10282021வி
Last updateச, 09 அக் 2021 9am

குணரத்தினம், திமுது கடத்தல்: ஜனநாயக உரிமைக்காக ஒன்றிணைந்து போராடுவோம்

முன்னிலை சோஸலிசக் கட்சியின் முன்னணி உறுப்பினர்களான பிரேம்குமார் குணரத்தினம், திமுது ஆட்டிகல ஆகியோர் கடத்தப்பட்டு தீவிர விசாணைகளின் பின்னர் இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். தமிழீழ விடுதலைப்புலிகள் பலம் பெற்றிருந்த காலத்தில் மடடுமல்லாமல் அவர்கள் முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்டு மூன்றாண்டுகள் ஆகிவிட்ட பின்னரும் கூட இலங்கையில் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்படடுக் கொண்டிருப்பதையே காணமுடிகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளை இலங்கையில் பூண்டோடு அழித்து பயங்கரவாதத்திலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றி விட்டதாகக் கூறி தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான போர் வெற்றியை வருடா வருடம் பெரும் கொண்டாட்டங்களாக நிகழ்த்தி வருகிறது இலங்கை அரசு.

அப்படியாயின் நாட்டின் பயங்கரவாதத்தை ஒழித்தபின்னரும் கூட ஆட்கடத்தல்கள் நிகழ்வதேன்? தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுற்று மூன்று வருடங்களான போதிலும் இலங்கையின் இனப்பிரச்சனைக்கு ஓர் தீர்வை முன்வைக்கமுடியாத இலங்கை அரசு இலங்கையின் சிறுபான்மையினங்களின் முழுமையான பிரதிநிதிகளையும் உள்ளடக்காத தமிழ்க்கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளில் காலத்தையும் நேரத்தையும் விரயம் செய்துகொண்டிருக்கிறது.

தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைபற்றி பேசுபவர்கள், தமிழ் மக்களுடன் இணைந்து ஜனநாயகத்திற்காக போராட முன்வருபவர்கள், அவர்கள் சிங்கள முற்போக்கு சக்திகளாக இருக்கையில் கடத்திச் செல்லப்படுகிறார்கள்.

பிரேம்குமார் குணரத்தினம், திமுது ஆட்டிகல ஆகியோரின் கடத்தலும் லலித், குகன் ஆகியோரின் ஆட்கடத்தலும் சிங்கள தமிழ் முற்போக்கு சக்திகளின் ஒற்றுமையை அதன் ஆரம்பத்திலேயே ஒடுக்கும் ஒரு நடவடிக்கையாகவே இனம் காணப்படவேண்டியுள்ளது. சிங்கள-தமிழ் முற்போக்கு சக்திகளின், சிங்கள- தமிழ் மக்களினதும் ஜக்கியம் பேரினவாதத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் என்பதை இலங்கை அரசு நன்றாகவே அறிந்துள்ளது. இதனால் சிங்கள முற்போக்கு சக்திகளிடமிருந்து எழும் எந்தவிதமான ஜனநாயகத்துக்கான போராட்டத்தையும், தமிழ் மக்களுடன் சிங்கள மக்கள் ஜக்கியத்தை ஏற்படுத்திப் போராடுவதையும் இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. சிங்கள-தமிழ் மக்களிடையிலான ஜக்கியம் அவர்களின் ஒன்றுபட்ட ஒரு போராட்டம் இலங்கை அரசினால் மட்டுமல்ல, தமிழ் குறுந்தேசிய இனவாதிகளாலும் கூட மூர்க்கத்தனமாக எதிர்க்கப்படுவதையே இன்று நாம் காண்கின்றோம்.

இலங்கையின் ஜனநாயகத்தின் வெற்றியும் சரி, ஏனைய சிறுபான்மை இனங்களினதும் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்படுவதும் சரி, சிங்கள-தமிழ் முற்போக்கு – ஜனநாயக சக்திகளின் ஒன்றிணைந்த தலமையிலான போராட்டத்தினால்தான் வெற்றிபெற முடியும் என்பதை இலங்கையின் கடந்தகால வரலாறு எமக்கு மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டி நிற்கிறது.

-கருமையம்-

கனடா

Karumaiyam Arts Group - Canada

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.