08152022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

மீண்டும் புலி என்பதன் மூலம், முன்தள்ளும் குள்ளநரி அரசியல்

அரசியல் சூதாட்டமே அரசியலாகிப் போன நிலையில் அரசியல். எங்கும், எவரும், காய் நகர்த்தும் இந்த அரசியல் தான் பண்பாகிவிட்டது. மக்களை இராணுவரீதியாக ஒடுக்கியாள, அரசுக்கு ஒரு எதிரியைக் காட்டுவது அவசியமாகின்றது. இந்த வகையில் அரசுக்கு புலி தேவைப்படுகின்றது. மறுபக்கத்தில் மீண்டும் குண்டு வைத்து அரசியல் செய்யலாம் என்ற கனவுகளுடன், தேசியம் பேசும் வலது - இடது உதிரிக் கூட்டங்கள் தங்கள் காய்நகர்த்தும் சொந்த சதிகளுடன் அங்குமிங்குமாக ஓடிப்பிடித்து விளையாடுகின்றனர்.

அரசு தன் புலனாய்வை மேற்கோள் காட்டி மீண்டும் புலிகள் என்றும், இந்தியாவில் மூன்று பயிற்சி முகாம்கள் இருப்பதாகவும், மன்னார் கடற்கரையில் புலிகளின் அதி வேக இரு வள்ளத்தைக் கைப்பற்றியதாகவும் செய்திகளை கசியவிட்டு இருக்கின்றது.

ஈ.பி.டி.பி. உறுப்பினர் கொலையை இந்தியாவில் பயிற்சி பெற்ற புலிகள் செய்ததாகவும், அவர்கள் இந்தியா தப்பிச் செல்ல முயன்றபோது தாம் கைது செய்ததாகவும், மேலும் 150 புலிகள் இந்தியாவில் பயிற்சி பெற்று இலங்கைக்குள் வந்துள்ளதாகவும் கூறியுள்ளது. அவர்களைத் தேடி சுற்றிவளைப்புகள், வீதித் தடைகள், பரிசோதனைகள் என்று அடக்குமுறைகளும் கண்காணிப்பும் விரிவாகின்றது. இனியொரு இணையம் தன் காய்நகர்த்தும் சதிப்பாணியில் இது உண்மைதான் என்று கூவுகின்றது. இந்தியா 1983 இல் வழங்கிய பயிற்சியை மறுத்தது போல் இம்முறையும் அதே போல் மறுப்பதாக, அதனால் இது உண்மைதான் என்று காட்ட முனைகின்றது. இனியொரு இணையம் அடிக்கடி ஆயுதம் ஏந்திய கனவை விதைத்து, புலியுடன் சேர்ந்து அரசியல் செய்ய முனைகின்றது.

இந்த வகையில் இனியொரு இணையம் "தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் தொடர்பில் இலங்கை ஊடகங்களில் வெளியான தகவல்களை இந்தியா மறுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் தமிழகத்தில் இயங்கி வருவதாக அண்மையில் இலங்கையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. மூன்று இரகசிய முகாம்களில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தகவல்களில் எந்தவிதமான உண்மையும் கிடையாது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. 80 களில் இலங்கை அரசைப் பணியவைக்கும் நோக்கோடும் போராட்டத்தை அழிக்கும் நோக்கோடும் இந்திய அரசு ஈழப் போராட்ட அமைப்புகளுக்குப் பயிற்சி வழங்கிய போது வெளியான தகவல்களையும் இவ்வாறே மறுத்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை இந்தியாவிலிருந்து இலங்கை செல்ல முற்படும் சிலரை இலங்கை அரசிற்கு எதிரான இராணுவப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளுமாறு இந்திய உளவுத்துறை அணுகி வருவதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன." இப்படி காய் நகர்த்தி கதை சொல்லுகின்றது.

இதேபோல் புலத்து புலி மாமாக்கள் இதைக் காட்டி, மக்களை ஏய்த்து பணம்பிடுங்கும் தங்கள் சொந்தக் கனவுடன் இதை ஊதிப் பெருக்குகின்றனர். அரசுடன் உள்ள தீவிர இனவாதிகள் இந்தியாவுக்கு எதிராகக் கூச்சல் போட, இந்திய அரசு தன் பிராந்திய மேலாதிக்க கோபத்துடன் மறுக்கின்றது

.

இலங்கை அரசின் புலனாய்வு பிரிவை மேற்கோள் காட்டி வெளியிட்ட இந்த செய்தியின் பின், பல்வேறு சக்திகளின் சூதாட்ட அரசியல் முன்னுக்கு வந்த கொப்பளிக்கின்றது.

ஈ.பி.டி.பி. உறுப்பினரின் கொலையைச் சுற்றி விசாரணையும் கைதுகளும் மற்றும் அதன் பின்னணி தொடர்பான எதுவும் வெளிப்படையாகவில்லை. அந்தக் கொலை, அரசியல் உள்நோக்கில் பயன்படுத்தப்படுகின்றது. இந்த நிலையில் இந்தியாவில் மூன்று பயிற்சி முகாம் பற்றிய செய்தி மற்றும் புலிக்கு இராணுவ பயிற்சி என்பது கற்பனையானது. இதை எடுத்தால் புலிகள் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள். அவர்களுக்கு மீள் பயிற்சி அவசியமற்றது. 150 பேரை புதிதாகப் புலிக்கு திரட்டிப் பயிற்சி கொடுத்தது என்றால், அது சாத்தியமற்ற ஒன்று. இந்திய - இலங்கை கடல் இலங்கை அரசின் கொலைகாரப் படையின் தீவிரமான கண்காணிப்பில் தொடர்ந்து உள்ளது. இப்படி நிலைமை இருக்க, தத்தம் அரசியல் தேவைக்காக இதை ஊதிப்பெருக்கியே இதை உயிருள்ளதாக்க முனைகின்றனர். இப்படி திட்டமிட்டு எதிரியையும், நண்பனையும் உருவாக்கிக் காட்டும் போலியான புரட்டு அரசியல் பின்புலத்தை இங்கு நாம் அரசியல் ரீதியாக இனம் காணவேண்டியுள்ளது.

மறுதளத்தில் இன்றைய இலங்கை அரசியல் சூழலில் ஒரு ஆயுதம் தரித்த தனிநபர் பயங்கரவாத குழு தோன்றாது என்பதல்ல. இதற்கான அனைத்து நிகழ்தகவும் உள்ளது. தன்னியல்பாகவும், புலத்துப் புலிகளின் தேவையுடனும், தனிநபர் பயங்கரவாதத்தை அரசியல் அடிப்படையாக கொண்ட இடதுசாரியம் பேசும் உதிரிக் கும்பலும், அரசு தன் தேவைக்காகவும், இந்திய அரசு தன் நோக்கத்துக்காகவும் (இந்திய கூலிக்குழுவாக இந்தியாவில் உள்ள ஈ.என்.டி.எல்.எவ். போன்றனவற்றை இந்த நோக்கில் வைத்திருக்கின்றது),.... என்று பல தளங்களில் தனிநபர் பயங்கரவாத அரசியல் அடித்தளத்துடன், இதற்கான நபர்களைக் கொண்ட அரசியல் சதிக் கும்பலாகவே எதார்த்தத்தில் இவை இயங்குகின்றன.

இந்த எதார்த்தத்தைக் கடந்து, இலங்கையில் புலி பற்றிய இன்றைய தகவல்கள் மற்றும் அதை சுற்றிய அரசியல் புரட்டுகளும். செய்தியை வெளியிட்ட அரசியல் சூழல் மற்றும் அதன் பின்னணி, இவர்கள் பற்றி தகவல்கள் அனைத்தும் பொருத்தமற்ற இணக்கமற்ற புனைவுகளாக திட்டமிட்டு வெளியாகி இருப்பதை நாம் இனம் காணமுடியும்.

இந்த பின்னணியாலான அரசியல் மற்றும் அதன் அரசியல் நோக்கம் மக்களைக் கடுமையாக கண்காணிக்க வைக்கின்றது. மக்களை மிரட்டி ஒடுக்குகின்றது. மக்களை இன ரீதியாக பிளக்கின்றது. இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரையான மக்களின் எதிரியை தவறாகக் காட்டி அரசு தன் சார்பாக வழிநடத்த முனைகின்றது. மக்களை தனிநபர் பயங்கரவாதத்தின் பின் நம்பிக்கை கொள்ளக் கோருகின்றது. இப்படி மக்கள் விரோத அரசியலுடன் அரங்கேற்றும் அரசியல் பின்னணியை, விழிப்புடன் இனம் காண்பதும் எதிர்த்துப் போராடுவதும் எம்முன்னுள்ள பாரிய அரசியல் சவாலாக உள்ளது. இதுதான் எம்முன்னுள்ள அரசியல் எதார்த்தம்.

பி.இரயாகரன்

05.04.2012


பி.இரயாகரன் - சமர்