05222022ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

புதைகுழியில் சிக்கிவிட்ட இலங்கை அரசும், அதே புதைகுழியில் புதையும் போராட்டங்களும்

தன் சொந்த புதைகுழியை வெட்டியபடி, தன் மேல் மண்ணை அள்ளிப் போட்டு புதைக்கக் கோருகின்றது இலங்கை அரசு. இதனைத்தான் அன்று புலிகள் செய்தனர். புலிகள் தம்மை பாதுகாக்க மக்களை பலிகொடுத்தும், இறுதியில் சரணடைந்த பின்னணியில்  படுகொலைக்குள்ளாகி அழிந்தனர். இந்த வகையில் இலங்கை அரசும், தன்னைத் தானே சர்வதேச முரண்பாட்டுகளுக்குள் புதைத்து வருகின்றது.இந்த பின்னணியில் அரசு எதிர்ப்பு போராட்டங்களுக்கும், மாற்றுகளுக்கும் மக்களுக்கு மீட்சியைத் தருமா!? இதனால் மக்களுக்கு நன்மை கிடைக்குமா!? இறுதியில் என்ன நடக்கும்!? இது இன்று எம்முன்னுள்ள அடிப்படையான கேள்வியாகும். சர்வதேச முரண்பாடு சார்ந்து உலகெங்கும் நடந்த போராட்டங்களுக்கு என்னதான் நடந்தது? அதேபோல் போராட்டங்கள் சர்வதேச நாடுகளை சார்ந்த போது என்ன நடந்தது? இவை இந்த உலக ஒழுங்கில் மீண்டும் மக்களை ஒடுக்கும், அதே வடிவில் மீள இருக்கின்றதே ஏன்? இங்கு மக்கள் அதிகாரம் ஏன் உருவாகவில்லை? இந்தக் கேள்விகளுக்கு ஊடாகவே இலங்கை அரசு  சந்திக்கும் சர்வதேச நெருக்கடியை ஆராய்வது அவசியமானதும்,  அடிப்படையானதுமாகும். இது பற்றி தெளிவின்றிய பார்வைகள் மயையானது, உன்னையே நீ எமாற்றுவதுமாகும்.

 

இன்று மகிந்தாவின் தலைமையிலான குடும்ப சர்வாதிகார இராணுவ பாசிச அரசு, மீள முடியாத சர்வதேச முரண்பாட்டுக்குள் தன்னை இணைத்தன் மூலம் ஆழப் புதைந்து வருகின்றது. உலக மேலாதிக்கத்தில் பலவீனமான நாடுகளைச் சார்ந்து நின்று, தன்னை தக்கவைக்க முனைகின்றது. உள்நாட்டிலோ இராணுவ பலத்தில் நின்று, சர்வாதிகார ஆட்சியை ஜனநாயக வடிவங்கள் மூலமே தக்க வைக்க முனைகின்றது.


இந்த வகையில் இந்தியா – அமெரிக்கா நலனுக்கு எதிரான சர்வதேச கூட்டைத்தான் இலங்கை அரசு சார்ந்து நிற்கின்றது. இந்த வகையில் தனக்கு எதிரான சர்வதேச நெருக்கடியை எதிர்கொள்ளும் குறுகிய வழிமுறைகள், முரண்பாட்டை மேலும் கூர்மையாக்கி அதைத் தீவிரமாக்கின்றது. இது அமெரிக்கா தலைமையிலான பாரம்பரியமான உலக ஆதிக்க நாடுகளினதும், இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்தின் கெடுபிடிக்குள் சிக்கி    எதிர்வினைக்குள்ளாகின்றது.

இந்த முரண்பாட்டை கூர்மையாக்கி இலங்கை அரசை தனிமைப்படுத்துவதற்கு எதுவாக, தமிழர் விவகாரம் இதற்குள் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. யுத்த காலத்தில் காணமல் போனவர்கள், படுகொலை செய்யப்பட்டவர்கள் உட்பட இனப் பிரச்சனைக்கு தீர்வு காணமை போன்ற விடையங்கள் மூலம் இலங்கை அரசு தனிமைப்படுத்தப்படுகின்றது.

இலங்கை அரசு இவர்களை எமாற்றி காலத்தைக் கடத்தவும், சர்வதேச அழுத்தத்தை சமாளிக்கவும், தானே இதற்கு பரிகாரம் கண்பதாக கூறி விசாரணை அறிக்கையை தயாரித்தது. இப்படி கண்துடைப்புக்கு பல உண்மைகளை புதைத்த போலியான அரைகுறை அறிக்கையை வெளியிட்டது. இந்த பின்னணியில் அந்த அரைகுறை ஆவணத்தை அமுல்படுத்தக் கோரும் எல்லைக்குள், இலங்கை அரசை தனிமைப்படுத்தி இருக்கின்றது அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கை பேணும் நாடுகள்.

இலங்கை அரசு தானே இப்பிரச்சனையை சுயதீனமாக தீர்ப்பதாக கூறி வெளியிட்ட அறிக்கையை, நடைமுறைப்படுத்த மறுக்கின்ற சுய முரண்பாட்டுக்குள் சிக்கி வெளிவரமுடியாத சுயஅழிவை நோக்கி நகருகின்றது. இந்த முரண்பாட்டில் இருந்து மீள இரண்டு வழிகள் தான் உள்ளது.


1.தனது இன்றைய சர்வதேச கூட்டாளிகளை கைவிட்டு, அமெரிக்கா - இந்தியாவிடம் முற்றாக சரணடைதல்

2.இனப் பிரச்சனைக்கான தீர்வு முதல் கொண்டு யுத்தத்தில் இழைத்த குற்றங்களுக்கு பொறுப்பேற்று தானே முன்னின்று தீர்வு காண்பது. இதன் மூலம் சர்வதேச தலையீடுக்குரிய நேரடிக் காரணத்ததை அரசியல் ரீதியாக இல்லாதாக்குவது.

இதைவிட இதற்கு மாற்று வழி கிடையாது. இதில் ஒன்றை செய்ய மறுக்கும் போது, இலங்கை அரசை, அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கை பேணும் மேற்குலக நாடுகள்.  தன்மைப்படுத்தி அழிக்கும்.

இதற்கமைய உலகளவில் இலங்கை இழைத்த மனிதவுரிமை மீறல்களை முன்னிறுத்தி வருகின்றன அமெரிக்கா தலைமையிலான நாடுகள். இது வெற்றி பெறாத பட்சத்தில்  உள்நாட்டில் தனக்கு எற்ற கூலிக் குழு மூலம், ஆயுத போராட்டம் வரை நடத்தும் அரசியல் எதார்த்தமும் காணப்படுகின்றது.

இதுவே இன்றைய இலங்கையின் அரசியல் சூழலாகும். இந்த சர்வதேச பின்னணியில், மக்கள் தமது உரிமையை பெற இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற மாயை மீண்டும் காணப்படுகின்றது. இந்த மாயை விதைக்கப்படுகின்றது.

1980 களில் இந்தியா இலங்கை மீதான தன் பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவ, இன முரண்பாட்டை ஆயுதபாணியாக்கியது. இதன் மூலம் போராட்டத்தை மக்களில் இருந்து தனிமைப்படுத்தி அழித்தது. இந்தியாவை பயன்படுத்தி தமிழீழம் அடைவதாகக் கூறிக்கொண்டு, ஆயுதம்மேந்திய போராட்டக் குழுக்கள், மக்கள் போராட்டத்தை அழிக்கும் கூலிக்குழுக்களனாது. இப்படி இந்திய முதல் அமெரிக்கா நலன் சார்ந்த எல்லைக்குள் நின்று, மக்களை சாராத மக்கள் விரோதப் போராட்டமாக சிதைக்கப்பட்டது.

இன்று மீண்டும் அதே நிலைமை. கடந்த காலத்தில் அரசியல் ரீதியாக மக்கள் விரோத அரசியலை முன்வைத்து தோற்றவர்கள், இன்று மீண்டும் சர்வதேச முரண்பாட்டை பயன்படுத்தி தமிழருகான தீர்வு பற்றி பிரமையை ஊட்டுகின்றனர். இவை அனைத்தும், அவர் அவர் நலன் சார்ந்தது. இது மக்கள் நலன் சார்ந்தல்ல.

இப்படி அரசு மட்டும் இன்று இந்த சர்வதேச புதைகுழியில் சிக்கவில்லை. அரசுக்கு எதிரான அணிகளும் கூடத்தான் புதைகுழியில் இறங்கி விடுதலையின் பெயரில் புதைகின்றனர்.

மக்களை சார்ந்து நின்று, சொந்த வழிகளில் தீர்வு காண்பதற்கான உள்நாட்டு வழிமுறைகள் மட்டும்தான் மக்களைச் சார்ந்தது. தமிழ் - சிங்கள மக்களின் ஒருங்கிணைந்த போராட்டத்துக்கான முரணற்ற அரசியல் தெரிவு இன்றிய அனைத்தும், மீள முடியாத மற்றொரு புதைகுழி அரசியல்தான். இதை புரிந்து கொண்டு இதை எதிர்கொள்வதுதான், உடனடியான இன்றைய அரசியல் கடமையாகும். இந்த அழிவு அரசியலை எதிர்த்து அணிதிரளும் பொறுப்பைத்தான் வரலாறு எம்முன்  சுமத்தியுள்ளது.

பி.இரயாகரன்

13.03.2012


பி.இரயாகரன் - சமர்