"இந்த உலகில் ஓரே ஒரு வகையான உண்மைக் கோட்பாடு மட்டுமே இருக்கின்றது. அது புறவயமான யதார்த்தத்திலிருந்து தொகுக்கப்பட்டு, பின்னர், புறவயமான யதார்த்தத்தால் சோதித்தறியப்பட வேண்டும். மற்றது எதுவும் நம்முடைய கோணத்தில் கோட்பாடு என்னும் பெயருக்கான தகுதியற்றதாகும். நடைமுறையுடன் தொடர்பின்றிப் போகும் போது கோட்பாடு நோக்கமற்றதாகின்றது என்று ஸ்டாலின் சொன்னார். நோக்கமற்ற கோட்பாடு பயனற்றது, பொய்யானது, நிராகரிக்கப்பட வேண்டியது. நோக்கமற்ற கோட்பாட்டுமயமாக்குவதில் மோகம் கொண்டவர்களுக்கெதிராக மரியாதையின்றி வெறுப்பை உமிழ வேண்டும். மார்க்சியம் லெனினியம் மிகவும் சரியானது, விஞ்ஞானப் பூர்வமானது, புரட்சிகர உண்மை. புறவயமான யதார்த்திலிருந்து பிறந்தது. புறவயமான யதார்த்தத்தினால் சோதித்தறியப்பட்டது. ஆனால் மார்க்சிய-லெனினியத்தைக் கற்றறியும் யாரும் அதை உயிரற்ற வரட்டுக் கோட்பாடாக எடுத்துக் கொண்டு, கோட்பாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதோடு அவர்களும் கெட்டு மற்றவர்களுக்கும் ஊறுவிளைவிக்கின்றார்கள்" என்று "கட்சியின் வேலைப்பணியை திருத்துக" என்ற தனது கட்டுரையில் மாவோ எடுத்துக் கூறுகின்றார்.

இலங்கையில் விவசாய உற்பத்தி மற்றும் உற்பத்தி உறவுகளின் புறவயமான யதார்த்தம் என்ன என்ற அடிப்படையான கேள்வியை இக் கட்டுரை எழுப்பி ஆராய்கின்றது. இலங்கை இன்னமும் அரை நிலப்பிரபுத்துவ நாடா? விவசாய உற்பத்தி, உற்பத்தி உறவுகள் குறித்தும், அதில் நடந்து வந்த மாற்றங்கள் என்ன? இது பற்றிய அரசியல் பொருளாதார மதிப்பீடு குறிப்பாக இன்று அவசியமாகின்றது. 1970 களில் பின் வெவ்வேறு காலகட்டத்தில் நடந்தேறிய மூன்று ஆயுதமேந்திய போராட்டங்களும் வெளிப்படுத்திய குட்டிபூர்சுவா மனப்பாங்கான அரசியல் காரணத்தையும் இது மேலும் தெளிவுபடுத்தும்;.

மறுதளத்தில் இலங்கை அரைப் நிலப்பிரபுத்துவ நாடல்ல என்றால், அது எந்த வகையான நாடு? வெறும் நவகானித்துவ நாடா? இலங்கை விவசாயம் முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டதா அல்லது நவகானித்துவ முதலாளித்துவ உற்பத்தியை முறையைக் கொண்டதா? அல்லது எந்த வகையான விவசாய உற்பத்தியைக் கொண்டது?

இலங்கையில் விவசாயம் எந்த வகையான அடிப்படையைக் கொண்டது என்பதை ஆராய்வது இன்று அவசியமாகின்றது? அரை நிலப்பிரபுத்துவம் சார்ந்து நிலவிய பண்பாட்டுக் கலாச்சாரக் சமூகக் கூறுகள் பற்றியும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதும் தொடர்பாக ஆராய்வது அவசியம். இலங்கையில் விவசாயம் தொடர்பான அரசியல் மதிப்பீடு, அரசியல் இராணுவ யுத்ததந்திரத்தையும் வகுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

2010 ஆண்டு தரவுகளின் படி இலங்கை 81 இலட்சம் உழைப்புச் சக்திகளைக் கொண்ட ஒரு நாடு. மூன்று விதமான தொழில் முறைமைக்குள் உழைப்புச் சக்திகளை பொதுவாகப் பிரித்து வகைப்படுத்த முடியும். இதைவிட இலங்கையில் நான்காவது வகையான உழைப்புப் பிரிவு, அதாவது அன்னிய உழைப்பு சார்ந்த, 20 இலட்சம் உற்பத்திச் சக்திகளையும் நாம் இன்று கவனத்தில் எடுக்கவேண்டியுள்ளது.

2009 இல் மொத்த நாட்டின் தேசிய வருவாயில் விவசாயம் 12.7 சதவீதத்தையும், தொழில்துறை 29.7 சதவீதத்தையும், சேவைத்துறை 57.6 சதவீதத்தையும் பூர்த்தி செய்தது. 1999 தரவுப்படி இலங்கையின் உள்நாட்டு தேசிய வருவாயில் 16.8 சதவீதமும், வெளிநாட்டு வருமானத்தில் 35 சதவீதமும் விவசாயம் மூலம் கிடைத்தது.

2009 இல் இலங்கையில் பயிரிடக் கூடிய நிலத்தில் 28 சதவீதம் நெல் உற்பத்தியிலும், இலங்கை மொத்த தொழிலாளர்களின் 25 சதவீதம் பேரும் இதில் ஈடுபடுட்டனர். 2005 இல் விவசாய உழைப்பு சக்தியில் அரைவாசிப் பேர் நெல் உற்பத்தி சார்ந்து காணப்பட்டனர். 1998 இல் இலங்கை மொத்த அரிசித் தேவையில் 96 சதவீதமான (3960 கோடி ரூபா பெறுமதியான) சொந்த நாட்டு சிறு உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்பட்டது.

1940 இல் 66 இலட்சம் மக்கள் தொகை கொண்ட நிலையில் ஆண்டுக்கு 2.62 இலட்சம் தொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. அதேநேரம் 60 சதவீதமான நெல் இறக்குமதி செய்யப்பட்டது. 1998 இல் 186 இலட்சம் சனத்தொகைக்கு 26 இலட்சம் தொன் உற்பத்தி செய்யப்பட்ட அதேநேரம் 4 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்டது.

1960-1969 இல் 116 இலட்சம் மக்கள் தொகை கொண்ட காலத்தில் 10,6 இலட்சம் தொன் நெல் உற்பத்தி செய்யப்பட்ட அதேநேரம் 40 சதவீதம் நெல் இறக்குமதியானது.

1970-1979 இல் இறக்குமதி அளவு 25 சதவீதமாக குறைந்ததுடன், 137 இலட்சமாக மக்கள் தொகை கொண்ட அதேநேரம் நெல் உற்பத்தி 15.64 இலட்சம் தொன்னாக அதிகரித்தது.

இப்படி விவசாய உற்பத்தியில் பாரிய மாற்றம் நடந்தேறியது. இது அரைக்காலனிய சொத்துடமை வடிவில் அல்லாது சுதந்திரமான சிறுவுடமை விவசாயம் மூலம் நடந்தேறியுள்ளது. இதன் பின் நடந்தேறிய மாற்றங்கள் பற்பல.

2003 இல் இலங்கை கிராமங்களில் விவசாயம் அல்லாத துறைசார்ந்த வருமானத்தைப் பெறுபவர் 67 சதவீதமாக மாறியுள்ளது. 1980-2003 இடையில் பெருந்தோட்டங்களில் இருந்து கிட்டத்தட்ட 274000 விவசாயத் தொழிலாளர்களை இத்துறையை விட்டு வெளியேற்றியுள்ளது. மகாவலி தி;ட்டத்தின் கீழ் பயன்பாட்டு நிலம் 2001 இல் 137235 ஹெக்டேராக இருந்தது. இது 2005 இல் 185459 ஹெக்டேராகவும், 2010 இல் 212704 ஹெக்டேராகவும் அதிகரித்தது. இப்படி மாற்றங்கள் பலமுனையில் நடந்தேறியது.

இந்த வகையில் மூன்று வகையில் உழைப்புப் பிரிவினை சக்திகள் சார்ந்து, 2010 இல் விவசாயத்தில் 32.7 சதவீதமும் (25.2 இலட்சம் பேர்), சேவைத்துறையில் 43.1 சதவீதமும் (33.2 இலட்சம் பேர்), தொழில் துறையில் 24.2 சதவீதமு (18.7 இலட்சம் பேர்) மாகக் கொண்டு, உற்பத்தி சக்திகள் பிரிந்து கிடந்தனர். இது 1992 இல் வடக்குகிழக்கு தவிர்ந்து ஆராய்ந்த போது, விவசாயத்தில் 42.2 சதவீதமும் (20.8 இலட்சம் பேர்), சேவைத்துறையில் 37.7 சதவீதமும் (18.5 இலட்சம் பேர்), தொழில் துறை 20.1 சதவீதமு (9.9 இலட்சம் பேர்) மாக காணப்பட்டது. 2010 தரவுப்பப்டி 19.32 இலட்சம் பேர் அன்னிய நாடுகளில் வேலை செய்கின்றனர்.

மேலுள்ள தரவுகளின்படி இது விவசாயத்தைச் சார்ந்து வாழும் உழைப்பு சக்திகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை எடுத்துக் காட்டுகின்றது. விவசாயத்தை சார்ந்து உழைப்புச் சக்தி குறைய, சேவைத் துறையை சார்ந்த உழைப்புச் சக்தி அதிகரிப்பு அதிகளவிலும், தொழில் துறை சார்ந்து உழைப்பு சக்தி பொதுவாகவும் அதிகரிக்கின்றது. இது நவகாலனித்துவ பொருளாதாரத்தின் மிகச் சிறப்பான அரசியல் எடுத்துக் காட்டாக உள்ளது.

இன்று நாட்டில் மொத்த உற்பத்தி சக்திகளில் மூன்றில் ஒரு பகுதியினர் விவசாயத்தை சார்ந்து உள்ளனர். இதை நாம் எப்படி வகைப்படுத்துவது? இது தான் எம்முன் உள்ள அடிப்படையான கேள்வி. 1999-2000 தரவுகளின்படி இந்த விவசாயம் சார்ந்த உற்பத்தி துறையில்தான், இலங்கையின் மொத்த ஏழைகளில் 50 சதவீதம் பேர் காணப்பட்டனர்.

2004-2006 ஆண்டு தரவுகள் படி 28 இலட்சம் பேர் (கிராமத்தில் 47.8 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 23 இலட்சம் மற்றும் தோட்டங்களில் 61 ஆயிரம் குடும்பங்களைச் செர்நத 3.18 லட்சம்) பேர் ஏழையாக உள்ளனர். இது இலங்கை மொத்த குடும்பத்தில் 12.6 சதவீதமாகும்.

இலங்கையில் மிக ஒடுக்கப்பட்ட, வறிய மக்கள் பிரிவினர் இங்குதான் உள்ளனர். இங்கு தான் உழைப்பு மிக அதிகமாக சுரண்டப்படுகின்றது. இதற்குள் மலையக பெருந்தோட்டமும் அடங்கும்;.

இந்த உற்பத்தி மற்றும் உழைப்புச் சக்திகளை அரசியல்ரீதியாக துல்லியமாக இனம் காண்பது அவசியமானதாகின்றது. இவர்கள் எந்த வகையான சமூகப் பொருளாதார உற்பத்தி முறைமைக்குள் உள்ளனர் என்பதை இனம் காண்பதன் மூலம் தான், இவர்களுக்கான அரசியல் கோரிக்கைகளை முன்னிறுத்தி அணிதிரட்ட முடியும்.

நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ விவசாய உற்பத்தி முறைக்குள் உள்ள அடிப்படை வேறுபாட்டை புரிதல்

இலங்கையில் எந்தவகையான விவசாயம் நிலவுகின்றது என்பதை புரிந்துகொள்ள, இதைப்பற்றிய தெளிவும் அறிவும் அடிப்படையானது. அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி மற்றும் உற்பத்தி உறவுக்குள்ளான சீர்திருத்தங்கள் அந்த முறைமையை இல்லாததாக்கிவிடுவதில்லை. குறிப்பாக நவீன இயந்திரங்கள் முதல் கொண்டு முதலாளித்துவ கூலி முறைமை (பண்டத்துக்கு பதில் பணம்) கொண்ட பல சீர்த்திருத்தங்கள் இந்த முறைமையை மாற்றிவிடுவதில்லை. இப்படி இந்த வடிவங்கள் மீதான அரசியல் தெளிவின்மை மற்றும் அரசியல் திரிபுகள், அரை நிலப்பிரபுத்துவத்தை மறுத்து முதலாளித்துவமாகக் காட்டும் அரசியல் திரிபுகளாக புகுத்தப்படுகின்றது.

அதாவது சீர்திருத்தம் மூலம் அரை நிலப்புரத்துவத்தை தக்க வைக்கும் முறைமையும், நவீன இயந்திரங்கள் சார்ந்து முதலாளித்துவ உற்பத்தி சாதனங்களை விவசாயத்தில் ஊடுருவி செய்கின்ற மாற்றங்கள், மற்றும் உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள், எது அரைநிலப்பிரத்துவம் எது முதலாளித்துவம் என்ற வேறுபாட்டை அரசியல் ரீதியாக வகைப்படுத்த முடியாத மயக்கத்தையும் திரிபையும் கொடுக்கின்றது

நாம் முதலில் இதை வேறுபடுத்தி வகைப்படுத்துவதன் மூலம் தான், இலங்கை விவசாயத்தை புரிந்து கொள்ளும் அரசியல் அடிப்படைக்கான அரசியல் தெளிவை பெற்றுக் கொள்ளமுடியும்.

உழைப்பையும், உபரியையும் பெறும் முறைமைதான் தான் இதை வேறுபடுத்துகின்றது. இந்த வகையில்

1.முதலாளித்துவ உற்பத்தி முறையில் உபரி மதிப்பு தான் சுரண்டி கொள்ளையிடுகின்றது. இதற்கமைய முதலாளித்துவ உற்பத்தி முறையில் உழைப்பு சுதந்திரமானது.

2. நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை உபரி உழைப்பை அல்லது உபரி உற்பத்தியை சுரண்டிக் கொள்ளையிடுகின்றது. நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் உழைப்பு சுதந்திரமற்றது.

இந்த வகையில் நிலப்பிரபுத்துவம் உபரி உற்பத்தியை அதாவது உபரி உழைப்பை கொள்ளையிடுகின்றது. பொருளாதாரமற்ற வழிகளில் உழைப்பை சுரண்டுகின்றது. அதாவது பொருளாதாரமற்ற அடிமைத்தனத்தையும், அது சார்ந்த அடக்குமுறை வழிகளில் சுரண்டுகின்றது. உழைப்பு சுதந்திரமாக இருப்பதில்லை. இந்தவகையில் உற்பத்தி உறவுகளுடன் கூடிய அதிகாரம், சலுகைகள், செல்வாக்கு, கௌரவம், சாதியம் போன்ற கிராமப்புற சமூக அடக்குமுறை மூலம் மற்றும் அடிமைத்தனம் மூலம் உபரி உழைப்பை நிலப்பிரபுத்துவ விவசாயக் கட்டமைப்பு சுரண்டுகின்றது. இது இந்த வகையில் முதலாளித்துவ உற்பத்தி முறைமைக்கு நேர்மாறானது.

நிலப்பிரபுத்துவத்தில் உற்பத்தி கருவியுடன் (குறிப்பாக நிலத்துடன்) உழைப்பாளி கட்டுப்பட்டு இருப்பது நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் அடிப்படைகளில் ஒன்றாகும். உழைப்பாளி தன் உழைப்புச் சந்தையில் சுதந்திரமாக விற்கும் முதலாளித்துவ முறைமைக்கு நேர்மாறானது நிலப்பிரத்துவ உழைப்பைப் பெறும் முறைமை. அதாவது நிலப்பிரபுத்துவ சொத்துடமையில் இருந்து பிரிந்து, உழைப்பாளி தன் உழைப்பை சந்தையில் சுதந்திரமாக விற்க முடியாது. உற்பத்திக் கருவியுடன் (நிலத்துடன்) உழைப்பாளி கட்டுப்படுத்தும் முறைமைதான், முதலாளித்து விவசாய உற்பத்தி முறையில் இருந்து அரை நிலப்பிரபுத்துவ விவசாயத்தை வேறுபடுத்துகின்றது.

இந்த வகையில் இலங்கையில்

1.விவசாய நிலச் சொத்துடமை எப்படி இருக்கின்றது என்பது, எந்த வகையான விவசாயம் என்ற அரசியல் மதிப்பீட்டில் முக்கியமான கூறாக மாறுகின்றது

2.விவசாய உழைப்புச் சக்திகள் எந்த வகையில் உழைப்பை விற்கின்றனர் என்பதும், எந்த வகையான விவசாயம் என்ற அரசியல் மதிப்பீட்டில் இரண்டாவது பிரதான கூறாகவும் மாறுகின்றது.

இந்த வகையில் இதைப் பகுத்து ஆராய்வோம்.

1. அரை நிலப்பிரபுத்துவ சொத்துடமைத் தகர்வும், உற்பத்தி உறவுகளில் நடந்த மாற்றங்களும்

இலங்கையில் அரை நிலப்பிரபுத்துவ சொத்துடமையின் தகர்வு விவசாயிகளின் விவசாயப் புரட்சி மூலமோ அல்லது முதலாளிகளின் விவசாயப் புரட்சி மூலமோ நடந்தேறவில்லை. இந்த வகையில் இலங்கையில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியும் நடைபெறவில்லை. நிலப்பிரபுத்துவ உற்பத்திக்குள் நவீன இயந்திரத்தை புகுத்தியதால் இது நடைபெறவில்லை. சுதந்திரமான விவசாயிகளின் முதலாளித்துவ நடைமுறைகளால் இது நடந்தேறவில்லை. விவசாயப் புரட்சி மூலம் நடந்தேறவில்லை. "செயலூக்கமற்ற விவசாயிடத்தில் அவனுக்கு பதில் வியாபாரியைப் பொருத்துவது" என்று மார்க்ஸ் எடுத்துக்காட்டிய வழிகளில் நடந்தேறவில்லை. புதிய உற்பத்தி முறைக்கு பொருத்தமான புதிய விவசாய உற்பத்தி உறவுகளை புகுத்தியதன் மூலம் நடக்கவிலலை. நிலப்பிரபுகளும் அதிக வரிவிதிப்பு மூலம் நடக்கவில்லை. வன்முறை மூலம் ஒழிக்கவில்லை. முதலாளித்துவ விவசாயப் புரட்சி நடக்கவில்லை. ஒரு விவசாய வர்க்கமற்ற முதலாளித்துவ புரட்சியும் நடக்கவில்லை. மாறாக சுதந்திர விவசாயிகளை உருவாக்கி இருக்கின்றது.

இப்படி குறிப்பான பொருளாதார காரணியை விடவும் அரசியல் மற்றும் வரலாற்றுக் காரணியே சமுதாயத்தை புதுப்பித்து அதை முன்னோக்கி நகர்த்தியிருக்கின்றது. இந்த வகையில் இலங்கையின் சிறப்பான அரசியல் சூழல் சார்ந்து இது நடந்தேறியது. இலங்கையில் தொடர்ச்சியான பல்வேறு புறவயமான விசேட அரசியல் சூழலால், அரை நிலப்பிரபுத்துவ சொத்துடமை தகர்ந்தது மட்டுமின்றி, நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகள் சிதைந்தது. ஆனால் பண்பாட்டுதளத்தில் நடக்கவில்லை. முதலாளித்துவ உற்பத்தி முறையாக மாறிவிடவில்லை.

சுதந்திரமாக விவசாயக் கூலிகள் (சுதந்திரமாக உழைப்பை விற்கக் கூடிய) கொண்டதும், சிறு விவசாயிகள் முதல் பணக்கார விவசாயிகளையும் உருவாக்கி இருக்கின்றது. நவகாலனிய முதலாளித்துவ கூறுகளும், அரை நிலப்பிரபுத்துவ கூறுகளும் கலந்த பண்பாடு சமூக கூறுகளை அடிப்படையாக கொண்ட, சுதந்திரமான விவசாய உற்பத்தியும், உற்பத்தி உறுவுகளும் காணப்படுகின்றது. இதை நாம் குறிப்பாக ஆராய முன்பு, நிலப்பிரபுத்துவ சொத்துடமை எப்படி சிதைந்தது என்பதை முதலில் நாம் பார்ப்போம்.

1.1 நிலப்பிரபுத்துவ சொத்துடமை தகர்த்த நீர்ப்பாசனமும், புதிய விவசாயக் குடியேற்றமும்

இலங்கையில் நீர்ப் பாசனத் திட்டங்களும், நிலக் கொடுப்பனவுகளும் தொடர்ச்சியாக நடந்தேறியது. இந்த நீர்ப் பாசனத் திட்டம் மற்றும் குடியேற்றம் மூன்று அரசியல் அடித்தளத்தில் பொதுவாக நடந்தேறியது.

1. பேரினவாத நோக்கில் விரிவாக்கம் பெற்று வந்தது.

2. அரசுக்கு எதிரான போராட்டங்களை தடுக்கும் நோக்கில், இளைஞர்களை திருப்தி செய்யும் அடிப்படையிலும் நடந்தேறியது.

3. போலி இடதுசாரியம் சார்ந்த ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைக்க, முன்வைத்த அரசியல் சீர்திருத்தங்கள் மூலம் இவை நடந்தேறியது

இந்த அரசியல் அடித்தளத்தில் விவசாயம், கிராமப்புற நிலப்பிரத்துவப் பிடியில் இருந்து விடுபட்ட சுதந்திரமான விவசாயிகளை உருவாக்கியது. தாய் மொழி கல்வி சட்டம் மற்றும் பாடசாலை தேசியமயமாக்கல் மூலம் உருவான கல்விகற்ற புதிய தலைமுறை, தனது தந்தை வழி அரை நிலப்பிரபுத்துவ உறவில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள இந்தத் திட்டங்கள் தொடர்ச்சியாகக் கைகொடுத்தன. புதிதாக கல்வி அறிவு பெற்ற தலைமுறை அரை நிலப்பிரபுத்துவ வழிக்குப் பதில், ஜனநாயகக் கூறுகளைக் கொண்ட குட்டிபூர்சுவா வர்க்க அடித்தளத்தை தனது சுதந்திரமான விவாசாய அடித்தளத்தில் நின்று முன்வைத்தது.

இந்த வகையில் இலங்கையில் நடந்தேறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் மிக நேர்த்தியானவை. இந்த திட்டங்கள் பல நூறு வருடங்களுக்கு முந்தைய வழித்தடம் வழியாக தொடர்ந்து பேணப்படுகின்றது. காலனித்துவத்துக்கு பிந்தைய ஆட்சியாளர்கள் நீர் விநியோக விரிவாக்கத்தையும், நிலப் பகிர்வையும் விரிவாக நடத்தினர். இது நிலப்;பிரத்துவம் சார்ந்த உழைப்புச் சக்திகளை, அதில் இருந்து சுதந்திரமான விவசாயிகளாக விடுவிக்க கணிசமாக உதவியது.

1968 இறுதியில், சுமார் 352.000 ஹெக்டேர் நிலம் நீர்ப்பாசனத்தின் கீழான நெல் சாகுபடிக்கு வந்தது. மகாவலித்திட்டம் 1986 76000 ஹெக்டேர் நிலத்தை புதிதாக கொண்டுவந்தது. 1992 இல் இலங்கையில் 593இ000 ஹெக்டேர் நிலத்தை நீர்ப்பாசனத்தின் கீழ் கொண்டுவந்தது. 2005 தரவுபடி 13 மில்லியன் ஹெக்டேர் மீட்டர் நீர் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டது.

இலங்கையில் 60 மிகப் பெரிய நீர்த்தேக்கங்களும், 260 பெரிய மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களும் உண்டு. இதன் மூலம் வறண்ட பகுதிக்கு நீர்ப்பாசனம் செய்யப்படுகின்றது. இந்த நீர்ப்பாசன பராமரிப்பு சார்ந்து மட்டும் 14000 சிறு தொழிலாளர்கள் உள்ளனர். இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம், இந்த நீர்ப்பாசனம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது. மொத்த விவசாய நிலத்தில் 29 சதவீதம் (660000 ஹெக்டேராக நிலம்,) இந்த நீர்ப்பாசன முறை மூலம் விவசாயம் செய்யப்படுவதாக 2002 ஆண்டுக்கான விவசாய திணைக்கள அறிக்கை கூறுகின்றது. 1946 மற்றும் 1971 இடையில், வறட்சி மண்டலம் வாழும் மக்களின் விகிதாச்சாரம் 12 லிருந்து 19 சதவீதம் அதிகரித்தது.

2006 அறிக்கைப்படி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழான நிலத்தில், 85 சதவீதம் நெற்பயிற்செய்கைக்கு பயன்படுத்தப்படுகின்றது. 7 இலட்சம் (700000) விவசாயிகள் (இதில் அவர்கள் குடும்ப உழைப்பு அடங்க 22 இலட்சம் மக்கள்) இதைச் சார்ந்து வாழ்கின்றனர். இவர்கள் இலங்கை மக்கள் தொகையில் அண்ணளவாக பத்து சதவீதத்தினராவர். நீர்ப்பாசனம் மற்றும் குடியேற்றம் மூலமான இந்த விவசாயம், பெரும்பாலும் சிறு உற்பத்தியைச் சார்ந்தது.

இன்று விவசாயத்தில் உள்ள மொத்த நிலத்தில் 63 சதவீதம் (அதாவது 1360000 ஹெக்டேர் பரப்பு) அரசு நிலங்கள் 1930 க்கும் 2000 க்கும் இடையில் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. 2001 இல் மொத்தமாக இருந்த 22.6 இலட்சம் ஹெக்டேர் விவசாய நிலத்தில், இது 60 சதவீதமாகும். இதில் 575449 ஹெக்டேர் சட்டப்படி கொடுக்கப்பட்டது. 260283 ஹெக்டேர் ஆக்கிரமிக்கப்பட்ட பின் சட்டப்படியானது. இலங்கையில் இந்த நில விநியோகம், கிராமப்புற நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளில் இருந்து உழைப்பு சக்திகளை பாரியளவில் விடுவித்தது. சுதந்திரமான சிறு விவசாயிகளை இது உருவாக்கியது. இந்த வகையில் கிராமப்புற விரிவாக்கம், புதிய குடியேற்றங்கள் பரவலாக நடந்தேறியது.

இந்த வகையில் 1953-1985 இடையில் நில உரிமை நடந்த குறிப்பான மாற்றங்கள்

புதிய குடியேற்றம் 175941 ஹெக்டேர்
கிராமத்தில் விரிவாக்கம்

357239 ஹெக்டேர்

வீட்டு குடியேற்றங்கள்

13565 ஹெக்டேர்

இளைஞர் குடியேற்றங்கள்

7964 ஹெக்டேர்

சட்டப்படியான நில ஆக்கிரமிப்பு 205762 ஹெக்டேர்
நடுத்தர வர்க்கம் குடியேற்றம் 55019 ஹெக்டேர்
மனை மானியங்கள்  (சிறப்பு ஏற்பாடுகள்) 9980 ஹெக்டேர்
மழைபிரதேச விவசாய குடியேற்றங்கள் 5363 ஹெக்டேர்
மொத்தம் 830833 ஹெக்டேர்

நிலமற்ற கிராமப்புற மக்கள் நிலத்தைப் பெற்று சுதந்திரமான விவசாயிகளாக மாறிய போக்கு, அவர்களை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளில் இருந்து விடுவித்தது. ஆனால் நிலப்பிரபுத்துவ பண்பாட்டுக் கலாச்சாரத்தில் இருந்து விடுவிக்கவில்லை.

1931 - 1947 க்கு இடையே 3145 குடியேறிகளை அடிப்படையாகக் கொண்ட 13 புதிய குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டது. 1948 மற்றும் 1953 இடையில் 10.426 குடியேறிகளை அடிப்படையாகக் கொண்ட 16 புதிய குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டது.

1978 ஆண்டு முடிவுக்குள் விவசாயம் சார்ந்து நடந்தேறிய புதிய குடியேற்றத் திட்டங்கள்

உலர் மண்டலத்தில் திட்டங்கள் மொத்தம்
மத்திய 28 40294 ஹெக்டேர்
வடக்கு 25 10366 ஹெக்டேர்
கிழக்குமற்றும் தென் கிழக்கு 27 8733 ஹெக்டேர்
வட மேற்கு 17 5784 ஹெக்டேர்

1997 முடிய மகாவலித் திட்டத்தின் கீழ் நடந்த குடியேற்றங்கள்

குடியேற்றம் மொத்தம்
மொத்த நீர்ப்பாசனம் பெற்ற நிலம் ஹெக்டேர் 85657
குடியேற்றிய குடும்பங்கள் எண்ணிக்கை 78263
விவசாய குடும்பங்கள் எண்ணிக்கை 68443
கோடைகால (சிறு போகம்) நெற் 1991 ஹெக்டேர் 50750
மாரிகாலம் (பெரு போகம்)நெற் 1991-92 ஹெக்டேர்  67735

 இலங்கையில் நடந்தேறிய இந்த நிலப்பகிர்வு சுதந்திரமான சிறு விவசாயிகளை அடிப்படையாக கொண்ட விவசாய முறையை உருவாக்கியது.

இப்படி தொடர்சியாக நடந்ததேறிய புதிய குடியேற்றங்கள், நில விநியோக முறை 1953 வரை 5 ஏக்கர் தாழ்நிலமாகவும் 3 ஏக்கர் மேட்டு நிலமாகவும் இருந்தது. இது 1953ல் 3 ஏக்கர் தாழ்நிலமாகவும் 2 ஏக்கர் மேட்டு நிலமாக குறைக்கப்பட்டது. 1956 ல் 2 ஏக்கர் தாழ் நிலமாகவும் 1 ஏக்கர் மேட்டு நிலமாக குறைக்கப்பட்டது. இதன் பின்னான புதிய குடியேற்றங்கள் நெற்காணி 2.5 ஏக்கராகவும், மேட்டு நிலமாக (வீட்டு நிலம்) 0.5 ஏக்கராக குறைந்தது.

இப்படி சனத்தொகை அதிகரிப்புடன், விவசாய உற்பத்தி முறையில் ஏற்பட்ட வளர்ச்சியுடன், தனிநபருக்கென வழங்கிய நிலப்பரப்பு படிப்படியாக குறைந்து வந்தது. இதன் மூலம் நிலக் குவிவும், அது சார்ந்த உற்பத்தி உறவுகளும் மேலும் மாற்றத்துக்குள்ளாகி சிறுத்தது. சுதந்திரமான விவசாயிகளிள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுக்குரிய, கிராமப்புற உற்பத்தி சக்திகளை அங்கிருந்து விடுவித்தது. இப்படி விடுவித்த பின்னணியில் இது மட்டுமல்ல. வேறு பல காரணங்களும் அக்கம்பக்கமாக நடந்தேறியது. அப்படியானால் கிராமப்புற நிலவுடமைக்கு என்ன நடந்தது என்பதை ஆராய்வோம்.

1.2. நிலப்பிரபுத்துவ சொத்துடமை தகர்த்த நிலச் சீர்திருத்த சட்டம்

1958 இல் 160,000 ஹெக்டேர்கள் நெற்காணி குத்தகை முறையில் விவசாயம் செய்யப்பட்டது. 1958 ஆம் அவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதை தடுக்கும் சட்டம் இயற்றப்பட்டது. 50 சதவீத வாடகைக்கு பதில், வாடகை உச்சவரம்பு 25 சதவீதமாக கொண்ட ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அதேநேரம் சிறுவிவசாயிகள் கொண்ட அரிசி சாகுபடி குழுக்கள் உருவாக்கப்பட்டது. இடதுசாரிய பின்னணியில் அதிகாரத்துக்கு வந்த அரசால், பல தேசியவாத நடவடிக்கையுடன் இதுவும் முன்னெடுக்கப்பட்டது.

இருந்தும் நில வாடகையில் இருந்து வெளியேற்றுவதும், வாடகை உச்சவரம்பு சட்டமும் முழுமையாக வெற்றி பெற்ற முடியவில்லை.

இதன் பின் மீண்டும் 1970 இல் அதிகாரத்துக்கு வந்த போலி இடதுசாரிகளால், 1972ம் ஆண்டும், 1975 ம் ஆண்டும் நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. 1972 சட்டம் தனிநபர் நிலம் மீதும், 1975ம் சட்டம் பிரிட்டிஸ் கூட்டுப் பங்கு மூலம் நிர்வாகிப்பெற்ற பெருந்தோட்டங்களையும் உள்ளடங்க நில உச்சவரம்பு மூலம் நிலம் தேசியமயமாக்கப்பட்டது. 1972-1975 இடையில் 4.2 இலட்சம் ஹெக்டேர் (981368 எக்கர்) நிலத்தை தேசியமயமாக்கியது. இதை உள்ளீடாக விரிவாக ஆராய்வோம்;.

1972 நிலச் சீர்திருத்தம் சட்டம் நெற்காணி 10 ஹெக்டேராகவும் (25 ஏக்கர்), மலை மேட்டு நிலத்தை 20 ஹெக்டேராக (50 ஏக்கர்) வரையறுத்தது. இதனால் 1975 தேசியமயமான நிலம் 419100 ஹெக்டேராகும். 1972 – 1975 க்கு இடையில் தேயிலை தோட்டங்கள் 39.7 சதவீதமும், றப்பர் தோட்டங்கள் 17.8 சதவீதமும், தென்னை தோட்டங்கள் 11.5 சதவீதமும், மற்றைய காணிகள் 31 சதவீதமும் தேசியமயமானது.

2001 இல் உலகவங்கி விவசாய நிலமாக இனம் கண்டுள்ள 22.6 இலட்சம் ஹெக்டேர் நிலத்தை அடிப்படையாக எடுத்தால், அண்ணளவாக 1975 இல் 20 சதவீதமான நிலம் தேசியமயமாக்கப்பட்டது. மொத்த 2001 விவசாய நில அளவின் படி ஐந்தில் ஒரு பகுதி நிலம் 1972-1975 சட்டம் தேசியமயமானது.

இந்த வகையில் 1972 சட்டம் 563411 ஏக்கர் நிலத்தை தேசியமயமாக்கியது.

பிரிவு ஏக்கர் சதவீதம்
காடுகள், மரங்கள், தரசுநிலம் 176347 31.3
தேயிலை தோட்டம் 139726 24.8
தென்னை தோட்டம் 112682 20.0
றப்பர் தோட்டம் 82821 14.7
நெற்காணி 18592 3.3
கலவை 16902 3.0
மற்றவை 12958 2.3
மற்றும் 3383 0.6
மொத்தம் 563411 100

இப்படி தேசியமயமாக்கபட்ட இந்த தரவில் மீள திருப்பிக் கொடுக்கப்பட்ட 12896 ஏக்கர் (2.3 சதசவீதம்) உள்ளடக்கப்படவில்லை. 1975 சட்டத்தின் கீழ் 417957 ஏக்கர் நிலம் தேசியமயமானது. இப்படி மொத்தமாக 981368 ஏக்கர் நிலம் 1972-1975 சட்டம் மூலம் தேசியமயமாக்கப்பட்டது. 1975இல் 395 பெருந்தோட்டங்கள் அதாவது 169.000 ஹெக்டேர் இந்த சட்டத்தின் கீழ் தேசியமயமானது.

1972 நிலச்சட்டமும், 1975 சட்டமும் தனிநபருக்கான நிலத்தின் உச்ச வரம்பை தீர்மானித்தது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டும் உச்சவரம்பைக் கொண்டு, சொத்துரிமை மட்டுப்படுத்தியது. இது பெருந் (தேயிலை, றப்பர், கோப்பி, தென்னை தோட்டங்களையும்) தோட்டக்களையும் நில உச்ச வரம்பு மூலம் தேசியமாயமாக்கியது. பின் 1975 இல் அன்னிய நாட்டு பெரும் தோட்டங்களை தேசியமயமாக்கியது. இப்படி இந்தச் சட்டம் நிலப்புரத்துவம் நிலத்தின் மீதான உரிமையை கட்டுப்படுத்தியது. பெருமளவான நிலம் தேசியமயமானது.

இப்படி 2001 விவசாய நில அளவுப்படி 20 சதவீதமான நிலம் 1972-1975 களில் தேசியமயமானது. நிலத்தை பாதுகாக்க குடும்பத்துக்குள் பங்கிடுவதை மட்டுப்படுத்திய இச்சட்டம், இதை மீறி தக்கவைத்த நிலம் காலப்போக்கில் குடும்பத்துக்குள் பிரிந்து நிலக்குவியலான நிலப்பிரத்துவ அடிப்படையும் தகர்ந்து போனது. கல்வி மற்றும் சுதந்திரமான குட்டிபூர்சுவா ஜனநாயக மனப்பபாங்கு நிலப்பிரபுத்துவ குடும்ப குவியலான திருமணங்களை தடுத்தது. இது நிலப்பிரபுத்துவ சார்ந்த நிலக்குவிவை தடுத்தது. அரை நிலப்பிரத்துவ சார்ந்த இருந்த சமூகத்தை விடுவிக்க கணிசமாக உதவியது.

இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த வலது மற்றும் இடதுசாரிய அரசியல் முறைமையும் அதற்குள்ளான முரண்பாடும், குறிப்பாக இந்த மாற்றங்களை துரிதப்படுத்தியது. நில விநியோகம் முதல் தேசியமயமாக்கல் வரை நிலவுடமை மீதான தகர்வைக் கொண்டுவந்தது. உற்பத்தி சக்திகளை விடுவித்து சுதந்திரமான விவசாயிகளை உருவாக்கியது. மறுதளத்தில் இனவாதம் இதை மேலும் துரிதப்படுத்தியது.

1.3.நிலப்பிரபுத்துவ சொத்துடமையை தகர்த்த இனக் குடியேற்றங்கள்

ஒருபுறம் இது இனங்களுக்கு இடையிலான முரண்பாடாக மாறிச் சென்றது. மறுதளத்தில் இது அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தியில் இருந்து உழைப்பு சக்திகளை விடுவித்தது. சுதந்திரமான விவசாயிகளாக மாற்றிய இந்த இனவாத குடியேற்றம் பாரம்பரிய விவசாய குடும்பத்தின் இருந்து இளைய தலைமுறையை துரிதமாக விடுவித்தது. அரை நிலப்;பிரத்துவ சார்ந்த சமூகத்தில் இருந்து, சுதந்திரமாக தன்னை விடுவிக்க இது கணிசமாக உதவியது.

திட்டமிட்ட இனவாத குடியேற்றம் பிரதேசரீதியாக ஏற்படுத்திய விகிதசார மாற்றங்கள்

இனம் அம்பறை  திருகோணமலை 
   1921 1981 1921 1981
சிங்களவர் 8.2 37.6 4.5 33.6
தமிழர் 30.5 20.1 53.2 33.8
முஸ்லீம் 56.5 42.3 42.3 32.6

 கிழக்கில் 1921 இல் 8744 (4.5 சதவீதம்) சிங்கள மக்கள் வாழ்ந்தனர். திட்டமிட்ட இனவாத குடியேற்றங்கள் அடுத்து 1981 இல் 243358 (24.9 சதவீதமாக) அதிகரித்தனர். இந்த வகையில் திட்டமிட்ட இனவாத குடியேற்றம், சிங்கள பிரதேசத்தில் நிலவிய அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளில் இருந்து உழைப்பு சக்திகளை விடுவிப்பதில் கணிசமாக பங்காற்றியது. இந்த பின்னணியில் சுதந்திரமான சிறுவிவசாயிகளை கொண்ட புதிய குடியேற்றங்களை உருவாக்கியது.

1.4 நிலப்பிரபுத்துவ சொத்துடமை தகர்த்த சாதியப் போராட்டம்

அரை நிலப்பிரபுத்துவ இலங்கை சமூக அமைப்பில் சாதியம் தனக்கேயுரிய சிறப்பு இயல்புடன் தன்னை ஒருங்கிணைத்து வெளிப்பட்டது. இந்த சாதியக் கட்டுமானம் இலங்கையில் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தான் இறுக்கமான சமூக பண்பாட்டு பிடியை கொண்டு இருந்தது. தனக்கு மட்டும் சொந்தமான சொத்துரிமை சார்ந்து, பழமையான சாதிய அடிப்படையை தக்க வைத்துக்கொண்டது. இது அரை நிலப்பிரபுத்துவ பாரிய நிலச் சொத்துடமை சார்ந்தோ, உற்பத்தி உறவு சார்ந்ததோ அல்ல. மாறாக சொத்துடமை கொண்டிராத கிராமப்புற சாதிய சார்ந்த அரை நிலப்பிரபுத்துவ உறவுகள் தொடர்ந்தது. இந்த வகையில் பரம்பரை ரீதியான சாதி தொழில் முறை சார்ந்து, இது தன்னை நிறுவனப்படுத்தி இருந்தது. வடக்கு அல்லாத இலங்கையின் பிற பிரதேசங்களில் திருமணம் போன்ற பண்பாட்டுத் தளத்தில்தான், சாதியம் தன்னை பொதுவில் தக்கவைத்துக் கொண்டது.

இந்த பின்னணியில் 1960 களில் தொடங்கி 1970 முடிய வடக்கில் நடந்த சாதியப் போராட்டம், சாதியப் பண்பாட்டு கூறுகள் மீது எதிர்வினையாற்றியது. நிலப்பிரபுத்துவம் சார்ந்த வெளிப்பட்ட சாதிய நிலப்பிரத்துவ அடிமைத்தனத்தை நிராகரித்த, ஒரு புதிய தலைமுறை ஒடுக்கப்பட்ட தலைமுறையில் இருந்து தோன்றின. இதன் பின்னால் கணிசமாக கல்வி கற்கவும், சுதந்திரமான தொழிலைச் செய்யவும், சுதந்தரமாக விவசாயம் செய்யவும் தொடங்கினர். 1970 களில் திரிபுவாத இடதுசாரிகள் கலந்த ஆட்சியில், சுய உற்பத்;தி மற்றும் பனை சார் உற்பத்தி பொருட்களை பதப்படு;தல், சந்தைப்படுத்தல், உற்பத்திக்கான பனையை உன் அனைத்தையும் சட்டப்படி பதிவு செய்தல் மூலம் உழைப்பில் ஈடுபடுதல், சந்தைப் படுத்தல், விலை நிர்ணயம் என அனைத்தும் கூட்டுறவு முறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. பழைய அரை நிலப்பிரத்துவ முறையிலான உற்பத்தி கருவி, உழைப்பும், நுகர்தலும் சிதையத் தொடங்கியது. இதற்கு முன் நடத்த சாதிய போராட்டம் இதற்குரிய அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தது. பழைய அரை நிலப்புரத்துவ உற்பத்தி உறவுமுறைக்கு வெளியில் இது உருவானபோது, பாரம்பரிய வடிவங்களுக்கு மாறாக சுதந்திரமாக உழைப்பை விற்கும் முறைமை உருவானது. இப்படி சாதி நிலப்பிரபுத்துவத்தில் இருந்து தன் உழைப்பை விடுவித்துக் கொண்டது. நிலப்பிரபுத்துவ கிராமிய சாதிய பிடிமானம் தகர்ந்து வந்தது.

இதை அடுத்து இப் பிரதேசத்தில் நடந்தேறிய கூர்மையான இனவாத யுத்தமும், அதன் விளைவும், முழு அரைநிலப்பிரத்துவ கிராமிய சமூக கட்டமைப்பை தகர்த்தது. குறிப்பாக நிலம் மற்றும் வாழ்விடம் மீதான பாரம்பரிய சாதி உரிமை தகர்ந்து போனது. அரை நிலப்பிரத்துவ சாதிய வாழ்விடங்களுக்கு பதில், கலப்பு வாழ்விடங்கள் முதல் கலப்பு திருமணங்கள், அரைநிலப்பிரபுத்துவ பண்பாட்டு சாதிய அடித்தளத்தை படிப்படியாக சிதைத்து வருகின்றது.

யுத்தத்தின் பின் வடக்கில் கூலி உழைப்பிற்கு ஏற்பட்ட தட்டுப்பாடு, கூலியையும் உழைப்புக்கான நேரத்தையும் மற்றும் உழைப்புக்கான அடிப்படை வசதிகளையும் கூலிகளே தீர்மானிக்கும் நிலையில் உழைப்பு அரை நிலப்பிரபுத்துவ உறவில் இருந்து தன்னை விடுவித்து இருக்கின்றது. இலங்கையில் எந்தப் பகுதியில் இல்லாத அளவுக்கு, கூலி மிக அதிகம் கொண்ட பிரதேசமாக, சாதி பிடி கொண்ட யாழ் பிரதேசம் மாறியுள்ளது. சுதந்திரமான கூலிகளை உருவாகி இருக்கின்றது.

1.5. நிலப்பிரபுத்துவ சொத்துடமை தகர்த்த 1970 க்கு பிந்தைய மூன்று யுத்தங்கள்

இலங்கையில் 1970 பின் மூன்று யுத்தங்கள் நடந்தேறின.

1.அண்ணளவாக 5 இலட்சம் பேரை யுத்தம் பலி கொண்டது. இது இலங்கை அரை நிலப்;பிரத்துவ கட்டமைப்பை தக்கவைக்கும் உபரி உழைப்பை தகர்த்தது. அரை நிலப்;பிரத்துவ உற்பத்தி உறவுக்குரிய சக்திகளை, யுத்தம் பலியெடுத்தது. இந்த யுத்தம் உழைப்பில் இருந்து உற்பத்தி சக்திகளை அகற்றி அவற்றை கிராமத்தில் இல்லாதாக்கியது.

2.இதே போல் கிராமப்புரங்களில் இருந்து அகற்றப்பட்ட 10 இலட்சம் பேர் யுத்தமுனையில் ஆயுதபாணியாக்கப்பட்டனர். இப்படி கிராமப்புற அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுக்குரிய சக்திகளை, கிராமத்தில் இருந்து யுத்தம் அகற்றி இருக்கின்றது.

3. யுத்த சார்ந்த இடம்பெயர்வு உற்பத்தி உறவுகளை இடம் பெயரவைத்தது. வடகிழக்கில் இருந்து மேற்கு நோக்கி 10 இலட்சம் பேரை வெளியேற்றி இருக்கின்றது. இதே போல் உள்நாட்டிலும் இந்தியாவுக்கு இதே அளவு தொகையை இடம்மாறியது.

யுத்தத்தின் பின்னணியில் இந்த மூன்று காரணங்களும் அண்ணளவாக 35 இலட்சம் மக்களை (பெருமளவில் இளைஞர்களை) கிராமத்தில் இருந்து விடுவித்தது. அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுமுறைகளில் இருந்து உழைப்பு சக்தியை விடுவித்துள்ளது.

1.6. நிலப்பிரபுத்துவ சொத்துடமை தகர்த்த தொழில் சார்ந்த இடம்பெயர்வு

மத்திய கிழக்கு மற்றும் தென்னாசிய நோக்கி தொழில்சார் இடம் பெயர்வு அண்ணளவாக 20 இலட்சமாகும். பெருமளவில் பெண்கள் அடிப்படையாக கொண்ட இவ் இடம்பெயர்வு கிராமப்புறங்களின் இருந்து அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றி இருக்கின்றது.

நாட்டை விட்டு வெளியேற்றம் தீவிரமாகி வருகின்றது. நாள் ஒன்றுக்கான வெளியேற்றம், மொத்த வெளிநாட்டில் உள்ளோர், இலங்கை மொத்த தொழிலாளரில் இதன் வீதம், மொத்த வேலையில் இதன் வீதம், இதன் மூலம் மத்தியகிழக்கில் மற்றும் மற்றைய நாடுகளில் இருந்து வருமானத்தை கீழ் உள்ள தரவு 2002 - 2010 வரை எடுத்துக் காட்டுகின்றது. இதில் மேற்கு புலம்பெயர்வு உள்ளடக்கவில்லை.

  2002 2003 2004 2005 2006 2007 2008 2009 2010
வெளியேற்றம் நாளுக்கு 558 575 588 634 553 599 686 677 730
வெளிநாட்டு வேலை லட்சம் 9.7 10.03 10.68 12.21 14.47 16.42 17.92 18.31 19.32
தொழிலாளர் வீதத்தில் 13.6 13.1 13.3 15.0 19.1 21.9 22.2 22.7 23.8
மொத்த வேலையில் 14.9 14.3 14.5 17.2 20.4 23.3 23.4 24.1 25.1
மத்தியகிழக்கில் கோடியில் 7557 7757 8787 11117 12828 16050 18903 22929 27968
மற்றையநாடுகள் கோடியில் 4760 5885 7041 8407 9638  11622  12707  15350  18568

இதை விட சுதந்திர வர்த்தக வலயம் சார்ந்த தொழில் சார்ந்த சில இலட்சம் உள்நாட்டு இடபெயர்வு கிராமப்புற அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி சக்திகளை விடுவித்துள்ளது.

1.7. நிலப்பிரபுத்துவ சொத்துடமையை தகர்த்த இடதுசாரியமும், தேசியமயமாக்கலும்

காலனித்துவத்துக்கு மாற்றாக அரைக் காலனியத்தை ஏற்படுத்தி அரசியல் பின்னணியில், தேர்தல் மூலமான இடதுசாரிகளின் அரசியல் வகித்த பங்கும், அதிகாரத்துக்கான அவர்களின் கனவும், கூட்ட அரசுகளையும் பல சீர்திருத்தங்களை ஏற்படுத்தின. வலது இடது என மாறிமாறி ஆட்சியேறிய அரசியல் சூழலில் சீர்திருத்தங்கள் அரைக்காலனிய அரை நிலப்பிரத்துவ உறவை சிதைக்கு அரசியல் அடிப்படையை விசேடமாக வழங்கியது.

ஒருபுறம் பெரும்பான்மை இனத்தை திருப்தி செய்யும் இனவாதத்தையும், மறுதளத்தில் போலியான தேசியவாத சீர்திருத்தங்களையும் ஏற்படுத்தினர். அன்னிய சொத்துக்களை தேசியமயமாக்கியது முதல் தாய் மொழியில் கல்வியை கொண்டுவந்ததன் மூலம், கல்வி அறிவு பெற்ற சமூகமாக இலங்கைச் சமூகம் மாறியது. இது அரை நிலப்பிரபுத்துவத்தில் இருந்து விடுவிக்கும், சுதந்திரமான சிந்தனைகளுடன் தன்னை வெளிப்படுத்தத் தொடங்கியது.

இதற்கு ஏற்றாற் போல் புதிய நீர்ப்பாசனத் திட்டங்கள், புதிய குடியேற்றங்கள், நில உச்ச வரப்பு ஊடான நிலச் சுவீகரிப்பு, அரை நிலப்பிரத்துவ உற்பத்தி உறவுகளில் இருந்த புதிய தலைமுறையை விடுவித்தது.

இப்படி குறிப்பாக ஏழு பிரதான காரணங்கள், அரை நிலப்பிரத்துவ கிராமப்புற உழைப்பு சக்திகளை விடுவித்;து சுதந்திரமான உழைப்பாளியாக்கியது. அரை நிலப்பிரபுத்துவ உபரி உழைப்பை சுரண்டும் முறைமையையும் தகர்ந்து இருக்கின்றது. கூலி உழைப்பை சுதந்திரமாக விற்கும் முறைமையையும், பெருமளவில் சுதந்திரமான நடுத்தர வர்க்க மற்றும் ஏழை விவசாயிகளை அடிப்படையாக கொண்ட விவசாயம் காணப்படுகின்றது. இதைவிட பெருந் தோட்டம் முதலாளித்துவ முறையிலான விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்கின்றது.

இலங்கை விவசாயிகளின் சொத்துடமை

2001 உலக வங்கியின் அறிக்கைப்படி மொத்த நிலப்பரப்பில் 30 சதவீதம் (2.26 மில்லியன் ஹெக்டேர்) விவசாய நிலங்களாகும். 1946 இல் புள்ளி விபரப்பபடி 26 சதவீதமான விவசாயிகளுக்கு நிலம் கிடையாது. 42 சதவீதமான விவசாயிகள் ஒரு ஏக்கர் அல்லது அதை விட குறைவான நிலத்தைக் கொண்டு இருந்தனர். 1982 இல் 43 சதவீதமான விவசாயிகள் ஒரு ஏக்கர் அல்லது அதை விட குறைவாக கொண்டு இருந்த அதே நேரம் இது மொத்த இலங்கை நிலப்பரப்பில் 8 சதவீதமாகும். அதேநேரம் 82 சதவீதமானவர்கள் 2.5 ஏக்கருக்கு குறைவான நிலத்தைக் கொண்டு இருந்தனர். இதை இன்னும் நுட்பமாக பார்த்தால் 1982 இல் 63.6 விவசாயிகள் குறைந்தது 2 ஏக்கரை கொண்டு இருந்தனர்.

ஒரு விவசாயிக்கு சராசரியாக இருந்த விவசாய நிலம் 1946 இல் 3.32 ஏக்கராக இருந்தது. இது 1973 இல் 2.16 ஏக்கராகியது. 1962 இல் 2,78 ஏக்கர் என்ற சராசரி அளவு, 1982 இல் 1.93 ஏக்கராகியது. அதேநேரம் 82 சதவீதமான விவசாயிகள் 2.5 ஏக்கருக்கு குறைவான நிலத்தையும், 63.6 சதவீதமான விவாயிகள் 2 ஏக்கருக்கு குறைவான நிலத்தையும் கொண்டு இருந்தனர். விவசாய நிலப் பகிர்வின் சராசாரி மட்டம் பொருந்தி இருப்பது, சுதந்திரமான விவசாயத்தின் போக்கை எடுத்துக் காட்டுகின்றது.

71.2 சதவீதமான விவசாயிகள் தங்கள் நுகர்வுக்காக 56 சதவீதமான சிறு விவசாய உற்பத்தியில் சார்ந்து இருந்தனர். 76.8 சதவீதமான விவசாயிகள் 63 சதவீதமான விவசாய நிலத்தில் குடும்ப உழைப்பில் தங்கி இருந்தனர்.

விவசாய கூலி உழைப்பில் உள்ள 58.9 சதவீதமான விவசாய தொழிலாளர்களுக்கும் நிலம் கிடையாது, ஆனால் வீட்டு தோட்டம் உள்ளது. 51.8 சதவீதமான விவசாயிகள் விவசாயமல்லாத வேறு தொழிலை செய்தனர். விவசாயிகள் முதல் விவசாய கூலிகள் வரை, விவசாயத்துக்குள் மட்டும் கட்டுப்பட்டு இருக்கவில்லை. கிராமப்புறங்கள் 65 சதவீதமானவர்கள், விவசாயமல்லாத துறைசார்ந்த வாழ்வதன் மற்றொரு வெளிப்பாடு இது.

இங்கு 1946 க்கும் 1982 க்கும் இடையில் நிலமற்ற விவசாயிகளின் எண்ணிக்கை சதவீதத்தில் மாற்றமின்றி தொடாந்து நீடிப்பதற்கு காரணம் பெருந்தோட்ட தொழிலாளர்களாகும். பெருமளவிலான கூலி உழைப்பைக் கொண்ட விவசாயம் இங்குதான் காணப்படுகின்றது. அதே நேரம் இங்கும் மாற்றம் நிகழ்கின்றது. 1980-2003 இடையில் பெருந்தோட்டங்களில் இருந்து கிட்டத்தட்ட 274000 விவசாயத் தொழிலாளர்கள் இத்துறையில் இருந்து வெளியேற்றியுள்ளது. 2003 - 2010 க்கு இடையில் 45 ஆயிரம் பேரை வெளியேற்றி இருக்கின்றது.

பெருந்தோட்ட துறை - மனித ஆற்றல் 2001 – 2009

  2001 2002 2003 2004 2005 2006 2007 2008 2009
தொழிலாளி லட்சம் 2.73 2.66 2.53 2.48 2.51 2.44 2.30 2.28 2.11
உத்தியோகத்தர் ஆயிரம் 14.85 14.42 14.16 13.99 14.04 13.64 13.04 13.61 12.85
தொழிலாளி வீதத்தில் 95 95 95 95 95 95 95 94 94

பெருந்தோட்டத்தில் 2.1 இலட்சம் கொண்ட முதலாளித்துவ அடிப்படையிலான நிலமற்ற விவசாயக் கூலிகள் உள்ளனர்.

இதற்கு வெளியில் சுதந்திரமான சிறு விவசாய உற்பத்தியே இலங்கையில் பரவலாகப் காணப்பபடுகின்றது. இந்த தரவுகள் படி நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ உற்பத்தி முறையல்லாத, சிறு விவசாய உற்பத்திமுறை பரவலாகக் காணப்படுகின்றது. இங்கு ஏழை மற்றும் நடுத்தரவர்க்க விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வர்க்கமே விவசாயத்தில் மிகையாக காணப்படுகின்றது.

இங்கையில் நடந்த மூன்று ஆயுதப்போராட்டமும் குட்டிபூர்சுவா கண்ணோட்டத்தில் எழுச்சி பெற்ற காரணத்தை இந்த சமூகப் பொருளாதார அடிப்படையில் தான் இனம் காணவேண்டும்.

உலகமயமாதலும் நிலவுரிமையும்

இலங்கை சிறுவுடமை சார்ந்த சுதந்திரமான விவசாயமும், பெருந்; தோட்டத்தை அடிப்படையாக கொண்ட முதலாளித்துவ விவசாய முறையை பொதுவாக காணப்படுகின்றது.

1978 க்கு பின் இலங்கையில் நவகாலனித்துவ உலகமயமாதல் போக்கு தீவிரமடைந்தன. நவகாலனிய சமூக பொருளாதார கட்டமைப்பு வேகம் பெற்றது. அரச பெருந்தோட்டங்கள் அன்னிய கம்பனிகளுக்கு தாரை வார்க்கப்படத் தொடங்கியது. இதைவிட பல ஆயிரம் ஹெக்டேர் நிலம் அன்னிய கம்பனிகள் விவசாயம் செய்ய வழங்கப்படுகின்றது. உதாரணமாக டோல் என்ற அமெரிக்க கம்பனி 62500 ஹெக்டேர் நிலத்தை (நாட்டின் மொத்த விவசாய நிலம் 2260000 ஹெக்டேர்) நாட்டின் பல பாகத்தில் கொண்டுள்ளது.

அன்னிய மூலதனம் சார்ந்து நவகாலனிய முதலாளித்துவ விவசாயப் பண்ணைகள் உருவாக்கப்படுகின்றது. இந்த நவகாலனிய முதலாளித்துவ பண்ணைகள் சுதந்திர வர்த்தக வலயங்கள் போல், பொதுவான சட்டங்களில் இருந்து விலக்குப் பெற்ற கடுமையான சுரண்டல் வடிவங்கள் காணப்படுகின்றது.

இலங்கையில் நிலப் பயன்பாடு பற்றிய மேலதிக தரவுகள்

இலங்கை 63.6 சதவீதம் நிலப்பகுதி வரண்ட பிரதேசத்திலும், 23.2 சதவீதம் நிலப்பகுதி ஈரப்பிரதேசத்திலும், 13.2 சதவீதம் நிலப்பகுதி இரண்டும் உட்பட பிரதேசத்திலும் காணப்படுகின்றது.

1982 இல் இலங்கை மொத்த நிலத்தில் 30 சதவீதம் காடுகள். 40 சதவீதம் விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த விவசாய நிலத்தில் 40 சதவீதம் தோட்ட பயிர் செய்கைக்கும்;, நெற்பயிற் செய்கைக்கு 28 சதவீதமும் பயன்படுத்தப்பட்டது.

2002 இலங்கை நில பயன்பாட்டை எடுத்தால், 15 இலட்சம் (24 சதவீதம்) விவசாயத்துக்கும், 12 இலட்சம் (19 சதவீதம்) அரிதாக விவசாயத்துக்கும் பயன்படுகின்றது. இந்த விவசாய நிலத்தில் நெற்செய்கை 852529 ஹெக்டேரிலும், தேயிலை 188971 ஹெக்டேரிலும், றப்பர் 157403 ஹெக்டேரிலும், தென்னை 443952 ஹெக்டேரிலும் பயிரப்படுகின்றது.

பெரும் தோட்டங்கள் நவகாலனிய முதலாளித்துவ உற்பத்தி முறைமையும், நெற் செய்கையில் சிறுவுடமை சார்ந்த சுதந்திர விவாசயமும் பொதுவாக காணப்படுகின்றது.

தேயிலை தோட்டங்களை எடுத்தால், குறிப்பாக அரசுடமை சார்ந்த தேயிலை தோட்டங்கள் சிறுவுடமையாதல் அதிகரித்தது. 1994 தரவுப்படி தேயிலை உற்பத்தியில் 188967 ஹெக்டேர் நிலம் காணப்பட்டது. இதில் 82920 ஹெக்டேர் (43.88 சதவீதம்) சிறு உடைமையிலான தேயிலைத் தோட்டங்கள். 106047 ஹெக்டேர் (56.12 சதவீதம்) பெரு உடமை சார்ந்து காணப்பட்டது. இது 1982 இல் தரவுப்படி தேயிலை உற்பத்தியில் 207147 ஹெக்டேர் காணப்பட்டது. இதில் 67504 ஹெக்டேர் (32.59 சதவீதம்) சிறு உடைமையிலான தேயிலை தோட்டங்களாகும்;. 139643 (67.41 சதவீதம்) ஹெக்டேர் பெரு உடமை சார்ந்து காணப்பட்டது. இந்த வகையில் சிறுவுடமை நில அதிகரிப்பு 1982 க்கும் 1994 க்கும் இடையில் 22.84 சதவீதமாக, பெரும் நிலவுடமை (அரசு நிலம்) 24.06 சதவீதமாகவும் குறைந்தது.

இப்படி நிலம் தனியார் மயமாதல், அன்னிய கம்பனிகள் பெறுவது அரசின் பொதுக் கொள்கையாகி உள்ளது. இங்கு உற்பத்தி உறவுகள் நவகாலனிய முதலாளித்துவ அடிப்படையைக் கொண்டு பொதுவாக காணப்படுகின்றது.

இலங்கையில் சனத்தொகை விகிதத்திற்கு நிலம்

ஆண்டு மொத்த நிலம் ஹெக்டேர் மக்கள் தொகை ஒருவருக்கு சராசரியாக ஹெக்டேர்
1871 6550000  2400000 2.7
1901 6550000 3500000 1.8
1953 6550000 8100000 0.8
1986 6550000 16500000 0.4
2000 6550000 200000000 .03

சனத்தொகை அதிகரிப்புடன் நிலத்தின் அளவு குறைந்து வருகின்றது. மொத்த நிலத்தில் விவசாயப் பயன்பாடு நிலம் மூன்றில் ஒன்றாகும்;. இதன்படி சராசரி விவசாய நிலம் 0.1 ஹெக்டேராகும் (0.24 ஏக்கராகும்). 2010 இல் விவசாயத்தில் ஈடுபட்ட 25,19 இலட்சம் பேருக்கு கிடைக்க கூடிய சராசரி விவசாய நிலம் 0.8 ஹெக்டேராகும் (2 ஏக்கராகும்).

1996 இல் இலங்கையில் நிலப் பயன்பாடு

பயன்பாடு பரப்பு ஹெக்டேர் சதவீதத்தில்
வீதி, வெள்ள வடிகால், ஒதுக்கப்பட்ட நிலம் 585300 8.9
நீர்பிடிப்பு நிலம் மற்றும் காடுகள் 2000000 30.5
செங்குத்தான நிலம் 380000 5.8
1500 மீற்றருக்கு மேலான நிலம் 76400 1.2
வீடுகள் 77000 1.2
நடைபாதைகள் மற்றும் சதுப்புநிலங்கள் 70000 1.1
தற்போது பயன்பாட்டு நிலம் 2635000 40.2
அரிதாக பயன்படுத்தப்படும் நிலம் (புரட்டுதல், விவசாயம்) 728000 11.1
மொத்தம் 6552500 100

மொத்த நிலம் இந்த வகையில் பயன்பாட்டு ரீதியாக வகைப்படுத்தப்பட்டு காணப்படுகின்றது.

 

1996 இல் பயன்பாட்டு நிலத்தை எடுத்தால்

பயன்பாடு பரப்பு ஹெக்டேர் சதவீதத்தில்
பெரும் தோட்டம் (தேயிலை, றப்பர் கோப்பி) 798103 39.7
மற்றைய நிரந்தர பயிர்கள் 176500 8.8
நெல் 556982 27.7
மற்றைய பயிர்கள் 195048 9.7
மர உற்பத்தியும் அது சார்ந்த காடுகள் 54129 2.7
மேய்ப்பு நிலம் 20097 1.0
விவசாயம் செய்யக் கூடிய கூடிய பயிர் செய்யாத நிலம் 91646 4.6
வீதிகள் மற்றும் கட்டிடம் 73416 3.7
கல்லுத்தரை மற்றும் வீணாக்கிய நிலம் 40805 2.1
மொத்தம் 2006726 100

 மொத்த பயன்பாட்டு நிலத்தில் பெருந்தோட்டம் 39.77 சதவீதத்தையும், நெற் பயிர்ச்செய்கை 27.75 சதவீதத்தையும் கொண்டு காணப்படுகின்றது. இதில் பெரும் தோட்டம் மற்றும் நிரந்தர பயிர்களைக் கொண்ட நிலம் அண்ணளவாக 50 சதவீதத்தை கொண்டதாக உள்ளது.

1946-1982 விவசாய நில பயன்பாட்டு மாற்றங்கள் - முக்கிய பயிர்கள் ஹெக்டேரில்

வகை 1946 1962 1982 1962-1982 (சதவீதத்தில்)
நெல் 370000 460000 499000 8.73அதிகரிப்பு
தேயிலை 215000 231000 207000 10.04 குறைவு
றப்பர் 232000 229000 171000 25.47 குறைவு
தென்னை 433000 466000 416000 10.75 குறைவு

பெருந்தோட்ட செய்கைக்கான நிலம் படிப்படியாக குறைந்து நெற்செய்கை அதிகரித்து வந்திருக்கின்றது. 1946 – 1982 க்கும் இடையில் தேயிலை றப்பர் தென்னை உற்பத்திகான நிலம் முறையே 10, 25, 9 சதவீதத்தால் குறைந்தது. நெல் உற்பத்திகான நிலம் 9 சதவீதத்தால் அதிகரித்தது.

1956 இல் காடு சார்ந்த நிலம் 44.6 சதவீதமாக இருந்தது. இது 2000 இல் 22.4 சதவீதமாக குறைந்துள்ளது. காடழித்தல் வீதம் ஆண்டுக்கு 15,000 ஹெக்டேராக மதிப்பிடப்பட்டுள்ளது. பெரிய அளவிலான நீர்பாசனத் திட்டங்களை செயல்படுத்திய 1980 களில் இது மிக அதிகமாக காணப்பட்டது.

அதேநேரம் பெருந்தோட்டங்கள் மீள் காடு வளர்ப்புக்கு உள்ளாகியது. பெரும் தோட்ட பிரதேசத்தை சேர்ந்த 23 பிரதேசத்தில் 20 தில், 7673 ஹெக்டேர் நிலம் காடு வளர்ப்புக்காக மாற்றப்பட்டது. 1948 இலிருந்து 2002 வரை விவசாய நிலத்தின் அதிகரிப்பு 3 இலட்சம் ஹெக்டேராகும். அதாவது 17 இலட்சத்தில் இருந்து 20 இலட்சமாக அதிகரித்துள்ளது.

1983 முதல் 1994 இடையில் நில பயன்பாட்டு மாற்றங்கள் (ஹெக்டேர்) மற்றும் சதவிகிதம்

  ஹெக்டேர் சதவிகிதம்
 அடர்ந்த காடுகள் 175.238 10 குறைந்தது
தேயிலை, தோட்டங்கள் 33.596 24 குறைந்தது
நெல், ஈரமான மண்டலம் 13.421 8 குறைந்தது
ரப்பர் 9.649 6 குறைந்தது
நகரமயமாக்கம் 462.295 512 அதிகரித்தது
வீடு 100.202 8 அதிகரித்தது
நெல், வறட்சி மண்டலம் 43.036 8 அதிகரித்தது
தென்னை, சிதறிய மரங்கள் 22.192 93 அதிகரித்தது
சிதறிய மரங்கள் தவிர்த்து தென்னை 5.599 1 அதிகரித்தது

பயன்பாட்டில் குறைந்த பரப்பளவு 231.904 ஹெக்டேராக, அதிகரித்து நிலத்தின் பரப்பளவு 633.324 ஹெக்டேராகும். பொதுவாக 1983 -1994 இடையில் நில பயன்பாட்டின் அதிகரிப்பு 401420 ஹெக்டேராகும்.

 

விவசாயம் செய்யப்பட்ட விஸ்தீரணம் 2007-2010 இடையில் ஹெக்டேரில்

  2007 2008 2009  2010
நெல் மொத்தம் 816713 1052993 977144 1065281
பெரும்போகம் 525338 581597 632128 646037
சிறுபோகம் 291375 421396 345016 419244
தேயிலை 212715 221969 221969 221969
றப்பர் 116478 116478  124000 124734
தேங்காய் 394836 394836 394836 394836
கறுவா 25760 26770 28090 28864
கோப்பி 10170 8790 8720 8541
மிளகு 30520 34070 36180 37344

                                     

வீட்டு உரிமையாளர் சதவீதத்தில் - 2006-2007

பிரிவு மொத்தம் ஏழை அல்லாத ஏழைகள்
இலங்கை 86,8 87,6 81,8
நகர்ப்புற 80.3 81.1 65.2
கிராம 92.0  92.2 90.8
பெருந்தோட்டம 23.8 25.0 20.2

இலங்கையில் பெரும் தோட்டங்களில் வீடு உரிமையற்ற நிலையும், நகர்புற ஏழைகள் வீட்டு உரிமையற்ற நிலை பொதுவாகக் காணப்படுகின்றது.

பயன்பாட்டு நிலம் 1980-1984 மொத்தம் 1879180 ஹெக்டேராகும். இதில் பயிர்ச்செய்கை 1288530 ஹெக்டேராவும், வீடு 499470 ஹெக்டேராகவும், புல்வெளி 91180 ஹெக்டேராவும் காணப்பட்டது. இதை மாவட்ட ரீதியாக ஆராய்ந்தால்

மாவட்டம் பயிர்ச்செய்கை வீடு புல்வெளி மொத்தம்
யாழ்ப்பாணம் 10.510 6.810 10 17.330
கிளிநொச்சி 16.300 10.230 420 26.950
வவுனியா 40.150 17.750 370 58.270
முல்லைத்தீவு 22.400 13.010 640 36.050
பொலன்னறுவை 51.120 40.600 10.750 102.470
அம்பாந்தோட்டை 69.330 39.970 1.950 111.250
இரத்தினபுரி 101.570 11.970 3.150 111.690
புத்தளம் 58.700 19.430 4.240 82.370
குருநாகல் 112.710 7.280 120 120.110
பதுளை 84.430 14.240 10.230 108.900
மொனராகலை 186.330 44.070 14.130 244.530
கண்டி 28.280 12.110 6.010 46.400
நுவரெலியா 8.630 9.880 7.560 26.070
காலி 16.320 960 910 18.190
மாத்தறை 9.690 0 200 9.890
மாத்தளை 45.600  20.180 5.580 71.360
அம்பாறை 127.720 33.410 3.030 164.160
கொழும்பு 750 580 700 2.030
களுத்துறை 14.840 650 80 15.570
மன்னார் 11.590 22.410 3.680 37.680
அனுராதபுரம் 186.500 103.790 1.720 292.010
மட்டக்களப்பு 38.920 35.240 15.040 89.200
திருகோணமலை 46.000 33.230 260 79.490
கம்பஹா 120 740 200 1.060
கேகாலை 20 930 200 1.150
மொத்தம் 1.288.530 499.470 91.180 1.879.180

பிரதான துறை சார்ந்து, உள்நாட்டு தேசிய வருமானம் சதவீதத்தில்

  2002 2003 2004 2005 2006 2007 2008 2009 2010
விவசாயம் 14.3 13.7 13.0 12.5 12.3 11.9 12.1 12.0  11.9
தொழில் 28.0 27.7 27.7 28.1 28.2 28.5 28.4 28.6 28.7
சேவை 57.7 58.6 59.3 59.4 59.5 59.6 59.5 59.3 59.3

 விவசாயம் சார்ந்த தேசிய வருமானம் படிபடியாக குறைந்து வருவதை எடுத்துக் காட்டுகின்றது.

இலங்கையில் விவசாயத்தை சார்ந்து வாழ்வோர் சதவீதத்தில்

  2002 2003 2004 2005 2006 2007 2008 2009 2010
விவசாயத்தில் 34.5 34.0 33.5 30.3 32.2 31.3 32.7 32.6 32.7

 விவசாயத்தில் தொழிலாளர்கள் எண்ணிக்கை சதவீதத்தில்

1990 1991 1992 1993 1994 1995 1996 1997 1998 1999 200 2001
29.2 23.8 29.2 30.6 25.2 24.7 23.5 22.7 24.9 22.1 25.7 22.8

2006 இல் விவசாயம் (வேலைப் பிரிவினை)

  மொத்தம் வீதம் விவசாயம் வீதம் மற்றவை வீதம்
மொத்தம் 7081435 100 2346321 33,1 4735113 66,9
தொழிலாளி 3917902 100 718280 18,3 3199622 81,7
முதலாளி 223328 100 22766 10,2 200562 89,8
சுய தொழில் 2236928 100 1092960 48,9 1143968 51,1
குடும்ப உழைப்பு 703277 100 512315 72,8 190962 27,2

2006 இல் இலங்கை விவசாயத்தில் 23.46 இலட்சம் ஈடுபட்டனர். இதில் 16 இலட்சம் பேர் சுதந்திரமான சுயவிவசாயத்தையும், 7.18 இலட்சம் பேர் கூலிகளாகவும் (இதில் பெருமளவில் பெருந்தோட்டத்தில்) 22.7 ஆயிரம் முதலாளிகளும் உள்ளனர்.

2010 முக்கிய தொழில்துறையும் - வேலைப் பிரிவினையும் சதவீதத்தில்

  மொத்தம் விவசாயம் தொழில்துறை சேவைத்துறை
நகர்ப்புற 100 4,0 26.6 69.4
கிராம 100 34.4 24.7 41.0
பெருந்தோட்டம் 100 69.4 11.4 19.2

கிராமப்புறத்தில் சுய விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயிகள் 34.4 சதவீதமாக காணப்பட்டனர். 65.6 சதவீதம் விவசாயமல்லாத உழைப்பில் ஈடுபடுகின்றனர். பெருந்தோட்டத்தில் 69.4 சதவீதமான விவசாயத்தை சார்ந்த விவசாய கூலிகள் காணப்படுகின்றனர்.

இப்படி நிலப் பயன்பாடு ரீதியான மேலாதிக தகவல்கள் இலங்கையின் சமூக பொருளாதார உறவுகளை வகைப்படுத்த உதவுகின்றது.

சமூக ரீதியான பிளவுகள்

2009 - 2010 இலங்கையின் மொத்த வருமான பகிர்வை எடுத்தால், 20 சதவீதமான பணக்காரர்கள் 54,12 சதவீதத்தை நுகர 20 சதவீதமான ஏழைகள் 4.5 சதவீதத்தை நுகர்ந்தனர். 60 சதவீதமான இடைப்பட்ட வர்க்கங்கள் 41.4 சதவீதத்;தை நுகர்ந்தனர். இந்த 60 சதவீதத்தினுள் அடிநிலையில் உள்ள 40 சதவீதமான ஏழைகள் 13.3 சதவீதத்தை நுகர்ந்தனர். இலங்கையில் ஆக அடிநிலையில் உள்ள 60 சதவீதமான மக்கள் 17.8 சதவீதத்தையே நுகர்ந்தனர். தொழிலாளரை அடிப்படையாகக் கொண்ட பெருமளவிலான மத்தியதர வர்க்கத்தை அடிப்படையாக கொண்ட ஏழைகளைக் கொண்ட ஒரு நாடு. 60 சதவீதமான மக்கள் 17.8 சதவீதத்தை நுகரும் அளவுக்கு வர்க்க முரண்பாடு கூர்மையான நாடு.

பெரும் தோட்டங்கள் 20 சதவீதமான அடிநிலையிலான வறுமையில் வாழும் குடும்பங்கள் மிக பெரிய பங்கு உள்ளது. வறுமை பெரும் தோட்டங்கள் 30 சதவீதம் காணப்படுகின்றது. தேசிய ரீதியாக 23 சதவீதம், கிராமப்புற 25 சதவீதம் மற்றும் நகர்ப்புறம் 8 சதவீதம் காணப்பட்டது.

1990- 2002 வரை வறுமை சதவீதத்தில் - பெரும் தோட்டம், கிராமம், நகரம்

பிரிவு

1990-91 1995-96 2002
இலங்கை (ஒட்டுமொத்தமாக) 26 29 23
 நகர்ப்புற 16 14 8
 கிராமிய 29 31 25
தோட்டம் 21 38 30

இப்படி அடிநிலை எள்ள மிக மோசமான வறுமை காணப்படுகின்றது.

சமூக ரீதியான பிரிவுகள்

2010 இல் பால் ரீதியான வேலைவாய்ப்பு நிலை சதவீதத்தில்

  மொத்தம் ஆண்  பெண்
மொத்தம் 100 66.6 33.4
பணியாளர் 100 67.3 32.7
முதலாளி 100 90.3 9.7
சொந்த தொழில் 100 76.1 23.9
குடும்பத் தொழில் 100 28.2 71.8

இலங்கையில் 2009-2010 ஆண்டு புள்ளிவிபரப்படி மக்கள் வாழும் பகுதிகள்

நகர்ப்புற மக்கள் தொகை - 3.0 மில்லியன் (30 லட்சம்)

கிராம மக்கள் - 16.3 மில்லியன் (163 லட்சம்)

பெரும் தோட்ட மக்கள் 1.0 மில்லியன் (10 லட்சம்)

2009-2010 வருமானம்

மாதத்திற்கு சராசரி வீட்டு வருமானம் - இலங்கை ரூ. 23746

மாதத்திற்கு சராசரி வீட்டு வருமானம் - நகரம் ரூ. 31000

மாதத்திற்கு சராசரி வீட்டு வருமானம் - கிராம் ரூ. 23126

மாதத்திற்கு சராசரி வீட்டு வருமானம் - பெரும் தோட்டம் ரூ. 17366

மொத்த குடும்ப வருமானம் 2009-10 சதவீதத்தில்

வருமான ரூபா மொத்த  நகர கிராம எஸ்டேட்
  100 100 100 100
1. 8627 குறைவு 10 5.0 10.7 13.4
2.8627-12500 10 6.6 10.3 15.3
3.125001-16019 10 6.7 10.2 15.8
4.16020-19655 10 8.1 10.1 14.0
5.19656-23746 10 8.2 10.2 11.9
6.23747-28502 10 10.5 9.9 10.6
7.28503-35167 10 11.5 9.9 7.0
8.35168-44762 10 11.9 9.9 5.5
9.44763-64443 10 13.9 9.7 3.9
10. 64443 மேல் 10 17.7 9.1 2.7

2010 - முக்கிய தொழில்துறை - சராசரி மாத மொத்த சம்பளம் ரூபாயில்

அளவீட்டு வேளாண்மை தொழில் சேவை
சம்பளம் மாத ஊதியம் 10340 13618 18795
சராசரி மாத ஊதியம் 8500 11000 17340
சம்பளம் தினசரி கூலி 7670 10428 9778
சராசரி தினசரி கூலி 7200 10000 9000

 2010 – நகரம் - கிராமம் - சராசரி மாத மொத்த சம்பளம் ரூபாயில்

  நகரத்தில் கிராமத்தில்
சம்பளம் மாத ஊதியம் 19960 16105
சராசரி மாத ஊதியம் 16000 15000
சம்பளம் தினசரி கூலி 10526 9170
சராசரி தினசரி கூலி 10000 8400

 

முக்கிய தொழிற்துறை குழுக்கள் இலங்கை நகர கிராம தோட்டம்
விவசாய 45.0 6.4 44.4 73.2
தொழில் 23.2 28.2 24.4 9.1
சேவைகள் 31.8 65.3 31.1 17.7
மொத்த 100 100 100 100

2009 இல் 4.32 இலட்சம் பேருக்கு வேலையில்லை. 2010 இல் விவசாயத்திலும் மின்பிடியிலும் மொத்த வேலை 22.7 சதவீதமாகும். நாட்டில் 21 ஆயிரத்து 551 சிறிய ரக மீன்பிடி படகுகள் உள்ளன. இவை தினமும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவையாகும். 2005 இல் மீன்பிடியில் 400000 மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தது. 137300 சிறிய மீன்பிடி படகுகள் (88 சதவீதமான மீன்களை பிடிக்கின்றனர்), 160300 மீன் பிடிப்போரும் உள்ளனர். உள்நாட்டு மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு மூலம் 12 சதவீதம் உற்பத்தியாகின்றது.

2008 ஆண்டு 1957 தொழிற்சங்கங்களில் 7.65 இலட்சம் தொழிலாளர்கள் இணைந்திருந்தனர். 51 வேலை நிறுத்தத்தில் 37931 பேர் ஈடுபட்டனர். வேலை நிறுத்திய நாட்கள் 65655 ஆகும்.

கடன் தொகை மற்றும் கடன் உள்ளோர் சதவீதம் 2006-2007

ரூபாய் ஏழை அல்லாத ஏழை மொத்தம்
கடன் இல்லை 37.3 46.8 38.5
குறைவான 10000 15.4 32.2 17.5
10001-25000 11.6 11.0 11.6
25001-50000 11.6 6.1 10.9
50001-100000 9.3 3.9 8.5
100001-500000 11.4 - 10.1
மேல் 500000 3.3 - 2.9
மொத்தம் 100 100 100

நாட்டில் 60 சதவீதமானவர்கள் கடனுடன் தான் வாழ்கின்றனர். ஏழைகளை விட மத்தியதர வர்க்கம் தான் அதிக கடனுடன் வாழ்கின்றது.

வேலை வாய்ப்பு நிலை - 2010 வேலை மக்கள்

  மொத்தம் சதவீதம்
மொத்தம் 7706593 100,0
பணியாளர் 4276803 55,5 (பொதுத்துறை 14.3 - தனியார் 41.2)
பொதுத்துறை 1099803 14,3 (ஆண் 12.8 சதவீதம் பெண் 17.3 சதவீதம்)
தனியார் 3177000 41,2 (ஆண் 43.3 சதவீதம் பெண் 37.0 சதவீதம்)
முதலாளி 201134 2,6 (ஆண் 3.5 சதவீதம் பெண் 0.8 சதவீதம்)
சுய தொழில் 2425568 31,5 (ஆண் 25.9 சதவீதம் பெண் 22.2 சதவீதம்)
குடும்பத் தொழிலாளி 803089 10.4 (ஆண் 4.4 சதவீதம் பெண் 22.4 சதவீதம்)

 முடிவாக

இன்று இலங்கை அரைகாலனிய அரைநிலப்பிரபுத்துவ நாடல்ல. நவகாலனியத்தை அடிப்படையாக கொண்ட, நவகாலனிய அரை நிலப்பிரபுத்துவ பண்பாட்டை அடித்தளமாக கொண்ட ஒரு நாடு. இலங்கை விவசாயம் சுதந்திரமான சிறு விவசாயிகளை சார்ந்தும், நவகாலனிய – தரகு முதலாளித்துவ பெரு மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடு.

பெருமளவு குட்டிபூர்சுவா வர்க்கங்களை அடிப்படையாகக் கொண்ட, அதேநேரம் தொழிலாளர் வர்க்கத்தை கொண்ட, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நவகாலனிய தரகுமுதலாளித்துவ நாடாகும்.

கட்டுரை புரிந்து கொள்ள மேலதிக தரவுகள்

இலட்சம் 100000 (100 ஆயிரம்)
கோடி  100 இலட்சம் (10000 ஆயிரம்)
ஹெக்டேர் 2.47105 ஏக்கர்
ஏக்கர் 0.4046 ஹெக்டேர்

1. இலங்கை ஒருங்கிணைந்த ஆய்வு, 1999-2000

2. Sri Lanka Labour Force Survey Annual Report – 2010

3. Revitalizing Small-Scale Agriculture: Rental Policies of Alienated State Lands of Sri Lanka

4. 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள வேளாணஅறிக்கை

5. உலக வங்கி, 2001

6. 2002 விவசாயத் திணைக்கள அறிக்கை

7. Land use in Sri Lanka: past, présent and thé future - Symposium no. 31/ Paper no. 974

8. Sri Lanka Integrated Survey, 1999-2000

9.  Wanigaratne, 2006

10. The politics of land reform and land settlement in Sri Lanka By Sunil Bastian

11. Land Reform Commission

12. Land Reform in Sri Lanka - Vijaya Samaraweera

13. இலங்கையின் நிலவுடமை உறபத்தி உறவுகள் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

14. Status of organic agriculture in Sri Lanka

15. Land Availability and Land Tenure

16. Land Reform in Sri Lanka - Vijaya Samaraweera

17. Rice in srilanka

18. Poverty in Sri Lanka - (Based on Household Income and Expenditure Survey - 2006/07)

19. Bulletin of Labour Force Statistics of Sri LankaIssue No.34 - Department of Census & Statistics

20. Agriculture and Natural Resources Sector – ADB

21. Labour Force Survey - Annual Report 2

 

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி