகிய உள்நோக்கம் கொண்ட வக்கிர கண்ணோட்டத்தையே இங்கு காண்கின்றோம். "புத்தகத்தை அச்சடித்து விற்பனை செய்யும் பதிப்பகம் கூட, மில்லியன் கணக்கில் இலாபம் சம்பாதிப்பதில்லை." என்று கூறுகின்ற, பதிப்பகங்களுடனான கூட்டை பார்க்கின்றோம். காலச்சுவடு போன்ற பக்காப் புத்தக வியாபாரிகளுடன் கூடி, புத்தகம் போடும் "மார்க்சிய" அரசியல் பிரமுகரல்லவா நீங்கள். இந்திய நூலகங்களுக்கான நூல் கோட்டாவுடன் கூடி கள்ளத் தொழில் செய்யும் வியாபாரிகளின் பின்புலத்தில் "மில்லியன் கணக்கில் இலாபம்" இன்றி இயங்குவதாக கூறுகின்றார் கலையரசன். என்ன பித்தலாட்டம். சமூக அக்கறையிலா நூலைப் போடுகின்றனர்?

"வடலி பதிப்பகம்" போன்றன காலச்சுவடு போன்ற பெரு வியாபாரிகளின் நூல் கோட்டா பின்னால் கூட்டுச் சதிகள் மூலம் நசுக்கப்படுகின்றவர்கள். "மில்லியன் கணக்கில் இலாபம் சம்பாதிப்பதில்லை." என்று கூறியபடி, காலச்சுவட்டுடன் கூட்டமைத்துக்கொண்டு கூறுகின்ற பிழைப்புத்தனத்தை இங்கு பார்க்கின்றோம். இங்கு பிரமுகர்கள் வியாபாரிகள் கூட்டுத்தான், நூல் வெளியீட்டுத் தொழிலாக இருக்கின்றது. இதில் இருந்து சமூக நோக்கிலான நூல் வெளியீடுகள் வேறுபடுகின்றது. பெரும் இலாபம் சம்பாதிக்கும் காலச்சுவடு உங்கள் நூலுக்கு ஊதியம் தந்ததா? அல்லது அதை சுரண்டியதா?

இப்படி இருக்க "மின் நூலாக இணையத்தில் வெளியிடுவதன் மூலம், ஏழை படைப்பாளன், ஏழை பதிப்பாளன், இரண்டு பேரினதும் வயிற்றில் அடிப்பது எந்த வகையான "புரட்சிகர மக்கள் அரசியல்" என்று தெரியவில்லை." என்கின்றார் கலையரசன். சமூக படைப்பாளி, சமூக பதிப்பாளன் பாத்திரத்தை பிரமுகர்களிடம் இம்மியும் இங்கு காணமுடியாது. பணம் சம்பாதிக்கும் வியாபாரியாக சிந்திக்கின்றவர்கள், "ஏழை படைப்பாளன், ஏழை பதிப்பாளன்" என்று அனைத்தையும் குறுக்கிவிட்ட நிலையில், சமூக நோக்கில் இருந்து இதை அணுகவில்லை என்பதை இங்கு காணமுடிகின்றது. "மின் நூலாக இணையத்தில் வெளியிடுவது" விற்பனையைப் பாதிக்கும் என்பது எதார்த்தம் புரியாதவர்களின் கற்பனைக் கண்டுபிடிப்பு.

"ஒரு புதிய நூலை வெளியே கொண்டு வரும் பொழுது, அதனை இலவசமாக இணையத்தில் விடுவது, ஒரு புதுப்படத்தின் திருட்டு சி.டி. வெளியிடுவது போன்றது." என்று கூறுகின்ற மலிவு அரசியலையே இங்கு காண்கின்றோம். இந்த இடத்தில் யோ.கர்ணன் "இலவசமாக படிக்க வழியேற்படுத்தி, இது புத்தக விற்பனையை ஊக்குவிக்குமென்றால்.... உண்மையில் எனக்கெதுவும் புரியவில்லை." என்ற கூற்றையும் சேர்த்துப் பார்ப்போம்.

இணைய மின் நூலகம், நூலகங்களுக்கும் இடையில் வித்தியாசம் எதுவும் இருப்பதில்லை. நூலகத்தில் புத்தகத்தை விலைக்கு வாங்காது, எடுத்துச் சென்று படிக்க முடியும். அது நூல் விற்பனையைப் பாதிக்கும் என்றால் மட்டும் தான், இணையத் தரவேற்றமும் பாதிக்கும். நூலகத்தில் புத்தகம் இருப்பதால் அந்த நூல் அங்கு வைத்து அறிமுகமாவதால் அதைத் தேடி வாங்க உதவுகின்றது. இதையே தான் மின் நூலகம் செய்கின்றது.

இணையத்தில் நூலை பார்வையிட முடியும். நூலை இணையத்தில் வைத்து தொடர்ந்து வாசிப்பது கடினமானது. மேலோட்டமாக அதை பார்க்கத்தான் முடியும். அதைப் படிக்க அதை பிரதியெடுக்கவேண்டும். அல்லது அதற்கே உரிய உபகரணத்தில் ஏற்றித்தான் இலகுவாக படிக்கமுடியும். வாசிப்பு பழக்கம் உள்ளவர்களுக்கு இது நன்கு தெரியும். ஆக நூலை மின்நூலாக்கம் பரந்தளத்தில் அறிமுகம் செய்கின்றது. படிக்கத் தூண்டுகின்றது. நூல்களை தேட வைக்கின்றது. அதை தேடி வாங்கக் கோருகின்றது. நூலகம் சிறிய வட்டத்தை மையப்படுத்தி இயங்கும் போது, மின்நூலகம் உலகம் தளுவிய அளவில் அதை அறிமுகம் செய்கின்றது. நூல் செல்ல முடியாத பிரதேசத்துக்குள் அது ஊடுருவிச் செல்லுகின்றது. விற்பனைக்குக் கூட அது பரந்தளவில் உதவுகின்றது. "ஏழைகளும் வாசிப்பதற்கு வசதியாகத் தான் நூலகங்கள் அவற்றை வாங்கி வைக்கின்றன." என்ற கூற்று நகைப்புக்குரியது. மின் நூலகம் பணக்காரருக்காக செய்கின்றோமா? நூலகத்தின் நோக்கத்தை, ஏழைக்கு நடத்தும் கஞ்சி தொட்டி நிலைக்கு ஓப்பிட்டு, எமக்கு எதிராக நூலகத்தின் நோக்கத்தையும் சேறடிக்கின்ற வக்கிரத்தைத்தான் இங்கு பார்க்கின்றோம்.

இப்படி இருக்க "புதுப்படத்தின் திருட்டு" "திருட்டு சி.டி." போன்றவற்றை ஒப்பிட்டுக் கூறுகின்ற பிரமுகர்தன நயசவஞ்சகத்தை இங்கு காணமுடியும். "புதுப்படத்தின் திருட்டு" "திருட்டு சி.டி." வர்த்தக ரீதியானது. இதையா நாங்கள் செய்தோம்!, செய்கின்றோம்!!

"சேகுவேரா இருந்த வீடு, மின் நூலாக்கி வெளியிட்ட படிப்பகம் எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறது என்று அறிய ஆவலாயுள்ளேன்." என்கின்றார் கலையரசன். இந்த நோக்கில் அமைப்பிற்கு பணம் கொடுத்தீர்களா!? அதை நாங்கள் தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றோம்!? இணைய நூலகத்தை பயன்படுத்தும் நீங்கள், அதற்காக உழைத்திருக்கின்றீர்களா என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்பபடுகின்றோம்;!? உங்கள் நூலை மின்நூலாக்க தந்தீர்களா என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்பபடுகின்றோம்!? இதை பயன்படுத்தும் நீங்கள், "ஏழை படைப்பாளன்", "ஏழை பதிப்பாள"னுக்கு உதவ என்று பணம் கொடுத்தீர்களா என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம்;!? இதை ஒரு கோரிக்கையாக கூட அமைப்பில் வைத்தீர்களா என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம்;!? எம்மிடம் இன்று இதை கேள்வியாக்குவது எப்படி? உங்களை நீங்கள் கேட்பது தான் இங்கு பொருந்தும்.

பி.இரயாகரன்

27.06.2012