அரசு முதல் புரட்சியாளர்கள் வரை தங்கள் கட்சிக்கு ஆள்பிடிப்பதன் மூலம், முரண்பாடுகளைத் தீர்க்கலாம் எனக் கருதுகின்றனர். இலங்கையின் பிரதான முரண்பாடான இனப்பிரச்சனையை இப்படித்தான் அரசு முதல் புரட்சியாளர்கள் வரை அணுகுகின்றனர். முரண்பாடுகளுக்குரிய அரசியல் தீர்வை முன்வைத்து மக்களை அணிதிரட்டுவதற்குப் பதில், அந்தச் சமூகப் பிரிவுகளின் ஆள்பிடிக்கும் அரசியலை முன்னெடுக்கின்றனர். அதாவது மக்கள் தமது தீர்வுக்காக போராடுவதற்கு பதில், மக்களுக்காக போராடும் சிலரைக் கண்டுபிடிக்க முனைகின்றனர். மக்களை ஒடுக்கவும், இதே அரசியல் வழிமுறையைத்தான் அரசு கையாளுகின்றது. போராடவும், ஒடுக்கவும், அந்தந்த சமூகப்பிரிவில் ஆட்களைப் பிடிப்பதன் மூலம் தீர்வு காணமுடியும் என்ற அரசியல் வழிமுறை, இலங்கையில் பொதுவில் எங்கும் காணமுடிகின்றது.

மக்கள் தங்கள் உரிமைகளைச் சார்ந்து, அவர்களே போராடுவதற்கு எதிரானது இது. முரண்பட்ட சமூகப் பிரிவுகளை பிரதிநிதித்துவம் செய்யும் வண்ணம் ஆள்பிடிக்கும் அரசியல் மூலம், பிரச்சனையைத் தீர்க்கலாம் என்று கருதுகின்ற அரசியல் மக்களுக்கு எதிரானது. அரசு முதல் ஜே.வி.பி வரை இதைத்தான் செய்தது, செய்து வருகின்றது என்றால் இதையே ஒரு அரசியல் வழியாக மற்றவர்களும் கொண்டு செயல்படுகின்றனர். இதைத்தான் புலியும் கூட செய்தது. இந்த தவறான அரசியல் வழியைத்தான் உண்மையான புரட்சிகர பிரிவினரும் கூட, தங்கள் அரசியல் தெரிவாக, வழியாக கொள்வதை இன்று பொதுவில் காணமுடிகின்றது.

இந்த வகையில் பெண்கள், தாழ்த்தப்பட்ட சாதிகள், பிரதேசங்கள், இனக்குழுக்கள் … எங்கும் தமக்கான ஆட்களைப் பிடிப்பதன் மூலம், அவர்களை அமைப்பாக்குவதன் மூலம், அந்தந்த சமூக முரண்பாடுகளை தீர்க்க முடியும் என்று காண்கின்றனர். இதற்கு மாறாக சமூக ஒடுக்குமுறையை தீர்க்கும் வண்ணம் மக்களின் உரி;மைகளை அங்கீகரித்து அதை முன்னிறுத்தி மக்களை அணிதிரட்டிப் போராடுவதற்குப் பதில், அங்கிருந்;து ஆட்களைப் பிடிப்பதை அதற்கான தீர்வாகக் காண்கின்றனர். அரசு இதே வழியைக் கொண்டு தான் ஒடுக்குவதை மூடிமறைக்க முனைகின்றது இலங்கைப் புரட்சியாளர்களும் இவ்வழியைக் கொண்டு, தாம் புரட்சி செய்வதன் மூலம் இதற்கு தீர்வு காண்பதாக கூறுகின்றனர். ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்.

இப்படி ஒடுக்கவும், புரட்சி செய்யவுமென, இரு எதிர்முனையில் எப்படி செயல்படுகின்றது என்பதை இலங்கையின் பிரதான இனமுரண்பாடு சார்ந்து பார்போம்.

ஒடுக்குமுறையை செய்யும் அரசு

இன்று அரச இன்வொடுக்குமுறையை தொடர்ந்தபடி, வடக்கு கிழக்கில் தொடர்ந்து தனக்கான ஆட்களைப் பிடிக்கின்றது. இதன் மூலம் தனது ஒடுக்குமுறையை மூடிமறைக்கவும், வடக்கு கிழக்கில் தேர்தலை வெல்லவும் முனைகின்றது. இதன் மூலம் இலங்கையில் இன முரண்பாடு இல்லை என்று காட்டமுனைகின்றது.

இந்த வகையில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் தனிநபர்களுக்கு சலுகைகளை வழங்கி, ஆட்களைப் பிடிக்க முனைகின்றது. சமூகத்தின் முரண்பாடு சார்ந்த உட்பிரிவுகளுக்குள்ளான மோதலை தூண்டி, அதல் ஒன்றை ஆதரித்து தன் பின்னால் அவர்களை அணிதிரட்ட முனைகின்றது. அதிகாரத்தை, பொருளாதாரத்தைக் … கொண்டு தனக்கான ஆட்களை பல வகையில் அணிதிரட்டுகின்றது. இதன் மூலம் இனவொடுக்குமுறையை தொடர்ந்தபடி, இனமுரண்பாட்டுக்கு தீர்வு காண்பதை மறுத்து செயல்படுகின்றது. ஆள்பிடிக்கும் இந்த அரசியல் தான், இன்று வடக்கு கிழக்கில் அனைத்தையும் மூடிமறைக்கும் அரசின் அரசியல் செயல்;பாடாகும்.

புரட்சி செய்ய முனையும் பரட்சியாளர்கள்

மக்களை உரிமையை மறுத்தபடி, மக்களுக்காக புரட்சி செய்ய முனைகின்றனர். புரட்சி செய்ய ஆள்பிடிக்க முனைகின்றனர். இப்படி தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்தபடி, அரச ஒடுக்குமுறையினால் எழும் எதிர்விளைவுகளை முன்னிறுத்துகின்றனர். இதற்காக போராடுவதன் மூலம், தனக்கான ஆட்களை பிடிக்க முனைகின்றனர். இதன் மூலம் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும், ஒரு புரட்சியை மக்களுக்காக நடத்த முடியும் என்ற அரசியல் அடிப்படையில் ஆள்பிடிக்கும் அரசியலை நடத்துகின்றனர். சமூகத்தையும், சமூக முரண்பாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம், அதற்குள் ஆள்பிடிக்க முனைகின்றனர். ஒடுக்குமுறையை இதற்கான ஊடகமாக கருதி அதை பயன்படுத்துகின்றனர்.

மக்களின் உரிமைகளை அங்கீகரித்து, அதை முன்வைத்து அவர்களை அணிதிரட்டுவதை மறுக்கின்றனர். மக்கள் தமது உரிமைக்காக போராடும் அரசியலுக்குப் பதில், தாம் அவர்களுக்காகப் போராடும் அன்னிய உறுப்பாக்கி கொண்டு ஆளைப்பிடிக்கும் அரசியலை தங்கள் யுத்ததந்திரமாகக் கொண்டு செயல்படுகின்றனர். மக்கள் தங்கள் உரிமைகளை ஏற்றுக்கொண்டு அதற்காக தம்முடன் சேர்ந்து போராட முன்வராத எவருடனும், மக்கள் போராட வர மாட்டார்கள். இந்த அரசியல் பின்புலத்தில், ஆள்பிடிக்கும் அரசியல் முனைப்புடன் வெளிப்பட்டு செயல்படுவதைக் காணமுடியும்.

ஒடுக்கவும் புரட்சி செய்யவுமான ஆள்பிடி அரசியல்

இப்படி இவ்விரு எதிர் அரசியல் வழிகளும், மக்களின் உரிமைகளை முன்வைத்து அணிதிரட்டுவதை மறுக்கின்றது. மாறாக ஓரே அரசியல் வழியைக் கொண்டது. மக்களை மந்தையாகக் கருதி அணுகுகின்றது.

புலிகள் தாம் குண்டுவைக்க சிங்கள மக்கள் மத்தியில் ஆள்பிடிக்கும் அரசியலை, தனக்குள் இணைத்துக் கொண்டது. இப்படித்தான் தமிழ்மக்களையும் பயன்படுத்தியது. ஜே.வி.பி. "புரட்சி செய்ய" ஆள்பிடித்தது. இந்த வகையில் தமிழ் மக்களிடம் ஆள்பிடித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த அரசியல் வழியிலான இந்த அரசியல் போக்கு, இதை புரட்சிகரமான நடைமுறையாக கருதுகின்ற தன்மை, புரட்சியை நேசிக்கின்றவர்கள் மத்தியில் தொடர்ந்தும் அரசியல் ரீதியாக செல்வாக்கு வகிக்கின்றது. இதையே புரட்சிகரமான அரசியல் வழியாக கருதும் போக்கும், நடைமுறையும் முனைப்புடன் இன்றும் வெளிப்படுகின்றது.

மக்களின் உரிமை சார்ந்த அவர்களின் சொந்தப் போராட்டங்களை நிராகரிக்கின்ற, அராஜகவாத உதிரி வர்க்க அரசியல் இது. மக்களை அவர்கள் உரிமை சார்ந்து அணிதிரள்வதையும், அணிதிரட்டுவதையும் மறுக்கின்ற, மக்கள்விரோத அரசியல் வெளிப்பாடாகும். மக்களுக்காக தாம் கருதும் ஒரு புரட்சியை, வெளியில் இருந்து திணிக்கும் அரசியலாகும். இது அரச ஒடுக்குமுறை சார்ந்த ஒன்றாகவே, சாராம்சத்தில் மீளவும் செயல்படுகின்றது.

மக்களுக்கு வெளியில் தீர்வு கிடையாது. அதற்காக அந்த மக்கள் போராட வேண்டும். மார்க்சியம், பாட்டாளிவர்க்கம், வர்க்கம், தலைவர்கள் .. என்ற அடையாளங்களுக்கு பின்னால் ஆட்களைப் பிடிப்பதன் மூலம், மக்களுக்கு சிலர் புரட்சியை நடத்திவிட முடியும் என்று நம்புகின்ற புரட்சியாளர்கள், தாம் ஒரு புரட்சிக்கு எதிராக இருப்பதை உணராது தொடர்ந்து செயல்படுகின்றனர்.

மக்கள் தங்கள் உரிமைக்காக போராடுவார்கள்;. இதைத்தான் புரட்சியாளர்கள் தங்கள் அரசியல் வழிமுறையாக கொள்ளவேண்டும். மக்களின் உரிமையை அங்கீகரிக்காது, தமக்கு ஆள்பிடிப்பதன் மூலம், மக்களுக்காக புரட்சி செய்ய முடியாது. இது மக்களை பார்வையாளராக மாற்றி, மக்களுக்கு சதியைத்தான் செய்ய முடியும்;. தனிநபர் பயங்கரவாதத்தைத்தான் புரட்சியாகக் காட்டி, அதை மக்கள் மேல் திணிக்கத்தான் முடியும். இதைத்தான் வலதுசாரிய புலிகள் முதல் இடதுசாரிய ஜே.வி.பி. வரை கடந்தகாலத்தில் செய்தது.

பி.இரயாகரன்

22.05.2012

1. இனவொடுக்கு முறையையும், பிரிவினைவாதத்தையும் முறியடிப்பது எப்படி? - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 01

2. தமிழ் - சிங்கள முன்னேறிய சக்திகள் ஒன்றிணைவதற்கான அரசியல் எது?- சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 02

3. அரச பாசிசத்தை புரிந்துகொள்ள புலிப் பாசிசத்தை புரிந்து கொள்ளல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 03

4. புரட்சிக்குப் பிந்தைய தீர்வைக் கொண்டு புரட்சிக்கு முந்தைய பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 04

5.இலங்கையில் ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி ஏன் உருவாகவில்லை? - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 05

6.புரட்சியின் ஏற்றத்தாழ்வான பல கட்டங்களை மறுத்தல் பற்றி - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 06

7. "கோத்தாவின் யுத்தம்" ஒரு நல்வரவு - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 07