Language Selection

நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ்ப்பாண மக்களைக் கதிகலங்க வைத்த "மண்டையன் குழு "

"தீப்பொறி" குழுவின் கொள்கை மற்றும் வேலைத்திட்டம் குறித்த நகல் டொமினிக்கால் எழுதி முடிக்கப்பட்டிருந்தது. செயற்குழு உறுப்பினர்களால் நகல் படிக்கப்பட்டு அது குறித்த விவாதங்கள் ஆரம்பமாகியிருந்தன. இதேவேளை மூதூரிலிருந்து யாழ்ப்பாணம் வந்து தங்கியிருந்த சசி தேசிய இனப்பிரச்சனை குறித்த தனது கருத்துக்களையும் அதற்கான தீர்வுகளையும் எழுத்து மூலமாக முன்வைத்திருந்தார்.

"தீப்பொறி"க்குழுவின் தேசிய இனப்பிரச்சனை குறித்த பார்வையும் அதற்கான தீர்வும், சசியினுடைய தேசிய இனப்பிரச்சனை குறித்த பார்வையும் அதற்கான தீர்வும் அடிப்படையில் நேரெதிராகவே காணப்பட்டது. "தீப்பொறி"ச் செயற்குழுவின் பெரும்பான்மையினரின் கருத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட கொள்கைத்திட்டம் சசியால் உடன்பாடு காணமுடியாததொன்றாக காணப்பட்டிருந்தது. தேசிய இனப்பிரச்சனை குறித்த சசியின் கருத்துக்கள் மற்றும் அவரால் எழுத்து மூலம் முன்வைக்கப்பட்ட அறிக்கை குறித்து "தீப்பொறி"ச் செயற்குழுவின் கருத்தை டொமினிக்கும் ரகுமான் ஜானும் சசியுடன் சந்திப்பை ஏற்படுத்தி தெரிவித்திருந்தனர்.

தேசிய இனப் பிரச்சனை குறித்த சசியின் கருத்துக்களுடன் "தீப்பொறி" செயற்குழுவுக்கு உடன்பாடு கிடையாது என்று செயற்குழு முடிவெடுத்துள்ளதாக டொமினிக்காலும் ரகுமான் ஜானாலும் சசியிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் "தீப்பொறி"க் குழுவின் கொள்கை மற்றும் வேலைத்திட்டத்தை உருவாக்குவதை நோக்கிய முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நாம் எம்மத்தியில் காணப்பட்ட மாறுபட்ட கருத்துக்கள், அங்கத்தவர்களால் முன்வைக்கப்படும் மாறுபட்ட பார்வைகள் குறித்து அமைப்பில் உள்ள அனைத்து அங்கத்தவர்களுக்கும் தெரிவிக்கவேண்டியது அவசியமானதொன்றாகவே இருந்தது.

சசியினுடைய தேசிய இனப்பிரச்சனை குறித்த கருத்தடங்கிய அறிக்கையை செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே படித்து அது குறித்து தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்த நிலையில் சசியினுடைய கருத்துடன் "தீப்பொறி"ச் செயற்குழுவுக்கு உடன்பாடு கிடையாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சசியினுடைய மாறுபட்ட கருத்தை செயற்குழு கீழணிகளுக்கு கொண்டு சென்று அவர்களுடைய கருத்துக்களை பெற்றிருக்கவில்லை.

இதனால் டொமினிக்கால் தயாரிக்கப்பட்ட கொள்கை, வேலைத்திட்ட நகலை மட்டுமின்றி சசியால் முன்வைக்கப்பட்டிருந்த தேசிய இனப்பிரச்சனை குறித்த கருத்துக்கள் அடங்கிய அறிக்கையையும் ஏனைய "தீப்பொறி"க் குழு அங்கத்தவர்களுக்கும் கொண்டு சென்று விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தேன். இதன் மூலம் மட்டுமே எமது கொள்கைத்திட்டத்தை, குறிப்பாக தேசிய இனப்பிரச்சனை எமது தீர்வுத்திட்டத்தை உருவாக்குவதை நோக்கி சரியான பாதையில்முன்னேற முடியும் என்ற கருத்து என்னால் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதன் முதற்கட்டமாக எம்முடன் "தீப்பொறி"க் குழுவில் செயற்பட்டுக் கொண்டிருந்தவர்களில் சிலரைத் தெரிவுசெய்து செயற்குழுவுக்கு அடுத்த கட்ட குழுவாக உருவாக்கியதுடன் டொமினிக்கால் தயாரிக்கப்பட்ட நகலையும் தேசிய இனப்பிரச்சனை குறித்து சசியால் தயாரிக்கப்பட்ட அறிக்கையையும் ஏனைய அங்கத்தவர்களுக்குக் கொண்டு சென்று அது குறித்து அங்கத்தவர்களின் கருத்துக்கள் அறியப்பட்டதுடன் விவாதமும் ஆரம்பமாகியிருந்தது.

செயற்குழுவுக்கு அடுத்த கட்டக் குழுவில் மீரா, மித்திரா, கரோலின், காசி(ரகு), சுரேன், விஜயன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். "தீப்பொறி" க் குழுவின் கொள்கை மற்றும் வேலைத்திட்டம் குறித்து செயற்குழுவுக்குள் மட்டுமல்லாது ஏனைய குழுக்களிலும் விவாதம் ஆரம்பமாகியிருந்தது.

தேசிய இனப்பிரச்சனை குறித்து சசியால் முன்வைக்கப்பட்ட அறிக்கையிலுள்ள கருத்தை "தீப்பொறி" செயற்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளாததையடுத்து, "தீப்பொறி"க் குழுவின் தேசிய இனப்பிரச்சனை குறித்த நிலைப்பாட்டில் தனக்கு உடன்பாடில்லை என்பதைத் தெரிவித்திருந்த சசி "தீப்பொறி"க் குழுவுடன் இணைந்து செயற்பட விரும்பவில்லை எனக் கூறி மூதூர் திரும்பியிருந்தார்.

"தீப்பொறி"க் குழுவுடனான தேசிய இனப்பிரச்சனை குறித்த முரண்பட்ட கருத்தில் சசி எம்முடன் இணைந்து செயற்பட விரும்பாமல் சென்றிருந்தபோதும் செயற்குழுவுக்குள் தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக இரண்டு வெவ்வேறு பார்வைகள், கருத்துக்கள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியிருந்தது. டொமினிக்கால் தயாரிக்கப்புடடிருந்த கொள்கைத்திட்ட நகல் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வாக பிரிந்து சென்று தனிநாடு அமைப்பது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

சசியால் முன்வைக்கப்பட்டிருந்த தேசிய இனப்பிரச்சனை குறித்த கருத்தில் முழுமையான உடன்பாட்டைக் கொண்டிருந்த நான், இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் அமைந்த தேசிய இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டமாக அமையவேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்ததுடன் சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளுடனும் உழைக்கும் மக்களுடனும் ஜக்கியத்தை ஏற்படுத்திப் போராடுவதை முன்நிபந்தனையாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தேன்.

"தீப்பொறி"ச் செயற்குழுவின் பெரும்பான்மை அங்கத்தவர்களின் தேசிய இனப்பிரச்சனை குறித்த கருத்தானது சிங்கள முற்போக்கு சக்திகளும் சிங்கள உழைக்கும் மக்களும் பேரினவாதத்திற்கு எதிராகப் போராட முடியாதவாறு பலவீனமாகவிருக்கும் ஒரு நிலையில் சிறுபான்மை இனமான ஒடுக்கப்படும் தமிழ் இனம் பிரிந்து சென்று தனி அரசு அமைப்பதன் மூலமே தேசிய இன ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறமுடியும் என்ற கருத்தை முன்வைத்தனர். தமிழ்மக்கள் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதன் மூலம் சிங்கள மக்கள் இனவாதத்திலிருந்து விடுதலை பெறவும் இலங்கை அரசுக்கெதிராகப் போராடி ஒரு புரட்சிகர மாற்றத்தை தென்னிலங்கையில் ஏற்படுத்த உதவ முடியும் எனக் கூறப்பட்டது.

சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளினதும் உழைக்கும் மக்களினதும் ஆதரவின்றி அவர்களுடனான ஐக்கியமுமின்றி தமிழ்மக்கள் இன ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவது குறித்து சிந்திப்பது தவறான போக்காகவே காணப்படவேண்டியதொன்றாக இருந்தது. .

ஆனால் சசியினுடைய கருத்தோ அல்லது எனது கருத்தோ தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு சிங்கள முற்போக்கு, ஜனநாயக சக்திகளுடனும் உழைக்கும் மக்களுடனுமான ஐக்கியத்தின் மூலமாகவே வெல்லப்பட முடியும்; தமிழ்மக்கள் இனவொடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதென்பது சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளினதும் உழைக்கும் மக்களின் பங்களிப்புடனும் தான் நடைமுறைச் சாத்தியமானதொன்றாகும் என்பதாக இருந்தது. தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்த விடயத்தில் "தீப்பொறி" செயற்குழுவுக்குள் மட்டுமல்லாது கீழணி உறுப்பினர்களிடமும் கூட மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்டன.

இந்தியப்படையின் ஆதரவுடன் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி போன்றவை வடக்கு-கிழக்கை மையப்படுத்தி தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வந்ததுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மோதல்களிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனால் உமாமகேஸ்வரனோ புளொட்டின் செயற்பாடுகளை தென்னிலங்கையை மையப்படுத்தி மேற்கொண்டு வந்ததுடன் மன்னார் குஞ்சுக்குளப் பிரதேசத்தில் புளொட்டில் இராணுவப் பயிற்சி முடித்துக் கொண்டவர்களை உள்ளடக்கிய இராணுவமுகாம் ஒன்றையும் உருவாக்கியிருந்தார்.

இலங்கையில் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மேல்மட்ட உறுப்பினர்களுடன் நெருக்கமான உறவைப் பேணிவந்த உமாமகேஸ்வரன் 1988 ஏப்ரல் மாதம் இலங்கையின் ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுடன் சந்திப்பை நிகழ்த்தியிருந்தார். இச் சந்திப்பானது ஈழவிடுதலைப் போராட்ட அமைப்பின் தலைவர் ஒருவர் இலங்கையின் ஜனாதிபதியைச் சந்தித்த முதல் நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்தகாலத்தில் தம்மால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களில் அங்கம் வகித்திருந்து குடும்ப வாழ்வுக்கு திரும்பிவிட்டிருந்தவர்கள் இந்தியப்படையின் ஆதரவுடன் வடக்குக்-கிழக்கில் செயற்படும் "துரோகக் குழு"க்களுக்கு உதவக்கூடும் என்ற சந்தேகத்திலும், தமது கருத்துக்களுடனும் நடைமுறையுடனும் உடன்படாதவர்களையும் கொலைசெய்து தமது கொலைக் கலாச்சாரத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டவர்களில் புளொட்டில் அங்கம் வகித்திருந்து குடும்ப வாழ்வுக்கு திரும்பிவிட்டிருந்த பலரும் அடங்கியிருந்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனும், புளொட்டின் மாணவர் அமைப்பில் தீவிரமாகச் செயற்பட்டவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்களில் முன்னணியில் செயற்பட்டவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டபோது விஜிதரனை விடுதலை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவராகவும் அப்போராட்டத்தில் கலந்துகொண்டவருமான தம்பு விமலேஸ்வரன் தமிழீழ விடுதலைப் புலிகளால் நல்லூர் சட்டநாதர் கோவிலருகில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

(விமலேஸ்வரன் தமிழீழ விடுதலைப் புலிகளால் நல்லூர் சட்டநாதர் கோவிலருகில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் முன்னணி வகித்ததற்காக விமலேஸ்வரனுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் மரணம் "பரிசாக" வழங்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழக மாணவன் விஜிதரனில் தொடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் படுகொலை இப்பொழுது விமலேஸ்வரனைச் சுட்டுக் கொலை செய்துடன் அதன் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபுறத்தில் ஜனநாயக சக்திகளையும், புத்திஜீவிகளையும், தம்மை விமர்சித்த அல்லது ஜனநாயக விரோதப் போக்குகளைஅம்பலப்படுத்தியவர்களையும், தம்முடன் உடன்பாடு காணாதவர்களையும் கொன்றொழித்துக் கொண்டிருந்த அதேநேரம் யாழ்ப்பாணத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கிய பிரமுகராக விளங்கிய சுரேஸ் பிரேமச்சந்திரன் (ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன்) இந்தியப் படையின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் அசோக் ஹோட்டலில் தனது காரியாலயத்தை அமைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்களையொத்த கொலைவெறிச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

(சுரேஸ் பிரேமச்சந்திரன்)

யாழ்ப்பாண நகர வர்த்தக நிலையங்களில் பணம் வசூலித்தல், தமிழீழ விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிப்போரை அல்லது அவர்களது ஆதரவாளர்கள் எனச் சந்தேகிப்போரை சுட்டுக்கொலை செய்தல் அல்லது கோரத்தனமாக அவர்களது கழுத்தை வெட்டி மக்கள் பார்வைக்கு வைத்தல் என யாழ்ப்பாண மக்களை பீதிக்குள்ளாக்கும் செயல்களில் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். கழுத்தை வெட்டி கொலை செய்து கோரத்தனமான செயல்களில் ஈடுபட்ட "மண்டையன் குழு"த் தலைவராக யாழ்ப்பாண மக்களுக்கு அறிமுகமான சுரேஸ் பிரேமச்சந்திரன், பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசிசப் போக்குகளுக்கு துணை புரியவராகவும் அவர்களினது போராட்டத்தை "தேசிய விடுதலைப் போராட்டம்" என இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக குரலெழுப்புபவராகவும் காணப்பட்டார்.

(சுரேஸ் பிரேமச்சந்திரன்)

ஈழமக்கள் புரட்சிகர முன்னணியில் ஆரம்பகாலங்களில் இடதுசாரி அரசியல் பேசிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைகளை வெட்டி கோரத்தனமான கொலைகளைச் செய்து மண்டையன் குழுத் தலைவரானதுடன் இப்பொழுது "தமிழ் தேசியம்" பேசிய வண்ணம் தமிழ் மக்களுக்குத் தலைமை கொடுக்க முன்வந்திருக்கும் நிலையைக் காண்கின்றோம். இந்தியப்படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும், "மண்டையன் குழு"வும் யாழ்ப்பாணத்து மக்களை கொலைசெய்து கோரத்தனம் புரிந்து கொண்டிருந்ததால் எவருடைய உயிருக்கும் உத்தரவாதம் கிடையாது என்ற நிலை உருவாகத் தொடங்கியிருந்தது.

(தொடரும்)

 

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14

15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15

16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16

17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17

18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18

19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19

20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20

21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21

22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22

23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23

24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24

25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25

26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26

27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27

28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28

29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29

30 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30

31.  புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 31

32. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 32

33. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 33

34. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 34

35.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 35

36.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 36

37.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 37

38.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 38

39.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 39

40. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 40

41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 41

42. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 42

43. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 43

44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 44

45. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 45

46. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 46

47. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 47

48. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 48

49. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 49

50 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 50

51.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 51

52. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 52

53.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 53

54.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 54

55.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 55

56. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 56