Language Selection

புதிய கலாச்சாரம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

 ஆனாலும் கச்சேரி களை கட்டவில்லை. வெளியே "தோழர் ஸ்டாலினை சைக்கோ, கொலைகாரன் என்று எழுதிய மதனைக் கூப்பிடலாமா, மானமுள்ள சி.பி.எம். அணிகளே சிந்திப்பீர்' என்ற துண்டுப் பிரசுரத்தினை சென்னை ம.க.இ.க. தோழர்கள் விநியோகித்தது, கச்சேரியை அபஸ்வரமாய் அவ்வப்போது ஒலிக்க வைத்தது.

 

 "கம்யூனிச' சார்பாக இருக்கும் ஒரு "கலை இலக்கிய' அமைப்பு, சங்கர மடம் தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொண்டு வரும் இந்த அழகான தருணத்தில் "இந்துத்துவத்தை' அம்பலப்படுத்தி மாபெரும் இயக்கம் எடுப்பதற்குப் பதில், "அன்பே சிவம், சிவமே அன்பு' என்று  நாம பஜனை செய்வது ஏன் என்பதையும் மேற்படி அபஸ்வர நோட்டீஸ் கேட்டிருந்தது.

 

 பதிலளித்த செந்தில்நாதன் ""ஜெயேந்திரர் கைது குறித்து நாங்களும் 2,3 கூட்டம் போட்டோம், உனக்குத் தெரியவில்லை'' என்றார். மதனைப் பார்க்கவந்த ரசிகர்களில் பாதிபேர் கூட இல்லாத ஒரு கூட்டத்தை ""எங்காத்துக்காரரும் கச்சேரிக்கு''ப் போகிறார் என்றபடியாக த.மு.எ.ச. சாஸ்திரி ஹாலில் நடத்தியது உண்மைதான்; ம.க.இ.க. வின் "எஸ்.பாஸ்' என்ற கேலிச்சித்திரத்தை தங்கள் சொந்தச் சரக்குப் போல தீக்கதிரில் வெளியிட்டு விளம்பரமும் செய்தார்கள்.

 

 அந்தக் கச்சேரியில் நாங்கள் காது குளிரக் கேட்டு ரசித்த ஒரே ராகம் ""ஜெயேந்திரர் கைதை சட்டம் பார்த்துக் கொள்ளட்டும், சங்க பரிவாரங்கள் எதிர்ப்பது தவறு'' என்ற சட்டவாத ராகம்தான். இதைத்தான் யெச்சூரி போன்ற தேசிய வித்வான்களும் முன்னர் பாடியிருந்தனர். த.மு.எ.ச. நண்பர்களே! இதே சட்டமும், இந்தச் சட்டத்தைத் தாங்கிப் பிடிக்கும் ஆளும் வர்க்க அமைப்புக்களும்தான் சங்கராச்சாரியின் பார்ப்பனப் பாசிச சாம்ராச்சியத்தைக் கட்டிப் பாதுகாக்கின்றன; பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் பாதுகாவலர்களிடமே, பார்ப்பனியத்தை வீழ்த்துவதற்கு மன்றாடுகிறீர்களே வெட்கமாக இல்லை? மாஸ்கோவிலிருந்து நமது தோழர்கள் கைவலிக்க சிவப்பு இலக்கியங்களை மொழிபெயர்த்தது விரயம்தானோ? சிவப்பின் அடிப்படை, அரிச்சுவடி கூடத் தெரியவில்லையே, இதில் தமிழ் சினிமாவைக் காப்பாற்ற வேண்டும் என்ற கண்ணீர் வேறு! முதலில் உங்களுக்காக அழுங்கள், பிறகு சினிமாவுக்காக அழலாம்.

 

 த.மு.எ.ச. 12 ஆண்டுகளாக சிறந்த தமிழ்ப் படங்களுக்கு விருது கொடுத்து வருகிறதாம். அவற்றில் "புதிய கலாச்சாரத்'தால் 20 ஆண்டுகளாக விமரிசிக்கப்பட்ட படங்களே அதிகம். பம்பாய், மகாநதி, வேதம் புதிது, அழகி, தற்போது அன்பே சிவம். முன்பு மணிரத்தினத்திற்கு விருது விழாவை இதே சென்னையில் நடத்திய போது, ""பால்தாக்கரேவின் ஆசிபெற்ற பம்பாய் படத்திற்கு பல்லக்குத் தூக்கும் த.மு.எ.ச.'' என்று சுவரொட்டி ஒட்டினோம். அப்போது பேசிய வித்வான்கள், பம்பாய் படம் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்டது, அதில் தனிப்பட்ட மனமாச்சரியங்களுக்கு இடமில்லை என்றனர். இப்போதும் அதே ஸ்வரம்தான்.

 

 பொல்லாத "ஜனநாயகம்'! புஷ் வெற்றி பெற்றதும், போனமுறை பா.ஜ.க. வெற்றி பெற்றதும், 1930களில் ஹிட்லர் வெற்றி பெற்றதும் கூட இதே "ஜனநாயக' முறைப்படிதான். போகட்டும்! அன்பே சிவம் குறித்து நீங்கள் நடத்தியதாகக் கூறும் காரசாரமான வாதப் பிரதிவாதங்களையாவது தொகுத்து மேடையில் பேசியிருக்கலாமே.

 

 இதே திரைப்படம் குறித்து, உலகமயமாக்கத்தினால் ஆதாயம் அடையும் மேட்டுக்குடி வர்க்கத்திடம் கொஞ்சம் கருணை காட்டுமாறும், உலகமயமாக்கத்தினால் பாதிப்படைந்து போராட வேண்டிய தொழிலாளி வர்க்கத்தினை ஊமைகளாயும் அப்பாவிகளாயும், அன்பே சிவம் காட்டுகிறதென்று ""புதிய கலாச்சாரத்''தில் விரிவான கட்டுரை  கலை, அரசியல், அழகியல் அனைத்தையும் பரிசீலித்து  வெளியிட்டிருந்தோமே. த.மு.எ.ச நண்பர்கள் ஜனநாயகத்தை ஒரு பக்தன் அல்லது தீவிரவாதி போல நேசிப்பது உண்மையாக இருந்தால், மேடையில் எங்கள் கருத்துக்களுக்குப் பதில் சொல்லியிருக்க வேண்டும்.

 

 பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை விடுங்கள், முதலாளித்துவ ஜனநாயகத்தைக் கூட பின்பற்ற இயலாத உங்கள் நிலை குறித்து பரிதாபப்படுகிறோம்.

 

 அன்பேசிவத்தில் கிரெடிட் கார்டு, செல்பேசி போன்றவை கேலி செய்யப்படுவது குறித்து மகிழ்ந்த த.மு.எ.ச. நண்பர்களுக்கு மார்க்சியம் அத்வைதத்தின் ரேஞ்சில் அந்தப் படத்தில் கேலி செய்யப்பட்டிருப்பது குறித்து எந்தச் சுரணையுமில்லை. "அது முழுமையான மார்க்சியப்படமல்ல' என்று விமரிசனம் செய்கிறார்களாம்!

 

 கம்யூனிசம் பின்னடைந்த நேரத்தில், அவதூறுகளுக்கு எதிராகப் பொதுவுடைமைக் கொள்கையை உறுதியாகப் பற்றி நிற்பதை விடுத்து, ஏதோ கொஞ்சம் கம்யூனிசத்தை  வீதி நாடகம், செங்கொடி, சி.ஐ.டி.யு. பெயர்ப்பலகை  காட்டியிருக்கிறார்கள் என்று மயங்குபவன் மண்டூகம். என்ன இருந்தாலும் நீங்கள் கம்பரசனை, பாரதிராசனை மரபில் வந்தவர்களாயிற்றே!

 

 அடுத்து, மதனை ஏன் அழைத்தீர்கள் என்ற கேள்விக்கு, படத்தின் வசனகர்த்தா என்ற முறையில் அழைத்தோம் எனப் பதிலளித்தார்கள். மதனும், த.மு.எ.ச. மேடையிலேயே பேசிவிட்டேன் என்று வெளியில் ஜம்பமடித்து (தனது பாவங்களை மறைக்கலாம்) பேசுமளவுக்கு இது முக்கியமான மேடை என்றார். த.மு.எ.ச. வித்வான் நண்பர்கள் மதனே சங்கோஜப்படுமளவுக்குப் பாடித் தீர்த்தார்கள். கம்பனின் ஒரு வரியை ஒரு வாரம் முழுவதும் ரசிக்கும் ஜீவாவின் நினைவை, மேலாண்மை பொன்னுச்சாமி நிகழ்த்திக் காட்டினார்.

 

 ஸ்டாலினை "சைக்கோ கொலைகாரன்' என்று மதன் எழுதிய கட்டுரை மதனுடைய "கருத்தாம்!' "சங்கரய்யா ஒரு தெருப்பொறுக்கி' என்றும் அவர் "கருத்து' தெரிவித்திருந்தால் மேடையேற்றி அவார்டு கொடுப்பார்களா? ""அறிஞர் மதன் அவர்களே, அன்பே சிவத்தில் "தீவிரமாக' கம்யூனிசத்தை ஆதரித்த நீங்கள் ஸ்டாலினைப் பற்றி தவறாகப் புரிந்திருக்கிறீர்களே'' என்று சின்ன விளக்கமாவது தந்திருக்கலாமே!

 

 மதன் யார்? ஜூ.வி. ஒரு பலான பத்திரிக்கை என்று முன்பு ஒரு விளம்பரம் பு.க.வில் கொடுத்திருந்தோம். அதை வாசகர்கள் நினைவுபடுத்திக் கொண்டால் மதனை விளக்கத் தேவையில்லை. ஆபாசம், கிசுகிசு, இரண்டையும் இணைத்து எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று தமிழ்ப் பத்திரிக்கையுலகின் போக்கை மாற்றியமைப்பதில் மதன் முக்கியமானவர். பார்ப்பனியத்தின் கேளிக்கை மரபை காலத்திற்கேற்ப மாற்றியமைத்த இந்தக் கழிசடை குறித்து இங்கிதமாக  சங்கீதமாக ஒரே ஒரு விமரிசனத்தைக் கூட மறந்தும் பேசவில்லை என்பது, த.மு.எ.ச.வினரும் மதனின் எழுத்து பாணத்திற்கு வீழ்ந்துவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது. த.மு.எ.ச.வில் செம்மலரை விட, விகடன் குரூப் பத்திரிக்கைகளுக்குத்தான் ரசிகர்கள் அதிகம் போலும்!

 

 முத்தாய்ப்பாக, ""கலையும் அரசியலும் எவ்வளவு கை கோர்க்கலாம் என்று கற்றுத் தருகின்ற படம் அன்பே சிவம்'' என்று முடித்தார் மேலாண்மை பொன்னுச்சாமி.

 

 உண்மைதான். "புதிய கலாச்சாரம்' திரைப்பட விமரிசனத்தின் இறுதியில் இப்படித்தான் இருக்கிறது: ""ஐயா, படத்தைப் பாராட்டுகிறோம். மார்க்சிஸ்டு கட்சியின் திரை அவதாரத்தை இத்தனைத் துல்லியமாக யாரும் வழங்கியதில்லை. ஒருவேளை சி.ஐ.டி.யு.வின் அறிவிப்புப் பலகையைக் காட்டாமல் இருந்திருந்தாலும் இது மார்க்சிஸ்டு கட்சிதான் என்ற உண்மை காட்சிக்குக் காட்சி பொருத்தமான கலையம்சத்துடன் எடுத்தியம்பப்படுகிறது. அதற்காக மீண்டும் பாராட்டுகிறோம்.''

 

இளநம்பி