இனப் பிரச்சனைக்கான ஒரு தீர்வை வழங்காது இழுத்தடிக்க, பாராளுமன்ற தெரிவுக் குழுவை தீர்வுக்கான வழியாக அரசு புதிதாகக் காட்டுகின்றது. இந்த உண்மை மட்டும் தான், இதன்பின் உள்ளது என்று கருதினால் அதுவொரு முழுப்பொய். மற்றொரு உண்மை உள்ளது. இந்த தீர்வை வழங்காத அரசுக்கு எதிராக, கூட்டணியிடம் எந்தப் போராட்ட வடிவமும் கிடையாது. ஆக அரசு தீர்வை வழங்காது, கூட்டணி அதற்காக போராடாது என்பதுதான் இதன் பின்னுள்ள உண்மை. இரு தரப்பும் சேர்ந்து மக்களை இந்த அரசியலுக்குள் கட்டிப்போட்டு மூழ்கடித்து வருகின்றனர்.
பேரினவாத அரசின் இனவாத சூழ்ச்சிக்கு எதிராக, கூட்டணியிடம் மாற்று வேலைத் திட்டம் எதுவும் கிடையாது. உண்மையில் இதை எதிர்கொள்ளும் அரசியல் ஆற்றலும் கிடையாது. பேரினவாதம் செய்ய விரும்புகின்றதற்கு அமைய கூட்டணியின் அரசியல் செயல்பாடுகள் உள்ளது.
இலங்கைக்கும் அமெரிக்கா தலைமையிலான நாடுகளுக்கும் இடையிலான முரண்பாட்டை சார்ந்து இயங்குமளவுக்கு கூட்டணியின் அரசியல் குறுகியது. அது சிங்கக் கொடியை பிடிக்கும் அளவுக்கு மலிவானது. இதற்கு வெளியில் அதனிடம் வேறு எந்த மாற்று வடிவமும் கிடையாது. இப்படிப்பட்ட இவர்களின் அரசியலால் தான், தமிழ்மக்களின் உரிமைகள் இலகுவாக மறுக்கப்பட்டு, இனம் அழிக்கப்படுகின்றது. சொந்த மக்களைச் சாராத புலிகளின் அதே அழிவு அரசியல் வக்கிரங்களுடன் தான், கூட்டணியும் பயணிக்கின்றது.
அமெரிக்கா தலைமையிலான நாடுகளுடனான இலங்கையின் முரண்பாடு அவர்களுக்கு இடையில் வேறு வழியில் தீர்க்கப்பட்டால், தமிழ் மக்களுக்கு என்ன நடக்கும்? கூட்டணி என்ன தான் செய்யும்? புலிகள் முள்ளிவாய்க்காலில் பலியிடப்பட்டது போல், மற்றொரு பலியீட்டைத் தவிர வேறு மாற்று வழி அதனிடம் கிடையாது. இதுதான் இங்குள்ள உண்மை.
இதல் இருந்து மீள்வதற்கான தீர்வு என்ன? இதைத்தான் நாம் இன்று சிந்திக்க வேண்டும்.
1.தமிழ் மக்கள் தாமே தமக்காக போராடும் வண்ணம் மக்களை அணிதிரட்டுவது அவசியம்;. இது மட்டுமின்றி பேரினவாதிகஞக்கு எதிராக சிங்கள மக்களுடன் இணைந்து இதைத் தீர்க்க முனைவது. சிங்கக்கொடி பிடிக்கும் வர்க்க அரசியலுக்கு நேர் எதிரான வர்க்க அரசியல் அவசியம்
2.அரசின் நயவஞ்சகமான அனைத்து தொடர்ச்சியான சதிகளையும், அரசியல் ரீதியாக எதிர்கொண்டு அதை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும்.
இந்த வகையில் அணுகப்பட வேண்டும்.
1.தமிழ்மக்கள் தமக்காக தாம் போராடுவது தான் உரிமைப் போராட்டம். பார்வையாளராக இருத்தல் அல்ல. மக்கள் தாம் போராடும் வண்ணம், புலிகள் முதல் கூட்டணி வரை எந்த அரசியலிலும் கிடையாது. அத்துடன் அதை அவர்கள் அனுமதிக்கவில்லை. உண்மையில் இதை நிராகரிக்கும் இந்த அரசியல் தான், தமிழ் மக்களுக்கு எதிரானது. பேரினவாத ஒடுக்குமுறைக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல. தாம் தமிழ் மக்களின் உரிமையை பெற்றுக் கொடுக்க போவதாகக் கூறிக்கொண்டு, தமிழ் மக்களை தொடர்ந்து அரசியல் அனாதையாக்குகின்றனர்.
2.இன்று இனப் பிரச்சனையைத் தீர்க்க பாராளுமன்ற தெரிவு குழு என்ற அரசின் கபடத்தை, சவாலாகக் கொண்டு அதை முறியடித்தல் அவசியமானது. இந்த வகையில் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்து கொண்டு அதை முறியடிக்கும் வண்ணம் அதை அணுக வேண்டும். இதற்கு வெளியில் கூட்டணியிடம் மாற்று வழி கிடையாது.
இந்த வகையில் பாராளுமன்றக் குழுவின் நோக்கத்தை முறியடிக்கும் வண்ணம், எதிர் அரசியல் மூலம் அதை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும். இந்த வகையில் கலந்து கொள்வதாயின் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் யார் கலந்து கொள்ளமுடியும் என்ற அரசியலை முன்வைக்க வேண்டும்.
1. இனப் பிரச்சனை உண்டு என்று ஏற்றுக்கொண்டு, அதை தீர்க்க வேண்டும் என்று கருதுகின்ற கட்சிகள் மட்டும் தான் கலந்து பேச முடியும் என்ற உண்மையை முன்னிறுத்த வேண்டும்.
2. இனப்பிரச்னையை ஏற்று தீர்க்க முனையும் கட்சிகள், தனித்தனியாக முன்கூட்டியே தங்கள் தீர்வை மக்கள் முன் பகிரங்கமாக முன்வைப்பதன் மூலம் தான், நாமும் கலந்து பேச முடியும் என்ற உண்மையை முன்வைக்க வேண்டும்.
3.அரசு என்ற வகையில் தனது தீர்வு என்ன என்பதை தன் பங்குக்கு முன்வைக்கவேண்டும்;. இந்த வகையில் தான் எதையும் பேச முடியும் என்பதை தெளிவாக்க வேண்டும்;.
4.எவ்வளவு காலத்தில் என்பதையம், அனைத்தையும் மக்கள் முன்வைத்து தான் பேச முடியும் என்பதை தெளிவாக்க வேண்டும்.
இந்த அடிப்படையில் பாராளுமன்ற தெரிவுக்கு குழுவில் நாம் கூடிப் பேசி முடிவெடுக்க தயார் என்று கூறி, இதன் பின்னான இனவாத சதிகளை தனிமைப்படுத்தி முடியடிக்க வேண்டும்.
இனப் பிரச்சனை இல்லை என்பவர்களுடன் பேச எதுவும் இல்லை என்பதையும், தனது சொந்த கட்சியின் தீர்வை முன்வைக்காதவர்களுடன் பேச எதுவுமில்லை என்பதையும் வலுயுறுத்தி அதை அரசியல் தளத்தில் வெற்றி கொள்ள வேண்டும்.
சிங்கக் கொடியை தூக்குவதற்கு பதில், எதிர்கட்சிகளை இந்த வகையில் அரசியல் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கவேண்டும். கொடியை தூக்கிக் காட்டி, இதை வெல்ல முடியாது. தங்களை சுரண்டு ஆளும் இந்த வர்க்கக் கொடியை சிங்கள ஒடுக்கப்பட்ட மக்கள் கூட வெறுத்து ஒதுக்குவதே இதன் பின்னுள்ள அரசியல் உண்மை. தமிழ் சுரண்டும் வர்க்கம் இதைக் கண்டு கொள்வது கிடையாது. தன் வர்க்கக் கூட்டாளிகளுடன் சேர்ந்து, வேஷம் போட்டு மேடையில் சிங்கக் கொடியுடன் நிற்பதன் மூலம், அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் நலனைத்தான் முன்னிறுத்துகின்றனர். தமிழ் மக்களினதோ, இலங்கை மக்களினதோ நலனையல்ல. இது தான் இதன்பின்னுள்ள உண்மை.
பி.இரயாகரன்
06.05.2012