கடந்தகால இயக்க நடத்தைகள், இயக்க புனைவுகள் சார்ந்தும், மக்களின் அவலங்கள் சார்ந்தும் யோ.கர்ணன் கதைசொல்வது ஏன்? சமூகம் மீதான அவரின் சமூகப் பார்வை தான் என்ன? இனவொடுக்குமுறைக்கு எதிரான அவரின் செயல்பாட்டுத்தளம் என்ன? புலிக்கு பின் எல்லா சந்தர்ப்பவாதிகளும், பிழைப்புவாதிகளும் புதிய முகமூடிகளுடன், மூடிமறைத்த தங்கள் நோக்கங்களுடன் களத்தில் இறங்குகின்றனர். இதை யோ.கர்ணனின் கதைகளிலும் காணமுடியும். அரசு வழங்கிய (சுய) "புனர்வாழ்வை" இந்த கதைகள் மூலம் இனம் காணமுடியும்.

கதைகளின் நோக்கம் மிகத் தெளிவானது. சமூக நோக்கு கொண்டவர்களை அரசியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபடுவதில் இருந்து அன்னியப்படுத்துவது தான். அதே நேரம் சமூக நோக்கு கொண்டவர்களை பற்றிய வெறுப்பை, மக்கள் மத்தியில் ஊட்டுவதுதான். இந்த வகையில் கதைகள் கடந்தகால இயக்கங்கள் நடத்தையை கருப்பொருளாக கையில் எடுத்து, மனித அவலங்களைக் காட்டி வெறுப்பை ஊட்டுகின்றது. யுத்தத்தின் பின் போராட்டத்துக்கு எதிரான பொது உணர்வுகளை, அரசியல் ரீதியாக வளர்ப்பதை அடிப்படையாக கொண்டதே இந்த "புனர்வாழ்வு" கதைகள். மக்களுக்கும் "புனர்வாழ்வு" அழிக்க இந்த கதைகள் மூலம் முனைகின்றது. அந்த நோக்கில் இவர்கள் எழுதுகின்றனர், எழுத வைக்கப்படுகின்றனர். போராட்டம் தவறானதா? இல்லை. மாறாக அதன் அரசியலும், அதன் சமூகப் பார்வையும், அதன் நோக்கமும் தான் தவறானதாக இருந்தது. இதை தங்கள் கதைகளில் கூறுவதை இவர்கள் மறுதலிக்கின்றனர். இந்த அடிப்படையில் விமர்சனம் சுயவிமர்சனத்தைக் கூட, இவர்கள் தங்களளவில் செய்ய மறுக்கின்றனர். இந்த அடிப்படையில் சமூகத்தை வழிநடத்தும் வண்ணம், சமூகப் பொறுப்புடன் இவர்கள் கதை சொல்லவில்லை.

மக்கள் அரசியல் ஈடுபடாமல் இருக்கும் வண்ணம், அப்படி ஈடுபடுபவர்கள் வெறுக்கும் வண்ணம் வெளியாகிய இலக்கியம் தான் "சேகுவேரா இருந்த வீடு" என்ற சிறுகதைத் தொகுப்பு. மக்கள் போராட்டத்தை வெறுக்க வேண்டும் என்பதே, கதை சொன்னவரின் நோக்கம். இதுதான் அரசின் நோக்கமும். புலியை இனப்படுகொலை மூலம் ஒழித்துக்கட்டிய பேரினவாதிகள், உளவியல் ரீதியாக போராட்ட உணர்வை ஒழித்துக்கட்டத் தொடங்கி இருக்கின்றனர். இதுபோன்ற இலக்கியம் இதிலிருந்து, இந்த உணர்வில் இருந்து வெளிவருகின்றது. பேரினவாதிகள் வழங்கும் "புனர்வாழ்வின்" அரசியல் சாரமே இதுதான்.

"சேகுவேரா இருந்த வீடு" இதை கச்சிதமாக துல்லியமாக செய்கின்றது. நாங்கள் யாருடனும் இல்லை என்று காட்டுவதன் மூலம்தான், இன்று இதை செய்ய முடியும். அரசு-புலி இரண்டையும், போராட்டத்துக்கு எதிரான கதைக்குரிய கருவாக்கிக் கொண்டு இது வெளிவருகின்றது. தம்மையும், தன்னையும் முன்னிறுத்தி, போராட்ட உணர்வுகளுக்கு நஞ்சிட முனைகின்றது.

அரசு-புலிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை சாராத அதற்கு எதிரான இலக்கியம். அந்த வகையில் தான் யோ.கர்ணனின் சிறுகதை தொகுதியான "சேகுவேரா இருந்த வீடு" வெளியாகி இருக்கின்றது. பல்வேறு அரசியல் பின்புலங்களை கருப்பொருளாகக் கொண்ட சிறுகதைகள். இந்தக் கதைகள் உண்மைகளையும், கடந்த காலத்தில் கட்டமைத்து உசுப்பேற்றிய அரசியல் பொய்களையும் கலந்த, விறுவிறுப்பு கொண்ட மர்மக் கதைகளாக மாற்றி இருக்கின்றனர். அதை சந்தைக்குரிய, பிரமுகருக்குரிய பொருளாக்கி இருக்கின்றனர். நடந்த மனித அவலங்களையும், உரிமைக்கான போராட்டங்களையும் உணர்ச்சியற்ற சிதைவாக்கி முன்வைக்கின்றது. போராட்டங்கள் மீதான வெறுப்பை ஊட்டி வளர்க்கின்றனர்.

போராட்டத்தை விமர்சிக்காது சுயவிமர்சனம் செய்யாது அதை தவறாக காட்டுகின்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர். கடக்கால உண்மைச் சம்பவங்களை கொண்டு அதைச் செய்ய முனைகின்றனர்.

புலிகள் இருந்த வரை அதனுடன் பயணித்தவர்கள், புலி பற்றிய மாயை விம்பங்களை படைப்பாக்கியவர்கள். விறுவிறுப்பு கொண்டதாக, மர்மம் கொண்டதாக, உண்மை பொய் கற்பனையை கலந்து உசுப்பேற்றியவர்கள் வரிசையில் யோ.கர்ணன் ஒருவர். இந்த வகையில் இயங்கிய நிலாந்தன், கருணாகரன் போன்றவர்களின் துணையுடன், அவர்களின் ஆசியுடன் இந்த சிறுகதைத் தொகுதி வெளியாகி இருக்கின்றது.

புலிகள் இல்லாத இடத்தில், "புனர்வாழ்வு" சுய "புனர்வாழ்வு" பெற்று இன்று இடமாறி கதை கருத்து சொல்லுகின்றனர். புலி மட்டுமல்ல மற்றைய இயக்கங்களின் நடத்தையை தம் கருப்பொருளாக கொள்வதன் மூலம், இவர்கள் போராட்டத்தையும் போராடுவதையும் தவறாக இட்டுக் காட்ட முற்படுகின்றனர். இவர்களின் பிரமுகத்தன அரசியல் இருப்பு சார்ந்த சுய அடிப்படையும், இதனடிப்படையில் தான் இயங்குகின்றது. இது போராடுவது உட்பட, அனைத்தையும் தவறாக காட்டுகின்றது.

இந்த சிறுநாவல் ஒன்றில் டக்கிளஸ்சைக் குறிக்கும் வண்ணம், தன் சித்தியை அவர் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக கூறுகின்றார். இந்த நிலையில் நிலாந்தன், இந்த நூல் ஆசிரியர் பற்றி இதே நூலில் "தமிழ்த்தேசியத்தின் ஜனநாயக மற்றும் தார்மீக அடித்தளத்தைப் பலப்படுத்து"கின்றது என்கின்றார்.

டக்கிளஸ் கும்பல் கொலைகார கூலி குழுவாக இயங்கும் அரச பிரதேசத்தில் இருந்து, இப்படி எழுதவும் கூறவும் முடிகின்றது என்றால், எப்படி? ஆம் இதற்கு பின்னால் போராட்டத்தை வெறுக்கக் கோரும் (சுய) "புனர்வாழ்வு" அரசியல் தான் இதை அனுமதிக்கின்றது. அண்மையில் கோத்தபாய டக்கிளஸ்சுக்கு பதில் வடக்கில் புதிய தலைமையைக் கோரியதும் இந்த அடிப்படையில்தான். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள போராட்ட உணர்வை சிதைக்கும் வண்ணம், இவர்கள் இயங்க வைக்கப்படுகின்றனர். புலிகளுடன் இருந்த வரை புலியை முன்னிறுத்திய மக்கள் போராட்டத்தை சிதைக்கும் எழுத்தைப் படைத்தவர்கள் இவர்கள். இன்று போராட்டத்தை வெறுக்க வைக்க, டக்கிளஸ் முதல் பிரபாகரன் வரை கதைக்குரிய பொருளாகின்றனர்.

நாங்கள் அரசுடன் இல்லை புலிகளுடன் இல்லை என்று காட்டிக்கொண்டு அதை விமர்சிப்பதன் மூலம், போராட்டம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற இயல்பான மனிதனின் போராட்ட உணர்வை சிதைக்கும் அரசியலை அடிப்படையாகக் கொண்டு படைப்புகள் வெளிவருகின்றது. இதுதான் வடக்கு கிழக்கில் நிலவும் சுதந்திரத்தின் அளவுகோல் கூட.

இந்தவகையில் போராட்டங்களுக்கு எதிரான உணர்வை வளர்ப்பதில் கூட, அரசு மிகத் திட்டமிட்டு இதன் பின் இயங்குவதை அவதானிக்க முடிகின்றது. தமிழ் சமூகத்துக்கே போராட்ட உணர்வுக்கு எதிரான "புனர்வாழ்வை" அழிக்க முற்பட்டு இருப்பதை, இந்தக் கதைகள் எடுத்துக் காட்டுகின்றது. அரசு மற்றும் புலிக்கு எதிரான தளத்தில் இதை செய்கின்றது. இந்த வகையில் ஆளும் வர்க்க கருத்தியல் போக்குடன், கம்யூனிச வெறுப்புடன் இந்த சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றது.

மார்க்சிய எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட, போராட்ட மறுப்பு கோட்பாட்டாலானது. "சேகுவேரா இருந்த வீடு" என்ற தலைப்பில் உள்ள கதைக்குரிய கரு, தாடி வைத்திருந்த சேகுவோராவை அடையாளப்படுத்தி சேறடிக்கின்றது. கருணாகரன் "யோ.கர்ணன் என்னும் சாட்சி" பற்றி குறிப்பிட்டு 20.08.2010 யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதுகின்றார் "ஸ்ராலினின் இரும்புச் சப்பாத்துக்க்கால்களுக்குள்ளிருந்து உண்மைகளைக் காப்பாற்றிய அன்னா அக்மதோவாவை சனங்கள் எப்படி அடையாளங்கண்டு கொண்டார்கள் என்பதும் சியோனிஸ்ருகளின் அபாயவலைகளுக்குள்ளால் மிகக் கடினப்பட்டு உண்மைகளோடு பயணித்த அடோனிஸையும் நிஸார் கப்பானியையும் எப்படி மக்கள் அரவணைத்துக் கொண்டார்கள் என்பதையும் புரிந்து கொண்டால் இதையும் எளிதிற் புரிந்து கொள்ளலாம்." என்கின்றார்.

இப்படிதான் தம்மை கம்யூனிசத்துக்கு எதிரான, சியோனிஸ்ருகளுக்கு எதிரான மேற்கத்தைய ஏகாதிபத்திய ஜனநாயகவாதிகள் போல் தாங்களும், என்கின்றனர். அதே நேரம் தாங்கள் புலி மற்றும் அரசுக்கு எதிரான, அதேநேரம் போராட்ட எதிர்ப்புடன் பயணிக்கின்றனர்.

இந்தவகையில் இந்த ஆளும் வர்க்கத்தின் கருத்தியல் நோக்கோடு வெளியான சிறுகதைகள் இது. கடந்தகால சம்பவங்களை விறுவிறுப்பான மர்மக் கதையாக பரபரப்புக்குள்ளாக்கி தருகின்றது.

புலிகளின் பின் நீடித்த கற்பனையான சமூகப் பிரமிப்புக்களை மீள உசுப்பேற்றி, போராட்டத்தை வெறுக்க வைக்கின்ற உத்தி கையாளப்படுகின்றது. எந்தவிதமான சமூக நோக்கமுமற்ற, தங்கள் பிரமுகர்தனத்தை தக்கவைக்கும் பின்புலத்தில், அறிவு சார்ந்த பிழைப்புத்தனத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள் சூழலுக்கு ஏற்ப நக்கிப்பிழைத்து இயங்குகின்றனர். இவர்கள் "புனர்வாழ்வு" பெற்ற அடிப்படையில் நின்று மர்மக் கதையாக்கி இதைச் சொல்லுகின்றனர்.

பி.இரயாகரன்

21.06.2012