11292021தி
Last updateச, 09 அக் 2021 9am

புலி அரசியலை விமர்சிக்காது, புலியை விமர்சிக்கும் அரசியல் மோசடியானது

புலியையும், பிரபாகரனையும் குற்றஞ்சாட்டி விமர்சிக்கின்ற அரசியற்பின்புலத்தில் இந்த அரசியல் மோசடிகள் அரங்கேறுகின்றன. புலியின் நடத்தைகளை விமர்சிப்பதன் மூலம், புலி; கொண்டிருந்த அரசியலை பாதுகாத்தல் இதன் பின் அரங்கேறுகின்றது. இதன் மூலம் கடந்தகாலத்தில் அவர்கள் கொண்டிருந்த அரசியலையும், அதன் நீட்சியான இன்று தாங்கள் கொண்டுள்ள அரசியலையும் நியாயப்படுத்திப் பாதுகாத்தலும் கூடவே அரங்கேறுகின்றது. இந்த அரசியல் பின்புலத்தில் புலியின் அரசியல் தான், புலிகளின் நடத்தைகள் என்பதை அரசியல் ரீதியாக மறுக்கின்றது. இதன் பின்னாக பல புலி மற்றும் புலியெதிர்ப்புப் பிரமுகர்கள் முதல் இலக்கியம் பேசிய பிரமுகர்கள் வரை அடங்கும்.

இந்த விவாதத் தலைப்புக்குள் அடங்காத மற்றொரு புரட்டும் இதற்குள், இதன் நேர்மறையில் அரங்கேறுகின்றது. புலியும், பிரபாகரனும் குற்றவாளிகளல்ல, நிலவிய சமூகப் பொருளாதார பண்பாட்டு கலாச்சாரக் கூறுகளின் விளைவுதான் என்று குற்றஞ்சாட்டி நடத்தும் அரசியல். இது புலியையும், பிரபாகரனையும் தத்துவார்த்தரீதியாக பாதுகாக்கும் பின்புலத்தில், சமூக அமைப்பின் மீது பழியைப் போடுகின்றது. இதை பேரினவாதத்துக்குப் பொருத்தினால், இந்த பேரினவாத அரசும் மகிந்தாவும் குற்வாளிகள் அல்ல, சமூகம் தான் காரணம் என்று கூறுகின்ற திரிப்புக்கு இட்டுச் செல்லுகின்றது. இது சாதியம் முதல் அனைத்துக்கும் பொருந்தும். இந்த திரிபு பற்றி இந்தக் குறிப்புக்கு அப்பால், இங்கு இதை விரிவாக ஆராய்ந்து தனியாக அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.

இங்கு ஒரு அமைப்பை, ஒரு நபரை குற்றவாளியாக்கி அரசியலும், மறுதளத்தில் அவர்கள் குற்றவாளியல்ல என்று கூறுகின்ற அரசியலும் ஒரு புள்ளியல் ஒருங்கே அரங்கேறுகின்றது. எதிர்முனையிலான இரு பித்தலாட்ட அரசியல், ஒரு புள்ளியில் இணைந்து தன்னை நேராக்கி அரங்கேறுகின்றது.

இந்தப் பின்னணியில் பிழைக்கத் தெரிந்த எல்லா பிழைப்புவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும் இன்று புலி நடத்தைகள் சிலவற்றை மறுக்கின்றனர். புலி இருந்த வரை அதனுடன் பயணித்தவர்கள், புலிகளின் மரணத்தின் பின் புலியின் சில நடத்தைகளை மறுக்கின்றனர். இப்படி மறுத்தல் மூலம், அரசியலை மோசடியாக்குகின்றனர்.

புலிக்கு எதிராக தொடர்ச்சியாக செய்யப்பட்டு வந்த அரசியல் விமர்சனத்தை இவர்கள் கண்டு கொள்ளாது மறுப்பதில் இருந்து தான், இந்த மோசடியே தொடங்குகின்றது. புலிகளின் அரசியல் மற்றும் நடத்தைகள் மேலான விமர்சனம், அவர்களின் படுகொலை அரசியலை மீறி தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தது. இதை அங்கீகரிக்காததன் மூலம், இந்த திடீர் புலியெதிர்ப்பு விமர்சகர்கள் கடந்தகால தங்கள் மோசடியைத்தான், புது வேஷத்துடன் மீண்டும் தொடருகின்றனர்.

இதன் மூலம் இன்று புலியெதிர்ப்பு அரசியலின் இரண்டாவது அரசியல்போக்கு தோன்றி இருக்கின்றது. புலியெதிர்ப்பு அரசியல்

1.புலியெதிர்ப்பு ஊடாக அரசை விமர்சிக்காத அரசு சார்பான அரசியல் போக்கு

2.புலியெதிர்ப்பு ஊடாக புலி கொண்டிருந்த மக்கள் விரோத அரசியலை விமர்சிக்காது அதை பாதுகாக்கும் போக்கு.

இரண்;டு மக்கள் விரோதக் கூறுகள், புலியெதிர்ப்பின் பின் இன்று இவ்வாறு அரங்கேறுகின்றது. புலி அழிவின் பின் இரண்டாவது போக்கு அரசியல் வடிவம் பெற்றிருக்கின்றது. இங்கும் இதற்குள்ளும் புதுவேஷம் போட்ட பிரமுகர்கள் வெளிப்படுகின்றனர்.

புலிகள் இருந்த வரை புலியை மறுத்த போக்கு முற்போக்கானதாக பொதுவில் வெளிப்பட்டது. இந்த முற்போக்கு என்பது அரசுக்கு எதிரானதாக இல்லாத போது, அது பிற்போக்கானதாக வகைப்படுத்தப்பட்டது. இப்படித்தான் அரசியலில் பொது வெளிப்பாடு இருந்தது. இந்த பொது அணுகுமுறை புலியின் மரணத்தின் பின் பொருந்தாது. இந்த எல்லைக்குள்ளான விமர்சன அணுகுமுறை முற்போக்காக இருப்பதற்கு, குறைந்தபட்சம் புலியின் அரசியலை விமர்சிக்க வேண்டும். புலிப் பண்புகள் மற்றும் நடத்தைகளை மட்டும் விமர்சிப்பது மோசடித்தனமானது. ஒட்டுமொத்த அரசியலையும் விமர்சிக்க வேண்டும்.

புலியின் அரசியல் வலதுசாரியம். அது ஒடுக்கும் (சுரண்டும்) வர்க்கம் சார்ந்தது. அது சமூக ஒடுக்குமுறைகளையும், சுரண்டும் வர்க்கத்தையும் சார்ந்தது. இதன் மேலான பண்பியல் ரீதியான வேறுபாடு தான், புலியின் நடத்தையை உருவாக்கியது. இந்த நடத்தையை மட்டும் விமர்சிப்பது, மறுப்பது, புலியின் அரசியலைப் பாதுகாக்க முனைவதாகும். அதாவது சுரண்டும் வர்க்க அரசியலை பாதுகாப்பதாகும். இதனால் தான் இந்தத் திடீர் புலி விமர்சகர்கள் கடந்தகால புலி விமர்சனத்தை அங்கீகரிப்பதில்லை. கடந்தகாலம் முதல் தொடரும் புலி விமர்சனம், வர்க்க ரீதியானது. அது அரசியல் உள்ளடக்கம் சார்ந்தது. புலி மீதான இன்றைய திடீர் விமர்சனம், அரசியல் உள்ளடக்கம் சார்ந்ததல்ல. புலியின் மேற்கட்டுமானம் மீதானது. புலியின் அடிக்கட்டுமானம் மீதானதல்ல.

புலியின் வலதுசாரிய அரசியல் தான், குறுந்தேசியத்தை உருவாக்கியது. இது தன் இன மக்களையே ஒடுக்கும் அரசியலாலானது. பிற சிறுபான்மை இன மக்களையும், பெரும்பான்மை இன மக்களையும் எதிரியாக்கி ஒடுக்கியது. அரை நிலப்பிரபுத்துவ சமூக பண்பாட்டு ஒடுக்குமுறைகளைச் சார்ந்து, சமூகத்தின் மூச்சை நிறுத்தியது. சுரண்டும் வர்க்கம் சார்ந்து, சுரண்டப்படும் வர்க்கத்தை மேலும் அடிமைப்படுத்தி நசுக்கியது.

இந்த அரசியலை பண்புரீதியான வேறுபாட்டுடன் கையாண்டதன் வெளிப்பாடு தான், புலிப் பாசிசம். இந்த பண்புரீதியான அளவீட்டை அடிப்படையாகக் கொண்டு விமர்சிப்பது மோசடியானது. இது அந்த அரசியலை பாதுகாக்கின்றது. புலியின் அரசியலை விமர்சிக்காது, புலியின் நடத்தையை விமர்சிப்பது சந்தர்ப்பவாத அரசியல் சார்ந்த பிழைப்புவாத மோசடியாகும். புலிகள் கொண்டிருந்த அரசியல் தான், புலிக்கு பின்னான சமூகத்தில் தொடர்ந்து வாழ்கின்றது. அதைச் சார்ந்து நின்று புலியின் பண்புரீதியான நடத்தையை விமர்சித்தல் அரசியல் மோசடியாகும்.

புலியின் அரசியலும், புலியின் அரசியலிலான நடத்தையும் இணைத்து விமர்சிக்கப்பட வேண்டும். இவை ஒருங்கேயின்றிய புலி விமர்சனம் மோசடியானது, மக்களின் காதுக்கு ப+வைப்பதாகும். இதற்குள் சந்தர்ப்பவாத பிழைப்புவாத பிரமுகர்களின் தொடர்ச்சியான மக்கள் விரோத அரசியல் தோன்றுவதை இனம் கண்டுகொள்வதன் மூலம் தான், மக்களுக்கான உண்மையான சமூக இயக்கம் தன்னை அரசியல்மயமாக்கியபடி வளரமுடியும்.

 

பி.இரயாகரன்

28.04.2012