உலகெங்கும் பரந்து வாழும் பலவேறுபட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பணி மிகப்பெரியது. தனிமனித விருப்பு வெறுப்புக்களுக்கப்பால், ஊடகத்தின் அடிப்படை நியதிகளையும் விட்டு விலகாது ஒரு செய்திக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைப் பொறுத்து அதன் உள்ளடக்கத்தையும், தரவுகளையும் கொண்டு செல்வது ஊடகங்கள்தான். ஆனாலும், ஒரு சில ஊடகங்களைத் தவிர, பெரும்பாலான ஊடகங்கள் வியாபாரத்தையே நோக்கமாகக் கொண்டிருப்பதால் போட்டி மனப்பான்மை தானாகவே வந்து விடுகிறது. அச்சு ஊடகங்கள் போன்று செய்தியை முந்தித் தருவது யார் என்று இன்றைய இணைய யுகத்தில் போட்டி போட முடியாது. ஆகவே அதிகமான தகவல்களையும், மேலதிக விபரங்களையும் யார் தருவது என்பதில் இணைய ஊடகங்கள் போட்டி போடுகின்றன.
ஒரு செய்தியை அல்லது கட்டுரையை, விமர்சனத்தை எழுதுகையில், தங்களால் வழங்கப்படும் மேலதிக விபரங்கள் அல்லது தகவல்கள் யாருக்குச் சாதகமானவை? யாருக்குப் பாதகமானவை? என்பது பற்றியெல்லாம் ஊடக வியாபாரிகள் ஒரு போதும் சிந்திப்பதில்லை.
வியாபார நோக்கம் கொண்ட ஊடகங்கள் மட்டுமல்லாமல் சமூக அக்கறையோடு செயற்படுகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட தங்களுடைய கையில் ஊடகத்தைத் தங்கள் கையில் உள்ள அதிகாரமாகவே பாவிக்கின்றனர்.
போட்டி மனப்பான்மை, தனிமனிதனைப் பழிவாங்கல் என ஊடகங்களால் வழங்கப்படும் அதி கூடிய தரவுகளால் பாதிக்கப்படும் தனி மனிதர்கள் பற்றியோ அவர்கள் சார்ந்த குடும்பங்கள் பற்றியோ ஒருபோதும் இவர்கள் சிந்திப்பதில்லை. இவ்வாறன செயற்பாடுகள் திட்டமிட்ட ஒரு கொலைக்குச் சமானமாகும்.
சனநாயகத்தின் நான்காவது தூணாக வர்ணிக்கப்படும் ஊடகங்கள் சனநாய மறுதலிப்புடன் எவ்வாறான செய்திகளை வெளியிடுகிறது என்பதையே இங்கு பார்போம். தமக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்று காட்டிக் கொள்வதில் மட்டும் அக்கறை கொள்ளும் இவர்களால், பாதிக்கப்படுவது யார்? பலனடைவது யார் என்று நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
செய்தி 1
உதயகாந்தன் 2000 ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி அரபு நாடொன்றுக்கு சென்றிருந்தவர். 2002ம் ஆண்டு காலத்தில் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் போது நாட்டுக்கு திரும்பிய இவர் தன்னை ஒரு புகைப்பட கலைஞனாக மாற்றிக் கொண்டவர்.
"கொழும்பில் தமிழர் ஒருவரின் சடலம் மீட்பு" என்ற தைலைப்பின் கீழ் வெளியான செய்தி:
"கொழும்பில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் லெ.கேணல் கௌசல்யனின் மெய்ப்பாதுகாவலராகப் பணியாற்றியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டி தேசிய பாடசாலை ஒன்றின் முன்பாக கொலை செய்யப்பட்டு அனாதரவாக விடப்பட்ட சடலம் பின்னர் அவரது தந்தையாரால் நேற்று அடையாளம் காட்ட்டப்பட்டுள்ளது.
இவர் மட்டக்களப்பு, கல்லாறைச் சேர்ந்த 38 வயதான கணபதிப்பிள்ளை உதயகாந்தன் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2004ம் ஆண்டு வரை புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் கௌசல்யனின் மெய்காவலராக பணியாற்றியவர். இதன்பின்னர் பிரித்தானியாவுக்குச் சென்று குடும்பத்துடன் வசித்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கொழும்பு திரும்பிய இவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் முகவராகத் தொழிற்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட பின்னர் இவரது சடலம் பம்பலப்பிட்டியில் வீசப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்."
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/78287/categoryId/2/language/ta-IN/-2-----.aspx
மேற்படி செய்தியில் "புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் லெ.கேணல் கௌசல்யனின் மெய்ப்பாதுகாவலராகப் பணியாற்றியவர்" என்ற தரவுகளைக் கொடுப்பது இறந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது சுற்றத்திற்கும் அரசியல் அச்சுறுத்தல்களாக இருக்கப் போவதைத் தவிர செய்தி படிப்பவர்களுக்கு கிடைக்கப் போவது என்ன? இந்த இடத்தில் உயிரோடிருப்பவர்கள் எதிர்கொள்ளப் போகும் பிரச்சினகள் செய்தியை வெளியிட்ட ஊடகங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.
இது மட்டுமல்லாமல், இறந்தவர் தனிநபர் என்று பார்க்காமல் புலியோடு தொடர்பு படுத்தி, கொல்லப்பட்டது புலி தானே என்று கொலைக்குச் சாயம் பூசி மூடி மறைத்து விடலாம்.
இந்த தகவல்களை பொலீஸ் மூலமாகத்தான் பெற்றோம் என்று இதைப் பிரசுரித்தவர்கள் கூறுவார்களாக இருந்தால் செய்தியாளர்களுக்கும் அவர்களின் ஊடகங்களுக்கும் உள்ள பொறுப்பு கேள்விக்குள்ளாகிறது.
செய்தி 2
சில வருடங்களுக்கு முன் ஊடறு இணையத்தளத்தில் பெண்கள் பெயரில் ஆண்கள் கவிதை எழுதியது பற்றிய விவாதம் இடம்பெற்றது.
http://udaru.blogdrive.com/archive/524.html
அந்த விவாதத்தில் ஆண்கள் பெண்பெயர்களில் கவிதை எழுதியுள்ளார்கள் என்ற விமர்சனத்தையும் தாண்டி, பெண் பெயரில் எழுதியவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டு தமது துப்பறியும் மேதாவித்தனத்தைக் காட்டியிருந்தனர். இந்த விவாதம் நடைபெற்ற நேரத்தில் இவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் இலங்கை அரசினதும், புலிகளினதும் அதிகார மற்றும் வன்முறைச் சூழலுக்குள் இருந்தனர்.
இந்த நிலமையில் அவர்களை அடையாளம் காட்டுவது போட்டுக் கொடுப்பது என்பதாக இவர்களது ஊடக அதிகாரம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டப்பட்டு வந்த விமர்சனங்களுக்கும் தாம் செய்தது முற்போக்கானது என்பதே இவர்கள் பதிலாக இருந்தது.
விமர்சனங்களைத் தாண்டி மேலதிக விபரங்களைக் கொடுப்பது அதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு உயிராபத்தைக் கூட ஏற்படுத்தலாம் என்ற மிகச் சிறிய உண்மையைக் கூட கண்டு கொள்ளவில்லையென்றால் இப்படியானவர்களது சமூக அக்கறை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
செய்தி 3
"புலத்தில் மகிந்தருக்கு எதிராக போராட்டம்- யாழ் மாணவர்களால் யாப்புக்கள் தீக்கிரை" என்ற தலைப்பிடப்பட்ட செய்தியில்,
"மாணவர்களது இப்போராட்டம் பாதுகாப்பு அச்சறுத்தல்களின் மத்தியில் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதி தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து தற்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளது நடமாட்டங்கள் முடங்கிப்போயுள்ளன.
இந்நிலையில் தம்மை அடையாளப்படுத்த விரும்பாதவர்களாகவே மாணவர்களில் ஒரு அணியினர் இன்றைய போராட்டத்தையும் நடத்தியிருந்தனர். தொழில்நுட்பக்கல்லுரி மற்றும் நகர முன்னணி பாடசாலைகளின் மாணவர்கள் அணியினரும் இவர்களுள் உள்ளடங்கியிருந்ததாக கூறப்படுகின்றது" என்று தொடருகிறது.
http://tamilarulakam.com/2012/06/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%
AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95/
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினதும், அரச புலனாய்வுப் பிரிவினதும் மறைமுகமானதும் நேரடியானதுமான நெருக்குதல்களின் மத்தியில் மாணவர்கள் இருக்கின்ற சூழ்நிலையில், ஊடகங்கள் 'தொழில்நுட்பக்கல்லுரி மற்றும் நகர முன்னணி பாடசாலைகளின் மாணவர்கள்' என தகவல்களை வழங்குவது யாருக்காகவென்று தெரியவில்லை.
இதனால் எதிர்காலத்தில் இராணுவத்தினாலோ அல்லது அரச புலனாய்வுத்துரையினராலோ குறி வைக்கப்படப் போவது இம் மாணவர்கள்தான் என்பதை கருத்திற் கொள்ளாமலோ அல்லது வேண்டுமென்றுதான் இப்படிச் செய்கிறார்களோ தெரியவில்லை.
எது எவ்வாறிருப்பினும் இங்கே உதாரணகளாக எடுக்கப்ப்பட்ட மூன்று செய்திகளும், மூன்று ஊடகங்களும் தங்களுடைய நலன்களுக்காக ஒரே நேர் கோட்டில் சந்திக்கின்றன. வெவ்வேறு பாணியில் இடம்பெறும் "காட்டிக்கொடுப்பு" இங்கே சமூக அக்கறையாகவும், ஊடக தர்மமாகவும் விற்பனையாகிறது.
கனகமணி
19.06.2012