ஒவ்வொரு சமூகக் கூறும் இந்தச் சமூக அமைப்பில் வர்க்கம் சார்ந்து இயங்கும் போது, ஒவ்வொரு சமூக முரண்பாட்டையும் ஒன்றுக்கு ஒன்று "சமாந்தரமாக" முன்னிறுத்துவது எதற்காக!? ஒவ்வொரு சமூக முரண்பாட்டிலும் உள்ள அடிப்படை முரண்பாடான வர்க்க அடிப்படையை மறுப்பதாகும். சமாந்தரங்கள் என்றும் ஒரு புள்ளியில் சந்திப்பதில்லை. ஆக இது ஒரு புள்ளியில் ஐக்கியப்படுவதில்லை. இந்தச் சமூக அமைப்பில் நிலவும் அனைத்து ஒடுக்குமுறையையும் மறுக்கின்ற, ஒரு புள்ளியிலான ஐக்கியத்துக்கு பதில், சமாந்தரமாக இருத்தல் என்பது ஐக்கியத்தை மறுத்தலாகும். இந்த வகையில் ஒவ்வொரு சிந்தனையும், செயலும், நோக்கமும் கூட வர்க்கம் சார்ந்தது.

 

நடைமுறையில் மக்களை அணிதிரட்டும் அரசியல் தளத்தில் இருந்து வேறுபட்டது, புலமை சார்ந்த பிரமுகர்களின் சமாந்தரமான இருப்புசார் கோட்பாடுகள் எப்போமும் மார்க்சியத்தை மறுத்தே எழுகின்றது. இந்த வகையில் மக்களின் நடைமுறை வாழ்வியல் மீது ட்டுண்ணிகளாக தங்களை தக்கவைத்துக் கொள்ள, மக்களை ஜக்கியப்படுத்துவதற்கு பதில் பிரிக்கும் கோட்பாடுகளை முன்வைக்கின்றது. மக்களை ஜக்கியப்படுத்தி அணிதிரட்ட மறுக்கும் சொந்த நடைமுறை சார்ந்த பிரமுகர் அடிப்படையில் இருந்து இது எழுகின்றது. இந்த வகையில் "ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற ஐயரின் நூல் மீதான விமர்சனக் கூட்டத்தில், சசீவன் மார்க்சியத்தை மறுதலிக்கும் "சமாந்தர" கோட்பாட்டை முன்வைகின்றார்.

இந்த வகையில் அவர் தன் "இயங்குவெளி" இணையத் தளத்தில் கூறுகின்றார் "நாம் ஒடுக்குமுறைகளை தரவரிசைப்படுத்தாமல் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கெதிரான செயற்பாடுகளையும் சமாந்தரமாக முன்னெடுக்கும் போதே, அதிகாரத்திற்கெதிரான ஐக்கிய முன்னணிகளையும் அதனூடான விடுதலையையும் சாத்தியப்படுத்த முடியும்." என்கின்றார். முரண்பாட்டின் குவியல், பிரமுகராக இருப்புக்கு உதவும் அடிப்படை.

தேசியத்தை சமாந்தரமாக எடுத்தால், பெண்ணியத்தை சமாந்தரமாக எடுத்தால், ... இவை ஒன்றுக்குள் ஒன்று இருப்பதையும், எங்கும் இருக்கும் வர்க்கத்தை சமாந்தரமாக்கி மறுதலிக்கிறது. இதன் அரசியல் சாரம் தேசியம் வர்க்கரீதியாகவோ, பெண்ணியல் ரீதியாகவோ. இருக்கக் கூடாது, இருக்கவும் முடியாது என்கின்றது.

இந்தப் பின்னணியல் வர்க்கக் கண்ணோட்டமற்ற ஐக்கிய முன்னணி பற்றிய, திரிபை மூடிமறைத்து முன்வைக்கின்றது. இங்கு "அனைத்து ஒடுக்குமுறை"யையும், வர்க்கமற்ற தனிப் பிரிவாகக் கொண்டு, "சமாந்தரமாக" "ஜக்கிய முன்னணி" ஊடாக இந்த வர்க்க சமூக அமைப்பை முன்னிறுத்துகின்றார். உண்மையில் "தரவரிசைப்படுத்தல்" எப்படி தவறோ அதேபோல் "சமாந்தரப்படுத்தலும்" தவறானது. பிரதான முரண்பாட்டையும் அடிப்படை முரண்பாட்டையும் அடிப்படையாக கொள்ளாத, அனைத்து அணுகுமுறையும் தவறானது.

இங்கு "தரவரிசைப்படுத்தல்" பிரதிதான் "சமாந்தரப்படுத்தல்". "சமாந்தரப்படுத்தல்" என்பது "தரவரிசைப்படுத்தல்" தான். ஒரு சமூக ஒடுக்குமுறையில் உள்ள அடிப்படை முரண்பாட்டை மறுத்தல் தான் "சமாந்தரப்படுத்தல்". இது பிரதான முரணபாட்டை மறுத்து, பல முரண்பாட்டை ஒன்றுக்கு நிகராக மற்றதை "சமாந்தரப்படுத்"துகின்றது. மகிந்தாவை முன்னிறுத்திய தலித்தியம், பெண்ணியம் கூட தேசியத்துக்கு நிகராக இதைத்தான் சொல்லுகின்றது.

இங்கு அடிப்படை முரண்பாட்டை ஏற்றுக்கொண்டால், சமாந்தரத்துக்கு பதில், அனைத்தும் ஒரு புள்ளியில் சந்திக்கும் ஐக்கியம் உருவாகின்றது. இது பிரதான முரண்பாட்டில் ஒன்று குவியும்.

இங்கு "சமாந்தரம்" என்பது அடிப்படை முரண்பாட்டை மறுக்கும், மார்க்சியம் மீதான எதிர்வினைக் கோட்பாடு. மார்க்சியம் எந்த சமூக ஒடுக்குமுறையிலும், அதன் குறித்த போராட்டத்திலும், அடிப்படை முரண்பாடு சார்ந்து வர்க்க ரீதியாக அணுகுகின்றது. ஆக இந்த அடிப்படையில் அனைத்து சமூக ஒடுக்குமுறையையும் ஒருங்கிணைந்த வர்க்கம் என்ற புள்ளியில் தன்னை ஒருங்கிணைக்கின்றது. ஒன்றில் இருந்து ஒன்றை விலக்கியோ, தரவரிசைப்படுத்தியோ, சமாந்தரப்படுத்தியோ மார்க்சியம் அணுகுவது கிடையாது. இந்த நிலையில் "தரவரிசைப்படுத்தாமல்" என்று மூடிமறைத்து மார்க்சியம் அப்படி அணுகுவதாக காட்டி திரிப்பதன் மூலம், "சமாந்தர" கோட்பாடு இங்கு முன்தள்ளப்படுகின்றது. எங்கும் நிலவும் அடிப்படை முரண்பாடான வர்க்கத்தை அரசியல் நீக்கம் செய்தவண்ணமான ஒடுக்குமுறை பற்றிய கண்ணோட்டம் தான், "சமாந்தரம்" பற்றி விலகலை முன்வைக்கின்றது.

மார்க்சியம் எந்தச் சமூக முரண்பாட்டையும் வர்க்கக் கண்ணோட்டத்தில் இருந்துதான் அணுகுகின்றது. அனைத்து சமூக ஓடுக்குமுறைகளையும் இந்த வகையில் அணுகி, முரணற்ற வகையில் ஒருங்கிணைக்கின்றது. மார்க்சியம் முரணாக அணுகுவதோ, இயங்குவதோ கிடையாது.

தொடரும்

 

பி.இரயாகரன்

20.03.2012