Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுதந்திரமும் ஜனநாயகமும் நாட்டில் கடத்தப்பட்டு காணமல் போகின்றது. நாட்டில் அச்சமும் பீதியும் விதைக்கப்படுகின்றது. மூச்சுவிடுவதற்கு கூட அக்கம்பக்கம் பார்க்கவேண்டும். புலிக்கு பதில் இன்று ஓநாய்களும் நரிகளும் குதறுகின்றன.

 

முன்னனி சோசலிச கட்சியின் தலைவர்கள், அரசால் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட காணமல் போய்யிருக்கின்றார்கள். இப்படிக் காணமல் போதல், இலங்கையில் அன்றாட அரசியல் நிகழ்வாகிவிட்டது. இப்படி பல ஆயிரம் பேர் கடத்தபட்டனர். சிலர்  கொல்லப்பட்ட நிலையில் விதியோரங்களில் வீசப்பட்டனர். பலருக்கு என்ன நடந்தது என்றே தெரியாது. நாட்டின் சட்டமோ, நீதியோ இதைக் கண்டு கொள்ளவில்லை. ஆம், சட்டத்தின் ஆட்சியே இதுவாகிவிட்டது.


அன்று புலிகளாகவும், தமிழனாகவும் காட்டி வெளிப்படையாகவே, அரசு இதைச் செய்தது. இன்று தமிழன் அல்லாதவர்கள் முதல் அனைவரும் இரகசியமாக கடத்தப்பட்டு, காணமல் போகின்றனர்.

1986 ஆண்டு இதேபோன்று யாழ் பல்கலைகழக மாணவர் தலைவரில் ஒருவனான விஜிதரனை  புலிகள் கடத்தி சென்று பின் காணமல் போனான். இதை அன்று புலிகள் கடத்தல் அல்ல, காணமல் போனதாக கூறியது. இன்று அதே பாணியல், அரசு அதைக் கூறுகின்றது.

அன்று விஜிதரனுக்காக மாணவர்களும் பொதுமக்களும் புலிக்கு எதிராக ஆயிரம் ஆயிரமாக திரண்டு போடினார்கள். இதன் போது மாணவர்கள் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை கோரி, புலிக்கு எதிராக போராடினர். இன்று அதே நிலை. புலிக்கு பதில் அரசு.

எம்முன் அனைத்தும் இடமாறி இருகின்றது. இன்று இலங்கையில்  சுதந்திரமாக வாழ்வதற்கும், நடமாடுவதற்கும் கூட சுதந்திரம் இல்லை. சுதந்திரமாக சிந்திக்கவும், செயல்படவும் நாட்டில் ஜனநாயகமில்லை. சட்டத்தின் ஆட்சி இலங்கை செத்துவிட்டது. ஜனநாயகத்தை, சுதந்திரத்தை உணர்வது, உயிரை விடுவதற்கு சமமானது. ஆம் சுதந்திரமும் ஜனநாயகமும் நாட்டில் கடத்தப்பட்டு காணமல் போய்விட்டது.

இதை நாம் அனுமதிக்க போகின்றோமா? இதற்கு எதிராக போராடுவதைத் தவிர எம் முன் மாற்று வழிகிடையாது, குறுக்கு வழி கிடையாது. கடத்தப்பட்டு காணமல் போனவர்களின் இலட்சியங்களும், கனவுகளும் எம்முன் கிடக்கின்றது. அவை எம் இலட்சியமாகி, எம் உணர்வுகள் ஆகட்டும். இது காணமல் போனவர்களை மீட்டு எடுக்கட்டும்.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

08/04/2012