வாழ்வுதான் உணர்வைத் தீர்மானிக்கின்றது. உணர்வுகள் வாழ்வைத் தீர்மானிப்பதில்லை. உழைத்து வாழாத அரசியல் பின்புலத்தில், எம்மக்களை ஏமாற்றுவது தொடருகின்றது.
இந்த வகையில் எமது போராட்டம் பல ரகமான அரசியல் பிழைப்புவாதிகளின் பின்புலத்தில் சுரண்டப்பட்டது. உழைப்பை நேரடியாக சுரண்டுவது வெளிப்படையானது. தங்கள் அறிவு மூலம் சுரண்டுவது சதிப்பாணியிலானது. உழைக்க வலு இருந்தும், தன் சொந்த வாழ்வுக்காக உழைத்து வாழ விரும்பாதவன் முன்வைக்கும் பிரமுகர்தன அரசியல், உழைத்து வாழும் மக்களின் வாழ்வியல் போராட்டத்துக்கே முரணானது. இதை ஊக்குவிப்பவர்கள், வழிகாட்டுபவர்கள், உழைப்பை வெறுக்கும் பொறுக்கியாக லும்பன்களாக வாழ்கின்றனர். மேற்கின் சமூக நல உதவியை பெறுவதற்காக உழைப்பைப் பயன்படுத்துவது, மருத்துவ விடுப்பைப் பயன்படுத்துவது தொடங்கி உழையாது சமூக நிதியாதாரத்தை தங்கள் அறிவால் சுரண்டி வாழும் பிரமுகர்தன அரசியல், உழைத்து வாழும் மக்களின் நடைமுறை வாழ்வுக்கும் உணர்வுக்கும் எதிரானது.
போராட்டத்தின் பெயரில் புலிப் பிரமுகர்கள் பொது மக்களின் சொத்தை திருடி வாழ்ந்தார்கள். புலிக்கு வெளியில் புலத்தில் இடதுசாரியம் பேசுகின்ற பிரமுகர் கூட்டத்தின் ஒரு பிரிவு, உழைக்காமல் சமூக நிதி ஆதாரத்தைச் சுரண்டி வாழ்கின்றது. இந்த நுட்பத்தை தங்கள் அறிவால் மோசடி செய்கின்றது. உழைக்க வலு இருந்தும் உழைக்காமல் வாழ்வதன் மூலம், சமூக நிதியாதாரங்களை பெறுவதன் மூலம் அதைச் சுரண்டுகின்றது. சமூக மேலாண்மை சார்ந்த தன் அறிவை, இந்தத் துறையில் பயன்படுத்தி உழைக்கும் மக்களை மறைமுகமாக சுரண்டுகின்றது. உழைக்கும் மக்கள் தங்கள் உழைப்பில் இருந்து உருவாக்குகின்ற சமூக நிதியாதாரங்களை எப்படிச் சுரண்டுவது என்பதில், இந்த பிரமுகர் கூட்டத்தின் கூட்டு அறிவு இவர்களுக்கு கைகொடுக்கின்றது.
உண்மையில் இந்த சமூக நிதியாதாரங்களுக்கு தங்கள் உழைப்பு மூலம் நிதி வழங்கியவர்கள், உழைப்பை இழக்கும் போது இந்த சமூகநல நிதியைப் பெறமுடியாது திண்டாடுகின்றனர். மறுதளத்தில் தங்கள் அறிவு மற்றும் திட்டமிட்ட செயல்பாடுகள் மூலம் சுரண்டி வாழ்கின்றது அரசியல் பேசும் பிரமுகர் கூட்டம். உழைத்து வாழும் மக்கள் பற்றி, அவர்கள் உழைப்பை சுரண்டியபடி அரசியல் பேசுகின்ற புலம்பெயர் பிரமுகர் சூழலையும் நாம் இன்று எதிர்கொள்கின்றோம்.
நாடு நாடாக ஏறி இறங்கும் அரசியல் சுற்றுலாக்களின் பின்புலத்தில், சமூக நிதியாதாரங்களை சட்டப்படி பெறுகின்ற நுட்பத்தை கையாண்டு சுரண்டுகின்ற உண்மையை இனம் காண்பது அவசியம். இதில் பல ரகம். சிறிது காலம் வேலை செய்த பின், சமூக நிதியை சுரண்டும் லும்பன் தனம்;. இது அவர்களின் தொடர்ச்சியான இடைவிடாத அணுகுமுறை. தன்னை நோயாளியாகக் காட்டி நடித்து, சமூகநல நிதியைப் பெறும் முறை. தான் சமூகநல நிதியை பெறும் வண்ணம், கணவன் அல்லது மனைவி குடும்பம் சார்ந்து உழைப்பில் ஈடுபடாத வண்ணம் திட்டமிட்டு, தாமாகவே வேலையற்றவராகி சமூகநல உதவியை பெறுவது. இப்படி பல ரகங்கள். இடத்துக்கு இடம் வேறுபடுகின்றது.
இதை இடதுசாரிய பிரமுகர்தன அரசியல் பின்புலத்தில் இன்று இனம் காணமுடியும். உழைக்க வலு இருந்தும், உழைக்காமல் வாழுகின்ற சட்ட நுணுக்கங்களைக் கொண்டு சுரண்டுவது, இந்த பிரமுகர்தனத்தின் பின்னான மற்றொரு வெளிறிய முகம். இவர்கள் சமூக ஒடுக்குமுறைகளையும், வர்க்க ஒடுக்குமுறைகளையும் பிலாவாகப் பேசுவதன் பின்னால், உழைத்து வாழும் வர்க்க உணர்வு இருப்பதில்லை. உண்மையில் சுரண்டி வாழும் உணர்வு தான் இருக்கின்றது.
புலத்தின் பிரமுகர்தன வெளிப்பாடுகளில் இதுவும் முக்கியமான அரசியல் குணாம்சமாக இருக்கின்றது. மக்களை வர்க்க உணர்வூட்டி அணிதிரட்டாத அரசியல் பிரமுகர்தன பின்புலத்தில் இது முழிப்பாக உள்ளது. இன, மத, நிற, பால், சாதியம் ... சார்ந்த ஒடுக்குமுறைக்கு எதிராக வர்க்க ரீதியாக அணுகாத குறுகிய கண்ணோட்டத்தின் பின், உழைத்து வாழும் மக்களின் வர்க்க உணர்வு இந்த பிரமுகர்த்தன அரசியலில் இருப்பதில்லை. உழையாது வாழ்கின்ற, சமூக நிதியாதாரத்தை சுரண்டி வாழ்கின்ற வர்க்க உணர்வு சார்ந்துதான், குறுகிய வர்க்க விரோத அரசியல் உணர்வாக வெளிப்படுகின்றது.
புலத்தில் புலியல்லாத மாற்றுத் தளத்தில், சமூகத்தை அரசியல் ரீதியாக மோசடி செய்கின்ற மற்றொரு அரசியல் வெட்டு முகம் இது. புலிகளிடம் ஜனநாயகத்தைக் கோரியது அரசுக்கு எதிராக போராடுவதற்காகத்தான். ஆனால் அரசை ஆதரிப்பதற்காக தான், என்பதை புலியல்லாத அரசியல் தளத்தில் புலிக்குப் பின் நிறுவியர்கள் இந்த பிரமுகர்களின் வரிசை தொடரில் இருந்தவர்கள் தான். இதுபோல் தான் சமூகத்தின் மீதான சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறைக்கு குரல் கொடுக்கும் பிரமுகர்களின் வாழ்நிலையும் உழைத்து வாழ்வதை வெறுப்பவர்களாக இருக்கின்றது. உழைத்து வாழ்வதை தங்கள் வாழ்வியல் நடைமுறையாக கொள்வதை வெறுப்பவர்கள், எப்படி மக்களுக்க முன் நேர்மையானவராக, உண்மையுள்ளவராக சமூக அக்கறையுடன் இயங்க முடியும்? சொல்லுங்கள்.
வாழ்நிலைதான் உணர்வுகளைத் தீர்மானிக்கின்றது. இந்த உண்மையைக் கொண்டு இன்றைய பிரமுகர்தன அரசியல் பின்புலத்தை இனம் கண்டு கொள்வது காலத்தின் கட்டாயமாகும். அரசியல் வெற்றிடத்தில் புறம் போக்குகளும், போலிகளையும் இனம் காண்பதன் மூலம் தான், இந்த மோசடியில் இருந்து சமூகம் மீண்டும் புத்துயிர்ப்பு பெறமுடியும். முன்னோக்கிய சமூக விழிப்புணர்வுக்கும், அதன் வளர்ச்சிக்குமுரிய நிபந்தனைகளில் இதுவொன்றாகும். சமூகத்தை மாற்றாத, அதற்காக சமூகத்தை அணிதிரட்டாத, அதனை அரசியலில் தங்கள் நடைமுறைக் கடமையாகக் கொள்ளாத பிரமுகர்தனத்தில், இந்த புல்லுருவித்தனம் முனைப்பாக இயங்குவதை நாம் இனம் காண்பது அவசியம். தன் உழைப்பைக் கொண்டு, தன் குடும்ப உழைப்பைக் கொண்டு, அரசியல் பேசுகின்றவன் தன் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றான் என்பதை சமூகம் கண்காணிப்பதன் மூலம், அரசியல் பித்தலாட்டங்களை இனம் காணமுடியும். உழைத்து வாழும் நிலையிருந்தும் வலுவிருந்தும், உழைத்து வாழாதவன் உழைத்து வாழும் சமூகத்தை தன் அறிவால் எப்படி வழிகாட்ட முடியும்? இங்கு மோசடித்தனமும், பிழைப்புத்தனமும், பிரமுகர்தனமும் தான், இந்த அறிவின் பின்னான அரசியலாகும். இதை அரசியல் விழிப்புணர்வு மட்டத்துக்கு உயர்த்துவது, இன்றைய எமது அரசியல் பணிகளில் ஒன்றாகும்.
பி.இரயாகரன்
26.04.2012