எங்கள் தேசத்தில்
முட்கிரீடத்துடன் சிலுவை சுமந்தபடி
எந்த யேசுவும்
தெருவில் இழுத்துச்செல்லப்படுவதில்லை
பிலாத்துக்களும்
சவுக்கால் ஓங்கி அடிப்பவர்களும்
எவரையும்
ஆணி அறையப்பட்டு கல்வாரி மலையில்
தொங்கவிடுவதுமில்லை
கல்லறைகளில் புதைக்கப்படுவதுமில்லை
ஆனால் தினமும்
பெரியவெள்ளிகளாகவே
மக்கள் சோகத்தில் வீழ்த்தப்படுகிறார்கள்
வீட்டின் கதவுகள்
உடைக்கப்பட்டுக்கிடப்பதும்
வீதியில் பயணிக்கும்போது மறைந்துபோவதும்
தொடர்ந்துகொண்டேயிருக்கிறது
தங்கள் கறைபடிந்த கைகளை
மீளவும் குருதியில் கழுவியபடியேதான்
மகிந்தப்பிலாத்துக்கள் கைவிரிக்கிறார்கள்
எனினும்
அடக்குறைக்கெதிராய்
புதைகுளிகள் திறக்கப்படுவதும்
எழுச்சிகொள்வதும்
உயிர்ப்பு பெற்றுக்கொண்டேயிருக்கிறது
- 08/04/2012