Language Selection

புதிய கலாச்சாரம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பசி, தாகம், சோர்வு, உறக்கம் போன்ற உடலின் கோரிக்கைகளை, அச்சம், அருவெறுப்பு, துயரம் போன்ற உள்ளத்தின் தடுமாற்றங்களை வெல்லப் பழகியவர்கள் அவர்கள்.


 குழந்தைகளின் சாவு கொடியதுதான். ஆனால் ஒரு கட்டையில் குதிரையேறி அலையில் மிதந்து வந்திறங்கும் அந்த மீன் குஞ்சுகளைப் பிணமாகக் காணும்போது நெஞ்சு வெடிக்கிறது. மனிதகுலத்தை நாகரிகத்திற்கு அறிமுகப்படுத்திய அந்த மழலை இனம் ""ஐயா எங்களுக்கு உதவ யாருமே இல்லையா'' என்று கதறுவதைக் காணும்போது கண்களில் நீர் திரள்கிறது.


 செத்துக் கிடக்கும் மீன்களைப் போலவே இரைந்து கிடக்கின்றன அவர்களது உடல்கள்  தெருவில், புதரில், கூரையில், கருவேலங்காடுகளில்! அழுகிய மீன்களைக் கவ்வும் நாய்கள் அந்த உடல்களையும் கவ்வுகின்றன. கருவாட்டைப் போல அடுக்கிக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன உடல்கள். மீனுக்கும் மீனவனுக்குமிடையிலான வேறுபாட்டை அந்த அலைகள் அறியாமலிருக்கலாம். நாம்?


 மரணத்தைவிடக் கொடியது தப்பியவர்களின் வாழ்க்கை. கலங்கிய கண்களுடன் எச்சரிக்கைகளை மீறி கடலை நோக்கி விரைகிறார்கள்  பிணங்களைத் தேட. எந்த ஊரில், எந்தக் காட்டில் பிள்ளையின் உடலைத் தேடுவது, அல்லது எந்த மண்டபத்தில் அவன் உயிரை எதிர்பார்த்து ஓடுவது? சகோதரி மகளை எரித்துவிட்டு நொறுங்கிய வீட்டினருகே அதிகாரிகளுக்காகக் காத்திருக்கிறாள் ஒரு தாய்  நிவாரணம் பெறுவதற்கு நிரூபணம் காட்ட. அவர்களது வாழ்க்கையை இடிப்பதற்கு மட்டுமே விஜயம் செய்த புல்டோசர் இப்போது பிணம் தேட ஊர்ந்து வருகிறது.


 குளச்சல் தேவாலயத்தில் புதைக்கத் தோண்டிய குழியிலேயே சுனாமியால் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள். சிதைத் தீயின் சூடு தாங்காமல் தீப்பிடித்து எரிகிறது நாகையின் மயானக் கூரை. மீனவர்களின் இறுதிப் பயணம் நகராட்சி குப்பை லாரியில். அவற்றைக் கடந்து விரைகின்றன கச்சிதமாய் அடுக்கப்பட்ட கோக் பெப்சி குளிர்பான வாகனங்கள்.


 சுனாமியின் இரைச்சல் அடங்கி விட்டது மீனவர்களின் கதறல் அடங்கி விட்டது கொல்கிறது மவுனம். பள்ளிகள், அலுவலகங்கள், திரையரங்குகள் எல்லாம் இயங்குகின்றன. அதிகாரபூர்வ துக்கம் இல்லை இறங்க மறுக்கிறது தேசியக் கொடி இரங்க மறுக்கிறது மக்கள் மனம்.


 உண்மையான கண்ணீரைக் காணச் சலித்து சீரியல் கண்ணீருக்குத் தாவுகின்றன தொலைக்காட்சிக்கு இரையான பிணங்கள். ஊழல் நரி நரசிம்மராவின் பிணம் ஹுசேன் சாகர் ஏரிக்கரையில் சந்தனக் கட்டைகளால் மணக்க மணக்க எரியூட்டப்படுகிறது. அவரது தியாகங்கள், தந்திரங்கள், சாதனைகள், லீலைகள் என வாழ்க்கைக் குறிப்பு விரிகிறது. குறிப்புகள் ஏதுமற்ற மீனவர்களின் உடல் டயரோடு டயராக நடுத்தெருவில் எரிகிறது.


 தேவனாம்பட்டினம், தாழங்குடா, கோடிக்குப்பம், மல்லினச் சேரி, குளச்சல், மணமேல்குடி எனக் கல்லறைகளின் பட்டியல் கிழக்குக் கடற்கரை முழுவதும் நீள்கிறது. அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி போன்ற அலங்காரங்கள் வேண்டாம் அடையாளம் கூட இல்லாமல் அழுகுகின்றன மீனவர்களின் உடல்கள்.


 மீன்களின் பெயரைச் சப்புக் கொட்டத் தெரிந்த நாக்கில், அந்த மக்களின் உப்பைத் தின்று வளர்ந்த உடலில்  விசுவாசம் இல்லை.


 ஆசிரியர்களும், மாணவர்களும், அலுவலர்களும், தொழிலாளர்களும் ஒவ்வொரு மாவட்டமும் திரண்டு நின்றிருந்தால் அந்த மக்கள் கடல், வங்கக் கடலுக்கு விடையாய் இருந்திருக்கும். பிள்ளையை இழந்து கதறும் தாய்மார்களை அரவணைக்கப் பெண்கள் சென்றிருந்தால், நாம் ஈரமுள்ளவர்கள் என்பதற்கு அது சான்றாய் இருந்திருக்கும். ஐந்து நாட்களாகியும் அசையாத அரசு எந்திரத்தை அசைக்கப் போராடியிருந்தால், நாம் மனிதர்கள் என்பதை நாமே புரிந்து கொண்டிருக்க முடியும்.


 சுனாமி உயிரற்ற இயற்கை. நாம் அதன்மீது ஏற்றிச் சொல்லும் மனிதப் பண்பு  சீற்றம். நாம் உயிரும் உணர்வும் உள்ள மனிதர்கள். மவுனம்  நம்மீது படர்ந்திருக்கும் மரணம்!

 

 அடக்குமுறையை எதிர்கொள்வது கவுரவமானது. ஆளும் வர்க்கத்தின் கருணை எனும் மலத்தை விழுங்க நேர்வது கொடுமையானது. அந்தக் கருணையின் உட்பொருளை அறிந்தவர்களுக்கோ, அது கற்பழிப்பை ஏற்று அனுபவிக்கக் கோரும் கொடுமைக்கு நிகரானது.


 சத்திரமும் சாவடியும் திருவிழாக் கூழும் நிறைந்த நம் வள்ளல் மரபு மீனவர்களையும் தன் கருணைப் பார்வையிலிருந்து தப்பவிடவில்லை. அரசியல்வாதிகளும், ஆன்மீகவாதிகளும், ஆலை முதலாளிகளும், நடிகர்களும் நன்கொடையைச் சொரிகிறார்கள். அந்தக் காசின் மதிப்புக்கும் பன்மடங்கு அதிகமாக அவர்கள் தேடிக் கொள்ளும் விளம்பரம் நமக்குப் பிரமிப்பூட்டுகிறது. நாளேடுகளில் பிணங்களின் அருகருகே வள்ளல் வேடமிட்ட பிணந்தின்னிகளின் முகங்கள். அவற்றில் அவர்கள் மறைத்துக் கொள்ள விரும்பாத தற்பெருமை மறைத்துக் கொள்ள முடிகிற குற்றங்கள்!


 இந்தத் தரும சிந்தனையின் தத்துவத்தை ஒரே வரியில் சொல்லிவிட்டது தினமணி: ""துரதிருஷ்டசாலிகளுக்கு அதிருஷ்டசாலிகள் உதவுவதன் மூலம் பேரழிவை வெல்லலாம்.'' துரதிருஷ்டசாலிகளை மொய்க்கிறார்கள் அதிருஷ்டசாலிகள்.


 அரசுத் தொலைபேசித் துறையை ஏமாற்றி 500 கோடி கொள்ளையடித்த அம்பானிகளின் சொத்து ஒரு லட்சம் கோடி அனில் அம்பானி வழங்கும் நிவாரணம் ஒரு கோடி. கடலைத் தமது மீன்பிடிக் கப்பல்களுக்கும், கடற்கரையைக் கேளிக்கை விடுதிகளுக்கும் விட்டுத்தரச் சொல்லும் "மீனவ நண்பர்களான' இந்தியத் தரகுமுதலாளிகள் வீசும் எலும்பு 3.5 கோடி. குஜராத் நிலநடுக்கத்தின் அழிவை இனப்படுகொலையால் வென்று காட்டிய கொலைகாரன் மோடி 10 கோடி பில்கேட்சுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் "தேசியவாதி' இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி 5 கோடி 1200 கோடி சொத்து வைத்திருக்கும் மதுரை ஆதீனத்தின் ஆன்மீக மொய் ஒரு லட்சம் பத்தே ஆண்டுகளில் 1600 கோடி உலக சாம்ராச்சியத்தை உருவாக்கி ஆன்மீக உலகில் கின்னஸ் சாதனை படைத்த அமிருதானந்தமாயி வழங்கும் உணவு  மருத்துவ உதவி படத்துக்கு 4 கோடி வாங்கும் விஜய்காந்தும், 2 கோடி வாங்கும் விஜய்யும் தலா 10 லட்சம் மீனவர் குப்பத்தின் சண்டை நடிகர்களைப் "புரட்டி எடுத்து' சுப்ரீம் ஸ்டாராக உயர்ந்த சரத்குமார் 250 மூட்டை அரிசி. அதிருஷ்டசாலிகளின் அணிவகுப்பு நீள்கிறது. நீண்டு கொண்டே போகிறது.


 "கொடுப்போர் எல்லாம் அதிருஷ்டசாலிகளே' என்பதால் அரசும் ஒரு அதிருஷ்டசாலி. சன் தொலைக்காட்சியின் ஒருநாள் வருவாயை வழங்கலாமென்று தன் பேரப்பிள்ளைகளுக்குச் சொல்ல முடியாத கருணாநிதி, வருமான வரி வருவாயில் ஒரு சதவீதத்தை நிவாரணத்துக்கு ஒதுக்குமாறு மன்மோகன் சிங்கிடம் கோருகிறார். அவரோ நன்கொடை தந்தால் வரிவிலக்கு தருவதாக முதலாளிகளுக்கு ஆசை காட்டுகிறார். அதிருஷ்டசாலிகளிடம் அறவுணர்வைத் தூண்ட வேண்டுமானால், "தரும சிந்தனை லாபகரமானது' என்பதை அவர்களுக்கு ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும்.


 அன்பு, மனிதநேயம், தோழமை, தியாகம் போன்ற துரதிருஷ்டம் பிடித்த சொற்களால் அவர்களை ஏய்க்க முடியாது. ""ஒருநாள் சம்பளத்தைக் கொடு'' என்று அரசு ஊழியர்களுக்கு உத்திரவிடுவதைப் போல ""ஒரு சதவீத லாபத்தைக் கொடு'' என்று முதலாளிகளுக்கு அரசு உத்திரவிட முடியாது. தங்கள் சொந்தப் பணத்தை மட்டுமல்ல, அரசுப் பணத்தை அள்ளி விடுவதையும் அதிருஷ்டசாலிகளால் சகித்துக் கொள்ள முடியாது.


 ""இந்தப் பேரழிவால் அரசின் நிதி நிலையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது'' என்ற நிதியமைச்சரின் அறிவிப்பு, சங்கேத மொழியில் முதலாளிகளுக்குத் தரப்படும் தன்னிலை விளக்கம்.


 சென்னைக்கும் நாகைக்கும் 2 நாட்கள் கழித்தே வந்தன இந்திய அரசின் மீட்புக் கப்பல்கள் ஆனால், 26ஆம் தேதியே இலங்கைக்கும் மாலத்தீவுக்கும் 4 கப்பல்கள் விரைந்ததன் காரணம், அயலாரை நேசிக்கும் அறமென்றா எண்ணுகிறீர்கள்? தற்போதுதான் கையெழுத்தாகியிருக்கிறது இந்திய  இலங்கை பாதுகாப்பு வர்த்தக ஒப்பந்தம். கையெழுத்திட்ட  மை காய்வதற்குள் அடித்த சுனாமி அதிருஷ்டம் இலங்கையை நோக்கி அவர்களது கருணைப் பார்வையை விரைந்து திருப்புகிறது. இலங்கையின் பொருளாதார மறுநிர்மாணம்! எத்தகைய பொன்னான வாய்ப்பு! எனவேதான், நம்முடைய மீனவர்கள் தத்தளித்து மூழ்கிச் சாகும் அதேநேரத்தில், இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கும் வீரர்கள் இலங்கைக் கடலில் குதிக்கிறார்கள்.


 தெளிந்த கடல்நீரும் மர்மமான பொருளாதாரமும் கொண்ட மாலத்தீவில் தான் என்ரான் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் பினாமி தலைமையகங்கள் இயங்குகின்றன. இந்தியத் தரகு முதலாளிகளின் சுற்றுலா மையமும், "சுதேசி' சுவிஸ் வங்கியும் அந்த மர்மத் தீவில்தான் மையம் கொண்டிருக்கின்றன. மாலத்தீவின் மகிமை இது.


 சுனாமி பலருக்கு அதிருஷ்டக் காற்று. நொறுங்கிய படகுகளை அள்ளுவதற்குள் புதுப்படகும் வலையும் வாங்கக் கடனுதவியை அறிவிக்கிறது பாரத ஸ்டேட் வங்கி. வட்டி விகித வீழ்ச்சியால் வங்கிகளில் தேங்கிக் கிடக்கும் பணம், குட்டிபோடக் கிடைத்த அரிய வாய்ப்பு. மீன் விற்ற காசு நாறவா செய்யும்? ஒரே கல்லில் மூன்று மாங்காய்! அரசு வங்கியின் தரும சிந்தனை நிலைநாட்டப்பட்டு விட்டது "சுனாமி மீனவனின் துரதிருஷ்டம்' என்ற தத்துவமும் நிலைநிறுத்தப்பட்டு விட்டது அப்படியே மீனவனைத் தின்னும் இறால் பண்ணைகளுக்கும் கடனுதவி வழங்கி மீனவன் காலில் நங்கூரம் கட்டப்பட்டு விட்டது. 3000 கோடி அந்நியச் செலாவணி ஈட்டும் இறால் பண்ணைகளைப் புதுப்பிப்பதைவிடப் பெரிய தேசபக்தி நடவடிக்கை உண்டா என்ன?


 ""இந்தப் பேரழிவால் அரசின் நிதி நிலையில் பாதிப்பு இல்லை'' என்று கூறிய சிதம்பரம் ""ஆதாயம்தான் உண்டு'' என்ற உண்மையை நாகரிகம் கருதி மறைத்துவிட்டார் போலும்! "பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை நுகரும் பொருளாதாரத் தகுதியற்றவர்கள்' என்ற முறையில் மீனவர்கள் இந்தப் பொருளாதாரத்திற்குத் தேவையற்றவர்கள் "பன்னாட்டு மீன் பிடிக் கப்பல்களுக்கு இடையூறு' என்ற முறையிலும் தேவையற்றவர்கள் "அழகான கடற்கரையோர சுற்றுலா விடுதிகள் காலூன்ற விடாமல் தடுக்கும் அசிங்கங்கள்' என்ற முறையிலும் இவர்கள் அவர்களுக்கு அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள்.


 அதிருஷ்டசாலிகள் உலகெங்கிலுமிருக்கிறார்கள். சுனாமியை விஞ்சும் மரணப் பேரலையான அறிவுச் சொத்துடைமை எனும் கூர்வாளைத் (மருந்து விலையேற்றத்தை) தன் முதுகுக்குப் பின்னே மறைத்து வைத்துக் கொண்டு ""நான் உதவட்டுமா?'' என்று புன்னகைக்கிறார் புஷ். அது பிணங்களுக்கு நாய்கள் செய்யும் உதவி!


 துரதிருஷ்டசாலிகளும் கூட உதவுகிறார்கள். திருவாரூரின் தலித் குடியிருப்பான அழகிரி நகரில் 45 மீனவக் குடும்பங்களைப் பராமரிக்கிறார்கள் அந்த ஏழை மக்கள். அம்மையப்பன் எனும் அருகாமைக் கிராமத்தில் 45 மீனவர்களைப் பராமரிக்கின்றன 3 குடும்பங்கள். கடலோரக் கிராமங்கள் பலவற்றிலும் இத்தகைய துரதிருஷ்டசாலிகள் நிறைந்திருக்கிறார்கள்.


 அதிருஷ்டசாலிகள் தோற்றுவிக்கும் பேரழிவை எதிர்கொள்ள துரதிருஷ்டசாலிகளாகவே இருப்போம்!

 ""என்ன செய்வேன், என் மனைவியையும் குழந்தையையும் புதைக்க இடமில்லையே'' என்று கண்கலங்குகிறார் ஒரு முதியவர். சுற்றிலும் நட்சத்திர விடுதிகள், நீச்சல் குளங்கள், கேளிக்கை அரங்குகள். நொறுங்கிச் சிதைந்த போதிலும், அந்த இடங்கள் அழகானவை தூய்மையானவை அசுத்தமான ஏழை  மக்கள் நுழைய முடியாதவை.


 அந்த இடம் சுமத்திரா தீவு. சுனாமி அலைகள் முதலில் தாக்கிய நெற்றிப் பொட்டு. ஜாவா, சுமத்திரா, தாய்லாந்து, மலேசியா, மகாபலிபுரம், இலங்கை, மாலத்தீவுகள் என எல்லா இடங்களுக்குமிடையில் ஒரு ஒற்றுமை உண்டு. சுனாமியால் தாக்கப்பட்டதல்ல அந்த ஒற்றுமை. கிழக்கிலிருந்து சுனாமி வந்து தாக்கு முன்னரே மேற்கிலிருந்து வரும் மேட்டுக்குடிச் சுற்றுலாப் பயணிகள் அந்த மண்ணின் மைந்தர்களுடைய வாழ்வையும் நிலத்தையும் தாக்கிச் சூறையாடிவிட்டார்கள். வசிக்கும் மக்களின் கையிலிருந்து ரசிக்கும் கனவான்களின் பைக்கு மாறிவிட்டது, அந்த மண். இதோ, புதைக்க இடமில்லாமல் தன் சொந்த மண்ணில் காத்து நிற்கிறார் அந்த முதியவர்.


 மரத்தில் தொங்கும் கார்கள், கூரையில் ஏறிய படகுகள் போன்ற அழிவின் "கவர்ச்சி'க் காட்சிகளுடன் போட்டியிட முடியாத மீனவப் பிணங்கள் பின்புலத்தில் நகருகின்றன. சுற்றுலாப் பயணிகளின் நிலை எண்ணிப் பதறுகின்றன, அரசுகள். சுனாமி தாக்கிய அந்தத் தருணத்தில், சனியன் பிடித்த தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளில் சிக்கிக் கொண்ட 10,000 பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளை எண்ணி உருகுகிறது பி.பி.சி. தொலைக்காட்சி. பாஸ்போர்ட் தொலைத்த அமெரிக்க ஐரோப்பியப் பயணிகளுக்காக புதிய அலுவலகங்கள் மின்னல் வேகத்தில் திறக்கப்படுகின்றன.


 யானைகளின் தேசமாக நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட தாய்லாந்திலும் அழிவு! மக்களைப் புள்ளி விவரங்களாகவும், கடல் சறுக்கு விளையாடிச் செத்த மன்னனின் பேரனை "சுற்றுலாத் தியாகி'யாகவும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் அந்நாட்டின் பிரதமர்.


 அந்தமானின் கறுப்பினப் பழங்குடி மக்களின் கதி மூன்று நாட்களுக்குப் பின்னரும் தெரியவில்லை. அவர்கள் பழைய புகைப்படங்கள் மூலம் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். சுற்றுலாப் பயணிகளோ நேரடி ஒளிபரப்பில். இந்தியன் ஏர்லைன்சின் மீட்பு விமானத்திற்குள் தாவி ஏறுகிறார்கள், சுற்றுலாப் பயணிகள். குளச்சலில் புதைந்து இறந்த 1000 மீனவர்களைக் காட்டிலும், விவேகானந்தர் பாறையில் சிக்கிக் கொண்ட 500 சுற்றுலாப் பயணிகள் குறித்த கவலையே காமெராக்களின் பெருங்கவலை!


 விலைமாதர்களும், குழந்தை விபச்சாரமும், மசாஜ் பார்லர்களும், சர்வதேச உணவு வகைகளைச் சமைக்கும் கலைஞர்களும், ராக்பாப் இசைக்கலைஞர்களும் நடனக் கலைஞர்களும், ஷாருக்கானுக்கு கேளிக்கை அரங்கத்தை நொடிப் பொழுதில் நிர்மாணிக்கும் தொழில்நுட்ப வல்லுனர்களும் நிறைந்த இலங்கையில் போதிய மருத்துவர்களும் நர்சுகளும் இல்லை. உதவி கோருகிறார் சந்திரிகா வேண்டுகோள் விடுகிறார் தாய்லாந்து பிரதமர்.


 சென்னை அருகிலுள்ள ஃபிஷர்மேன் கோவ், டெம்பிள் பே, எம்.ஜி.எம். பீச் ரிசார்ட் ஆகியவற்றுக்கு நேர்ந்த சேதம் பற்றிக் கவலை வெளியிடும் எகனாமிக் டைம்ஸ் நாளேட்டின் வாயிலாக சுற்றுலா நிவாரணத்துக்கு அடிபோடுகிறார்கள் முதலாளிகள். பொக்லைன் எந்திரங்களும், தேவாரமும் தேவைப்படாமலேயே மெரினாவின் மீனவர்களைச் சுத்தம் செய்து தந்த இறையருளை எண்ணி அவர்கள் இரகசியமாக மகிழக் கூடும். மீனவர்களற்ற மெரினா அவர்கள் கனவில் விரியக் கூடும். ஆண்டுக்கு 3,21,329 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், 3000 கோடி அந்நியச் செலாவணியும் வழங்கும் குழந்தை விபச்சார மையமான கோவாவை மேற்குக் கரையில் படைத்த இறைவனுக்கு அவர்கள் நன்றி சொல்லவும் கூடும்.


 கடலில் விளையாடும் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றுவதையே கதையாகக் கொண்ட "பே வாட்ச்' என்ற அமெரிக்கத் தொலைக்காட்சித் தாடர் இதோ நம் கண் முன்னே உயிர் பெற்று ஓடுகிறது.


 அந்தத் தொடரின் நாயகி பமீலா ஆண்டர்சனின் கொழுத்த மார்பகங்கள், பருத்த தொடைகள், தாய்லாந்தின் அலைச்சறுக்கு, இலங்கையின் கடல் கோல்ஃப், பாங்காக்கின் மசாஜ் பார்லர்கள், குமரியின் சூரிய உதயம், எலியட்ஸ் கடற்கரையின் உயர்குடிக் காதலர்கள், மகாபலிபுரத்தின் விபச்சார மாளிகைகள்...


 தனது வற்றிப் போன மார்பே பிய்ந்து சிதறும்படி அடித்துக் கொண்டு கதறும் கடலூரின் மீனவப் பெண் சுமத்திராவின் கடலோரம் இன்னும் காத்து நிற்கும் அந்த முதியவர்.


 இவை இருவேறு உலகங்களல்ல எதிரெதிர் உலகங்கள். நமது அழிகியலும் ரசனையும் அறிவைக் காவு கொள்ளும் தருணமிது. கவனியுங்கள்!


 கட்டுமரத்தின் பின்புலத்தில் குமரியின் சூரிய உதயம் வலை பிரிக்கும் மீனவனின் பின்புலத்தில் பரந்து கிடக்கும் மெரினா! பழங்குடி மக்களின் கறுப்பழகை ஜொலிக்க வைக்கும் அந்தமானின் நீலப் பெருங்கடல். ரசனைகளும் வேறுபடும்போது கவலைகள் வேறுபடும். கண்ணீரும் வேறுபடும்.


 இயற்கை, எழில், அலை, கடல், இன்பச் சுற்றுலா குறித்த உங்கள் மனப் பதிவுகளனைத்தையும், அந்த மீனவப் பெண்ணின் கண்ணீரால் அழுந்தத் துடைத்துவிட்டுப் பாருங்கள்! அழகியல் மயக்கங்கள் தெளியும் அதன் பின்னுள்ள ஆளும் வர்க்க "கவலைகளின்' உட்பொருள் புரியும்.

 

gjpT nrajல்


 கேதம் (துக்கம்) கேட்பது நமது மரபு. அதுவே துக்கத்தின் சுவடேயில்லாத சம்பிரதாயமாக மாறும் போது?


 ஆனால், ஆறுதலுக்காக ஏங்கித் தவிக்கும் இந்த மக்கள்? இப்படியொரு நாடகத்தை அவர்கள் கண்டதில்லை. ""என்னைப் பெத்த அம்மா'' என்று ஊரான் பிள்ளைகளைக் கட்டியழும் அந்தப் பெண்கள், கண்ணீரில்லாமல் உதடு துடிக்காமல் கூறப்படும் ஆறுதலைக் கேட்டதில்லை.


 இது சாத்தியமா? சாத்தியம்தான். ஒரேநாளில் சென்னை, கடலூர், நாகை, குமரி என தமிழகத்துக்கே "ஆறுதல்' கூறிவிட்டு போயஸ் தோட்டத்தில் வந்து இளைப்பாறுதல் சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறார் புரட்சித் தலைவி. ஹெலிகாப்டரின் சன்னல் வழியே கூட பூமியைக் குனிந்து பார்க்காமல், மருத்துவமனைப் படுக்கையில் துடிக்கும் மீனவர்களைக் குனிந்து பார்க்காமல் ஆறுதல் கூறுவதைச் சாத்தியமாக்கியிருக்கிறார் ஜெ.


 சுனாமியை விஞ்சும் வேகத்தில் இந்தச் சுற்றுப் பயணத்தை ஏற்பாடு செய்திருக்கிறது அரசு எந்திரம். முதல்வரின் பாதுகாப்பு ஏற்பாடுகள், அவரது ஹெலிகாப்டர் வந்திறங்க ஓடுபாதை, தங்குவதற்கு அறை, ஆங்காங்கே கழிவறை வசதிகள், முதல்வருக்குப் பிடித்தமான உணவு, அஞ்சலி செலுத்தத் தேவையான பிணங்கள், அவற்றின் நாற்றத்தை அடக்க மருந்துப் பொடிகள், முதல்வர் ஆறுதல் கூறத் தேவையான அகதிகள், அவரை வரவேற்க ஆட்சியர்கள், போலீசு அதிகாரிகள், உயிருக்குப் போராடும் மக்களை உள்ளே விட்டுவிட்டு மருத்துவமனையின் வாயிலில் நின்று முதல்வரை வரவேற்கும் மருத்துவர்கள்  எல்லாம் தயார்!


 மண்டபங்களில் தங்கியிருக்கும் அகதிகளுடன் கலந்திருந்து கைதட்டத் தேவையான தொண்டர்களும் தயார்! இத்தனைத் தயாரிப்புக்களை அரசு எந்திரம் செய்தபோதும் ஒரு சோகமான முகத்தைத் தயார் செய்து கொள்ள முதல்வரால் முடியவில்லை. ""ஒரு பெண் என்றும் பாராமல் என்னை அவமதித்து விட்டார்கள்'' என்று தமிழகத்தையே சுற்றி வந்து அழுது, தன் துயரத்தைத் தாய்க்குலத்தின் துயரமாக மாற்றிய அந்த நடிகைக்குக் கண்ணீர் வரவில்லை.


 ""உற்றார் உறவினரை இழந்தது கடவுள் செயல். மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்'' என்றார். இந்த அருள்வாக்கை மக்கள் கேட்கச் செய்வதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட அதிகார வர்க்கத்தைச் சற்று அயர்ந்து கண்மூடக் கூட அனுமதிக்காமல் அடுத்தடுத்து வந்திறங்கினார்கள் அமைச்சர் பெருமக்கள். மாறன், மணிசங்கர், ப.சிதம்பரம், சிவராஜ் பாடீல், சோனியா... அனைவருக்கும் இதே வகையான ஏற்பாடுகள்.


 பிறகு சங்கராச்சாரி கைது எனும் தேசியப் பிரச்சினைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அத்வானி இந்தப் பிராந்தியப் பிரச்சினைக்காகவும் வந்தார். அவருக்கும் இதே ஏற்பாடுகள்... பாதுகாப்புகள்! தலைவர்களின் துயரம் தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும், மக்கள் மனதிலும் பதிவு செய்யப்பட்டு விட்டது. கேதம் கேட்கும் சம்பிரதாயம் முடிந்தது. அரசு எந்திரத்தின் நிவாரணப் பணி முடிந்தது. பிணம் கொத்தும் காக்கைகள் பறந்துவிட்டன.


 கொல்வதற்கு மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டிருக்கும் போலீசு பிணங்களைத் தொடுவதில்லை. அழுகிய பிணங்களை அப்புறப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் இதற்காகவே பிற மாவட்டங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறார்கள். இராணுவம் அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து எல்லையைப் பாதுகாப்பதற்கானது அதனை இயற்கையால் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்காகக் களத்திலிறக்குவது தேசத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கி விடும். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகத் தேர்தலின்போது முடுக்கிவிடப்படும் அரசு எந்திரம் ஜனங்களைப் பாதுகாக்கப் பயன்படுமாறு வடிவமைக்கப்படவில்லை. ஆசிரியர்கள் மக்கள் தொகையைக் கணக்கெடுக்கலாம், பிணங்களைக் கணக்கெடுக்க மாட்டார்கள். மரம் வளர்ப்புப் பிரச்சாரத்திற்கு மாணவர்களை இறக்கிவிடலாம். மக்களுடன் உறவாட விடுவது அவர்களை மனிதர்களாக மாற்றும் அபாயத்தில் அரசை இறக்கி விடும். லட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட கட்சிகள் நிவாரணப் பணியிலிறங்குவதில்லை. அவர்கள் தொண்டு செய்யும் உணர்வற்ற தொண்டர்கள்.


 இதுதான் துயரத்தின் உண்மைப் பதிவு. இதுதான் கண்ணீரில் கலந்திருக்கும் உப்பு. இதுதான் அரசு. இது சூறையாடுவதற்கு மட்டுமே பயிற்றுவிக்கப்பட்ட சுனாமி!

 

 கேரளத்தில் கொல்லம்  ஆரியசமாஜக் கோயில் கொடிக்கம்பம் தவிர மிச்சம் மீதி இல்லை  எல்லாம் சுனாமிப் பேரலை கொண்டு போய்விட்டது.


 வேளாங்கன்னி  தமிழில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த 1000 பேர் அலைக்குப் பலி. ஒவ்வோராண்டும் புனிதப் பயணம் செல்லும் சென்னை அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த ஒரு கிறித்தவக் குடும்பம் அலைக்குப் பலி.


 நாகூர்  சென்னை ஆவடி முசுலீம்புனிதப் பயணிகள் அங்கே கடற்கரையில் பலி.

இலங்கை  காலே என்ற இடத்தில் புத்தர் சிலை நீங்கலாக அனைத்தையும் கடல் கொண்டு விட்டது.

இந்தோனேசியா  பந்தா அசே நகரில் மசூதி அருகே வெள்ளுடை போர்த்தி அடுக்கிய பிணங்கள்.


 — இந்த மதம் தான் என்றில்லை, எல்லா மதங்களிலும் எல்லாக் கடவுளையும் கும்பிடும் பக்தர்கள் பல ஆயிரம் பேர் இந்தோனேசியா, சுமத்ரா, அந்தமான்  நிக்கோபார், இலங்கை, இந்தியா என்று எல்லா நாடுகளிலும் சுனாமி அலைகளுக்குப் பலியாகி விட்டார்கள். ""வேறுவேறு மதம்  கடவுள் என்று பேதம் நான் பார்ப்பதில்லை'' என்று கடலம்மா சொல்லிவிட்டாளோ?


 இறந்த சடலங்களுக்கு அடையாளமாக ஒரு ஃபோட்டோ வைத்து ஃபாதர் பிரார்த்திக்கலாம் ஆனால் கிட்டத்தட்ட 1,20,000 பேர் ஆசியப் பகுதியில் பலியாகி விட்டார்கள். அத்தனை ஆன்மாக்களுக்கும் என்ன அடையாளம் சொல்வது? எந்த மதமென்று சொல்வது?


 ஆனால் இப்படி அடையாளம் சொல்லி தங்கள் மதங்களின் சீடர்களாக ஆக்கிக் கொள்பவர்கள் இந்தச் சாவுகளுக்கு எந்தவித ஆன்மீக விளக்கத்தையும் வெட்டவெளிச்சமாகக் கொடுக்க முன்வரவில்லை. மாறாக, பார்ப்பன ஏடான ஜூ.வி. போன்றவை மூலம் வதந்திகள் பரப்புகின்றன.

 

""திருவாரூர் துறைமுகமாகிவிடும் என கல்வெட்டுக் குறிப்புகள் சொல்வதாக... செவிவழிச் செய்தி ஒன்று... (பற்றி) பேச ஆரம்பித்திருக்கும் சிலர் "திருவாரூர் தியாகராஜர் கோயிலைக் கடல்நீர் தொடவேண்டும் என்றொரு ஐதீகம் இருக்கிறது. கடல் அலைக்குத் தப்பி திருவாரூர் பக்கம் ஈரம் சொட்ட வந்தவர்கள் தியாராஜர் கோயிலில் வந்து தப்பியிருப்பதைப் பார்க்கும்போது அந்த ஐதீகம்தான் பலித்துவிட்டதோ' என்று எண்ணத் தோன்றுகிறது என்கிறார்கள்'' என்று விளக்கம் தருகிறது ஜூ.வி. ஏடு (2.1.2005).


 இந்தோனேசியா, சோமாலி இன்ன பிற நாடுகள் பற்றி திருவாரூர் தியாகராஜன் என்ன ஐதீகம் சொல்கிறான்?


 மழை  கடவுளின் கொடை, அருள், கருணை. சுனாமி அலை வீச்சு இயற்கையின் சீற்றம் கடவுளின் சீற்றம் அல்ல. அப்படிச் சொன்னால் இந்த ஏழைகள் மேல் சீற்றம் கொள்ளும் கடவுள் வெறுக்கப்படுவார். ஆனால் கடவுள்களை முன்தள்ளுகின்ற மதமும், அதன் கோயில்களும் ஒடுக்கப்பட்ட ஏழை, "கீழ்ச்சாதி' மக்களை, விலக்கி வைக்கின்றன. சவேரியார் சர்ச் தவிர, சுசீந்திரம், நாகராஜா, சென்னை திருவல்லிக்கேணி, சிதம்பரம் நடராசர் போன்ற அத்தனை இந்துக் கோயில்களும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களைத் தஞ்சம்புக அனுமதிக்கவில்லை.


 சாதாரண நாட்களில் குழியில் கூட கடவுளால் சாதிவாரியாக "ரகம்' பிரிக்கப்படும் மக்களை இயற்கை ஒரே குழியில் சேர்த்தது. இவ்வளவு இருந்தும் வாழ்க்கை அவலங்களிலிருந்து கற்பனையில் தன்னை விடுவித்துக் கொள்ள மதத்தை மனிதன் பிடித்துக் கொள்கிறான் அது அவனது ஏக்கப் பெருமூச்சாக இருக்கிறது. ஆனால் மதத்தைக் கொழுத்த நிறுவனமாக மாற்றிக் கொள்ளும் மதவாதிகள் எவ்வளவு வக்கிரத்தோடு மனிதனை, உழைப்பாளிகளை நடத்துகிறார்கள்? வரலாறு நெடுகிலும் எத்தனை எடுத்துக்காட்டுகள்? இதோ இன்று நம் கண் எதிரிலேயே நடப்பவை வேறென்ன?


 டிச. 26ஆம் தேதி சுனாமி அலையால் வீசி எறியப்பட்டுப் பலியானவர்கள் பல ஆயிரம் பேர். அதற்கடுத்த நாள் எங்கெங்கோ சிதறிப் புதைந்து கிடந்த உடல்களைத் தேடி எடுத்துக் கொண்டிருந்தார்கள் சுற்றத்தார். அதே நாளில் சிதம்பரம் சிவனுக்கு சரியாகப் பகல் 2.15 மணிக்கு ஆருத்ரா தரிசனம்.

 

கடலூரில் 50 கிராமங்கள் முற்றிலும் அழிந்து தேவனாம்பட்டினம், சிங்காரத் தோப்பு, தாழங்குடா, புதுக்குப்பம், புதுப்பேட்டை, பின்னத்தார் போன்ற மீனவக் கிராமங்களில் புதையுண்ட 500 பிணங்களை பொக்லைன் போட்டுத் தோண்டி எடுக்கிறார்கள்  அதேநேரம் அம்பாளுக்கு லட்சார்ச்சனை. திருவாடனைச் சாமிக்கு அலங்காரம் முத்துப்பல்லக்கு கடலூர் எஸ்.பி. பன்னீர் செல்வம் என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவர்கள் சகிதம் வந்து ஆஜராகிப் பலத்த பாதுகாப்பு கொடுக்கிறார் சாமிக்கு ஊர் முழுக்க விடுமுறை அறிவிக்கப்படுகிறது. கடலூர் முழுக்க ஒப்பாரி சிதம்பரம் முழுக்க நாதசுரக் கச்சேரியோடு பஞ்சமூர்த்தி வீதி உலா.


 அருகே சென்னை மெரீனா, பட்டினப்பாக்கம், ராயபுரத்தில் சுமார் 400 பேர் இறந்து கிடக்க, திருவல்லிக்கேணி, மயிலையில் விஷ்ணுகோயிலில் திருப்பாவை சொற்பொழிவு ""உன்பணி என்றும் செய்ய எனக்கு நீ அருளுவாய்'' என்று நம்மாழ்வார் பாசுரங்கள் பாடப்படும் பத்துநாள் "இராப்பத்து' (இரவு ஓதுதல்) விழா. குறையொன்றுமில்லாமல் நடக்கிறது.


 "கடவுள் மக்களைத் தண்டித்து விடுவார்' என்று யாரும் சொல்லமாட்டார்கள் என்று தான் நாம் நினைப்போம். ஆனால் அந்த எல்லைக்கும் இந்துவெறியர்கள் போவார்கள்.


 ""இந்துமதத்தை அழிக்க முயன்றதால் கடல் கொந்தளிப்பு'' என்று ஜெயிலுக்குப் போன கிரிமினல் ஜெயேந்திரனுக்கு ஆதரவாக (தினத்தந்தி, 28.12.04) விசாகப்பட்டினம் சாரதாபீடம் மடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரி ஸ்வரூபானந்த இந்திர சரஸ்வதி திமிரோடும் கொழுப்போடும் அறிக்கை விட்டிருக்கிறார்.


 திருச்சி ஆஞ்சநேயர் கோயில் சுவரில், இதேபோல 26.12.04 அன்று மாலை கரும்பலகையில் விசுவ இந்து பரிசத் எழுதியதைக் கண்டித்து ம.க.இ.க. தோழர்கள் 10 பேர் ஆர்ப்பாட்டம் செய்து கைதானார்கள்.


 ஜெயேந்திரன் என்ற ஒரு பார்ப்பனக் கொலைகாரனைக் கைது செய்தால் கடவுள் ஒரு லட்சம் கொலை செய்வானா? இப்படி எழுதுகின்ற கேடுகெட்ட பார்ப்பனப் பிறவி, சிதறிக் கிடக்கும் சடலங்களைத் தின்னும் நாகை நாய்களைவிடக் கேவலம்தானே?


 இறந்த ஆன்மாக்களின் சாந்திக்கு மோட்சதீபம் ஏற்றச் சொல்கிறது ஜெயில்சாமி ஜெயேந்திரன். வெளியே உற்றம் சுற்றம் இழந்து இளம் பிஞ்சுகளைப் பறிகொடுத்துத் தவிக்கின்ற பல்லாயிரம் குடும்பங்களுக்காக, உயிருடன் உள்ள இந்த ஆன்மாக்களின் சாந்திக்காக  ஜெயேந்திரனுக்குத்தான்  மோட்சதீபம் ஏற்ற வேண்டும்.


 வேலூரை சுனாமி தாக்கவில்லை மனிதர்களைக் கொன்ற சுனாமி மடங்களை அழிக்கவில்லை அந்த வேலையை நமக்காக விட்டு வைத்திருக்கிறது.

 

tக்fpuம்

 ""ஒரு மேற்கு ஐரோப்பியனின் மரணம் 12 ஆசிய மக்களின் மரணத்திற்குச் சமம்'' என்கிறார் ஆதம்ஸ் எனும் அறிஞர். உலகின் செய்தி ஊடகங்கள் பேரழிவு குறித்து எவ்வளவு செய்தி அல்லது நேரம் ஒதுக்க வேண்டும் என்று தீர்மானிப்பது அந்த அழிவு தோற்றுவிக்கும் மரணத்தின் எண்ணிக்கையைப் பொறுத்ததுதான் என்கிறார் அவர். இதன்படி தற்போது ஒரு லட்சம் சாவுகளை நெருங்கி வரும் ஆசிய சுனாமியலையின் அழிவு 8500 ஐரோப்பியர்களின் உயிர்களுக்குச் சமம். அந்த அளவே செய்தி முக்கியத்துவம் பெறும்.


 போர், இயற்கைப் பேரழிவின் மூலமே உலக செய்திச் சானல்கள் பிரபலம் பெறுகின்றன. 91 இராக் ஆக்கிரமிப்பை வைத்து சி.என்.என். தொலைக்காட்சி உலகச் சந்தையைப் பெற்று வரு மானத்தை 150 சதவீதத்துக்கு அதிகப்படுத்தியது. அதன் பிறகு பி.பி.சி. தற்போதைய சுனாமி அழிவை வைத்து சன் டி.வி. தென்னிந்திய அளவிலும், என்.டி.டி.வி அகில இந்திய ஆங்கிலச் சந்தையையும் முழுமையாகக் கைப்பற்றக் கூடும். ஒருநாட்டின் தேசியத் துயரம் ஒரு செய்தி நிறுவனத்தை லாட்டரிப் பரிசு போல மகிழ வைக்கிறது.


 ஆசியச் சந்தையைக் கைப்பற்றும் போட்டியில் சி.என்.என்ஐ வென்றுவிட்ட பிபிசி, 26 ஞாயிறன்று சுனாமி நில நடுக்கச் செய்தியை இடைவெளியின்றி தொடர்ந்து ஒளிபரப்பியது. தெற்காசிய நாடுகளின் அழிவு மொத்தமாக அளிக்கப்பட்ட நேரத்தில் மாலே, பினாங்கு, புக்கெட், காலே நகர்களில் உயிர் தப்பிய பிரிட்டிஷ் பயணிகளின் தனிக்கதைகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.


 ஈராக் ஆக்கிரமிப்பின்போது அமெரிக்க இராணுவத்துடன் பல செய்தியாளர்களை அனுப்பி லண்டன் மைய ஒளிபரப்பையே ஈராக்கிற்கு மாற்றிய பிபிசி, தெற்காசிய அழிவுகளுக்கு ஒரு நாட்டுக்கு ஒரு செய்தியாளரை மட்டுமே பயன்படுத்தியது. தனது இணையத் தளத்தில் பிரிட்டிஷ் சுற்றுலா பயணிகளின் உறவினர்களுடைய கவலைகள் மற்றும் கேள்விகளுக்குப் பதிலளிக்க லண்டன் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கென்றே ஒரு செய்தியாளரை நியமித்து ஒரு மணிக்கொரு தடவை ஒளிபரப்பியது.


 27ம் தேதி ஆசிய அழிவை தலைப்புச் செய்தியாக மட்டும் காட்டிய பி.பி.சி, தனது வழக்கமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. இலங்கையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் கார், ரயில், பேருந்துகள் அடங்கிய காட்சியை முடித்து வந்த மகிழ்ச்சியில் லேண்ட் ஓவர் எனும் அதிநவீன கார் மலை, மேடு, பள்ளம், சகதியில் எப்படி சொகுசாக பயணம் செய்கிறது என்பதை 20 நிமிடம் விளக்கியது. வெள்ளக் காட்சிகளால் ஊறும் சோகத்தை ஒரு ஆடம்பர வாகனத்தின் பார்வை வழியாக அறிவிக்கிறது. காட்சி  உலகின் வக்கிர விளைவு இதுதான்.


 97இல் மரணமடைந்த கேளிக்கைச் சீமாட்டி டயானாவின் இறுதி ஊர்வலம் 10 லட்சம் பேருடன் 3 மைல் நீளத்தில் நடந்ததை 25 கோடி மக்கள், 200 நாடுகளில் 44 மொழிகளில் பார்த்தனர். உலக வரலாற்றில் அதிகம்பேர் பார்த்த நிகழ்ச்சியாம் இது. ஒரு இலட்சம் பேர் பலியாகி பல இலட்சம் பேர் வீடிழந்து, கோடி மக்கள் அலறும் தெற்காசியக் காட்சிகள் ஓரிரு நிமிடங்களில் புள்ளி விவரமாய் வந்து போகின்றன. உலக மீடியாவின் வக்கிர தருமம் இதுதான்.


 என்றாலும் உள்நாட்டிலும் அந்த தருமம் மாறிவிடவில்லை. 26ஆம் தேதியன்று சுனாமி அழிவையும் 27இல் அம்பானி விவகாரத்தையும் ""பிரேக்கிங் நியூசாக'' என்.டி.டி.வி வெளியிட்டது. ஒரேநாளில் சுனாமி பின்னுக்குப் போய் அம்பானி முன்னுக்கு வந்த காரணம், ரிலையன்ஸ் பங்குகள் கோலோச்சும் பங்குச் சந்தையில் என்டிடி.வியின் பங்குகளும் இருக்கின்றன. 26இல் தமிழகத்தில் சாவுகள் 4000 எனவும், 27இல் ""கருணாநிதி உடல்நிலை குறித்து போலீசு விஷமப் பிரச்சாரம்  ஆற்காடு கண்டிப்பு'' எனவும் சன் டி.வி. "ஃப்ளாஷ் நியூஸ்' வெளியிட்டது. சில ஆயிரம் உயிர்கள் போய், பல ஆயிரம் ஜீவன்கள் அலறும் நேரத்தில் சன் டி.வி.யின் விசேடக் கவலை ஒரு அருவெறுப்பின்றி வேறென்ன?


 ""அங்கே லேட்டஸ்ட் நியூஸ் என்ன?'' இது சுனாமி அழிவு குறித்து பிபிசி முதல் சன் நியூஸ் வரை செய்தி படிப்பவர்கள் செய்தி சேகரிப்பவர்களிடம் கேட்ட கேள்வி. மேலும் பேரழிவின் துயரத்தையோ அதன் பரிமாணத்தையோ எப்படி உணர்த்துவது என்பதல்ல அவர்கள் கவலை. சுனாமி அலையின் பிரம்மாண்டத்தை எப்படிக் காட்டுவது என்று கடல் கொந்தளிப்பின் போது எடுக்கப்பட்ட முதல் காட்சிகளுக்காக அவர்கள் அலைந்தார்கள். பினாங்கு நகரின் சுற்றுலாப் பயணி ஒருவர் தற்செயலாக எடுத்த காட்சி இவர்களுக்குக் கிடைத்தவுடன் அடித்தது லாட்டரி. உலகம் முழுவதும் பல முறை அந்தத் தத்ரூபமான காட்சி ஒளிபரப்பப்பட்டது.

 

பிணங்களின் நடுவே வற்றிய கண்ணீருடன் இடைவிடாது அழுது அரற்றிய பெண்களின் கதைகள் அவர்களது ரசனைக்கு ஈடுகொடுக்கவில்லை.


 அடுத்து கிரிக்கெட்டின் ஸ்கோர் போல உடல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை விறுவிறுப்புடன் காட்டினர். டிடி நியூஸ், ஹெட்லைன்ஸ் டுடே, என்.டி.டி.வி போன்ற சானல்களின் கீழ்ப் பத்தியில் விப்ரோ, டி.வி.எஸ். எஸ்கார்ட்ஸ், ரிலையன்ஸ், கோத்ரெஜ், கில்லெட், இந்தியா சிமெண்ட்ஸ், மாருதி, சத்யம், போன்ற நிறுவனங்களின் பங்கு மதிப்பின் ஏற்ற இறக்கமும், மேலே நாகை, கடலூர், ஆந்திரா, அந்தமான், இலங்கை, இந்தோனேசியாவின் உடல் எண்ணிக்கை அதிகரிப்பதும், ஒரே நேரத்தில் காட்டப்பட்டன. இதற்குப் பொழிப்புரை தேவையில்லை.


 சென்னையின் கரைகளில் பிணங்கள் ஒதுங்கத் தொடங்கியதை முதலில் படம்பிடித்த சன் டிவி, அதை "மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், இதய பலவீனம் உள்ளவர்கள், பெண்கள், குழந்தைகள் பார்க்க வேண்டாமெ'ன அடிக்கடி கேட்டுக் கொண்டது. ஆனால் இந்தச் செய்தி நிகழ்ச்சிகளின் போது விளம்பரங்களுக்கு மட்டும் குறைவில்லை.


 மாற்றுடையின்றி மக்கள் முகாமில் தவிப்பதைக் காட்டியவுடன், "பட்டு சேலைக் காத்தாட, மனசு கூத்தாட' ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் அழைத்தது. வீடே அடித்துச் செல்லப்பட்ட காட்சிக்குப் பிறகு ""அமெரிக்க முத்திரையுள்ள பிரீமியரை விடுத்து வேறு தரக்குறைவான குக்கரை வாங்குவேனா?'' என்ற ஆலோசனை வந்தது. மகள் திருமணத்திற்குக் குருவி போல சேர்த்து வைத்த தங்கத்தை கடல் எடுத்துக் கொண்ட செய்திக்குப் பின் ""தங்கக் குருவி எங்க வீட்டுக்கு வருவாயா?'' என்று சரவணா ஸ்டோர்ஸ் நகை மாளிகைக்காக மன்மத ராசா சாயாசிங் பாடுகிறார். சகதி, தெரு, மரம், மருத்துவமனைகளில் இறைந்து கிடக்கும் பிணங்களைக் காட்டிய உடன் ""ஸ்லீப்வெல் ஹாலிடே மெத்தை அதிக பரவசம் தருவது'' நினைவூட்டப்படுகிறது.


 இந்த எதிர்மறைக் காட்சிகளின் வக்கிரம் டிவியில் மட்டுமல்ல, ஹிந்து முதல் தினத்தந்தி வரையிலான நாளிதழ்களிலும் அப்படித்தான் வெளிவந்தன. நாளிதழ்களில் மட்டுமல்ல, சமூகத்தின் நடவடிக்கைகளும் அப்படித்தான் இருந்தன.


 மெரினா முதல் காசிமேடு வரை கடற்கரையே இழவுக் கரையாக மாறியிருந்த போதும் டிசம்பர் சங்கீத சீசன் நிகழ்ச்சிகள் நிறுத்தப்படவில்லை. நாரதகான சபா, இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ், நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாதமி, முதலியவற்றில் சின்மயா, டி.எம்.கிருஷ்ணன், உன்னி கிருஷ்ணன், குன்னக்குடி, ஊர்மிளா சத்திய நாராயணன், ஜேசுதாஸ் போன்றோர் ஆடினர், பாடினர், வயலினை மீட்டினர். சென்னையின் இந்த நீரோக்களுக்கு மத்தியில் நீரோ சக்கரவர்த்தி எஸ்.வி.சேகர், தனது  அல்வா,  மெகா வசூல், பெரியதம்பி சின்னதம்பி, குழந்தைசாமி முதலான நகைச்சுவை நாடகங்களை நடத்தினார். 500  1000 கொடுத்து அரங்கம் நிறைந்து சிரித்துக் கலைந்தவர்கள் பலர்.


 ""என்னப் பெத்த அம்மா, என்னப் பெத்த தங்கம்'' என ஆயிரக்கணக்கில் பெண்கள் வெடித்து அழுத அதே நேரத்தில்தான் மேற்கண்ட கலை உபாசனைகள் நடந்திருக்கின்றன. இத்தகைய அருவெறுப்பான சமூகத்தில் வாழ்வதற்குப் பதில் அந்த சுனாமியில் நாமும் இறக்கவில்லையே என்பதைத் தவிர எதையும் நினைக்க முடியவில்லை.


 26இன் சுனாமி சோகத்தைவிட டாக்காவில் வங்க தேச அணியிடம் தோல்வியடைந்த இந்தியாவிற்காகக் கவலைப்பட்டவர்கள் அதிகம். டி.வி.யில் அதிக இந்தியர்கள் அன்று கிரிக்கெட் போட்டியைத்தான் பார்த்தார்கள். காரணம் சுனாமியின் கொடூரங்களை நினைத்துப் பார்க்கும் அளவுக்கு அவர்கள் இதயம் "வலுவானதில்லை'. மெரினா முதல் குளச்சல் வரை கிரிக்கெட் ஆடிய மீனவச் சிறுவர்கள் பலியாகியிருக்கிறார்கள். இப்படி ஒரு பித்தைப் பரப்பிய "கொலைகார' இந்திய அணி, ஜட்டி முதல் தலைக்கவசம் வரை பன்னாட்டு நிறுவனச் சின்னங்களைப் பொறித்திருக்கும் அந்த தேசபக்த சிங்கங்கள், 27ம் தேதி 2 நிமிடம் அஞ்சலி செலுத்திவிட்டுப் போட்டியை ஆரம்பித்தார்கள். ஆம். 26ம் தேதி இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைப் பலி கொடுத்த இந்தியாவில் எந்த ஒரு இயக்கமும் நிற்கவில்லை.


 அறியாமல் கொன்ற சுனாமியின் அழிவை, அந்த அழிவின் சோகத்தை, அலறலை, ஈவு இரக்கமின்றிக் கொன்ற இந்தியாவின் இத்தகைய இயக்கத்தில் உங்களின் பங்கு என்ன? உண்மையைப் பரிசீலியுங்கள்.

 

வீரம்

 காட்டில் வாடிய வீரப்பனை சதிராட்டம் ஆடி பிடித்துக் கொன்றது அதிரடிப்படை. ஸ்காத்லாந்து யார்டு அல்ல, தமிழக காவல் துறைதான் வீரத்தில் முதலிடமென்று உச்சிமோந்து கோடிகளில் பரிசளித்தார் ஜெயலலிதா. அதிரடிப்படையின் "ஆபரேசன் குக்கூனை' (பட்டுப்புழுக் கூடு) அட்டைப்படக் கட்டுரை மூலம் புல்லரித்த பத்திரிகைகள் விஜயகுமார், வெள்ளைத் துரை, டிரைவர், செந்தாமரைக் கண்ணன் போன்ற "வீரர்களின்' கதைகளைப் பிளந்து கட்டின. ஆனால் சுனாமி அலையில் சின்னாபின்னமாகிய கடற்கரையை இந்த அதிரடிப்படை எட்டிக் கூடப் பார்க்கவில்லை. இவ்வளவிற்கும் அதிரடிப்படை அமைக்கப்பட்டபோது இயற்கை பேரிழப்புகளுக்காகவும் பணியாற்ற வேண்டும் என்பது அதன் அடிப்படைக் கடமைகளில் ஒன்று. அடிப்படையை நிறைவேற்றச் சொன்னால் ஆர்ப்பரிக்கும் அலைகளில் அட்டைக் கத்திகளின் "வீரம்' அம்பலமாகும் என்பதால் அரசு அனுப்பவில்லை. அடர்ந்த காடுகளில் ஆதிவாசிகளை கேட்பார் கேள்வியின்றிக் குதறிய இம்மிருகங்களின் "வீரத்தை'த்தான் ஐயாயிரம் பேரைப் பலிவாங்கிய சுனாமியும் நிரூபித்திருக்கிறது.


 கடலோரக் காவல் படை. அமைதிக் காலத்தில் பத்திரிகையாளர்களையும், அதிகார வர்க்கக் குடும்பத்தினரையும் நடுக்கடலுக்கு அழைத்துச் சென்று, கடலில் தத்தளிப்பவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்பதை மயிர்க் கூச்செரியும் வகையில் நடத்திக் காட்டும் கோமாளிகளின் படை. இவர்களின் கப்பல்கள் அரசுப் பிரதிநிதிகள் களிப்பதற்கான மிதவை விடுதிகள். இராமேசுவரத்தின் மீனவர்களைப் பொறுத்தவரை இவர்கள் வில்லன்கள்.


 அலையடித்து ஆழ்கடலுக்குள்  பிணங்கள் இழுக்கப்பட்ட இரண்டாம் நாளில் இப்படையின் தென்பிராந்திய அதிகாரி மின்னலடிக்கும் பளீர் சீருடையில் இப்படிச் சொல்கிறார்: ""விசாகப்பட்டினம் முதல் குமரி வரை மீட்புப் பணிக்கான கோரிக்கைகள் வருகின்றன. சென்னைத் துறைமுகத்தில் நின்றிருந்த இரண்டு கப்பல்கள் சேதமடைந்ததால் உடனடியாக உதவ முடியவில்லை. இப்போது எங்கள் கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் கடலைக் கண்காணிக்கின்றன'' அலையடித்தபோது தத்தளித்த மக்களுக்குக் காவல் இல்லை. ஓய்ந்த போது கண்காணிப்பு! பெயேரா கடலோரக் காவல்படை.


 இவர்களது ஹெலிகாப்டர்கள் தூக்கி வந்த பிணங்களும், குற்றுயிர் மனிதர்களும் மெரினா கடற்கரையில் உணவுப் பொட்டலங்கள் போல கொட்டப்பட்டனர். எடுத்துக் காப்பாற்றியவர்கள் மீனவர்கள். மக்களும், மீனவர்களும் வாழும் தமிழகக் கடற்கரையில் எங்கேயும் ஹெலிகாப்டர் தரையிறங்கும் தளம் கிடையாது. தளமெல்லாம் தங்கத் தலைவிக்கும், தியாகத் தலைவிக்கும் மட்டுமே. சுனாமியின் அடுத்த சில மணிநேரங்களில் இவர்கள் இயங்கியிருந்தால் பலரைக் காப்பாற்றியிருக்க முடியும். செய்யவில்லை. அறியாமல் கொன்றது சுனாமி. அறிந்தே கொன்ற கடலோரக் காவல் படையை என்ன செய்யலாம்?


 இந்திய இராணுவம். உலகின் நான்காவது பெரிய படை. ஜெய் ஜவானின் வீரதீரங்கள் கார்கிலின் போதும், இந்தி சினிமா  சீரியல் மூலமும் பறைசாற்றப்பட்டவை. ஆயினும் உண்மையோ மாறானது. கார்கில் போரில் பதக்கம் பதவி உயர்விற்காக வெற்றியை சினிமா போலப் புனைந்து தலைமைக்கு அனுப்பிய மேஜர் சுரீந்தர் சிங் பதவி நீக்கம் செய்யப்பட்டு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். இந்திய வரைபடத்தின் ஒரு அங்குலத்தைக் கூட பாகிஸ்தான் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காக கார்கில் போரில் ஒரேநாளில் பல லட்சம் வீரர்கள் நாடெங்கிலுமிருந்து குவிக்கப்பட்டார்கள்.


 ஆனால் ஒருதேசத்தின் உயிரென வாழும் மக்கள் சில ஆயிரம் பேர் கொல்லப்பட்ட போதும் இராணுவம் வரவில்லை. தேசிய இனங்களை ஒடுக்குவதற்காக வடகிழக்கில் பல்லாண்டுகளாகக் குடியிருக்கும் இராணுவம், தென்கிழக்கில் ஒரு தேசிய இனம் உயிரை விடும் போதும், விட்ட பிறகும் வரவில்லை. மக்களின் உடல்கள் அழுகிய தக்காளிகளைப் போல பெருங்குழியில் கொட்டப்பட்டுப் புதைக்கப்படும் இரண்டாம் நாளில் கல்பாக்கம் அணுஉலையைக் காக்க ஜம்மு காசுமீர் சிறப்பு ஆயுதப் பிரிவும், நாகைக்கு மதராஸ் பொறியியல் படைப்பிரிவும் வந்தன. நாகைக்கு பொறியியல் பிரிவு எதற்கு? அரசுத் தலைவர்கள் வசதியாக வந்து போக சாலைபாலங்களைச் செப்பனிட!


 இந்திய இராணுவம் ஒரு மக்கள் இராணுவமில்லைதான். இருப்பினும் 80களில் செய்து வந்த இயற்கை துயர் நிவாரணப் பணிகள் கூட இன்று இல்லை. ஏனெனில் இது உலகமயமாக்கலின் இராணுவம். ஜம்மு  காசுமீரில் பரவியிருக்கும் இந்திய இராணுவத்தின் போர் உணர்ச்சியைத் தூண்டச் செய்வது தேசபக்திக் கதைகளல்ல. ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் முதலான கனவுத் திரை வெண் தோல்கள் துருப்புகளுடன் கும்மாளமிட்டுக் குஷிப்படுத்துகின்றன.


 இந்தக் குஷியான படித்த இளைய தலைமுறையை இராணுவத்திற்குள் கவர்ந்திழுக்கவும் தேசபக்தி உதவாது. சில ஆண்டுப் பணிக்குப் பின் இவர்கள் தனியார்  பன்னாட்டு நிறுவனங்களில் சேருவதற்கு அனுமதிக்கப்படவிருக்கிறார்கள். ஏற்கெனவே ஒடுக்குமுறை நிறுவனமாக இருந்த இராணுவம் சுனாமிக்கு முன்பே உலகமயமாக்க அலையால் களிவெறி இராணுவமாக மாறிவிட்டது. இது ஈராக்கில் வெறியாட்டமும், களியாட்டமும் போடும் அமெரிக்கத் துருப்புகளின் அலைவரிசையில் சேர்ந்துவிட்டது. உயிரைக் கொல்லும் சுனாமியைவிட, அணுஅணுவாய் வதைக்கும் அபுகிரைப்பின் பேரழிவு அபாயம் நிறைந்தது.


 இதுபோக விமானப்படை. இப்படையின் சாகச சர்க்கஸ் நிகழ்ச்சியை மெரினா கடற்கரையில் நடத்திய சூரிய கிரண் குழுவினருக்கு ஜெயா அரசு மொய் எழுதிய தொகை 50 இலட்சம். பேரலையால் வாழ்விழந்த மக்கள் காப்பாற்றுமாறு கதறியபோது, இந்த வேடிக்கைச் சூரியன் உதிக்கவில்லை ஒளிந்து கொண்டது.


 விஜயகுமாரின் அதிரடிப்படை முதல் விமானப்படை வரை உண்மை நிலை இப்படியிருக்க இனிவரும் மாதங்களில், சுனாமி அழிவில் இவர்களாற்றிய சாகசங்கள் இந்தி  தமிழ் சினிமாக்களில் புனையப்படலாம். புஷ் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில், ஈராக்கின் பலூஜா நகரத்தின் 3 லட்சம் மக்களை வெளியேற்றி விட்டு, நகரத்தை குண்டு வீசி பொட்டல்காடாக்கிய பிறகு அமெரிக்க இராணுவம் "வெற்றி வீரர்களாக' ஜெனரல் ஜிம்மேட்டிஸ் தலைமையில் நுழைந்தது. இந்த கொலை  கேலிக் கூத்தை ஹாலிவுட்டின் யுனிவர்சல் ஸ்டூடியோ நிறுவனம் நடிகர் ஹாரிசன் ஃபோர்டை மேற்கண்ட மேஜராக நடிக்க வைத்து 2005இல் திரையிடப் போகிறதாம். அட்டைக் கத்தியின் அருவருப்பை இத்துடன் முடிப்போம்.


 வீரம். இதுமட்டுமே வீரம். சக மனிதர்களைக் காப்பாற்ற எதை, எப்படி, எப்போது செய்ய வேண்டுமோ அவற்றை தன்னுயிரைப் பணயம் வைத்து செய்தவர்கள் கீழ்க்கண்ட போராளிகள். இவர்களில் சிலர் இறந்து விட்டனர். பலரின் பெயர் கூட எமக்குத் தெரியாது. அர்ஜூனா விருதும், அட்டைப்படக் கவுரவமும் வாய்க்கப் பெறாத இந்த எளிய, அழகான மனிதர்கள் சுனாமியின் பிரம்மாண்டத்தை எதிர்த்துப் போராடினார்கள். சென்னை, கடலூர், நாகை, சீர்காழி வரை நிவாரண முகாம் அமைத்துப்  பணியாற்றும் எமது தோழர்கள் சேகரித்துக் கொடுத்த சில வீரத் தருணங்கள், இந்த மக்கள்தான் புரட்சி செய்வார்கள் என்பதை உங்களுக்கு உணர்த்தக் கூடும்.


 சென்னை பட்டினப்பாக்கம்  சீனிவாசபுரம். கடலால் உருத்தெரியாமல் குலைக்கப்பட்ட ஒரு மீனவர் குடியிருப்பு. அசோக் குமார், கடலுழைப்பால் உரமேறிய இருபது வயது இளைஞர். பாம்பைப் போல சீறிக் கொண்டு வந்தது அலை. மக்கள் தலைதெறிக்க தப்பி ஓடியபோது இவர் ஒரு கணம் நின்றார். சில இளைஞர்களை சேர்த்துக் கொண்டு தத்தளித்த சிலரை ஒரு மூலைச் சாலையில் கரையேற்றினார்.


 ஒரு கணம் யோசித்தார். உடன் அவரது குழுவினர் மிதந்து வந்த கூரைக் கம்புகளைச் சேர்த்தனர். மிதப்பவர்களிடம் வீசினர். ""உஷாரா  ஒரப்பா நில்லு, ஊன்றி நில்லு, தண்ணி போக்குல ஓடாதே, தெம்பா இரு, தம் கட்டி வா'' அசோக் குமாரின் ஆணைகள் அருமையாக வேலை செய்தன.

நூற்றுக்கணக்கான விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டன. பின்பு வீடு நினைவுக்கு வர குதித்து நீந்தினார். அதற்குள் அவரது குடும்பம் பாதுகாப்பாக நீந்தி அருகாமைக் குடியிருப்பில் கரையேறி விட்டனர். நொறுக்கப்பட்ட வீட்டில் தத்தளித்த தாயை தோளில் போட்டு நீந்தினார். அதன்பிறகு பல மணி நேரம் உயிரையும் பின்பு உடல்களையும் காப்பாற்றியது அவரது குழு. அவர்களது உடலிலே காயங்களும், தோளிலே கடுமையான வலியும் இருந்தபோதும் "மற்ற உயிர்களைக் காப்பதற்கே எங்கள் உயிர்' என்ற உண்மை அவர்கள் முகத்தில் களையுடன் ஒளி வீசுகிறது. இந்த முயற்சிகளில் ஈடுபட்டுப் பலரைக் காப்பாற்றிய வீரமணி என்ற இளைஞர் தனது கடைசி முயற்சியில் அலையில் சிக்கி உயிர் துறந்து விட்டார். ""மற்றவர்களைப் பற்றி கவலைப்பட்ட வீரமணிக்கு தன் உயிரைப் பற்றி கவலையே கிடையாது'' என்று அவரது நண்பர்கள் இன்னமும் கதறுகிறார்கள்.


 வயதான கஸ்தூரி அம்மாளைக் காப்பாற்றிய சேகர். நான்கு பேரைக் காப்பாற்றிய ராஜேஷ். சிறுவர்  சிறுமியரைக் காப்பாற்றிய சின்னப் பையன் மற்றும் அகஸ்டின், மோகன். ""சீனிவாசபுரத்துல எத்தனையோ பேரைக் காப்பாத்துனோம். அவரு, இவருன்னு எண்ணித் தீராதுங்க. நாங்க ஒருத்தரை ஒருத்தர் காப்பாத்துனோம். மீனவர்களை மட்டுமில்ல, இங்க வாழற மத்த குடும்பங்களையும் காப்பாத்தினோம். இது எங்களுக்கு ரத்தத்தோடு ஊறின பழக்கம்'' என்கிறார் சின்னபையன்.


 கடலூர் தேவனாம்பட்டினம். சீனிவாசன் கடலூர் நகராட்சியின் டிராக்டர் ஓட்டுநர். 26ஆம் தேதி மீட்பு வேலைக்குச் சென்றபோது சிதறிக்கிடந்த பிணங்களை அப்புறப்படுத்த பலர் தயங்கினர். இவரும் இவரது நண்பர்களும் உடல்களை டிராக்டரில் போடும்போது, பிணக்குவியலில் கிடந்த ஒரு சிறுவனின் கடைவாயில் நுரை வழிந்திருக்கிறது. பதறிய சீனிவாசன் சிறுவனின் வயிற்றை அழுத்தி தட்டாமாலை போல சுழற்றினார். கடல் நீரைக் கக்கிய சிறுவன் விழித்துக் கொண்டான். நீரில் தத்தளிக்கும்

 

மக்களைக் காப்பாற்றிய இளைஞர்களின் ஆவேச உணர்ச்சி, பிணங்களை அகற்றும் இந்த "அருöவறுப்பான' வேலையில் ஈடுபட்ட சீனிவாசனிடமும் இருந்தது. இல்லையேல் விழித்த இந்த சிறுவன் ஏதோ ஒரு குழியில் புதையுண்டிருப்பான்.


 தேவனாம்பட்டினத்தின் விக்ரமாதித்தன். அலையடித்தபோது ஒரு வீட்டின் முன் கதவை உடைத்துச் சென்ற வெள்ளம் பின் கதவை பிய்த்துக் கொண்டு வெளியேறியது. உள்ளே ஒரு ஆள் உயர வெள்ளத்தில் சிக்கிய பெண்ணின் அலறல். அஞ்சாத விக்கிரமாதித்தன் தன் நண்பருடன் ஒரு படகில் சென்று அந்தப் பெண்ணையும், அருகாமையில் மூச்சுத்திணறலுடன் தத்தளித்த வேறு சிலரையும் காப்பாற்றினார்.


 கடலூர் சாமியார் பேட்டையின் அருள். தனது மீன் வலையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடற்கரையிலிருந்தவர்கள் மீன் வாங்க வந்த மீனவப் பெண்கள். தமிழகக் கடற்கரையைச் சூறையாட 2000 கி.மீட்டர் பயணம் செய்து வந்த அந்த அலை இங்கேயும் பாய்ந்தது. கவிழ்த்து தூக்கி வீசப்பட்ட அருள் ஒரு கணத்தில் தன் அடியையும் வலியையும் மறந்து சுதாரித்துக் கொண்டு வயதான தாயைத் தன் தோளிலேந்தி ஒரு மேட்டில் சேர்த்தார். அருகில் இருந்த சிறு படகில் ஏறி ஒரு தென்னமட்டையைப் பிடித்து கையை நங்கூரமாக்கி, படகு வெள்ளத்தில் அடித்துச் செல்லாமல் பார்த்துக் கொண்டு அலை அடித்துச் சென்ற இரு பெண்களைக் காப்பாற்றினார். பின்பு வெள்ளத்தின் போக்கிலேயே படகைச் செலுத்தி மேலும் மூன்று பேரைக் காப்பாற்றினார்.


 கடலூர் புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ் என்ற தீபாவளி. இங்கே அலை மீண்டும் மீண்டும் அடித்தது. வலையில் கழுத்து சிக்கிய மீனவர் ஒருவர் மூச்சுத் திணறிய போது தீபாவளி முக்குளித்து அவரைக் காப்பாற்றினார். பின்னர் நீச்சல் தெரியாதவர்கள், காலில் அடிபட்ட பெண்கள் என ஐவரை இரு கரங்களால் அணைத்து வெள்ளத்தின் எதிர்த்திசையில் மூச்சுப்பிடித்து தரையில் எம்பி எம்பிக் குதித்து காப்பாற்றினார். 6 உயிர்களை அரும்பாடுபட்டுக் கரை சேர்த்த தீபாவளியின் உடல் சோர்ந்திருந்தாலும் இதயமோ மேலும் காப்பாற்றுமாறு வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.


 ஏழாவது உயிரைக் காப்பாற்ற மீண்டும் கடலில் குதித்த அந்தக் காளை அதிவேகமாய்த் திரும்பிய வெள்ளத்தில் இழுபட்டு ஒரு பள்ளத்தில் மாட்டிக் கொண்டது. பிறகு திரும்பவில்லை. தீபாவளியின் உடல் மறுநாள்தான் பிணமாக கரை திரும்பியது. அப்போதும் இன்னும் எத்தனை பேரைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்பது போல அவரது இரு கைகளும் விரிந்திருந்தன. அவரால் காப்பாற்றப்பட்ட அந்த அறுவரும் தீபாவளிக்காக இன்னும் அழுகிறார்கள்.


 நாகை மாவட்டம் அக்கரைப்பட்டு கிராமம். 1500 பேர் மக்கள் தொகையில் 500 பேரைக் கடலுக்குக் காவு கொடுத்த மயான கிராமம். பேரலை ஒரு மலைப்பாம்பைப் போல விழுங்கிய நேரத்தில் பழனிச்சாமி தன் மனைவி, குழந்தையை மிகுந்த சிரமத்துடன் காப்பாற்றினார். பிறகு அந்த ஊரில் உயிருடன் எஞ்சிய மக்களுடன் பழனிச்சாமியின் மனைவியும், குழந்தையும் திருவாரூர் முகாமுக்குச் சென்று விட்டனர்.


 பழனிச்சாமி வரவில்லை. காணவில்லை  இறந்து விட்டார் என்றஞ்சிய மனைவி அருகாமைக் கரைகளில் தேட ஆரம்பித்து விட்டார். ஆனால் பழனிச்சாமி இறக்கவில்லை. குடும்பத்தைக் காப்பாற்றிய கையுடன் மீன்பிடித் தொழிலுக்குப் பயன்படும் அரைடிராயரைப் போட்டுக் கொண்டு அக்கரைப்பட்டிலேயே சுற்றினார். இரண்டு நாட்கள் இரவு பகலாய், சோறு தண்ணியில்லாமல், தன் கிராம மக்களைக் காப்பாற்ற முடியாதா என்று வெறிபிடித்தவரைப் போல அலைந்து திரிந்தார். கடலை முறைத்தவாறு காத்திருந்தார். ஆயினும் அவரால் சில பிணங்களைத்தான் சேகரிக்க முடிந்தது.


 பல கிராமங்களிலும், அவரது பிணத்தைத் தேடி சுற்றியலைந்த அவரது மனைவி இறுதியில் அக்கரைப்பட்டியிலேயே தனது கணவனை உயிருடன் கண்டு சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார். திருவாரூர் முகாமிலிருக்கும் பழனிச்சாமி இப்போதும் எதையோ முறைத்தவாறுதான் இருக்கிறார்.


 சுனாமி வருவதற்கு முன்பு எச்சரிக்கை செய்ய மறந்த வானிலைத் துறை அழிவு நடந்த பிறகு, ""மேலும் இரண்டு நாட்கள் சுனாமி சீற்றம் இருக்கும், யாரும் கடலுக்குப் போக வேண்டாம்'' என எச்சரிக்கை செய்தது. உயிரைக் காப்பாற்ற வராத அரசின் நிர்வாகம், பின்பு பிணங்களை சேகரிக்க முனைந்தபோது இந்த அறிவிப்பினால் மீட்புப் பணிகளையும் நிறுத்தியது. கடலுக்குள் செல்ல காவல்துறையும், தீயணைப்புத் துறையும் மறுத்துவிட்டது. உயிர்களைத் தான் காப்பாற்ற முடியவில்லை, உடல்களையாவது மீட்டெடுத்து அடக்கம் செய்ய வேண்டும் என்று துடித்த கடலூர் மீனவர்கள் பலர், தங்கள் உயிரைப் பணயம் வைத்து படகுகளுடன் கடலுக்குள் பாய்ந்தார்கள். இதையே கொட்டும் மழையில் நாகையிலும், குமரி குளச்சலிலும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் செய்தனர். இல்லையேல் பல உடல்கள் ஆழ்கடலில் அடித்துச் செல்லப்பட்டிருக்கும் அல்லது அக்கக்காகப் பிய்த்தெறியப்பட்டிருக்கும்.


 கன்னியாகுமரியின் பிரபலமான முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித் துறை. "இந்துக்கள்' புனித நீராடும் படித்துறை. ஐயப்ப பக்தர்கள் 25 பேர் நீராடிய போது பாய்ந்து வந்த சுனாமி அவர்களை இழுத்துச் சென்றது. ஏற்öகனவே பாறைக்குக் கீழே ஆழமும் அலைகள் அதிகமும் இருக்கும். அந்த இடத்தில் நீச்சல் தெரிந்தவர்கள் விழுந்தாலும் பிழைக்க முடியாது. அதனால்தான் சங்கிலி கட்டப்பட்டு அதற்குள்தான் நீராட வேண்டும். பாறைகள் அதிகமிருக்கும் அந்த இடத்தில் சம்பவம் நடந்த உடனே மீனவர்கள் கடலில் குதித்துச் சிலரைக் காப்பாற்றினர். ""என்ன செய்வது என்று தெரியாத நேரத்தில் உயிரை வெறுத்துத்தான் கடலில் குதித்துக் காப்பாற்றினோம்'' என்றார் அவர்களிலொருவர். இதே நேரத்தில் சற்று தூரத்தில் இருக்கும் விவேகானந்தர் பாறையில் 300க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். அலையடித்த பிறகு அரசு படகுப் போக்குவரத்து ஊழியர்கள் அகன்று விட்டனர். மீட்பவர் யாருமில்லை.


 குமரி மாவட்ட எல்லையிலிருக்கும் விஜய நாராயணபுரத்திலிருக்கும் கப்பற்படைத் தளத்திலிருந்து வந்த ஹெலிகாப்டர் பாறையைச் சுற்றி வந்து, உணவு, நீர்ப் பொட்டலங்களை வீசியதே தவிர யாரையும் காப்பாற்ற முடியவில்லை. ஆனல் வந்தார்கள் குமரியின் வீரமிக்க அந்த மீனவர்கள். சிறு படகுகளில் பாறைக்குச் சென்று பத்து, பத்து பேராக மீட்டுக் கொண்டு வந்தனர். பிரம்மாண்டமான விவேகானந்தர், திருவள்ளுவர் சிலை பாறைகளின் பின்னணியில், பேரிரைச்சலுடன் வீசிய கடல் அலையை எதிர்த்து சிறு படகில் பயணிகளை அமர்த்தி நின்று கொண்டே படகைச் செலுத்திய அந்த மீனவர்களின் காட்சி, கோழையைக் கூட வீரனாக்கும்.


 இப்படி உயிர் காத்த இந்த மீனவர்கள்தான் விவேகானந்தர் படகுத்துறைக்கு அருகே ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அரசாங்கமும் அவர்களைப் பல்வேறு வகைகளில் தொல்லை செய்து வந்தது. குமரி மாவட்டம் முழுவதும் மீனவர்கள் அனைவரும் கிறித்தவ மதத்தினர்தான். இந்த விவேகானந்தர் பாறைதான் முன்பு குருசடிப் பாறையாக இருந்து 60களில் ஆர்.எஸ்.எஸ்.ஆல் ஆக்கிரமிக்கப்பட்டது. குமரி நகரின் பல பத்து ஏக்கர் நிலங்களை வளைத்து சிறு நகரையே விவேகானந்த கேந்திரம் என்று ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியிருக்கிறது. இதில் சப்பாத்தியும் வெண்ணெயும் உண்டு கொழுத்து வெள்ளையும் சொள்ளையுமாய்ச் சேவையாற்றும் விவேகானந்த தொண்டர்கள் எவரும் பாறைக்கு வந்த பயணிகளைக் காப்பாற்ற வரவில்லை. அந்தோணிசாமியும், அம்புரோசும்தான் காப்பாற்றினார்கள். மீனவர்கள் பலமணி நேரம் போராடி பயணிகளைக் காப்பாற்றிய பிறகே போலீசு வந்தது.


 கேரளத்தின் கொல்லம் நகரருகே இருக்கும் ஆழிக்கல் மீனவ கிராமத்தில் 130 மக்கள் பலியாகினர். அதில் பலர் பெண்கள். காரணம் முதலில் தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று முயன்றார்கள். ஆம். தமிழகக் கடற்கரையில் பலியானோரிலும் கணிசமானோர், காப்பாற்ற முயன்றோர்தான். ஒவ்வொரு கிராமத்திலும் வீரமணி, தீபாவளியைப் போன்று பலரும் உயிர் துறந்திருக்கின்றனர்.


 நீங்கள் படித்த இத்தனைச் சம்பவங்களும் சுனாமியலை அடித்த ஒரு சில நிமிடங்களில் நடந்தவை. உங்கள் வாழ்க்கையில் ஒரு சில நிமிடங்களில் சாதாரண நடைமுறை வேலைகளைக் கூடச் செய்ய முடியாது. இரண்டு நாட்களாகியும் அசைந்து கொடுக்காத இராணுவம், போலீசை வைத்திருக்கும் நாட்டில் 2 நிமிடங்களில் தன்னுயிரைப் பணயம் வைத்துப் பலரைக் காப்பாற்றியதை நீங்கள் கருதுவது போல மீனவர்கள் ஒரு அரிய செயலாகக் கருதுவதில்லை. சின்னத்தம்பி கூறியபடி தண்ணீரில் தத்தளிப்பவர்களைக் காப்பாற்றுவது ஒரு மீனவனுக்கு இரத்தத்தில் ஊறிய விசயம். அதனால்தான் இந்தப் போராளிகள் தம்மால் காப்பாற்ற இயலாத ஆயிரக்கணக்கான உயிர்களுக்காக இன்னமும் அழுகிறார்கள். வீரத்தையும், தீரத்தையும், சோகத்தையும் சினிமாவிலும், சீரியலிலும் கண்டு மயங்கியிருக்கும் உங்கள் கண்கள் சுனாமி அலையை தீரத்துடன் எதிர்த்துப் போராடிய இந்த மாவீரர்களின் உண்மைக் கதைகளைப் பார்த்தாவது திருந்தட்டும். இந்த வீரத்திற்கு துணி மணி, அரிசி, பணம் மட்டும் கொடுத்து மரியாதை செய்வது அவமானம். குடும்பத்தையும், தொழிலையும் பறிகொடுத்து ஆதரவற்றோராய் இருக்கும் இம்மக்களுடன் ஓரிரு வாரங்களாவது தங்கி நிவாரணப் பணிகள் செய்து கூடவே ஆறுதல் தர முயலுங்கள். பெற்றோரை இழந்து நூற்றுக்கணக்கில் அனாதைகளாக இருக்கும் குழந்தைகளைத் தத்தெடுத்து வளருங்கள். உண்மையான வீரத்திற்கு இதைவிடக் குறைவான மரியாதை செய்வது என்பது சாத்தியமில்லை.


 வீரத்தை உரிய முறையில் பாராட்டுவதினூடாகத்தான் வீரத்தின் இலக்கணத்தை நாம் உணர முடியும். ஆம். வீரம் என்பது சக மனிதர்களைக் காப்பாற்ற எதை, எப்போது, எப்படிச் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்வதுதான். அவர்கள் செய்திருக்கிறார்கள். நீங்கள்?