பிரேம்குமார் குணரட்ணத்தை வழமைபோல் தூக்கில் போடத்தான் கடத்தியவர்கள். துரதிஸ்டம் என்னவென்னால் அதே தூக்குக்கயிறு தனக்காகிவிடும் என்று கண்டவுடன், மக்களைக் கண்டு அஞ்சும் கோழைகள் தடுமாறி உளறுகின்றனர். பிரேம்குமார் குணரட்ணம் தானாக பொலிசில் வந்து சரணடைந்ததாக, கோத்தபாய பாசிட்டுக்கே உரிய கோமாளித்தனமான வக்கிரத்துடன் உலகறிய உளறி இருக்கின்றான். இப்படி சட்டவிரோதமாகக் கடத்தி அவர்களை கொலைகள் செய்கின்ற கூட்டத்தின் தலைவனுக்கு, மேற்கு தயார் செய்த தூக்குக்கயிறை கண்டவுடன் கலங்கி உளறிய போது, பிரேம்குமார் குணரட்ணம் பற்றிய தகவல்கள் கோத்தபாய மூலம் வெளியாகி இருக்கின்றது. இதன் மறுதளத்தில் இதை "மக்கள் குரலின் வெற்றி" என்று கூறுகின்ற இடதுசாரி அரசியல் வங்குரோத்துத்தனத்தைக் காண்கின்றோம். ஏகாதிபத்தியத்தின் தூக்குக்கயிற்றுக்கு முன் மண்டியிட்ட கோத்தபாய, மக்களின் குரலைக் கண்டு அஞ்சி மண்டியிடவில்லை. மக்களைக் கண்டு பாசிசம் பின்வாங்கிவிடவில்லை. பாசிட்டுக்கே உரிய வகையில், புதுக்கதை புனைந்து, பிரேம்குமார் குணரட்ணத்தை நாடு கடத்தியுள்ளது.

பாசிசம் புனைந்த புதுக்கதைக்கு ஏற்ப இலங்கையில் காணாமல் போனவர்கள் எல்லாம், இனி பொலிஸ்சில் தானாக முன்வந்து சரணடைய அனுமதிப்பார்களோ!? கோத்தபாய தான் விளக்கம் சொல்ல வேண்டும்.

மக்களைக் கண்டு அஞ்சுகின்ற இது போன்ற பாசிசக் கோமாளிகள் பற்றி மார்க்ஸ் கூறினார் "கோழைகள் தயாரிக்கின்ற சட்டங்களில் இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கின்றது, ஏனென்றால் இரக்கமில்லாமல் நடந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்." இது தான் மகிந்தா அரசு. இந்த அரசுக்கு பாதுகாப்பாக உள்ள கோழைத் தம்பி கோத்தபாய கொடூரமான பாசிச கோமாளியாகவே வலம் வருகின்றார். இந்தப் பாசிச அரசின் "கௌவுரவ" மந்திரிகள் முதல் அதைச் சுற்றி நக்கும் அரசியல் கோமாளிகள் வரை, பாசிசத்துக்கு மரடிக்கும் கூட்டமாகி கூடராமாகிவிட்டது.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல், கப்பம் .. எல்லாம் பாசிச கட்டமைப்பின் ஆன்மாவாகிவாகிவிட்டது. இதை அரசியலாக செய்யும் அரசின் அங்கங்களுக்கு, நாட்டில் சட்டம் நீதி அனைத்தும் விதிவிலக்காகிவிட்டது.

இந்த நிலையில் கடத்தப்பட்டு காணாமல் போன பிரேம்குமார் குணரட்ணம், திடீரென அரசு தன்னிடம் உள்ளதாக கூறி நாடு கடத்துகின்றது. இப்படி ஒரு இலங்கைப் பிரஜை நாடு கடத்தப்படுகின்றார். கோத்தபாய அமெரிக்கப் பிரஜா உரிமையை வைத்துக்கொண்டு, நாட்டில் அரசியல் செய்வதுடன், சட்டவிரோத கடத்தல்கள் கொலைகளை மட்டும் தன் அரசியலாக்கி அதற்கு தலைமை தாங்குகின்ற முரண்நிலையான அரசியல் போக்கை இங்கு நாம் காண்கின்றோம்.

பிரேம்குமார் குணரட்ணம் எந்தப் பெயரில் எப்போது வந்தார் என்று கேட்கின்றார் பாசிட்டுக்கே உரிய வக்கிரத்துடன். கள்ளப் பாஸ்போட்டில் கருணாவை இலண்டனுக்கு அனுப்பியவர் இந்தப் பாசிசக் கோமாளி கோத்தபாய தான். அதுவும் இராஜதந்திரப் பாஸ்போட்டில், பொய்த் தகவல் கொடுத்து விசாவைப் பெற்று, சட்டவிரோதமாக அனுப்பிய அரசு அல்லவா இந்த அரசு. இதே கருணா புலியில் இருந்த போது செய்த படுகொலைகள், பின் கோத்தபாயவுடன் சேர்ந்து செய்த கொலைகள், கடத்தல்கள், கப்பங்களின் முழுப்பலனை அனுபவிக்க "கௌவுரவ" பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கியதும், இந்தப் பாசிச அரசுதான். இப்படி இருக்க பிரேம்குமார் குணரட்ணத்துக்கு எதிராக சட்டம் நீதி பற்றிப் பேசுகின்ற பாசிசத்தின் கோர முகத்தை இங்கு காண்கின்றோம். நாடு கடத்தும் கேலிக்கூத்தை இங்கு காண்கின்றோம்.

உங்களால் கடத்தப்பட்ட திமுது ஆடிகல எங்கே? அவரும் பொலிஸ்சில் தானாக சரணடைவாரோ!? பிரேம்குமார் குணரட்ணம் பற்றிய கோத்தபாயவின் உளறல், ஆயிரம் ஆயிரம் கடத்தலின் பின் நடந்த உண்மைகளை வெளிச்சத்துக்கு இன்று கொண்டு வந்துள்ளது. ஆயிரக்கணக்காக கொலைகள், காணாமல் போன பின்னணியில் கோத்தபாய இருந்ததையும், இருப்பதையும் உறுதி செய்திருக்கின்றது, உறுதி செய்கின்றது. பாதுகாப்பு அமைச்சராக உள்ள ஜனாதிபதியும், பாதுகாப்பு செயலாளராக உள்ள தம்பி கோத்தபாயவும் சேர்ந்து நடத்துகின்ற குற்றங்களின்; முழுப்பரிணாமத்தை இந்த நிகழ்வு இன்று அம்பலமாக்கி இருக்கின்றது. அரசுக்கு எதிரான போர்க்குற்றங்கள், தொடரும் குற்றங்கள் மூலம் மேலும் ஆதாரமாகி சாட்சியமாகி இருக்கின்றது.

மலையகம் உள்ளிட்ட வடகிழக்கில் கிறிஸ் மனித நடமாட்டம் முதல் ஆள் கடத்தல் வரை, ஐனாதிபதியின் ஆலோசனையின் கீழ் கோத்தபாயவின் தலைமையிலான ஒரு இரகசிய சட்டவிரோதக் கும்பல் நடத்தும் பயங்கரவாதம் தான் என்பதை, இந்த நிகழ்வுகள் இன்று எடுத்துக்காட்டி இருக்கின்றது.

நாட்டை இராணுவமயமாக்கி பேரினவாத பாசிசமயமாக்கல் மூலம் சட்டத்தின் ஆட்சியை இல்லாதாக்கி, மக்களை ஒடுக்குவது மக்களைக் கண்டு அஞ்சும் கோழைகளின் புதைகுழி அரசியலாகும்;. தப்பிப் பிழைக்க முடியாத முரண்பாட்டுக்குள் பாசிசம் தலைகுப்பிற வீழ்ந்து, சமூகத்தை அங்குமிங்குமாக இன்று கடித்துக் குதறுகின்றது.

இதில் இருந்தான மீட்சிக்கான போராட்டம் மக்களை சார்ந்ததா அல்லது ஏகாதிபத்தியம் சார்ந்த மற்றொரு பாசிசமா என்பதை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில், ஒன்றையொன்று சார்ந்து அங்குமிங்குமாக தடுமாறுகின்ற அரசியல் தெளிவின்மை எங்கும் எதிலும் தொடர்ந்து பிரதிபலிக்கின்றது. பிரேம்குமார் குணரட்ணத்தின் விடையத்திலும் முக்கிய அரசியல் விவாதப் பொருளாகி இருகின்றது.

"சர்வதேச அழுத்தத்திற்கு கோத்தபாய அடி பணிந்தார்" என்று கூறி இந்த அரசியலையும் இந்த வழிமுறையையும் முன்நகர்த்தும் நுட்பமான அரசியலையும், "மக்கள் குரலின் வெற்றி" என்று இதைக் கூறி தங்கள் அரசியலாக காட்டி முன்நகர்த்தும் எதிர்ப்புரட்சி அரசியலையும், அரசியல் ரீதியாக இங்கு நாம் இனம் காணவேண்டியுள்ளது.

ஒருபுறம் பாசிச அரசு, மறுபக்கம் ஆளும் கூட்டத்தை எதிர்க்கும் ஏகாதிபத்திய சார்பு எதிர்ப்புரட்சி அரசியல், இன்று அனைத்தையும் தீர்மானிக்கின்றது. கருத்துகள், சிந்தனைகள், செயல்பாடுகள் என அனைத்தும். இதை மாற்றாத வரை, மக்களுக்கு விடிவில்லை என்பதை பிரேம்குமார் குணரட்ணம் விவகாரம் மீண்டும் சிறப்பாக எம்முன் அரசியல் ரீதியாக எடுத்துக்காட்டியிருக்கின்றது.

பி.இரயாகரன்

10.04.2012