நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..! – (தொடர் : 04)

புதுக்கத் தார் மெழுகிய

அந்தத் தெருவை

டக்கிளசு போட்டாரென

அனுங்கினான் ஒரு தம்பி.

 

மாமா..!

அந்தக் காலத்தில்

நீங்களும் மற்ற மாமாக்களும்

இந்தத் தெருக்களை

எத்தனையோ தடவை

கூட்டிப் பெருக்கி

சுத்தம் செய்தீர்களாமே..!

எனக் கேட்டான்

மறு தம்பி.

 

தோழமைகள் கலைந்த

எந்தனின் நிலையில்

அந்தக்கால இள முகங்களும்

அவர்களின் நடையுடை பாணியும்

நக்கல் நளினக் குத்தல்களும்

கானல் நீர்போல

எல்லாமே எனைச் சுற்றி

எழிலாய் அலைந்தது.

 

காலங் காலமாய்

இந்தத் தெருவினை

வண்டிற் சில்லுகள்

கிண்டிக் கிளறிய

கற்களைச் செப்பனிட்டு

சீரான பாதை

புதுப்பிக்கச் சொல்லி

த.வி.கூட்டணித் துரைரத்தின

எம்பியை கேட்டோம்..!

 

ஓ.., அந்த றோட்டா..!

அது என்ரை

எல்லைக்குள் வராது கண்டீரோ..!?

அதுக்கு நீங்கள்

கரவெட்டி எம்பி

இராசலிங்கத்தை..,

 

முன்னாளில் மாணவர்

கல்வி அதிகாரியும்

அன்னாளின் த.வி.கூ. மக்களின்

நாடாளுமன்ற உறுப்பினரன்றோ..,

அந்தக் கல்விமான் சீமான்

பலவாய் அள்ளியே தருவாரென

எங்களின் சைக்கிள்கள்

உதைத்த உதையிலே

மோட்டார் வண்டிபோல்

அவ்விடம் சென்றன.

 

வாங்கோ தம்பிமாரே

வந்த விடயம் சொல்லுங்கோ..?

ஓ.., அந்த றோட்டா..!?

அது என்ரை

எல்லைக்குள் வராது கண்டீரோ..!?

அதுக்கு நீங்கள்

எம்பி துரையைக் கேளுங்கோ..!!

 

அவர்கள் அன்று

தமிழீழ எல்லைக்கு

நடுகல் தேடினர்.

 

இன்றோ இந்த

டக்கிளஸ் போட்ட

பாதையில் தினமும்

பார ஊர்திகள்..!

 

என்ன இவை

வாகன ஊர்வலங்கள்..!?

எனது வாயினை

சிறிய கரமொன்று

மென்மையாயப் பொத்தி..!

 

மாமா..!

பெலத்துக் கதையாதேங்கோ..!?

உதெல்லாம் டக்கிளசின்ரை வாகனம்.

உங்கட வயல் பக்க

வெள்ளைப் புட்டிக் காணியை..,

 

எங்களின் பூர்வீகச் சொத்தாய்

பரந்து நீண்டு

பெரும் புட்டியாய்

புறந்தள்ளிக் கிடந்த

வெண்மணற் காணியை

இந்த மண் கொள்ளையர்

தினமும் தோண்டி அதழெடுத்து

பெருங் குளமாய் கிடந்தது..!

எந்தனின் கண்களில்

நீர்நிலை தேங்கி

மடைகள் உடைந்தது..!!

 

அப்போதும்..!

எந்தன் மாமனின் ஊர்தியும்

டக்கிளசின் வாகனங்களும்

அவர் போட்ட றோட்டாலே

மண்ணள்ளிச் சிலது போக

வெறுமையாய் பலது வந்தது.

 

மாணிக்கம்

13/05/2011

 

(தொடரும்)

1.நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…! – மாணிக்கம் (தொடர் : 01)

2.நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்…! – (தொடர் : 02)

3.நான் பார்த்த போரும் எனைப் பார்த்த ஊரும்..! – (தொடர் : 03)