தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதலைக் கண்டித்து ரொறன்ரோவில் (கனடா) மே 6, 2012 நடைபெற்ற கூட்டத்தில் ரகுமான் ஜான் ஆற்றிய உரையெனக் கூறி "தம்புள்ள விவகாரமும் அதன் பின்னுள்ள அரசியலும்" என்ற தலைப்பில் "தேசம் நெற்" இணையத்தளம் உட்பட பல இணையத்தளங்களில் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இக்கட்டுரையை எழுத்து வடிவத்திற்கமையவும் நண்பர்களது (?) கோரிக்கைகளுக்கு இணங்கவும் சில அம்சங்களை உள்ளடக்கும் விதத்தில் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இக்கட்டுரையின் மூலம் "தம்புள்ள விவகாரமும் அதன் பின்னுள்ள அரசியலும்" இனங்காணக் கூடியதாக உள்ளதோ இல்லையோ ரகுமான் ஜானையும் அவர் பின்னுள்ள அரசியலையும் இனங்காண முடிகிறது.

கடந்தகாலத்தில் தன்னை ஒரு "இடதுசாரி" எனக் கூறி ஈழவிடுதலைப் போராட்டத்துடன் இனம் காட்டியிருந்த, தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அனைத்தையும் தமிழ்த் தேசியத்தின் பாலான செயற்பாடுகள் என விளக்கமளித்திருந்த ரகுமான ஜான், இப்பொழுது முஸ்லீம் மக்கள் மேல் கரிசனை கொண்டவராக முஸ்லீம்கள் குறித்தும் பேசுகிறார்.

மே 6, 2012 ரொறன்ரோவில் நடைபெற்ற கூட்டத்தில் அதில் சமூகமளித்தவர்கள் மத்தியில் ஜனநாயகமறுப்பை அரங்கேற்றியிருந்த ரகுமான் ஜானும் அவரது வாரிசுகளும் கூட்டத்தில் நடைபெற்ற ஜனநாயக மறுப்புக் குறித்துப் பேசுவதை தவிர்த்து முஸ்லீம் மக்கள் குறித்து கவலை கொள்வதாக பாசாங்கு செய்கின்றனர்.

மே 6, 2012 நடைபெற்ற கூட்டத்தின் வீடியோ பதிவை வெளியிட்டாலே போதும் இவர்களது போலித்தனங்கள் அனைத்தும் அரங்குக்கு வந்துவிடும். அதை விடுத்து கனடாவில் மட்டுப்படுத்தப்பட்ட நண்பர்களுடன்(?) இரகசியக் கூட்டங்களை நடத்தி தனது ஜனநாயக மறுப்புக்கு நியாயப்படுத்தல்களை முன்வைப்பதன் மூலமோ அல்லது சதி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலோ எந்தப் பயனும் விளையப்போவதில்லை. ஈழவிடுதலைப் போராட்டத்தின் கடந்தகால தவறான போக்குகள், அதில் தனது தவறுகள் குறித்து வெளிப்படையாகப் பேசுவதற்கு தயாரற்றிருக்கும் ரகுமான் ஜான், "சிங்கள தேசிய வாதிகள்", "சிங்கள பௌத்த பேரினவாதிகள்" குறித்துப் பேசுவதுடன் "தமிழ் - முற்போக்கு ஜனநாயக சக்திகளிடம் இஸ்லாமிய வெறுப்பு வெளிப்படுவதாக"வும் புதிய கண்டுபிடிப்பொன்றை முன்வைத்துள்ளார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ரகுமான் ஜான் பங்கேற்ற போது சிங்கள இடதுசாரிகள் அனைவரையும் (தீப்பொறிக் குழுவில் இணைய விரும்பிய சுனிமெல் உட்பட) இனவாதிகள் என முத்திரை பதித்த ரகுமான் ஜானின் "தமிழ் முற்போக்கு ஜனநாயக சக்திகள்" குறித்த கருத்து வியப்புக்குரியதொன்றல்ல. ஆனால் இடதுசாரியத்தில் இன்னமும் ஊன்றி நிற்பதை வாசகர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு கார்ல் மார்க்சையும், கிராம்சியையும் கூட அவ்வப்போது மேற்கோள் காட்டி துணைக்கு அழைத்துக் கொள்கிறார் ரகுமான் ஜான்.

ரகுமான் ஜானின் இந்தக் கட்டுரையின் ஆரம்பம் முதல் முடிவுவரை இடதுசாரியத்துக்கும் ரகுமான் ஜானுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதை எடுத்துக் காட்டியுள்ளது. தேசிய இனப்பிரச்சனை குறித்த இடதுசாரிய நோக்குநிலையிலிருந்தல்லாத–வர்க்கக் கண்ணோட்டமற்ற – குறுகிய இனவாத அடிப்படையிலான அல்லது பிரிவினைவாத கருத்துக்கள்தான் ("பல்தேச நாடு", "தேசங்களுக்கிடையிலான உறவு"....) ரகுமான் ஜானின் கட்டுரையிலிருந்து துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கின்றன. "முன்னேறிய பிரிவினர்" என்ற குகைக்குள் இருக்கும் இந்தப் போலி "இடதுசாரி", இடதுசாரியத்துக்கு எதிரான கருத்துக்களையே தனது கட்டுரையின் ஆரம்பம் முதல் இறுதிவரை விதைத்து வைத்துள்ளார்.

 

"இலங்கையின் தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது என்று வரும்போது, எமது அக்கறைகளை வெறுமனே தலைமையில் இருக்கும் தனிநபர் பற்றிய விடயமாகக் குறுக்கிக் கொள்ளாமல் …. அதனை முகம்கொடுப்பதற்கு தொலைதூரப் பார்வையும், அதற்கான அரசியல் விருப்பும், தைரியமும் சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் இருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும். இது இருக்குமானால் அரசியல் தீர்வு பற்றி நாம் எங்கும் தேடியலையத் தேவையில்லை" என்று கூறுகிறார் ரகுமான் ஜான். தேசிய இனப்பிரச்சனை குறித்து இத்தகைய மோசமான பார்வையைக் கொண்டிருக்கும் ஒருவர் அதை இடதுசாரியத்தின் பேரில் முன்வைக்கிறார். இதுதான் ரகுமான் ஜானுடைய தேசிய இனப்பிரச்சனை குறித்த "முன்னேறிய" இடதுசாரிக் கருத்தாக அமைகிறது. "இலங்கையின் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதென்று வரும்போது எமது அக்கறைகளை வெறுமனே தலைமையில் இருக்கும் தனிநபர்கள் பற்றிய விடயமாக குறுக்கிக் கொள்ளக் கூடாது" என்று கூறும் ரகுமான் ஜான், அதனை முகம் கொடுப்பதற்கு "தொலைதூரப் பார்வை"யும் அதற்கான "அரசியல் விருப்பும் தைரியமும்" சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்" என்கிறார். ஆக "தொலைதூரப் பார்வையும், அதற்கான அரசியல் விருப்பும், தைரியமும் சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் இருக்க வேண்டும்". இவை அனைத்தும் இருக்குமேயானால் அரசியல் தீர்வுபற்றி நாம் எங்கும் தேடி அலையத் தேவையில்லை. "முன்னேறிய பிரிவை"ச் சேர்ந்த "இடதுசாரி" அரசியல்வாதியென இன்னமும் கூறிக்கொள்ளும் ரகுமான் ஜானின் தேசிய இனப்பிரச்சனை குறித்த தெளிவான கண்ணோட்டம் இதுதான். இதன் மூலம் இனரீதியாக ஒடுக்கப்படும் இலங்கை வாழ் மக்களுக்கு – சிறுபான்மை இன மக்களுக்கு – தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வென்னவெனில் இன்றைய அரச அமைப்புமுறைக்குள்ளேயே தேசிய இனப்பிரச்சனைக்கான நிரந்தரமான தீர்வைக் கண்டுகொள்ள முடியும் என்பதாகும். இதற்குத் தேவைப்படுவதெல்லாம் "தொலைதூரப் பார்வையும் அதற்கான அரசியல் விருப்பும், தைரியமும் சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் இருக்கிறதா" என்பதைப் பொறுத்துத்தான் உள்ளதேயொழிய இனவாதத்திற்கெதிராக சிங்கள-தமிழ்-முஸ்லீம் மக்கள் மத்தியிலிருக்கும் முற்போக்கு-ஜனநாயக சக்திகளும் உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியமில்லை என்று கூறுகிறார். இத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை.

"இலங்கையானது ஒரு பல்தேசநாடு என்பது ஏற்றுக்கொள்ளப்படுமானால் இத்தேசங்கள் தமக்கிருக்கும் அதிகாரங்களை சமமாக பகிர்ந்து கொள்வது பற்றி நாம் பேசித் தீர்த்துக்கொள்ள முடியும்" என்கிறார். இலங்கை ஒரு பல்லின மக்களைக் கொண்ட நாடல்ல மாறாக "ஒரு பல்தேச நாடு" என்று இதுவரை காலமும் யாரும் அறிந்திராத வியக்கத்தக்க புதியதொரு விடயத்தை முன்வைக்கும் ரகுமான் ஜான் "இலங்கையில் வாழும் பல்வேறு தேசங்களுக்கிடையிலான பிரச்சனையாகும்" எனக்கூறி "இதனை அனைத்துத் தேசங்களைச் சேர்ந்த மக்களும் புரிந்துகொண்டு பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டும்" என்று ஆலோசனை வழங்குகிறார். இங்கு தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு வெறும் "புரிதல்" பற்றிய பிரச்சனையாக ரகுமான் ஜானுக்கு மாறிவிடுகிறது. "சிங்கள அரசியல் தலைமைக்கு போதிய மனோதைரியமும், சமத்துவம், ஜனநாயகம் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தால் … தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வை மாகாண, பிரதேச, சமஷ்டி மற்றும் கூட்டாட்சி போன்று வடிவங்களில் இலகுவாக தீர்வு" காண முடியுமாம். அப்படி இல்லாதபோது " ஒடுக்கப்படும் மக்கள் தமக்கான விடுதலையை தம்முன்னுள்ள அத்தனை சாதனங்களையும் பயன்படுத்தி அடைந்தே தீருவர். இதற்கு முஸ்லீம் சமூகமும் விதிவிலக்காக அமையமாட்டாது" என்கிறார். இத்தகைய கருத்துக்களையெல்லாம் ரகுமான் ஜான் இடதுசாரியத்தின் பேரால் நியாயப்படுத்துகிறார். அனைத்து ஒடுக்கப்படும் மக்களின் முற்போக்கு – ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்துப் போராடுவதற்குப் பதிலாக "இலங்கையில் வாழும் பல்வேறு தேசங்கள் பற்றியும் அத்தேசங்கள்" தமக்கான விடுதலையை தம்முன்னுள்ள அத்தனை சாதனங்களையும் பயன்படுத்தி அடைந்தே தீருவர்" என்றும் "இதற்கு முஸ்லீம் சமூகமும் விதிவிலக்காக அமைய மாட்டாது" என்றும் கூறும் அதேவேளை இலங்கையில் "பல்வேறு தேசங்கள்" என்ற புதிய "இடதுசாரிய" கண்டுபிடிப்பையும் எமக்குத் தந்துள்ளார். "இடதுசாரி" எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் ரகுமான் ஜான், பல்வேறு இன மக்களை ஒன்றிணைத்து இன ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடும்படி அழைப்புவிடுப்பதற்குப் பதிலாக அவர்களை செயற்கையாக "தேசங்களாக" பிரித்துக்காட்டி இனவாத அரசியலுக்குள் தீவிரமாகச் செயல்படுகிறார். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஒன்றுபட்டுப் போராடவிடாமல் இன ரீதியாகவும் மதரீதியாகவும் பிரித்து வைப்பதன் மூலம் "இடதுசாரிய"த்தின் பேரால் ஆளும் வர்க்கங்களுக்கு சேவை புரிகின்றார்.

ரகுமான் ஜானின் போதனைகள் தொடர்கின்றன. "தமிழ் முற்போக்கு சக்திகள் இப்படிப்பட்ட தேசிய ஒடுக்குமுறை செயற்பாடுகளை நிபந்தனை இன்றி கண்டிக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட செயற்பாடுகள் நடைபெறும்போது அவை தமது அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு சாதகமாக இருக்கிறதா இல்லையா எனக் கணித்து அதற்கேற்ப கண்டிப்பது அல்லது மௌனம் சாதிப்பது என்பது நேர்மையான நடைமுறையாக மாட்டாது." என்கிறார். "தமிழ் முற்போக்கு –ஜனநாயக சக்திகள் … தமிழ் முஸ்லீம் தேசங்களிடையே முறுகல் ஏற்படுவதற்கு காரணிகள் மீது… அக்கறைகளைக் குவிக்கவேண்டிய காலம் இதுவாகும்" என்கிறார். நீண்ட காலமாக ஹோமா நிலையிலிருந்த ஒருவர் அந்நிலையிலிருந்து மீண்டு விழித்தெழுந்து ஏனையவர்களுக்கு அறிவுரை சொல்வது போன்றதற்கு ஒப்பாக இருக்கிறது ரகுமான் ஜானின் கருத்துக்கள்.

தமிழ் முற்போக்கு ஜனநாயக சக்திகள் "தமிழ் -முஸ்லீம் தேசங்களிடையே முறுகல் நிலை ஏற்படுவதற்கான காரணிகள் மீது" அல்ல, தமிழ் -முஸ்லீம் மக்களுக்கிடையில் "முறுகல் நிலை ஏற்படுவதற்கான காரணிகள் மீது" தொடர்ச்சியாக "அக்கறைகளைக் குவித்தே" வந்துள்ளனர். இன்றும் கூட தமது "அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு" அப்பால் தமிழ்-முஸ்லீம் மக்களுக்கிடையில் "முறுகல் ஏற்படுத்துவதற்கான காரணிகள் மீது" பகிரங்கமாக கண்டனங்களைத் தெரிவித்து வந்து கொண்டிருக்கின்றனரே தவிர ரகுமான ஜான் தனது "அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குச் சாதமமாக இருக்கின்றதா இல்லையா என்று கணித்து அதற்கேற்ப" கண்டிக்காமல் மௌனம் சாதித்தது போன்ற செயற்பாடுகளைச் செய்தது கிடையாது. இலங்கையின் இனவாத அரசுகளால் முஸ்லீம் மக்கள் மீது வன்முறை ஏவிவிடப்பட்டபோதும், ஈழவிடுதலை போராட்ட இயக்கங்களால் முஸ்லீம் மக்கள் மேல் வன்முறை ஏவிவிடப்பட்ட போதும் தமிழ் முற்போக்கு சக்திகள் மட்டுமல்ல, சிங்கள முற்போக்கு சக்திகளும் கூட அதை வன்மையாகக் கண்டித்து வந்திருந்தனர். இது எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாததொன்றாகும். ஆனால் ஈழவிடுதலைப் போராட்டம் தடம் மாறி தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பாசிச செயற்பாடுகளை முஸ்லீம் மக்கள் மேல் தொடர்ந்ததுதான் வரலாறு. தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் முஸ்லீம் மக்களை அவர்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றி இனச் சுத்திகரிப்புச் செய்திருந்தனர். யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் பல முஸ்லீம்கள் - முஸ்லீம் வர்த்தகர்கள் - படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இஸ்ரேலியர்களுடன்- யூதர்களுடன் - தமிழர்களை ஒப்பிட்டு சிலாகித்துப் பேசும் தமிழர்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இஸ்ரேலியர்கள் பலஸ்தீனியர்களை அவர்களது சொந்த மண்ணிலிருந்து விரட்டியடித்ததற்கு ஒப்பான செயலை தமிழ் மண்ணில் - இலங்கையில் - செய்திருந்தனர். இத்தகையதொரு அநாகரிகமான செயலுக்குக் காரணமானவர்களைக் கண்டிப்பதற்கு ஒரு மனிதன் முற்போக்கு - ஜனநாயக சக்தியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை; மனிதாபிமானமிக்க, மனிதப்பண்புடைய நாகரிக சமுதாயத்தின் ஒரு குடிமகனாக இருப்பதே போதுமானதாகும். தமிழர் தரப்பில் இதனை பகிரங்கமாக அன்று யாழ் பல்கலைக்கழக உபவேந்தராகவிருந்த பேராசிரியர் அழகையா துரைராஜா அவர்கள் நோர்வே தொரம்சோ பல்கலைக்கழகத்துக்கு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவதுற்காக அழைக்கப்பட்டு வருகை தந்திருந்தபோது ஒழுங்கு செய்யப்பட்ட மாணவர்களுடனான சந்திப்பொன்றில் முதன்முறையாக தமிழர் மத்தியில் உயர்பதவி வகிக்கும் பிரபல கல்வியாளர் என்ற ஸ்தானத்திலிருந்து முஸ்லீம் மக்கள் யாழ் மண்ணிலிருந்து விரட்யடிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என தனது உரையின் போது குறிப்பிட்டு அதற்கான தனது விசனத்தை தெரிவித்திருந்தது கொழும்பில் இருந்து வெளிவந்த "சரிநிகர்" பத்திரிகையில் முன்பக்க தலைப்புச் செய்தியாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருந்தது. இச்செய்தியினை சுகந்தன் (சிறி) "துருவன்" என்ற பெயரில் "சரிநிகர்" பத்திரிகைக்கு அனுப்பியிருந்தார்.

ஆனால் வடக்கு-கிழக்கு முஸ்லீம் மக்களுக்கு இந்த அவலம் நிகழ்ந்தபோது, முஸ்லீம் மக்களின் வாழ்வு பறிக்கப்பட்டபோது, அவர்களது வாழும் உரிமை மறுக்கப்பட்டபோது, ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ் மண்ணிலிருந்து விரட்டப்பட்ட நாம் கொழும்பிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தோம். நாம் "தீப்பொறி"க் குழுவாக கொழும்பில் செயற்பட்டுக் கொண்டிருந்தபோது யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணத்திலிருந்து முஸ்லீம்கள் விரட்டியடிக்கப்பட்டதைக் கண்டித்து எமது கண்டனத்தை வெளியிடவேண்டும் என்ற கருத்தை ரகுமான் ஜானிடம் முன்வைத்திருந்தேன். "இந்த விடயத்தில் அவசரம் காட்டவேண்டாம்" என அப்பொழுது ரகுமான் பதிலளித்தார். அதற்கான காரணமாக "நாம் "தீப்பொறி"க் குழு என்ற பெயரில் கண்டனத்தை வெளியிட்டால் நாம் தொடர்ந்து செயற்படுவது அனைவருக்கும் தெரியவந்துவிடும்" என ரகுமான் ஜான் கருத்து முன்வைத்திருந்தார். "தீப்பொறி" க்குழுவின் பேரில் முஸ்லீம் மக்கள் வெளியேற்றம் குறித்த கண்டனத்தை வெளியிடுவது எமது செயற்பாடுகளை வெளிப்படுத்துமானால் "தீப்பொறி"க் குழு என்ற பெயரில் அல்லாமல் வேறு பெயர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலுக்கு கண்டனத்தை வெளியிட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன். எனது இக்கருத்தும் கூட "இப்பொழுது அவசியமில்லை" என ரகுமான் ஜானால் மறுக்கப்பட்டிருந்தது. இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலுக்கு பல அமைப்புக்களும் தமது கண்டனத்தைத் தெரிவித்திருந்தன. ஜரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் புலம்பெயர்ந்து வாழ்ந்த பல தமிழ் முற்போக்கு-ஜனநாயக சக்திகளும் கூட இச் செயலைக் கண்டிக்கத் தவறவில்லை. ஒரு சமூகம் - முஸ்லீம் சமூகம் - மீது தமிழ்மக்களின் பேரால் பாசிசம் அரங்கேறியிருந்தது. ஒரு சமூகம் தனது வாழும் உரிமையை இழந்து கொண்டிருந்தது. ஒரு சமூகம் தமது சொந்த நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இத்தகையதொரு நிலையில் தனது "அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குச் சாதகமாக" இல்லை என்பதால் மௌனம் சாதிப்பது என ரகுமான் ஜான் முடிவு செய்திருந்தார்.

வடக்கு-கிழக்கு முஸ்லீம் மக்கள் வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் போராடிக்கொண்டிருக்கையில் தனது சொந்தப் பாதுகாப்பு என்ற "நிகழ்ச்சி நிரலுக்கு" எதிராக செல்லவிரும்பாத ரகுமான் ஜான் முஸ்லீம் மக்கள் விரட்டியடிக்கப்பட்டதைக் கண்டித்து அறிக்கை வெளியிடுவதற்கு எதிரானவராக இருந்தார். மக்களிடம் இருந்து அந்நியப்பட்டிருக்கும் ஒருவரால் மக்களின் உணர்வுகளையோ அல்லது அவர்களின் அவலங்களையோ புரிந்து கொள்ள முடியாது என்பதற்கு ரகுமான் ஜான் ஒரு உதாரணம் மட்டுமே.

வடக்கு-கிழக்கு முஸ்லீம் மக்களுக்கு இத்தகைய வரலாற்றுத் துரோகத்தை இழைத்த ரகுமான் ஜான் இப்பொழுது முஸ்லீம் மக்கள் மேல் "கருணை" கொண்டவராக "தமிழ் முற்போக்கு ஜனநாயக சக்திகள் தேசிய ஒடுக்குமுறை செயற்பாடுகளைக் கண்டிக்க எப்போதும் தயாராக இருக்கவேண்டும்" என்று உபதேசம் செய்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லீம் மக்கள் விரட்டியடிக்கப்பட்டு, அவர்கள் நிர்க்கதியாக்கப்பட்டு நட்டாற்றில் விடப்பட்டபோது தனது சொந்தப் பாதுகாப்பை முதன்மைப்படுத்திய ரகுமான் ஜான், முஸ்லீம் மக்களின் மேலான ஒடுக்குமுறைகளுக்கெதிராகவும் அவர்களுடைய ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடியவர்கள், போராடிக்கொண்டிருப்பவர்கள் மீது உண்மைக்குப் புறம்பான அவதூறுகளை அள்ளிவீசுகிறார். "முற்போக்கானவர்கள், புரட்சிகரமானவர்கள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் சக்திகளால் நடாத்தப்படும் வலைகளில் முஸ்லீம்கள் ஏமாற்றுபவர்கள், காட்டிக்கொடுப்பவர்கள்....., (இரயாகரன், நேசன்) என்ற வாதங்கள் மிகவும் பரவலாக முன்வைக்கப்படுகின்றன." என்கிறார் ரகுமான் ஜான். "இடதுசாரி" அரசியல் பேசி, "முன்னேறிய பிரிவினருக்குள்" ஒளிந்து கொண்டிருந்த ரகுமான் ஜான் இறுதியாக வந்தடைந்திருக்குமிடம் அரசியல் சாக்கடையாகும். இதற்கு காரணம் ரகுமான் ஜானின் மெய் அறிவின் வறுமை மட்டுமல்ல மொழி அறிவின் வறுமையும் தான். தன் மீதான அரசியல்ரீதியான விமர்சனங்களை முகம் கொடுக்கத் திராணியற்ற ரகுமான் ஜான் ரொறன்ரோவில் நடைபெற்ற "தம்புள்ளு பள்ளிவாசல் உடைப்புக் கண்டனக் கூட்டத்தில்" தான் நடந்துகொண்ட முறையை, ஜனநாயக மறுப்பை அதிலிருந்து திசைதிருப்புவதற்காக இத்தகைய அவதூறுகளை ஏனையவர்கள் மேல் முன்வைத்து கபடநாடகமாடுகிறார். "முஸ்லீம்கள் ஏமாற்றுபவர்கள், காட்டிக் கொடுப்பவர்கள்.... என்ற வாதங்கள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன" என்று கூறி இரயாகரன், நேசன், சிறீரங்கன், சோதிலிங்கம் என்றொரு பட்டியலைக் காட்டுகிறார். ஆனால் எங்கே, எப்போது இவர்கள் முஸ்லீம்களை அவமதிக்கும் வகையில் வாதங்களை முன்வைத்தார்கள் என்று ரகுமான் ஜான் கூறத் துணியவில்லை. இத்தகைய அவதூறுகள் அனைத்தும் ரகுமான் ஜானின் அரசியல் வறுமையின் வெளிப்பாட்டினால் தன்னைப் பாதுகாப்பதற்காக கற்பனையில் கட்டியெழுப்பப்பட்ட பலவீனமான சுவர்கள் தான்; மொழி அறிவின் வறுமையும் கூடவே அதனுடன் கைகோர்த்துக் கொள்கிறது. தனது "அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு சாதகமாக" இல்லை என்ற காரணத்தால் தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லீம் மக்கள் மேல் நிகழ்த்தப்பட்ட இரத்தக்கறை படிந்த வரலாற்றை எழுதியவர்களை இன்றும் கூட "தேசிய சக்திகள்" என வர்ணனை செய்து கொண்டிருக்கும் ரகுமான் ஜான், முஸ்லீம் மக்கள் மேலான ஒவ்வொரு ஒடுக்குமுறையையும் படுகொலைகளையும் தொடர்ச்சியாகக் கண்டித்தும் அதற்கெதிராகப் போராடியும் வந்த எம்மீதான இந்த அவதூறு என்பது இன்று அவரது "அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு" அவசியமானதொன்றாக இருக்கிறது. ஆனால் வடக்குக்-கிழக்கு முஸ்லீம் மக்களைப் பொறுத்தவரை தமது வாழ்க்கையின் கொடூரங்களுக்கும் துன்பங்களுக்கும் காரணமானவர்கள் யார் என்பதையும் தம்மீதான ஒடுக்குமுறைகளுக்கெதிராகக் குரல் கொடுத்துப் போராடியவர்கள், தம்மை நேசித்தவர்கள் யார் என்பதையும் தெளிவாகவே இனம் கண்டுள்ளார்கள். வடக்குக்-கிழக்கிலிருந்து முஸ்லீம்கள் இனச்சுத்திகரிப்புச் செய்யுப்பட்டபோதும் சரி, கிழக்கில் பள்ளிவாசல்களிலும், முஸ்லீம் கிராமங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய படுகொலைகளையும் சரி ரகுமான் ஜான் கொழும்பில் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். இதே நேரம் வடக்குக்-கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் முற்போக்கு – ஜனநாயக சக்திகளையும், தமிழ்மக்களையும் அவர்களது குரல்வளையை நெரித்து அவர்களின் கருத்துச் சுதந்திரத்தை தடுத்து நிறுத்தியிருந்தபோதும், வடக்குக்–கிழக்கிலிருந்து புலம் பெயர்ந்து மேற்கு ஜரோப்பிய நாடுகளிலும், வட அமெரிக்காவிலும் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் முற்போக்கு – ஜனநாயக சக்திகள் முஸ்லீம் மக்கள் மீதான வன்முறைகளுக்கெதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

ஜேர்மனியில் "தூண்டில்" சஞ்சிகைக்குழு, பிரான்சில் "சமர்" சஞ்சிகைக்குழு, சுவிற்சலாந்தில் "மனிதம்" சஞ்சிகைக்குழு, கனடாவில் "தேடகம்" குழு மற்றும் ஜோர்ஜ் குருஷேவ்வின் "தாயகம்" பத்திரிகைக்குழு உட்பட பல சஞ்சிகைகள் புலம் பெயர் நாடுகளில் வெளிவந்து கொண்டிருந்ததுடன் இவை அனைத்தும் இலங்கை அரசினதும், தமிழீழ விடுதலைப் புலிகளினதும், இலங்கையில் நிலைகொண்டிருந்து இந்தியப் படையினரதும் மக்கள் விரோத செயற்பாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துகொண்டிருந்ததுடன், தமிழ் மக்களின் "ஏக பிரதிநிதி" எனக் கூறிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முஸ்லீம் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் கொலைகளையும் கண்டித்தும் அதற்கெதிராகப் போராடியும் வந்திருந்தனர். 1991ம் ஆண்டு பிரான்சிலிருந்து வெளிவரத் தொடங்கியிருந்த "சமர்" சஞ்சிகை முதலாவது இதழில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வட மாகாண முஸ்லீம்கள் இனச் சுத்திகரிப்பும், காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையும் மட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்திலும் மன்னாரிலும் ஏனைய விடுதலை இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்ட முஸ்லீம் மக்கள் மீதான படுகொலைகளும் கண்டிக்கப்பட்டிருந்தன. ரகுமான் ஜான் இன்று அவதூறு செய்யும் இரயாகரனும் "சமர்" சஞ்சிகைக்குழுவில் அங்கம் வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே காலப்பகுதியில் சுவிற்சலாந்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த "மனிதம்" சஞ்சிகையில் (இதழ் 8) ஜீவனால் வரையப்பட்ட காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலை தாங்கிய ஓவியம் முன் அட்டைப்படமாக வெளிவந்திருந்தது. 1992 தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முஸ்லீம் மக்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்து "தேடகம்" (கனடா) சார்பில் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது மட்டுமல்லாமல் "தேடகம்" குழுவின் சார்பாக "பலிக்கடாக்கள்" என்ற நாடகமும் ஜீவனின் நெறியாள்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளில் அங்கம் வகித்து பின்னர் அதிலிருந்து விலகி கனடாவில் வாழ்ந்த ராஜு மாஸ்டர், மற்றும் சஞ்சீவனின் உதவியுடன் மேடையேற்றப்பட்டிருந்தது.

"பலிக் கடாக்கள்" நாடகம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போக்கை கடுமையாக விமர்சனம் செய்ததொன்றாக அமைந்திருந்ததோடு வடமாகாணத்திலிருந்து முஸ்லீம் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட காட்சியையும் கூடவே கொண்டிருந்தது. காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலை மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் குறித்த 13வது நினைவு நிகழ்ச்சி "கருமையம்" அமைப்பினால் கனடாவில் நினைவு கூரப்பட்டபோது "கைநாட்டு" என்ற சஞ்சிகை வெளியீடும் நடைபெற்றிருந்தது. "கைநாட்டு" சஞ்சிகையின் அட்டைப் படம் காத்தான்குடி முஸ்லீம் படுகொலை குறித்த ஜீவனின் ஓவியத்துடன் வெளிவந்ததோடு காத்தான்குடி முஸ்லிம் படுகொலை குறித்த விவரண ஒளிநாடாவும் காண்பிக்கப்பட்டது.

புலம்பெயர்ந்த தமிழ் முற்போக்கு–ஜனநாயக சக்திகள் முஸ்லீம் மக்கள் மீதான வன்முறைகளைக் கண்டித்து அதற்கெதிராகப் போராடிக் கொண்டிருக்கும் போது ரகுமான் ஜான் முஸ்லீம் மக்கள் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசிசப் போக்குகள் எவையையும் கண்டுகொள்ளாதவராக இருந்ததுமடடுமின்றி இவை அனைத்தையும் மேற்கொண்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகளை "தேசிய சக்திகள்" எனக் கூறி சாமரை வீசிக்கொண்டிருந்தார். முஸ்லீம் மக்கள் மேல் இத்தனை கொடுமைகளும் நடைபெறுகையில் தனது "அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு" அமைவாக வாய்மூடி மௌனம் காத்த ரகுமான் ஜான் யார்?, நாம் யார்? என்பதை வடக்குக்-கிழக்கு முஸ்லீம் மக்கள் இலகுவில் இனம் கண்டுகொள்வர். இப்பொழுது என்னவென்றால் முஸ்லீம் மக்களின் ஒரே குரலாகத் தான்இருப்பது போலவும் "தமிழ் முற்போக்கு–ஜனநாயக" சக்திகள் முஸ்லீம் மக்களை இழிவுபடுத்தும் விதத்தில் இணையத்தளங்களில் எழுதுவதாயும் கண்ணீர் வடிக்கின்றார்.

"சாதாரண போராளி ஒருவர் காட்டிக் கொடுத்தார் என்று குற்றம் சாட்டுவதாயின் அதற்குப் பலமான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்" என் கூறும் ரகுமான் ஜான் ரொறன்ரோவில் நடைபெற்ற தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதலைக் கண்டித்து நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் மற்றவர்களைச் சுட்டிக்காட்டி "இலங்கை அரசின் ஆள் என்பதில் சந்தேகம் கிடையாது, அதுதான் உண்மை" என எந்தவித "ஆதாரங்களை"யும் முன்வைக்காது கூறியதானது "துரோகி" அரசியலில் இருந்து இன்னமும் தன்னைத் துண்டித்துக் கொள்ளமுடியாமல் இருக்கும் "இடதுசாரி"யின் கண்ணோட்டத்தையே வெளிப்படுத்துவதுடன் "உபதேசம்" ஊருக்கே ஒழிய தனக்கல்ல என்பதாகவே இருககிறது.

"இப்படியான குற்றச்சாட்டுக்களை சம்பந்தப்பட்டவர்கள் பொது ஊடகங்களில் முன்வைக்கும்போது குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்" என உபதேசிக்கும் ரகுமான் ஜான் "தேசம் நெற்" இணையத்தளத்தில் "பொறிமகன்" "ராம்" என்ற புனைபெயர்களில் ஒழிந்திருந்தும் பின்னர் தனது சொந்தப் பெயரிலும் அநாகரிக அரசியல் செய்ததையும் , சிலரை "இலங்கை அரசின் கைக்கூலிகள்" என்று எந்தவித "ஆதாரங்களையும் முன்வைக்காது" முத்திரை குத்தியமையையும், எமது நண்பர்கள் சிலரின் சாதியைச் சுட்டிக்காட்டி எழுதிய "பெருமை"க்கும் உரியவராவர்.

"இஸ்லாமிய விரோத" சிந்தனைகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள ஒவ்வொரு தமிழ் முற்போக்கு – ஜனநாயக சக்திகளும் இதயசுத்தியுடன் போராட வேண்டும்" என "தமிழ் - முற்போக்கு – ஜனநாயக சக்திகளுக்கு அறிவுரை கூறும் ரகுமான் ஜான் "இப்படிப்பட்ட இஸ்லாமிய வெறுப்புக் கருத்துக்கள் மூலமாகவும் வடக்கிலிருந்து இனச் சுத்திகரிப்பு செய்ததன் மூலமாகவும்" எனத் தொடரும் ரகுமான் ஜான் இத்தனை கொடூரங்களையும் முஸ்லீம் மக்களுக்குச் செய்த தமிழீழ விடுதலைப் புலிகளை "தேசிய சக்தி" களாகவும் அதற்கெதிராகப் போராடிய தமிழ் முற்போக்கு –ஜனநாயக சக்திகளை "இஸ்லாமிய விரோத " சிந்தனை கொண்டவர்களாகவும் காண்பதானது, ரகுமான் ஜான் எந்தப் பக்கத்தில் உள்ளார் என்பதை தெளிவாகவே நிரூபித்துக் காட்டியுள்ளது. தனது கட்டுரை நண்பர்களது கோரிக்கைகளுக்கு இணங்கவும் சில அம்சங்களை உள்ளடக்கும் விதத்தில் திருத்தியமைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார் ரகுமான்ஜான். நண்பர்களது கோரிக்கைகளுக்கு இணங்க "சில அம்சங்களையல்ல" பல அவதூறுகளை "உள்ளடக்கும் விதத்தில் திருத்தியமைக்கப்பட்டது" என்பதே உண்மையாகும் "நண்பர்களால் ஒருவன் அறியப்படுகிறான்" என்பது முதுமொழி. ரகுமான் ஜானும் கூட அவரது நண்பர்களால் அறியப்பட்டுக் கொண்டிருக்கிறார்.