மகிந்தவின் குடும்ப சர்வாதிகாரம் சரணடையாது மேலும் தன்னை பாசிசமாக்கும்

இதுதான் அரசின் தெரிவு. இங்கு குற்றவாளிகளே நாட்டை ஆளுகின்றனர். கடத்தல், கப்பம், காணாமல் போதல் மூலம் பல ஆயிரம் பேரை நேரடியாக வழிகாட்டி கொன்றவர்கள் தான் நாட்டை தலைமை தாங்குகின்றனர். அன்று புலிகள் ராஜீவைக் கொன்ற பின் புலித்தலைவர் பிரபாகரன் மீள முடியாத அரசியல் புதைகுழியில் எப்படி சிக்கினாரோ, அதே பரிதாப நிலையில் மகிந்த குடும்பம் உள்ளது. எதைத்தான், எங்கே, யார் விசாரிப்பது. தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில், நாட்டை பாசிசமாக்குவதைத் தவிர வேறு தெரிவு கிடையாது.

2006இல் மேற்கு ஏகாதிபத்தியங்கள் புலிகளுக்கு எதிரான குற்றச்சாட்டும் அதைத் தொடர்ந்து தடையும் போன்றதுதான், இன்று இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம். அன்று புலிக்கு எதிரான குற்றச்சாட்டு உண்மைகளையும், மக்களின் வாழ்வியல் அடிப்படைகளைக் கொண்டது. அதே போல்தான் இன்று அரசுக்கு எதிராகவும் சுமத்தி இருக்கின்றது.

அன்று புலிகள் குற்றச்சாட்டை மறுத்தபடி, மேலும் தம்மை பாசிசமாக்கி மக்களை பலி கொடுக்கும் அரசியல் வரை சென்று இறுதியில் சரணடைந்து பரிதாபகரமாக கொலையுண்டார்கள். இன்று அரசு தீர்மானத்தின் உண்மைகளை மறுத்தபடி தன் அழிவை நோக்கிய திசையில் பாசிசமாகின்றது.

அன்னிய கடனிலும், மேற்கு ஏகாதிபத்திய ஏற்றுமதியில் தங்கி நின்று கொண்டு, பௌத்த சிங்கள தேசியத்தை மையப்படுத்தும் பாசிச வக்கிரத்தை மேலும் உசுப்பேற்றி வருகின்றது.

அன்னிய கடன் மீள் கொடுப்பனவு மற்றும் வட்டிக் கொடுப்பனவு தேசியவருவாயில் அண்ணளவாக 50 சதவீதமாக இருக்கின்ற நிலையில், அதைக் கொடுப்பதற்காகவே கடன் வாங்க வேண்டிய நிலையில் மேற்கு சார்ந்து இயங்குகின்றது. மேற்கு அல்லாத நாடுகளின் கடன், தனது இராணுவமயமாக்கல் தளபாடங்களுக்கு கூடப் போதுமானதல்ல. தமது இராணுவ தளபாடத்தை கடனாக அது விற்கின்றது. இப்படி அங்குமிங்குமாக தேசத்தை ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்படுத்தியபடி, தன் குடும்பத்தை காக்க தேசியம் பற்றி அடிமையின் வீறாப்பு. இலங்கை ஏற்றுமதியோ மேற்கை சார்ந்து இருக்கின்றது.

இலங்கையின் மொத்த ஏற்றுமதி எடுத்தால் 2002 இல் அமெரிக்கா 37.6 சதவீதமும், பிரிட்டன் 12.53 சதவீதமும், பெல்ஜியம் 5.5 சதவீதமும் சார்ந்து இருந்தது. இதன்பின் தான் மற்றைய நாடுகள். இங்கு மேற்கின் பொருளாதார தடை, இறக்குமதி தடை பாரிய அரசியல் விளைவைக் கொடுக்கும். இலங்கையின் மொத்த இறக்குமதியை எடுத்தால் இந்தியா 13.1 சதவீதமும், சிங்கப்பூர் 7.17 சதவீதமும், கொங்கொங் 8.13 சதவீதமும், யப்பான் 5.88 சதவீதமும் காணப்படுகின்றது. இதன்பின் தான் மற்றைய நாடுகள். மேற்கின் சிறு அசைவுக்கு சார்பாக, அனைத்தும் காணப்படுகின்றது. மேற்கைச் சார்ந்து தான், இலங்கைப் பொருளாதாரம் தவழுகின்ற அதேநேரம், இராணுவமயமாக்கல் மேற்கு அல்லாதவாறு சார்ந்து இயங்குகின்றது. இந்த முரண்பாட்டின் எதிர்நிலை தன்மையில் அரங்கேறப்போகும் பாசிசமயமாக்கலின் அரசியல் விளைவுகளை, இவை எடுத்துக் காட்டுகின்றது.

இந்த வகையில் அமெரிக்கத் தீர்மானமும் அதன் எதிர்வினையும் மக்களுக்கு எதிரானதாகவே பயணிக்கும். இந்தியா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் நலன் சார்ந்த முரண்பாட்டுக்குள் இலங்கை மக்கள் மோதவிடப்படுகின்றனர். மக்களின் அவலங்கள் மேலான, வேடிக்கையான தீர்மானம் தான் இது.

இலங்கை அரசு நடத்திய யுத்தம் மற்றும் யுத்தக் குற்றங்களுக்குப் பின்னால் இருந்தவர்களின் ஒரு பகுதியினர், இன்று அதை முன்னிறுத்தி விசாரணை நீதி கோரி வேஷம் போடுகின்றனர். மறுதரப்பு அதை மறுத்து நிற்கின்றது. இங்கும் அங்குமாக வாலாட்டிக் குலைக்கும் நாயாட்டம் மக்களை இதற்குள் பிரித்து மோதவிட்டு குளிர்காய்கின்றனர், அரசியல் பேசும் பச்சோந்தி போக்கிரிகள்.

யுத்தம் மற்றும் யுத்தக்குற்றத்தின் பின் அரசு மட்டும் இருக்கவில்லை. அரசுக்கு சார்பாக வாக்களித்த நாடுகள் மட்டும் இருக்கவில்லை. இந்தத் தீர்மானத்தை கொண்டுவந்த நாடுகள், அதை ஆதரித்த நாடுகளும் கூடவே இருந்தன. புலிகள் முதல் புலத்து புலிகள் வரை இருந்தனர். யுத்தத்தின் பின்னான நலன்களும், எதிர்பார்ப்புகளும், அது சார்ந்த அவர்களுக்கு இடையிலான குறுகிய முரண்பாடுகளும் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானமாகியது.

இந்த பின்னணியில் ஜனநாயகத்தின் பெயரில் இலங்கையி;ல் வீதிப்போராட்டங்கள் முதல் ஆயுதப் போராட்டங்கள் வரை மட்டுமன்றி, ஏகாதிபத்திய எதிர்ப்பின் பெயரில் சிங்கள பௌத்த தேசியவாதம் செயற்கையாக உசுப்பேற்றப்பட்டு வருகின்றது. மக்கள் விரோத சக்திகளால் திட்டமிட்டு திணிக்கப்படும் இந்த போராட்டங்கள் அரசியல்ரீதியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

உண்மையான ஜனநாயகத்துக்கான போராட்டம் முதல் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை ஒருங்கே ஒரே புள்ளியில் நடத்துவதன் மூலம், இதை மக்கள் தங்கள் கையில் எடுக்கமுடியும்.

இலங்கையில் ஜனநாயகத்துக்கான போராட்டம் எப்படி முதன்மையான அரசியல் கூறாக உள்ளதோ, அதே அளவுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமும் அவசியமான முதன்மையான கூறாக உள்ளது. இங்கு ஜனநாயகத்துக்கான போராட்டம் என்பது குறுகிய "தீர்மானத்து" வரையறையை கடந்ததாக அமெரிக்காவுக்கு எதிரானதாக இருக்கவேண்டும்;. ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் என்பது, அமெரிக்கா அல்லாத ஏகாதிபத்தியங்களையும் எதிர்த்து போராட்டத்தை நடத்தவேண்டும்;.

அரசு தனக்கு எதிரான இந்த தீர்மானத்தை "புலி"யாக, "ஏகாதிபத்திய" த்தனமான தேசத்தின் "சுயாதீனம் மீதான" அத்துமீறலாக காட்டித்தான், அரசு தன்னை மேலும் பாசிசமாக்குகின்றது. அரசின் இந்த உத்தியின் பின் உள்ள உண்மைகளை நாம் நிராகரிக்க முடியாது என்பது மட்டுமல்ல, இதை நாம் அரசியல் ரீதியாக முன்னனெடுப்பதன் மூலம்தான், அரசை தனிமைப்படுத்த வேண்டும்.

அரசுக்கு எதிரான தீர்மானம் கூட உண்மைகளைச் சார்ந்தது. நாம் அந்த உண்மைகளையும் சார்ந்த நின்று முழுமையில் அணுகுவது அவசியம். இதன் மூலம் தான் இலங்கையும் இலங்கை சார்ந்த ஏகாதிபத்திய முகாமும் – இந்தியாவும் அமெரிக்க சார்பு ஏகாதிபத்திய முகாமும் கட்டமைக்கும் எதிர்முகாம் அரசியல் சதிகளையும், அரசியல் போக்குகளையும் முறியடிக்கமுடியும்.

இதன் பின் கட்டமைக்கும் இனப்பிளவு அரசியலை மறுத்த, தமிழ் சிங்கள மக்களின் ஒன்றுபட்ட அரசியல் முன்முயற்சி முன்நிபந்தனையானது. இதன் மூலம் தான், அமெரிக்கா - இலங்கை அரசின் ஒட்டுமொத்தமான குறுகிய மக்கள் விரோத சதியை முறியடிக்க முடியும். இன்று மனிதத்தை நேசிக்கும் அனைவர் முன்னுமுள்ள, சவால்மிக்க அரசியல் இதுதான்.

 

பி.இரயாகரன்

25.03.2012