இடதுசாரிகள் "இன விடுதலை தொடர்பாகப் பாராமுகத்தைக் கடைப்பிடித்தார்கள்" என்ற குற்றச்சாட்டை முன்வைப்பவர் முதலில், இன்று அவர்கள் எதார்த்தத்தில் என்ன செய்கின்றார்கள்? இன்றைய சமூக முரண்பாடுகள் மீதான அவரின் அரசியல் நடைமுறை செயற்பாடு என்ன என்பதில் இருந்து தான், அன்றைய காலகட்டங்கள் மீதான இவர்களின் விமர்சனத்தின் நோக்கத்தை இனம் காணமுடியும்;. இந்த வகையில் சசீவனின் இன்றைய அரசியல் மற்றும் நடைமுறையை எடுத்தால், இவை

1.இருப்பு சார்ந்த பிரமுகர் தனத்தையும்

2.மார்க்சிய எதிர்ப்பு அரசியல் அடித்தளத்தையும் அடிப்படையாகக் கொண்டது.

இந்த அடிப்படையில்தான் "இன விடுதலை தொடர்பாகப் பாராமுகத்தைக் கடைப்பிடித்தார்கள்" என்று குற்றஞ்சாட்டும் வலதுசாரிய மார்க்சிய விரோத அரசியல் அடித்தளத்தை நாம் காணமுடியும்;. மறுதளத்தில் இவர்கள் குற்றஞ்சாட்டுவது போல் இடதுசாரிகள் அப்படி பாராமுகத்தைக் கொண்டிருந்தார்களா!? எனின் இல்லை.

இங்கு சசீவன் கூறுவது போல் "இடதுசாரிய அரசியல் அக்காலப்பகுதியில் கருத்தியல் ரீதியாக தேசிய இன முரண்பாட்டை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தலைக் கொண்டிருக்கவில்லை" என்று கூறுவது மிகத் தவறானது. இலங்கையில் இருந்த இடதுசாரிய கட்சிகள் 1970 களின் பின் வர்க்க ரீதியாக செயலற்றுப் போனவைதான். வர்க்கரீதியான நடைமுறைப் போராட்டங்களில் ஈடுபடும் புரட்சிகரமான கட்சியாக அவை இருக்கவில்லை. இது தேசிய பிரச்சனையில் மட்டுமல்ல, வர்க்கப் போராட்டங்களைக் கூட முன்னெடுக்கவில்லை. இங்கு குற்றஞ்சாட்ட என்ன தான் இருக்கின்றது!

இந்த நிலையில் தான் வர்க்கப் போராட்டத்தை முன்வைத்த இடதுசாரிய புதிய அமைப்புகள் உருவானது. தமிழ்மக்கள் ஜனநாயக முன்னணி, என்.எல்.எப்.ரி, பேரவை, பாசறை, தீப்பொறி .. போன்ற இடதுசாரிய சிறு குழுக்கள் உருவானது. எப்படி இக்காலகட்டத்தில் பல வலதுசாரிய குழுக்கள் தோன்றியதோ, அப்படி இடதுசாரிக் குழுக்கள் தோன்றியது. அரசியல் வெற்றிடத்தில் இருந்துதான் இவ்விரண்டும் தோன்றியது. ஆக இடதுசாரிகள் "இன விடுதலை தொடர்பாகப் பாராமுகத்தைக் கடைப்பிடித்தார்கள்" என்பது தவறானது. உண்மையான வர்க்கப் போராட்ட சக்திகள், யாரிலும் பாராமுகத்தைக் கையாளவில்லை. வலதுசாரிய தேசியத்துக்கு முரணாக ஜனநாயகக் கோரிக்கையை முன்னெடுத்தார்கள்.

இங்கு சசீவன் கூறுகின்றார் "இன ரீதியான முரண்பாடுகளையும் கவனிக்கத்தான் வேண்டும் என்று கட்டத்திற்கு இடதுசாரிகள் வந்தபோது, நிலமை தலைகீழாக மாறிப்போயிருந்தது" என்று. இது கூட அடிப்படையில் தவறானது. இங்கு "தலைகீழாக மாறிப்" போக எதுவும் அங்கு நேராக இருக்கவில்லை. வலதுசாரி தமிழ்தேசியம் காலனிய காலம் முதல் எப்போதும் இருந்து வந்ததுதான். இங்கு அது பண்பு மாற்றம் பெற்ற போக்குத்தான் காலத்துக்குக் காலம் மாறியதே ஒழிய, இடதுசாரியப் போக்கில் இருந்து "தலைகீழாக மாறிப்" போய்விடவில்லை.

ஏன் இன்று கூட "இனரீதியான முரண்பாடுகளையும் கவனிக்கத்தான் வேண்டும் என்ற கட்டத்திற்கு"ள் நின்று, நீங்கள் விமர்சனம் செய்கின்றீர்கள். சொல்லுங்கள்? உங்கள் விமர்சன அடிப்படையில், இன்று இதை மாற்றியமைக்க நீங்கள் செயல்படவில்லை. இன்று வலதுசாரிய தேசிய அடிப்படை தொடர்வதையும், பண்பு மாற்றம் பெற்று இருப்பதையும், விமர்சனம் வைக்கும் உங்களளவில் இதை மாற்றியமைக்க முனையவில்லை. பின் "நிலமை தலைகீழா"கி விட்டதாக நாளை கூறுவதில் அர்த்தம் எதுவும் கிடையாது.

இதற்கு மாறாக வர்க்க ரீதியான சக்திகள் தொடர்ந்து இந்த தளத்தில் அரசியல் ரீதியாக இயங்குகின்றனர். அதற்கு எதிராக நீங்கள் இயங்குகின்றீர்கள். அதுதான் உங்கள் விமர்சனத்தின் அரசியல் சாரம்.

இந்த வகையில் ஜயரை உங்கள் மார்க்சிய விரோத வக்கிரத்துக்கு ஏற்ப ஜயர் சொல்லாத ஒன்றைக் கூறி, திரித்தும் வளைத்தும் காட்டுகின்றீர்கள். "..அதற்கான மாற்றீடுகள் தொடர்பான முன்மொழிவுகளை அவரால் இயக்கத்திற்குள் முன்வைக்க முடியாத போதிலும் தனது விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைக்கின்றார். இனிமேலும் முடியாது என்ற கட்டம் வரும்போது, இயக்கத்தில் இருந்து வெளியேறிச் செல்கின்றார். அதன் அடுத்த கட்டமாக, தான் சரியெனக் கருதும் போராட்ட முன்னெடுப்புக்களில் ஈடுபடுகின்றார். இதன் தொடர்ச்சியிலேயே புளொட்டிலும் என்.எல்.எஃப்.ரி இலும் தீப்பொறியிலுமான அவருடைய செயற்பாடுகள் அமைகின்றன... விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து மறுத்தோடியாக ஆரம்பித்த அவர் பயணம் இதர இயக்கங்களில் பங்களிப்பதிலும் - அங்கும் தனது எண்ணத்தைச் செயற்படுத்த இயலாது அதிருப்தியுடன் விலகுவதிலும் முடிவடைகின்றது." என்கின்றார். இங்கு புலிகள், புளாட், என்.எல்.எஃப்.ரி, தீப்பொறி என அனைத்தையும்; ஒரே தரவரிசையில் வைத்து தாக்குவதுடன், ரே காரணத்தையே காட்டுகின்ற குள்ளநரி அரசியலை இங்கு செய்கின்றனர்.

இதையே தான் காதரும் அதே கூட்டத்தில் அச்சுப்பிசகாது செய்கின்றார். "…… எங்களுடைய போராட்டத்தில் ஐயர் விட்ட பிழை என்னவென்றால் அவர் சுத்த இராணுவ வாதம் பிழை என்று சொல்லி இனம் கண்டார். மக்கள் பாதை என்று சொல்லி ஒன்றைத் தேர்வு செய்தார் மக்கள் பாதையைப் பற்றிப் பேசியவர்கள் பிரபாகரன் செய்ததைவிட மிக மோசமாக படுகொலை செய்தார்கள் அதை அவர் ஒத்துக்கொண்டுள்ளார். புளட்டுக்கு சென்றார். புளட் புலியை விட மோசமான காரியங்களைச் செய்தார்கள். பிறகு என்.எல்.எவ்.ரீக்கு செல்கின்றார் அந்த அனுபவத்தை அவர் சொல்லவில்லை. பிறகு செல்லுவார் என்று நினைக்கின்றேன். அங்கு ஒரு வித்தியாசத்தை காணவில்லை." என்கின்றார்.

இப்படி ஜயர் பெயரால் சொல்லுகின்ற, பாசிச அடிவருடித்தன பொறுக்கித்தனத்தைப் பார்க்கின்றோம். புலி - என்.எல்.எவ்.ரீ நேரெதிரான அரசியல் மற்றும் அதன் போராட்டங்கள், இது சார்ந்த தியாகங்கள் மீதான இவர்களின் பார்வை என்ன என்பதை இங்கு எடுத்துக்காட்கின்றது. இவர்கள் அக்காலகட்டத்தில் யாருடன் இருந்தனர் என்பதையும், இன்றும் அவர்கள் யாருடன் நிற்கின்றனர் என்பதையும் இது எடுத்துக்காட்டுகின்றது. கடந்த வரலாற்றை சுயமாக கற்க மறுத்த, வர்க்க அரசியலை மறுக்கின்ற, அதை இருட்டடிப்புச் செய்கின்ற பிரமுகர்தன இருப்பு சார்ந்தது இது. இப்படி அன்றும் இன்றும் வர்க்க நடைமுறையை மறுக்கின்ற குழையல் அரசியலைப் பார்க்கின்றோம். வலதுசாரிய பாசிச அரசியலுக்கு எதிராக போராடிய தியாகங்களை கொச்சைப்படுத்துகின்ற வக்கிரங்கள் தான் இவை. அன்று பாசிட்டுக்கள் செய்த அதே கெர்லைகார அரசியலை, இன்று மீள விமர்சன அரசியலாக செய்கின்றனர். "அங்கு ஒரு வித்தியாசத்தை காணவில்லை." என்ற காதரும் "தனது எண்ணத்தைச் செயற்படுத்த இயலாது அதிருப்தியுடன் விலகுவதிலும் முடிவடைகின்றது." என்று சசீவனும், ஜயரின் பெயரில் கண்டுபிடித்து கூறும் அரசியலின் பின்னால் பாசிசம் கொப்பளிக்கின்றது. இவர்கள் வைக்கும் இன்றைய நடைமுறை அரசியல் தான் என்ன? இக்காலகட்டத்தில் இவர்களும் கூட வாழ்ந்தவர்கள்! என்ன தான் செய்தனர்? சரி இன்று என்ன தான் செய்கின்றனர்.

வலதுசாரிய பாசிசத்தை எதிர்த்துப் போராடியவர்களை கொச்சைப்படுத்துகின்றனர். வலதுசாரிய பாசிசத்துக்கு நிகராக அந்தப் போராட்டங்களைக் காட்டி இழிவுபடுத்துகின்றனர். இன்று போராடுவபர்களை கொச்சைப்படுத்த, தங்கள் பிரமுகர்தனத்தை இதன் மூலம் தக்கவைக்க இன்று இது அவர்களுக்கு அவசியமாகின்றது. தாங்கள் இன்று பிரமுகராக இருக்க, வலதுசாரிய பாசிசத்தை எதிர்த்துப் போராடிய அரசியல் மற்றும் தியாகங்கள் தடையாக இருப்பதால், அதை இருட்டடிப்புச் செய்கின்றனர், கொச்சைப்படுத்துகின்றனர்.

 

தொடரும்

 

பி.இரயாகரன்

301.03.2012

1. வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் "சமாந்தரக்" கோட்பாடு பற்றி - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 01

2. வர்க்கக் கண்ணோட்டமற்ற போராட்டம் எதைக் குறிக்கின்றது - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 02

3. "அடையாள அரசியல்" ஆளும் வர்க்கக் கோட்பாடாகும் - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 03

4. "இன விடுதலை தொடர்பாகப் பாராமுகத்தைக் கடைப்பிடித்தார்கள்" என்று குற்றஞ்சாட்டும் நீங்கள் யார்? - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 04