05192022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

"சிவப்புச்சாயக் கட்சியை உருவாக்க" முனைந்ததாக குற்றஞ்சாட்டிய பிரபாகரன் - "ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற நூல் மீது - 05

ஒரு வலதுசாரிய வர்க்கத்துக்கு "தேவைப்பட்ட போராட்ட"மும், அந்த வர்க்க அரசியலின் "முன்னோடி"களால் இனம் காணப்படுகின்றது. இந்த நிலையில் "எமது திசைவழி தவறானது" என்று கூறி, நடைமுறையில் மாற்று அரசியல் வழிமுறையை முன்னெடுத்துப் போராடியவர் ஐயர். இந்த நிலையில் அவரின் நூலோ, அவரின் இந்தக் கருத்துக்கும் நடைமுறைக்கும் எதிராக வந்திருக்கின்றது. இது எதைக் காட்டுகின்றது? தகவலை ஒவ்வொரு வர்க்கமும் தனக்கு ஏற்ப பயன்படுத்தியதையே, இந்த நூலில் சிறப்பாக நாம் காணமுடியும்.

அன்று "சிவப்புச்சாயக் கட்சியை உருவாக்க" முனைந்ததாகக் கூறி, பிரபாகரன் தன் வர்க்கம் சார்ந்து துண்டுப்பிரசுரம் விட்ட நிலையில், இந்த அரசியலை நியாயப்படுத்துகின்றது இந்த நூல். "பிற்காலப்பகுதியில், புலிகளுடனான நீண்ட நாட்கள் கடந்துபோன பின்னர், அவற்றை எல்லாம் தெரிந்துகொண்ட போது தான் நமது தவறுகள் குறித்தும், புதிய அரசியல் திசைவழி குறித்தும் சிந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது." இங்கு ஐயர் தன்னளவில் தன் அரசியல் வழியிலான "தவறு" குறித்து, "புதிய அரசியல்" வழி சார்ந்து, தன்னைத்தான் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றார். இப்படி உண்மை இருக்க அரசியல் சாராத "தவறு" குறித்து, எப்படி மூன்றாம் தரப்பாக கூறமுடியும். இந்த அரசியல் வழிமுறையை "தவறாக" காண்பதா அல்லது முற்றாக நிராகரிப்பதா? இரு நேர் எதிர் அரசியல் வழிமுறைக்குள் இந்த நூல் தடுமாறுகின்றது. இரு வேறுபட்ட வர்க்கக் கண்ணோட்டம் கொண்ட நபர்களின் சொந்தக் கண்ணோட்டத்துக்கு ஏற்ப, தகவல்கள் அரசியலாகின்ற போது நூலுக்குள்ளான முரண்பாடுகள் ஆழமாகவே வெளிப்படுகின்றது.

இங்கு ஐயரின் தகவல்கள் தான், புலிசார்பு அரசியலை ஏற்றுக்கொண்ட ஒருவரின் அரசியலுக்குள்ளாகி விடுகின்றது. அது தன் சுய தர்க்கங்ளுக்குள் இதற்கான காரணத்தைக் காட்டிவிட முனைகின்றது. இந்த அரசியல் குளறுபடியை புரிந்துகொள்ள "பிரபாகரனுடன் தவறுகள் குறித்துப் பேசினால் தனது வழிமுறையை மாற்றிக்கொள்ள வாய்ப்புண்டு என்பதே எனது தனிப்பட்ட கருத்தாக ஆரம்பத்தில் அமைந்தது." என்று கருதியவர் தான் ஜயர். அது சாத்தியமில்லை என்ற தெரிந்த பின், இதை மற்றொரு அரசியல் வழிமுறையாகக் கண்டுகொண்ட பின் "புதிய அரசியல்" ஒன்றை தேர்ந்தெடுத்தவர் ஐயர். இதைத்தான் பிரபாகரன் "சிவப்புச்சாயக் கட்சி"யாக இனம் காண்கின்றான். இதன் பின் "இன்று மறுபடி பின்னோக்கிப் பார்க்கும் போது ஆயிரம் தவறுகள், குறைபாடுகளைக் கண்டுகொள்ள இயலுமாயுள்ளது." என்று எப்படி தான் கூறமுடியும்!? இது "ஆயிரம் தவறுகள், குறைபாடுகளைக்" கொண்டதல்ல. அது வலதுசாரிய அரசியல் வழிமுறையாகும். இதனால் தான் "புதிய அரசியல்" வழிமுறையை ஐயர் தேர்ந்தெடுத்தார். புலிகள் அதை "சிவப்புச்சாயக் கட்சி"யாக இனம் காண்கின்றது.

இப்படி இருக்க "ஆயிரம் தவறுகள், குறைபாடுகளை" திருத்திக் கொண்ட வலதுசாரியத்தை ஐயர் தேர்ந்தெடுக்கவில்லை. அவரும் சேர்ந்து உருவாக்கிய புளட், மறுபடியும் பழைய பாதையை தேர்ந்தெடுத்த போது, அதில் இருந்தும் அவர் விலகிவிடுகின்றார். இந்த வகையில் தான் "என்னைப் பொறுத்த வரையில் நாம் பயணிக்கும் திசை தவறானது என்ற முடிபிற்கு வந்த பின்னர், புதிய அரசியல் வழிமுறை ஒன்றை முன்வைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறேன்." என்றதன் பின் பிளவு மட்டுமின்றி, அது இரு நேரெதிரான அரசியல் பாதையைக் கொண்டது. "பிரபாகரனுடன் தவறுகள் குறித்துப் பேசினால் தனது வழிமுறையை மாற்றிக்கொள்ள வாய்ப்புண்டு.." என்ற கருதிய அனைத்தையும், அரசியல் ரீதியான இது கோடு பிரித்து விடுகின்றது.

இப்படி உண்மை இருக்க "ஒரு புறத்தில் இடதுசாரிகள் தேசிய இன ஒடுக்குமுறையைக் கருத்தில் கொள்ளவில்லை. மறுபுறத்தில் பாராளுமன்றக் கட்சிகள் எம்மைப் பாவித்துக்கொண்டனர். இந்தச் சூழ்நிலையில் எமது நடவடிக்கைகளுக்குக் கிடைத்த மக்கள் ஆதரவும், சமூக அங்கீகாரமும், எம்மை மேலும் மேலும் தூய இராணுவக் குழுவாக மாற்றியிருந்தது. அதே பாணியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள மேலும் ஊக்கம் வழங்கியது." என்று இன்று எப்படி ஐயர் அதை நியாயப்படுத்த முடியும்? ஐயர் புலியில் இருந்து விலகாத வரை இது தான் அதற்கான ஊக்கமான காரணமும் உண்மையும் என்றால், முள்ளிவாய்க்கால் வரை அது தன்னைத்தான் இதன் மூலம் நியாயப்படுத்திவிட முடியும். ஐயர் இல்லாத புலிக்கு இது பொருந்தும். இது அதற்கான போதுமான காரணமாகிவிடும்.

சொந்த மக்களை முள்ளிவாய்க்காலில் பலியிட்டதுக்கு கூட "மக்கள் ஆதரவும், சமூக அங்கீகாரமும்" கொண்ட ஒன்றாக காணப்பட்ட, காட்டப்பட்ட அரசியல் பின்புலத்தில் தான் அனைத்தும் தொடர்ந்து அரங்கேறின. ஐயர் இன்று "ஊக்கம் வழங்கியது." என இதற்கு காரணம் கூறுகின்ற போது, அதற்கு பின் இது ஊக்கம் வழங்கவில்லையா!? இங்கு ஐயரின் விமர்சனம், சுயவிமர்சனம் இதன் மூலம் முற்றாக மறுதலிக்கப்படுகின்றது.

புலியை மீண்டும் ஐயரின் இந்த நூல் மூலமே நியாயப்படுத்தி விடுகின்றது. "இடதுசாரிகள் தேசிய இன ஒடுக்குமுறையைக் கருத்தில் கொள்ளவில்லை" அதனால் தான் புலிகள் இதைச் செய்தனர் என்று கூறுகின்ற, வலதுசாரிய நியாயப்படுத்தலையே இங்கு மீளக் காண்கின்றோம்.

புலிகளின் வலதுசாரிய அரசியல் இன்றும் தொடர்ந்து இதுவாகவே இருக்க, அதை மூடிமறைக்கவும் நியாயப்படுத்தவும் காரணம் தேடுகின்றனர். புலிகளில் இருந்து ஐயர் வெளியேறிய பின் இவர்களுக்கு எதிராக புலிகள் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் "மக்கள் இயக்கம் என்று கூறி இலங்கைத் தீவில் பெரும்பாலும் இடதுசாரிகளின் வழியில் சிவப்புச்சாயக் கட்சியை உருவாக்கத் தலைப்பட்டனர்." என்று துல்லியமாகவும் தெளிவாகவும் கூறுகின்றனர். இப்படி அன்று அவர்கள் சரியாக இனம் கண்ட ஒன்றை, அதை முன்வைத்த ஐயரையும் இந்த நூல் மறுதலிக்கின்றது. சுயமுரண்பாட்டாலானது ஐயரின் இந்த நூல். புலிக்கும் அதன் வலதுசாரிய அரசியலுக்கும் லாடம் அடித்து, அதை ஓட்டிக் காட்ட முனைகின்றது.

தொடரும்

பி.இரயாகரன்

06.06.2012

 

1. எதைக் கற்றுக் கொடுத்திருக்கின்றது? – "ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற நூல் மீது - 01

2.புலிக்குள் இடதுசாரியத்தை முன்வைத்தவரைக் கொன்றுவிட்டு, இடதுசாரியம் மீதான வசைபாடல் "ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற நூல் மீது - 02

3. புலிகள் "தவறு" இழைத்ததாக கூறும் அரசியல் திரிபானது "ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற நூல் மீது - 03

4."எமது திசைவழி தவறான" தென்றதன் பின் எப்படி அது "தேவைப்பட்ட போராட்ட"மாகும்!? பிரபாகரன் "முன்னோடி" யாக இருக்கமுடியும்!? - "ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற நூல் மீது - 04


பி.இரயாகரன் - சமர்