இந்திய-இலங்கை ஒப்பந்தமும் "இந்திய அமைதி காக்கும் படை"யின் வருகையும்
இந்திய அரசின் "ஒப்பரேசன் பூமாலை" நடவடிக்கையின் மூலம், ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த "ஒப்பரேசன் லிபரேசன்" இராணுவ நடவடிக்கையைத் தொடர்வதில் தனது உடன்பாடின்மையை உறுதியாகவும், தெளிவாகவும் இந்தியா வெளிப்படுத்தியிருந்ததுடன், இலங்கை இனப்பிரச்சனையில் - இலங்கை உள்விவகாரங்களில் - தனக்குள்ள "கரிசனை"யையும் இந்தியா வெளிக்காட்டியிருந்தது.
இலங்கை இராணுவம் வடமராட்சியில் பெற்றிருந்த வெற்றியையடுத்து குடாநாட்டை கைப்பற்றுவதை நோக்கி முன்னெடுத்துச் செல்லவிருந்த இலங்கை அரசின் "ஒப்பரேசன் லிபரேசன்" இராணுவ நடவடிக்கைத் திட்டம் இந்தியாவின் "மனிதாபிமான"த் தலையீட்டால் நிறுத்தப்பட்ட அதேவேளை இந்திய அரசுடன் பேசவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு இலங்கை அரசு உள்ளானது.
1985ம் ஆண்டு அனுராதபுர நகரில் சிங்களமக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட போது ஏற்பட்ட அதிர்ச்சியால் இந்தியாவின் அழைப்பை ஏற்று "திம்பு" பேச்சுவார்த்தைக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டது போலல்லாமல், இந்தியாவின் நேரடியானதும், "மனிதாபிமான" அடிப்படையிலானதுமான "ஒப்பரேசன் பூமாலை" நடவடிக்கையின் தாக்கத்தினால் இந்திய அரசுடன் பேசுவதற்கு இலங்கை அரசு நிர்ப்பந்திக்கப்பட்டது.
(14 May 1985ம் ஆண்டு அனுராதபுர நகரில் சிங்களமக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை)
அமெரிக்காவுடனும் அது சார்ந்த மேற்குலக நாடுகளுடனும் நட்புப் பூண்டு அரசியல் "சாணக்கியம்" மிக்கவராக தன்னை இனம்காட்டிக் கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் போருக்கான அறைகூவலும் சிறுபான்மை இனங்கள் மீது -தனது நாட்டின் ஒரு பகுதி மக்கள் மீது - திணித்துவிட்டிருந்த யுத்தமும் முழு இலங்கையின் இறையாண்மையையும் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருந்தது.
இத்தகையதொரு சூழ்நிலையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அரசுக்கு இந்தியாவுடன் பேசுவதைத் தவிர வேறு வழி இருந்திருக்கவில்லை. இலங்கை-இந்திய அரசுக்களுக்கிடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. இந்திய அரசு தன்னால் தயாரிக்கப்பட்டிருந்த இனப்பிரச்சனை குறித்த தீர்வுத்திட்டத்துடன் இலங்கை அரசை எதிர்கொண்டது.
இலங்கை அரசுக்கு தீர்வுத்திட்டத்தை விளக்கிய இந்திய அரசு, வடககு-கிழக்கு தமிழ் மக்களின் "ஏகப்பிரதிநிதி"களான தழிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை யாழ்ப்பாணத்திலிருந்து உலங்குவானுர்தி மூலம் இந்தியா அழைத்துச் சென்றது.
உலங்குவானுர்தி மூலம் யாழ்ப்பாணத்திலிருந்து பிரபாகரன் இந்தியா அழைத்துச் செல்லப்பட்டவுடன் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் இந்தியா அங்கீகரித்து விட்டது என தமிழீழ விடுதலைப் புலிகள் கருத்து வெளியிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு கைதி போல் புதுடெல்லிக்கு "அழைத்து"வரப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இந்திய அரசால் தயாரித்து வைக்கப்பட்டிருந்த ஒப்பந்த நகலில் கையொப்பம் இடுமாறு "தாழ்மை"யுடன் நிர்ப்பந்திக்கபட்டார்.
(இடதுகோடியில் ராஜீவ் காந்தி வலது பக்கத்தில் அன்ரன் பாலசிங்கத்துடன் பிரபாகரன்)
இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனினதும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினதும் கையொப்பங்களைப் பெறுவதன் மூலம் இலங்கையின் இனப்பிரச்சனைக்கு இந்தியாவின் தீர்வை வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி முன்வந்தார்.
1977ம் ஆண்டு ஆட்சிப் பீடம் ஏறும்போது இலங்கையை சிங்கப்பூராக மாற்றப் போவதாகக் கூறிக் கொண்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தொடர்ச்சியாக சிறுபான்மை இனங்கள் மீது கொடூரமான வன்முறைகளை ஏவிவிட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தன, இப்பொழுது இலங்கையின் இறையாண்மை குறித்து சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் பிறைசூடி இரயாகரன், தமிழீழ விடுதலைப் புலிகளின் வதைமுகாமிலிருந்து தப்பி வெளியேறி தலைமறைவாக இருந்ததுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (Jaffna University Teachers Association) ஊடாக தனது பல்கலைக்கழகப் படிப்பைத் தொடர்வதற்கும், தனது பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும்படியும் கேட்டிருந்தார். இரயாகரனின் கடத்தல் குறித்தும் அவரின் வேண்டுகோள் குறித்ததுமான பிரச்சனைகளைக் கையாள்வதற்கென பல்கலைக்கழக மாணவர் அடங்கிய குழு ஒன்று உருவாக்கபட்டது. இக் குழுவுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி உருத்திரமூர்த்தி அவ்வை தலைமை வகித்திருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையாவும்(கோபாலசாமி மகேந்திரராஜா), தமிழீழ விடுதலைப் புலிகளின் வதைமுகாமிலிருந்து தப்பி வெளியேறி தலைமறைவாக இருந்த இரயாகரனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர்.
இரயாகரனைக் "கடத்தியது" என்று கூறுவது தவறானது என விளக்கமளித்த புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையா, இராயகரனைத் தாம் "கைது" செய்ததாகக் குறிப்பிட்டதுடன், இரயாகரனின் "உயிருக்கோ அல்லது கல்விக்கோ எதுவித அச்சுறுத்தலாகவும் இருக்கமாட்டோம்" என பல்கலைக்கழக மாணவர்கள் முன்னிலையில் தெரிவித்திருந்தார். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொல்லும் செயலும் வெவ்வேறு திசைகளில் பயணிப்பவை என்பதை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தமது கடந்த கால அனுபவங்கள் மூலமாக நன்கு அறிந்தவர்களாக இருந்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலான மாத்தையாவின் பேச்சையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் வதைமுகாமிலிருந்து தப்பிய இரயாகரனின் பேச்சு இடம் பெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டதிலிருந்து அவர்களின் வதைமுகாமில் தான் அனுபவித்த சித்திரவதைகளையும், கொடூரமான அனுபவங்களையும் எடுத்துக் கூறிய இரயாகரன் தமிழ் மக்களுக்காக போராடுவதற்கு தனக்கிருக்கும் உரிமையையும் எடுத்துக் கூறியிருந்தார். (புலிகளின் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைகழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை) தமிழீழ விடுதலைப் புலிகளின் வதைமுகாமில் அனுபவித்த சித்திரவதைகளையும், கொடூரமான அனுபவங்களையும் இரயாகரனால் எழுதப்பட்ட "வதைமுகாமில் நான்" என்ற தொடரைப் படிப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்காக இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் இலங்கை வருகையையொட்டி, அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு மேற்கொள்ளத் தொடங்கியது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. இலங்கையின் இறையாண்மையை மீறும் செயலாகக் கருதப்பட்ட, இலங்கையின் வான்பரப்புக்குள் ஊடுருவிய இந்திய விமானப்படை விமானங்களின் "மனிதாபிமான" நடவடிக்கையால் சிங்கள மக்கள் மத்தியிலும், சிங்கள அரசியல்வாதிகள் மத்தியிலும் இந்தியாவுக்கெதிரான உணர்வலைகள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை வந்திறங்கியபோது அவருக்கு விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட இராணுவ மரியாதையில் பங்கேற்ற கடற்படை வீரர் ஒருவர் தனது துப்பாக்கியினால் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கியவேளை, விரைந்து செயற்பட்ட ராஜீவ் காந்தியின் மெய்ப்பாதுகாவலரின் சாதுரியமான பதில் நடவடிக்கையால் ராஜீவ் காந்தி உயிராபத்தின்றி காப்பாற்றப்பட்டார்.
(ராஜீவ் காந்தி மீதான இலங்கை கடற்படை வீரரின் தாக்குதல்)
இலங்கை அரசுடனான இந்தியப் பிரதமரின் ஒப்பந்தம் கைச்சாத்தாகும் முன்னரே இந்தியப் பிரதமரின் இலங்கை வரவு வேண்டப்படாத அல்லது விரும்பப்படாத ஒன்றாக இருந்ததை ராஜீவ் காந்தி மீதான இலங்கை கடற்படை வீரரின் தாக்குதல் எடுத்துக்காட்டியிருந்தது.
ஜூலை 29, 1987 "இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம்" இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவாலும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியாலும் இலங்கையின் தலைநகர் கொழும்பில் கைச்சாத்தானது.
(இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தானது)
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையடுத்து இலங்கையில் அமைதிகாக்கவென "இந்திய அமைதி காக்கும் படை" வடக்கு-கிழக்கு பகுதிகளில் கால்பதிக்கத் தொடங்கியதுடன் இலங்கை அரசபடைகள் தமது இராணுவ முன்னரங்க நிலைகளிலிருந்து முழுமையாகப் பின்வாங்கி முகாம்களுக்குள் முடக்கப்பட்டன.
இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட "ஒபரேசன் பூமாலை" நடவடிக்கையால் களிப்புற்று அதனை வரவேற்ற வடக்கு கிழக்கின் பெரும்பகுதி மக்கள் இப்பொழுது "இந்திய அமைதி காக்கும் படை"யின் வருகையை கையசைத்து வரவேற்கத் தொடங்கினர்.
பல தசாப்தங்களாக இலங்கையின் இனவாத அரசுகளால் நிறைவேற்றப்பட்ட அசமத்துவமான சட்டங்களாலும், இனப்பாகுபாடுகளாலும் இனவன்முறைகளாலும் "களைப்புற்று" இருந்த மக்கள், ஈழவிடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட இயக்கங்களின் அராஜகத்தையும், ஜனநாயக மறுப்பையும், பாசிசப் போக்கையும் தமது கண்களால் கண்டுகொண்டிருந்தனர். ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்கள் பொது எதிரிக்கெதிராக ஜக்கியப்படுவதிலிருந்து விலகி தமக்குள்ளேயான மோதலில் பலவீனப்பட்டிருந்ததால் இலங்கை அரசபடைகளின் இராணுவ நடவடிக்கைகளால் அப்பாவிப் பொதுமக்களே பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர். இந்நிலையில் அமைதியை விரும்பிய மக்கள் "இந்திய அமைதி காக்கும் படை"யின் வருகையால் நிரந்தர அமைதி உருவாகும் எனக்கருதி "இந்திய அமைதி காக்கும் படை"யின் வருகையை வரவேற்கத் தொடங்கியிருந்தனர்.
("இந்திய அமைதி காக்கும் படை")
ஆனால் "இந்திய அமைதி காக்கும் படை" வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு வந்தடைந்திருந்த போதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியாவில் இந்திய அதிகாரிகளின் கைகளில் ஒரு "கைதியாகவே இருக்கின்றார் என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை. வடக்கு-கிழக்கில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்கள்களுக்கு தமது தலைவர் பிரபாகரன் குறித்து எந்தத் தகவல்களும் தெரிந்திருக்கவில்லை. தமது தலைவரை இந்தியாவிலிருந்து அழைத்துவந்தால் மட்டுமே தம்மால் எந்த முடிவையும் எடுக்க முடியும் என தளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் "இந்திய அமைதி காக்கும் படை"யினரிடம் தெரிவித்திருந்ததோடு அவர்களுடன் ஒத்துழைக்கவும் மறுத்திருந்ததுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் "இந்திய அமைதி காக்கும் படை"க்கு பொதுமக்கள் மூலமாக நெருக்குதல்களை கொடுத்தனர். இதனையடுத்து இந்திய விமானப்படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டார்.
வவுனியா மாவட்டத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களைப் பொறுத்தவரை "இந்திய அமைதி காக்கும் படை" குறித்து எத்தகைய கருத்துக்களை மக்களுக்கு தெரிவிப்பது என்பது பற்றி முடிவில்லாதவர்களாக, குழப்பமடைந்தவர்களாக இருந்ததை அச்சமயம் நெளுக்குளத்தில் தங்கியிருந்த என்னால் அறிய முடிந்தது.
"இந்திய அமைதிகாக்கும் படை"யுடன் ஒத்துழைப்பதா இல்லையா என்பது குறித்து அவர்களிடம் முடிவெதுவும் இருந்திருக்கவில்லை. சில நாட்களுக்குள்ளாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டிருந்த தகவலையடுத்து "இந்திய அமைதிகாக்கும் படை"க்கு வவுனியாவில் மாபெரும் வரவேற்பளிக்க தமிழீழ விடுதலைப் புலிகள் தயாரானார்கள்.
வீதிகள் எங்கும் வாழைமரங்களையும் தோரணங்களையும் கட்டுமாறும், "இந்திய அமைதிகாக்கும் படை" யை வரவேற்குமாறும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மக்கள் பணிக்கப்பட்டனர். வீதிகள் எங்கும் வாழைமரங்களும் தோரணங்களும் அலங்கரிக்க, ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிபரப்பப்பட்ட பாடல்கள் "இந்திய அமைதிகாக்கும் படை" யை தமிழீழ விடுதலைப் புலிகள் உளமார வரவேற்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டியது.
இத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் நின்றுவிடவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் வவுனியா மாவட்ட முன்னணி உறுப்பினர்களான தினேஸ், இன்பன், இதயன், அமுதன் உட்பட பல தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் வவுனியா நகரின் மத்தியில் அமைந்திருந்த "இந்திய அமைதி காக்கும் படை" முகாமில் தினசரி மாலை முதல் நள்ளிரவு வரை களியாட்டத்தில் ஈடுபடுவதை தமது வழக்கமாகக் கொள்ளத் தொடங்கிவிட்டிருந்தனர்.
இதன் மூலம் "இந்திய அமைதிகாக்கும் படை"க்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் வவுனியாவில் "தேனிலவு" ஆரம்பமாகியிருந்தது. அனைத்து ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களையும் அழித்தொழித்து அவற்றிற்கு தடை விதித்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் "தாகம்" இப்பொழுது "தமிழீழம்"ஆக அல்லாமல் "இந்திய அமைதி காக்கும் படை"யினரின் முகாமில் இரவுநேரக் களியாட்டமாக மாறிவிட்டிருந்தது
"இந்திய அமைதிகாக்கும் படை"யின் வருகையையடுத்து மாறிவிட்டிருந்த சூழலால் என்னுடன் வவுனியாவில் தங்கியிருந்த டொமினிக், சண்முகநாதன், காசி(ரகு), தர்மலிங்கம், சுரேன் ஆகியோர் யாழ்ப்பாணம் சென்றிருந்தனர்.
ஆகஸ்ட் 4 , 1987 "இந்திய-இலங்கை ஒப்பந்தம்" குறித்து தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் முகமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவில் முன்றலில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
(யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவில் முன்றலில் மாபெரும் பொதுக்கூட்டம்)
பலத்த கரகோசங்களின் மத்தியில் மேடையில் தோன்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் "இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் பாதுகாப்பை இந்தியாவிடம் ஒப்படைப்பதாகவும், இதன் காரணமாக தமது ஆயுதங்களைக் கையளிப்பதாகவும்" தனது முதலாவது பகிரங்கக் கூட்டத்திலான பேச்சில் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பேச்சின் மூலம் இலங்கையின் இனப்பிரச்சனைக்கு "இந்திய-இலங்கை ஒப்பந்தம்" வழியாக ஒரு தீர்வைக் காண முடியும் என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் துளிர்விடத் தொடங்கியிருந்தது.
ஆனால், தென்னிலங்கை சிங்கள மக்களின் பார்வையில் "இந்திய அமைதிகாக்கும் படை"யானது ஒரு ஆக்கிரமிப்பு இராணுவமாக, இலங்கையின் இறையாண்மையை மீறிய ஒரு இராணுவமாக, இந்தியாவின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான ஒரு இராணுவமாக நோக்கப்பட்டது.
("இந்திய அமைதி காக்கும் படை")
சிங்கள மக்கள் மத்தியில் காணப்பட்ட இத்தகையதொரு மனநிலையை ஜனதா விமுக்திப் பெரமுன(JVP) தனது அரசியல் இலக்கை அடைவதற்கு பயன்படுத்த முனைந்தது. இந்திய விஸ்தரிப்பு வாதம் குறித்து தனது அரசியல் வகுப்புக்களை 1971ம் ஆண்டு தோல்வியில் முடிவடைந்த புரட்சிக்கு முன் தெரிவித்துவந்த ரோகண விஜேவீர தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுன "இந்திய அமைதி காக்கும் படை" உடனடியாக இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோசத்துடன் தனது போராட்டத்தை இலங்கை அரசுக்கெதிராக ஆரம்பித்திருந்தது
(தொடரும்)
1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1
2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2
3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3
4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4
5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5
6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6
7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7
8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8
9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9
10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10
11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11
12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12
13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13
14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14
15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15
16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16
17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17
18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18
19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19
20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20
21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21
22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22
23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23
24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24
25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25
26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26
27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27
28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28
29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29
30 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30
31. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 31
32. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 32
33. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 33
34. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 34
35.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 35
36.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 36
37.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 37
38.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 38
39.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 39
40. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 40
41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 41
42. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 42
43. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 43
44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 44
45. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 45
46. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 46
47. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 47
48. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 48
49. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 49
50 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 50