தியாகங்களுக்கும், அர்ப்பணிப்புகளுக்கும் இலங்கையில் குறைவில்லை. அப்படியென்றால் தவறு எங்கே உள்ளது? ஆம் தவறு அரசியலில் உள்ளது. அதன் யுத்தத் தந்திரத்தில் உள்ளது.
இதற்கான அடிப்படைக் காரணம், லெனினிய வர்க்கக் கண்ணோட்டத்தை மறுக்கும் திரோஸ்க்கிய கோட்பாட்டுச் செல்வாக்காகும். இதுதான் இன்று வரையான இலங்கையில் உள்ள நிலைமை. உண்மையில் லெனினியத்தை உயர்த்திய கட்சிகள் கூட, லெனினை மறுத்த திரோஸ்க்கிய கண்ணோட்டத்தையே சார்ந்து நின்றன. அதைத்தான் இன்றும் தம் அரசியல் வழிமுறையாக வெளிப்படுத்தி வருகின்றது. இந்த வகையில் இலங்கையில் லெனினிய வழியிலான வர்க்க போராட்டக் கட்சிக்கு பதில், வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் திரோஸ்க்கிய கண்ணோட்டம் சார்ந்த கட்சிகள்தான் பொதுவில் உருவானது. புரட்சிகரமான பாட்டாளி வர்க்கக் கட்சி உருவாவதை, இது தொடர்ந்து தடுத்து நிறுத்துகின்றது.
இந்த வகையில் இலங்கையில் வர்க்க விரோத திரோஸ்கிய கோட்பாட்டுச் செல்வாக்கின் முக்கிய கூறுகளை இங்கு இனம் காண்போம்.
1. இலங்கையில் ஜனநாயகப் புரட்சி, காலனிய காலத்தில் நிறைவடைந்து விட்டதாக கூறுவது. இலங்கைப் பாராளுமன்ற ஆட்சியை, முதலாளித்துவ பாராளுமன்றமாக கூறுவது.
2. இலங்கையில் காலனிக்குப் பிந்தைய ஆட்சியை தேசிய முதலாளித்துவ ஆட்சியாகக் காட்டுவது. தரகு முதலாளித்துவ ஆட்சி என்பதை மறுப்பது.
3. காலனிக்கு முந்தைய, பிந்தைய அரைக்காலனிய அரை நிலப்பிரத்துவ சமூக அமைப்பை மறுத்தல்
4.1970 - 1980 களில் உருவான நவகாலனியத்தை 1948 இல் நடந்ததாக காட்டுதல்
5. இனப் பிரச்சனையை லெனினின் சுயநிர்ணய அடிப்படையில் அணுக மறுத்தல், திரோஸ்கிய வழியை கொள்ளுதல்
6. இன்னும் பிற
இந்தவகையில் திரோஸ்கிய கோட்பாட்டு அடிப்படைகள், இலங்கையில் லெனினிய கட்சி உருவாவதை தடுத்து வருகின்றது. இதன் மூலம் வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து தடுத்துவருகின்றது. இந்த வகையில் இந்த வர்க்க விரோத அரசியலை இலங்கை பாட்டாளி வர்க்கம் இனம் கண்டு களையவேண்டும். இந்த வகையில் லெனினிய வர்க்கக் கோட்பாட்டு அடிப்படையை புரிந்து கொள்வது அவசியமானது.
ஜனநாயக புரட்சியை மறுக்கும் திரோஸ்கிய கண்ணோட்டம்
1905 ம் ஆண்டு லெனின் ஜனநாயகப் புரட்சிக் கடமையை, பாட்டாளி வர்க்கம் தன் யுத்த தந்திரமாக்க வேண்டும் என்று கோரினார். இந்த வகையில் "ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள்" என்ற புகழ்பெற்ற, புரட்சிகர வழிமுறையை லெனின் முன்வைத்தார். 1905 ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நிலையில், அதைப் பாட்டாளி வர்க்கம் தன் கையில் எடுத்து நிறைவேற்றும் வரலாற்றுக் கடமையை லெனின் அன்று முன்வைத்தார். இந்த வர்க்க நடைமுறையை மறுதலித்த திரோஸ்கி போன்றவர்களை அம்பலப்படுத்தியே, அதற்கான கோட்பாட்டு அடிப்படையை இந்த நூல் முன்வைக்கின்றது.
இந்த அரசியல் அடிப்படையில் தான் சீனாவில் மாவோ ஜனநாயகக் கடமையை நிறைவு செய்யும் வண்ணம், பாட்டாளி வர்க்கம் தன் வர்க்கப் போராட்டத்தின் ஊடாக அதை முன்னெடுக்கும் வண்ணம் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்வைத்தார்.
இப்படி லெனினிய புரட்சிகர வர்க்கப் போராட்ட வழி இருக்க, இலங்கையில் இதை மறுக்கின்றது திரோஸ்கிய வழி. இதுதான் அரசியலில் இன்று வரை தொடருகின்றது. இது லெனினிய யுத்ததந்திர வழியையும், அதன் வழிவந்த மாவோசிய யுத்த தந்திரத்தையும் மறுக்க, இலங்கை ஜனநாயக புரட்சிக் கடமை முடிவடைந்து விட்டதாக கூறுகின்றது. இந்த அரசியல் பின்புலத்தில் தரகுமுதலாளித்துவதை தேசிய முதலாளித்துவமாக காட்டித் திரிக்கின்றது.
இப்படி பாட்டாளி வர்க்கம் நடத்த வேண்டி ஐனநாயகப் புரட்சிக் கடமையை திரோக்ஸ்சிய கோட்பாடுகள் மறுத்தலித்து விடுகின்றது. இலங்கைப் பாட்டாளி வர்க்கம் ஜனநாயக புரட்சியையும், பாட்டாளி வர்க்கப் புரட்சியையும் ஒருங்கே முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமைகளை, திரோஸ்கிய கோட்பாடுகள் இலங்கையில் தொடர்ந்து மறுத்தலித்து வருகின்றது. இது லெனினியத்தை உயர்த்த முனையும் கட்சிகளில் கூட, இந்தச் செல்வாக்கு தான் தொடர்ந்து உள்ளது.
இந்த ஜனநாயக புரட்சிகரக் கடமையை மறுதலிக்க, காலனித்துவாதிகள் நிலப்பிரபுத்துவதை ஒழித்து அதில் தேசிய முதலாளித்துவத்தை நிறுவியதாக கூறுகின்றது. காலனித்துவ வாதிகள் ஜனநாயகக் கடமையை நிறைவுசெய்யும் வண்ணம் நிலப்பிரபுத்துவதை ஒழித்ததாகக் கூறுவது ஒரு திரிபு. காலனிய - நிலப்பிரபுத்துவ முரண்பாடுகள் இதை ஒழிக்கவில்லை. மாறாக சமரசம் செய்து கொண்டு, சீர்திருத்தத்தை புகுத்தியதன் மூலம், அரை நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பாக அதை மாறியது. காலனித்துவவாதிகள் நிலப்பிரபுத்துவதுடன் சேர்ந்துதான், தன் காலனிய ஆட்சியை தக்க வைத்தனர்.
1948 ஆண்டு அரை நிலப்பிரபுத்துவ அரைக் காலனிய ஆட்சியைத்தான் காலனியவாதிகள் விட்டுச் சென்றனர். காலனிய ஆட்சி காலத்தில், காலனிய முதலாளித்துவம் சார்ந்த தரகு முதலாளித்துவம் தான் இலங்கையில் உருவானது. காலனிக்குப் பிந்தைய 1948 இல் தரகு முதலாளித்துவ, அரை நிலப்பிரபுத்துவ அரைக் காலனிய சக்திகள் தான் ஆட்சிக்கு வந்தன. இங்கு தேசிய முதலாளித்துவம் ஆட்சிக்கு வரவில்லை. ஜனநாயகக் கடமை நிறைவு செய்யப்படவில்லை. தேசிய முதலாளித்துவ வர்க்கம், காலனிய காலம் முதல் ஒடுக்கப்பட்ட வர்க்கமாகவே தொடர்ந்து இருந்து வருகின்றது.
யார் எதிரி யார் நண்பன் என்பது முதல், யுத்ததந்திரம் வரையான தவறு இதனால் உருவாகின்றது. ஒரு புரட்சிகரக் கடமையை நிறைவு செய்யாமல், மற்றோர் புரட்சிகரக் கடமையை தனித்து பூர்த்தி செய்ய முடியாது. ஜனநாயகப் புரட்சியை நிறைவு செய்யாமல், சோசலிசப் புரட்சியை நடத்த முடியாது.
இந்த வகையில் லெனினிய வழியான "ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள்" என்ற வர்க்கக் கடமையை நிராகரித்த திரோஸ்கியக் கண்ணோட்டம் தான், இலங்கையில் வர்க்கப்போராட்டத்துக்கு இன்று தடையாக இருக்கின்றது.
இன முரண்பாடும் திரோஸ்கியமும்
தேசிய இனப்பிரச்சனையில் லெனினியக் கோட்பாடு சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பது. திரோஸ்கிய தேசியக் கோட்பாடு லெனினிய சுயநிர்ணயத்தை மறுத்து, இன பிரச்சனை பாட்டாளி வர்க்க ஆட்சியில் தீர்க்கப்படும் என்று கூறுவதாகும். இதன் மூலம் புரட்சிக்கு முந்தைய பாட்டாளி வர்க்க கடமையை நிராகரித்தல் ஆகும்.
லெனினின் சுயநிர்ணயக் கோட்பாட்டை அன்று திரோஸ்கிகள் மறுத்த அதே அடிப்படையில் தான், இன்று இலங்கையில் சுயநிர்ணயத்தை மறுப்பதை காணமுடியும். 60 வருடமாக இலங்கையில் இனவாதம் நீடிக்கின்றது என்றால், அதற்கு காரணம் சுயநிர்ணயத்தை மறுக்கும் திரோஸ்கிய கோட்பாடுதான் காரணம். லெனினின் கோட்பாடு மற்றும் அதன் நடைமுறையையும் இலங்கையில் பாட்டாளி வர்க்கம் கையாண்டு இருந்தால், இலங்கையில் பிரதான முரண்பாடாக இன முரண்பாடு இருந்திருக்காது. மாறாக அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாடு பிரதான முரண்பாடாக முன்னுக்கு வந்திருக்கும்.
சுயநிர்ணயத்தை மறுக்கும் திரோஸ்கிய கோட்பாடுதான் இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை தடுத்து, இனவாதத்தை பலப்படுத்தியது.
லெனினிய சுயநிர்ணய கோட்பாடு இனவாதத்தை தடுத்து நிறுத்த, புரட்சிக்கு முந்தைய வர்க்க அணிச்சேர்க்கையை உருவாக்க வழிகாட்டுகின்றது. சோசலிசப் புரட்சியின் பின்னான தீர்வு என்ற திரோஸ்கிய கோட்பாட்டை மறுத்து, புரட்சிக்கு முன் இனப் பிரச்சனையை முரணற்ற வகையில் அது அணுகுகின்றது.
இந்த வகையில் புரட்சி நடத்தும் லெனினிய வழியா அல்லது புரட்சியை சீரழிக்கும் திரோஸ்க்கிய வழியா என்பதை தீர்மானிப்பது, சிங்களப் பாட்டாளி வர்க்கத்தின் உடனடி அரசியல் கடமையாகும். இதைத்தான் தமிழ் பாட்டாளி வர்க்கம் சிங்களப் பாட்டாளி வர்க்கத்திடம் கோருகின்றது.
பி.இரயாகரன்
09.05.2012