முரணற்ற வகையில் அனைத்து ஒடுக்குமுறையையும் எதிர்த்து ஒரு புள்ளியில் இணையாத அரசியல், முரணுள்ளதாகவும் தனக்குள் ஒடுக்குமுறையைக் கொண்டுள்ளதாகவும் காணப்படும். உயிரியல் அடிப்படையில் கூட மனிதர்கள் தமக்குள்ளான வேறுபாடுகளை நீக்கி தம்மை ஒன்றிணைக்காது பிரிந்து நிற்கும் போக்கு, மனிதவிரோத உயிரியல் கண்ணோட்டமாகும்.

இந்த வகையில் தான் சசீவனின் மார்க்சிய விரோதக் கண்ணோட்டம் வெளிப்படுகின்றது. "தேசியம், தேசியவாதக் கருத்துக்கள் தனியே வலதுசாரி அரசியலின் நீட்சியாகவே இடதுசாரிகளால் பார்க்கப்பட்டன" என்று சசீவன் கூறுகின்றார். "தேசியம், தேசியவாதக் கருத்துக்கள்" வலதுசாரிய அரசியலல்ல என்கின்றார். இதன் மூலம் அவர் "தேசியம், தேசியவாதக் கருத்துக்க"ளை வர்க்கம் கடந்த ஒன்றாக இட்டுக்கட்டிக் காட்டமுனைகின்றார்.

"தேசியம், தேசியவாதக் கருத்துக்கள்" முதலாளித்துவ கோட்பாடாகும். முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளில், அதன் திரிந்த வடிவங்கள் நிலவும் சமூக அமைப்பு வடிவங்களுடன் இணைந்து காணப்படுகின்றது. பாட்டாளி வர்க்கம் தேசியத்தை மறுத்து சர்வதேசியத்தை உயர்த்தி உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று கோருகின்றது. இது தேசியத்துக்கு முரணானது.

இதை விட இன்று தேசம் கடந்த மூலதனம் தேசம் மற்றும் தேசியத்தை அழிக்கின்றது. இந்த வகையில் தேசம் கடந்த உலகமயமாதல் மூலதனத்திற்கும், உலகமயமாகாத தேசிய மூலதனத்துக்கும் இடையிலான முரண்பாடு "தேசியம், தேசியவாதக் கருத்துக்கள்" மூலம் தக்கவைக்கப்படுகின்றது. இங்கு முரணற்ற தேசிய ஜனநாயகக் கூறுகளையே மட்டும் தான், தன் பாட்டாளிவர்க்க நிகழ்ச்சிக்கு ஏற்ப பாட்டாளிவர்க்கம் ஆதரிக்கின்றது அல்லது முன்னெடுக்கின்றது. மற்றும்படி மற்றைய பிற்போக்கு கூறுகளை எதிர்க்கின்றது. இலங்கையில் தமிழ் - சிங்கள என இரு எதிரான தேசியவாதக் கூறுகள், தன்னுடன் படுபிற்போக்கான முரணான தேசியக் கூறுகளை கொண்டு மக்களை ஒடுக்கியபடி வெளிப்பட்டது. இதை பாட்டாளி வர்க்கம் என்றும் ஆதரிக்காது. முரணற்ற ஜனநாயகக் கூறுகளை மட்டும்தான் ஆதரிக்கும்.

மறுதளத்தில் "தேசியம், தேசியவாதக் கருத்துக்கள்" மனிதக்கூட்டத்தை பிளந்து சுரண்டும், சுரண்டும் வர்க்கக் கோட்பாடாகும். மனிதர்களை பிளக்காத, சுரண்டும் வர்க்கத்தை எதிர்த்த முரணற்ற அரசியல் தளத்தில் மட்டும் தான் "தேசியம், தேசியவாதக் கருத்துக்கள்" சார்ந்து  பாட்டாளி வர்க்கம் இயங்குகின்றது.

இங்கு "தேசியம், தேசியவாதக் கருத்துக்கள்" தனித்து வலதுசாரி அரசியல் அல்ல எனக் கூறுவது, சுற்றுவழியால் வர்க்கமற்றதாக தேசியத்தைக் கூறுவதாகும். தேசியம், தேசியவாதக் கருத்துகள் முதலாளித்துவக் கோட்பாடுதான். அதாவது வலதுசாரிக் கோட்பாடுதான். இது பாட்டாளி வர்க்க கோட்பாடேயல்ல. இங்கு வலதுசாரிய "தேசியம், தேசியவாதக் கருத்து" சார்ந்த, வர்க்க ரீதியான ஒடுக்குமுறையை வர்க்கரீதியாக இனம் காணாத தேசியவாதக் கண்ணோட்டம், வலதுசாரிய அரசியலின் நீட்சிதான்;. இங்கு கூட்டணி முதல் புலிகள் வரை இந்த வலதுசாரிய அரசியலின் சிறப்பான அரசியல் வெளிப்பாடுதான்.

இந்தச் சமூக அமைப்பில் மக்களைப் பிளந்து சுரண்ட உருவான வலதுசாரிய தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில், முரணற்ற ஜனநாயகத்தை மையப்படுத்திய போராட்டத்தை மட்டும் தான் மார்க்சியவாதிகள் முன்னெடுப்பர். இது வர்க்கப்போராட்டத்தை முன்னெடுக்கும் அதன் சொந்த வேலைத்திட்டத்தில் உள்ளடங்கியது. இதை முன்னெடுக்காத போது, அவர்கள் வர்க்க கடமையில் விலகி விடுகின்றனர். இந்த வகையில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்த வர்க்கக் கட்சிகள், இலங்கையில் இருக்கவில்லை. வர்க்கக் கட்சிகள் வேறு, இடதுசாரிக் கட்சிகள் வேறு. இலங்கையில் இடதுசாரிக் கட்சிகள் இருந்தன. வர்க்கக் கட்சி இருக்கவில்லை.

இங்கு இடதுசாரியத்தின் பெயரில், வெற்றிடம் மீது குற்றஞ்சாட்டும் நீங்கள் யார்? உங்கள் நோக்கம் என்ன? உங்கள் அரசியல் என்ன? குற்றஞ்சாட்டும் உங்கள் இன்றைய நடைமுறை அரசியல் பங்களிப்புத்தான் என்ன?

இங்கு வலதுசாரிகள் இடதுசாரிகள் மீது குற்றஞ்சாட்டும் பொது வக்கிரத்தைக் காண்கின்றோம். சசீவன் கூற்றில் "இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் தம்மை அணுகுவதற்கு முயற்சிக்கவில்லை என்பதும் தேசிய இன விடுதலை தொடர்பாகப் பாராமுகத்தைக் கடைப்பிடித்தார்கள் என்பதும் முக்கியமானவை." என்று ஜயரின் அதே தவறான கருத்தை, அதே கண்ணோட்டத்தில் இங்கு மார்க்சியத்துக்கு எதிராக தனது வலதுசாரிக் கண்ணோட்டத்தில் பயன்படுத்துகின்றார். ஐயரின் கருத்து என்ற வகையில், அதே வலதுசாரிய அரசியலில் நின்று மீண்டும் முன்வைக்கும் அதே குற்றச்சாட்டு.

குற்றஞ்சாட்ட நீங்கள் யார்? உங்கள் அரசியல் என்ன? சரியான வர்க்க அரசியலை முன்னனெடுத்தபடி, வர்க்கமல்லாத இடதுசாரியத்தை அம்பலப்படுத்துவது வேறு. வர்க்க அரசியலை முன்னெடுக்காதவர்களின் குற்றச்சாட்டு, வலதுசாரிய அரசியலின் மற்றொரு அரசியல் நீட்சியாகும். மார்க்கிய விரோத கண்ணோட்டத்தின் அரசியல் தொடர்ச்சியாகும்.

இந்தக் குற்றச்சாட்டு மூலம் தங்களுடைய மற்றொரு அரசியல் பரிணாமத்தை மூடிமறைக்கின்றனர். வலதுசாரியம் ஒரு வர்க்க அரசியல் வழியாக இங்கு இருப்பதை மூடிமறைக்கின்றனர். ஜயர் முதல் இன்றைய புலிகள் வரை கொண்டிருந்த வலதுசாரிய கருத்து, ஒரு சமூக அமைப்பு சார்ந்த கருத்து. அதை "இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் தம்மை அணுகுவதற்கு முயற்சிக்கவில்லை" என்பதால், அதை அவர்கள் கொண்டிருக்கவில்லை, கொண்டிருப்பதில்லை. ஜயர் அதைத் துறந்தபோது, பிரபாகரன் முதற்கொண்டு அந்த அமைப்பின் பெரும்பான்மை அதைத் துறக்கவில்லை. இடதுசாரியம் மூலம் அறிவு பெற்ற ஜயர், அதைத் தொடர்ந்து மாற்ற முடியவில்லை. நிகழ்தகவு அங்கு பொதுவாக இருந்தது. இடதுசாரியம் மீது குற்றஞ்சாட்ட, வலதுசாரியத்துக்கு எந்த அரசியல் அடிப்படையும் கிடையாது. இடதுசாரியம் என்பது, குற்றஞ்சாட்டும் வண்ணம், யாரும் அதை குத்தகைக்கு வைத்திருப்பதில்லை. வர்க்க ரீதியான இடதுசாரியம் இந்த சமூக அமைப்பின் உள்ளார்ந்த எதிர்கோட்பாடு. அது வெளியில் இருந்து வருவதில்லை. இந்த வகையில் குற்றஞ்சாட்டுபவர் அதை முன்னெடுக்க உரித்துடையவர். அதை தன் நடைமுறையாகச் செய்யாது குற்றஞ்சாட்டுவது, வலதுசாரிய அரசியலின் தொடர்ச்சி.

இடதுசாரியம் தன் வர்க்க அரசியலை முன்னனெடுக்காதபோது, அது இடதுசாரியமாக இருப்பதில்லை. வெற்றிடம் மீது யாரும் குற்றஞ்சாட்ட முடியாது. இங்கு குற்றம் சாட்டுபவர் அதை உணர்வதால், அதை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு அவரையே சாரும். இந்த வகையில் இதை மீள உரைக்கும் சசீவனுக்கும் இன்று அது பொருந்தும். அந்தக் கடமைக்கு வெளியிலான வெற்றிடத்தில் உளற முடியாது.

"இன விடுதலை தொடர்பாகப் பாராமுகத்தைக் கடைப்பிடித்தார்கள்" என்று கூறுகின்ற பின்னஈpயில், முரணற்ற வகையில் அதை முன்னெடுத்து இருக்க வேண்டிய கடப்பாடு குற்றம் சாட்டும் அனைவருக்கும் முன் இருந்தது. அது இன்றும் இருக்கின்றது. இதை நடைமுறையில் முன்னெடுத்த வண்ணம், முரணான வலதுசாரி தேசியத்தை விமர்சிக்கும் கடப்பாடு முதன்மையானது. இதை இந்தத் தரப்பிடம் காணமுடிவதில்லை. வலதுசாரிய தேசியத்தை "சமாந்திரமாக" முன்னிறுத்தியபடி, இடதுசாரியத்தை பொத்தாம் பொதுவில்; தாக்குகின்றனர்.

தொடரும்

பி.இரயாகரன்

30.03.2012

1. வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் "சமாந்தரக்" கோட்பாடு பற்றி - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 01

2. வர்க்கக் கண்ணோட்டமற்ற போராட்டம் எதைக் குறிக்கின்றது - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 02

3. "அடையாள அரசியல்" ஆளும் வர்க்கக் கோட்பாடாகும் - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 03